இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி


வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங்களாகவும் மறைமுக வரிச்சலுகைகளாகவும் இருந்தன.

தமிழிநாட்டில் காங்கிரஸ் காலத்தில் அந்த மனப்போக்கைப் பயன்படுத்திக் கொண்டவர்களாகத் தென்மாவட்டங்களில் டிவிஎஸ் குழுமம், ஆல்கமேசன் குழு,சிம்சன் மற்றும் ஸ்பென்சர் நிறுவனங்களை நடத்திய பிராமண முதலாளிகள் இருந்தனர். அவர்களுக்கு அங்கே நிலங்கள் இருந்தன; உற்பத்திசார்ந்த தொழில்களும் இருந்தன; சென்னையிலும் மதுரை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலும் இருந்தன. பின்னர் இந்தியா முழுவதும் பரவினர். கொங்குப் பகுதியில் நிலச்சுவான்தார்களாக இருந்த தெலுங்கு முதலாளிகள் தங்கள் உற்பத்திக்காக எல்லை தாண்டாமல் அங்கேயே தங்கினர். அவர்களுக்கிணையாக கொங்கு வேளாளப் பண்ணையார்களும் வேளாண்மையோடு, விவசாயத்திற்குத் தேவையான மின்சாரக் கருவிகள் வீட்டுபயோகப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரித்து இந்தியா முழுமைக்கும் வழங்கினர். லேவாதேவி, வங்கித் தொழிலில் ஈடுபட்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தங்கள் தொழில் காரணமாக இந்திய முழுவதிலும் பரவினார்கள்.சில நேரங்களில் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் சென்றார்கள். ஸ்பிக், முருகப்பா செட்டியாரின் சைக்கிள் கம்பெனிகள் எல்லாம் தமிழக எல்லைகள் விரிக்க்ப்பட்ட வலைப்பின்னல்கள். மூப்பனார், மன்றாடியார் போன்றவர்கள் கடைசி வரை நிலக்கிழார்களாகவே நின்று போனார்கள். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜின் அரவணைப்பில் சிவகாசி, விருதுநகர்ப் பகுதி நாடார்களில் சிறிய, பெரிய முதலாளிகள் உருவானார்கள்.
 
இவர்கள் அனைவருமே அடிப்படையில் நிலவுடைமையாளர்களாகவும் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட முதலாளிகளாகவும் இருந்தார்கள். அவர்களின் தொழில்களுக்கு அரசின் அனுமதி மட்டுமே வேண்டும். காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கும்போது பெற்றுக்கொண்ட நிதியைத் தாண்டி, அவர்களையே அரசமைப்பின் உறுப்பினர்களாக்கி ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்தது காங்கிரஸ். தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசில் அமைச்சர்களாகப் பங்கேற்றவர்களின் குடும்பப்பிண்ணனியையும் சாதிப்பின்னணிகளையும் நினைத்துக்கொண்டால் இது புரியவரும்.இவர்கள் பெரும்பாலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

*****************
1960- கள் வரையிலான நகர்வுகள் தொடக்கக்கால முதலாளியமும் அரசும் கைகோர்த்து வளர்ந்த போக்கு. அதன் தொடர்ச்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கநிலை ஆட்சி இருந்தது. அதே நேரம் திருமதி இந்திராகாந்தியின் தேசவுடைமைக் கொள்கைக்கும் முகம் கொடுக்கவேண்டியிருந்தது.

ராஜீவ்காந்தியின் காலத்தில் தேசவுடைமையாக்கும் போக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு முழுமையாக முதலாளிய/ தனியார் மயம் முன்னுக்கு வந்தது. அதனை முழுமையாகத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை அப்போது ஆட்சியிலிருந்த திமுகவும் அ இ அதிமுகவும் தொழில் அனுமதிகளுக்கும் சலுகைகளுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெற்றுக் கொண்டு மேலாண்மை செய்தார்கள். அவற்றை ஊழல் பணம் என்று காட்ட முடியாத வகையில் சிலவகைத் தொழில்களில் முதலீடு செய்தனர். உற்பத்தி சார்ந்த தொழில்களாக இல்லாமல் கல்வி நிலையங்கள் தொடங்குதல், சுற்றுலா சார்ந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், சொகுசு வசதிகொண்ட போக்குவரத்துகளில் முதலீடு செய்து மாவட்ட அளவில் முதலாளிகளாக வலம் வந்தனர். அதே நேரம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களான நீர், கனிமங்கள், காடு போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடிய தொழில்களைத் தங்களின் சாதிசார்ந்த -இடைநிலைச் சாதிகள் சார்ந்த முதலாளிகளுக்கு வழங்கித் தங்களின் தேர்தல் அரசியலுக்கான நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
 
1990 -களுக்குப் பின் முழுமையாக உலகப்பொருளாதார நிலை மாறியது. எல்லாவகைப் பொருளியல் உறவுகளும் உலக அளவு வலைப்பின்னல்கள் கொண்டனவாக மாறின. கட்டமைப்பு, சுரங்கத் தொழில்கள், போக்குவரத்து வசதிகளின் நவீன நிலைமைகள், உணவுத்தொழில், மருத்துவம், கல்வி என அனைத்தும் தகவல் தொழில் நுட்பத்தோடு இணைக்கப்பட்டு உலகமயத்தின் – தாராளமயத்தின் – தனியார் மயத்தின் பகுதிகளாக மாறின.
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்கள் அதன் உள்ளார்ந்த விதிகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு குடும்பத்தொழில்களைத் தொடங்கினார்கள். வெளிப்படையானவைகளாக அனைவருக்கும் தெரிந்தவை மாறன் சகோதரர்களின் சன் குழும வலைப்பின்னல்கள். தெரியாத தொழில் குழுமங்கள் மற்ற அமைச்சர்களுக்கும் இருந்தன. சுரங்கத்தொழில், கட்டுமானத்தொழில், தரை, கடல், வான்வழிப் போக்குவரத்து, கல்வி நிலையங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள் என எல்லாவகை நவீனத் தொழில் அமைப்புகளிலும் இப்போதைய அரசியல்வாதிகள் பங்காளர்களாகவும் துணை முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சார்ந்த வலைப்பின்னலையும் கல்விக்குழுமங்களையும் காப்பாற்றுவதற்காகவே ஒன்றிய, மாநில அரசுகளுக்கான நிதியை வழங்கி ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் கூடத் தமிழ்நாட்டில் இயங்குகின்றன;தேர்தலில் கூட்டு வைக்கின்றன; வெற்றிபெறுகின்றன. அவர்கள் வளர்ந்துவிட்ட முதலாளிகள் மட்டுமே; அவர்களுடைய நோக்கம் லாபமீட்டுவது தான் எனக் காட்டிக் கொள்கிறார்கள். கிடைக்கும் லாபத்தைத் தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதில் காட்டும் வேறுபாடுகள் மூலம் அவர்கள் அரசியல் சார்பைக் காட்டுகிறார்கள்; கட்சிக்காரர்களாக இருக்கிறார்கள்; கட்சி மாறி ஆட்சியில் அமைச்சர்களாக வலம் வருகிறார்கள்.

 இவையெல்லாம் ரகசியமாக நடப்பன. இதேபோல் தான் மும்பையில் இயங்கும் பெருமுதலாளிகளும் இயங்குகிறார்கள். நேரடியாகக் கட்சி ஆதரவை வெளிப்படுத்தாமல் அரசில் பங்கேற்கிறார்கள். குஜராத்தின் பெரும் முதலாளிகளின் இயக்கம் வேறானதில்லை. முதலாளிகள் அரசியல் சார்பில் கர்நாடகத்தில்,ஆந்திரத்தில், பஞ்சாபில் வேற்றுமைகள் இல்லை.
ரகசியமாக நடக்கும் இந்தப் பரிவர்த்தனைக்குப் பின்னணியில் தேசிய இன முதலாளிகள் இந்திய முதலாளிகளாக மாறும் ஆசைகள் இருக்கின்றன. அங்கிருந்து பன்னாட்டு முதலாளிகளின் வரிசைக்குத் தாவும் விருப்பமும் இருக்கிறது. தமிழ்த்தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாக ஆகவேண்டாம் என்று தமிழ் அரசுகள்/ கட்சிகள் விரும்பாதல்லவா? இந்த மனநிலையைக் கொண்டனவாகவே - அதற்கான அரசுகளாகவே - திமுக தலைமையிலான அரசும் அ இ அதிமுக தலைமையிலான அரசும் அமைகின்றன. இவ்விரண்டு கட்சிகளின் அரசுகளும் மேலே குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பு/ சாதி முதலாளிகளைத் தாண்டி இடைநிலைச் சாதிகளிலிருந்து/ பிற்பட்ட - மிகப்பிற்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் தமிழக பா.ஜ.க. தமிழ்த்தேசிய முதலாளிகளின் இடத்தில் பிறமாநில முதலாளிகளை -குறிப்பாகக் குஜராத்தின் பன்னாட்டுக் குழுமங்களுக்கு உதவும் வகையிலான அரசை உருவாக்க நினைக்கிறது என்பது இங்கே புரியாத ஒன்றல்ல.

இந்த ஓட்டப்பந்தயத்தில் – முதலாளிகள் ஆகும் தேசிய விளையாட்டில் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகள் உருவாக வேண்டும்.அவற்றில் இன்னும் கூடுதலாக அவர்கள் ஐக்கியம் காட்ட வேண்டும். அப்போதுதான் முதலாளியப் புரட்சி இங்கே சாத்தியமாகும். ஆனால் ஒடுக்கப்பட்ட தலித் கட்சிகள் சிதறடிக்கப்படும் அமைப்புகளாகவே இந்தியாவெங்கும் திகழ்கின்றன. அதே நேரம் திராவிட முன்னேற்றக்கழகத்திலிருக்கும் ஒடுக்கப்பட்ட ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் அந்தச் சாதிக்குழுவினர் பயனடைவார்கள். அதே நிலைதான் அதிமுகவிலும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகளாக அறியப்படும் கட்சிகள் மூலம் தேசிய முதலாளிகளை உருவாக்க வாய்ப்பில்லை. அதே நேரம் பன்னாட்டுக்குழுமங்களின் உதவியால் தேசிய முதலாளிகளைத் தாண்டிய பன்னாட்டு முதலாளிகள் உருவாக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அவர்கள் உழைப்புச் சக்தியாக - மனிதவளமாக அறியப்படும் நிலை இருக்கிறது. அதற்கு இன்னும் சில பொதுத்தேர்தல்கள் நடக்க வேண்டும். .

*************************
அண்மையில் திராவிட முன்னேற்றக்கழகத்தினர் மீது  பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் சொத்து மதிப்புப்பட்டியல்களை ஊழல் பட்டியலாக முன்வைத்து நிரூபிக்க நினைப்பது எளிய காரியமல்ல. இப்போது நிலவும் தாராளவாத பொருளாதார உறவுகளைப் பயன்படுத்தி உருவாகியிருக்கும் புதிய முதலாளிகளின் சொத்து மதிப்புப் பட்டியல்கள் மாத்திரமே.இது ஒருவிதத்தில் புதிய/ தமிழ்த்தேசிய முதலாளிகளின் பட்டியலே. தமிழ்த்தேசிய முதலாளிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின்/ அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டு அவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த பணம் என முன்வைக்க நினைக்கிறார். இதே மாதிரி காங்கிரஸ் பல தேசிய முதலாளிகளை உருவாக்கியிருக்கிறது; பாஜகவும் உருவாக்கி வளர்க்கிறது. அவர்களில் கட்சிக்குள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்; கட்சிக்கு வெளியே பன்னாட்டு முதலாளிகளாக வலம் வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மைகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்