சந்திரா ரவீந்திரனின் செம்பொன்: சாட்சியம் சொல்லும் எழுத்து


 

கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் / நிகழ்த்திக் காட்டும் நாடகக்கலை மேடையில் தோன்றும் வரலாற்றுப்பாத்திரங்களைக் கூட நிகழ்காலத்திற்குரியவர்களாக மறுவிளக்கம் செய்தே மேடையேற்ற முயல்கிறது என்பார்கள் அரங்கவியலாளர்கள்.


சேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தை வெவ்வேறு மொழிகளில் ஐந்து இடங்களில் பார்த்துள்ளேன். ஐந்து மேடையேற்றங்களும் அந்தந்த மொழிக்குரியனவாகவும், அம்மொழி சார்ந்த பண்பாட்டுக்குரியன போலவும், மேடையேற்றப்பட்ட காலத்தோடும் தொடர்பு கொண்டனவாகவும் மேடையேற்றப்பட்டன. இப்படிக் “கடந்த காலத்தை நிகழ்காலத்திற்குரியதாக மாற்றுதல்” என்பது அரங்கியலுக்கு மட்டும் உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது இலக்கிய வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை என்ற மூன்றுக்கும் உரியது என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு எழுத்தாளர்களும் அவர்களது நிகழ்கால மனிதர்களுக்கான பனுவல்களை உருவாக்கும் வேலையையே முதன்மையாகக் கருதுகிறார்கள். அதே நேரம் உருவாக்கப்படும் ஒவ்வொரு பனுவலும் உருவாக்குபவரின் கடந்த காலத்தையும், அவர் வாழும் சமூகக்குழுவின் கடந்த காலத்தையும் சேர்த்தே அந்தப் பனுவலுக்குள் உருவாக்குகின்றன. இப்படிச் சொல்வதைப் பலர் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொள்ளாதவர்களை மறுக்க வேண்டியதுமில்லை. வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் எழுத்தாளன் வாழும் குறிப்பான சமூகம் மட்டும் அல்லாமல், அவனது அறிவுப் பரப்புக்குள் வரும் அனைத்துச் சமூகங்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் சேர்ந்தே அந்தப் படைப்பை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தான் ஒரு பனுவலின் ஆசிரியனாக ஒருவரைக் குறிப்பிடுவதைப் பின் அமைப்பியல் ஏற்பதில்லை.
எழுத்து சார்ந்து இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறது. எல்லா எழுத்துகளுமே, நிகழ்காலத்தேவைக்காக எழுதப்படுகிறது என்பது அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் மறுக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், எழுதி முடித்த அந்தக் கணத்திலேயே அந்தப் பனுவல் கடந்தகாலத்தின் பகுதியாக மாறி விடுகிறது என்பதும் உண்மை அல்லவா? எழுதியவரிடமிருந்து வாசிப்பவரிடம் வந்துசேர்வதற்குள் அந்தப் பனுவல் கடந்தகாலப் பொருளாக ஆகிவிடுகிறது. அத்தோடு எழுதியவரின் எழுத்தை வாசகர்கள் அப்படியே வாசிப்பதும் இல்லை. அவர்களின் கவனம், பார்வைக் கோணம், சூழல் ஆகியவற்றோடு சேர்த்துத்தான் வாசிக்கிறார்கள்.

எழுதப்பட்ட பனுவலுக்குரிய கடந்த காலம் மட்டுமல்ல; ஒவ்வொருவரின் கடந்த காலமும் இரண்டு நிலைப்பட்டது. ஆண்டுக்கணக்குகளையும், அவ்வாண்டுகளில் வாழ்ந்ததாகச் சொல்லும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் குறிப்பாகச் சொல்லும் கடந்தகாலம் ஒருவகைக் கடந்தகாலம். இதனை வரலாற்றுக் காலம் என்கிறோம். ’இவர்கள் இருந்தார்கள்’ என்றும், ’இவர்களால் இவையெல்லாம் உருவாக்கப்பட்டன/செயல்படுத்தப்பட்டன’ என்றும், நாம் சான்றுகள் தந்து வரலாற்றுக் காலத்தை நிறுவமுடியும். இந்த வரலாற்றுக் காலத்திற்கு மறுதலையானது புனைவுக் காலம். அதுவும் கடந்த காலம் தான் என்றாலும், குறிப்பான காலம் ஒன்றைச் சுட்ட முடியாத தன்மையில் இருக்கக்கூடியது அந்தக் கடந்த காலம். இந்தப் பின்னணியில் கடந்த காலத்திற்குள் பயணம் செய்தல் என்பதை வரலாற்றுக் காலத்திற்குள் நுழைதல் எனவும் புனைவுக் காலத்திற்குள் நுழைதல் எனவும் பிரித்தே பேசவேண்டியுள்ளது.

உலக மொழிகளில் இருக்கின்ற இலக்கிய வடிவங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகக் கடந்த காலத்திற்குள் பயணம் செய்திருக்கின்றன. அப்படிப் பயணம் செய்வதன் மூலம், அதன் வடிவத்திற்கு ஏற்பக் கடந்த காலத்தைத் தனதாக்குகின்றன; அப்படித் தனதாக்குவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்கால வாசகர்களுக்கு நினைவூட்டுகின்றன அல்லது நிகழ்கால வாசகர்களைக் கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.கதை தழுவிய இலக்கிய வடிவத்திற்குள் கடந்த காலப்பயணம் தவிர்க்கமுடியாத ஒன்று. அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மூன்று காரணங்கள் முக்கியமானவை. மூன்றும் மூன்றுவித நோக்கங்களின் விளைவுகள்.

முதல்காரணம் எழுதியவர் சொல்ல நினைத்தவை சரியான விதத்தில் வாசகர்களைச் சென்றுசேர வேண்டும் என்ற படைப்பு நோக்கம் சார்ந்தது. எழுத்தின் நோக்கமே அவர்கள் வாழுகிற காலத்தின் சமூகப்போக்கோடு ஒத்துவாழும்படி வலியுறுத்துவதும், ஒத்துவாழாத நிலையில் அடையக்கூடிய துயரங்களைக் காட்டிப் பயமுறுத்தித் திசைமாற்றம் செய்வதும் தான். அந்தநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முந்திய காலத்து மனிதர்களை உதாரணங்களாக்கிப் பேசுவதுதானே சரியான உத்தியாக இருக்க முடியும். வாசகர்களுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு நிகழ்கால மனிதர்களை எடுத்துக்காட்டிப் பேசுவது என்பதைவிடக் கடந்தகால மனிதர்களை உதாரணங்களாக்கிப் பேசுவது எளிது என்பதைக் கருதி எழுத்தாளர்கள் கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதை முதன்மைக் காரணமாகக் கருதுகின்றனர். அப்படிக் கருதிப் படைப்புகள் செய்த படைப்பாளிகளே வெற்றிகரமான படைப்பாளிகளாக வரலாற்றில் வாழ்கின்றனர்: சிறந்த படைப்பாளிகள் எனக் கொண்டாடவும் படுகின்றனர்.

இரண்டாவது காரணம், தான் எழுதியதால் தனக்கு நேரக்கூடிய விளைவுகளை உத்தேசித்து எழக்கூடிய தற்பாதுகாப்பு சார்ந்த உள்ளுணர்வோடு தொடர்புடையது. தனது சமகாலத்தை எழுதும்போது எழுத்துக்குள் அதிகாரத்துவம் சார்ந்த நபர்களையும், நிறுவனங்களையும் படைப்பின் பகுதியாகக் கொள்ள நேரிடும். அப்போது விமரிசிக்கும் தன்மையும், விவாதிக்கும் தன்மையும் இயல்பாகவே வந்துவிடும். அதனால் எழுதியவர் நேர்த்தாக்குதலைச் சந்திக்க நேரிடும். நபர்களாலும் அமைப்புகளாலும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதைத் தவிர்க்கும் பொருட்டும் எழுத்தாளர்கள் கடந்த காலத்திற்குள் நுழைந்துகொண்டு நிகழ்காலத்தின் சாயலை உருவாக்குகிறார்கள்.

மூன்றாவது காரணம் கடந்த காலத்திலிருந்து பாடங்கற்றுக் கொள்ள முடியும் என்ற இலக்கியப் பார்வை சார்ந்தது. கடந்தகாலத்திலிருந்து ஒருவித மரபுத் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கருத்தியல் நோக்கம் அதற்குள் இருக்கிறது. அத்துடன் மரபிலிருந்து முன் மாதிரிகளை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பையும் தேடிக்கொள்ளலாம். இதனை இலக்கியவியலும் திறனாய்வுகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

******

செம்பொன், எனத்தலைப்பிடப்பட்டுள்ள இப்பனுவலுக்குள் எழுதப்பட்டுள்ள காலம் கடந்த காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை எல்லாம் வாசிப்பவர்களுக்குத் தரவில்லை நாவலாசிரியர் சந்திரா இரவீந்திரன். அதே போல் நாவலின் பரப்புக்குள் அடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளின் காலத்தை முன் பின்னாகக் குழப்பிப்போடவும் இல்லை. நிகழ்வுக்குள் பங்கேற்கும் பாத்திரங்களின் பெயர்களையும் அடையாளங்களையும் மறைத்துப் புனைவுத்தன்மையை அதிகப்படுத்தவும் இல்லை. அப்பாத்திரங்கள் அலையும் வெளிகளும் அரசியல் சார்பும் யூகித்து அறியும் விதமான குறியீட்டுத்தன்மையையும் கொண்டிருக்கவுமில்லை. எல்லாம் வெளிப்படையாக – நேரடித்தன்மையுடன் வரிசைக் குழப்பமின்றி நாவலுக்குள் தரப்பட்டுள்ளன.

இலங்கை என்னும் நாட்டுக்குள், தமிழ் மொழிபேசும் மனிதர்களுக்காகத் தனிஈழம் என்றொரு நாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு ஆயுதம் தாங்கிப்போராடிய போராளி இயக்கங்களில் முதன்மையானது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கத்துப் பெடியன்களைப் பாத்திரங்களாக்கி, அவர்களின் செயல்பாடுகளால் அந்தப் பகுதியில் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதை எழுதிக்காட்டியுள்ள இந்த நாவலின் முதன்மையான வெளி வடமராட்சி, பருத்தித்துறை நகரம். தான் பிறந்த நகரமான பருத்தித்துறை மண்ணில் முழுச்சுதந்திரத்துடன் ஓடித்திரியும் நாளொன்று வரும் என்ற பெருவிருப்பம் கொண்ட சாலா என அழைக்கப்பட்ட் சாலினி என்ற இளம்பெண்ணின் பார்வைக்கோணத்தில் விரியும் நாவலின் நிகழ்வுக் கால அளவு மூன்று ஆண்டுகள் (1986 – 1989). நாவலின் முதல் பத்தி இப்படித்தொடங்குகிறது:

        1986, என்ற வெள்ளி எழுத்துக்கள் இன்னமும் அச்சு அழியாமல் அப்படியே             இருந்தன. பழுப்பேறிப்போன பச்சைநிற அட்டையின் மையத்தின் வெயில்          வெளிச்சம் படும்போது அவை மினுங்கிக் கொண்டு கிடந்தன.

மொத்த நிகழ்வுகளையும் தனது புறக்கண்களின் காட்சி வழியாகவும் அகக்கண்ணின் எண்ண ஓட்டங்களாகவும் விவரிக்கும் சாலா, மூன்று ஆண்டுக்கால நாட்குறிப்புகளை 32 அத்தியாயங்களில் விவரிக்கிறாள். அந்த விவரிப்பின் வழியாக முதன்மையாக அவளை அறிகிறோம்.அவள் விவரிக்கும் பருத்தித்துறை நகரத்தின் நிலவியலை அறிகிறோம்; உணவுமுறைகள், வழிபாடுகள், அன்றாட வாழ்வின் பாடுகள் என அந்த நிலவியலின் வாழ்வியலை அறிகிறோம். இந்தக் காட்சிகள் ஒருவிதத்தில் எனக்கு நேரடிக் காட்சிகளும் கூட. (எனது முதல் பயணத்தின்போது -2016 இல் இந்த நகரத்தில் நண்பர் குலசேகரத்தோடு இருந்துள்ளேன். யாழ்ப்பாணக் குடாநாட்டின் துறைமுக நகரமான பருத்தித்துறையின் சாலைகளையும் முதன்மையான இடங்களையும் , இந்நகரிலிருந்து இந்தியப் பெருங்கடலின் வழியாக இந்திய நிலைப்பரப்பிற்குப் படகுப்பயணமாக வந்துபோகும் வாய்ப்புள்ள விதத்தையும் அவரது சொற்களால் கேட்டுள்ளேன்)

நாவலின் கதைசொல்லியான சாலாவை பற்றிய அறிதல் என்பது, ‘ஆயுதப்போராட்டத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒரு குடும்பத்தின் பெண் பிள்ளை என்பது முதன்மைத் தகவல். தமிழீழ விடுதலைப்புலிகளே தனி ஈழத்தைப் பெற்றுத்தரப்போகின்றவர்கள் என்பதில் முழுநம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பத்தின் கதையை அவளே சொல்கிறாள். அப்படிச் சொல்வதின் வழியாகக் களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளின் வீரத்தையும் தாக்குதல் உத்திகளையும், நிர்வாக நடைமுறைகளில் செய்த சீர்திருத்தங்களையும் நிகழ்காலத்து மனிதர்களுக்குக் கடத்த நினைத்துள்ளார்.

நாவல் தொடங்கும்போது இனவாத அடிப்படையில் தமிழர்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள ராணுவத்தின் வன்முறைகள், அத்துமீறல்கள், பொதுமனிதர்கள் சந்தித்த இன்னல்கள் எனக்காட்டி, அவற்றைப் புலிப்போராளிகள் அடக்கியதையும் தாக்குதல் நடத்திக் கட்டுக்குள் கொண்டுவந்ததையும் விவரிக்கிறது. ஆனால் முடியும்போது நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதாக முடிகிறது. பருத்தித்துறை நகரம் திரும்பவும் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது எனவும், பல இடங்களில் புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் எனவும் தகவல்களைத் தருகிறது. ஆனாலும் திரும்பவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகப் புதிய போரணி ஒன்றைக் கட்டிச் சிங்கள ராணுவத்திற்கு அச்சமூட்டினார்கள்; அந்தப் புதிய போரணி கரும்புலிகள் என்னும் தற்கொலைப் படையணி என்பதாக முடிகிறது.

கரும்புலிகளின் தாக்குதலை நிறுத்தும்பொருட்டு, சிங்கள அரசு, பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டதையும், பேச்சு வார்த்தை இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடந்து, நம்பிக்கையூட்டும் தீர்மானங்கள் ஏற்பட்டன என்பதையும் உரையாடல்களாகக் காட்சியுள்ளது. ஆனாலும் தனியீழமே ஒரே தீர்வு என்ற தீவிரத்தன்மையால் ஏற்பட்ட முரண்கள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை என்பதோடு நாவலின் நிகழ்வுகள் முடிந்துள்ளன. அப்படி முடிக்கும்போது இந்திய அமைதி காக்கும் படையின் வருகையினால் பின்னர் ஏற்பட்ட அழிவுகளையும் துயரங்களையும் முன்னரே உணர்ந்து எழுதிய பாவனையோடு நிறைவுபெற்றுள்ளது. நாவலின் மூன்றாண்டுக் காலக் கணக்குக்குள் வராத முதல் அத்தியாயம், இந்திய அமைதி காக்கும் படையாலும் சிங்களத்தரப்பாலும் காயம் பட்ட சகோதரர் ஒருவரை யாழ்ப்பாண மருத்துவ மனையில் பார்த்துவிட்டு, புலம்பெயரும் சாலா அடுத்த இயலிலிருந்து கடந்த கால நினைவுகளுக்குள் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் நாவலை வாசிப்பவர்களையும் உடன் பயணிக்கச் செய்கிறாள்.

தனது 20 -வது வயதில் -1983 ஆம் ஆண்டில் சாலினி தொழில்நுட்பக்கல்லூரியில் கல்வி கற்கத் தொடங்கியவள் என்ற குறிப்பைக் கொண்டிருக்கும் முதல் அத்தியாயம் சில ஆண்டுக்கணக்குகளைத் தந்துள்ளது. தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தில் 1983 ஜூலை 23 கறுப்பு தினம் எனக் குறிக்கப்படும் நாள்; ஒருவிதத்தில் ஆயுதப்போரின் தொடக்கநாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.வெலிக்கடைச் சிறையில் ராணுவத்தால் ஏவப்பட்ட சிங்களக் காடையர்களால் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்றவர்களின் கொடிய மரணத்திலிருந்துத் தமிழர்களை ஆயுதப்போரின் பக்கம் நகர்த்திய நிகழ்வு. இந்தக் குறிப்பு மட்டும் அல்லாமல் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஆண்டுக் கணக்குகளும் குறிப்பான தேதிகளும் சேர்ந்து இந்த நாவலுக்கு நம்பகத்தன்மையை உண்டாக்குகின்றன. அந்த நம்பகத்தன்மை, நாவலில் எழுதப்பட்டுள்ளவையெல்லாம் புனைவுகள் அல்ல; சாலாவின் நேரடிப்பார்வையில் நடந்தவை அல்லது அவளுக்குத் தெரிந்த நம்பகமான ஆட்களால் சொல்லப்பட்டவை என்பதை உறுதிசெய்யும் நோக்கம் கொண்டவை. அதற்கு உதவும் விதமான சொல்முறையையும் மொழிநடையும் உத்திகளையும் கையாண்டிருக்கிறார் சந்திரா ரவீந்திரன்.

*****

தனியீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக நாவல்கள் எழுதப்படுகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் எழுதும் நாவல்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாக இருக்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்துள்ளேன். அந்த நாவல்களிலிருந்து இந்தச் செம்பொன் வேறுபடும் தன்மைகள் சில உள்ளன. அவற்றை சுட்டிக்காட்டுவது இந்த முன்னுரையில் அவசியம் என நினைக்கின்றேன்.

நாவலின் முதன்மையான களமாக வடமராட்சி/பருத்தித்துறையை அமைத்துக் கொண்டுள்ளது. இந்தத்தேர்வு மூலம் ஈழப்போர்ப் பின்னணி நாவல்களில் வட்டாரத்தன்மை கொண்ட நாவலாக இருக்கிறது செம்பொன். அதன் மூலம் போராளிகளின் மைய அமைப்பு, வட்டார அமைப்போடு கொண்டிருந்த தொடர்புகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கை போன்றவற்றை ஓரளவு அறிய முடிகிறது. ஒரு ரகசிய அமைப்பாகவும் தலைமறைவு இயக்கமாகவும் கொரில்லா யுத்தம் நடத்திய அமைப்பின் போர்முறைகள் வெளிப்படுத்தும் நோக்கம் இதில் நுட்பமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

வீரம் செறிந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் காட்டிய முனைப்பையும் திறனையும் மகிழ்ச்சியோடு விவரிக்கும் பகுதிகளுக்கு இணையாகவே போர்க்காலத்தில் குடிமைச்சமூக நடைமுறைகள் எவ்வாறிருந்தன என்பதையும் நாவலாசிரியர் எழுதிக்காட்டுகின்றார். சிங்கள ராணுத்தின் நடவடிக்கையால் அரச காரியங்கள் ஆற்றும் பணியாளர்களும் அதிகாரிகளும் ராணுவத்திற்குக் கட்டுப்பட வேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள் என்பதைப் பருத்தித்துறைக் கோர்ட் நடவடிக்கைகளை விவரிப்பதின் வழியாகவும், மக்களுக்கு உணவுப்பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையைக் காட்டுவதன் மூலம் எழுதிக்காட்டியுள்ளார்.

அரசு அதிகாரிகளாகவும் சாதாரணப் பணியாளர்களாகவும் சிங்களப் பகுதியில் பணியாற்றிய தமிழர்களும், தமிழ்ப்பகுதியில் பணியாற்றிய சிங்களப் பணியாளர்களும் சந்தித்த நெருக்கடிகள், அச்சவுணர்வு போன்றனவற்றை விரிவாகத்தருகின்றது நாவல். குறிப்பாகச் சாலாவின் தந்தை பாத்திரத்தின் நேர்மை, திறமை, சிங்களப் பணியாளர்களோடு இருந்த நட்பு, மனிதநேயம் போன்றனவற்றை எழுதுவதின் மூலமாக போர்க்காலத்தின் மாற்றுச் சித்திரங்களைத் தந்துள்ளது நாவல். சிங்களம் அறிந்த தமிழர்கள், தமிழ் அறிந்த சிங்களர்கள் என இரு சாராருக்குமே சில நெருக்கடிகள் ஏற்படுவதை வாசிக்க முடிகிறது. பருத்தித்துறையின் கோர்ட் வளாகத்தில் தற்காலிகப்பணியிலிருந்து நிரந்தரப் பணியின் பொருட்டுச் சாலா, யாழ்ப்பாணக் கச்சேரிக்கு நகர்கிறாள். அந்த நகர்வின் வழியாக, யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்வியல் போக்குகளை விமரிசனப்பார்வையோடு எழுதியிருக்கிறார். அரசு அதிகாரிகளாக இருந்த தமிழர்களின் நேர்மை, பணியில் ஈடுபாடு காட்டும் திறன் என்பன அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தன என்பதைச் சொல்வதோடு, அவர்களின் மனநிலைகள் அரசாங்கத்திற்கும் விடுதலைப்போராளிகளுக்கும் இடையே தவிப்பில் இருந்தது என்பதைச் சொல்கிறது. இதற்கு முன்பு நான் வாசித்த புனைகதைகள் இதற்குள் எல்லாம் நுழையவே இல்லை. அவையெல்லாம் போர்க்களத்தை மட்டும் எழுதும் ஒற்றை நோக்கத்தோடு எழுதப்பட்டனவாக இருந்தன. ஆனால் இந்த நாவலின் ஆசிரியருக்கு, நாவலின் களமான பருத்தித்துறைப் பகுதியின் நிலவியல் பண்பாட்டைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததைக் காட்டுகிறது.

இந்தியத் தமிழர்களைவிடவும் பெண்களின் கல்வியிலும் பணிவாய்ப்புகளிலும் முற்போக்கான பங்களிப்பை உறுதிசெய்த யாழ்ப்பாணத்தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த பெண்களின் ஆடம்பர வாழ்க்கை, அரசியலற்ற மக்களின் போக்கு, சுயநலமான மனிதர்களின் இயல்புகள் என்பனவற்றைச் சாலாவோடு பணி செய்தவர்களின் நடவடிக்கைகளைச் சொல்வதின் வழியாக விவரித்துள்ளார். ஒரு இளம்பெண்ணாக சாலா தான் சந்தித்த ஆண்களின் மனங்களை நகைச்சுவையோடும் அங்கதத்தோடு கடந்துபோகிறவளாக இருக்கிறாள். அரசியல் உணர்வுகொண்ட தன்னை முழுமையாக அறிந்துகொள்ளாமல், காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் காட்டிக் கொண்டவர்களின் இயல்புகளை எழுதும் பகுதிகளில் வெளிப்படும் எள்ளலும் அங்கதமும், போர்க்காலப் பின்னணி நாவலை வாசிப்பதிலிருந்து விலகலை உண்டாக்கி வாசிப்பின் இறுக்கத்தைத் தளர்த்தியுள்ளது.

தனது குடும்பமும் தானும் ஏற்றுக்கொண்ட போர்க்கால வாழ்க்கையின் துயரத்தை மட்டுமே எழுதாமல், அதற்குள் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை எழுதியுள்ள பகுதிகள் மிகமிக முக்கியமானவை. அந்த மகிழ்ச்சியும் சேர்ந்தே இந்த நாவலை எழுதத்தூண்டின என்ற குறிப்பையும் நாவலின் முதல் அத்தியாயத்தில் தருகிறார் சந்திரா. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்குள் நுழைந்த தருணத்தை,

“இந்தக் குளிர்மையை எத்தனை நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கிறேன்? அண்ணா, சின்னண்ணா, அக்கா, தங்கச்சிமார், தம்பிமார் என எல்லோருமாய், இந்தத்தரையில் அமர்ந்திருந்து... ஒருவரோடொருவர் உரசியபடி எத்தனை நாட்கள் பேசிக்களித்திருப்போம்..! அம்மா தரும் சுவையான எள்ளுப்பாகுவை ஒரு கடி கடித்து, அம்மா ஆற்றித்தரும் ஆட்டுப்பால் தேநீரை ஒரு உறிஞ்சல் உறிஞ்சி. அந்நேரம் பார்த்து யாரோ ஒரு பகிடி சொல்ல, யாரோ ஒருவர் கிண்டலடிக்க, குபுக்கென்று தேநீர் வாயிலிருந்து குமுறிப்பாய .. வீடே குலுங்கும்படி இந்தத்தரையில் விழுந்து புரண்டு எத்தனை நாட்கள் சிரித்து மகிழ்ந்திருப்போம்.”

என்ற உணர்வுக்கலவையான மொழிநடையில் எழுதும்போது ஒரு கையறுநிலை வெளிப்பட்டாலும், அந்தக் காலம் தந்த மகிழ்ச்சியும் சேர்த்தே வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மகிழ்ச்சியின் மையமாக இருந்தது அந்தக் குடும்பத்தின் அன்னை என்பதை நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரக்கூடும். ரஷ்யப்புரட்சியின் சாட்சியாக இருக்கும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் ‘நீலவ்னா’விற்கு இணையான ஒரு தாயை – எப்போதும் துயரத்தை வெளிக்காட்டாத அன்னையின் அன்பைச் சந்திரா எழுதிக்காட்டியிருக்கிறார். ராணுவத்தினரின் வருகையையும் தேடுதல் வேட்டையையும் அம்மா எதிர்கொள்ளும் விதமும், அவளோடு சேர்ந்து அவரின் கணவர் காட்டும் நுட்பமும் போராளிகள் இயக்கத்தை ஆதரித்த குடும்பங்களின் வகைமாதிரியாக இருக்கிறது.

குடும்பத்திலிருந்து இரண்டு இளைஞர்களைப் போராளிகளாக்கிவிட்டு, அவர்களின் எதிர்காலம் பற்றிய எண்ணங்களின்றி/ பயமின்றித் தனிநாட்டுக் கோரிக்கையின் நியாயங்களை முழுமையாக ஏற்றுக் கொண்ட குடும்பமாகத் திகழ்கிறது. அத்தோடு அந்தக் கோரிக்கையை நிறைவேற்றப்போகும் தலைமையாகப் பிரபாகரன் ஒருவரே திகழ்ந்தார் என்பதையும், அவர் மீது ஒவ்வொருவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் இருந்தது என்பதையும் நாவல் எழுதிக் காட்டியுள்ளது. அதற்கெனவே எழுதப்பட்ட காட்சி ஒன்றில் சாலாவின் மனத்தை உணர்ச்சியின் கொந்தளிப்பாக எழுதியுள்ளார் சந்திரா. புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து திரும்பி வந்தபோது தலைவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த அந்தத் தருணத்தையும் தனது சகோதரர்கள் செய்த வீரஞ்செறிந்த போராட்டக்காட்சிகளைக் காணும்போது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பும் சந்தேகமில்லாத போராளியின் மனநிலை. அந்த நேரத்தில் சாலாவும் போராளியின் மனநிலைக்குள் இருந்தாள் என்பதாக வாசிக்க முடிகிறது.

****

1983 கறுப்பு ஜூலையில் தொடங்கி முள்ளிவாய்க்கால் பேரழிவோடு முடிவுற்ற தனியீழத்துக்கான போரில் ஒரு காலப்பகுதியை -மூன்று ஆண்டுகளை வெட்டி எடுத்து, இப்படித்தான் நடந்தது எனத் தக்க சாட்சியங்களோடு முன்வைக்கும் செம்பொன் நாவல், மிகக்குறைவான உரையாடல்கள் வழியாகவும், இதெல்லாம் சரித்தானா? என்ற உள்ளோடும் கேள்விகளோடு நிகழ்காலத்தோடு உரையாட நினைத்துள்ளது. அதற்கான குறிப்புகளாகச் சில ஒப்புதல் வாக்குமூலங்கள் நாவலில் உள்ளன. ஈழத்துக்கான ஆயுதப்போரில் மற்ற இயக்கங்களைச் செயல்பட விடாமல் புலிகள் தடுத்தார்கள்; அழித்தொழித்தார்கள்; அதற்கான காரணங்கள் அவர்களுக்கு இருந்தன என்பதைப் போதுமான காரணங்களோடு நிறுவவில்லை என்றாலும், அப்படி நடந்ததைப் போகின்ற போக்கில் மறுக்காமல் ஒத்துக் கொணுடுள்ளது. அப்படி ஒத்துக்கொள்ளும் மனநிலை புலித்தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இருந்தன என்பதைவிட, எல்லாவற்றையும் தனது பார்வையில் சொல்லும் சாலாவிற்கு இருந்தது என்பதாக உரையாடல்கள் எழுதப்பட்டுள்ளன. தன்னுடைய சாயலைத் தந்து எழுதியுள்ள சந்திரா என்னும் எழுத்தாளரின் கேள்விகள் இவை என நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கேள்விகள் தமிழ்தேசிய அரசியல் வரலாற்றோடு தொடர்புடையன. ஈழ அரசியலில் -யுத்தகால அரசியலிலும் தேர்தல் கால அரசியலிலும் - உச்சரிக்கப்படும் “துரோகிகள், ஒத்தோடிகள்” போன்ற சொல்லாடல்களின் பயன்பாடுகளோடு தொடர்புடையன. அவை எல்லாக் காலங்களிலும் விளங்கப்படுத்தப்படாதவை என்பது தனியாகப் பேசப்படவேண்டியவை. இந்த நாவலுக்குள் அதனை எதிர்பார்க்க வேண்டியதில்லை.

பேரா .அ.ராமசாமி, மதுரை

2025, ஜூன், 26

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

பேரா. சே. ராமானுஜம்: இந்தியப் பெருவெளியில் பயணம் செய்த தமிழ் அரங்கியலாளர்