புத்தகங்கள் வாங்கிய கதைகள்

சொந்தமான முதல் புத்தகம்

சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவற்றில் இருப்பனவற்றில் பாதி நூல்கள் நான் வாங்கியவை; இன்னொரு பாதி நண்பர்களும் நூலாசிரியர்களும் எனது வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொடுத்தவை. பள்ளிப்படிப்பில் என்னுடைய பெயரெழுதிப் பரிசாகக் கிடைத்த அந்த நூலைத்தான் எனது முதல்நூல் எனச் சொல்லவேண்டும். அண்ணாவிற்குப் பின் முதல்வராக வந்த கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம் ஆனது. அந்தப் பொதுத்தேர்வுக்கு மாதிரித்தேர்வொன்றைக் கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தவேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று உசிலம்பட்டிக் கல்வி மாவட்ட நடத்தினார். அந்தத் தேர்வில் முதலிடம் பெற்றேன். அதற்காக வழங்கப்பெற்ற பரிசாகக் கிடைத்த அந்த நூலின் பெயர்: பொழுதுபோக்குப் பௌதிகம். நூலாசிரியரின் பெயர் யா.பெரல்மான். வெளியீடு மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம். மொழிபெயர்ப்பு நூல்.

மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகத்தின் இலக்கியப் பனுவல்கள் அறிமுகம் ஆவதற்கு முன்பு அறிமுகமான நூல்கள் எல்லாம் அங்கிருந்து மொழிபெயர்க்கப்பட்டு நல்ல தாளில் அச்சிடப்பட்டுக் கெட்டி அட்டையோடு வந்த அறிவியல் நூல்களே. அறிவியலை விஞ்ஞானம் எனச் சொன்னதுபோல அதன் உட்பிரிவுகள் பௌதிகம், இரசாயனம், பூகோளம், சரித்திரம் என்றே சொல்லப்பட்டன. இப்போது இச்சொற்களுக்கு மாற்றுச்சொற்கள் வந்துவிட்டன. பொழுதுபோக்கு பௌதிகம், பொழுதுபோக்கு இயல்பியல் என இப்போது கிடைக்கிறது.
 
வீட்டில் இருந்த மகாபாரதத்தின் பர்வங்கள், சக்கரவர்த்தித்திருமகன், அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு, அரிச்சந்திர மயான காண்டம் ஆகியவற்றுக்குள் எனது பெயரெழுதிய அந்த நூலைச் செருகிய நாள் நினைவில் இருக்கிறது.

திரும்பத்திரும்ப வாங்கிய நூல்

அந்தப் புத்தகத்தை மட்டும் எத்தனை தடவை வாங்கியிருப்பேன் என்று சொல்ல முடியாது. பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது படிக்கும்படி பரிந்துரை செய்தவர் பேரா.சாமுவேல் சுதானந்தா. அமெரிக்கன் கல்லூரியின் டேனியல்போர் நூலகத்தில் இருந்து எடுத்துக்காட்டி இதைப்படி என்றார். எடுத்துக்காட்டிய நூல் ராகுலசாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை. அவர் சொன்ன அந்த நாளில் எடுக்கவில்லை. எடுத்துத் தேதி போட்டு வாங்கிய நூல்களை முடித்துத் திருப்பிக் கொடுத்துவிட்டு எடுத்து வாசித்தேன். வாசித்து முடித்தபின் நம்முடைய நூல் என்று சொல்லிக் கொள்ளும் பட்டியலில் அந்த நூல் இருக்கவேண்டும் என்று நினைத்து எனது செலவுக்குக் கொடுத்த பணத்தில் வாங்கிய முதல் புத்தகம் அதுவாகத்தான் இருக்கும். விலை அப்போது 5 ரூபாய்.
 
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேலக்கோபுர வாசல் சாலையில் இருந்த மீனாட்சிபுத்தக நிலையத்தில் வாங்கினேன். தமிழ்ப்புத்தகாலயத்தின் அதிபர் கண.முத்தையாவின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு என்று தோன்றாத வண்ணம் இருக்கும்.
 
பட்டப்படிப்பில் வாங்கிய நூலை முதுகலை படிக்கும்போது எனது துறை தோழிக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். வாசித்தவர் எனக்கு இந்தப் புத்தகம் வேணுமே; இதை நான் வைத்துக்கொள்கிறேன். நீயொன்று வாங்கிக் கொள் என்று பணம் கொடுத்து விட்டார். எனக்கு அவர் சீனியர். நான் முதலாமாண்டு படிக்கும்போது அவர் இரண்டாமாண்டு மாணவி. . அதில் போட்டிருந்த விலையைக் கொடுத்தார். சரியென்று வாங்கிக் கொண்டேன். ஆனால் திரும்ப வாங்கச் சென்றபோது ஒரு ரூபாய் விலை கூடியிருந்தது. அவரும் நானும் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து எனது வகுப்பு மாணவிகளில் இருவர் எங்களுக்கும் வேண்டும் என்று சொல்லி வாங்கித்தரச்சொன்னார்கள். முதுகலை முடிக்கும் முன்னர் 5 தடவை அந்நூலை வாங்குவதற்காக மீனாட்சி புத்தக நிலையம் போனேன். ஆய்வுக்காலத்திலும் அந்த நூலைப் பரிந்துரை செய்து சிலருக்கு வாங்கித்தந்ததுண்டு.
 
பொறியியல் படிப்புக்காகக் கோவைக்கு விடுதியில் தங்கிப் படிக்கப்போன மகளுக்கு ஐந்து நூல்களைக் கொடுத்து அனுப்பினேன். அதற்காகவும் வால்காவிலிருந்து கங்கைவரை வாங்கினேன். அப்போது அதன் விலை ரூ. 25/- எனது மகனுக்கு முதலில் வைத்த பெயர் ராகுல சாங்கிருத்தியாயன். பள்ளியில் பெயர் எழுதிய தலைமையாசிரியர் சுருக்கிவைக்கிறது நல்லது என்று சொல்லியதால் ராகுலன் ஆகிவிட்டான்.
 
கண.முத்தையாவின் மொழி பெயர்ப்பின் மீது மறு பெயர்ப்புகள் சில வந்துள்ளதைப் பார்த்துள்ளேன். சில கல்லூரிகளுக்குப் போனபோது அவர்கள் தந்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். சில மேடைகளில் தரப்பட்ட நூல்களை அங்கேயே சில கேள்விகள் கேட்டு அதற்கு நல்ல விளக்கம் தந்தவர்களுக்குக் கொடுத்துள்ளேன். அப்படிக் கொடுத்த நூல்களிலும் வால்காவிலிருந்து கங்கை வரை இருந்துள்ளது. இப்போதும் என்னிடம் கண.முத்தையாவின் மொழிபெயர்ப்பே இருக்கிறது. 

உலகத்தில் மனிதர்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றில் உழைப்பின் பங்கும் பொருளியல் உறவுகளும் வகித்த பங்கைப் புனைவுபோல எழுதிக்காட்டிய முன்னோடி நூல். மானிடவியல் பார்வையைக் கதைத்தன்மையாகக் கற்பித்த பனுவல்.

மொத்தமாக மூன்று புத்தகங்கள்

கல்லூரியில் படிக்கும் காலத்தில் நூல்கள் வாங்கவெல்லாம் பணம் கிடைக்காது. கிடைக்கும் பணத்தில் இலக்கிய இதழ்கள் மட்டுமே வாங்குவேன். வார இதழ்களான ஆனந்தவிகடன், குழுதம் போன்றன விடுதி நூலகத்திற்கும் கல்லூரி நூலகத்திற்கும் வந்தன. ஆனால் கணையாழி, தீபம், தாமரை போன்றன அங்கு வாங்குவதில்லை. அதனால் பெரியார் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் இடத்தில் அவற்றை வாங்குவதற்காக மாதத்தின் முதல்வாரம் போய்வருவேன்.

மொத்தமாக மூன்று புத்தகங்கள் வாங்குவதற்கான தொகை பட்டப்பிடிப்பில் கடைசியாகக் கிடைத்தது. இளங்கலைத் தமிழில் ஐந்து பருவத்திலும் சேர்த்து முதல் மதிப்பெண் வாங்கிய மாணவருக்கு அந்த ஆண்டுக் கல்லூரி ஆண்டுவிழாவில் துறையின் சிறந்த மாணவர் என்பதற்காகப் பரிசொன்று தருவார்கள்.
 
அப்பரிசுக்கான தொகை ரூ.25/- துறைத்தலைவர் அறைக்கு அழைத்த பேரா.கி.இளங்கோவன், “மீனாட்சி புத்தக நிலையத்திற்குச் சென்று 25 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசுப்பொதியாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் தந்துவிடு. ரசீதைக் கொண்டுபோய் நிதித்துறையில் கொடுத்து பணம் வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டார். மீனாட்சி புத்தக நிலையத்தில் 25 ரூபாய்க்குள் வாங்கிய மூன்று புத்தகங்களும் அன்னம் - அகரம் வெளியீடுகள்.
1. பூமணியின் ரீதி
2. கி.ராஜநாராயணனின் வேட்டி
3. அப்துல் ரகுமானின் பால்வீதி
மூன்று புத்தகங்களிலும் முதல் பரிசு எனச் சான்றிதழ் ஒட்டி ஒரே கட்டாகக் கட்டி ஆண்டுவிழாவில் வழங்கினார்கள். வழங்கியவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நீதிபதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்