நுழைவும் இருப்பும்- அயல் பயணத்திற்கான முன் தேவைகள், புரிதல்கள்


எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முதலில் தேவை அந்த நாட்டுத் தூதரகம் மூலம் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அனுமதி (Visa) தான். அதற்கு முன்தேவையாக நமது நாட்டரசு வழங்கும் கடவுச்சீட்டு (PASS-PORT)இருக்கவேண்டும். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவருக்கு இந்தியக்குடி என்பதற்கான ஆதாரம். அதில் இடம்பெறும் முகவரி, பிறந்தநாள், பெற்றோர் விவரம் போன்றன சோதிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகிறது. முதல் வெளிநாட்டுப் பயணம் 2011 நான் பாஸ்போர்ட் பெற்ற ஆண்டு 2005. தான் என்றாலும் மனைவிக்கு 2007 விண்ணப்பித்துப் பெற்றோம். இரண்டுமே 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு பெறப்படும் கடவுச்சீட்டின் காலம் 5 ஆண்டுகள். கடவுச்சீட்டு இருக்கும் நிலையில் இன்னொரு நாட்டுக்குச் செல்ல முறையான அழைப்போ, சுற்றுலாத் திட்டமோ இருந்தால் குடிநுழைவு பெற விண்ணப்பிக்கலாம்.

முதல் பயணத்திற்குக் (2016 மே-ஜூலை) கல்விசார்ந்த நோக்கம் இருந்தது. டொரண்டோ நகரத்து யார்க் பல்கலைக்கழகத்தில் ஈழப்போர்க்கால எழுத்துகள் குறித்தொரு கட்டுரை வாசிக்க அழைப்பு இருந்தது. ஆண்டுதோறும் டொரண்டோவில் நடக்கும் ஈழம் -புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கட்டுரை வாசிக்க வரும்படி நண்பர் கவிஞர் சேரன் அழைத்துக்கொண்டிருந்தார். போலந்து, வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைப் பேராசிரியராக இருந்தபோதே கட்டுரை அனுப்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 மே மாதம் நடந்த கருத்தரங்கிற்குப் போக ஏற்பாடுகள் செய்தேன். ஆனால் குடிநுழைவு அனுமதிக்கான முதல் கட்டத்திலேயே தடைபட்டுவிட்டது. வார்சாவில் என்னிடம் இந்திய அரசின் வெள்ளைக் கடவுச்சீட்டு (White Passport)இருந்தது. அந்தக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள்.அரசின் பிரதிநிதியாக ஒரு நாட்டிற்குள் இருப்பதற்காக அனுப்பப்பட்ட மனிதர்கள். நான் இரண்டு ஆண்டுகாலம் இந்திய அரசாங்கத்தின் விருந்துநிலைப் பேராசிரியராக அனுப்பப்பட்டவன். அந்தக் காலத்தில் போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் தமிழ் இருக்கைப் பேராசிரியர் என்னும் சிறப்புத் தகுதிக்குரியது அது. அதைப் பயன்படுத்தி ஐரோப்பாவை விட்டு வெளியே போய்த்திரும்பும் குடிநுழைவு அனுமதி (Visa) பெறுவது வழக்கமான நடைமுறையாக இருக்கவில்லை. என்னை வார்சா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்த மனிதவளத்துறை அமைச்சகம் வழியாக முயலவேண்டும். அதனைப் போலந்து நாட்டிலுள்ள இந்தியத்தூதரகம் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும். அதற்குப் போதிய கால அவகாசம் இல்லை. எனவே கனடாவிற்குச் செல்லவில்லை.
 
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து அதே கட்டுரையை விரிவாக்கி அனுப்பினேன். ஏற்றுக்கொண்டு அழைப்பு அனுப்பியது கனடா நாட்டின் டொரண்டோ யார்க் பல்கலைக்கழகம். அந்த அழைப்பு கிடைத்தவுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் இருந்த மகன் ராகுலனைத் தொடர்பு கொண்டு சொன்னேன். சொன்னவுடன் குடிநுழைவு அனுமதி பெறும் நடைமுறையில் அவன் சொன்னது ஏற்கத்தக்கதாக இருந்தது. யார்க் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் விண்ணப்பித்தால் கிடைக்கும் அனுமதி கனடாவில் குறுகிய காலம் மட்டும் இருப்பதற்கானதாக இருக்கும். அதற்குப் பதிலாகத் தனது முகவரியிலிருந்து தரும் அழைப்புக்கடிதத்தை இணைத்துச் சுற்றுலா அனுமதியைப் பெற்றுக் கொண்டால், அமெரிக்காவில் சுற்றுலாப் பயணியாக அனுமதிக்கப்படலாம். அந்த அனுமதி 10 ஆண்டுகளுக்கு உரியது. அதன் பின் கனடா தூதரகத்திற்கு விண்ணப்பித்தால் கனடாவின் அனுமதியும் உடனே கிடைத்துவிடும். அதுவும் 10 ஆண்டுகளுக்குரியது. இதற்குக் கருத்தரங்க அழைப்பைக் காட்ட வேண்டியதில்லை என்றான். அந்த யோசனையை ஏற்று அந்த நடைமுறையைப் பின்பற்றியே நுழைவு அனுமதிகளைப் பெற்றுக் கொண்டோம்.

மென்பொருள் பணியாளராக 2014 டிசம்பரிலிருந்து பாஸ்டனில் இருந்தான். அதன்படி முதலில் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்வது எனத் தீர்மானித்தோம். சென்னையிலிருந்த அமெரிக்கத் தூதரகத்திற்கு முதல் விண்ணப்பம். பல்கலைக்கழகப்பேராசிரியர், “கோடை விடுமுறையில் அமெரிக்காவைப் பார்க்க விரும்புகிறேன்; என்னோடு மனைவியும் வருகின்றார்; மகன் பாஸ்டன் நகரில் இருக்கின்றார்” என நேர்காணலில் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கினார்கள். டிசம்பர் 2015 இல் குடிநுழைவு அனுமதி கிடைத்தது. உடனே கனடியத் தூதரகத்திற்கும் விண்ணப்பித்தோம். அங்கும் அனுமதி கிடைத்தது. இரண்டுமே பல்நுழைவு (Multiple Entry Visa) அனுமதி. இரண்டாவது பயணம் 2023 இல். அப்போது மகள் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்தார்; மகன் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இருந்தார். அதனால் இரண்டு நாடுகளுக்குமே பயணம் செய்தோம். பத்தாண்டுகளுக்கான அனுமதி இருந்ததால் குடிநுழைவைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

மூன்றாவது பயணம் 2025 நவம்பர் அல்லது டிசம்பர் எனத் திட்டமிட்டபோது குடிநுழைவைப் புதுப்பிக்கும் தேவை ஏற்பட்டது. அதற்கு முன்னதாகக் கடவுச்சீட்டையும் புதுப்பிக்க வேண்டியிருந்தது. கடவுச்சீட்டுப் புதுப்பிப்பிற்குப் பின் டிசம்பர் வரை அனுமதி இருந்தாலும் நாம் உள்ளே நுழைவதிலிருந்து ஆறுமாதம் அனுமதிக்கப்பட்ட காலமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாததால் அமெரிக்க நுழைவுக்கு விண்ணப்பித்தோம். இந்த முறை சென்னையில் உள்ள தூதரகத்திற்குப் பதிலாகப் புது டெல்லிக்கு வரச்சொல்லிவிட்டார்கள். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக வந்தவுடன் அனுமதி வழங்குவதில் கெடுபிடிகள் காட்டினார். அந்தக் கெடுபிடிகள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. அத்தோடு அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பக் குழுமங்களிலும் வெவ்வேறு நாடுகளிலிருந்து குடியேறியுள்ள வணிகக்குழுமங்கள் தொடங்கியுள்ள வணிக நிலையங்களிலும் பணியாற்றச் செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதற்குமான கெடுபிடிகள். அமெரிக்க இளைஞர்களுக்குப் போட்டியில் இலகுதன்மையை உருவாக்க நினைத்துச் செய்யும் கட்டுப்பாடுகள். இத்தகைய கட்டுப்பாடுகளைத் தவறான அணுகுமுறை என்று சொல்ல முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் சுற்றுலாப்பயணிகளுக்குப் பாதிப்பில்லை; அதனால் புதுடெல்லிக்குச் சென்று உரிய ஆவணங்களை வழங்கிய இரண்டாவது வாரத்தில் நுழைவு அனுமதி வந்துவிட்டது.

 கட்டுப்பாடுகளும் சோதனைகளும்


பன்னாட்டு விமான நிலையங்கள் வழியாக ஒரே பயணமாகவும் இடையில் மாறிச் செல்லும் பயணங்களாகவும் இருக்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படையான சில செய்திகளை இங்கே சொல்லலாம் என்று தோன்றுகிறது. அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் விரிவாகவே சொல்லிவிடலாம். திரும்பவும் சொல்கிறேன். நம்மிடம் நமக்கேயான கடவுச்சீட்டு இருக்கவேண்டும். அதுதான் நமது அடையாளம். அதைத் தவறவிட்டால் விளையும் விளைவுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இப்படிப்பட்டவை தான் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஒருவருக்கு முதல் வாய்ப்பில் கடவுச்சீட்டு 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த வாய்ப்புகளில் ஐந்து ஐந்து ஆண்டுகளும் புதுப்பிக்கப்படுகிறது. முதலில் கவனிக்க வேண்டியது கடவுச்சீட்டு.நமது முகவரியில் இருக்கும் கடவுச்சீட்டு காலாவதியாகாமல் இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டே வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிட வேண்டும். நமது பயணக்காலம் வரையில் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனைப் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணச்சீட்டோடு உள்நுழைவு அனுமதிக்குப் பணம் கட்டி நுழைவு அனுமதி வாங்கவேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் விசாக்கட்டணம் மாறும். இந்தியர்களுக்கு கிளம்பியவுடன்- அடைந்தவுன் நுழைவு அனுமதி (On-Arrival Visa) நாடுகள் சில உள்ளன. இலங்கை, வங்காளதேசம் போன்ற சார்க் நாடுகளுக்கு அப்படிப் போகலாம். ஒவ்வொரு நாடும் என்னவகையான அனுமதிகளை வழங்குகின்றன என்று பார்த்து அதற்கேற்பத் திட்டமிட வேண்டும். சில நாடுகளில் இந்தியக் கடவுச்சீட்டு இருந்தாலே போதும் என்ற நிலையும் உள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஒரே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குச் சுற்றுலா அனுமதியை வழங்குகின்றன. ஐரோப்பாவிற்குச் செல்பவர்கள் ஏதாவதொரு நாட்டிற்கு அனுமதி பெற்றால் போதும். அங்கே நுழைந்து ஐரோப்பாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு இறங்கிய நாட்டிலிருந்து வெளியேறும்படி அனுமதி வழங்கும் நிலை உண்டு. அவ்விசாவிற்குச் ‘செங்கண் விசா’(Schengen visa ) என்று பெயர். அதைக்குறிப்பிட்டு வாங்கவேண்டும். அதே நேரம் பிரிட்டன் நாடு ஐரோப்பாவில் இருந்தாலும் அதற்குத் தனி விசா தேவை. உலக நாடுகள் பலவற்றில் பயணம் செய்ய அமெரிக்கக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதி இல்லாமல் பயணம் செய்யலாம்.

அடுத்ததாகப் பன்னாட்டு விமானம் ஒன்றில் பயணம் செய்து ஒரு நாட்டுக்குச் செல்லும் பயணி சந்திக்கும் நடைமுறைகளையும் தெரிந்து கொள்வது நல்லது. எனது அனுபவங்களிலிருந்தே இதனைச் சொல்கிறேன். விமான நிலையத்தின் உள்ளரங்கிற்குள் நுழையும் முன் அங்கே இருக்கும் காவலரிடம் நமது பயணச் சீட்டையும் கடவுச்சீட்டையும் காண்பித்தால் உள்ளே அனுமதிப்பார். அதற்குப் பிறகு நம்மை வழியனுப்ப வந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை.

விமானப்பயணத்தில், பயணிகள் இரண்டுவிதமான பொதிகளைக் கொண்டு போகலாம். ஒன்று கைப்பொதி; இன்னொன்று விமானப் பொருட்கள் அறைவழியாக வரும் பொதிகள் (Check -in luggages). இவற்றிலும் ஒவ்வொரு விமானக்குழுமத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. அதைத் தெரிந்துகொண்டு பயணச்சீட்டு வாங்கவேண்டும். அதிகம் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கேற்ற விமான சேவையைத் தேடவேண்டும்.

விமான நிலைய வாசலில் காவலர் அனுமதிக்குப்பின் நமது உடைமைகளை நாமே தள்ளிக் கொண்டு போகவேண்டும். இப்போது அனுமதி பெற்ற உதவியாளர்கள் கிடைக்கிறார்கள். அவர்களின் உதவியை முறையாகப் பணம் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் வயதானவர்கள், உடல் குறை உள்ளவர்களுக்குச் சக்கர நாற்காலி உதவுகளும் உண்டு. அதற்கும் தனியாகப் பணம் கட்ட வேண்டும். இவர்கள் நமது பெரும்பொதிகளை விமானக் குழுமத்தின் பொதியைப் பெறும் இடத்திற்குக் கொண்டுபோய் எடைபோட்டு அனுப்ப உதவுவார்கள். அங்குதான் போர்டிங் பாஸ் எனும் பயண அனுமதி அட்டை கிடைக்கும். அதுவரை பயன்பட்ட பயணச் சீட்டுக்கு அதன் பிறகு மதிப்பு இல்லை. அடுத்து எல்லாமே போர்டிங் பாஸ் தான். அதில் நமது பொதிகளின் விவரங்கள் குறியீடுகளாக அச்சிட்டுத் தரப்படும். நமது பயணத்திற்கான விமானம் எந்த வாசல் அருகில் இருக்கும்; நாம் அமரவேண்டிய இருக்கை எண் எது என்ற விவரங்கள் அச்சிடப் பெற்றிருக்கும். இவற்றையெல்லாம் இப்போது இணையம் வழியாகவே பதிவுசெய்து அலைபேசியில் வைத்துக் கொள்ளலாம். அதைக் காண்பித்துப் பொதிகளை அனுப்பிவிட்டு உள்ளே நுழையலாம். அலைபேசியைத் திறக்க இணைய வசதி வேண்டும் என்பதால் அச்சிட்ட தாள்கள் கையில் இருப்பது நல்லது. மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்குப் போகவேண்டிய பயணத்தில் ஒருமுறை இணையம் திறக்காமல் சிக்கல் ஏற்பட்ட அனுபவம் எனக்குண்டு உண்டு.

இதற்குப் பிறகு பயணிகள் சந்திக்கும் இடம் பாதுகாப்புச் சோதனைகள். கைப்பொதியை உள்நுணரிப்பதிவுக் கருவி மூலம் ஸ்கேன் செய்து அனுப்புவார்கள். அதில் கத்திரி, பிளேடு போன்ற கருவிகளுக்கு அனுமதி இல்லை. அவற்றை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். அதேபோல் தண்ணீர் பற்பசை போன்ற திரவப்பொருட்களுக்கும் கூட அனுமதி இல்லை. அவற்றில் நச்சுப்பொருட்கள் இருக்கலாம் என்ற எண்ணம். முன்பெல்லாம் உணவுப்பொருட்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கோவிட் நோய்க்காலத்திற்குப் பிறகு நீரையும் உணவுப்பொருட்களையும் அனுமதிக்கிறார்கள். ஆனால் அதனைப் பாதுகாப்புச் சோதனையில் அனுமதிக்க வேண்டும். இப்போதும் நீரை அனுமதிப்பதில்லை..


உடல் பரிசோதனையில் சத்தம் எழுப்பும் ஸ்கேனர்கள் வழியாக நுழைய வேண்டும். தேவைப்பட்டால் தனியிடத்திற்கு அழைத்துத் தடவிப்பார்க்கவும் வாய்ப்புண்டு. கைகளை உயரே தூக்க வேண்டும். இடையில் இருக்கும் கச்சை, காலில் போட்டிருக்கும் முழுக்கால் செருப்பு, நகைகள், போன்றவற்றைக் கழற்றிக் காட்ட வேண்டும். கணினி, அலைபேசி போன்ற மின்னணுக் கருவிகளைத் தனியாகப் பதிவு செய்வார்கள். பாதுகாப்புச் சோதனை ஒவ்வொரு விமானத்திற்குள் நுழைவதற்கும் உண்டு. அதில் அனுமதிக்காத பொருட்களைப் பெரும்பொதிகளில் போட்டு அனுப்பலாம். அதிலும் சில தடைகள் உண்டு. விதைகள், செடிகள், காய்கறிகள், பழங்கள் போன்றனவற்றை அனுப்ப முடியாது. தானியங்களில் சிலவற்றிற்கு சில நாடுகளில் அனுமதி உண்டு; சில நாடுகளில் அனுமதி கிடையாது. நமது நாட்டுக்கும் நாம் செல்லும் நாட்டிற்கும் இடையே இருக்கும் வணிக நிலையோடு தொடர்புடையன அவை. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பொதிகளைக் கட்டவேண்டும்.

பாதுகாப்புச் சோதனை முடிந்து உள்ளே போய் நமது விமானத்திற்குரிய அழைப்பு வாசல் எதுவெனத் தெரிந்துகொண்டு அதன் அருகில் அமர்ந்துகொள்ளலாம். பொதுவாக விமானம் கிளம்புவதற்கு 15 நிமிடம் வரை உள்ளே அனுமதிப்பார்கள். அங்கேயும் கடவுச்சீட்டு, போர்டிங் பாஸ் சோதனையிடப்படும். பாதுகாப்புச் சோதனைக்குப் பின் வெளியே வரமுடியாது. நேரம் இருந்தால் உள்ளேயே சுற்றிப் பார்க்கலாம். அங்கு விற்கும் பொருட்களை விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடலாம். ஆனால் விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் விலையைப் போல பலமடங்கு இருக்கும். ஆனால் மதுபானங்கள் விலைகுறைவாக இருக்கும். அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் இல்லை என்பதால் அந்த விலைக்குறைப்பு. அங்கு விற்கப்படும் பொருட்களை எடைபோடாமல் கைப்பையில் எடுத்துச் செல்லலாம். முழுமையாக அரசின் கட்டுப்பாட்டின் இருந்தபோது கிடைக்காத சலுகை ஒன்றை இப்போது தனியார் குழுமங்கள் வழங்குகின்றன. விமான நிலையங்களுக்குள் இருக்கும் பலகாரக்கடைகளில் வாங்கும் தின்பண்டங்களை எடைக் கணக்கெல்லாம் பார்க்காமல் கைப்பையில் வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றன.
விமானம் கிளம்புவதற்கு முன்பு வாசலில் ஒருதடவை கடவுச்சீட்டையும் பயண அனுமதிச் சீட்டையும் சோதிப்பார்கள். விசா இல்லாமல் பயணிகளை அனுமதித்தால் தவறு. இதனையெல்லாம் தாண்டி விமானத்தின் உள்ளே நுழைந்து நமக்கான இருக்கையில் அமர்ந்தவுடன் பயணிகள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள், ஆபத்து நடவடிக்கைகள், தப்பிக்கும் முறைகள் எல்லாம் சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு தடவை கவனித்திருந்தால், அடுத்த முறை கவனிக்கத் தோன்றாது. உள்ளிருந்து வரும் குரலுக்கேற்ப தங்கள் கைகளை அசைத்து நடித்துக் காட்டும் பணியாளர்களின் அசைவுகளையே நான் பெரும்பாலும் கவனித்துக் கொண்டிருப்பேன். அதிகமும் இத்தகைய பணிகளுக்குப் பெண்களையே விமானக்குழுமங்கள் பணிக்கின்றன. ஆண்களை பணி அமர்த்தும் நாடுகளும் உண்டு. ஐரோப்பிய விமானக்குழுமங்கள் இருபாலரிடமும் சமத்துவத்தைப் பேணுகின்றன,

நாம் செல்லும் விமானப் பயணத்தின் பயண நேரத்திற்கேற்ப விமானக் குழுமங்கள் உணவுப் பொருட்களைத் தருகின்றன. அதிலும் நாம் இறைச்சி உணவு, மரக்கறி உணவு எனத் தெரிவு செய்யலாம். பானங்களும் வழங்கப்படும். தேநீர், காபி போன்றனவும் பழரசங்களும் சிலவகை மதுபானங்களும் கிடைக்கும். ஒயின், பியர் போன்ற மென் பானங்கள் தான் கிடைக்கும். இவையும் விமானக் குழுமங்களின் நிலைபாட்டிற்கேற்ப மாறும்

சுற்றுலாவாகச் செல்லும் பயணிகள் நேரடியாக ஒரே விமானத்தில் ஏறிப் போக வேண்டிய நாட்டுக்குப் போய்விட்டால் அங்கேயும் சில நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். விமானத்திலிருந்து இறங்கியவுடன் உள்நுழைவு அல்லது குடிவரவு எனப்படும் இமிக்ரேசன் சோதனைகள் நடக்கும். நமது கடவுச்சீட்டு, விசா போன்றனவற்றின் உண்மைத்தன்மை விவரங்கள் சரி பார்க்கப்படும். அடுத்துப் பொருட்கள் பரிசோதனைகள் நடக்கும். அந்நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். அல்லது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் வாய்ப்புண்டு.

நாம் செல்லும் நாட்டிலிருந்து உறவினர்/ நண்பர்/ அலுவலகம் சார்ந்த அழைப்புப் பெற்றுச் சென்றால் நடைமுறைகள் வேறு. அதற்கான கடிதத்தைக் காட்டினால் போதும். அப்படி இல்லாமல் நாமே தனியாகப் போகும் சுற்றுலாப் பயணம் என்றால் எவ்வளவு நாட்கள் அந்த நாட்டில் இருப்பீர்கள்; எங்கெங்கு தங்குவீர்கள், எங்கெல்லாம் போவீர்கள் என்று விவரத்தைத் தேதியிட்டுச் சொல்லவேண்டும். தங்குமிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய பணம் இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். பொதுவாக அமெரிக்கப் பணமான டாலரில் வைத்திருப்பது நல்லது. அல்லது பன்னாட்டு வங்கிப்பரிவர்த்தனை வசதியோடு கூடிய அட்டைகள் இருந்தால் காட்டலாம். இவையெல்லாம் முடிந்து வெளியேறி அந்த நாட்டின் மண்ணை மிதிக்கலாம்; காற்றைச் சுவாசிக்கலாம். சுற்றித்திரியலாம். அனுமதிக்கப்பட்ட நாட்கள் வரை இருக்கலாம். குடிநுழைவுக்காலத்தையும் பயணச்சீட்டுப் பெற்றுள்ள காலத்தையும் தாண்டி ஒருநாள் கூட இருக்க அனுமதி இல்லை.
*****

கடவுச்சீட்டு, குடிநுழைவு அனுமதி எல்லாம் கிடைத்துவிட்டால் விமானக்குழுமத்தை முடிவு செய்து பயணச்சீட்டு பெறுவதைத் தொடங்கி விடலாம். பயணச்சீட்டுகள்,தங்குமிடம் உள்ளிட்ட சுற்றுலாத்திட்டங்களைச் செய்துதரும் இணையச்செயலிகள் பல உள்ளன. அவற்றின் உதவியோடு பயணச்சீட்டு வாங்குவது எளிமையாகிவிட்டது. அவற்றைப் பயன்படுத்தத் தெரியாதென்றால் இதனைச் செய்துதரும் சேவை மையங்களை நாடி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

எங்கள் பயணத்திற்கு தோஹா வழியாகச் செல்லும் கத்தார் ஏர்வேஸ் குழுமத்தில் முன்பதிவு செய்தோம். நவம்பரில் கிளம்பும் பயணத்திற்கு நான்கு மாதத்திற்கு முன்பு ஆகஸ்டில் முன்பதிவு. கிளம்பும் தேதிக்கு முன் 180 நாட்களிலிருந்து முன்பதிவு செய்யத்தொடங்குகின்றார்கள். எவ்வளவு முன்னதாகப் பதிவு செய்கின்றோமோ அவ்வளவுக்கு பயணத்தொகையில் சலுகைகள் இருக்கும். மதுரையிலிருந்து சென்னைக்கு ரயில் பயணம். சென்னையிலிருந்து தோஹா; தோஹாவிலிருந்து டல்லஸ். கத்தார் ஏர்வேஸ். முதல் பயணத்திலும் இதே வழிதான். அந்தமுறை அமெரிக்காவில் இறங்கியது பாஸ்டன் நகரம்.

இரண்டாவது தடவை கத்தார் ஏர்வேஸுக்குப் பதிலாகப் பாரிஸ் ஏர்வேஸில் பயணச்சீட்டு எடுத்ததற்குக் காரணம் பயணக்கட்டணம் குறைவு இருந்தது. அத்தோடு பிரெஞ்சு மண்ணை மிதிக்கும் ஆர்வமும் இருந்தது. வார்சாவிலிருந்தபோது பிரான்சிற்குப் போகும் விருப்பம் இருந்தும் நடக்கவில்லை. அதனால் அந்த வழியாகப் போகலாம் என்ற எண்ணம். இறங்கும்போதும் ஏறும்போதும் விமானத்திலிருந்தாவது பாரிஸ் நகரத்தைப் பார்க்கலாம் என்பது மனதின் விருப்பம். ஆனால் பாரீஸ் ஏர்வேஸ் பதற்றமும் ஏமாற்றமான அனுபவங்களைத் தந்தது என்பதால் திரும்பவும் இந்தமுறை கத்தார் ஏர்வேஸிற்குத் திரும்பினோம். இரண்டாவது பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லிவிட்டு இப்போதைய  பயணத்திற்கு வரலாம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்