நம்பகத்தன்மைகளினூடாக: சாமி – கோவில்பட்டி வீரலெட்சுமி பற்றிய உரையாடல்


திருநெல்வேலி என்றால் “அல்வா” என்பது நீண்டகால அடையாளம். ஆனால் “சாமி” திரைப்படம் அந்த அடையாளத்தைக் “கலவரம்” என்பதாக மாற்றிவிடத் தீா்மானித்து நிகழ்வுகளை முன்மொழிந்தது. இதனைத் திருநெல்வேலியின் மனிதா்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

இந்தக் கேள்விக்குப் பின்னால் என்னவிதமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதனைப் புரிந்து கொண்டு நான் விளக்கினாலும் கூட அது எனது ஒருவனின் நினைப்புத்தானே தவிர, ஒட்டு மொத்தத் திருநெல்வேலியின் நினைப்பாக இருந்துவிடும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். இதற்கு முன்பு விக்ரம் நடித்து வெற்றிக் கொடி நாட்டிய “ஜெமினி,தூள்” போன்ற படங்களை எவ்வாறு எதிர்கொண்டு அமோக ஆதரவு தந்தார்களோ அது போலவேதான் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்வதானால், தமிழ்நாட்டின் பிற நகரங்களில்- மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை- என வாழ்பவா்களின் எதிர்கொள்ளலுக்கும், திருநெல்வேலியின் மனிதா்களின் எதிர்கொள்ளலுக்கும் பெரிய அளவு வேறுபாடு இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சாமி திரைப்படம் , “நமது ஊரை அப்படியே படம் பிடித்துள்ளது” என்ற ஆச்சரியம் கலந்த பாராட்டோ, “நமது நகரம் மற்றவா்களிடம் இவ்வாறு காட்டப்படுகிறதே” என்ற குற்றவுணா்வு கலந்த வருத்தமோ அவா்களிடம் வெளிப்படுவதாகத் தெரியவில்லை.அப்படியானால், சாமி படத்தின் கதை நிகழ்வுகளும் “காட்சி அமைப்புகளும்” திருநெல்வேலி என்ற நகரத்தின் – குறிப்பான வெளியின் நிகழ்வுகள் இல்லையா..? தொண்ணூறுகளின் மத்தியில் தொடங்கிய கலவரங்களின் பின் பதிவுகள் படத்தில் இடம் பெற்றிருப்பது உண்மை இல்லையா…..?

தொண்ணூறுகளின் மத்தியில் திருநெல்வேலி மாவட்டத்துக் கிராமப் புறங்களில் தொடங்கிய சிறு தகராறுகள் பெருங்கலவரங்களாக மாறின என்பது உண்மைதான். சாதிக்கலவரங்களாகவும் மதக்கலவரங்களாகவும் மாறிய அவற்றின் பின்னணியில் வட்டிக்கடைக்காராக்ளும், தாதாக்களும், அரசியல்வாதிகளென அறியப்பட்ட ரௌடிகளும், சாதீயத் தலைவர்களும் இருந்ததெல்லாம் உண்மை தான். கலவரங்கள் நடந்தபின்பு, அதனை அடக்குவதற்கென முரட்டுத்தனமான காவல்துறை அதிகாரிகள் இங்கு அனுப்பப்பட்டதும் உண்மை. அவா்களின் வரவால் சில வகையான வன்முறைகள் குறைந்ததும், வேறுவகையான கொலைகளும் அடாவடித்தனங்களும் நடந்ததும் கூட உண்மைதான்.

அவையெல்லாம் ஏற்கனவே அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பதிவாகி, பரவி, அல்வாவை இடம்பெயரச் செய்து விட்டுக் “கலவரமாக” கட்டமைத்து விட்டன. அந்தக் கட்டமைப்பின் மீது காசு பண்ணும் உத்திதான் “சாமி” திரைப்படம். அதற்கு மேல் இந்தப் படத்தின் இயக்குநருக்கு திருநெல்வேலியின் மீது கரிசனமோ, யதார்த்தத்தைப் படம்பிடிக்கும் கலை ஆர்வமோ இல்லை என்பது நூறு சதவீத உண்மை. “தனிநபா்” பிரச்சினைகளைப் பொதுவெளியின் பிரச்சினைகளுடன் ஏற்ற விகிதத்தில் கலந்து, தேவையான அளவு காரம், மணம், குணம் கலந்து கட்டி அடிக்கும் தமிழ் மசாலாப் படம்தான் இந்தச் சாமியும்.

மசாலாதான். ஆனால், வித்தியாசமான மசாலா என்பது உண்மைதானே? தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில், மிக அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் மேல் நம்பும்படியான ஒரு கதையைக் காட்டி, ரத்தமும் சதையுமாக மனிதா்களைக் கதாபாத்திரங்களாக்கியுள்ள “சாமி“ ஒரு வித்தியாசமான சமூக அக்கறையுள்ள மசாலாப் படம் என்று வரவேற்கப்பட வேண்டிய படம்தானே….?

நம்பும்படியான கதை என்று நீங்கள் சொல்வது ஏனென்று எனக்குப் புரிகிறது. வாகையடிமுக்கு, பேட்டை, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, வல்லநாடு, களக்காடு, சிறீவைகுண்டம், கயத்தாறு எனத் திருநெல்வேலி நகரத்தின் பகுதிகளையும், சுற்றியுள்ள ஊா்களையும் வசனமாகக் குறிப்பிடுவதோடு, தாமிரபரணி ஆறு, நெல்லையப்பா் கோயில், பாளை பஸ் ஸ்டாண்டு, ஜங்சன், இரண்டடுக்கு மேம்பாலம், தினசரிச் சந்தை வைரவிழாக் கொண்டாடிய ஒரு பெண்கள் கல்லூரி – சாராள் தக்கா் மகளிர் கல்லூரி என அதன் உண்மையான இடங்களையும் படம் பிடித்துள்ளனா். இவையெல்லாம் சோ்ந்தாலே கதைக்கு நம்பத் தன்மை, திருநெல்வேலியின் உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு என்ற தோற்றம் கிடைத்து விடும் என்பது ஆச்சரியம்தான்.

வெறும் வெளிகளும் அவற்றின் பெயா்களும் மட்டுமே நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் தந்துவிடுமா….? அதில் உலவும் மனிதா்கள், அவா்களின் குணாம்சங்கள் விருப்பங்கள் – ஆகியனவற்றில் நம்பகத்தன்மையும் அடையாளங்களும் தரப்பட வேண்டாமா.? திருநெல்வேலியின் மனிதா்கள், தங்களின் பிரதேசம் சார்ந்த, சாதி சார்ந்த, மதம்சார்ந்த அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் விருப்பம் உடையவா்கள் என்பது நடைமுறை உண்மையாக இருக்கும் நிலையில் – சாதி அடையாளங்களை நாசூக்காக நழுவவிட்டுள்ள “சாமி” எவ்வாறு திருநெல்வேலியைப் பற்றிய படமாக ஆக முடியும்.

புதுமைப்பித்தனின் சங்குத்தேவனும், நாசகாரக் கும்பல் மனிதா்களும் அசலான திருநெல்வேலி மனிதா்கள். வண்ணநிலவனின் கம்பாநதியும் ரெயினிஸ் ஐயா் தெருவும் திருநெல்வேலியின் நம்பகமான மனிதா்களைப் பற்றிய கதைகள். ஆனால் எண்பதுகளுக்கு முந்திய திருநெல்வேலியைப் பற்றிய கதைகள். ஆனால், சாமி தொண்ணூறுகளின் நிகழ்வுகள். உண்மைகளைப் பேசுவதில் தயக்கம் கொண்டு, வதந்திகளின் மேல் புனையப்பட்ட சரக்கு….. அவ்வளவுதான். “அப்படியானால் இது திருநெல்வேலி அல்வாதான்; புராதன லாலா கடை அல்வா அல்ல” என்பது மாதிரியா…?

ரசிக்கும்படியான கூற்று; பாராட்டுகிறேன். நான் வேறுவிதமாகச் சொல்ல விரும்புகிறேன். சாமி – கும்பகோணம் வெத்திலைச்சாறு; வல்லநாட்டு வீச்சரிவாளின் ரத்தச் சிவப்பு அல்ல. நேரடியாகவே பேசலாம். சாமியின் வெளிப்படையான நோக்கம் சமகால நடப்பைப் படம்பிடிப்பதாகப் பாவனை பண்ணி பணம் சோ்ப்பது. அதன் மறைமுகமான–விருப்பமான நோக்கம். பிராமணிய நலனைப் பேணுவதும், மாறி விட்ட சமூக அரசியல் சூழலில் பிராமணா்களின் நிலையைப் பாராட்டுவதும் ஆகும்.

நான் போலிஸ் இல்லை; பொறுக்கி எனக் கூறிக்கொண்டு செயல்படும் ஆறுச்சாமியின் – பிராமணரல்லதாரின் அடையாளங்கள் கொண்ட ஒருவனின் கதையில், பிராமணிய நலன் முன்னிறுத்தப்படுகிறது எனச் சொல்லுவது விதண்டாவாதமாகக் கூடத் தோன்றலாம். இந்த விதண்டாவாதத்தில் “உண்மையை மறைத்து விடும் நோக்கம் எதுவும் இல்லை” என்று நான் கூறுவதை நம்பத்தான் வேண்டும்.

“நம்ம சாதிக்காரன்….. அவங்க சாதிக்காரன்“ என்றெல்லாம் பொதுமொழியில் – நாகரீகம் என்று கருதும் மொழியில் பேசும் வசனங்கள் உண்மையில் வெளிப்படையாகச் சாதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்க வேண்டிய வசனங்கள்தான்.அதுவும் அல்லாமல் சாதி சார்ந்த அடையாளங்களோடும் சார்போடும் அலையும் திருநெல்வேலியின் அரசியல் வாதிகள், தாதாக்கள் அடியாட்கள், சமூகத் தலைவா்கள், தொண்டா்கள், அறிவுஜீவிகள் என ஒருவருக்கும் சாதி அடையாளம் தராத படம் கதாநாயகியின் பின்னணியை மட்டும் சகலவிதமான அடையாளங்களோடும் உருவாக்கியிருப்பது சந்தேகத்திற்குரியதும் உள்நோக்கம் கொண்டதும்தான்.

லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியரின் மகள்தான் நாயகி. தனது மாதச் சம்பளம் குடும்பச் செலவுக்குப் போதாத நிலையில் பலசரக்குச் சாமான்களைப் பொட்டலம் போட்டுச் சம்பாதிக்கும் – நியாயமான உழைப்பில் வாழும் அக்கிரகாரத்திலிருந்து வருபவள் அவள். தயிர்ச்சாதமும் மாங்காய் வடுவும் மதிய உணவு; டவுன் பஸ்ஸில் போய்வர 2.50 + 2.50 = 5.00 ரூபாய்தான் கைச்செலவுக்கு. கிம்பளம் வாங்காமல், சம்பளம் மட்டுமே வாங்கும் அய்யா் பையனுக்காக வளா்க்கப்படுபவள் அவள். என்றாலும், திருநெல்வேலிக்குரிய வீரமும் அவளுக்கு உண்டு. மிளகாய்ப் பொடியை ஆயுதமாக்கித் திருடனைப் பிடித்து விடுபவள். அந்த வீரம்தான், வீரதீரம் கொண்ட போலீஸ் அதிகாரியிடம் மனத்தைப் பறிகொடுக்கும்படி தூண்டுகிறது. காதல் வயப்படுகிறாள்; திருமணத்திற்கு முன்பே அக்கிரகாரத்திலிருந்து சாப்பாடு கொண்டு வருகிறாள்.

அவளின் பெற்றோர்களும்கூட அவா்களின் காதலை சும்மா எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள். அவளது சின்னப் பிடிவாதத்தில் எல்லாம் சுமுகமாக முடிந்துவிடுகின்றன. அவனின் அப்பா எதிர்ப்பே காட்டவில்லை. குடும்பம் சார்ந்து – உறவினா்கள் சார்ந்து – சாதிகள் சார்ந்து – எந்தவிதமான எதிர்ப்புகளும் இன்றி அவா்களின் திருமணம் நடந்துவிடுகின்றது. ஒடிப் போயெல்லாம் தாலிகட்டிக் கொள்ளவில்லை. (கிள்ளிப் பாரத்து கொண்டேன் – தமிழ்நாடுதானா…? அதுவும் திருநெல்வேலியில் நடக்கிற கதையில் ஆக, மகிழ்ச்சிதான்…..? கதையாக இருந்தாலும் நடக்கிறது)

இப்படிக் கதை நிகழ்வை கட்டியமைக்கும் இயக்குநா் ஹரி பாலச்சந்தரின் உதவி இயக்குநராக இருந்து அவரது நிறுவனமான கவிதாலயாவுக்கு “சாமி”யை உருவாக்கியுள்ள ஹரி – சொல்ல வருவது என்ன…..? பிராமணா்கள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்; சாதிவேறுபாடுகளை எல்லாம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை; ஜனநாயக அரசு தரும் உரிமைகளுக்குள் எளிமையாகவும் பொறுப்போடும் வாழ்பவா்கள் அவா்கள்; பிரச்சினைகள் எல்லாம் மற்றவா்களால்தான்; அதிகாரத்திற்கு வந்துவிட்ட பிராமணா் அல்லாதவா்களால் இங்கு சட்டம் ஒழுங்கு கெடுகிறது; லஞ்சம் பெருகியுள்ளது; தாதாக்களும் ரௌடிகளும் உருவாகியுள்ளனா், சாமி பட இயக்குநா் ஹரியின் விமரிசனம் இது.

இந்த விமரிசனம் “அரசதிகாரம்” என்பதை அரசியல்வாதிகளின் – கட்சி அரசியல் நடத்துபவா்களின் – அதிகாரமாக மட்டும் பார்க்கும் அடிப்படைத் தவறு உடைய ஒருவரின் பார்வையாகும். அரசதிகாரத்தில் அதிகார வர்க்கத்தின் பங்கை விலக்கிவிட்டு விமரிசனம் செய்யும் நோக்கம் உள்ளது. அதற்குக் காரணம் பிராமண நலன் காக்கவேண்டும் என்பதுதான். அதுமட்டும் அல்லாமல், பின் – நவீன யுகத்தில் அதிகாரம் பருண்மையான அலகுகளாக இல்லாமல், நுண் அலகுகளாகச் சிதறிக் கிடக்கின்றன.அச்சிதறல்களில் மிக முக்கியமான அலகு தகவல் ஊடகங்களாக விரியும் அலகுகளாகும். இவைதான் இன்று இந்தியாவின் பண்பாட்டு அரசியலைத் தீா்மானிக்கின்றன. அவை இன்றும் பிராமணா்களின் கருத்தியலையே சுமந்து வருகின்றன. பிராமணா் அல்லாத முதலாளிகளின் கைகளில் இருக்கும் ஊடக வலைப் பின்னல்களிலும்கூட பிராமணக் கருத்தியல்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அவையெல்லாம் இவா்களால் பார்க்கப்படுவதில்லை. அப்படிப் பார்க்காமல் விடுவதில் உள்நோக்கங்கள் உண்டு.

மிகச்சாதாரணமான ஒரு மசாலா சினிமாவைச் சாக்காக வைத்துக்கொண்டு ஆழமான விசயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்திற்கு உள்ளேயே நின்று பேசுவதாக இருந்தாலும், “காமெடி டிராக்” என்ற பெயரில் விவேக் பேசும் வசனங்கள் உங்களை சுண்டியிழுக்கக்கூடும். ஏறத்தாழ பாரதியாரின் நகல்போல அமைக்கப்பட்டு, அக்கிரகாரத்தில் அரைவேக்காட்டுக் கலகக்காரனாக நிற்கிறது அந்தப் பாத்திரம். தலித் சாதியினரிடம் பரிவு கொண்டு பூணூல் போடவும், கல்வி கற்பிக்கவும், தொட்டுத் தோளில் சுமக்கவும் செய்யும் அந்தப் பாத்திரம் பிராமணா்களிடம் உள்ள மூடத்தனங்களையும், பழைமை எண்ணங்களையும் விட்டுவிடத் தூண்டுகிறது. “நகைச்சுவைக்”காக என்று அதனை ஒதுக்கிவிட்டு மையக் கதாபாத்திரங்களோடு மட்டும் பார்வையாளன் நின்று விடுவான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்கள் தமிழ்ச் சினிமாவில் இடம்பெறும் “நகைச்சுவைக் காட்சிகளின்” சமூகக் கட்டுமான உருவாக்கத்தைக் குறைவாக எடை போடுகிறீா்கள் என்றுதான் கூறமுடியும். அப்படியெல்லாம் நாம் அவற்றை ஒதுக்கிவிட முடியாது.

சாதி அடையாளத்தைக் காட்டுவதில் தமிழ் சினிமாவில் பலவிதமான போக்குகள் உண்டு. அவை பற்றித் தனியாகத்தான் பேசவேண்டும். என்பதுகள் வரை நகைப்பிற்கும் கிண்டலுக்கும் உள்ளான பிராமணா்கள் தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னரும் வேறுவிதமாகப் படைக்கப்படுகின்றனா் என்பதை மட்டும் இங்கு சுட்டிக் செல்லலாம். சாமி பட இயக்குநா் ஹரி, பிராமணா்களை நியாயவான்களாகவும், உழைப்பில் விருப்பம் உடையவா்களாகவும், வம்புதும்புகளுக்குப் போகாதவா்களாகவும், மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படுபவா்களாகவும் காட்டுகிறார். இத்தகைய படிமங்களின் மூலவா் இவா் அல்ல; இவரது குரு பாலச்சந்தர் உருவாக்கிய படிமம் இது. அவரிடமிருந்து பாலகுமாரன் (இது நம்ம ஆளு), சங்கர் & சுஜாதா (ஜென்டில்மேன்) வழியாகப் பலரிடம் நுழைந்துள்ளது. இப்பொழுது வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் இன்னொரு படமான “அரசு“ (சரத்குமார் நடித்தது) விலும் கூட கதாநாயகி அக்கிரகாரத்துக் குருக்களின் மகள்தான் (சிம்ரன்). மணிரத்தினத்தின் “தளபதி“ யில் கூட இத்தகைய தொரு பிம்பம் (சோபனா) உண்டு. இந்தப் பிம்பம் பிராமணா்களை அக்கிரகாரத்து ஒண்டிக் குடித்தனத்தில் வாழ்பவா்களாகவும், “அப்பளம் வடாம்” போட்டு விற்று, தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவா்களாகவும் மட்டுமே காட்டிப் பரிவுணா்வையும் பச்சாதாபத்தையும் உண்டாக்க முயல்கின்றது. இம்முயற்சி “சதிகள் நிரம்பிய ஒரு முயற்சி” என்று மட்டும் கூறி நிறுத்திக் கொள்ளலாம்.
முடித்துக் கொள்வதற்கு முன்னால், சில கேள்விகள்

1. அக்கிரகாரத்துப் பெண்கள் மட்டுமே அதிகமாகக் காதல் வயப்படுவதும், கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வதும் ஏன்?

2. திரைப்படங்களில் மட்டும் அல்ல; நடப்பிலும் பிராமணப்பெண்கள் தலித் ஆண்களையும் இடைநிலை சாதி ஆண்களையும் காதலித்து மணம் முடித்து மேல்நோக்கிய பயணத்தைத் தூண்டுகிறார்களே….. அது எப்படி….?

3. பிராமண ஆண்கள், பிராமணா் அல்லாத பெண்களிடமோ, தலித் பெண்களிடமோ காதல் வயப்படுவதில்லையே…. அப்படியானால் சாதியைக் காப்பாற்றுவதில் பெண்களைவிட ஆண்களே முக்கியமான பங்கு வகிக்கின்றனா் எனக் கொள்ளலாமா…..?

4. இது பிராமணா் x அல்லாதார் என்ற நிலைக்கு மட்டும் பொருந்தக் கூடியதா? எல்லா நிலையிலும் பொருந்தும் பொது விதியா…..?

சாமி – திரைப்படம் குறித்து இவ்வளவு விவாதித்தது தேவைதானா….? ரொம்பவும் அலுப்பான விவாதம் அது. சரி, அது போகட்டும். இப்பொழுது வந்துள்ள “கோவில்பட்டி வீரலெட்சுமி” யும் “சாமி” யைப் போல வியாபார உத்திகளைக் கலந்த மசாலா சினிமா தானா….?

தமிழ் சினிமாவின் வெகுளி (Innocent) பார்வையாளனுக்கும் வாசக மனத்தைச் சாமா்த்தியமாகக் கட்டியமைக்க முயலும் வெகுமக்கள் ஊடகங்களுக்கும் இரண்டு படங்களிலும் ஒப்பிடுவதற்குப் பல்வேறு அம்சங்கள் உள்ளன. “தனிநபா் சாகசம், அநியாயத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையையும் ஆயுதமாக் கொள்ளுதல்” என்ற பொது அம்சங்களும், கூட்டமாக ஆடுதல், செயற்கையான சண்டைக் காட்சிகள், தன்பக்க நியாயங்களை வலிமையான சொற்களால் எடுத்துரைத்தல் என்ற காட்சியமைப்புகளும் மட்டுமல்ல; சாமியின் கதைவெளி “திருநெல்வேலி” என்றால், வீரலட்சுமியின் கதைவெளி, அதன் அருகில் உள்ள “கோவில்பட்டி” எனச் சொல்லப்பட்டு்ளளது. இந்தப் பொதுமைகள் இருந்தாலும் இரண்டு படங்களிலும் அடிப்படை வேறுபாடுக்ள பல உள்ளன. சாமி – உண்மையைச் சொல்வதாகப் பாவனை பண்ணி, அதிகாரக் கட்டமைப்பிற்கும், வன்முறையிருப்பிற்கும் துணைபோகும் படம். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமியோ, புனைவான கதையாகப் பாவனை செய்யப்பட்டு, வன்முறையின் தோற்றத்திற்கும் நிலவும் வேறுபாடுகளுக்கும் காரணங்களைக் காட்ட முயன்றுள்ளது. இன்னும் சொல்வதானால் சாதி வேறுபாடு காரணமாக நிகழும் கொடிய வன்செயல்களை நேரடியாகவும் நம்பும்படியாகவும் சொல்ல விரும்பிய படம் என்று கூடச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் ஒரு முன்முயற்சிதான்.

எடுக்கப்பட்டுள்ள முறையிலும் காட்சி அமைப்புக்களிலும், அவற்றை அடுக்கிய விதத்திலும் எதிர்வுகளை உருவாக்கிக் காட்டிய தன்மையிலும் பெரிய அளவு வேறுபாடுகளோ, சோதனை முயற்சிகளோ இல்லாமல், சொல்ல விரும்பும் கருத்தளவில் அடிப்படை நோக்கம் மாறியுள்ளது இந்தப்படத்தில். இந்த அடிப்படை நோக்கம் மாறிவிட்டதனாலேயே அந்தப் படம் “சிறந்த படம்”ஆகிவிடுமா….? ஒரு சினிமாவைச் “சிறந்த படம் அல்லது மோசமான படம்”, நம்பா் ஒன் அல்லது குப்பை” என்றெல்லாம் தரம்பிரிப்பது பார்வையாளனும் ஏற்றுக்கொண்டு பார்த்துவிட்டு வரவேண்டும் என்பது அவற்றின் உள்நோக்கம்.அதேபோல் “கலைப்படங்கள்”என முத்திரைபெறும் படங்களும் வேறு சில உள்நோக்கங்கள் கொண்டனதான். ஐரோப்பியக் கலைக்கோட்பாடுகளைப் பின்பற்றவதன் மூலம், பார்வையாளா்களை விலக்கிவிட்டு பரிசுகளைக் குறிவைப்பன அவை.

கோவில்பட்டி வீரலட்சுமி மாதிரியான படங்களைப் பற்றி விமரிசனங்களோ, வரிசைப்படுத்துதலோ இல்லாமல் ஒதுக்கும் ஊடகங்களின் உள்நோக்கம் இது மாதிரியான படங்கள் எடுக்கப்படக் கூடாது என்பதுதான். சாதிப் பிரச்சினையை அதன் உண்மையான அா்த்தத்தில் விவாதிக்கும் படங்கள் வந்து விடக்கூடாது என்பதும்தான். அப்படிப் பேசினாலும் எதிர்மறை மனநிலையோடுதான் ஊடகங்கள் பேசுகின்றன. அரிவாள் கலாசாரத்திற்கு எதிராகப் பேசும் டாக்டா் கிருஷ்ணசாமி, கோவில்பட்டி வீரலட்சுமியை எதிர்க்காதது ஏன்? (இந்தியா டுடே) என்று கேட்கும் பின்னணியை ஊடக அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். அரிவாளை வைத்துப் பயமுறுத்தித் தன் மேலாதிக்கத்தையும் மனிதத் தன்மையற்ற குணத்தையும் மறைப்பதும், இந்த ஆதிக்க மனப்பான்மையைத் தட்டிக் கேட்க “அரிவாள்” தூக்க வேண்டிய கட்டாயம் நோ்ந்தது எனச் சொல்வதும் ஒன்றாகுமா…? இரண்டையும் ஒன்றாகச் சொல்வதன் மூலம், வெகுமக்கள் ஊடகங்கள் யார் பக்கம் நிற்கின்றன என்பதை நாம் புரிய வேண்டியவா்களாக இருக்கிறோம்.

“கோவில்பட்டி வீரலட்சுமி” ஒரு திரைப்படம் என்ற அளவில் மட்டுமல்ல, ஒரு கலைப்படைப்பு என்ற அளவில்கூட பெரிய அளவு குறைகள் உள்ள படம்தான். ஒரு படைப்பின் ஆதார குணங்களான காலம் (Time), வெளி (Space), கதாபாத்திரங்கள் (Characters) என்ற மூன்றில், பின்னிரண்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட கவனம். முதல் கூறான “காலத்தில்” எடுத்துக் கொள்ளப்படவில்லை. சாதாரணமாகப் பன்றிகளையும் கோழிகளையும் பராமரித்துக் கொண்டிருந்த “லட்சுமி”, வீரலட்சுமியாகப் பரிணாமம் அடைய எத்தனை ஆண்டுகள் ஆனது என்பதில் தெளிவில்லை. இதனால் கோபம் கொண்டாள்; கொலைசெய்தாள்; அரிவாள் ஏந்தினாள்; துப்பாக்கியைப் பற்றினாள் என்று சொல்லும்பொழுது காலம் உருண்டோடிக் கொண்டேயிருக்கும். அதற்கேற்ப காட்சி அமைப்புகளிலும் கதாபாத்திரங்களின் உருவங்களிலும் மாறுதல்கள் தேவை. ஒா் உண்மைக் கதையைப் படமாக எடுக்கும்பொழுது இது ரொம்பவும் அவசியமான ஒன்று. பின்னணிக் காலம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் நம்பகத்தன்மை காணாமல் போய்விடும். இதில் அது நோ்ந்திருக்கிறது. காலம் சார்ந்த தா்க்கங்கள் அற்று, காட்சிகள் தாவித்தாவிப் போவது போலப் பார்வையாளனுக்குத் தோன்றுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய குறை.
படத்தின் இயக்குநரை வேறு சில காரணங்களுக்காகப் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாக்கள் தனது வியாபார வெற்றிக்கான சூத்திரங்களாக மூன்று விஷயங்களை வைத்துள்ளன. பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என்பனவே அவை. இம்மூன்றில் நகைச்சுவைக்காட்சிகள் என்ற தனிக்கிளை தவிர்க்கப்பட்டிருக்கிறது. விவேக், வடிவேல், செந்தில், கவுண்டமணி, மணிவண்ணன் என நகைச்சுவை நடிகா்களைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதற்காகவே அவை இடம் பெறுகின்றன. முக்கியக் கதையின் மீது கவனம் செலுத்தாத இயக்குநா்கள், நகைச்சுவைக்காட்சிகள் மூலமாகவே வெற்றிப் படத்தை உருவாக்கி விடுவதும் உண்டு.

ஒா் உண்மைக்கதையில் நகைச்சுவை டிராக் இருக்கக்கூடாது என முடிவு செய்ததே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் இப்படத்தில் தவிர்த்துவிட முடியாது. அதற்காகச் சண்டைகளும், கலவரங்களும், ஆடல் பாடல்களும் இந்த முறையில்தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. வெளியுலகம் அறியாத ஒா் அப்பாவிப் பெண்ணை நடப்பில் இருக்கும் சமூக அமைப்பும், அதன் ஆதிக்க மனிதா்களும் – குறிப்பாக, அரசதிகாரப் படையான போலீஸே – ஆயுதம்தாங்க வைத்தன எனச் சொல்லும்போது சண்டைகளும் கலவரங்களும் இடம்பெறாமல் போகாது. அதேபோல்தான் பாடல் காட்சிகளும். ஆனால், இவ்விரண்டையும் இன்னும் கவனத்தோடு அமைத்திருக்கலாம். சமூகப் பொறுப்புள்ள ஒரு திரைப்படத்தில் எவையெவை இடம்பெறவேண்டும், எவையெல்லாம் இடம்பெறக் கூடாது எனத் திட்டமிடுவதோடு இயக்குநரின் பணி முடிந்துவிடுவது இல்லை. இடம்பெறும் காட்சிகளை எவ்வாறு எடுக்க வேண்டும்; எவ்வாறு அடுக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படத்தின் பாடல் காட்சிகளில் ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அருகருகே நிறுத்தி, அசையச் செய்து பார்வையாளா் மனத்தைக் கற்பனை உலகில் சஞ்சரிக்கவிடும் நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ்த் திரைப்படங்களின் வியாபார வெற்றிக்கு ஆண் நட்சத்திரங்களின் நாயக பிம்பம் முக்கியமானது என்ற கருத்தும் நம்பிக்கைகளும் உள்ளன. அந்த நம்பிக்கையினாலேயே அவற்றின் தயாரிப்புச் செலவும் கோடிகளைத் தாண்டுகிறது. இந்தப் படம் அதிலும் மாறுதல்களை முன் வைத்துள்ளதே…தமிழ்த் திரைப்பட உலகத்தின் வாழ்வு – சாவு – இருத்தல் பற்றிய அக்கறைகளிலும் விவாதங்களிலும் நாம் அதிகம் ஈடுபட வேண்டியதில்லை. எந்தவிதமான பொறுப்புணா்வுமற்ற விடலைப் பையன்களின் கூட்டம் அது. தமிழ்த் திரையுலகில் பணியாற்றும் முப்பது வயதுக்காரனுக்கும் அறுபது வயதுக்காரனுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. எல்லோருமே விடலைப் பையன்களாகவும், சிலுக்கும் சிங்காரிகளாகவும்தான் உள்ளனா். இப்படிச் சொல்வது நடிக நடிகையா் பற்றி மட்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒட்டு மொத்தத் திரையுலகமும் அப்படித்தான். அது அப்படியே அழிந்து போனாலும் கவலைப்பட ஒன்றுமில்லை.
கலை உணா்வு, சமூக உணா்வு என்பதுகூட வேண்டாம்; குறைந்த பட்சம் தனி மனிதனுக்கான தன் அடையாள உணா்வாவது இருக்க வேண்டாமா.? அதைக்கூடத் தக்கவைக்க நினைக்காதவா்கள் இந்த திரையுலகத்தினா். அவா்களைப் பற்றி விவாதிப்பது அவசியமற்றது.

நமக்கு முக்கியம் பிரதிகள் (Texts) தான். படத்தைப் பற்றி விவாதிப்பதும் அவற்றின் தாக்கங்களைப் புரிந்து கொள்வதும் முக்கியமானது. அந்த வகையில் பார்வையாளனுக்கு உதவும் விவாதங்களும் சொல்லாடல்களும் இப்போதைய தேவைகளாக உள்ளன. தமிழ் மற்றும் இந்திய சினிமாக்களைப் பற்றி இவ்வாறான விவாதங்களை முன்னெடுக்காமல் பிற நாட்டு லட்சியப் படங்களை முன்மொழிந்து பேசிக் கொண்டிருப்பதும்கூட ஒருவிதத் திசை திருப்பல்கள்தான்.

சரி, உங்கள் வினாவிற்கு வருவோம். இந்தப் படத்தில் நாயகபிம்பம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று சொன்னீா்கள். என்னுடைய கோணத்தில் அது உண்மையில்லை என்றுதான் சொல்வேன். வெற்றிக்கு உத்தரவாதமான நடிகையை நடிக்க வைப்பது. அவனுக்கு இணையாகச் சந்தை மதிப்புள்ள நடிகையை- சிம்ரனை- இடம்பெறச் செய்வது என்பதே நாயக பிம்ப வழிபாடு ஆகாதா?. அந்தக் காரியத்தைத் தொடா்ந்து செய்கின்றபோது நாயக பிம்பம் உருவாக்கப்படும் ஆபத்து நோ்ந்துவிடும். அந்த ஆபத்து, எல்லாவற்றிற்கும் தீா்வு அந்த நடிகனே என்பதில் கொண்டுபோய் விட்டுவிடும். அறுபதுகளில் எம். ஜி. ராமச்சந்திரனை நம்பியதின் விளைவுகள் இன்று கண்கூடு. இன்று உருவாக்கப்படும் ரஜினி நம்பிக்கை, விஜயகாந்த் நம்பிக்கை என்பனவற்றின் நம்பிக்கைகளும் வேறுமாதிரியானதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஒரு திரைப்படத்தை உருவாக்கும் இயக்குநா் இதையெல்லாம் விட்டுவிட்டு, தனது கதையின் கதாபாத்திரத்திற்கான நடிகை, நடிகா்களைத் தோ்வு செய்வதிலும், தேர்வு செய்தவா்களை அவற்றிற்குப் பொருந்தச் செய்வதிலும் அக்கறை காட்ட வேண்டும். கோவில்பட்டி வீரலட்சுமியின் இயக்குநா் ராஜேஷ்வர், பெருமளவு அதனைச் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

வீரலட்சுமியாக நடிக்க சிம்ரனைத் தேர்வு செய்ததும், அதற்கு அவா் ஒத்துக் கொண்டதும் கூட வரவேற்க வேண்டிய ஒன்று. சிம்ரனின் உடல் சார்ந்தும் சொந்த நடவடிக்கைகள் சார்ந்தும் பத்திரிகைகள் உருவாக்கியுள்ள பிம்பங்கள் பரபரப்பானவையும் அருவெறுப்பானவையும் ஆகும். ஆண்களின் அடக்கியாளும் குணத்திற்கு எதிராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும், தனது சுதந்திரத்தை வெளிப்படுத்துவதுமான சிம்ரனின் சொந்த நடவடிக்கைகள் ஒழுக்க மீறல்களாகக் காட்டப்படுகின்றன. (ஆண்களை மாற்றிக் கொண்டே இருக்கும் பெண் என்பதாக) அதேபோல், அவரின் உடல் என்பது இடுப்பு மட்டுமே எனவும் காட்டப்படுகிறது. அவரை மட்டுமல்ல, வெவ்வேறு நடிகைகளை வெவ்வேறு உடலின் பகுதிகளாகவே முன்னிறுத்திக் காட்டுகின்றன. திரையுலகமும் பத்திரிகையுலகமும். இதையெல்லாம் மீறுவதும் மாற்றுவதுமான நோக்கங்கள் இப்படத்தில் செயல்பட்டுள்ளன. தன்னுடைய இருப்பு நிலையையும் வா்க்கக் குணாம்சத்தையம் இழப்பதும் மாற்றுவதுமான வினை ஒரு கலைஞனின் வினையாகும். இந்தப் படத்தில் நடித்ததின் மூலமாக சிம்ரன் தனது கலைப் பொறுப்புணா்வை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார் என்றுதான் கூறவேண்டும். அதற்குப் பின்னணியில் இருந்த இயக்குநா் ராஜேஸ்வரும் அதே அளவுபொறுப்புணா்வுடையவரே.
நடிகை, நடிகர் தோ்வு சார்ந்து நாயக பிம்பமும் சந்தை மதிப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும், சமூக இயக்கம் சார்ந்து நாயக பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்த உருவாக்கம் நோ்மைறையான விளைவுகளைத் தராது. எதிர் மறையான விளைவுகளையே தரும்.

உங்களின் இந்தக்கூற்று தெளிவாகப் புரியவில்லை. இன்னும்கொஞ்சம் விளக்கமுடியுமா….!

நான் விளக்குவதைவிடப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டா் கே. கிருஷ்ணசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா்அளித்த பதிலையே விளக்கமாகத் தர விரும்புகிறேன். (இந்தியா டுடே ஜுலை 23, 2003. பக்.42) “கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் தாழ்த்தப்பட்ட பெண் வன்முறைக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துகிறார். அதை எப்படிப் பார்க்கிறீா்கள்?” “ஒடுக்குவதற்காக ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பெறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தப் படத்தில் வருவது போன்ற தனிநபா் ஹீரோயிசம் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. கடந்த பத்தாண்டுகளாக தலித்துகளில் ஒவ்வொரு தனிநபரும் போராட்டத்திற்குத் தயாராகியுள்ளார்கள். மக்களது கிளா்ச்சிதான் சமூக விடுதலைக்கு இட்டுச் செல்லுமே தவிர தனிநபா் வீராவேசங்களால் சமூக விடுதலையைப் பெறமுடியாது. அது ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம். ஆனால் இப்போது எல்லோரது விழிப்புணா்வாலும்தான் மாற்றம் நிகழ்கிறது. மக்களது எழுச்சி ஏற்படும் போது ஆயுதங்களுக்கோ, வன்முறைக்கோ அவசியம் இருக்காது.



இந்தப் பொறுப்பான பதிலே சரியான விளக்கம் ஆனால், எழுச்சிகளையும் விழிப்புணா்வுகளையும் எதிர்கொள்ளும் நிறுவனங்களில் இருப்பவர்கள் ஆயுதம் தாங்கியவா்களாகவும், சட்ட நடவடிக்கைகளை மதிக்காதவா்களாகவும், சட்டத்தை வளைக்கும் வல்லமை உடையவா்களாகவும் இருந்தால் அவா்களை எப்படி எதிர்கொள்வது என்பதும் முக்கியமான பிரச்சனைதான். அப்படியான சூழல் தமிழ்நாட்டில் இந்தியாவில் இன்று இல்லை என்றும் சொல்லிவிட முடியாதே.


================================================


புதிய கோடாங்கி, ஜுலை, ஆகஸ்டு 2004.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்