நாயக்கர் காலம். இயல் . 5 தமிழுணர்வு


தமிழக வரலாற்றைக் கவனித்தால் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று என்ற வடிவங்களில் தமிழ்மொழி சமூகத்தன்மை பெற்று, சில காலங்களில் உயர்ந்த குரலிலும், சிலபோது தாழ்ந்த குரலிலும் ஒலித்து வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. தமிழகத்தில் கி.பி. 1529 இல் தொடங்கி 1732இல் முடிவுற்ற காலப்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்களின் காலத்தில் எழுதப்பட்ட தமிழுணர்வின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்வதன் மூலம், இத்தகைய குரல்களின் நோக்கத்தினையும் விளைவுகளையும் கண்டறிய முடியும். இந்நோக்கத்திற்கு அக்கால இலக்கியங்கள் தவிர்ந்த பிறவரலாற்று மூலங்களும் உதவக் கூடும் என்றாலும் பண்பாட்டுத்துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை இலக்கியம் தற்போக்கில் படம் பிடிக்கக் கூடிய கருவியாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை. கி.பி. 1529 முதல் கி.பி. 1732 வரையிலான காலப் பகுதியே ஆய்வுக்குரியது என்றாலும், மொழியுணர்வு போன்ற பண்பாட்டு அசைவுகள் - ஒரு காலக்கட்டத்து நிகழ்வுகளாக மட்டும் இருந்து விடாமல், அதற்குப் பிந்திய காலத்து இலக்கியங்களிலும் வெளிப்படக்கூடும் என்பதால் அதற்குச் சற்றுப்பிந்திய காலப் பகுதியைச் சேர்ந்த நூல்களையும் ஆய்வு செய்தால் அதன் வேகத்தையும் விளைவுகளையும் அறிய முடியும். இந்தக் காரணம் கொண்டே நாயக்கர் காலத்திற்கும் பிந்திய இலக்கியங்களும் இந்த இயலில் சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன.
‘மனிதன் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு கருவியே மொழி’ எனவும், ‘ஒரே மொழி பேசும் பல குழுக்களை ஒன்றிணைக்கும் தன்மை மொழிக்கு உண்டு’ எனவும் மொழி நூலார் கூறுகின்றனர். (George C. Barkar. p.3). சமூக அடித்தளமான பொருளுற் பத்தியில் ஈடுபடும் மனிதனோடு நெருங்கிய தொடர்புடையது மொழி என்பதனால், அது கலை, இலக்கியம், சமயம், கல்வி போன்ற பிற சமூக மேல் கட்டுமானங்களைப் (Super structure) போலல்லாமல், சமூக அடித்தளத்தில் பொருளாதார உறவில் ஏற்படும் மாற்றங்களை வெகு விரைவில் பிரதிபலித்துவிடும் என மொழியின் சமுதாயத் தன்மை குறித்துச் சமுதாயவியலார் கூறுகின்றார். (J.V. Stalin. p. 9) எல்லா மொழிகளுக்கும் பொதுவான இக்கோட்பாடுகள் தமிழ் மொழிக்கு மட்டும் விலக்கானவையாக இருக்க முடியாது.

கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களைச் ‘சிற்றிலக்கியங்கள்’ என இலக்கிய வரலாற்று நூல்கள் குறிக்கின்றன. தொண்ணூற்றாறு வகைப்பிரபந்தங்களுள் எந்த வகையாக இருந்தாலும் பெரும்பாலானவை சமயச் செய்திகளை உள்ளடக்கியவனவாகவே விளங்குகின்றன. சமய உள்ளடக்கத்தைக் கொண்ட இச்சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியின் தன்மைகளைப் பற்றியும் தமிழ்மொழியின் பெருமைகளைப் பற்றியும் பலபடப் பேசுகின்றன. தமிழ்ப் பற்றின் ஒரு வெளிப்பாடாகக் குமரகுருபரர் தமது நூல்களில் தமிழைப் பலவகைப்பட்ட அடைமொழிகளைக் கொடுத்து அழைக்கின்றார். அருந்தமிழ், இசை முத்தமிழ், கலைத்தமிழ், கொத்து முத்தமிழ், கொழித்தெடுத்துத் தெள்ளித் தெளிக்குந் தமிழ், கொழி தமிழ், கொழித்த தமிழ், சங்கத்தமிழ், செழுந்தமிழ்ச் செல்வம், செழுந்தமிழ்த் தெள்ளமுது, சொற்சுவை பழுத்த தமிழ், தண்டமிழ், வண்டமிழ், துறைத்தமிழ், தருசுவையமுதெழ மதுரமொழுகு தமிழ், தலைச்சங்கம் பொங்கும் பண்முத்தமிழ், தீஞ்சுவைக் கனியுந் தன்டேனறையும் வடித்தெடுத்த சாரங் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ், தெள்ளு தமிழ், தெளிதமிழ், தென்னந்தமிழ், தேக்க மழ்மதுர மொழிகிய தமிழ், பண்ணுலாம் வடிதமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், பைந்தமிழ், மதுரித்து வட்டெழு முத்தமிழ், முதுசொற்புலவர் தெளிந்த பசுந்தமிழ், மும்மைத்தமிழ், விரைத்தேன் பில்குந்தேத்தமிழ் என்பன அவர்தரும் அடைமொழிகள்.

‘தமிழுக்குச் சரியாக யாருமில்லை’ (தமிழ் விடுதூது: 62)எனவும்’ இமையோர் விருந்தமிழ்தத்தை விட மேலானது தமிழ்’ (மேற்படி 151) எனவும் கூறும் தமிழ்விடுதூது ஆசிரியர் தமிழின் பெருமைகளைத் தொகுத்துச் சொல்வதற்கென்றே எழுதியதைப் போல ‘மதுரைச் சொக்க நாதர் தமிழ் விடுதூது’ என்றொருநூலை எழுதியுள்ளார்.இன்னுஞ் சில தமிழ்ப் புலவர்கள் தமிழை இறைவனோடு தொடர்பு படுத்தியும், மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களோடு இணைத்தும் பேசுகின்றனர்.இன்னுஞ்சிலர் தமிழ் ஆதரவற்றுப் போய் விட்டது எனப் பேசுகின்றனர். சிலர் வேற்றுமொழி தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்டது எனக் கூறி வருந்துகின்றனர்.இப்படிப் பலவித உணர்வுகளோடு ‘தமிழ்’, புலவர்களின் கவனத்துக்குரிய பொருளாக அக்காலத்தில் இருந்துள்ளது என்பதை அக்கால இலக்கியங்களில் பரக்கக் காணமுடிகிறது.

ஒரு கருத்து அல்லது பொருள் தன் நிலையிலேயே இயங்கிக் கொண்டிருந்தால் பலரது கவனத்துக்குரியதாக ஆகாது. ஆனால் பலரது கவனத்தையும் பெற்று, பலராலும் பேசப் படுகிறது என்றால் அது தன் நிலையிலிருந்து மாற்றம் பெற்றிருக்க வேண்டும் அல்லது புதிதாக அதற்கொரு நிலை வந்திருக்கவேண்டும். வேற்று மொழியாளர்களான தெலுங்கர்களின் ஆட்சியில் தமிழின் நிலையில் அல்லது மதிப்பில் இத்தகையதொரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அக்காலத்திய ஆட்சியாளர்களின் ஆதரவு தமிழ்மொழிக்கு இருந்தது என்று கூறுவதற்கில்லை. தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ள பாடல்களில் கிடைக்கும் அகச் சான்றுகளும் தமிழுக்கு ஆதரவு இருந்ததாகச் சொல்லவில்லை.

தமிழ் மொழி, ஆட்சியாளர்களின் ஆதரவை இழந்து விட்டது என்பதைப் பிற இலக்கியங்களைக் காட்டிலும் தனிப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. புலவர்கள் தங்களின் ஆதரவற்ற நிலையை எடுத்துக்கூறிக் கெஞ்சி நிற்பது போல அப்பாடல்கள் உள்ளன.

‘சுரையன் தினகரன்’ என்பவனைச் ‘செந்தமிழ்க்கு நல்லதுரை’ யென்று பாராட்டியும் எதுவும் தர மறுத்து விட்டான் என்கிறார் அந்தகக்கவி வீரராகவ முதலியார் (தனிப்பாடல் திரட்டு, கழகப்பதிப்பு, தொகுதி 2, ப.30). பாடலைக் கேட்டுப் பரிசு வழங்க வேண்டியவன் தமிழை அறியாதவனாக இருக்கிறான் என்பதை, ‘அந்தகனே நாயகனானால் செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்ன பயன்’ என்று கேட்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது இரட்டையரது பாடல் (தனிப்பாடல் திரட்டு, காசுப்பிள்ளை பதிப்பு, ப.197). செந்தமிழின் அருள் சிறிதும் இல்லாதவனிடம் பொருள் நாடிச் சென்றவனை, அழைப்பின்றி விருந்துக்குச் சென்று விட்டு, அதைச் சொல்லமுடியாமல் ஊமை கண்ட கனவைப்போல விழிப்பவனுக்கு ஒப்பிடுகிறது தண்டலையார் சதகப்பாடல் (23; 3-4). குழந்தைக் கவிராயரோ, ‘செஞ்சி தஞ்சை மதுரை மைசூர் மாறு பாஷை செந்தமிழின் கணமறிந்து செய்யமாட்டார்’ (மான் விடுதூது இணைப்பு) என வெளிப்படையாகவே பேசுகின்றார். தன்னை ஆதரித்து வந்த ‘அரியலூர்த் தலைவன்’ குறைவாகப் பொருள் கொடுத்த போது, ‘கனத்தசிராப் பள்ளிதனிலே வடுகர்கூத்துக் கட்டியாளுவதாச்சு’ என்று தொடங்கி, இனித் தமிழுக்கு அரியலூர் என்றிருந்தோம் இங்குஞ் சம்பளங் குறைந்தால் என் செய்வோமே’ (தனிப்பாடல் திரட்டு, காசுப்பிள்ளை, பதி., பா.12) என வருந்தி முடிக்கின்றார்.

அவரே வள்ளல் சீதக்காதி இறந்தபோது, ‘தமிழ்நாவலரை ஓட்டாண்டியாக்கிவிட்டு இறந்து போனான்’ (மேற்படி பா.8) என்கிறார். தமிழ்ப் பாவலர்கள் ஆதரவற்று காற்றில் இலவம் பஞ்சாய்ப் பறக்கையில் தேவேந்திர தாருவைப்போல ரகுநாத செயதுங்கன் உதவினான்’ எனவும் புலவர்களின் நிலையையும் அவர் பாடியுள்ளார். (மேற்படி பா.13). வேற்று மொழி யாளர்களின் வருகையால் தாங்கள் ஆதரவற்றுப் போய் விட்டோம் என்று பாடும்போதே, சிலரைத் தமிழ்மொழியை ஆதரித்ததற்காகப் பாராட்டவும் செய்கின்றனர். அப்படிப் பாராட்டப்படுபவர்கள் பெரும்பாலும் நாயக்கர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட பழைய தமிழ் மன்னர்களின் மரபினராகவோ, பாளையக்காரர்களாகவோ, தமிழ் அதிகாரிகளாகவோ, வள்ளல்களாகவோ காணப்படுகின்றனர்.

இனித் தமிழுக்கு அரியலூர் எனவும், ‘தேட்டாளன் காயல்துரைச் சீதக்காதி’ எனவும் படிக்காசுப் புலவரால் போற்றப்பட்டவர்கள் பெரும் வள்ளல்களாக விளங்கியவர்கள். அவரால் ‘தேவதாரு’ எனவும், அமிர்த கவிராயரால், முத்தமிழ்வாணர்க்கு எழுமடங்கு புயலைப் பொருவுகையான் (‘நாணிக்கண்புதைத்தல்’ என்னும் ஒருதுறைக் கோவை 11:1-2) எனவும் பாராட்டப்பெற்ற ரகுநாதசேதுபதி, நாயக்கர்களின் ஆளுகையை ஏற்றுக்கொண்டவர். ‘பாழுத்தமிழ்மூவர் பாடிய தமிழைத் திருநெல்வேலி வரை வளர்த்ததாக’ சங்கரலிங்க உலா (85) கூறும் தென்காசிப் பாண்டியவர்கள், ஆதிக்கம் இழந்து விட்ட பழைய தமிழ் வளர்ச்சிக்காகப் பதினாறு கோடி பொன்னைச் சொரிந்தான் எனச் சந்திர கலாமஞ்சரி (வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம் ப.26:1) கூறும் பெரிய சாமித்துரை என்பவர் நாயக்கர்களுக்குக் கீழான வடகரை நாட்டின் பாளையக்காரனின் மருமகன், ‘பசுந்தமிழினாவலர்க்குப் பணமு நெல்லும்’ கொடுத்தவனாகக் குழந்தைக்கவிராயர் (முந்நூல் முற்குறிப்பு) பாராட்டும் தாண்டவராய பிள்ளை தெலுங்குப் பாளையக் காரனிடமிருந்த தமிழ் அதிகாரி.

இப்படித் தமிழ் வளர்ச்சியையும் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தவர்களாகச் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், வள்ளல்கள், அதிகாரிகள் போன்றோர்களையே காண முடிகிறது. அக்காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய பேரரசர்களான நாயக்கர்களைக் காணமுடியவில்லை. இதற்குமாறாக நாயக்கர்கள் தெலுங்கு மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஆதரவளித்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கின்றன:

‘சமஸ்கிருதம், தெலுங்கு, விஞ்ஞானம், கணிதம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு நாயக்கர் உதவினர், அந்தணர்களைப் பயிற்றுவிக்கக் கல்விக் கூடங்கள் அமைத்தனர்’ என வரலாற்றாசிரியர் ராஜய்யன் (தமிழக வரலாறு ப.56) எழுதுவதையும், அந்தணர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் நாயக்கர்கள் செய்த உதவியைக் கூறவந்த சத்தியநாத அய்யர், மதுரையில் 10000 மாணவர்களுக்கு மேல் கல்வி பயில்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 மாணவர்கள் உளர் ... இம்மாணவர்கள் அனைவரும் அந்தணர்களே’ (இந்திய வரலாறு. ப.512 ல் மேற்கோள்) என்ற ஜெசூட் பாதிரியின் குறிப்பை மேற்கோள்காட்டுவதையும் காண்கிறோம்.

தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கும், பரவலுக்கும் உதவிய தோடல்லாமல் அம்மொழிகளில் இலக்கியங்கள் தோன்றுவதற்கும் உதவி செய்துள்ளனர். தஞ்சை நாயக்கர்களால் ஆதரிக்கப்பட்ட சேமகூரி வேங்கடகவி, ‘சாரங்கதாரா.’ சரித்திரத்தையும், கிருஷ்ணதேவரிஸீலேஷ காவியத்தையும், கதிர்பதி ‘ ஸீகேஸபதாதி’ என்ற நூலையும் தெலுங்கில் இயற்றியுள்ளனர். தஞ்சை நாயக்கர்கள் தெலுங்குப் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதோடல்லாமல் மன்னர்களே தெலுங்குக் கவிஞர்களாகவும் விளங்கி யுள்ளனர். ரகுநாத நாயக்கன், ‘பாரிஜாத பஷரணம்’, ‘வால்மீகி ஸரிதம்’, ‘ராமாயணம்’, போன்ற நூல்களை இயற்றியுள்ளான். ‘ருக்மணிபரிணய’ என்னும் யட்சகான வகை நாடகமும் அவனால் இயற்றப்பட்டுள்ளது. இன்னொரு தஞ்சையரசனான விஜயராகவ நாயக்கன், ‘காளீயமர்த்தனா’, ‘புதனகரனா’, ‘பிரகலாத நாடகம், ராஜகோபால விலாஸம் போன்ற தெலுங்கு நூல்களுக்கு ஆசிரியன், இவனது மனைவியான ரங்கராஜம்மாள், ‘மன்னாரு விலாஸம்’ என்னும் நூலினை இயற்றியுள்ளாள். சாவரம் சின்னநாராயணராஜீ, தெலுங்கில் ‘கூவலாய்வசரிதா’ என்ற மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவரே. (K.A.N. Sastri, pp. 416 - 417 & M. Sivanandam pp. 78 -79).

தெலுங்கு இலக்கியங்களைப்போலவே சமஸ்கிருத இலக்கியங்களும் நாயக்கர்களின் ஆதரவைப் பெற்றன. சமஸ்கிருத இலக்கியவகைகள் பலவற்றிலும் நூற்றுக்கு மேலான நூல்களை எழுதிய அப்பைய தீட்சிதர் வேலூர்ப் பகுதித் தலைவனான சின்னபொம்முவால் ஆதரிக்கப் பட்டவர். இவரது உறவினரான நீலகண்ட தீட்சிகர், நீலகண்ட சம்பு, கங்காவதரணா, நளசரித நாடகம், சிவல¦லார்ணவா முதலிய சமஸ்கிருத நூல்களில் ஆசிரியர், இவர் மதுரை திருமலை நாயக்கரின் அமைச்சர்.

தஞ்சையில் ஆண்ட செவ்வப்ப நாயக்கன் ‘சாநித்யசுதா’ எழுதிய கோவிந்ததீட்சிதரை ஆதரித்துள்ளான். இவரது மகன்களான யஜ்னநாராயணனும், வேங்கடமகியும் ரகுநாத நாயக்கனின் ஆதரவில் பல சமஸ்கிருத நூல்களை இயற்றியுள்ளனர். செஞ்சி நாயக்கனின் ஆதரவில் வாழ்ந்த சீனிவாச தீட்சிதரும் அவரது மகன்களும் சிறந்த சமஸ்கிருதப் புலவர்களே. தெலுங்கு மொழியில் புலமையுடையவனான தஞ்சை ரகுநாத நாயக்கன் சமஸ்கிருதத்திலும் புலமையுடையவன். கஜேந்திர மோட்சம், அச்சுதந்திரபயோத்யா போன்ற இலக்கியங்களோடு இசை பற்றியும் அவன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளான். (K.A.N. Sastri. pp. 351-352).

சமஸ்கிருதமும் பிராம்மணர்களும் எல்லாக் காலங்களிலும் அரசு ஆதரவுடன் இருந்து வந்துள்ளதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது. அதற்குக் காரணம் அது பொதுமக்களின் மொழியாக இல்லாமல் ஆலோசனை சொல்லும் அறிவாளிகளின் மொழி யாகவே இருந்து வந்துள்ளது என்பதுதான். இந்த நிலைக்குத் தமிழ்வளர்ச்சிக்கு உதவிய பிற்காலச் சோழர்கள் காலம் கூட விலக்கானதாக இருந்ததில்லை. அந்த அடிப்படையில் தான் நாயக்கர்களின் ஆதரவையும் சமஸ்கிருதம் பெற்றிருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது பெரும்பான்மை மக்களின் மொழியான தமிழ், அரசர்களின் ஆதரவு பெறவில்லை. அதற்குப் பதிலாகத் தெலுங்கும் சமஸ்கிருதமும் ஆதரவு பெற்றன. அதனால் தங்களின் மொழி அழிந்துவிடும் என்று கருதி தமிழர்கள், தமிழ்ப்பற்று, தமிழ் உணர்வு என்பனவற்றைத் தூண்டும்படி நேரிட்டது எனத் தோன்றலாம். ஆனால் எத்தகையோரால் இந்த உயர்வு எழுப்பப் பட்டது அதன் பின்னணியில் இருந்த நிறுவனங்கள் எவை, என்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்டால் அதன் சாராம்சம் முழுவதும் வெளிப்படக்கூடும்.

தமிழின் பெருமைகளையும் சிறப்பையும் பாடுபவர்களாகப் பரஞ்சோதி முனிவர், அந்தக்கவி வீரராகவமுதலியார், குமரகுருபரர், படிக்காசுப்புலவர், திரிகூடராசப்பர், பலபட்டடைச் சொக்க நாதர், வைத்தியநாத தேசிகர், அமிர்த கவிராயர், குழந்தைக் கவிராயர், திருவம்பல தேசிகர், இரட்டையர், கருணைப்பிரகாசர், தமிழ் விடுதூது ஆசிரியர், திருக்காளத்தி நாதருலா ஆசிரியர், சந்திரகலா மஞ்சரி ஆசிரியர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், அழகிய நம்பியுலா ஆசிரியர் போன்றவர்களைக் காணமுடிகிறது. (பட்டியல் முழுமையானது அல்ல). இந்த நீண்ட பட்டியலில் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், அழகிய நம்பியுலா ஆசிரியர் ஆகிய இருவர் தவிர அனைவரும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள். இதனை அவர்களின் பாடல்கள் மூலமும் நூலின் பாடுபொருள் மூலமும் அறியமுடிகிறது. தமிழை இவர்கள் சிவனோடும் சிவசமயத்தைச் சேர்ந்த கடவுளர்களோடும் இணைத்தே பேசுகின்றனர்.

தமிழ்மொழியைப் பலவகையான அடைமொழிகளோடு கூறிய குமரகுருபரர், ‘தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி’ (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், பல பாடல்களில்) எனவும், ‘பரசீருக்கும் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் அரசிருக்கு மங்கையற் கண்ணாரமுதைப் பாடுவனே’ (மீனாட்சியம்மை குறம் 50) எனவும் தமிழைச் சைவ சமயக் கடவுளர்களோடு இணைத்துப் பாடுகின்றார். பரஞ்சோதிமுனிவரின் திருவிளையாடற்புராணம், ‘கண்ணுதல் பெருங் கடவுள்’ சங்கப் புலவர்களுடன் அமர்ந்து பசுந்தமிழை ஆய்வு செய்தான் என்கிறது. (மதுரைக் காண்டம் 88). அவரே வேதத்தமிழுடன் வைதிகம், சைவம் ஆகியவற்றிற்கு வைகை அரணாக இருந்தது (மேற்படி 108) எனவும் கூறுகின்றார்.

திரிகூடராசப்பர் தம் திருக்குற்றால மலையில், ‘தமிழும் சைவமும் தழைத்தோங்கத் தென்தமிழ் நாட்டில் எல்லா நலமும் பெருகவேண்டும்’ (114 - 115) என வேண்டுகிறார். ‘தமிழுஞ் சைவவேடமுங்காப்பது’ கங்காதரனின் கடமை எனக் குற்றால யமகவந்தாதி (95:3-4) யிலும், ‘குறவஞ்சித் தமிழைத் தந்தவன் சிவனே’ எனக் குற்றாலக் குறவஞ்சியிலும் (2: 7 -8) கூறுகிறார். இவரே தமிழில் நூல் செய்யும் புலவன் கலைமகளோடு மூவர் முதலிகளான ஞானசம்பந்தன், நாவுக்கரசன், சுந்தரமூர்த்தி முதலியோரையும் புகழ்ந்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். (திருக்குற்றால யமகவந்தாதி: 3) ‘எல்லாவற்றையும் வென்று ஆரியத்துடன் போட்டியிடும் படி தமிழைப் படைத்த சிவனைப் போற்றுவேன்’ எனக் கருணைப் பிரகாசர், (‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் மேற்கோள்) தம் சீகாளத்திப் புராணத்தில் பாடுகின்றார்.

சைவ சமயக் கடவுளர்களைத் தமிழோடு இணைத்துப் பாடும் இப்புலவர்களிடம் இன்னொருபோக்கும் காணப்படுகிறது. அதாவது நாயக்கர்களின் வருகைக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் தற்போது தமிழுக்கு ஆதரவளித்த சிற்றரசர்களையும் தமிழுடன் இணைத்துப் பாடியுள்ளனர். அவர்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டியுள்ளனர். சிவனோடு இணைத்துச் சைவந்தழைக்க உதவியவர்களாகக் காட்டுகின்றனர். சிவனின் அருகில் நின்று சேவித்த அரசர்களாகச் சோழர், தொண்டையர், பூமியர் ஆகியவர்களைக் கூறும் திருக்களாத்தி நாதருலா சமகாலத்தில் ஆண்ட நாயக்கர்களை விட்டு விடுகின்றது. (189 - 192) சிவன் உலாவரும்போதும் சோழனும் பாண்டியதும் உடன் வந்ததாகத் திருக்கழுக்குன்றத்து உலா (74 - 75) கூறுகிறது. சிற்றரசன் ஒருவன் அளித்த நிலத்தை ‘சூரிய குலத்திலுதித்த சோழர்களும் பாண்டியர்களும் அளித்த கட்டளையைப்போல அளித்த நிலம் எனக் கூறுகிறார் திருமலையாண்டவர் குறவஞ்சி ஆசிரியர் (71:3). ‘கமலாலய அம்மன், கன்றை இழந்த பசுவின் குறை தீர்க்க, தன்மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த சோழநாட்டுப் பகுதியில் கோயில் கொண்டுள்ளாள்’ எனக் கூறுகிறார். (கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் 84: 1 - 10) வைத்தியநாத தேசிகர். ஆனால், அவர் வாழ்ந்த காலம் நாயக்கர்கள் காலமாகிய 16 ஆம் நூற்றாண்டு.

பரஞ்சோதி முனிவர், ‘மதுரைக்கு அரசானாகும் தகுதியும் காப்பியங்களுக்குத் தலைமை ஏற்குந்தகுதியும் பாண்டியனுக்கே உண்டு’ என்கிறார். (திருவிளையாடற்புராணம். மதுரைக் காண்டம். 99) ஆனால் அவர் வாழ்ந்த காலம், மதுரையில் நாயக்கர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். இச்சைவப் புலவர்கள் சமகாலத்தில் நாட்டை ஆண்ட நாயக்கர்களைப் பாடாமல், அவர்களுக்கு முன்பு ஆட்சி செய்த சோழபாண்டியர்களையும், நாயக்கர்களுக்கு அடங்கிய சில வட்டாரத் தலைவர்களையும் பாடுவதற்குக் காரணம், சைவ சமயம் நாயக்கர் களால் ஆதரிக்கப்படவில்லை என்பதாகத் தான் இருக்கவேண்டும்.

‘அவர்கள் (நாயக்கர்கள்) பிற சமயங்களை ஒடுக்குவதில் முனையவில்லை. சமயங்களிடம் சகிப்புத்தன்மையையே பின்பற்றினர்’ எனச் சத்தியநாதய்யர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். தங்கள் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற ஒரு சில கோயில்களுக்கு உதவி செய்ததைக் கொண்டே வரலாற்றாசிரியர்கள் அப்படிக் கூறியுள்ளனர் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அக்காலத்தில் சமயப் பூசல்கள் குறிப்பாக சைவ, வைணவப் பூசல்கள் நடைபெற்றதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன:

மணவாளனின் - திருமாலின் - ஊஞ்சலை மலைமகள், அரன், வாசவன், சசி, கலைமகள், அயன், கந்தன், வள்ளி ஆகிய பிற சமயக் கடவுளர்கள் ஆட்டிக்கொண்டிருந்தனர் என்கிறது சீரங்க நாயகர் ஊசல் (7), சைவ சமயக் கடவுளர்களைச் சேவகர்களக்கிக் காட்டும் அதே நூல் அயல் மதத்தவரான யானைகளுக்கு அங்குசம் போன்றவன் திருமால் என்கிறது (8:1). திருவேங்கடத் தந்தாதியோ பரசமயம் வெல்லவந்தவனாகத் திருமாலைக் கூறுகிறது (2:3-4). அரங்கனின் வெங்கோபத்தைக் கண்டு சிவனின் சடையிலிருந்த கங்கையும் வெதும்பினாள் என்கிறது திருவரங்கத்து மாலை (42:3-4).

வைணவப் புலவர்களுக்கெதிரான இத்தத்துவப் போராட்டத்தில் ‘நிலமேழளந்த நெடுமால் பணியுநிமலர் பொன்னம்பலமேவு தில்லைப் பதி நடராசர்’ எனத் திருமால் சிவனை வணங்கியதாகவும் (பல பட்டடைச் சொக்கநாதர், தனிப்பாடல் திரட்டு, காசுப்பிள்ளை பதிப்பு 2:76), ‘பரவாதிகள் சமயங்களில் வீழ்ந்துநின் பாதமலர் பரவாதிகமும் பரமும் விட்டேன்’ (திருக்குற்றால யமகவந்தாதி 82:1) என்பதன் மூலம் பிற சமயங்கள் மோட்சம் தராது எனவும், திருமால், பிரமன், வானவர், முனிவர், பிராமணர் ஆகிய அனைவரும் சிவனை வழிபட முக்தி யடையலாம் எனவும் சைவப் புலவர்கள் கணை தொடுத்தனர். ‘அறுசமயங்கள்’ பற்றி ஆய்வு செய்த ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், ‘ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலம் வரை தோழமைச் சமயங்களாக இருந்த சைவமும் வைணமும் ஒன்றை மற்றொன்று ‘புறச்சமயம்’ எனக்கூறிக் கொள்ளத் தொடங்கியது பிற்காலத்தில் எனக் குறிப்பிடுவது நாயக்கர்கள் காலத்தைத்தான் என்பது உண்மை. தத்துவார்த்தப் போராட்டத்தின் இந்தப் பின்னணியில் நாயக்கர்களின் சமய ஆதரவு கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

செங்கல்பட்டு மாவட்ட ஸ்ரீபெரும்புதூர்க் கோயிலுக்கும், தென்னார்க்காடு மாவட்ட ஸ்ரீமுஷ்ணம் வைணவக் கோயிலுக்கும் சதாசிவராயர் காலத்தில் சிறப்பு மானியங்கள் அளிக்கப்பட்டன. தில்லைக் கோவிந்தராசர் ஆலய தின வழிபாட்டிற்கு 500 பொன் மானியமாக வழங்கியுள்ளான் அச்சுதராயன். அரசர்கள் சமயப்பொறுமையைக் கடைப்பிடித்தாலும் அவர்களது அதிகாரிகள் வைணவ சமயத்திற்கே அதிக ஆதரவு அளிக்க முயன்றுள்ளனர். அச்சுதராயன், காஞ்சியிலுள்ள ஏகாம்பர நாதர் கோயிலுக்கும், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் சமமாகப் பங்கிட்டுத் தரும்படி சில ஊர்களை மானியமாக அறிவிக்க, அதிகாரிகள் அரச ஆணையையும் மீறி வைணவக் கோயிலுக்கு அதிக ஊர்களை மானியமாக வழங்கியுள்ளனர்.

கி.பி. 1543 ஆம் ஆண்டைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட நரசிங்கபுரம் கல்வெட்டு, இரண்டு வைணவப் பிராமணர்களுக்கு நிலமும் வீடும் மானியமாக அளித்த செய்தியினைக் கூறுகிறது. ‘விசயநகரப் பேரரசின் கீழ் தமிழர்களின் சமுதாய வரலாறு’ பற்றி ஆய்வு செய்த எம். சிவானந்தம் வைணவம் பரவநாயக்கர்கள் உதவியதை விரிவாக எழுதியுள்ளார். ‘வெண்ணாற்றங் கரையில் நீலமேகப் பெருமாள் கோயில், தஞ்சையாள் விண்ணகர், மணிக்குன்றப் பெருமாள் கோயில் ஆகிய மூன்று திருமால் கோயில்கள் கட்டி அவற்றிற்கு நிலமும் பொருளும் வழங்கினார்கள் என்ற செய்தியைத் தரும் சதாசிவ பண்டாரத்தார் அதற்குக் காரணமாக நாயக்கர்கள் பரம வைஷணர்கள் என்பதையே கூறுகின்றார். நாயக்கர்கள் ‘பிறசமயங்களை ஒடுக்கவில்லை’ என்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்கு மாறாக, சைவ சமயத்திற் கெதிரான சில செயல்கள் நடந்துள்ளதை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டுகின்றன.

தஞ்சையரனது ஏவற்படி பணியாளர்கள் கோவிலை யிடித்ததைக் கண்ட அடியார்கள் அச்செய்திகளைத் தேசிகரிடம் தெரிவித்தபோது தேசிகர் பாடியன என்ற குறிப்போடு பின்வரும் இரண்டு பாடல்களைத் தருகின்றது. தனிப்பாடல் திரட்டு, (கழகப்பதிப்பு.2 தொகுதி, 24, 25)

‘ஈசன் பலவீனன் என்றக்கால் ஆலயத்தின் மோசம் வந்ததென்று மொழியலாம்- ஈசனே

ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவுந் தானானால் நோக்குவதென் யாம்பிறரை நொந்து’ எனவும்,

‘தேசஞ்சிவாலயங்கள் - சேர அலையவொரு மோசம் வந்ததையோ முதல்வனே - தேசத்து

மன்னை வெறுப்பேனா? வருவினையை ஊட்டுவிக்கும்

உன்னை வெறுப்பேனா? உரை’

எனவும் திருவம்பலத்தேசிகர் சிவன்கோயில் இடிக்கப்பட்டதற்காக மனம் வருந்திப்பாடியுள்ளார். இங்குச் செஞ்சியை ஆண்ட கிரஷ்ணப்பநாயக்கனின் காலத்தில் சிதம் பரத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் கோபுரம் கட்டுவது காரணமாகப் பலர் உயிர்துறக்க நேர்ந்ததை நேரில் கண்டதாக எழுதும் டைமெண்டோ பாதிரியின் பயணக்குறிப்பும் நினைவு கொள்ளத்தக்கது. (M.Sivanandam, pp. 49-50).

சைவ சமய வளர்ச்சிக்கு உதவாது வைணவ சமய வளர்ச்சிக்கே நாயக்கர்கள் உதவினார்கள் என்பதோடல்லாமல் சைவ சமய வளர்ச்சியைத் தடுக்கவும் முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் சைவப் புலவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அவர்களது ஆட்சியைப் பற்றிப்பாடுவதைத் தவிர்த்தனர். பதிலாக நாயக்கர்களுக்கு முன்பு ஆண்ட சோழ, பாண்டியர்களையும், நாயக்கர்களின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட வட்டாரத் தலைவர்கள் சிலரையும் பாடினர் எனக் கொள்ளலாம். இதுவும் கூட இப்போதைய ஆட்சிக்கு எதிராகப் பழம்பெருமையை நினைவூட்டுவது என்றே தோன்றுகிறது. இவற்றிகெல்லாம் மேலாக வேளாளர்களின் பெருமைகளையும் சிறப்பையும் பாடுவதில் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர் என்பதையும் அவர்களது பாடல்கள் தெரிவிக்கின்றன.

பரஞ்சோதி முனிவர் வேளாளர்களின் பெருமைகளாக, விருந்து உபசரிப்பவர், உரை பெறு தமிழ் பாராட்டுபவர், தானமும் கொடையும் அன்பும் வரிசையும் தகைசால் நண்பும் உடையவர்கள், என்று கூறுவதோடு,

‘வழக்கறு வாய்மை மாண்பும், கங்கை தன் மரபின் வந்த

விழுக்குடிப் பிறப்பும், மூவர் ஏவிய வினைகேட்டு ஆற்றும்

ஒழுக்கமும், அமைச்சாய் வேந்தர்க்கு உறுதிசூழ் வினையும் குன்றா

இழுக்கு அறு மேழிச் செல்வர், வளமறு இயம்பல் உற்றாம்(மதுரைக் காண்டம் 145 - 148)

என்றும் பாடுகின்றார். ‘வேளாண்மை முதன்மை பெற்றதனாலேயே’ முதலியார் என்ற பட்டம் அளிக்கப் பெற்றனர் என்ற தகவலைத் தரும் தொண்டை மண்டல சதகம்’ 184) நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டபொழுது தனியொரு வேளாளனே சுற்றிலுமுள்ள ஊர்களையெல்லாம் பாதுகாத்தான் என்கிறது (71, 72.). வடகரைநாட்டின் பாளையக்காரன் சைவ வேளாளண். அவனது பெருமையைப் பாடும் நூல்கள் ‘வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம்’ என்ற தொகுப்பாக 12 நூல்கள் கிடைக்கின்றன.

சிவகங்கை சமஸ்தானத்து அதிபதியான வடுகநாததுரையைப் பாட்டுடைத் தலைவனாக்காமல் அவனது பிரதானியான தாண்டவராய பிள்ளையையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மான்விடுதூது எழுதியுள்ளார் குழந்தைக் கவிராயர்.

தண்டலையார் சதகம் கற்பனையாகத் ‘தண்டலையார் வளநாடு’ என்ற ஒன்றை உருவாக்கி அங்கு வேளாளர்கள் முதன்மை பெறுபவர்களாகவும், சைவமும் தமிழும் தழைக்க உதவுபவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது. அரசன், அந்தணன், வைசியன் என்ற எல்லா வருணத்தாருக்கும் அச்சாணியாக இருப்பவன் வேளாளனே என்கின்றன சதக நூல்கள் பலவும்.

இப்படிப் புலவர்களால் போற்றப்படும் வேளாளர்களின் நிலையை, சைவம், தமிழ் என்ற மேல்கட்டுமானங்களின் ஒடுங்குதசையின் பின்னணியில் காண்பது இங்கு தேவையாகிறது. கங்கைகொண்டு, கடாரம் வென்று, ஈழத்தில் புகழ்க் கொடி நாட்டிய பிற்காலச் சோழர்கள் காலத்திலும் பிற்காலப் பாண்டியர்கள் காலத்திலும், சமூக மேல்நிலையில் ஆளும் குழுக்களாக இருந்தவர்கள் இச்சைவவேளாளர்களே. சோழப் பேரரசு சைவமும் செந்தமிழும் தழைத் தோங்கத் தோன்றிய பேரரசு எனக் கருதப்பட்டது. நிலமானிய அமைப்பின் உச்சகட்டமான அக்காலத்தில் அரசர்கள் மட்டுமல்லாது அரச குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பெரும் நிலக்கிழார்கள் போன்ற ஆளும் குழுவினர் அனைவரும் சைவ சமய வளர்ச்சிக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உதவினர் என வரலாற்றாசிரியர்கள் (K.A.N.Sastri, pp. 428-430) கூறுகின்றனர்.

நாயக்கர்கள் காலத்திலும் நிலமானிய முறையே இருந்தது என்றாலும் அது வடிவத்திலும் தன்மையிலும் மாறுபட்டதாக உள்ளது. நாயக்கர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காகப் பாளையக் கார முறையை ஏற்படுத்தினர். நாட்டின் பகுதிகள் பாளையக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. பாளையக்காரன் தனக்கு வேண்டியவர்களுக்கும் தனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் நிலத்தைக் கொடுத்து, அவர்களிடமிருந்து வரிவசூலித்துக் கொண்டான். அப்படி வசூலிக்கப்பட்ட வரியில் மூன்றில் ஒரு பகுதியை அரசனுக்குக் கொடுத்துவிட்டு, மீதியைத் தனக்காகவும், தனது படைச் செலவுக்காகவும் வைத்துக் கொண்டான். ஏனெனில் அரசன் வேண்டும்பொழுது படையுதவி செய்யவேண்டியதும் பாளையக்காரனது கடமையாக இருந்தது. இத்தகைய ராணுவத்தன்மை, கொண்ட பாளையங்களில் பெரும்பாலானவை தெலுங்கர்களின் கையில் இருந்தது என்பதனை வரலாற்று நூல்கள் குறிக்கின்றன.

‘தெலுங்கு அரசர்கள் தமிழ் அரசர்களைப் பணியவைத்து அம்மண்ணின் மைந்தர்களை அடிமை நிலைக்குத் தாழ்த்தினர். அதைத் தொடர்ந்து நாயுடுகள், ரெட்டிகள், ராஜீக்கள் போன்ற தெலுங்கர்கள் அலை அலையாகத் தமிழகத்தில்குடியேறினர்.(தமிழக வரலாறு.பக். 35 - 36). என ராஜய்யன் தெலுங்கர்களின் ஆதிக்கம் ஏற்பட்ட விதத்தினைக் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து, ‘ நாடுமற்றும் மாநிலங்களின் நிர்வாகப் பொறுப்பு பலதரப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட போது கிராமங்களின் நிர்வாகம் கிராம அதிகாரிகளின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகத்திலும் இராணுவத்திலும் வேலை பெறுவதற்கான முன்னுரிமை தெலுங்கர்களுக்கு அளிக்கப்பட்டது’ (மேற் படி ப.52). எனவும் எழுதிச் செல்கின்றார். இதனால் அதற்கு முன்பு ஆதிக்க சக்தியாக இருந்த வேளாளர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை தோன்றியது. இதனால் வேளாளர்கள் அரசாட்சியிலிருந்த தெலுங்கர்களுக்கெதிராகப் போராடும்படி தள்ளப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இப்போராட்டத்தில் தெலுங்கர்களை மட்டும் அல்லாமல் அவர்கள் ஆதரித்து வந்த தெலுங்கு மொழி, வைணவ சமயம் என்ற இரண்டையும் எதிர்ப்பதும் வேளாளர்களுக்குத் தேவையானதாகத் தோன்றியிருக்க வேண்டும். அதற்குச் சைவசமயம், தமிழ் என்ற இரண்டையும் கருவியாகக் கொள்ள முனைந்தனர். இவ்விரண்டிலும் தமிழ்மொழி இன்னுஞ்சிறந்த கருவியாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தத்துவ ரீதியாகவும், நேரிடையாகவும் மக்களை ஒன்று திரட்டுவதை விட மொழியின் பெயரால் ஒன்றிணைப்பது எதிரானது என அவர்கள் கருதியிருக்கலாம். ‘சாதி , குலம் முதலிய பிறப்புப்பாகுபாடுகளையும்,  பிரதேச வேறுபாடுகளையும் கடந்து பரந்துபட்ட மக்கள் முன்னணியொன்றினை உருவாக்கும் போது அதற்குப் பொதுவாக மொழியொன்றே இயல்பாக 
அமையக்கூடும்’ (க.கைலாசபதி, ‘பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் மேற்காட்டுகிறார். ப. 124) என ஆய்வாளர் கூறுகின்றனர். இந்த அடிப்படையில் தான் ‘தமிழுணர்வு’ அக்காலத்தில் உயர்த்திக் கூறப்பட்டது எனக் கூறலாம். இந்த இடத்தில் தமிழகத்தின் சமுதாய வரலாற்றைக் கொஞ்சம் முன்னேபோய்ப் பார்த்து, தமிழ், சைவம், வேளாளர் என்ற மூன்றும் இணைத்தே பேசப்பட்டுள்ளதை நினைவுக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது.

சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கிய சோழப் பேரரசின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பின்னணியில் சைவ நாயன்மார்களின் சமயப் பிரச்சாரம் பெரும் பங்கு வகித்துள்ளதைக் காண்கிறோம். சைவ நாயன்மார்களின் பாசுரங்களைச் சமூகப் பொருளாதாரப் பின்னணியுடன் ஆய்வு செய்த கைலாசபதி, “வணிகவர்க்கமான பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் எதிராக நிலவுடைமைவர்க்கமான சைவர்கள் நடத்திய போராட்டத்தில் நிலவுடமை வர்க்கம் வெற்றிபெற்றுச் சோழப் பேரரசை நிலைநாட்டியதில் நாயன்மார்கள் தூண்டிய தமிழுணர்வும் பெரும்பங்கு வகித்தது” என்று நிறுவுகின்றார். (கைலாசபதி, ‘நாடும் நாயன்மாரும்’, ‘பேரரசும் பெருந்தத்துவம்’ என்ற கட்டுரைகள்). நாயன்மார்கள் தமிழையும் சிவனையும் இணைத்தே பிரச்சாரம் செய்ததை அவர்களது பாசுரங்களில் காணமுடிகிறது. சைவசமயம் என்பது ‘தமிழர்களின் சமயம்’ என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு, சோழர்கள் சைவத்தின் காவலர்களாகவும், தமிழின் காவலர்களாகவும் உயர்த்தப்பட்டனர். அத்தோடு அக்காலத்தில் ஆளும் குழுக்களாக இருந்த வேளாளர்களும் தமிழ், சைவம் ஆகியவற்றின் காவலர்களாகக் காட்டிக் கொண்டனர்.

வேளாளர்களின் இந்தப் பெருமைகள் எல்லாம், கி.பி.14 ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட முஸ்லிம்களின் படையெடுப்பாலும், முஸ்லிம்களுக்கெதிராக இந்து இராச்சியத்தைத் தாபித்துத் தோன்றிய விசய நகரப் பேரரசின் பரவலினாலும் ஒடுங்கு தசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையக்கார முறையினால் அவர்களது ஆதிக்கம் முழுமையாகப் பறிக்கப்படும் நிலை தோன்றியது. ஏனெனில் பாளையக்கார முறையின் தல நிர்வாக அமைப்பான ஆயங்கார முறை தனது பிடியைச் சமுதாயத்தின் அடித்தளம் வரை செலுத்தியதை வரலாற்று நூல்களின் துணை கொண்டு அறிய முடிகிறது.

இந்த நிலையில் தான் சைவ நிலவுடமையாளர்கள் தெலுங்கு ஆளும் வர்க்கத்திற் கெதிராக தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கினர். அந்த முயற்சியில் அவர்களுக்கு, முன்பே வெற்றியைத் தேடித்தந்த கருவியையே பயன்படுத்த முற்பட்டனர். அந்தக் கருவிதான் தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று, தமிழ் அரசர்கள் என்பன வெல்லாம். இதன் காரணமாகவே அக்காலத்திய இலக்கியங்கள் தமிழ் உணர்வினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தின எனலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்