நாயக்கர் காலம். இயல்.3. அரசும் நிர்வாகமும்


ஆளுதல், மேலாண்மைபுரிதல், உரிமைகளைப் பெற்றிருத்தல், சேவை புரிதல் முதலிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது அரசு (State) ஆகும். ஏதேனும் ஒருவகையில் ஒருநபர் அல்லது ஒரு குழுவினர் பிறரை விட அல்லது பிற குழுக்களை விட வல்லமையும், வன்மையும் பெற்றிருப்பதை இவ்வரசு குறிக்கிறது. அதிகாரங்கள், உரிமைகள் முறைப் படுத்தப்படும் போது அரசு ஒரு நிறுவனமாக அமைகின்றது. எனவே அரசும் ஓர் அமைப்பு முறைமையைக் கொண்டதே ஆகும். அரசியல் அறிஞர் ஹெரால்டு லஸ்கி அரசு பற்றி விளக்கம் தரும்போது , “சமுதாயத்தில் எந்தவொரு தனிமனிதனையும் அல்லது குழுவையும் விட மேலானதாக - சட்டபூர்வமான அதிகாரம் பெற்று, இணையப் பெற்றுள்ள ஒரு சமூக அமைப்பே அரசு ஆகும்” என்று கூறுகிறார். மேலும், சமூக அமைப்பு வடிவங்களில் இதுவும் ஒன்றே என்று கூறும் அவர், ‘எல்லாமான மேலதிகாரம் பெற்றிருப்பது இதன் சிறப்புத்தன்மையாகும்’ என்று கூறுகிறார். 1

சமுதாய அமைப்பின் குறிப்பிட்ட வளர்ச்சி முறையில் தோன்றுகின்ற அரசியல் அமைப்பு, அவ்வக்கால கட்டத்தில் சமூக, பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப அவற்றின் வெளிப்பாடாக அமைகின்றது. சங்ககாலத்தில் அரசு, முறைப்படியாகத் தோன்றத் தொடங்கியதை அக்கால இலக்கியங்கள் உணர்த்துகின்றன. பின்னர், பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் அரசியல் அமைப்பு, நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளை முறைப்படுத்தி அமைந்த ஒரு நிறுவனமாகக் காணப்படுகிறது.இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மன்னராட்சி தோன்றிப் பல நூறு ஆண்டுகள் முடிந்த பின்பே நாயக்கராட்சி ஏற்பட்டது. எனவே வளர்ச்சி பெற்ற மன்னராட்சிமுறை அக்காலத்தில் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

மகாமண்டலேஸ்வரர்கள் என்னும் பிரதிநிதிகள் மூலம் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள், விசய நகர அரசர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தபின் தோன்றிய நாயக்கராட்சிமுறையின் கூறுகளையும் இயல்பு களையும் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு பதிவு செய்து தந்துள்ளன என்பதை வரலாற்றிற்கான பிற சான்றுகளோடு காணலாம். அரசு உறுப்புக்கள், உறுப்புக்¢களின் இயல்புகள், செயல்பட வேண்டிய முறைகள் முதலியவற்றை உதிரி உதிரியாக ஆங்காங்கே தெரிவிக்கும் இலக்கியங்களிலிருந்து ஒரு கால கட்டத்தின் அரசியல் அமைப்பு, நிர்வாகமுறை முதலியனவற்றை அறிவது கடினமான ஒன்றே. ஆனாலும் அவற்றைப் பிற வரலாற்றுச் சான்றுகளோடு இயைபுபடுத்தி அறியும் பொழுது, இலக்கியச் சான்றுகள் மிகுந்த பயனுடையனவாக உள்ளன என்பதை உணர முடியும்.

நாயக்கராட்சி முறையில் அரசனைத் தலைவனாகக் கொண்ட மத்திய அமைப்பும், பாளையக் காரனைத் தலைவனாகக் கொண்ட உள்நிர்வாக அமைப்பும், மக்களோடு நேரடியாக உறவு கொள்ளும் வகையில் அமைந்த கிராம நிர்வாக அமைப்பான ஆயங்காரமுறையும் இருந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொன்றின் தன்மைகளையும் இலக்கியச் சான்றுகளோடு பொருத்திக்காண்பது அவசியம்.

மத்திய அமைப்பு:

அரசனையும் அவனுக்கு உதவும் வகையில் அமைந்த அமைச்சர் குழுவையும் கொண்ட அமைப்பினை மத்திய அமைப்பு எனக் கொள்ளலாம். இது, பெரும்பாலும் தலைநகரங்களில் இருந்து செயல்படும் தன்மையதே. நாயக்கர் காலத்தில் இத்தகைய அமைப்புக்கள் மதுரையிலும், தஞ்சையிலும், செஞ்சியிலும் இருந்துள்ளன. தமிழகம் விசயநகர அரசர்களிடமிருந்து நாயக்கராட்சிக்கு மாறிய பொழுது மதுரை, தஞ்சை, செஞ்சி என மூன்று மைய அரசுகளும், அதன் கீழ் பிற அமைப்புக்களும் என்றவாறு பிரிந்திருந்தன.

இம்மூன்று அரசுகளும் வேறுவேறு அரசர்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன என்றாலும், இவை, ஆட்சி அமைப்புத்தன்மைகளில் ஒற்றுமையுடையன. ஏனெனில் இவை அனைத்துமே விசயநகர அரசர்களின் அமரநாயக்க முறையின் அடிப்படையில் அமைந்து, சுயத் தன்மை பெற்றவைகள். விசய நகர அரசர்கள் பின்பற்றிய அமரநாயக முறையே நாயக்கராட்சிக்கு அடிப்படை என்பதோடு, அவர்கள் அமைத்த பாளையக்கார முறைக்கும் முன்னோடியாகும். விசயநகர அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப் பெற்றவர்கள் அமரநாயக்கர்கள் (Amaranayaks) எனப்பட்டனர். அவர்களுக்குக் கிடைத்த பகுதி ‘அமரம்’ அல்லது ‘நாயக்கட்டினம்’ எனப்படும். அமரம் என்பதற்கு ஆயிரம் காலாட்படைகளின் தலைவன் என்பது பெயர். இவர்களே நாயக்கர்கள் எனப் பட்டப் பெயரிட்டு அழைக்கப் பட்டனர். இத்தகைய நாயக் கட்டினங்கள் விசயநகர அரசில் இருநூறுக்கும் மேல் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள், தங்களின் ஆளுகைக்குக் கிடைத்த பகுதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியையும், விசயநகர அரசர்கள் வேண்டும் பொழுது படையையும் தத்துதவும் கடமையுமுடையவர்கள்.2 நாயக்க முறையின் சுருக்கமான இந்த அறிமுகத்தோடு , நாயக்கர்கால இலக்கியங்கள் அக்கால அரசியல் பற்றித் தெரிவிக்கும் கருத்துக்களைக் காணலாம்.

அரசன்:

நாடு முழுமைக்கும் தலைவனாக இருப்பவன் அரசன் என்ற பொருளில் , ‘காசினியை ஒரு குடைக்கீழ் ஆள்பவன்’ என்ற சொற்றொடரைத் தருகிறது அறப்பளீசுர சதகம் (36). ஒருவனுக்கு அரசனாகும் வாய்ப்பு என்பது பரம்பரையாக வருவது. விசுவநாத நாயக்கன் மதுரைக்கு அரசனாக இருந்த பின்பு அவனுடைய மகன் கிருஷ்ணப்ப நாயக்கன் ஆட்சிக்கு வந்தான் என்பதைத் தெரிவிக்கும் திருவாலவாயுடையார் கோயில் திருப்பணிமாலைச் செய்யுள் மூலம் இதனை உணரலாம். (51:3-4). பொதுவாக, நிலமானிய காலத்து இலக்கியங்கள் அரசனைக் குற்ற மற்றவனாகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவனாகவும் சித்திரிப்பது உண்டு. ஏனெனில், புலவர்களில் பலர் அவர்களின் ஆதரவிலேயே வாழ்ந்தவர்கள்; அப்படிப் பாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள். பிற்காலச் சோழ மன்னர்களை அக்காலத்து உலா, பிள்ளைத் தமிழ், பரணி போன்றன தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும், சூரியன் அல்லது சந்திரன் போன்ற தெய்வாம்சங்களின் பரம்பரையில் தோன்றியவர்களாகவும் சித்திரிக்கின்றன. சோழர்காலக் கல்வெட்டுகளும் கூடப் ‘பருநிலம் முழுதாண்ட’, ‘திரிபுவனச் சக்கரவர்த்தி’ என்ற அடைமொழிகளோடு விளிப்பதும் இத்தன்மையதே. நாயக்கர் கால இலக்கியங்களில் அரசர் புகழ் பாடுதல் காணப்படுகின்றது என்றாலும், அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், செய்ய வேண்டிய கடமைகள், மக்களிடம் அளவாக வரிவாங்க வேண்டியதன் அவசியம் பற்றிய தங்கள் விருப்பங்கள் ஆகியவற்றையே புலவர்கள் அதிகம் வெளிப் படுத்தியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அறத்தின் வழி ஆட்சி செய்தல், மறத்தின் வழிப் பகைவரை வெல்லுதல் (திருக்.மான். 72). மனுதர்மத்தைக் காத்தல் (அற.சத.82:1), அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல் (மது. மும்.கோ.22; கும.சத.3:1),கோயில் அந்தணர் போன்ற சமயநிறுவனங்களுக்கு மானியம் வழங்கிக் காத்தல் (திருவிளை. மதுரை.571 ; சமு.விலா. கண். 13 - 14), செல்வத்தை - தானியத்தை - உடையவனாக இருத்தல் (அற.சத.82: 13 - 14), சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தல் (கும.சத.3), மக்களிடம் குறைவாக வரி வசூலித்தல் (கோவி. சத.56) முதலிய குணங்களையும் இயல்புகளையும் உடையவன் சிறந்த அரசன் என இலக்கியங்கள் கூறுகின்றன.

மன்னர்கள் இத்தகைய சிறந்த குணங்கள் உடையவர்களாக இருந்தார்கள் எனப் பாராட்டாது, இப்படியெல்லாம் இருப்பவர்கள் சிறந்த அரசர்கள் எனப் பொதுநிலையில் நின்று பேசும் இத்தகைய போக்கின் பின்னணியில் சில காரணங்கள் இருத்தல் கூடும் எனக் கருதலாம். அதனை அறிவதற்குப் பொதுவாக அரசன் ஆற்றும் பணிகள் எவை என்பதையும், பிற அமைப்புக்கள் வழி நடந்த செயல்பாடுகள் எவையென்பதையும் காணவேண்டும். அரசனின் கடமைகள், செய்த செயல்கள் பற்றிய விரிவான செய்திகளைப் பணவிடுதூது வரிசையாக அடுக்கிக் கூறுகிறது.அதனை அரசனின் பணிகள் என்று கொள்வதை விட அவனைத் தலைவனாகக் கொண்ட மத்திய அமைப்பின் பணிகள் எனக் கொள்ளலாம். ஏனெனில் அரசன் தனியாக எதனையும் செய்தான் என்பது இல்லை; தனது ஆலோசனைக் குழுவைக் கலந்த பின்பே காரியங்களில் ஈடுபடுவான் என்பது மரபு; அப்படிச் செய்ததாகவே இலக்கியங்களும் கூறுகின்றன. பணவிடுதூது கூறும் அரசன் இயல்புகள் வருமாறு.3

‘தேசவிவகாரம், செகத்திலுள்ள செய்தி, துரை

வாசல் விவகாரம் மற்று எவையும் - யோசனைசெய்

மந்திரிமாரும், மறுமன்னர் எவரும்

தந்திரிமாரும் தளாதிபரும் - முந்தும்

தினசரிதக்காரர்களும் சீமைக் கணக்கு அங்கு

அனுதினமும் வாசிக்கு மவரும் - கனமுடைய

வர்த்தகமும் குர்ச்சரரும் மராடரும் - கொலுவில்

தத்தம் வரிசையொடு தரநிற்ப -

....................................................................

......................................... நித்தரொக்கச்

சாளிகை கட்டிவைக்கும் தந்திரமும், பிந்திவரும்

பாளையக்காரர் பணங்களுக்கு அங்கு - ஆள்அனுப்பும்

வல்லமையும், கேட்கும் வரியோலைக்கு உத்தரங்கள்

சொல்வதிலே நினைவின் குட்சுமமும் - எல்லைகண்டு

கூறப்படாத குளப்பாய்வும், கால்பாய்வும்

ஏறப்பயிர் கொளுத்தும் ஏற்பாடும் - பேறுதரும்

தேவலாயத்தில் இனப்பூசை தப்பாமல்

வேளாள் அனுப்பும் விசாரிப்பும் - நேர்வாகக்

காணிக்கைக்காரர் கணக்கும்கேட்டு - அவ்வவர் தம்

த்ராணிக்குத் தக்கதிட்டம் சொல்லுவதுவும் - பாணித்துச்

செய்யும் நயபயமும், சேரும் ஜனங்களுக்கு, என்

ஐயன்புரியும் அரவணைப்பும் - வையகத்தில்

மற்றவருக்கு வருமோ?........’

என்று கேட்கும் வழியாக அரசனுக்கு வரிவசூல், பாளையக்காரர்களைக் கட்டுக்குள் வைத்தல், அவர்களிடம் முறையாகத் திறை வசூலித்தல், வெளிநாட்டு உறவு, நீர்ப்பாசனம், கோயில் நிர்வாகம், மக்களுக்குத் தானம் வழங்கல் முதலான பொறுப்புக்கள் இருந்ததாக அறியலாம்.

உள் நிர்வாக அமைப்பு:

அரசனைத் தலைவனாகக் கொண்ட மத்திய அமைப்பு, அத்தனைப் பொறுப்புக் களையும் நாடு முழுமைக்கும் நடத்துவது இயலாமல் போகும் நிலையில் உள்நிர்வாக அமைப்புக்கள் (Internal Administration), ஏற்படுவது இயல்பே. நாடு பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பல காரியங்களுக்கு முழு உரிமையும் சிலவற்றிக்கு மைய அமைப்பின் ஆணைக்குக் கட்டுப் படுவதுமான தன்மைகளையும் அவை கொண்டிருக்கும். நாயக்கர் காலத்தில் இருந்த உள்நிர்வாக அமைப்புக்களுக்குப் ‘‘பாளையம்’ என்று பெயர். பாளையத்திற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பவன் பாளையக்காரன் எனப்பட்டான். பாளையமுறை ஏன் ஏற்பட்டது? எப்படிச் செயல்பட்டது? என்பது பற்றிய குறிப்புக்கள் இலக்கியங்களில் ஆங்காங்கே கிடைக்கின்றன. பாளைய முறையையும், பாளையக்காரர்களின் கடமைகளையும் அறிந்து கொள்வதற்குத் திருமலை நாயக்கரின் தளவாய் ராமய்யன் பெயரில் அமைந்த கதைப்பாடல் பெரிதும் உதவுகின்றது. அதனோடு பாளையப்பட்டு வம்சாவளிக்கைபீதுகளும் இதில் பயன்படுகின்றன.

பாளையமுறை விசயநகர ‘அமரநாயக’ முறையை அடியொற்றி, கி.பி. 1538- இல் விசுவநாத நாயக்கனால் மதுரைப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது. இதனை அமைப்பதில் அவனுக்குத் துணையாய் இருந்தவர் அவனுடைய தளவாய் அரியநாயக முதலி.. பாளையங்கள் அமைக்கும் பொழுது நாயக்க மன்னர்கள் தங்களுடன் படைகொண்டுவந்த தெலுங்கு ராணுவ அதிகாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தமிழகத்தின் பலபகுதிகளையும் பிரித்துக் கொடுத்துள்ளனர்.சில பகுதிகளில் செல்வாக்குடன் விளங்கிய தமிழகச் சாதிக் குழுக்களின் தலைவர்களையும் பாளையக்காரர்களாக ஏற்றுக் கொண்டுள்ளனர். வம்சாவளிக் கைபீதுகள் மன்றாடியார், கவுண்டர்கள், வேளாளர்கள், மறவர்கள் முதலான சாதியினர் பாளையக் காரர்களாக இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. ராமய்யன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வந்த பாளையக் காரர்களின் பட்டியலில் தெலுங்கர்கள் அதிகமாகவும், தமிழ்ப் பரம்பரையினர் குறைவான எண்ணிக்கை யிலும் இடம் பெற்றுள்ளனர். நாயக்கர்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட இசுலாமியர்களின் பெயர்களும் பாளையக்காரர்களாக அதில் இடம் பெற்றுள்ளனர்.

பாளையங்கள்:

அ] நாயக்கர்கள்

1) நத்துத்துலிங்கையன் 2) கோட்டப்ப நாயக்கன் 3) எட்டப்ப நாயக்கன்

4) தொட்டப்ப நாயக்கன் 5) இருவப்ப நாயக்கன் 6) பூச்சி நாயக்கன் 7)முத்தைய்யநாயக்கன்.

8)கட்ட பொம்மு நாயக்கன் 9) கீழ்முகத்துத் தும்பிச்சி 10) மேல்முகத்துத் தும்பிச்சி

11) வென்னாய்க்கன் 12) பொம்மனாயக்கன்13) இலுப்பையூர் காமாட்சி

*14) சின்னையன்* 15)ஆயக்குடி கொண்டையன் 16) விருப்பாட்சி நாயக்கன்

17)கன்னிவாடி நாயக்கன் 18)லிங்கம நாயக்கன் 19)பெத்தனாயக்கன் 20) வாலப்பனாயக்கன்

21) வெங்கம னாயக்கன் 22) பொட்டினாயக்கன் 23) திருமலைப்பூச்சியன்

24) சொக்கலிங்க நாயக்கன் 25) விசுவப்ப நாயக்கன் 26) மணலூறு நாயக்கன்

27) வேலப்ப நாயக்கன் 28) பட்டத்து நாயக்கன் 29) மறுநூற்றுனாயக்கன்

30) நல்லமநாயக்கன் 31) கரட்டுமலை நாயக்கன் 32) கச்சிகட்டிநாயக்கன்

33) காமாட்சி நாயக்கன் 34) காமயனாயக்கன் 35)நாகமனாயக்கன்

36) சிலுப்பெட்டி நாயக்கன்

ஆ] ரெட்டிகள்: 1. கோடாங்கிரெட்டி 2. குன்னத்து ரெட்டி

இ] இசுலாமியப் பாளையங்கள்:

1. சவ்வாசுகான் 2. வாய்ழசகான் 3. வாவுகான் 4. சின்னராவுத்தர் 5. முசெகான்

6. காதுசாயுபு 7. சரனு தாயத்துறாவுத்தன் 8. மீறா சாயபு9. அதிரி சாயபு 10. முகமது சாயபு

11. படைசான் கிலிசு 12. மகமகான் கிலிசு

ஈ] தமிழ்ப் பரம்பரை பாளைக்காரர்:

1. தென்கா (ஞ்) சி மூக்கன் சீவிலிமாறன் 2. முருக்குநாட்டு மூவரையன் 3. குற்றாலதேவன்

4. தென்மலை வன்னியன் 5. சின்னணஞ்சாத்தேவன்6. ஊற்றுமலையான்

7. ஏழுமடையிலி வைப்பன் *8. கழுகுபடையான் (மலையான்)*9. அப்பாச்சி கவண்டன் கோவை*

10. ஏழாயிரம் பண்ணையெதிரில்லான்*11. கணக்கதிகாரிக் கவண்டன்

12. தென்னமநாடு*13. வீசுங்கநாடு14. மருதப்பதேவன்15. மூங்கிலணைப்பூசாரி*

16. வங்காள முத்தய்யன்*17.அரியலூரான்*18. வாலசமுத்திரத்தின் மன்னன்*

19. நாஞ்சிநாட்டுத்துரை *20. திருநெல்வேலி*21. மலையாளராஜா* 22. கொளும்புராஜா*

23. காங்கேய நாடன்*24. மூங்கில்முனை பூசாரி *

[இராமய்யன் அம்மானை (பக். 23 - 26) யில் இடம் பெற்றுள்ள பாளையக்காரர்கள் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. *- க் குறியிட்டவை மேற்கண்ட பிரிவுகளுள் அடங்கியன என்பதை உறுதியாகக் கூற முடியாதவைகள்]

வம்சாவளிக் கைபீதுகள், பாளையக்காரர்கள் மைய அமைப்புக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைப் பல இடங்களில் உறுதி செய்கின்றன.

“அதுகளையும் அனுபவிச்சுக்கொண்டு அந்தந்த காலத்தில் ராச்சியாதிபதிகள் கட்டுச்செயிதபடிக்கு, கானல்களிலே துஷ்டர், வனமிற்கங்கள், உபத்திரவங்கள் யில்லாமல் காத்து பரிபாலனம் பன்னிக்கொண்டு, அரமணையாற் கட்டளையிட்ட நிகதிக்கு உள்ப்பட்டு நடந்துகொண்டு....”

என்பது போன்ற வாசகங்கள் பல உள்ளன.4 ஒருவனைப் பாளையக்காரனாக அங்கீகாரம் அளிக்கும் அரசன், அவனுக்குப் பல்லாக்கு, உபசாமறம், சுறுட்டி, தடால், விடால், குடை, பாஷிக்கம், நிகளம், வெண்டயம், கட்டாமணி, சறப்பனி, முத்தொட்டி, பச்சொட்டி, அம்பாரி,பேறிகை, டக்கர், தம்பட்டம் முதலானவைகளை வரிசைகளாக வழங்கிச் சிறப்புச் செய்வதுண்டு.5 இவ்வரிசைகளைப் பாளையக் காரன் நகர்வலம் செல்லும்பொழுதோ, பிற இடங்களுக்குப் போகும்பொழுதோ உடன் கொண்டு செல்வான். அதன்மூலம் அவனது பெருமைகள் வெளிப்படும் என்று கருத இடமுள்ளது. ஏனெனில் இலக்கியங்களில் பாளையக் காரர்களின் பவனிகளைக் கூறுமிடத்து இவை சேர்ந்தே கூறப்பட்டுள்ளன (மா. விடு. கண். 134 - 136; சந்.மஞ்.29:8-12). அரசனால் அங்கீகரிக்கப் பட்ட பாளையக்காரர்கள் தம்தம் பகுதிகளில் வரிவசூல், காவல், நீதி நிர்வாகம், நீர்ப்பாசனம், படை பராமரிப்பு முதலிய கடமைகளையுடையவர் களாயிருந்துள்ளனர்.

பாளையக்காரர்கள் தங்கள் பகுதிகளில் செய்த பணிகளைப் பற்றிய செய்திகளைப் பல இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.திருநெல்வேலிப்பகுதி, வடமலையப்பன் மண்டபம், அம்பலம், கோபுரம், மதில், பூங்காவனங்கள் அமைத்ததோடு விழாக்களும் நடத்தியதாகச் சங்கரலிங்க உலா (கண்.289-301)கூறுகிறது.அதே பகுதியைச் சேர்ந்த சின்னணஞ்சாத் தேவனும் அவனுடைய மைத்துனன் பெரிய சுவாமியும் கல்வி நிறுவனங்களுக்கு அளித்த கொடையைச் சந்திரகலாமஞ்சரி தெரிவிக்கின்றது (25:3 - 4), இவனுடைய பணிகளைப்பற்றிய செய்திகள் திருமலை முருகன் பள்ளுவிலும் உள்ளன. (26). சிவகங்கைப் பகுதித் தலைவனான வடுகநாததுரை, குளங்கள், வனங்கள், மதில்கள் ஏற்படுத்தியதை மான்விடுதூது (கண். 153- 163) கூறுகிறது. வடகரைப் பாளையக்காரர்களின் பணிகளைப் பட்பிரபந்தம், சந்திரகலா மஞ்சரி போன்றனவும், எட்டயபுரம் பாளையக்காரனின் பணிகளைக் கடிகைமுத்துப் புலவரின் சமுத்திர விலாசமும், சேதுபதிகளின் செயல்களை நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒரு துறைக் கோவையும், கொங்குப் பகுதித்தலைவன் ஒருவனின் பணிகளைக் கந்தசாமிக் காதலும், நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனின் செயல்களைக் கூளப்பநாயக்கன் காதலும், கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூதுவும் கூறுகின்றன.

இவ்வாறு பாளையக்காரர்களுக்கு உரியனவாக அணைகள், குளங்கள், சத்திரங்கள், கோயில் நிர்வாகம், பூசை, காவல் போன்ற சமூகப் பொதுத் திட்டங்கள் இருந்தன. இப்பொறுப்புக்களும் கடமைகளும், அவ்வப்பகுதிகளை அல்லது வட்டாரங்களைச் சார்ந்தவையே. அந்த வட்டாரத்திற்குள் அவர்களுக்கு இத்தகைய அதிகாரங்கள் உண்டு. எனவே அவர்களை ‘வட்டாரத் தலைவர்கள்’ என்றும் குறிப்பிடலாம். இவர்களுக்கு இவை மட்டுமல்லாமல் வேறு பொறுப்புக்களும் இருந்துள்ளன. மைய அமைப்பின் வேண்டுதலுக்குப் படையுதவி செய்வதும், மைய அரசுக்குச் சேர வேண்டிய நிலவருவாயை வசூலித்து அளிப்பதும் அவற்றில் முக்கியமானவை. தங்கள் பாளையக்காரர்கள் தம் பொறுப்பில் வைத்திருந்த படைகளுக்குப் ‘பாளையப்பட்டுக்கள்’ என்று பெயர் (வீரை.அம்.வரி.601-602). படை யுதவுதலும் இறை செலுத்துதலுமே பாளையக்காரர்களை மைய அரசோடு தொடர்பு கொள்ளச் செய்தன. இவ்விரண்டையும் பொறுத்த அளவில் மைய அமைப்பு பாளையக்காரர்களிடம் கடுமையாக நடந்துள்ளதாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தளவாய் ராமய்யனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு வந்த பாளையக்காரர்களின் செயல்கள் இதனை உறுதி செய்கின்றன (பக்.5; 11-6:4). இறைவரி செலுத்தாத பாளையக்காரர்களைத் தளவாய் ராமய்யன் சிறையிலடைத்ததாகவும், அவர்களைத் தமிழ்ப் புலவர் ஒருவர் கவிபாடி மீட்டதாகவும் குறிப்புக்கள் உள்ளன.6

பாளையக்காரர்களை - வட்டாரத்தலைவர்களைப் பாடும் நூல்களில் கவனிக்கத்தக்க ஒரு போக்கு காணப்படுகிறது. அதாவது அந்நூல்கள் வட்டாரத்தலைவனை நாடு முழுமைக்கும் பொறுப்புடைய பேரரசனாகப் பாடுகின்றன. ‘தேனளந்த கானவர்க்கு தேவரமுதளிக்க வானளந்து நிற்கும் வராககிரி வேந்தன்’ எனக் கூளப்பநாயக்கரைப் புகழ் வதிலும் (கூள.காத.க.10) எட்டயபுரத்தின் வெங்கடேசு ரெட்டப்பனை, ‘தடநீர் வைகைத் துறைக் கதிபன்’எனச் சமுத்திர விலாசம் (வ.14) போற்று வதிலும், சேதுபதியைப் பாடும் பலபட்டடைச் சொக்கநாதர் அவரிடம் குமரி, குடகடல், குணகடல் முதலானவைகளை எல்லைகளாகக் கொண்ட பெரும் நிலப்பரப்பு இருந்ததாகக் கூறுவதிலும் (சேது.பணவிடு.கண்.289-291) ஒரு சிறுவட்டாரத்தை - அதன் தலைவனைப் - பேரரசாக - பேரரசனாகப் பாவிக்கும் போக்கினைக் காணலாம்.

இப்புலவர்கள், வட்டாரத்தலைவர்களாலேயே ஆதரிக்கப்பட்டனர். அதனால், அவனைப் பெருமையாகப் பாடிப் பரிசல் பெறவேண்டிய நிலைமை இருந்தது. என்பது உண்மையென்றாலும், இப்பாளையக்காரர்களும் தங்களைப் பேரரசனாகவே கருதியிருந்தனர் என்பதும் உண்மை. இதனை உறுதி செய்யும் விதமாக, வரலாற்றாசிரியர் கு. ராஜய்யன்,

“பாளையத்தின் பரப்பு, பொருளாதாரவளம், ஆகியவை எவ்வாறிருப்பினும் பாளையக்காரர் அரசு ஒன்றை அமைந்திருந்தார். அவர் நாட்டின் பெயரளவில் அதிகாரிகளைக் கொண்டிருந்தார் ....பாளையக்காரரின் அன்றாட நடைமுறைகள் ஓர் உண்மையான அரசரின் அதிகாரங்களை ஒத்திருந்தன” எனக்கூறுகிறார்.7பாளையக்காரர்கள்.மைய அமைப்புக்கீடாக, இணையானஅரசு (Parallel Government) ஒன்றைத் தங்கள் பாளையங்களில் அமைத்திருந்தனர் என்பதை, மைய - மாநில அமைப்புக் களில் இருந்த அரசு உறுப்புக்களையும், அதிலிருந்த படிநிலை (Hierarchy) களையும் அறிவதன் மூலம் உணரலாம்.

அரசு உறுப்புக்கள்:

நாயக்கர்கால அரசின் உறுப்புக்கள் எவையெவை என்பதை வரலாற்று நூல்கள் பகுத்துரைக்கின்றன. விசயநகர அரசர்களைப் பின்பற்றி அமைந்த நாயக்கர் ஆட்சியில் தளவாய், பிரதானி, ராயசம் என்ற மூன்று பதவிகளும் முக்கியமானவை எனக் குறிப்பிடுகின்றார் சத்தியநாதய்யர். பிற உறுப்பினர்கள் கணக்கன், ஸ்தானாதிபதி என்பவர்கள் ஆவர்.8 மத்திய அமைப்பில் இருந்த அதிகாரிகளை இருபிரிவுகளாகப் பிரித்துப் பெரிய பிள்ளையாண்டான், சிறிய பிள்ளையாண்டான் என வழங்கும் வழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது.9 இவர்களில் ‘தளவாய்’ என்ற பதவியைப் பற்றி மட்டுமே நாயக்கர் கால இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. பிற பதவிகள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன என்றாலும் அவை மைய அமைப்பில் உள்ளன பதவிகளைப் பற்றியா? பாளையக்காரர்களின் கீழ் உள்ள பதவிகளைப் பற்றியா? என்ற ஐயம் எழுகின்றது. ஏனெனில் வட்டாரத் தலைவர்களைப் பாடும் நூல்களிலிருந்தே இக்குறிப்புக்கள் கிடைக்கின்றன. இப்பதவிகள் இரண்டு அமைப்புக்களிலும் இருந்த நிலையில் அதாவது பாளையங்களில் இருந்த அதே அமைப்பை மேற்பார்வையிடும் நிலையிலும் அந்தந்தத் துறைகளோடு தொடர்பு கொள்ளும் நிலையிலும் அமைக்கப் பட்டிருந்தன எனக் கொள்ளலாம்,

அரசு உறுப்புக்கள் என்ற நிலையில் பொதுவாக ‘அமைச்சர்’ அல்லது ‘மந்திரி’ என்ற பதவியைப் பற்றிப் பல இலக்கியங்களிலும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. ‘காசியை ஒரு குடையில் ஆண்டாலும் கருத்துள்ள மந்திரி வேண்டும்’ எனவும் (அற.சத.36;7 - 8) ‘அரியணைப் புறத்தரசனோடிருந்து பூண்ட பேரறிவைத் தூண்டுகோலன்னத் தந்திர முறைக்கும் மந்திரி யாக்கி’ எனவும் (மது.மும்.கோ.வரி.22; 19 - 21), ‘அமைச்சர்’ அல்லது ‘மந்திரி’ பதவியை வலியுறுத்தும் இலக்கியங்கள், ‘அவனை மதிமந்திரி; அரசனின் மனத்தை அறிபவன்; முக்கால உணர்வு கொண்டவன்; குடிபடைகளின் திறம் அறிந்தவன் எனக் கூறுகின்றன. மந்திரியின் அவசியத்தையும், இயல்புகளையும் கூறும் இலக்கியங்கள், அப்பதவிக்குரிய பொறுப்புக்கள் எவையென்பது பற்றிக் கூறவில்லை. வரலாற்றாசிரியர்கள் நாயக்கர் காலத்தில் ‘மந்திரி’ என்ற பதவியைப் பற்றிக் கூறாது அவ்விடத்தில் தளவாய், பிரதானி, ராயசம் என்ற பதவிகளையே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் ‘அசை¢சர்’ என்ற பதவி அக்காலத்தில் இருக்கவில்லையென்றே தோன்றுகிறது. எனவே இலக்கியங்கள் கூறும் மந்திரி என்பது இப்பதவிகளில் ஒன்றைப் பற்றிய செய்தியென்றே கொள்ளலாம். அத்தோடு, இலக்கியங்கள் மரபு வழியாக - முன்னர் இருந்த அதே தன்மைகளைச் சுட்டுகின்றன என்று கொள்ள இடமுண்டு. இன்று ஒவ்வொரு பதவியின் பொறுப்புக்களையும் காணலாம்.

தளவாய்:

இலக்கியச் சான்றுகளின் வழியும் வரலாற்று நூல்களின் நோக்கிலும் ‘தளவாய்’ என்ற பதவி அரசு அமைப்பில், அக்காலத்தில் முக்கியமான பதவியாக இருந்துள்ளது. “அமைதிக்கால நிர்வாகப் பொறுப்பையும் போர்க்காலப் படைப்பொறுப்பையும் கொண்டது தளவாய் என்னும் பதவி” என்கிறார் சத்தியநாதய்யர்.10 ஒவ்வொரு நாயக்க அரசனுக்கும் கீழ், தளவாய்கள் இருந்தனர் என்றாலும், மன்னர் விசுவநாதனின் தளவாயான அரிய நாயக முதலி பற்றியும், மன்னர் திருமலை நாயக்கரின் தளவாய் ராமய்யன் பற்றியும் இலக்கியங்களில் குறிப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்விருவர் பற்றியும் கூறப்படுகின்ற செய்திகளின் பொதுத்தன்மையைக் காணும்போது இவ்வாறு கூறலாம். அரியநாயக முதலி பற்றிக்கூறும் போது அவரின் திருப்பணிகள் பற்றியும், ராமய்யனைப் பற்றிக் கூறும்போது, அவர் செய்த வீரதீரப் போர்ச்செயல்கள், அதிகாரங்கள், திருப்பணிகள் ஆகியவை பற்றியும் கூறுகின்றன எனலாம்.

அரிய நாயக முதலி அறுபத்துமூவர் மண்டபம், அறச்சுவை மண்டபம், சொக்கருக்கு வெள்ளிச் சிங்காதனம் முதலியன வழங்கியதாக மதுரைத் திருப்பலி மாலை கூறுகிறது (50). இவரது ஆலோசனையின் பேரிலேயே தமிழகத்தில் பாளையமுறை ஏற்படுத்தப் பட்டது எனவும், எழுபத்தியிரண்டு பாளையங்களாக, மதுரை நாயக்கம் விசுவநாதன் காலத்தில் பிரிக்கப் பட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதும் தெரியவருகின்றது.11 ராமய்யனைப் பற்றி ராமய்யன் அம்மானை, ரவிக்குட்டிப் பிள்ளை போர், திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை முதலியன குறிப்பிடுகின்றன. ராமய்யன் தன் பொறுப்பில் அணை கட்டியதாகவும், அரசுக்கு அடங்க மறுத்தவர்களை வென்று அடக்கியதாகவும், எதிரிகளைக் கழுவேற்றி யதாகவும் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலையின் அடிக்குறிப்புச் செய்யுள் கூறுகிறது.12

‘தளவாய்’ என்ற பதவிக்குரிய அதிகாரங்களை அறிந்து கொள்ள ராமய்யன் அம்மானை பெரிதும் உதவுகின்றது. பாளையக்காரர்கள் அனைவரும் அரசனுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலையில் தளவாய்க்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்தனர் என்பது தெரிகின்றது. தன் ஆணையை மீறும் பாளையக்காரனுக்குத் தண்டனை தரும் அதிகாரமும் உண்டு. படைகள் நடத்திப் போர் புரிவதோடு, பகைவர்களுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரமும் தளவாய்க்கு இருந்துள்ளது (ராம.அம்.ப.53; வரி. 5 - 11¢; ப.66 வரி.24 - 27). மன்னனின் ஆலோசனை பெறாமலேயே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் அதிகாரமும் தளவாய் என்ற பதவிக்கு இருந்துள்ளதாகத் தெரிகின்றது. சேதுபதி சடைக்கத் தேவனை வென்றடக்குவதில் உதவி புரிந்ததற்காகப் போர்த்துகீசியர்களுக்கு வணிக உரிமைகள் அளித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான் என ராமய்யன் அம்மானை கூறுகிறது (ப.50; வரி. 5 - 15). இவ்வதிகாரங்கள் முழுவதும் ‘தளவாய்’ என்ற பதவிக்குரியதா? அல்லது குறிப்பிட்டவர்கள் தளவாய்களாக இருக்கும் பொழுது இவ்வதிகாரங்களை எடுத்துக் கொண்டார்களா? என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏனெனில் அரியநாயக முதலி, ராமய்யன் என்ற இருவர் பற்றியே இலக்கியங்கள் பேசுகின்றன. சிறப்புடைய இவ்விருவர் தளவாய்களாக இருந்தபோது தான் நாயக்க அரசர்களில் சிறப்புடையவர்களாகக் கருதப்படும் விசுவநாத நாயக்கனும் திருமலைநாயக்கனும் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே ‘தளவாய்’ என்ற பதவியை விடவும் யார் தளவாயாக இருந்தனர் என்பதே அப்பதவியைச் சிறப்புத் தன்மை கொண்டதாக ஆக்கியிருந்தது என்று கொள்ளவும் தோன்றுகிறது.

பிரதானி :

பிரதானி என்ற அலுவலன், வருவாய்த் துறையைக் கவனித்துத் கொள்பவன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே உள் நிர்வாக அமைப்புக்களோடு அதிகம் தொடர்புடையதாக இப்பதவி இருந்துள்ளது.13 பிரதானி பற்றிய குறிப்புக்கள் குமரேச சதகம் (3:5-6) கந்தசாமிக்காதல் (கண்.106,210) ஆகியவற்றில் உள்ளன. அரசனின் வருகையின் போது பிரதானி உடன் வந்தான் எனக் கந்தசாமிக் காதல் கூற, குமரேச சதகமோ, அரசன், ‘ப்ரதானி தளகர்த்தரைப் பண்பறிந்தே யமைத்தல் வேண்டும்’ என்கிறது. பிரதானி என்ற பதவியின் பொறுப்புக்கள் எவையென்பது பற்றிய இலக்கியக் குறிப்புக்கள் இவை தவிர வேறு இல்லை.

ராயசம்:

அரசனின் ஆணையை ஓலையில் எழுதி அனுப்பவும், அரசனுக்கு வரும் ஓலைகளின் தன்மையை அறிந்து, அரசனிடம் அனுப்புவதும், ஒரு காரியத்தின் காலத்தையும் தன்மையையும் அறிந்து அரசர் நினைப்பதற்கு முன்பே எண்ணி எழுதி விடும் புத்திசாலித் தனமும் ராயசத்தின் கடமைகள் என அறப்பளீசுர சதகம் கூறுகிறது (86: 1 - 8). ஐவர் ராசாக்கள் கதையில் வரும் (வரி . 560 - 63) ‘கருவூலக் கணக்கரையும் ராயசக்காரரையும் திருமுகத்துப் பிள்ளைமாரையும் திட்டெனவே வரவழைத்து’என்ற வரிகளுக்கு குறிப்பெழுதிய நா.வானமாமலை, “இவர்கள் உயர்தர அதிகாரிகள், பொக்கிஷம் அரண்மனை நிர்வாகம், கட்டளைகள் நிறைவேற்றுவோர் முதலியவர்கள்”என்று குறிப்பிடுகின்றார்.14 ராயசம் என்பது தலைமைச் செயலர் போன்ற பதவியாக வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படுகின்றது.15

கருணீகர்:

கருணீகர் என்னும் பதவி ராயசத்துடன் இணைந்தே இலக்கியங்களில் குறிக்கப் படுகின்றது. (ஐவர் ராசா. வரி. 560 - 63; அற.சத.86). கருணீகரின் பொறுப்பு, கணக்குப் பார்ப்பது என்பது இலக்கியங்களின் வழி அறியப்படுகிறது. ‘கருவாய் அறிந்து தொகையீராறு நொடியினிற் கடிதேற்றிடத் குறைக்கக் கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக் காட்டுவோன் கருணீகன் ஆம்” என்பது அறப்பளீசுர சதகம் (அற.சத.86). கருணீகரைப் பற்றி ய குறிப்புக்களைக் கந்தசாமிக் காதல் (க.210) பட்பிரபந்தம் (30:2) முதலியனவும் கூறுகின்றன. கணக்குப் பார்ப்பவனைத் துறைகாரர் எனக் கூறுவது மூவரையன் விறலிவிடுதூது (291 - 293).

தானாதிபதி:

தானாதிபதிகள் அயல்நாட்டுச் செயலர் எனக் குறிப்பிடுகின்றார் சத்தியநாதய்யர்.16 தானாதிபதி பற்றிக் கூறும் அறப்பளீசுரசதகம் (85), ‘தன்னரசன் வலியும், பரராசர் எண்ணமும் சாலமேல் வருகருமமும் தானறிந்ததிபுத்தி உத்தியுண்டாயினோன் தானாதிபதி யாகுவான்’ என்று குறிப்பிடுகின்றது. இதன் பொருளும் வெளிநாட்டு உறவை கவனித்துக் கொண்டவன் என்பதாகவே உள்ளது.

கிராமநிர்வாகம் :


அரசனைத் தலைவனாகக் கொண்ட மைய அமைப்பும், பாளையக்காரனைத் தலைவனாகக் கொண்ட உள்நிர்வாக அமைப்பும் - வட்டார ஆட்சியும் - நாயக்கர் காலத்தில் இருந்தன. மேலும் நாட்டின் முக்கிய உற்பத்தியான வேளாண்மையோடு தொடர்புடைய கிராமங்களைக் கவனித்துக் கொள்ள கிராம சபைகளும் இருந்துள்ளன.

கிராம சபைகள் எப்படி நிர்வகிக்கப்பட்டன என்ற அமைப்புப் பற்றிய விவரமான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால், கிராம நிர்வாக சபை உறுப்பினர்கள் பற்றிய செய்திகளை அவர்தம் நிலைகளை - இலக்கியங்கள் தருகின்றன. நாயக்கர் காலத்தில் கிராமங்களை நிர்வகிக்க ஆயங்கார முறை (Ayagar System) என்னும் நிர்வாக அமைப்பு இருந்ததாக டி.என். வெங்கடராமையாவை மேற்கோள் காட்டி ஏ.கிருஷ்ணசாமி எழுதுகின்றார். அவரது விசய நகரப் பேரரசின் கீழ் தமிழகம் (Tamil Country under Vijayanager) என்ற நூல் ஆயங்கார முறையைப் பின்வருமாறு விளக்குகிறது.17 “ஆயங்கார முறை பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டது. முதல் மூன்று நபர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர்.

கர்ணம், மணியகாரர், தலையாரி என்பவர்களே அவர்கள், இதர உறுப்பினர்கள் புரோகிதர், பொற்கொல்லர், நீர்கண்டி அல்லது தண்ணீர் பாய்ச்சுபவன் (மடையன்), கொல்லன், தச்சன், குயவன், வண்ணான், அம்பட்டையன், செருப்புத் தைப்பவன் (சக்கலி) என்பவர்கள். இவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்லர். அரசு இவர்களுக்குச் சம்பளமாக எதுவும் தரவில்லை. ஆனால் வரியில்லாத (இறையிலி) நிலங்களை மானியமாக அளித்திருந்தது*”* (அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்கள் ஆசிரியருடையது)

இப்பன்னிரண்டுபேர் கொண்ட ஆயங்கார முறையின் தன்மைகளும் செயல்பாடுகளும் இலக்கியங் களில் கூறப்படவில்லையெனினும் உறுப்பினர்கள் பன்னிரண்டு பேர்களையும் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ‘அரசாங்கத்தில் நியமிக்கப்படுபவர்கள்’ என ஏ. கிருஷ்ணசாமி கூறுவதற்கேற்ப, ஆயங்கார முறையில் இருந்த மணியம், கர்ணம், தலையாரி பற்றிய இலக்கியக் குறிப்புக்கள் அவர்களை அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டவர்களாகக் காட்டுகின்றன.வடகரைப் பாளையக் காரனை வாழ்த்திக் கூறும் பட்பிரபந்தம் அவனுடைய அதிகாரிகளான கருணீகர் துரைகளையும் சேருவைகாரரையும் சேர்த்¢தே வாழ்த்துகிறது. மணியக்காரர்கள் மக்களிடம் பழிபாவம் கருதாது வரி வசூல் செய்பவர்கள் எனக் கூறுகிறது கோவிந்த சதகம் (31). வீரையன் அம்மானை ‘தலையாரி கண்டுபிடிச்சாரே நடுவழி வாளால்’ என்று கூறுகிறது. இதன் மூலம் காவல் தொழிலுக்குரியவர் தலையாரி என்பது புலப்படுகின்றது.

ஆயங்கார முறையின் இதர உறுப்பினர், அரசாங்க ஊழியர்கள் என்பதற்கோ, அவர்களுக்கெனத் தனிப் பொறுப்புக்கள் இருந்தன என்பதற்கோ சான்றுகள் இல்லை. இவர்களுக்கு இறையிலிநிலங்கள் வழங்கப் பட்டிருந்தனவா என்ற குறிப்புக்களும் காணப் படவில்லை. ஆனால் அக்கால வேளாண்மை உற்பத்திக்கென அமைக்கப்பட்டிருந்த பண்ணை அமைப்பு முறையில், இவர்களில் பலரும் பங்கு பெற்றதற்கான குறிப்புக்கள் உள்ளன என்பது ஏற்கெனவே பொருளாதார உறவுகளைப் பற்றிப் பேசும் போது விளக்கப் பட்டுள்ளது.அத்தோடு வறுமைக்குரியவர்களாக யார் யார் இருந்தனர் எனப் பட்டியலிடும் பாடல்களும், யார் யாருக்குக் கடன் கொடுத்தால் திரும்ப வராது என்பதைத் தெரிவிக்கும் பாடல்களும், ஆயங்கார முறையிலிருந்த உறுப்பினர்களின் பெயர்களைக் கூறுகின்றன.

எனவே நிர்வாக சபையின் உறுப்பினர்களை இரண்டு பிரிவினராகக் கொள்ளலாம். முதல் பிரிவினர், அரசாங்கத்திடமிருந்து ஊதியமாக நிலத்தை மானியம் பெற்றுக் கொள்ளும் நிலையில் இருந்த கர்ணம், மணியம், தலையாரி என்ற மூவர். இன்னொரு பிரிவினர், விவசாயம் சார்ந்த கைத் தொழில்களையும், உடல் உழைப்பில்லாத சோதிடம், ஆசிரியத் தொழில் போன்றவற்றையும் செய்தவர்கள். இவ்விரண்டாவது பிரிவினர் கிராம நிர்வாகத்தில் பங்கு பெற்றவர்கள் என்பதை விட கிராமத்திற்குத் தேவையான பொதுப் பணிகளை மேற்கொண்டவர்கள் எனலாம். இவர்கள் பண்ணை நிலங்களில் விளைச்சலில் பங்கு பெற்றதாகச் சில குறிப்புக்கள் உள்ளன. இப்பங்கு இவர்களின் தேவையின் அளவைப் பொறுத்ததா? குறிப்பிட்ட அளவினதா என்பது பற்றிச் சான்றுகள் இல்லை.

நாயக்கர்கால கிராமநிர்வாக அமைப்பை அறியும் பொழுது ஐரோப்பிய சமூகவியலாளர்கள் இதுபற்றிக்கூறியுள்ள தகவல் ஒன்றை இங்கு நினைவு கூர்வது அவசியம். ஆங்கில ஆட்சி இந்தியாவில் ஏற்படுவதற்கு முன்பு நிலவிய சமுதாய அமைப்பை ‘ஆசியச் சமூக அமைப்பு (Asiatic Society)க்குள் அடங்கியதாக அவர்கள் கருதியுள்ளனர். அவ்வாசியச் சமூக அமைப்பில் தன்மையை,

“சமூகம் முழுவதும் இந்த ஒரு டஜன் பேர்களுக்கான (கிராம சபை உறுப்பினர்கள்) செலவை ஏற்கிறது. மக்கட்தொகை மிகுந்தால் காலி நிலத்தில், பழைய சமூகத்தின் பாணியில் புதிய சமூகம் நிறுவப்படும். இந்தச் சமூகங்கள், தம் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்பவை. இவற்றில் உற்பத்திக்கான எளிய ஏற்பாடு அதே வடிவத்தில் மீண்டும் மீண்டும் தொடரும்.ஒரு சமூகம் தற்செயலாக அழிந்தால் அதே இடத்தில் மற்றொரு சமூகம் அதே பெயருடன் முளைக்கும், ஆசியச் சமூகங்களின் மாறுபடாத தன்மையின் ரசசியத்திற்குத் திறவு கோல் அதன் எளிமையே” எனக் கூறியுள்ளனர்.18 இச்சமூக அமைப்பு, இந்தியாவில் மிக நீண்ட காலம் நிலவியது என்றும், ஆங்கில ஆட்சியே இதனை மாற்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

“இந்துஸ்தானத்தில்,உள்நாட்டுப்போர்களும் படைப்யெடுப்புக்களும் புரட்சிகளும், வென்றடக்கும் ஆக்கிரமிப்புக்களும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பதும் அவை சிக்கலானவை என்பதோடு விரைவாக நிகழ்ந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்தின என்பதும் உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்திய சமுதாயத்தின் முழுஅமைப்பையும் சின்னா பின்ன மாக்கி விட்டது” என்பது அவர்களின் கூற்று.19 ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பே கிராம சமுதாயத்தில் சீர்குலைவுகள் ஏற்பட்டுவிட்டதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.கிராம சபை உறுப்பினர்கள் என்று கூற முடியாவிட்டாலும் கிராமத்திற்குத் தேவையான பொதுச் சேவைகளைச் செய்த பலரும் மோசமான வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிட்டதைக் காண்கிறோம். கவிகற்றவர் - புலவர், கணிகற்றவர் - சோதிடர், கம்மாளர் - கொல்லன், ஓவியம் கற்றவர் - ஓவியக்கலைஞன், உபாத்திகள் - ஆசிரியர்கள், குவிவைக்கும் ஒட்டர்கள் - குயவர்கள், குருக்கள் - பஞ்சாங்கப் புரோகிதர்கள் மற்றும் கத்தாடிகள் முதலானவர்கள் வறுமைக்குரியவர்கள் எனத்¢தனிப்பாடல் கூறுகிறது (த.தி.காசு,. I, ப. 244). இதேபோல் கடன் கொடுக்கக் கூடாதவர்கள் என்ற பட்டியிலிடும் கயிலாசநாதர் சதகம் வாத்தியார், குரு, கவிவாணர், மறையோர், பண்டிதர்கள், தச்சாண்டி, தட்டான், சவரகன் (அம்பட்டையன்) போன்றவர்களைக் கூறுகிறது. அவர்களிடம் கடன் கொடுத்தால் திரும்ப வாங்குவது சிரமம் என்கிறது (கயி.சத.31).

கிராம சமுதாயம் சீர்குலைவு அடைந்ததற்கு, அக்காலப் பாளைய முறையானது, முன்னர் இருந்த ஊர், சபை என்பனவற்றைச் சிதைத்து, அவ்விடத்தில் ஆயங்கார முறையைக் கொணர்ந்ததும் காரணம் எனலாம். ஆயங்கார முறையில் முதல் பிரிவினர் மூவருக்கு மட்டும் அரசு நிலையில் பாதுகாப்பான வாழ்க்கை இருக்க, ஏனையோருக்கு முறையான வாழ்க்கை வழிமுறைகள் அமைக்கப் படவில்லை. வரிவசூலிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயங்கார முறை, பாளையக்கார முறை ஆகியவற்றின் விளைவு இத்தகையதாகவே அமையும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. எனவே சுயதேவைப் பூர்த்திக் கிராம அமைப்பான ஆசியச் சமூகம் என்ற அமைப்புநிலை தமிழகத்தில், நாயக்கர் காலத்திலேயே வலுவிழக்கத் தொடங்கிவிட்டது எனத் தோன்றுகிறது. கிராம அமைப்பில் இருந்த வேறுபாடுகள் ஒரு பிரிவினரை மேலும் மேலும் செல்வந்தர்களாகவும், இன்னொரு பிரிவினரை வாழ வழியற்றவர் களாகவும் மாற்றியது எனலாம். இம்மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில் வணிக நோக்கம் கொண்ட ஆங்கிலேயரின் வருகை அமைந்தது எனக் கூறலாம்.

அரசுப் பணியாளர்கள்:

மத்திய அமைப்புக்குட்பட்ட பதவிகள், வட்டார உள்நிர்வாக - அமைப்புக்குட்பட்ட பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அமைப்புக்குட்பட்ட பதவிகள் என்பனவற்றோடு வேறு பல பதவிகளுக்குரிய பெயர்களும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.இத்தகைய பதவிப் பெயர் களைப் பட்டியலிடும் இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கன விறலிவிடுதூதுக்களும் காதல் இலக்கியங்களும் ஆகும். தாசி வீட்டிற்கு வரும் அரசாங்கப் பணியாளர்களின் பெயர்களைத் தரும் விதமாக, விறலி விடுதூதுக்கள் அவற்றைத் தருகின்றன. காதல் இலக்கியங்களோ, அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் சென்றவர்களின் பெயர்களாக இப்பெயர்களைத் தருகின்றன. இவைதரும் பட்டியல்களில் கூறப் படும் அனைவரும் கிராம நிர்வாக சபையைச் சேர்ந்த அதிகாரிகளாகவே கருதப்படத் தக்கவர்கள். இவர்களுள்ளும் அதிகம் இடம் பெற்றவர்கள் மணியக்காரர்கள் என்று குறிப்பிடப் படுபவர்கள் மட்டுமே. இவர்களுக்குத் தர்மதானம், கோயில் முதலியனவற்றைக் கவனிப்பது முதலான பல பொறுப்புகள் இருந்தன என்பது இப்பட்டியல்கள் மூலம் அறியப்படக் கூடியதாகும். பாரணிலாயம் மணியம், சீர் அணவு ஆனைமணியம், கோயில் துறைமணியம், ஆயத் துறை மணியம், ஓய்வறுகர் போட்ட மணியம், கீரைத்தோட்ட மணியம் என்பன கூளப்பநாயக்கன் விறலிவிடுதூதுவில் இடம் பெறும் பட்டியலில் உள்ள மணியகாரர்களின் பெயர்களாகும். இதே வரிசையில் வாசல் வழிச்சாலை அஞ்சற் கார மணியம் என்ற ஒரு பெயரும் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. ‘அஞ்சல்’ முறை இருந்தது என்பதற்கும், அதனைப் பொறுப்பாகக் கவனிக்க மணியகாரன் இருந்தான் என்பதற்கும் இது சான்று பகரக்கூடும்.

அடுத்துச் சிறுசிறு நிலைகளில் வரிவசூலிக்க மாட்டு வரிக்காரன், பாசி வரிக்காரன் ஆகியோர் இருந்தனர் என்பதையும், பீரங்கி எனும் நவீன ஆயுதங்களை உபயோகப்படுத்து வதற்கென பீரங்கிக்காரன் என்ற பதவியிருந்தது என்பதையும் கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது குறிப்பிடுகிறது. மேற்கூறிய பெயர்களைத் தவிர பட்டணத்துப் பாரபத்யம், கோட்டைக் கட்டளையான், பட்டடை ஆகிய பெயர்களையும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது (கூள.விற.கண். 451 - 457).கந்தசாமிக்காதல் என்ற நூலின் பாட்டுடைத்தலைவன் கந்தசாமி என்ற வட்டாரத்தலைவன் வேட்டைக்குச் சென்ற போது, பண்டிதர் (குரு), பிரதானியர், மந்திரிமார், காரியப்பேர் கருணீகர், குறிக்காரன், குழல்காரன், கட்டியக்காரன் , ஊழியக்காரன், இளந்தாரி வீரியர், தோட்டி முதலானோர்கள் போனதாக அந்நூல் கூறுகிறது (கண்.209-211). ஐவர் ராசாக்கள் கதை, கருவூலக் கணக்கர், திருமுகத்துப் பிள்ளைமார் என்ற பதவிகளைக் கூறியுள்ளது (560 -563). நாயக்கர் காலத்துத் தோன்றிய இரண்டு பணவிடு தூது நூல்களும் சில பதவிப் பெயர்களைத் தந்துள்ளன. துரைவாசல், தளாதிபகர், தினசரிக்காரர் ஆகியனவும்,20 நாணயக்காரர், பொக்கிஷதாரர் ஆகியனவும் இத்தகைய பெயர்கள் (சேது. பணவிடு. கண்.106 - 107).அரசன் பாளையக்காரனுக்கு வரிசைகள் வழங்கியதுபோலவே, அரசாங்க அதிகாரிகளுக்கும் சில வரிசைகள் வழங்கியதாகத் தெரிகின்றது. பல்லக்கு, தண்டிகை, கவரி, கவிகை, காளாஞ்சி, கண்டிகை, குதிரை, யானை முதலான வரிசைகளோடு ஊர் என்பதும் குறிப்பிடப்படுகிறது (மான். விடு. கண். 134 - 136). அரசுப் பணியாளர்களுக்கு ‘ஊர்’ வழங்கப் பட்டது என்ற குறிப்பைக் கொண்டு, அவர்களுக்கான ஊதியம் நிலமாக வழங்கப் பட்டது எனக் கூறலாம். அந்நிலங்களின் வருமானத்திலிருந்து அவர்கள் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வர் என்பதும் தெரிகிறது. இப்படி ஊர்களையும், வேறு சில வரிசைகளையும் பெற்றுக் கொண்டவர்களாக மந்திரி, தளகர்த்தன் என்பாரோடு ‘உபயன், கணயோகம்’ என்ற அதிகாரிகளும் மான் விடுதூதுவில் கூறப்படுகின்றனர் .அரசுப் பணியாளர்களின் பதவிப் பெயர்களைத் தரும் இலக்கியங்கள் பெரும்பாலும் பாளையக்காரர்கள் போன்றவர்களைப் பாடும் இலக்கியங்களே. எனவே பாளையக்காரர்களின் கீழ் செயல்பட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்களே இந்நூல்களில் குறிக்கப் பட்டுள்ளனர் எனக் கொள்ள இடமுண்டு. பல நிலைகளிலான பதவிகளைப் பற்றி மேலும் அறிவதற்கும், அவ்வப் பதவிகளின் பொறுப்புக்கள் பற்றி அறிவதற்கும் கல்வெட்டு முதலான சான்றுகள் தேவைப் படுகின்றன. இங்கு இலக்கியத்தின் வழிப் பெறக் கூடிய ஊழியர் பற்றிய செய்திகள் மட்டுமே தரப்பட்டன.

நிதி நிர்வாகம்:


அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும், நிலமானிய அமைப்பின் தலைவனான அரசனின் விருப்பப் படியான செலவுகளுக்கும் தேவையான நிதியை வசூலிப்பதற்கான அமைப்புமுறை, நிதி நிர்வாக அமைப்பு முறை (Financial Administration), எனப்படும். நாயக்கர்காலப் பாளையக்கார, ஆயங்கார முறைகள் நிதி வசூலிப்பது முக்கியமானதாகவும் படைகளைப் பராமரிப்பதை அடுத்த நோக்கமாகவும் கொண்டவைகளே. இவ்விரு செயல்களை மையமாகக் கொண்டே நிர்வாகத்தின் பிற அமைப்புக்களையும் அரசன் வைத்திருந்தான் என்று கூறலாம். நாடு முழுவதும் அரசனுக்குச் சொந்தம் என்ற அடிப்படையில் நிலங்கள், பாளையக்காரர், மானியத்தாரர் வழி பிரிக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் பொருட்டு உழவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அவ்வுற்பத்தியும் பண்ணைமுறையிலேயே நடைபெற்றது. பண்ணையில் கிடைக்கும் உற்பத்தி, பண்ணை விசாரிப்பான், முறையம்பிள்ளையெனப் பட்ட கணக்குப் பிள்ளை ஆகியோரின் முன்னிலையில் பங்கிடப்பட்டது. அப்படிப் பங்கிடப் பட்டதில் அரசாங்கத்திற் குரிய பங்கு பாளையக்காரன் வழியாக அரசனைச் சென்று சேர்ந்தது.

நாயக்கர் காலத்தில் இத்தகைய வேளாண்மை வருமானமே அரசாங்கத்தின் முக்கிய வருமானம் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.21 பொதுவாக வேளாண்மைவரி ஆறில் ஒரு பங்கு எனக் குறிக்கப்பட்டாலும், அந்தணர்க்கும் கோயில் போன்றவைகளுக்கும் வழங்க வேண்டுவதையும் சேர்த்தால் அது நான்கில் ஒரு பங்காக அமைந்துவிடும் எனக் கூறுகின்றார் டி.வி. மகாலிங்கம்.22 அவரே நிலவரி மட்டுமின்றிச் சொத்துவரி, வணிகவரி, தொழில்வரி, தொழிற்சாலை வரி, ராணுவ உதவிக்கான நிதி, சமூகக் குழுக்களுக்கான வரி, நீதி விசாரணைகளில் கிடைக்கும் தண்டத் தொகை முதலானவைகள் அரசாங்கத்தின் வருமானங்களாக இருந்தன என்கிறார்.23 அரசாங்க வருமானத்தைக் கவனித்துக் கொள்ள ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போன்று, பிரதானி என்ற அதிகாரி மத்திய அமைப்பிலும் மாநில அமைப்பிலும் இருந்துள்ளான். இவர்கள் தவிர கரூணிகர், மணியக்காரர், பொக்கிஷதார், நாணயக்காரர் என்ற பதவிகளும் நிதி நிர்வாகத்தோடு தொடர்புடையனவாக இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றன.விறலிவிடுதூது (கிராம நிர்வாகக்திற்குட்பட்ட) ஒவ்வொரு துறைப் பதவிப் பெயரோடும், ‘மணியம்’ என்ற பின் ஓட்டைச் சேர்த்தே கூறுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் அவ்வத் துறையின் வரியை வசூல் செய்து கணக்கனிடம் செலுத்தும் பொறுப்பு உடையவர்களாகவும், செயல்படும் முறையைக் கண்காணிக்கும் பொறுப்புடைக் கொண்டவர்களாகவும் இருந்திருக்கக் கூடும்.

படை நிர்வாகம்:

அரசனோடும் பாளையக்காரனோடும் தொடர்புகொண்ட இன்னொரு துறை, படைநிர்வாகத்துறை (Military Administration), ஆகும். பிறநாட்டு மன்னர்களின் படையெடுப்பைத் தடுக்கவும், உள்நாட்டில் ஏற்படும் எதிர்ப்புகளை அடக்கவும் அரசனுக்குப் படை அமைப்பு அவசியம். நாயக்க மன்னர்கள் தங்களுக்கெனத் தனியாகப் படைகளை வைத்திருந்தினர் என்ற போதிலும், அப்படைகள் அரண்மனைக் காவல், கோட்டைக்காவல் போன்ற தலைநகர்ப் பயன்பாட்டுக்கு மட்டுமே உரியதாக இருந்துள்ளன. பிற நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் போது இப்படைகள் போதியனவாக இல்லை. எனவே பாளையக் காரர்களிடம் படையுதவி கோரிப் பெறப் பட்டுள்ளது. இது ஆணையிட்டும் பெறப் பட்டுள்ளது. காட்டாகச் சேதுபதி சடைக்கத் தேவன் மீது படையெடுத்துச் செல்ல விரும்பிய திருமலை நாயக்கன், தன் தளவாய் ராமய்யன் மூலம் ஒவ்வொரு பாளையக்காரனுக்கும் படைகொண்டு வரும் படி ஓலையனுப்பிய செய்தியை ராமய்யன் அம்மானை கூறுகிறது (ப.5; வ.11 - ப.6; வ.4). பாளையக்காரர்களின் படைகள் ‘பாளையப்பட்டுக்கள்’ எனவும் ‘கொத்தளம்’ எனவும் கூறப்படுகின்றன.24 நாயக்கர்காலப் பாளையக்கார முறையின் படி ஒவ்வொரு பாளையக்காரனும் தனக்கெனப் படையொன்றை வைத்திருக்க வேண்டும். அப்படையை அரசன் வேண்டும் பொழுது அனுப்பி உதவ வேண்டும். அப்படி அனுப்பாதவர்களைத் தண்டிக்கும் உரிமை அரசனுக்கு உண்டு. இதை பாளையப் பட்டுக்களின் வம்சாவளியிலும் காண முடிகிறது.அரசனிடம் இருந்த படைவீரர்களும் பாளைக்காரர்களிடம் இருந்த படைவீரர்களும் முழுநேரப்படை வீரர்களாக இருந்தனரா? அமைதிக் காலத்தில் வேறு தொழில்கள் செய்தனரா? என்ற வினாக்களுக்கு இலக்கியங்களில் விடைகள் இல்லை. ஆனால் வரலாற்றாசிரியர் கு. ராஜய்யன், பாளையக்காரர்கள் பராமரித்த ராணுவம் பற்றிக் கூறுமிடத்து, இதனை,

“அவர்கள் (பாளையக்காரர்கள்) ராணுவத்தில் அமரம் சேவகர் (Amaram Peons), கட்டுப்பிடி சேவகர் (Cattubudy Peons), மற்றும் கூலிச்சேவகர் என மூன்று பிரிவினர் இருந்தனர். முதல் இரு பிரிவினருக்கும் கூலி நிலமாகக் கொடுக்கப்பட்ட போது மூன்றாம் பிரிவினர் பணமும் தானியமும் உதவியாகப் பெற்றனர். அமரம் சேவகர்களுக்குப் பரம்பரை முறையில் நிலங்கள் வழங்கப்பட்டன. சாதகமான முறையில் குறைந்த அளவில்குத்தகை நிர்ணயிக்கப்பட்டது”

எனக் கூறுகிறார்.25 நிலத்தைப் பெற்ற இவர்கள் தாங்களே நிலவுடைமையாளர்களாக இருந்து பயிரிட்டனர் என்பது இல்லை; அக்காலப் பண்ணை முறையிலேயே அந்நிலங்கள் பயிரிடப் பட்டன.நாயக்கர் காலப் படை நிர்வாக முறையைத் தெளிவாக அறிந்துகொள்ளத் துணை புரிய இலக்கியங்கள் பலவித படைவீரர்களையும் ஆயுதங்களையும் கூறுகின்றது. ‘ஐவர் ராஜாக்கள் கதையில்’ படையொன்று அணி வகுத்து வருவது பேசப்படுகின்ற போது, “உள்ளுடையர், அகம்படியர், துறைக்காரர் , எட்டார், காளையார் கூட்டமும் காளாஞ்சி திரிகை பரிசை யுடைவாளும் கலசப்பானையேந்தி ......” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (வரி.680-683). பாளையத்தின் தலைவன் வரும்பொழுது அவனுடன் வந்த படைகள் பற்றிக் குறிப்பிடும் சந்திரகலாமஞ்சரி (வட.ஆதி.சரி.ப.29; 8-12) வேற்படை, குத்தப்படை, கற்குழல்காரர், வில்காரர், வாள்வீரர், வல்லயக்காரர் முதலானோர் உடன் வந்ததாகக் கூறுகிறது. படைக்கருவிகளாக நாயக்கர் காலத்து இலக்கியங்கள் மரபு வழியிலான பல கருவிகளையும் புதிய கருவிகளையும் குறிப்பிடுகின்றன. வேட்டைக்குச் செல்லும் தலைவனுடன் சென்ற வீரர்கள் சூள், வாள், சாகுழல், நேரிசம், மட்டாணி, ஒட்டுப் பருசுகத்தி, கெண்யம், கட்டாரி, வேட்டைக்கத்தி, வேல், வில், அம்பு, குத்தீட்டி, சக்கரம், வளைதடி, கையருவாள், கடமான் முதலான ஆயுதங்களுடன், கைவெடி, கண்டுமருந்துகள், துப்பாக்கி ஆகியவற்றையும் கொண்டு சென்றார்கள் என்கிறது பொன்னையன் காதல் எனும் நூல் (கண்.84 - 91).கூளப்பநாயக்கன் காதல் (க.61) வெடிக்காரர், வேல்காரர் பற்றிக் குறிப்பிட, கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது (க.75) பீரங்கி பற்றிய குறிப்பினைத் தருகிறது.

நீதி நிர்வாகம்:

எந்தவொரு அரசாங்கத்திற்கும், அதிகாரங்களும் சட்டங்களும் நடைமுறைப் படுத்தப் படுவதற்கு நீதி நிர்வாகமுறையும் அவசியம்.பொதுவான சமுதாய விதிகளும், அரசியல் நடைமுறை களும் மீறப்படும் பொழுது இந்நீதி பரிபாலன அமைப்புகள் விசாரித்து அதற்குரிய தண்டனைகள் வழங்கும்.நாயக்கர் காலத்தில் இருந்த நீதி¢ பரிபாலன அமைப்பு பலவித படிநிலைகளைக் காண முடிகிறது. பெரும்பாலான வழக்குகள் கிராம அளவிலேயே தீர்க்கப் பட்டதாகச் சத்தியநாதய்யர் எழுதுகின்றார். சமூக, சமய நடைமுறைகள் பற்றியவை மட்டுமே அரசனாலும் உயர் அதிகாரி களாலும் விசாரிக்கப்பட்டுள்ளன.26

கிராம அளவில் இருந்த நீதிமன்றங்களில் இயல்புகளை ‘மூவரையன் விறலிவிடுதூது’ எனும் நூல் விளக்கமாகத் தந்துள்ளது. இக்கிராம நீதிமன்றங்கள், ஊர் அம்பலத்தில் கூடி விசாரணை நடத்தியுள்ளது. கிராம நீதிமன்றத்திற்குத் தலைவராக இருப்பவர் அம்பலகாரர் எனப்பட்டார். அவருடன் தானிகர், கொத்துக் கணக்குக் குழாத்தினர், ஆகியோரும் இருந்ததாக அந்நூல் கூறுகிறது. அம்பலகாரரை அந்நூல் தலத்துச் சுவாமிகள் என விளிக்கின்றது (கண்.342-344). இன்னொரு விறலிவிடுதூதான கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது பட்டர், நரசிங்கையர், சொக்கலிங்கையர், சங்கரசாரியர், அனந்தசாஸ்திரி முதலான பிராமணர்களுடன் , கைவிஸ்தாரியர், கோவில் ஸ்தானிகர் என்ற அதிகாரிகளும் உடன் இருந்ததாகக் கூறுகிறது (கண்.813-815).மனுமுறை காப்போராகக் கூறப்படும் நாயக்க அரசர்களின் காலத்தில் மனுஸ்மிருதி சட்டநூலாகப் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். தம்காலத்து நீதிகளைக் கூறும் சதகநூல்கள் அதனையொட்டிய அறக்கருத்துக்களையே தெரிவித்துள்ளன. உயர்குடியில் பிறந்தவர்களே சிறந்தவர்கள் என்றும் (கயி.சத.28), சாதி முறைகள் அவசியம் என்றும், அவ்வச் சாதிமுறைக்கேற்ப நீதிவழங்க வேண்டியது அரசனின் கடமை என்றும் (அற.சத.11), மனைவி, கணவனின் நலனுக்காக எதையும் செய்பவளாகவும், பெற்றோரைக் காப்பது குழந்தைகள் கடமையென்றும் (தன்.சத.52), அக்கால நடைமுறைகளை அறங்களாகக் கூறுகின்றன.

சமூக ஒழுக்கங்களும் சமய ஒழுக்கங்களும் மீறப்படும் பொழுது அரசன் தண்டனை வழங்குவது இயல்பு. அத்தகைய வழக்குகளில் நீதி வழுவாது, நடு நிலையைப் பின்பற்று பவனாகவும் அரசன் இருப்பான் என்கின்றன சதகநூல்கள் (கயி.சத.4; அற.சத.82; கும.சத.3), இத்தகைய நடுநிலை தவறாத அரசன் இல்லாத நாட்டில் செல்வம் தங்காது என்கிறது திருக்கழுக்குன்றக்கோவை (84:3-4). பாளையக்காரர்களும் நீதி வழுவாது இருக்க வேண்டும் என விரும்புகிறது திருமலைமுருகன் பள்ளு (26).இவ்விலக்கியங்கள் தரும் செய்திகள் கொண்டு கிராம நீதிமன்றம், பாளையங்களின் நீதிமன்றம், அதற்கும்மேலாக அரசனின் நீதி வழங்கல் என்ற மூன்று படிகள் இருந்ததாகக் கருத இடமுண்டு. மைய அரசில் அரசனே நேரடியாக நீதி வழங்கியதோடு அதிகாரிகளைக் கொண்டும் வழக்குகளை விசாரிப்பது உண்டு. நீதி வழங்குவதில் தான் ஈடுபடுவதில்லையென்ற பொழுது, பிரதானி என்ற பதவிக்கு நீதி நிர்வாக அமைப்புக்களின் மேல் கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வை செய்யவும் அதிகாரம் இருந்தது. கி.பி.1665 - இல் எழுதப்பட்ட புரோன்சா (Bornza) பாதிரியின் கடிதம் ஒன்று நீதிமன்ற நடவடிக்கையை நேரடித் தகவலாகத் தெரிவிக்கின்றது.27

நாயக்கர் காலத்தில் தண்டனைகள் பலவாக இருந்தன என்று இலக்கியங்கள் காட்டுகின்றன. இவற்றுள் பல, கடுமையான தண்டணைகளாகவும் இருந்தன.போரில் தோற்றவர்களுக்கும் அரச இறை செலுத்த மறுப்பவர்களுக்கும் சிறைத்தண்டணை வழங்குவதும், உறுப்புகளைச் சிதைப்பது மான தண்டனைகள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. திருமலை நாயக்கருக்குப் பணியாதவர்களின் முதுகுத்தோலைச் செதுக்கியதாகவும், முட்டி எலும்பைத் தட்டி எடுத்ததாகவும் ராமய்யன் அம்மானை தெரிவிக்கின்றது. (ராம. அம்.ப.53: 5 - 11) வரி செலுத்தாமல் இருப்பது பெரிய குற்றம் எனக் கருதப்பட்டது. அவ்வாறு, வரி செலுத்தாதவன் புலவனே ஆயினும் தண்டிக்கப்பட்டான். பாளையக்காரன் ஒருவனுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாத புலவர் ஒருவர் சிறையில் அடைக்கப் பட்டதாக ஒரு நூல் தெரிவிக்கின்றது.(மகர.குழை.2)* மேற்கூறிய தண்டனை வழங்குதல்களில் அரசனோ, பாளையக்காரனோ நேரடியாகத் தொடர்புடையவர்களாகக் காட்டப்படவில்லை. எனவே தண்டனை வழங்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கும் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

நாயக்கர் காலத்தில் மிகக் கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதாகக் கிறித்துவப் பாதிரிகளின் கடிதங்களும் கூறுகின்றன. கண்கள் தோண்டப்பட்டன; காதுகள் அறுக்கப்பட்டன; வீட்டையே அழிப்பது; கொதிக்கும் நெய்யில் கையை விடச்செய்து, ஒருகையில் எண்ணெயில் நனைத்த துணிகளைச் சுற்றி நெருப்பை வைப்பது, தூக்கிலிடுவது, தலையை வெட்டுவது போன்ற கொடிய தண்டனைகளை அக்கடிதங்கள் குறிப்பிடுகின்றன.28 ராமய்யன் அம்மானை தோலை உரிப்பதும், முட்டியைத் தட்டி எடுப்பதும் ஆகியன பற்றிக் கூறுவது, மேற்கூறிய கடிதக் குறிப்புக்களுக்கு அரண் செய்யக் கூடியது என்று கூறலாம்.

அரசு அமைப்புக்களுக்கிடையேயுள்ள உறவுகள்:

அரசனைத்தலைவனாகக் கொண்ட மத்திய அமைப்பு, பாளையக்காரனைத் தலைவனாகக் கொண்ட உள் நிர்வாக அமைப்பு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கிராம அமைப்பு ஆகிய மூன்றும், மற்றும் அவற்றோடு தொடர்பு கொண்ட நிதி, படை, நீதி ஆகிய நிர்வாக அமைப்புக்களும் இதுகாறும் ஆராய்ந்து கூறப்பட்டன. இனி அவற்றிற்கிடையேயுள்ள உறவு நிலையினை அறியலாம்.மேற்கூறிய அமைப்புக்கள் அனைத்தையும் இணைப்பனவாக வரிவசூல் முறையும் இருந்துள்ளன. பாயைக்காரனிடம் ஒரு குறிப்பிட்ட பகுதியை அளித்து விட்டு அப்பகுதியில் வசூலிக்கப்படும் வரிகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறுகின்ற நிலையிலும், தனக்குப் படையுதவி தேவைப்பட்டபொழுது பாளையப் பட்டுக்களைப் பயன் படுத்துவதன் நிலையிலும் அரசன் பாளையக்காரனோடு தொடர்பு கொண்டான். இதைத் தவிர பாளையக் காரனோடு வேறு எந்த உறவும் கொண்டிருந்ததாகக் குறிப்புக்கள் இல்லை.

கிராமநிர்வாக அமைப்போடு அரசனுக்கு எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாளையக்காரன் அரசனுக்குச் செலுத்தும் திறைப்பணத்தில் கிராம நிர்வாகத்தினால் வசூல் செய்யப்பட்ட பணமும் உண்டு என்பதன் மூலமே, அரசனுக்குக் கிராம அமைப்புப் பயன்பட்டது.கிராம அமைப்பு அரசனோடு வேறு உறவு கொள்ள வில்லையென்பதால், கிராமத்துப் பொது மக்களுக்கும் அரசனோடு தொடர்புகள் இருக்க வில்லையென்றே கூறலாம்.வசூல் செய்த வரிகளுக்காகவும், அவனுடைய அரசில் பொறுப்புக் களுக்காகவும் அரசன் மக்களுக்குச் செய்த சமூகநலத்திட்டங்கள் இன்னவையென்று சொல்லுமளவிற்கு ஒன்று கூட இல்லை. ஆனால் பாளையக்காரர்களுக்கு அத்தகைய கடமைகள் இருந்தன. பாளையப் பகுதியின் நீர்ப்பாசனம், காவல், நீதிபரிபாலனம் காடு அழித்து நாடாக்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல் எனப்பல பொறுப்புக்கள் அவர்களுக்கு இருந்தன. இவர்கள் கிராம சபைகளின் மூலம் பொதுமக்களோடு தொடர்பு கொண்டனர். கிராம சபை உறுப்பினர்களான கர்ணம், மணியகாரர், தலையாரி என்ற மூவரின் உதவியால் வரி வசூலிக்கப்பட்டது. அத்தோடு கிராமத்திற்குத் தேவையான பொதுச் சேவைகள் செய்த தச்சன், கொல்லன், புரோகிதர், தட்டான், வண்ணான், அம்பட்டையன், மடையன், குயவன், சக்கிலி முதலானவர்களுக்குச் சேர வேண்டிய உற்பத்திப் பங்கையும் பெற்றுத்தந்துள்ளனர். எனவே மத்தியில் உள்ள அரசன் என்ற நிலையிலிருந்து வித்தியாசமான, அவ்வவ் வட்டாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த பாளையக்காரர்கள், மக்களோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்தனர் எனலாம்.

அரசும் மக்களும்:


ஒரு காலகட்டத்திய அரசும் அரசு அமைப்புக்களும் எப்படிச் செயல்பட்டன என்பதை அறிவதோடு,எப்படிச் செயல்பட வேண்டும்; செயல்பட்ட முறைகளில் இருந்த குறைநிறைகள் எவை; அவற்றை மக்கள் எப்படிஎதிர் கொண்டார்கள் என்பதையும் அறியவேண்டும். கடந்த காலச் சமுதாய வரலாற்றை அறிய முயலும் முயற்சிகளில் இதனையறிவதற்கான சான்றுகள் மிகவும் குறைவே. இலக்கியங்களே இதற்குப் பெரிதும் உதவும்.அவையும் கூட முழுமையாகப் பொது மக்களில் ஒருவராக இருந்த புலவர்களிடம், அவர்களின் குரல்களைக் கேட்க முடியும். நாயக்கர் காலத்தைப் பொறுத்தவரையில் ஐரோப்பியப் பாதிரிகளின் கடிதங்கள் சில, மக்களுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பினை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

அரசனும் அரசு உறுப்பினர்களும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விருப்பம் பல புலவர்களால் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ஏழைகளிடம் குறைவாக வரிவசூலிக்க வேண்டும். குறுமன்னர்களிடம் சீரான உறவு கொள்ள வேண்டும் (கோவி.சத.18,74). நீதி வழுவாது, குடிமக்களிடம் அபிமானம் கொண்டு மந்திரிகளிடம் ஆலோசனை கேட்டுத் , தானங்கள் செய்து, வழக்குகளில் நடுநிலையைப் பின்பற்றி, சதுர் உபாயங்களுடையவனாய், சகல உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதுபவனாய் தளகர்த்தர், பிரதானி, சேனாதிபதி புடைசூழ இருந்து, சாதி முறையின் படி மரியாதை செய்பவனாய் அரசன் இருக்க வேண்டும். (கயி.சத.4; அற.சத.82; கும. சத.3) அரசனைப் பற்றிய விருப்பங்கள் இவ்வாறிருக்க, அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் தங்கள் கடமையைச் செய்வதில் முறைகேடுடன் நடந்து கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.ஊர்மணியக்காரன், கணக்கன் போன்றோர் பொய்க்கணக்கு எழுதியதையும், வரிவசூலிப்பதில் தங்கள் கடமையைச் செய்வதில் முறைகேடுடன் நடந்து கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. ஊர்மணியக்காரன், கணக்கன் போன்றோர் பொய்க்கணக்கு எழுதியதையும், வரிவசூலிப்பதில் தங்கள் திறமையால் கால்வாசி, அரைவாசி நிலுவை எனக் கூறி விடுவதையும் பணவிடுதூது கூறுகிறது.29 அவர்களது திறமையான தில்லுமுல்லுகளைக் கூறுமிடத்து, ‘காலவெட்டைக் கல்வெட்டாய்க் கண்டெழுதி - மேலவிட்டுப் போகாக்குடி போகுடியென்றுங் கொன்றாலுஞ் சாகாக்கு சாகுடியென்றும் - நோகாது எழுதியெழுதி யூரெல்லாந் தன் காலில் உழுதுழுது பாழாக்குவார்’ எனச் சேதுபதி பணவிடுதூது விமரிசனம் செய்கிறது (145 - 147). இத்தோடு அவர்கள்,

‘கொள்ளையிடவென்று குடியியற்கை நீட்டாமல்

தள்ளியெழுதித் தலைப்பட்டு - விள்ளாத

வாரநிலம் வரிசையாக, வரிசை நிலம்

வார நிலமாக மறைத்தெழுதி - ஆர

விருத்தி தனவிருத்தியாக்கி யொழுகைத்

திருத்தித் திருத்தலுடன் சேர்த்துக் கருத்தறிந்து

மானிபங் கொள்ளாத வகையிலே கொள்ளுமின

மேனுங் கொள்ளாத வகையேன்றெழுதி’

ஏமாற்றுவார்கள் என்கிறது அந்நூல் (கண்.138 - 141).

அக்காலத்தில் அரசு ஊழியர்கள் அதிகாரம் பெற்றிருந்தவர்கள், பணத்திற்காகவும் இலஞ்சம் பெற்றுக்கொண்டும் காரியங்கள் செய்ததைப் பள்ளு நூல்களும் காட்டுகின்றன. பள்ளனை மேற்பார்வை செய்யும் பண்ணைக்காரன் லஞ்சம் பெற்றதையும், பெண்களிடம் கிடைக்கும் சுகத்திற்காகத் தன் பொறுப்புக்களை மறப்பதையும் அவை காட்டுகின்றன (வை. பள்.83).அரசு, அரசு ஊழியர்கள் மீதான நேரடி விமர்சனங்கள் தவிர மறைமுக எதிர்ப்புக்களும் இருந்துள்ளன. இவ்வெதிர்ப்புக்கள் தனியாட்களின் மீதான எதிர்ப்புக்களாக இல்லாமல் நாயக்கர் அரசு மீதான எதிர்ப்பு நிலைகளாக இருந்துள்ளன.

நாயக்கர்கள் மீதான எதிர்ப்புக்கு அவர்கள் தமிழ்மொழி பேசாத வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தங்களுடன் வந்த தெலுங்கர்களையே பாளையக்காரர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் கொண்டிருந்தனர் என்பதும் அடிப்படைக் காரணங்களாக இருந்தன. இந்நிலையில் ஏற்கனவே சோழர் காலத்தில் செல்வாக்குடன் இருந்த வேளாளர்கள் நாயக்க அரசுகளை எதிர்த்தனர். இவ்வெதிர்ப்பு நிலை நேரிடையாக வெளிப்படாமல் தமிழர்கள் சமயமான சைவமும்; மொழியான தமிழும் அரசு ஆதரவினை இழந்துவிட்டன; அதனைத் திரும்பவும் பெறத் தமிழ்மொழி வளர்க்கும் அரசு அவசியம் என மொழியை முன்னிறுத்தி, எதிர்ப்புக் காட்டப்பட்டது.

தமிழ்மொழி, ஆதரவு இழந்துவிட்டது என்பதைப் பாடவந்த அந்தகக்கவி, ‘சுரையன் தினகரனைச் செந்தமிழுக்கு நல்லதுரை’ என்று பாராட்டிக் கூறியும் கூட அவன் பொருள் எதுவும் தரமறுத்துவிட்டான் என்கிறார் (த.தி. கழகம், I: 30). பாடலைக் கேட்டுப் பரிசு வழங்க வேண்டியவன் தமிழைஅறியாதவனாக இருக்கிறான் என்பதை, ‘அந்தகனே நாயகனானால் செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித்தென்ன பயன்’ என்ற கேள்வி வெளிப்படுத்துகிறது. தனிப்பாடலொன்று அவ்வாறு பாடியுள்ளது. (த.தி.காசு; I: ப.197). செந்தமிழின் அருமை சிறிதும் அறியாதவனிடம் பொருள்நாடிச் சென்றவனை, அழைப்பின்றி விருந்துக்குச் சென்றுவிட்டு, அதைச் சொல்ல முடியாமல், ஊமை கனவு கண்டது போல விழிப்பவனுக்கு ஒப்பிடுகின்றது தண்டலையார் சதகம் (23:3-4). குழந்தைக் கவிராயரோ,

‘செஞ்சிதஞ்சை மதுரை மைசூர் மாறுபாஷை

செந்தமிழன் திறமறிந்து செய்யமாட்டார்’

என வெளிப்படையாகப் பேசுகின்றார் (மான்விடுதூது இணைப்பு). தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகியமூன்று இடங்களும் நாயக்க அரசர்கள் ஆண்ட பகுதிகள் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் நாயக்க மன்னர்கள் ஆதரிக்கவில்லை என்பதாகவும், மாறாக, ஆங்காங்கே இருந்த புரவலர்களே ஆதரித்தனர் என்பதாகவும் பல புலவர்கள் பாடுகின்றனர். படிக்காசுப்புலவரின் பாடல்களில் இந்தப் போக்கினை நன்கு காணலாம். தன்னை ஆதரித்துவந்த அரியலூர்ப்புரவலன் ஒருவன், தனக்கு முன்பு கொடுத்து வந்த ஊதியத்தை விடக் குறைத்துக் கொடுத்து விட்டதை யெண்ணி, ‘இனித்தமிழுக்கு அரியலூர் என்றிருந்தோம் இங்கு சம்பளம் குறைந்தால் என்செய்வோமே’ என்று வருந்துகின்ற போது, ‘கனத்த சிராப்பள்ளிதனிலே வடுகர் கூத்துக் கட்டி யாளுவதாச்சு’ என்று கூறி, தமிழரல்லாத வடுகர் மேலுள்ள தனது வெறுப்பைப் புலப்படுத்திக் கொள்கிறார் (த.தி.காசு.பதி.I: ப. 12). அவரே வள்ளல் சீதக்காதி இறந்தபோது,’தமிழ்நாவலரை ஓட்டாண்டியாக்கி விட்டு இறந்து போனான்’ எனவும், ‘தமிழ்ப்பாவலர்கள் காற்றில் இலவம் பஞ்சாய்ப் பறக்கையில் தேவேந்திர தாருவைப்போல ரகுநாத செயதுங்கன் உதவினான் எனவும் பாடியுள்ளார் (முற்குறிப்புப் பாடல்கள் 8,13). வேற்றுமொழியாளரின் வருகையால் தமிழ்மொழி ஆதரவற்றுப்போய் விட்டது என்று பாடும்போதே, சிலரைத் தமிழ்மொழியை ஆதரித்ததற்காகப் பாராட்டவும் செய்கின்றனர். அப்படிப் பாராட்டப்படுவர்கள் பெரும்பாலும் நாயக்கர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட பழைய தமிழ் மன்னர்களின் மரபினராகவோ, பாளையக்காரர்களாகவோ, தமிழினத்தைச் சேர்ந்த அதிகாரிகளாகவோ, வள்ளல்களாகவோ காணப்படுகின்றனர். ‘இனித் தமிழுக்கு அரியலூர் எனவும், ‘தேட்டாளன் காயல்துரைச் சீதக்காதி’ எனவும் படிக்காசுப் புலவரால் போற்றப்படுபவர்கள், தமிழை ஆதரித்த வள்ளல்கள், அவரால் தேவதாரு’ எனவும், அமிர்தகவிராயரால் ‘முத்தமிழ் வாணர்க்கு எழுமடங்கு புயலைப் பொருவுகையான் (நாணி . ஒருது.கோ.11:1-2) எனவும் பாராட்டப்பெற்ற சேதுபதி நாயக்கர்களின் ஆளுகையை ஏற்றுக் கொண்டவர் ‘பாமுத்தமிழ் மூவர் பாடிய தமிழைத் திருநெல்வேலி வரை வளர்த்ததாகச் சங்கரலிங்க உலாவால் (85) கூறப்படும். தென்காசிப் பாண்டியர்கள், ஆதிக்கம் இழந்துவிட்ட பழைய தமிழ் மன்னர்கள். தமிழின் வளர்ச்சிக்காகப் பதினாறுகோடிப் பொன்னைச் சொரிந்தான் எனச் சந்திரகலாமஞ்சரி (வட.ஆதி.சரி., ப.26:1) கூறும் பெரியசுவாமி என்பவர் நாயக்கர் களுக்குக் கீழான வடகரை நாட்டின் பாளையக்காரரை உறவினன் ‘பசுந்தமிழனாவலர்க்குப் பணமும் நெல்லும்’ கொடுத்து குழந்தைக்கவிராயர் (மான்வி.தூ., இணைப்பு) பாராட்டும் தெலுங்குப் பாளையக்காரனான வடுகநாத துரையினிடம் இவ்வாறு தமிழ் வளர்ச்சியையும், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்தவர்களாகச் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், வள்ளல்கள் ஆகியோரைக் காட்டி விட்டுப் பேரரசர்களான நாயக்கர்கள் தமிழை ஆதரிக்கவில்லை என மறைமுகமாக அந்நூல்கள் தெரிவிக்கின்றன. இவ்வெதிர்ப்பு, தங்களின் அதிகாரம் பறிபோய் விட்டது என்பதைச் சோழர்காலத்தில் செல்வாக்கோடு இருந்த வேளாளர்களின் வேதனையோடு கூடிய எதிர்ப்பாகவே கொள்ளலாம். இதே தன்மையிலேயே அக்காலப் புலவர்கள் சைவ சமய எழுச்சிக்காகவும் குரல் கொடுத்துள்ளனர்.30 எனவே, சமயம், மொழி காரணமாக நடந்த எழுச்சி இயக்கங்கள், பொருளாதார நிலையில் மேலாதிக்கம் செலுத்த முனைந்த தெலுங்கு நிலவுடைமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிரானது எனக் கொள்ளலாம். அவர்களின் வழி, அவர்களை ஆதரித்த நாயக்க அரசர்களுக்கும் எதிர்ப்பு காட்டப்பட்டது. இவ்வெதிர்ப்பு வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டது எனலாம். ஆனால் அரசு ஊழியர்களின் தில்லுமுல்லுகள், ஏமாற்றுக்கள் பொய்க்கணக்கு எழுதுதல் போன்றன நேரிடையாக ஒளிவு மறைவின்றி விமரிசிக்கப்பட்டன.

====================================
குறிப்புக்கள் :

1. H.J. Laski, ‘The State: The Theory and Practice’. p.21.

2. A. Krishnaswami, ‘The Tamil Country under Vijayanagar’, pp. 179 - 180.

3. பணவிடு தூது, (மேற்கோள்), சி.ரகுநாதன், ‘சமுதாய இலக்கியம்’. பக். 81 - 82.

4. ‘பாளையப்பட்டுக்களின் வரலாறு -, ப. 76. ப.10.

5. மேலது.

6. ராமய்யன் அம்மானையில் ‘சில மேற்கோள் குறிப்புக்கள்’ என்ற தலைப்பில் சில

பாடல்கள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. அவை தரும் செய்திகள். ப. 89

7. கு. ராஜய்யன், ‘தமிழக வரலாறு 1565 - 1967’, ப. 40.

8. R. Sathyantha Aiyar, ‘History of the Nayaks of Madura’, p. 180

9. T.V. Mahalingam, South Indian Polity’, p.62

10.R. Sathyanatha Aiyar, op.cit., p.178

11. பாளையப்பட்டுக்கள் வரலாறு - I, பக்.24, 49.

12. ராமய்யன் அம்மானை, ‘ சில மேற்கோள் குறிப்புக்கள்’, பக். 88-89

13. R. Sathyanatha Aiyar, op.cit., p.180.

14. நா. வானமாமலை, ‘ஐவர் ராசாக்கள் கதையின் வரிகள் 560 -563 - க்கு எழுதிய குறிப்புரை

15.R. Sathyanatha Aiyar, op.cit., p.180.

16. Ibid.

17.A. Krishnaswami, op.cit., pp. 104- 105.

18. கார்ல் மார்ஸ், ‘மூலதனம் 1:11:4, (மேற்கோள்), ரஜனி பாமிதத் ‘இன்றைய இந்தியா’ பக்.130 - 131.

19. கார்ல் மார்க்ஸ், (பிரெடெரிக் எங்கெல்ஸ்), ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ‘இந்தியாவைப் பற்றி’, ப. 21.

20. பணவிடுதூது (மேற்கோள்), சி. ரகுநாதன், முற்குறிப்பு, ப. 81.

21.R. Sathayanatha Aiyar, op.cit., p.184.

22. T.V. Mahalingam, ‘Administration and Social life under Vijayanagar - I’, pp. 49 - 50.

23. Ibid., p.43.

24. பாளையப்பட்டுக்களின் வரலாறு - I ப.126.

25. கு. ராஜய்யன், முந்நூல், ப.39.

26.R. Sathyanatha Aiyar, op.cit., p.183

27.Ibid.

28.R. Sathyanatha Aiyar. ‘Tamilaham in the 17th Century’,

29. பணவிடுதூது (மேற்கோள்), சி. ரகுநாதன் , முந்நூல்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்