கிறிஸ்துமஸ் மாதத்தில்..

அமெரிக்காவிற்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. அமெரிக்காவிலும் கனடாவிலுமாக ஆறுமாதங்கள் இருப்பது என வந்து இறங்கியது நவம்பர் கடைசியில். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் காலம். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை கடுங்குளிர் காலம். அடுத்து வருவது வசந்த காலம்; மார்ச் முதல் மே வரை. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிற்குள் வரும் இந்தியச் சுற்றுலாவாசிகள் பெரிதாக விரும்புவதில்லை. குறிப்பாகப் பிள்ளைகளுடனும் பேரன் பேத்திகளுடனும் இருப்பதற்காக வரும் மூத்த குடிமக்கள் அதிகம் விரும்புவதில்லை. அவர்களால் இந்தக் கடுங்குளிரைத் தாங்க முடியாது என்பதும், அதைத் தாங்கும் குளிராடைகளோடு பயணிக்க முடியாது என்பதும் ஒரு காரணம்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் பள்ளிப்படிப்பில் இருக்கும் பேரன், பேத்திகளோடு அவர்களுக்குக் கிடைக்கும் நீண்ட விடுமுறையில் சேர்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் போட்ட திட்டம் இந்தப் பயணம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஈஸ்டர் நிகழ்வுகளும் இந்தக் குளிர்காலத்திலும் வசந்தகாலத்திலும் தான் வருகின்றன. அதனால் நீண்ட விடுப்புக்காலங்களும் சுற்றுலாத்திட்டமிடல்களும் இந்தக் காலகட்டத்தில் இருக்கும். டிசம்பர் கடைசி வாரத்தில் வரும் கிறிஸ்துமஸ் நிகழ்வையும் அடுத்துவரும் புத்தாண்டையும் இணைத்தொரு நீண்ட விடுமுறைக்காலம் உண்டு. அடுத்த நீண்ட விடுப்பு மார்ச்சில் வரும் ஈஸ்டர் நிகழ்வுகளுக்கு. முதல் நீண்ட விடுப்பில் மகள் வழிப் பேரனோடு அமெரிக்காவில் இருக்கலாம். இரண்டாவது நீண்ட விடுப்பிற்கு மகன் வழிப் பேரன் பேத்தியோடு கனடாவில் தங்கலாம் என்பது இந்தப் பயணத்தில் போட்ட திட்டம்.

அமெரிக்காவின் டல்லஸ் போர்ட்வொர்த் ( DFW) விமான நிலையத்தில் இறங்கியபோது நேரம் 15.10. எனக்காட்டியது. நேரக்கணக்கீட்டில் முற்பகல், பிற்பகல் என்றெல்லாம் பார்க்கும் வாய்ப்பில்லை என்பதின் வழியாக இன்னொரு நாட்டில் நுழைந்துவிட்டோம் என்பது உணர்த்தப்பட்டது. இனி எங்கும் 24 மணி நேரக்கடிகாரங்கள் தான் கண்ணில் படும். அலைபேசியிலும் நேரம் மாறியிருந்தது; தேதியும் மாறியிருந்தது; நவம்பர் 17 என்றே காட்டியது. விமானத்தில் கிடைத்த இணைய வசதியைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் நவம்பர் 18 பிற்பகல் 02.40 எனக்காட்டியிருக்கும். தோஹா விமான நிலையத்திலேயே அந்த வசதியை அலைபேசிக்குள் ஏற்றிக் கொண்டதால் அதற்கேற்ப நேரமும் நாளும் மாறிக்கொண்டே வந்தது. சென்னை நேரத்திற்கும் டல்லஸ் நேரத்திற்கும் வித்தியாசம் 11.30 நிமிடம். இந்தியாவுக்குச் சூரியன் முன்பே வந்துவிடுகிறது. அமெரிக்காவிற்கு அரைநாள் பிந்தித்தான் வரும்.

நேரக்கடிகை மட்டுமல்ல; தூரக்கணக்குகளிலும் தட்பவெப்பக்கணக்குகளிலும் வேறு அளவீட்டு முறைகளே அமெரிக்காவில் பின்பற்றப்படுகின்றன. பிரித்தானியர்களும் பிரித்தானியக் காலனிய நாடுகளாக இருந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் பின்பற்றும் மெட்ரிக் முறையை அமெரிக்கர்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் ஆட்சியிலிருந்து முற்றிலும் விலகிவிட்டோம் என்பதைக் காட்ட வேறுமுறைகளையே பின்பற்றுகின்றார்கள். சாலைகளிலும் வாகனங்களில் இருக்கும் வேகமானிகளிலும் கிலோமீட்டர் அளவுகளைப் பார்க்க முடியாது; எல்லாம் மைல் கணக்குகள்தான். பொதுவான சாலைகளுக்கும் கட்டணச்சாலைகளுக்கும் வேகத்தில் மாற்றம் உண்டு. இத்தனை மைல் வேகத்தில் போகலாம் என்று சாலையோரப் பலகைகள் காட்டுகின்றன; நாம் பயணிக்கும் வாகனம் எத்தனை மைல் வேகத்தில் போகிறது என்றும் பார்த்துக்கொள்ளலாம். எண்களும் மில்லியன் கணக்குகள் தான்; லட்சங்களும் கோடிகளும் கிடையாது.ஆயிரம் வரை இரண்டிலும் பொதுதான். பத்தாயிரம் வருகின்றபோது ஒரு மில்லியன் ஆகிவிடும்.

தட்பவெப்பநிலையில் செல்சியஸ் முறைக்கு மாறாக ஃபாரன்ஹீட் அளவுகள். வந்திறங்கிய அன்று 87 -70 என்பதாக இருந்தது. அதிகளவு வெப்பம் 87 டிகிரி என்றால் குறைந்தளவு 70. இன்று 49- 26. இப்போது காலை 6 மணி-35 டிகிரி ஃபாரன்ஹீட்/1டிகிரி செல்சியஸ் எனக்காட்டுகிறது தட்பவெப்பக்கடிகை. இன்னும் சூரியன் வரவில்லை. சூரியன் வெளித்தெரிய 90 நிமிடங்கள் ஆகும்; இன்றைய சூரியனின் இருப்பு 07.30 முதல் 17.48 வரை. ஆகப் பகல் என்பது இன்றைக்குப் 10 மணி 18 நிமிடங்கள் மட்டுமே. இரவு 13 மணியும் 42 நிமிடங்கள் . எவ்வளவு மணி நேரம் தூங்கலாம் எனத் திட்டமிட்டுக்கொண்டு தூங்கி எழுவது அவரவர் உடலின் தேவை சார்ந்தது. எனது உடல் இரவில் ஐந்தரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து உறங்குவதில்லை. குறைந்தது 7 மணி நேரத்தூக்கம் வேண்டும் என்பதால் பகலில் தூங்கிச் சமப்படுத்திக்கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் பருவநிலையைக் காட்டும் கடிகையைப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒருநாளுக்குள் ஏற்படும் தட்பவெப்ப நிலைக்கேற்பவே ஆடைகள் அணியவேண்டியுள்ளது. வீட்டை விட்டு வெளியே கிளம்பும் நேரம், போகின்ற இடம் ஆகியனவற்றின் தட்பவெப்பத்தையும் பார்த்துக் கொண்டே நகர்வுகள் உள்ளன. பள்ளிக்குச் செல்லும் பேரனும் மருமகனும் அப்படித்தான் பார்க்கிறார்கள்; அதற்கேற்ப ஆடையுடுத்திக் கொள்கின்றார்கள். தேவையான ஆடைகளை உடன் எடுத்துச் செல்கின்றார்கள். மகளுக்கு வீட்டிலிருந்தே செய்யும் வேலை. நானும் மனைவியும் கூடக் காலக்கடிகையைப் பார்த்துக் கொள்ளவே செய்கிறோம். இந்தியாவில் போல காலை நடை அல்லது மாலை நடை என வழக்கப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நாளில் எந்த நேரம் அதிகபட்ச வெப்பநிலையும் காற்றடிக்காத தன்மையும் இருக்கின்றபோது ஒரு மணி நேரம் நடந்துவிட்டு வந்துவிடுகிறோம். அதற்கும் ஏற்ற ஆடைகளைப் பாதுகாப்பாக அணியத்தான் வேண்டும். குறிப்பாக நமது உடம்புக்குள் காற்று நுழையும் வாய்ப்புள்ள வாய், மூக்கு, காது போன்றனவற்றைத் திறந்து வைப்பது;மூடுவது என்பதில் கவனம் வேண்டும்.

இந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை தட்பவெப்பம் சுழியனுக்கும் கீழே போனது. கடந்த மூன்று நாட்களாகவே கடும் குளிர் இருக்கின்றது; இந்த வாரமும் தொடரும் எனக் காட்டுகின்றன கடிகைகள்.சுழியனுக்குக் கீழே போகும் தட்பவெப்பம் நான்கைந்து நாட்களுக்குத் தொடர்ந்தால் பனிப் பொழிவு இருக்கும். அமெரிக்காவின் வடமாநிலங்களில் பனிப்பொழிவு இருக்கின்றன . கனடாவில் பனிப்பொழிவு வெண்மை போர்த்தி இருக்கின்றது என்பதைப் பேரனும் பேத்தியும் படங்களாக அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். டல்லஸ் இருக்கும் டெக்சஸ் மாநிலத்திற்கு அந்த வாய்ப்பு குறைவு. என்றாலும் இந்த ஆண்டு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் என்று சொல்கின்றார்கள்.

ஆறுமாதம் இருக்கப்போவதால் உடனடியாகப் பல இடங்களுக்கும் போய்வரவேண்டும் என நினைக்கவில்லை. டல்லஸ் நகரின் முதன்மையான இடங்களைச் சென்றமுறை வந்தபோது பார்த்திருந்ததும் ஒரு காரணம். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாட்கள் ஒருமாதத்திற்கு முன்பே தொடங்குகின்றன. நவம்பர் 25 இல் பேரனும் மருமகனும் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் மரத்தையும் விளக்கையும் வீட்டின் முன்னறையில் வைத்தனர். நானும் சேர்ந்துகொண்டேன். செயற்கை இழைகளாலும் விளக்கொளியிலும் ஒளிரும் அந்தக் கிறிஸ்துமஸ் மரம், ஜனவரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தது. திரும்பவும் எடுத்து வைத்துவிடுகின்றார்கள்.

கிறிஸ்துமஸை ஒட்டி உருவாக்கப்படும் நிகழ்வுகள் பெரும்பாலும் இந்தக் கால அளவுடன் விரிவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டையும் தோரண விளக்குகள் அலங்கரிக்கின்றன. அந்த அலங்கார விளக்குகள் வீட்டின் முப்பரிமாண நிலையையும் வடிவ நேர்த்தியையும் எடுப்பாகக் காட்டுகின்றன. வீட்டுத்தோட்டங்களில் இருக்கும் பொம்மைகள், தாவரங்கள், வாசல்கள் என எல்லாவற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன. கிறிஸ்துமஸ் கால விளக்குப் பொருத்துதலுக்கான ஒப்பந்தக் குழுமங்கள் இருக்கின்றன. அவர்களிடம் ஒப்படைத்தால் எல்லாவிதமான விளக்கலங்காரங்களையும் செய்துவிட்டுச் செல்கின்றார்கள். புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்தபின்பு அவர்களே வந்து எடுத்துச் சென்றுவிடுவார்களாம். அதற்கான வாடகைப் பணத்தை முன்பே பெற்றுக் கொள்கின்றனர்.

இந்தக் காலகட்டத்தைக் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று பங்கேற்கவும் வீட்டில் நண்பர்களோடு கொண்டாடி மகிழவும் பயன்படுத்துகின்றார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கப் பண்பாட்டோடு இணைந்துகொள்ளும் மற்ற நாட்டவர்களும் அந்தக் கொண்டாட்டத்தைத் தவற விடுவதில்லை. நாங்கள் இந்தியர்கள்;இந்துப் பண்டிகையென விநாயகர் சதுர்த்தியையும் தீபாவளியையும் கொண்டாடும் இந்தியர்கள்; ஆகவே ஆகவே கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டோமென நினைப்பதில்லை; கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யத் தவறவில்லை. நாங்கள் தமிழர்கள் எனப் பொங்கலைக் கொண்டாடும் தமிழர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடவே செய்கின்றனர். கிறிஸ்துமஸ் சமயப் பண்டிகை என்ற நிலை இல்லை; நாட்டின் கொண்டாட்டம் என்பதாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.மகள் வீடிருக்கும் சரென் ஏரிக்கரைப் பகுதி பலநாட்டு மனிதர்களும் இருக்கும் பகுதி. அமெரிக்கர்கள் குறைவு. இந்தியக்குடும்பங்கள் பலவும் இருக்கின்றன; தமிழ் பேசும் குடும்பங்களும் இருக்கவே செய்கின்றார்கள்.

இந்தக் கிறிஸ்துமஸ் மாதத்தில் இரண்டு விளக்கு நிகழ்வுகளுக்கும் (light Fest) ஆடைகள், பொருட்கள் வாங்குவதற்கெனப் பெரும் அங்காடிகளுக்கும் போய் வந்திருக்கிறோம். முதலில் போன விளக்கு நிகழ்வில் இறங்கிக் காலாற நடக்க முடியாது. இரண்டாவதில் காலாற நடந்து தான் பார்க்கவேண்டும். லிட்டில் எல்ம் (Little Elm) என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்குக் காட்சி நவம்பர் 7 முதல் ஜனவரி 4 வரை நடக்கும் கொண்டாட்டச் சிற்றுலாக் காட்சி. நாங்கள் போனது நவம்பர் 27. அந்தக் காட்சியில் சிற்றுலா செல்லக் கார் இருக்க வேண்டும். வரும்போது ‘உங்கள் குழந்தைகளையும் நாய்கள், பூனைகள் என வீட்டில் இருக்கும் சிறுசுகளை’ அழைத்துவாருங்கள்; மகிழ்ச்சியாகக் கண்டு களியுங்கள் என்றே விளம்பரங்கள் சொல்கின்றன

ஏரிக்கரை ஒன்றையொன்றை ஒட்டி வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒளிக்காட்சிகள், ஒளிக்கோபுரங்கள். தட்டையான, முப்பரிமாணப் பொருட்கள் எல்லாம் ஒளிக்கோர்வையாக இருந்தன. ஒரு நாளுக்கு இத்தனை வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. அதற்கு நுழைவு நேரம் சொல்லிப் பதிவு செய்ய வேண்டும். கார்களில் இருந்தபடியே பார்க்கவேண்டும். நுழைவு வாசலில் அந்தந்த நேரத்துக்கான வரிசையில் காத்திருக்கின்றன வாகனங்கள். ஒவ்வொரு வரிசையிலிருந்தும் கார்களை அனுப்பி வைக்கின்றார்கள். முதலில் நுழையும் இடம் ஒரு காட்சிக்கூடம். அங்கு பதிவைப் பார்த்துவிட்டு எப். எம். இணைப்பைத் தருகிறார்கள். அந்தக் காட்சிக் கூடத்தில் நிற்கும்போது மிட்டாய்கள், பாப்கார்ன், டோனட்ஸ் போன்ற தின்பண்டங்களை வாங்கிக்கொள்ளலாம். அதைத் தாண்டி விட்டால் கடைகள் கிடையாது.

ஒளிச்சட்டகங்களில் ஒரு கண்காட்சியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் ஒளிச்சட்டகங்களாக வைக்கப்பட்டுள்ளன. கடல், மலைப்பகுதிகள் போன்ற இயற்கைப் பகுதிகளும் பொருட்களும் நகரம், தொழில், ராணுவம், கல்வி போன்ற செயற்கைப் பகுதிகளும் பொருட்களும் ஒளிச்சட்டகங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சில மில்லியன் விளக்குகளால் ஆன காட்சிகள். நமது வாகனம் நகரும் வேகத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எப். எம்மிலிருந்து வரும் இசைக்கும் நாம் செல்லும் இடத்திலிருக்கும் ஒளிவடிவத்தின் வெளிச்ச அளவுக்கும் ஒரு ஒத்திசைவு இருக்கிறது. இசைக்கேற்ப ஒளிக்காட்சி மாறுகின்றன. காட்சிப் பாதையில் ஒரு வாகனத்தின் பின் இன்னொரு வாகனம் என்றுதான் நகர முடியும். மொத்தத்தில் 30 -40 நிமிட நேரத்தில் நகர்ந்து பார்த்துவிடலாம்.
 
இரண்டாவது விளக்குக் காட்சிக்கு- திருவிழாவுக்குப் போனது டிசம்பர் 12. வெள்ளிக்கிழமை, 20.00 மணி. மறுநாள் விடுமுறை என்பதால் இரவில் அந்தச் சிற்றுலா. டல்லஸ் நகரத்தில் இருக்கும் கிரேப்வைன் (Grafewin) பகுதியைக் கிறிஸ்துமஸ் நகரம் எனச் சொல்கின்றார்கள். கட்டடங்களும் மரங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாய்க் காட்சி அளிக்கின்றன. அங்கே உயரமான கோபுரங்கள் கொண்ட தேவாலயங்களும் விளக்கொளியில் மிளிர்கின்றன. அந்தப் பகுதியின் பெருந்தெருக்களில் சூரியன் மறைந்து இருள் கவியத் தொடங்கும்போது போக்குவரத்து நிறுத்தப்படுகின்றது. வாகனங்களைத் தூரமாக இருக்கும் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு நடந்தே போகவேண்டும்.

எல்லாக் கடைகளும் திறந்திருக்கின்றன. பண்டிகைக்காலக் கொண்டாட்டங்களாகச் சின்னச்சின்ன விளையாட்டுகள் இருக்கின்றன. அவரவர்களுக்கான விருப்பப்படி நடந்தும் ஆடியும் குதித்தும் திரியும் மனிதர்களைக் காண முடிகின்றது. குதிரைச்சவாரி, குழந்தைகளுக்குப் பொம்மைக் கார்ப்பயணங்கள், சுற்றிச்சுற்றி வரும் பொம்மை ரயில்கள் என விரியும் காட்சிகள் சித்திரைத் திருவிழாவுக்கென தமுக்கம் மைதானம் தயாராகும் காட்சிகளாக இருந்தன. ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஒரு பெரும் வீதியில் நடந்து படங்கள் எடுத்துக்கொண்டு பனிக்கூழ் கலவையை ருசித்துவிட்டுத் திரும்பியபோது நள்ளிரவு 23.30.

இரண்டு சிற்றுலாவுக்கும் இடையில் ஒரு நீண்ட வாரவிடுமுறை வந்தது. அதற்குள் தான் நன்றி தெரிவிக்கும் நாளும் (Thanks giving) அடக்கம். அமெரிக்காவிலும் கனடாவிலும் கொண்டாடப்படும் ஒரு சடங்கு நிகழ்வு அது. வட அமெரிக்க நிலத்தின் பூர்வகுடிப்பண்பாட்டிலிருந்து எடுத்துக்கொண்ட நிகழ்வு. முதன் முதலில் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகளுக்குப் பூர்வகுடிகள் வழிகாட்டி உதவியிருக்கிறார்கள். உணவு கொடுத்தும் பழச்சாறு கொடுத்தும் விருந்தினர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நன்றி தெரிவிக்கும் நாள் குறித்துப் பல கதைகள் சொல்லப்பட்டாலும் அதன் தொடக்கம் கி.பி. 1621 பிளிமத் ஒப்பந்த நாளிலிருந்து தொடங்குகிறது என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. அமெரிக்காவிற்குள் தங்களை ஏற்றுக்கொண்ட பூர்வ குடிகளுக்கு நன்றி சொல்லும் அந்த நிகழ்வின் நினைவாகவே இப்போதும் நன்றி சொல்லும் நாள் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கர்கள் நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமையையும் கனடியர்கள் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடுகின்றனர். ஒருவிதத்தில் தமிழ்நாட்டின் தைப்பொங்கலைப் போல அறுவடை நாளாகவும் இருக்கின்றது. நன்றி சொல்லும் நாளையொட்டி விடுமுறை. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து விருந்துண்டு நன்றி சொல்கிறார்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொருவருக்கும் பரிசுப்பொருட்களைப் பரிமாறிக் கொள்கின்றார்கள். பொங்கலை அடுத்துவரும் காணும் பொங்கலன்று பொங்கல் பணம் கொடுப்பது போல இருக்கின்றது இந்தப் பரிசுகள் பரிமாற்றம். முன்னோர்களுக்கு சொல்லும் நன்றி விருந்தில் வான்கோழிக்கறி உணவு சிறப்பானது; முழு வான்கோழி சமைக்கப்பட்டுப் பிரித்துக் கொண்டு உண்கிறார்கள். ஆடு கோழி பலியிட்டுக் கிராம தெய்வங்களை வணங்கும் கிராமப்புற மக்களைப் போல வான்கோழிகளைக் கறி படைத்துக் கொண்டாடுகின்றனர். அதிகமான வான்கோழிகளைப் பலியிடுவதற்குப் பிராயச்சித்தமாக அமெரிக்காவின் உயர் அதிகார இடமான வெள்ளை மாளிகையில் இரண்டு வான்கோழிகள் கண்காட்சிகளுக்கு அளிக்கப்படும் நிகழ்வும் நடக்கிறதாம்.

நன்றி சொல்லும் நாளில் அரசாங்க அலுவலங்கள், கல்வி நிறுவனங்கள் தொடங்கித் தனியார் நிறுவனங்களும் அங்காடிகளும் விடுப்பில் இருக்கின்றன. அதே நேரம் அன்றிரவு 12 மணி முதல் பேரங்காடிகள் எல்லாம் சிறப்பு விற்பனைகளைத் தொடங்குகின்றன. சலுகைகளை அறிவிக்கின்றன. முதலில் வருகின்றவர்களுக்கு இலவசம் என அறிவித்துத் தொடங்கும் கடைகளில் வரிசை கட்டி நிற்கின்றார்கள். ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கடைகளில் அளிக்கப்படும் ஆடிக்கழிவு போலத் தான் நடக்கின்றன. முதலில் துணிக்கடைகளில் தொடங்கிய சிறப்புக்கழிவுகள் இப்போது எல்லாவகை வியாபாரங்களுக்கும் பரவிவிட்டன. சில நாட்களுக்கு வழங்கப்பட்ட ஆடிக்கழிவு இப்போது மாதக்கணக்கில் உள்ளன. ஆனால் இங்கே நன்றி அறிவுப்பு நாளுக்குப் பிந்திய சிறப்புத் தள்ளுபடிகள் ஒருநாள் மட்டும்தான். அதனால் கூட்டம் அலைமோதுகின்றது.

நாங்கள் ஆலன் என்ற பகுதியில் உள்ள பேரங்காடி வளாகங்களுக்குப் போய் வேடிக்கை பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் சில துணிகள் வாங்கிக் கொண்டு திரும்பினோம். வரும் வழியில் பலசரக்கு உள்பட வீட்டுபயோகப்பொருட்கள் அனைத்தையும் தரும் காட்ஸ்கோவிலும், இந்தியக் கடைகளிலும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். நாங்கள் போன ஆலன் புறநகர் வளாகத்தில் உலகம் முழுவதும் இருக்கும் பேரங்காடிகள் ஒவ்வொன்றும் காட்சி -விற்பனைக் கூடங்களை நிறுவியிருக்கின்றன. அவரவருக்குத் தேவையான துணிமணிகளையும் காலணி, உடல் அலங்காரப் பொருட்கள் எனச் சலுகை விலையில் வாங்க அந்த நாளைப் பயன்படுத்துகின்றார்கள்.

உலகமயத்தின் காரணமாக ஐரோப்பிய, ஆசியநாடுகளும் பொருட்களைக் கொண்டு வந்து குவித்துள்ளன. அன்றைய விற்பனையைப் பயன்படுத்திக் கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும் தரும் பரிசுப்பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். நன்றியைப் பரிசுப்பொருட்கள் கொடுத்துக் கொண்டாடுவதில் அதிக விருப்பத்தோடு இருக்கிறார்கள். எல்லாக் கொண்டாட்ட நாட்களையும் சடங்குகளையும் முதலாளியப்பொருளாதாரம் நுகர்வோரின் ஆசையின் விழைவுகளை நிறைவேற்றும் நாளாக மாற்றி வைத்திருக்கின்றதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இந்தியக்கோயில்களும் திருவிழாக்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதனைச் செய்தன என்பதைப் பெருங்கோயில் கல்வெட்டுகளும் சொல்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்