பிறந்த நாள் கொண்டாட்டம்.
பிப்ரவரி, 17 -இந்தத் தேதியை எனது பிறந்தநாளாக அரசாங்கப்பதிவேடு ஒன்றில் எழுதியவர் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு எழுதிய உத்தரப்புரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர். வலதுகை தலையைத் தாண்டி இடதுகாதைத் தொடவேண்டும் என்ற வழக்கம்போல் சொன்னார் அவர். எளிதாகத் தொட்டது எனது வலதுகரம். ஏனென்றால் அப்போது ஐந்து வயதைத் தாண்டிப் பல மாதங்கள் ஓடியிருந்தன. ஐந்து வயது முடிந்தபோது தொடங்கிப் பள்ளிக்கூடம் போகச்சொல்லிக் கையில் கம்போடு விரட்டினார் எனது மூத்த அண்ணன். பல நாட்கள் கம்பும் கையுமாகப் பள்ளிக்கூடம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார். அவர் போன பின்பு நான் வெளியே வந்து பள்ளிக்குப் பின்னால் இருந்த தாழங்குளத்தில் நீச்சல் அடித்துவிட்டு ஆலமரத்தின் கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகளில் உட்கார்ந்து ஆடியும் நேரம் கழித்துத் திரிந்தேன்.
தொடர்ந்து வருவான் என்று உறுதியான பின் பெயர் எழுதலாம் என்று சொல்லிவிட்டதினால் பள்ளியின் சேர்க்கை நாள் தள்ளிக்கொண்டே போனது.
பள்ளிப்பதிவேட்டில் பெயர்பதித்துக் கல்வியைத் தொடங்கினான் என்று உறுதிசெய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் எனது தாய்மாமன். ஆரஞ்சு மிட்டாய் பையோடு தலைமையாசிரியரிடம் வந்து சண்டையிட்டுப் பதிவு செய்தார். பதிவுசெய்தபின் பள்ளிக்குப் போகாமல் நின்றதில்லை. பெயரெழுதிப் பள்ளியில் சேர்த்துக் கொண்ட தலைமையாசிரியர் குறித்த தேதிதான் இந்தப் பதினேழு பிப்ரவரி.
சித்திரையில் தொடங்கும் மாதங்களில் இது மாசி. பதினொன்றாவது மாதம். ஆனால் ஜனவரியில் தொடங்கும் கணக்கில் பிப்ரவரி இரண்டாவது மாதம். அன்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் எனது பிறந்த தேதியைக் கேட்டேன். அவருக்குத் தேதியெல்லாம் நினைவில் இல்லை. கார்த்திகை மாதம் அடைமழை நாளொன்றில் பிறந்தாய் என்று சொன்னார். அடைமழைக்காலத்துப் பிறப்பு பின்பனிக்காலத்துப் பிறப்பாக மாறியிருக்கிறது. அதே போல் பள்ளியில் பெயர் எழுதும்போது அதுவரை எனக்கிருந்த பெயரான தீர்க்கவாசகன் என்பது ராமசாமியாக மாற்றம் கண்டது. தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்க வேண்டும் என்ற வழமைப்படி மாமா பள்ளியின் பேரேட்டில் அப்படி எழுதச்சொன்னார். ராமசாமியின் மகன் அழகர்சாமி; அழகர்சாமியின் மகன் ராமசாமி என்று வம்சாவளிப்பெயராக இதனைச் சூட்டினார். அப்போதிருந்தே இந்த ராமசாமி என்ற பெயரை விருப்பம் இல்லாமலேயே சுமந்து திரிகிறேன். ஏனென்றால் இந்தப் பெயரில் எந்தத் தனித்துவமும் இல்லை.
பெயர்களைக்குறித்தும் அவை உண்டாக்கும் புத்துணர்ச்சிகள் குறித்தும் புனைவுத்தன்மைகள் குறித்தும் அசைபோட்ட நாட்களில் ஐந்தாண்டுகள் வரை ஒரேயொரு பெயராக இருந்த ‘தீர்க்கவாசகன்’ என்பதைத் திரும்பக் கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால் அதற்காக அரசின் வருவாய்த் துறைக்கும் நீதிமன்றப்பதிவேடுகளுக்கும் போக வேண்டும் என்று அறிந்தபோது, ‘ பெயரில் என்ன இருக்கிறது;பெயர் என்பது ஓர் அடையாளம்’ என மனதைத் தேற்றிக்கொண்டதும் பழைய கதை. பிறந்த நாளை நினைவூட்டிக் கொண்டாடத் தூண்டியதில் எனது பேரனுக்கே முன்னுரிமை. அவனது பெயரைக் கொண்டாடியதற்குப் பின் ‘தாத்தாவின் பிறந்தநாள்’ எப்போது என அறிந்து, அதற்கெனப் படம் வரைந்து அனுப்பிக் கொண்டாட்ட த்தைத் தொடங்கி வைத்தான். அதற்குப் பிறகு இந்த முகநூல் அனைவருக்கும் அறிவித்து, வாழ்த்துகளைப் பெற்றுத் தருகிறது. பலரின் வாழ்த்தும் அன்றைய நாளை மகிழ்ச்சியாக வைத்துவிடுகிறது.
எப்போதும் நள்ளிரவு 12 மணிக்குத் தான் வாழ்த்த நினைக்கும் நபர்களை வாழ்த்தித் தொடங்குபவர் எனது கல்லூரித் தோழர் நோபிள் செல்லதுத்துரை. அவரே நேற்றும் தொடங்கினார். அதன் பின் உலகத்தின் கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளரும் நண்பருமானநோயல் நடேசனிடமிருந்து உள்பெட்டியில் வாழ்த்து வந்து சேர்ந்தது. அதன் பின் தூங்கிக் காலையில் எழுந்தால் தொடர்ச்சியாக முகநூல் பதிவுகளாகவும் மெசஞ்சர் என்னும் உள்பெட்டி வழியாகவும் இணையத்தொடர்புகளான இமெயில், வாட்ஸ் அப் வழியாகவும் அலைபேசி வழியாகவும் வாழ்த்துகள் வந்துகொண்டே இருந்தன. கல்விப்புலப் பேராசிரியராகவும் கலை, இலக்கியத் தளங்களைக் கவனித்து மதிப்பீடுகளையும் விமரிசனங்களையும் விவாதங்களையும் முன்வைப்பதின் காரணமாக விரிவான குறிப்புகளோடு வாழ்த்தையும் சொன்ன நண்பர்கள் எனது பொறுப்பையும் வேலைகளையும் கூடுதலாக்குகிறார்கள் என்பதையும் நேற்று உணர்ந்து மகிழ்ந்தேன்.
கடந்த 42 ஆண்டுகளாக எனது வேலைகளில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனது மனைவி விஜயலெட்சுமி. அவருக்கு கடந்தவாரம் பிறந்தநாள். இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் பிறந்தநாள் வரும். அன்றைய நாளைப் போலவே நேற்றும் ஒரு நேர உணவை வெளியில் சாப்பிட்டுக் கொண்டாடினோம். அந்த மகிழ்ச்சியான நாளைத் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கடந்த 42 ஆண்டுகளாக எனது வேலைகளில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனது மனைவி விஜயலெட்சுமி. அவருக்கு கடந்தவாரம் பிறந்தநாள். இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் பிறந்தநாள் வரும். அன்றைய நாளைப் போலவே நேற்றும் ஒரு நேர உணவை வெளியில் சாப்பிட்டுக் கொண்டாடினோம். அந்த மகிழ்ச்சியான நாளைத் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கருத்துகள்