விளையாட்டுகள்: கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் .


என்னைத் தீவிரமான விளையாட்டுக்காரன் என நினைத்துக்கொள்ளவில்லை என்றாலும் விளையாட்டு விரும்பி என்றே நம்புகிறவன்.சொந்த ஊரில் கபடி அணி உருவாக்கி உசிலம்பட்டி வட்டத்திலிருந்து அடுத்த வட்டமான தேனிக்குச் சென்று திரும்பியதுண்டு. பள்ளியில் விளையாண்ட விளையாட்டுகள் கால்பந்தும் கிரிக்கெட்டும். பள்ளிப்பருவத்தில் திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் சின்னாளபட்டி, வேடசந்தூர், வடமதுரை, சித்தையன் கோட்டை போன்ற பேரூர்ப் பள்ளிகளுக்கெல்லாம் பள்ளி அணியோடு போய்த் திரும்பிய நாட்கள் மறக்க முடியாத நாட்கள். திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளி விடுதிக்கு மூணாறிலிருந்து விளையாட்டிற்காகவே தங்கிப் படிக்க வருவார்கள். மலையாளிகளின் விருப்பம் கால்பந்துதான். அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டிக்காரர்களும் கால்பந்து விளையாட்டுப் பிரியர்கள் தான். விடுதியின் காலை பைபிள் வாசிப்பில் தொடங்கியவுடன் விளையாட்டுக்காரர்கள் மைதானத்திற்குப் போக அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்குப் படிப்புநேரம். அவர்களுக்கு இரண்டு இட்லி கூடுதலாகக் கிடைக்கும்.
அஜித் வடேகர் போன்ற மென்மையான மட்டையாளர்களும் பிஷன்சிங் பேடி, வெங்கட்ராகவன் போன்ற ஸ்பின்னர்களும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியபோது மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கம் கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்தது. விவியன் ரிச்சர்ட்ஸ் பெயர் சொல்லாத இந்திய மாணவர்கள் கிரிக்கெட் தெரியாதவர்கள். நெடுநெடுவென உயர்ந்து ஓடிவந்து அம்புரோஸ், கர்டனி வால்ஸ் போன்றோர் வீசிய வேகப்பந்து வீச்சு கோலோச்சிய காலத்தில் ரோஜர் பின்னியும் கபில்தேவும் இந்திய கிரிக்கெட்டை உயிர்ப்பித்தார்கள். கல்லூரி வகுப்பறைகளில் குட்டி ட்ரான்சிஸ்டர்கள் வைத்துக் கிரிக்கெட் வர்ணனை கேட்ட தலைமுறை நாங்கள். ஆனால் ஆசிரியர்கள் அதிலும், ஆங்கில ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளோ டென்னிஸ் பற்றியே இருக்கும். அமெரிக்கன் கல்லூரி ஆங்கில ஆசிரியர்கள், டென்னிஸ் வழியாகவே ஆங்கிலம் கற்பிப்பார்கள். ப்யான் போர்க், ஜான் மெக்கன்றோ, நவரொத்திலவா, ஸ்டெபி க்ராப், ஆந்த்ரே அகஸ்ஸி, சாம்ப்ராஸ் என எங்களால் உச்சரிக்கப்பட்ட பெயர்கள் பின்னர் தொலைக்காட்சிப் பிம்பங்களாக ஆனார்கள். டெலிவிஷன் ஷோரூம்களின் முன்னால் நின்று ஸ்டெபி ஆடிய ஆட்டங்களைப் பார்த்த காலம் திரும்பப்போவதில்லை. அவரோடு போட்டிபோடத் தொடங்கிய வீனஸும், செரினாவும் இன்னும் தொடர்கிறார்கள்.

1980(6?) -களின் பின்பாதியில் நடந்த உலகக் கால்பந்துப் போட்டிதான் வண்ணத் தொலைக்காட்சியின் பார்வையாளனாக மாற்றியது. நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தபோது ஆய்வாளர்கள் குடியிருப்பில் தங்கியிருந்தேன். பக்கத்துவீட்டில் கருப்பு -வெள்ளைத் தொலைக்காட்சி  இருந்தது. உயிரியல் துறையைச் சேர்ந்த நண்பரின் வீட்டில் எல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள். எனக்கும் ஒரு நாற்காலி உண்டு. கறுப்பு -வெள்ளையிலிருந்து வண்ணத்தொலைக்காட்சி அறிமுகமே உலகக் கால்பந்துப் போட்டியோடுதான் நடந்தது. ஆசிரியர் தகுதிப்படுத்தல் திட்டத்தில் ஆய்வுக்கு வந்திருந்த அவரின் பெயர் மறந்துவிட்டது.

அவர் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வீட்டின் முன்னால் ஒரு பந்தல் போட்டு நள்ளிரவில் பனியில் பார்க்கும்படி செய்தார். இடையிடையே தேநீர், முருக்கெல்லாம் உண்டு. அந்தத் தடவை ஜெர்மனி போட்டியை நடத்திய ஞாபகம். ஐரோப்பியர்களின் மூச்சும் பேச்சுமாக இருப்பது கால்பந்துதான். ஐரோப்பிய அணிகள் மட்டும் விளையாடும் ஈரோ கப் விளையாட்டுகள்( 2012) சிலவற்றைப் போலந்தில் இருந்தபோது நேரில் பார்த்தேன். வார்சா பல்கலைக்கழக வாசலிலிருந்துதான் மொத்த அணிகளும் கிளம்பிப் போயின. ருஷ்ய அணி மட்டும் மைதான வாசலில் இணைந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது. அப்போது ரஷ்யர்கள் மீதும் சோசலிசத்தின் மீதும் போலந்தியர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். இப்போது அவ்வளவு இல்லை. க்ரோவ்ஷியர்கள் மீதும் கோபம் உண்டு. ஆனால் ரஷ்யா அளவுக்கு இல்லை.

நானொரு எழுத்து மரபுக்காரன். எழுத்தில் இருப்பதையே ஏற்கும் மனநிலை கொண்டவன் என்றுகூடச் சொல்லலாம். முதல்நாள் நேரடியாகப் பார்த்த விளையாட்டு, கலந்துகொண்ட நிகழ்ச்சி, உட்கார்ந்த கேட்ட அரசியல் கூட்டம் போன்றவற்றைக் கூடப் பத்திரிகைகள் எப்படி எழுதியிருக்கின்றன எனப் படித்துப் பார்த்துக் கடக்கும் ஆள். இந்த உலகக் கால்பந்து போட்டிகளின் வர்ணனையைப் பத்திரிகைகளில் படித்ததைவிட ஒருவரின் முகநூல் பதிவுகளின் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன்.

ப்ரான்ஸ் வென்று கோப்பையைக் கைப்பற்றிவிட்டது. சின்ன நாடான க்ரோவ்ஸியாவுக்கு ஏமாற்றம். போட்டியென்றால் இரண்டில் ஒன்று தானே வெல்லமுடியும் ? இந்த உலகக் கோப்பைப் போட்டியின் (2018 ) எல்லா ஆட்டங்களையும் தொலைக்காட்சியில் பார்க்கும் சாத்தியம் ஏற்டவில்லை.

அந்த இரவு ஆடிய அணி பிரேசில் என நினைக்கிறேன். ரயிலில் பயணம் செய்ததால் பார்க்க இயலவில்லை. காலையில் கண் விழித்ததும் அவரது விரிவான பதிவு கைப்பேசித் திரையில் நீளமாக விரிந்தது. வாசித்து முடித்தபோது 90 நிமிட விளையாட்டையும் பார்த்த திருப்தி ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் நான் பார்த்த ஆட்டங்களையும் எவ்வாறு எழுதியிருக்கிறார் என்று பார்ப்பதற்காக அவரது பக்கத்திற்குச் சென்று வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு போட்டியின் நகர்வுகளையும் வேகத்தையும் அணிகளின் பக்கம் நிற்காமல், கால்பந்து என்னும் விளையாட்டின் பக்கம் நின்று வர்ணித்திருந்த அழகும் வார்த்தைச் சேர்க்கைகளும் ரசிக்கும்படியாக இருந்தன. அநேகமாக நான் பார்க்காமல் விட்ட ஆட்டங்களையெல்லாம் அவரது வருணனைப் பதிவுகளின் வழியாகவே பார்த்தேன். ஒவ்வொரு இரவும் போட்டிகள் முடிந்தவுடனே எழுதத்தொடங்கிப் பதிவுசெய்து அடுத்த நாள் காலையில் வாசிக்கத் தந்த சரவணன் சவடமுத்து அவர்களுக்கு இந்த உலகக் கால்பந்து நிறைவுக்குப் பின் நன்றி சொல்ல நினைத்தேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்