பயணம் என்பதொரு பிரிவு
பயணங்கள் ஒருவித்தில் தொடக்கம்; இன்னொரு விதத்தில் பிரிவுகள். நமக்குப் பழக்கமான இடத்தில் புழங்கிக் கொண்டிருந்ததிலிருந்து விலகத் திட்டமிடுவதில் ஏற்படும் மனத்தயாரிப்பு பயணத்தை நேசிக்கத் தொடங்குகின்றது, புதிய இடத்திற்குள் நுழையத் தீர்மானித்துக் கொள்கிறது. ஏற்பாடுகளுடன் கிளம்பும்போது பழைய இடத்தைப் பிரிகிறது. பயணத்தைப் பற்றி எழுதுவதென்றால் பிரிவதில் தொடங்கிச் சொல்லத்தான் வேண்டும்.
பிரிவதென்பது இடத்தை, இடத்திலிருந்த தாவரங்களை, தாவரங்களிலிருந்த கொழுந்திலைகளை, மலராத மொட்டுகளை, பழுக்கத்தயாரான காய்களை, உதிரப்போகும் சருகுகளை, மியாவெனக் கத்திவிட்டு மறையும் பூனைக்குட்டியை, வாலாட்டி நிற்கும் நாயின் நெருக்கத்தை, ம்மாவெனக் குரலெழுப்பும் பசுவின் மடியை, போகும்போதும் வரும்போதும் கண்களைச் சுழற்றிவிட்டுச் செல்லும் பள்ளிச் சிறுமியை, அடித்த பந்தை விரட்டும் இளைஞனின் கைவிரல்களை, கணவரின் வருகைக்குக் கதவு திறக்கக் காத்திருக்கும் குறுக்குத் தெருப் பெண்ணை எனப் பிரியப்போகும் பட்டியல் பெரியது. வீட்டில் வளர்த்த செடிகளுக்குத் தண்ணீர் விடவேண்டும் என்ற கவலையிலிருந்து பல கவலைகள் தொற்றிக்கொண்டு உடன் பயணிக்கவும் செய்யும். எல்லாவற்றையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடும் பற்றற்ற மனம் ஒரு நெடிய பயணத்திற்கு முன் தேவையாக நிற்கின்றது.
இப்போது என் வீடிருக்கும் திருமங்கலம், முகம்மதுஷாபுரத்திலிருந்து மதுரை விமான நிலையம் 25 கிலோமீட்டரில் தான் இருக்கிறது. அது ஒரு பன்னாட்டு விமான நிலையமும் கூட. ஆனால் அமெரிக்கா போன்ற தூரதேச நாடுகளுக்குச் செல்லும் பயணத்தை மதுரை விமான நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதில் சிரமங்கள் உள்ளன. பன்னாட்டு விமானக்குழுமங்கள் தங்களின் நேரடிச் சேவைகளை இன்னும் மதுரை, திருச்சி, சேலம் கோவை போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தவில்லை. உள்நாட்டு விமானக் குழுமங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு ஒரே பயணம்போல ஆக்கும் வாய்ப்பைத் தருகிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் இந்தியாவுக்குள்ளேயே இன்னொரு விமான நிலையத்தில் அதிகநேரம் தங்கவேண்டும்.
மதுரை விமான நிலையத்திற்கு வரும் ஶ்ரீலங்கன் ஏர்வேஸ் மதுரைக்குத் தினசரி விமான சேவையை நடத்துகின்றது. தொலைதூர நாடுகளுக்குச் செல்லும் தென்மாவட்ட மனிதர்கள் இப்போதும் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் போன்ற பெருநகரங்களின் பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து தான் பிறநாட்டு விமானக் குழுமங்களின் விமானங்களைப் பிடிக்க வேண்டும். மதுரையிலிருந்து சென்னைக்கோ, பெங்களூருக்கோ போவதுதான் பக்கம். அங்கு இறங்கி வெளியில் போய்வர நேரம் இருக்காது. உள்ளேயே இருக்க வேண்டும். தூங்கி ஓய்வெடுக்கும் வாய்ப்புகள் குறைவு. கடைசி நேரத்தில் ஒரு நகரத்திலிருந்து அன்றைய சேவையை ரத்துசெய்துவிட்டு இன்னொரு நகரத்திலிருந்து கிளம்பும் விமானத்தைப் பிடிக்கச் சொல்வார்கள். அந்தப் பொறுப்பை அந்தக் குழுமத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த உள்நாட்டுக்குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்றாலும் திடீரென்று ஏற்படும் பதற்றம் அந்தப் பயணம் முழுவதும் தொற்றிக்கொள்ளும். அப்படி ஏற்பட்ட அனுபவத்தில் இதைச் சொல்கின்றேன். அதனால் இந்த முறை மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போய்விட்டு அங்கிருந்து நேரடியாகப் பன்னாட்டு விமானத்தைப் பிடிப்பது எனத் திட்டமிட்டோம்.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் டெக்சாஸ் மாநிலத்து டல்லாஸ் நகருக்குச் செல்ல நாங்கள் முன்பதிவு செய்த விமானக்குழுமம் கத்தார் ஏர்வேஸ். கத்தார் ஏர்வேஸின் தலைமையிடமான தோஹா வழியாகத் தினசரி விமானங்களைப் பல்வேறு நாடுகளுக்கு செலுத்துகின்றது. தோஹா நகரின் விமான நிலையத்தில் இறங்கி இணைப்பு விமானங்களைப் பிடித்து அடுத்துச் செல்ல விரும்பும் நாட்டிற்குச் செல்லலாம். இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலிருந்து தோஹாவிற்கு விமானங்கள் உண்டு.
மதுரை சந்திப்பிலிருந்து முற்பகல் 07.55 -க்குக் கிளம்பித் தாம்பரத்தில் பகல் 01.00 மணிக்கு நின்று கிளம்பும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலைப் பிடிக்க வீட்டிலிருந்து நவம்பர் 16 ஆம் தேதி காலை 6.30 -க்குக் கிளம்பி விட்டோம்.. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்ல வேண்டும். நாங்கள் பிடிக்க வேண்டிய விமானத்தின் நேரம் அதிகாலை 04.10. இடையில் 15 மணி நேரம் உண்டு. இரவு ஒரு மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குள் போகலாம். இடையில் இருந்த 12 மணி நேரத்திற்காக விமான நிலையம் அருகில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்க வேண்டும்.
பல்லாவரம்-பம்மல் பகுதியில் உள்ள எஸ்.டி. பார்க்லேன் என்ற விடுதியில் தங்கினோம். அந்த விடுதியின் அறைக்கட்டணத்தில் விமான நிலையத்திற்குப் பொருட்களை எடுத்து வந்து இறக்கிவிடும் வாகனக் கட்டணமும் அடக்கம். இதே வசதியுடைய விடுதிகள் விமான நிலையங்கள் பக்கமாக நிறைய உண்டு. எல்லாப் பன்னாட்டு விமான நிலையங்களைச் சுற்றியும் அத்தகைய விடுதிகள் உண்டு. இதற்குப் பதிலாக விமான நிலையத்தில் இருக்கும் பயணிகள் தங்கும் அறைகளிலும் கட்டணம் செலுத்தித் தங்கலாம். பெரும்பாலும் இணைப்பு விமானங்களைப் பிடிப்பவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்துவார்கள்.
*****
இந்திய மண்ணைத் தாண்டி அயல்நாடுகளில் அதிகமான நாட்கள் இருக்கப்போகும் இரண்டாவது நெடிய பிரிவு இது. இதற்கு முன் நீண்ட பயணப்பிரிவு வார்சாவில் இருந்த இரண்டு கல்வி ஆண்டுகள். அது பயணமல்ல. 2011 அக்டோபர் 8 தொடங்கி 2013 ஜூன் 10 வரையிலான 22 மாதங்கள் இருந்த நீண்ட வெளி நாட்டு வாழ்க்கை. அது. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்லும் மூன்றாவது பயணம் இது.சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா தரும் குடிநுழைவு அனுமதி ஆறுமாதங்கள். அதனை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு இந்தப் பயணத்தைத் திட்டமிட்டோம். 2025,நவம்பர் 17,டல்லாஸ் போர்ட்வொர்த் விமான நிலையத்தில் இறங்கும் இந்தப் பயணம், 2026 மே. 5 , சென்னை அண்ணா பன்னாட்டு முனையத்தில் இறங்கும்போது முடிவடையும்.
அமெரிக்காவிலும் கனடாவிலுமாக 170 நாட்களுக்குள் சுற்றுத்திரியும் இந்தப் பயணத்தை எழுதும் இந்தப் பனுவலுக்குள் இதற்கு முந்திய இரண்டு அலைவுகளும் இடம்பெறும். 70 நாட்கள் கொண்ட முதல் பயணத்திலும் 90 நாட்கள் கொண்ட இரண்டாம் பயணத்திலும் இதே அமெரிக்காவிலும் கனடாவிலும் சுற்றித் திரிந்தாலும் பல நேரங்களில் புதுப்புது இடங்களுக்குள் நுழைந்து திரிந்துள்ளேன். முழுமையான சுற்றுலாப் பனுவலாக மட்டும் எழுத நினைக்கவில்லை. பார்த்த இடங்களையும் கலந்துகொண்ட நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் பற்றிச் சொல்வதைத் தாண்டி இன்னும் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். மேற்கின் மேற்கான அமெரிக்காவையும் கனடாவையும் நான் புரிந்துகொண்ட பார்வைகளை முன்வைக்க நினைக்கிறேன். நான் என்பதற்குள் அங்கு சென்று நிரந்தரக் குடியுரிமையோடும் (கிரீன் கார்டு) தற்காலிகக் குடியுரிமைக்காரர்களாகவும் (ஒர்க் பெர்மிட் &சுற்றுலாப் பயணிகள்) அங்கு வாழும் மனிதர்களினின் எண்ண ஓட்டங்களும் மனப்பதிவுகளும் அடங்கும். இந்த நோக்கத்தில் இந்தப் பனுவலுக்கு கிழக்கும் மேற்கும் திசைகள் அல்ல. எனத் தலைப்பிட்டுக் கொள்கிறேன்.
கிழக்கின் வாழ்க்கை முறைமைகளை -இந்திய மனிதர்களின் வாழ்க்கையை மேற்கின் வெளிச்சத்தில் சொல்லப் போகிறேன். மூன்றாவது பயணமே நேரடி விவரிப்புக்குள் வரப்போகிறது என்றாலும், சுற்றுலாப்பயணிகளுக்கான விவரங்களைச் சொல்வதும் தேவையென நினைத்துள்ளேன். ஒவ்வொரு பயணத்திலும் கிடைத்த அனுபவங்களையும் சொல்லும் நோக்கமும் இருக்கின்றது. அதன் பொருட்டு முந்திய பயணங்களையும் பின்னோக்கி நினைத்துக் கொள்வதும் நடக்கவே செய்யும். முதலில் இந்தத் தலைப்பை ஒட்டிச் சிலவற்றைச் சொல்லிக் கொண்டு நகரலாம்.
********

கருத்துகள்