இடையீடுகள்
நவீன நாடகங்களும் குடும்பங்களும்
இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன.
முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் குற்றச்சாட்டுகள் தனிநபர்கள் சார்ந்தவை போலத் தோற்றம் தரக்கூடியவை என்பதால் அதன் மீது கருத்து சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இரண்டாவது மையம் மணல் மகுடி நாடக்குழுவின் தலைமைப் பொறுப்பில் - நாடகங்களை இயக்கும் நெறியாளர் நிலையில் - இருந்த முருகபூபதி தனது பொறுப்பைச் சரியாகச் செய்யவில்லை; தங்களுக்கான பாதுகாப்பைத் தரவில்லை என்பதான குற்றச்சாட்டோடு படைப்பாக்க நிலையிலும் அவரது செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்குழுவின் இயக்குநிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை; விவாதங்கள் இல்லை என்பதுபோலவும் கூறியுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட நவீன நாடகங்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்திருக்கிறேன். அவற்றைத் தயாரித்த நாடகக் குழுக்களின் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறேன். அந்த நிலையில் காலச்சுவடுவில் எழுப்பப்பட்டுள்ள இரண்டாவது மையத்தை மணல் மகுடியின் சிக்கலாக மட்டும் கருத முடியாது என நினைக்கிறேன் தமிழின் நவீன நாடகக்குழுக்கள் பெரும்பாலானவற்றில் இருந்த/ இருக்கும் பொதுத் தன்மையாகவே அவற்றைச் சொல்ல வேண்டும்.
நாடகத்தயாரிப்பு தொடங்கி, மேடையேற்றம், வணிகப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், விமரிசனங்களுக்குப் பதில் சொல்லுதல் என எதிலுமே வெளிப்படைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. ஒரு தனிநபரின் நாடகப் பார்வை, இயக்கும் முறையை மட்டும் நம்பி இயங்கும் குழுக்களே தமிழின் நவீன நாடகக் குழுக்கள். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப நாடகத்தெரிவு தொடங்கி, பயிற்சி அளிப்பு, பணப்பரிவர்த்தனை எல்லாம் நடக்கும். கூத்துப்பட்டறை மட்டுமே விதிவிலக்காக இருந்தது. போர்டு பவுண்டேஷனின் நிதியுதவி பெற்று இயங்கிய குழு என்பதால் நடிப்புப் பயிற்சிகள் வழங்குவதற்காக வெவ்வேறு இயக்குநர்கள், வகைவகையான நாடகங்கள் தெரிவு என ந.முத்துசாமியின் காலத்தில் தொழில்முறைக் குழுவாக இயங்கியது.
மற்ற குழுக்கள் தொழில்முறை நிலைபாட்டைப் பின்பற்றாததோடு இயக்குநர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்வாக்கை அனுமதிக்கும் தன்மையோடும் விளங்கின. நானறிய இதில் விதிவிலக்குகள் குறைவு என்றே சொல்வேன். ச.முருகபூபதியின் நடிப்புப்பயிற்சி முறையை நம்பி இயங்கிய மணல் மகுடியில் கோணங்கியின் செல்வாக்கு எல்லா நிலையிலும் இருந்தன. மற்ற குடும்ப உறுப்பினர்களும் செல்வாக்கு செலுத்தினர்.
நவீனத்துவ அரசியல் நடைமுறைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடும் நிலையில் என்ன நடக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. அதே நிலை நவீனத்துவக் கலை, இலக்கியச் செயல்பாடுகளிலும் நிகழும் என்று இணைநிலைப்படுத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
உலக நூலகதினம்
பெரும்பாலோர் எல்லாவற்றிற்கும் மெளனமாக இருக்கும் சூழலில் அ.ராமசாமி அவர்கள் தமிழில் நடக்கும் எல்லா இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏதேனும் மறுமொழி அளிக்கிறார். அது மிகுந்த உற்சாகம் தருவது. இதற்கு தொடர் ஈடுபாடும் உண்மையான அக்கறையும் தேவை. ஒருவார காலமாக கடும் உடல்நலக்குறைவின் நடுவே எப்ரல் 23 உலக புத்தக நாள் மாபெரும் நிகழ்வை நண்பர்கள், அதிகாரிகள் உதவியுடன் செய்துவருகிறேன். இப்போதும்கூட அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன். முன்மாதிரிகளை உருவாக்குவது சவாலானது. சென்னை மாவட்ட நூலக இயக்கம் பிறமாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருக்கவேண்டும் என்பது என் கனவு. இதற்காக என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வேன்.
இனி அ.ராமசாமி அவர்களின் பதிவு: எழுத்துமரபை முன்னெடுக்கிறார்.
சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கவி.மனுஷ்யபுத்திரனின் அரசுத் துறை சார்ந்த பொறுப்புகள் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன. கடந்தமாதம் உலகக்கவிதை நாளன்று ரசிக்கத்தக்க நிகழ்வொன்றை நடத்துவதற்குக் காரணமாக இருந்துள்ளார். மொத்த நிகழ்வின் தொகுப்பையும் சுருதியின் காணொளிமூலமே கண்டும் கேட்டும் ரசித்தேன். அதன் தொடர்ச்சியில் இப்போது புத்தக தினத்திற்கான நிகழ்வொன்றை - ஏப்ரல் 23 - திட்டமிட்டுச் சென்னையின் முதன்மை அரசு நூலகமான தேவநேயப்பாவாணர் நூலகத்திலும் சென்னை மாவட்டக் கிளைநூலகங்களிலும் நடக்கும் என அறிவித்துள்ளார்.
இவ்விரு நிகழ்வுகளையும் புத்தகக்கண்காட்சி, இலக்கியத்திருவிழா, மாபெரும் தமிழ்க்கனவு போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டதாகப் பார்க்கிறேன். அவ்விரண்டும் தி.மு.க.வின் பழையதடங்களான பேச்சுமரபை முன்னெடுக்கும் போக்கில் அமைந்துள்ளன. பேச்சுமரபின் வீச்சை முழுமையாகப் பயன்படுத்தும் பாணியில் தொடர்பவை. அதற்கு மாறாகக் கவி.மனுஷ்யபுத்திரன் முன்னெடுக்கும் கவிதை தினத்தில் கவிதைகள் வாசித்துக் கவிகளோடு உரையாடிய நிகழ்வும், புத்தகத் தினத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளும் பேச்சுமரபுக்குப் பதிலாக எழுத்துமரபை -அதன் ஆழமான விவாதமரபை முன்னெடுக்கும் நிகழ்வுகளாகத்தோன்றுகின்றன. ஒருவிதத்தில் சிற்றிதழ் மரபின் இன்னொரு முகம். சென்னை மாவட்டம் என்பதே அவரது எல்லை என்றாலும், அவர் முயற்சி செய்தால் தமிழகம் முழுவதும் இவற்றைப் பரப்பிக்காட்டலாம். எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம்.
நினைவுக்குறிப்பு
உலகப் புத்தகதினத்திற்கு வார்சா போக்குவரத்துக்கழகம் 36 மணி நேர இலவசத்தை அறிவிக்கும். அது மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை. அந்த 36 மணி நேரமும் நகரில் இருக்கும் கிளைநூலகங்கள், மைய நூலகங்கள், ஆய்வு நூலகங்கள் என எல்லா நூலகங்களும் திறந்திருக்கும். தனியார், அரசு, பள்ளி, பல்கலைக்கழகம் என எல்லா நிறுவனங்களின் நூலகங்களும் அதற்குள் அடங்கும்.
2013 ஏப்ரல் 22 அன்று வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்படித்த மாணாக்கர்களில் பெரும்பாலோர் எனது வீட்டிற்கு வந்திருந்தனர். தமிழ்நாட்டுச் சோறும் சாம்பாரும் ரசமும் பாயசமும் அவர்களுக்கு விருப்பம். மதியம் சாப்பிட வருவோம் என்று சொன்ன அதேவேளை சாப்பிட்டு முடித்தவுடன் சரியாக 4 மணிக்குக் கிளம்பிவிடுவோம் என்றும் சொல்லியிருந்தனர். காரணம் உலக நூலக தினத்திற்கு அரசு தரும் சலுகையைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். இதனோடு சேர்த்து அங்குள்ள போக்குவரத்து நடைமுறையைப் பற்றியும் சொல்லவேண்டும்.
வார்சாவின் போக்குவரத்து முழுவதும் நகர நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. வார்சா போக்குவரத்துக்கழகம் தான் பேருந்து, டிராம், மெட்ரோ, விஸ்துலா ஆற்றில் ஓடும் படகுகள் என அனைத்துக்கும் பொறுப்பு. எல்லாவகையான போக்குவரத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டுதான். அங்கு பயணச்சீட்டுகள் தூரக்கணக்கில் அல்ல; நேரக்கணக்கில். குறைந்தது 20 நிமிடம் என்பதில் தொடங்கி மணிக்கணக்கு, நாட்கணக்கு, மாதக்கணக்கு, அரையாண்டுக்கணக்கு எனப் பயணச்சீட்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம். நான் பயன்படுத்தினேன். எல்லா நாட்களிலும் எங்காவது ஒரு போக்குவரத்து சாதனத்தில் போய்க்கொண்டே இருப்பேன்.
இப்படியொரு சலுகையை வழங்குவதின் மூலம் நூல் நிலையங்களை நோக்கி - புத்தகங்களை நோக்கி மாணவர்களைத் திருப்பும் வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும்
சாருவின் முன்னுணர்வு
சாரு நிவேதாவின் முன்னுணர்வு ஆச்சரியம் ஊட்டக்கூடியதாக இருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி கனடாவிலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயல்படும் அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் அறிவிப்பொன்றின் இணைப்பைத் தந்திருந்தார். அதில் தென்னாசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களுக்கான விருது அறிவிப்பின் குறும்பட்டியல் இருந்தது. அப்பட்டியல் இடம்பெற்றுள்ள 7 நூல்களில் அவரது நூலோடு சாருவின் நூலும் இடம் பெற்றிருந்தது.
அப்பதிவை வாசித்தவுடன் சாருவின் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். அப்படியொன்றைப் பற்றிய குறிப்பே இல்லை. அடுத்தடுத்த நாட்களிலும் எதுவும் எழுதவே இல்லை. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னால் இனவாதம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அவரது ராஸலீலாவின் மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் ஏதோவொரு சிக்கலால் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் எழுதியுள்ளார். எப்போதும் அவரது எழுத்தைப்பற்றி வதந்தி பரப்பும் சிலரின் முயற்சியால் இது நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனாலேயே தனது பக்கத்தில் அதைப்பற்றி எழுதவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஒரு சர்வதேச விருதுக்குழுவின் நடவடிக்கையே இப்படி இருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்க இருந்த விருதைக் கெடுத்தவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்களின் கருத்தைக் கேட்டுத் தனது முடிவை மாற்றிக்கொண்ட அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
கருத்துகள்