உலகப்பரப்பில் நுழையும் தமிழ்க்கதை

ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தாராளவாத அரசுகளாகக் காட்டிக்கொள்வதற்காகவும், தனிமனித உரிமைகளை வலியுறுத்தும் நாடுகளில் தாங்கள் முன்னோடிகளாக இருக்கிறோம் எனக் காட்டும் நோக்கத்தோடும் தங்கள் நாட்டுச் சட்டங்களையும் நடைமுறைகளையும் அந்நாடுகள் அவ்வப்போது மாற்றுகின்றன. அந்த மாற்றங்கள் பின்னர் பன்னாட்டுச் சட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கும்.
பிறநாட்டு மனிதர்களுக்குக் குடியுரிமை வழங்கல், அகதியாக ஏற்றுக்கொள்ளுதல், பணிசெய்யும் உரிமை வழங்கல் போன்றவற்றில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றுபோல விதிகளைக் கொண்டன அல்ல. அதேபோல் ஐரோப்பிய நாடுகளும் வெவ்வேறு அளவுகோல்களைப் பின்பற்றுவதுண்டு. அந்நாடுகளின் தொழிலாளர் தேவை சார்ந்தும், பூகோள அரசியலில் தங்களின் சார்புகளின் வெளிப்பாடுகளாகவும் சட்டவிதிகளை மாறுவதும் உண்டு. இவையெல்லாம் பொதுவாகக் கட்டுரைகளாக எழுதி விவாதிக்க வேண்டியவை. தர்க்கம் சார்ந்தனவாகவும், நாட்டு நலன் எப்படிச் செயல்படுகிறது என்பதை முன்வைத்துக் கேள்விகளை எழுப்பிப் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் வருவதைப் பலரும் வாசித்திருக்கக் கூடும்.

கட்டுரைக்கான தரவொன்றைப் புனைவு எழுத்தாளரின் பார்வைக்கோணம் எப்படிப் புனைவாக்குகிறது என்பதை வாசிக்க நினைப்பவர்களுக்கு இந்தமாதம் காலச்சுவடு இதழில் வந்துள்ள “சுவை” கதையைப் பரிந்துரை செய்கிறேன். ஆசிய நாடொன்றிலிருந்து பிரிட்டானியாவில் குடியேறியிருக்கும் இளம் வழக்கறிஞர், தனது பணியிடத்தில் சந்திக்கும் இனம் மற்றும் பூகோளரீதியான ஒதுக்குதல் பிரச்சினையின் பின்னணியோடு அந்தக் கதையை எழுதியுள்ளார் மாஜிதா.

ஆசியர்களுக்கு எதிரான மனநிலையை உணர்ந்த கதைசொல்லியின் தன்னிலையை முன்வைக்கும் அந்தக் கதைக்குள் அதனை முதன்மை விவாதமாக்காமல், தன்பால் உறவுச் சட்டத்தைப் பிரிட்டானியர்கள் கையாளும் மனநிலையை முதன்மை விவாதப்பொருளாக ஆக்கியுள்ளார். அரசும் பாராளுமன்றமும் தாராளமாக நடந்துகொண்டாலும், அதனைச் செயல்படுத்தத் தூண்டும் நிறுவனங்களின் பொறுப்பில் இருக்கும் மனிதர்களுக்குள் இருக்கும் மேட்டிமை வாதமும் பிற்போக்குப் பார்வைகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கதை நிகழ்வுகளின் வழியாக முன்வைக்கிறார் மாஜிதா.

பலதார மணங்களை ஏற்றுக்கொண்டுள்ள நைஜீரியாவிலிருந்து பிரிட்டானியாவுக்குள் குடியேறி, அகதி வாழ்க்கைக்குள் நுழைய விரும்பும் ‘டேயோ’ என்னும் பெண்ணின் மனுவைத் தனது பணியிடத் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையையும் மீறித் தன்பால் விருப்பம் - எல் ஜி பீ.டி. - சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து வெற்றி காணும் இளம் பெண் வழக்கறிஞரின் மனம் செயல்படும் விதத்தைக் கதை விரிவாக நகர்த்தியுள்ளது.

இதையும் தாண்டி அந்த இளம் வழக்கறிஞர் தனது பணியிட அதிகாரியின் சொல்லையே தனக்கான ஆதாரமாகக் கொண்டு வெற்றிபெற்றாள் எனக் காட்டும்போது கதை, முழுவதும் கட்டுரையிலிருந்து விலகிப் புனைகதையாக மாறிவிடுகிறது. எல்.ஜி.பீ.டி. சட்டவிதிகளின் படி விண்ணப்பத்தைத் தயாரித்து அனுப்ப வேண்டாமென்று சொன்ன அதிகாரி எட்வர்ட்டின் கூற்றை நிராகரித்து விண்ணப்பம் செய்யத்தூண்டியது அவரின் ஒரு கூற்றுத்தான் என்று கதையில் வரும் திருப்பம் முக்கியமானது. எல்.ஜி.பீ.டி அடிப்படையில் விண்ணப்பிக்கத் தூண்டியது எது என அவர் வினவியபோது, அவர் சொன்ன “காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும்பொழுது சுவையையும் ரசனையையும் சட்டத்திற்கு வழங்க வேண்டும்” என்ற கூற்றுதான் உதவியது எனக் கூறும்போது கட்டுரையாக எழுத வேண்டியதைக் கதையாக மாற்றும் மாயம் எப்படி நடந்தது என்பதைச் சொல்லிவிடுகிறது.

புலம்பெயர் அனுபவங்களின் வழியாகத் தமிழ்ப் புனைகதைகள் குடும்பம், காதல், காமம், உறவுச் சிக்கல் என்ற பழைய பொருண்மைகளிலிருந்து விலகி, உலகளாவிய பொருண்மைகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு மாஜிதாவின் இந்தக் கதையும் ஓர் எடுத்துக்காட்டு.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்