எதிர்மறை விமரிசனத்தின் பின்விளைவு


அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமரிசனக்குறிப்பு ப.தெய்வீகனின்”உச்சம்” கதையை உடனடியாக வாசிக்க வைத்துவிட்டது.நீண்ட காலப் போரின் -புலம்பெயர் வாழ்வின் - உளவியல் நிலைப்பாடுகளை எழுதிப்பார்க்கும் தெய்வீகனின் இன்னொரு கதை என்ற அளவில் வாசிக்கத்தக்க கதை. புலம்பெயர் தேசங்களின் வாழ்முறை தரும் சுதந்திரத்தை - வாய்ப்புகளை - மரபான தமிழ்க்குடும்ப அமைப்புகளிலிருந்து விலகியவர்கள் சோதித்துப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்துவிட வாய்ப்புகளுண்டு. இக்கதையின் எண்ணவோட்டங்களும் நிகழ்வுகளும் இந்தியச் சூழலில் - இலங்கையின் சூழலிலும்கூட அரியன. வெளியில் சொல்லப்படக்கூடாதன. 
நெருக்கடியால் அல்லது உணர்ச்சி மேலீட்டால் போராளியாக மாறிய மோகனா என்னும் நிலா போன்றவர்கள் போருக்குப் பின் நெருக்கடிகள் இல்லாதபோது - உணர்ச்சிக்கொந்தளிப்புகள் நீங்கிவிடும்போது பழைய அடிமை மனோபாவத்திற்குத் திரும்பிவிடும் உளவியல் தமிழ்ப் பெண்ணின் தனிமனித உளவியலா? தமிழ்ப் பெண்களின் சமூக உளவியலா? என்று விவாதிக்கத் தூண்டுகிறது கதை. 
திருமணத்திற்கு முன்பு காதல், பெண் விடுதலை, சம உரிமை என்றெல்லாம் கதைத்துவிட்டுத் திருமணத்திற்குப் பின்பு நல்ல அடிமையாக ஆகிவிடும் பொதுவான பெண்கள்போலவேதான் போராளிப்பெண்களும் மாறிப்போவார்களா? சமூகம் தரும் "குடும்பப்பெண்" பட்டமும் அடையாளமும் போதும் என்று அடங்கிவிடச் செய்வன எவை? 
பெண் நிலைப்பாடு சார்ந்து இத்தகைய கேள்விகளை எழுப்பத்தூண்டும் ப. தெய்வீகனின் கதையில் வரும் ஜெயந்தன் போராளிப் பெண்ணுக்கு வாழ்வுதர வேண்டும் என்ற புரிதலுடனும் அவசரமான இலட்சிய வேட்கையுடனும் இருக்கிறான். அதையும் தாண்டி தன்னால் உடலுறவில் அவளுக்கு உச்சநிலையைத் தரமுடியவில்லை என்ற புரிதலையும் கொண்டவனாக இருக்கிறான்? அதற்காக இன்னொரு ஆணை ஏற்பாடு செய்து ஒருநாளாவது அவளின் உடலைத் திறந்து மூடிக்காட்டி உச்சநிலையனுபவத்தைத் தந்துவிடத் துடிக்கும் பக்குவத்தைக் கொண்டவனாக இருக்கிறான்? அந்த ஒருநாள் திறப்பைவிடத் தொடர்ச்சியான திறப்பாக இன்னொரு பெண்ணுடன் கொள்ளும் தன்பால் புணர்ச்சித்தேர்வை அவள் தெரிவுசெய்யும்போது கலங்கிப்போகிறான். 
குடும்ப எல்லைக்குள் கட்டிப்போட்ட குற்றமனம் ஒருநாள் விடுதலையை -வேட்கைத் தீர்ப்பை வழங்கிய ஆண்மனம் நிரந்தரமான இன்னொரு வேட்கைத்தீர்வை ஏன் மறுக்கிறது? அவனுள் இருக்கும் மரபான ஆதிக்க ஆண் மனம்தானே? 
அப்படியானால் தெய்வீகனின் உச்சம் கதையை ஆணின் பார்வையில் எழுதப்பெற்ற ஆண்மையக்கதை என்று சொல்லிவிடலாம் தானே? பெண்களின் உடலியல் விருப்பம்சார்ந்த உளவியலை ஆண்களால் எழுதிவிட முடியாது என்ற பெண்ணிய வாதம் சரியான பார்வைதானோ என்றெல்லாம் கேட்கமுடிகிறது. 
நேர்மறை விமரிசனத்தைவிட எதிர்மறை விமரிசனத்தின் வீச்சு அதிகம்தான். உச்சத்தை எழுதிய தெய்வீகனுக்கும் அதனை அச்சத்துடன் வாசித்த அனோஜன் பாலகிருஷ்ணனுக்கும் நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்