மனக் கண்ணாடிப் படிமங்கள்: சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல்


சுரேஷ் குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறை குற்றாலம் போக வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அந்தக் கதையை ஒரு தடவை வாசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

திருநெல்வேலிக்கும் குற்றாலத்திற்கும் அதிக தூரம் இல்லை. நேரடி வாகனமாக இருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். தென்காசியில் இறங்கிப் போனால் கூடுதலாக அரை மணிநேரம் ஆகும். திட்டமிடாத குற்றாலப் பயணங்கள் விதி விலக்கு. பல்கலைக்கழகப் பணி காரணமாக இப்போதெல்லாம் திட்டமிடாத பயணங்கள் பல ஏற்பட்டு விடுகின்றன. அவற்றைப் பயணம் என்று சொல்வதை விட பணிக்கான துயரம் என்று தான் சொல்ல வேண்டும்.

திருநெல்வேலியிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்துவிட்டுக் குற்றாலத்தின் பேரருவியைப் பார்க்காமலும், ஐந்தருவியில் குளிக்காமலும் திரும்பும் நிலையைத் துயரம் என்று சொல்லாமல், பயணம் என்று எப்படிச் சொல்வது.

வாங்கியபொருட்கள் அல்லது படித்த புத்தகங்களோடு சில ஊர்கள் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ள வேண்டும் என விரும்பிப் பலரும் அந்தப் பொருளோடு ஊரின் பெயரை எழுதி வைத்துக் கொள்வதுண்டு.

என் வசம் இருக்கும் சில நூல்களில் வாங்கிய தேதியோடு ஊரின் பெயரையும் சேர்த்து எழுதி வைத்திருப்பேன். அதற்கு அந்த ஊரின் மீதுள்ள பிரியம் என்று சொல்வதை விட அங்கு நடந்த நிகழ்வும், அங்கு சந்தித்த மனிதர்களுமே காரணமாக இருக்கும். சந்தித்த மனிதர்களின் முகங்களை நினைத்துக் கொள்ள அந்த ஊரின் பெயரும் அந்தத் தேதியும் காரணமாக இருக்கும்.

திரும்பவும் ஒருவரைச் சந்திக்க முடியாது என்று தோன்றுகிற போது அவரைச் சந்தித்த நிகழ்வும் நினைப்பும் தொடர வேண்டும் என்ற நோக்கம் தான் இந்த நினைவுக் குறிப்புகள். இத்தகைய நினைவுக் குறிப்புகளில் பலவும் ரகசியமானவை என்பதை ஒருவரும் மறுத்து விட முடியாது. சந்தித்த பெண்ணைத் திரும்பவும் சந்திக்க முடியாது என நினைக்கிற ஓர் ஆண், அவளைச் சந்தித்த வேளையில் அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஏதோ ஒரு பொருளை ரகசியமாகப் பொத்தி வைத்துக் கொண்டிருப்பான். இதன் மறுதலையாகப் பெண்களும் இன்னும் கூடுதல் ரகசியத்தோடு பாதுகாக்கவே செய்வர். தொல்பொருள் ஆய்வாளனைப் போல, பதின் வயதில் நண்பனோடு பயணம் செய்த பேருந்துப் பயணச்சீட்டைப் பாதுகாத்து வைத்திருக்கும் பெண்கள் அதை வெளியில் சொல்வதில்லை.

கண்ணாடி வளையல்களும், சருகாகிப் போன மல்லிகைப் பூக்களும் ஆண்களின் ரகசியப் பொக்கிஷங்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதைத் தந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்தால் இப்போதைய குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் கருதி மனப்பெட்டிக்குள் படிமமாக்கிக் கொண்டு பாதுகாப்பது மனித இயல்பாகி விட்டது.

ஆண்- பெண் ஈர்ப்பு என்னும் உயிரியல் இயல்பில் தொடங்கும் இந்த வினைகளைக் குறிக்க காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தும் வரை புனிதமானதாக ஏற்றுக் கொள்ளும் சமூக மனம், அதன் அடுத்த கட்ட நகர்வை அப்படி ஏற்பதில்லை. காதலின் தொடர்ச்சியான நகர்வுதான் காமமும் என்பதை இலக்கியங்களும், தத்துவவாதிகளும் சொல்லியிருந்தாலும், சமயமும், அறத்தை வலியுறுத்தும் போதனையாளர்களும் காமத்தைக் குற்றவுணர்வின் பாற்பட்டதாகக் காட்டி விடுதலில் தீவிரக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இலக்கியவாதிகள் – குறிப்பாகப் படைப்பாளிகள் காமத்தைக் குற்றவுணர்வின் பட்டியலிலிருந்து மீட்டெடுக்கவே முயல்கின்றனர். அதற்கான சாத்தியங்கள் மிகச் சிரமமானவை என்று தெரிகின்ற போதிலும் அந்த முயற்சியைக் கைவிடுவதில்லை.

சுரேஷ் குமாரின் விரித்த கூந்தல் கதை சரியான தொடக்கத்துடன் இருக்கிறது என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு கட்டுரையைப் போலத் தொடங்கி அந்த உரையாடலுக்கு நகர்த்திப் போகிறார். இனிக் கதையின் பகுதிகளை வாசித்துப் பார்க்கலாம்:

இவ்வளவு பெண்கள் விரித்த கூந்தலுடன் இருப்பது அவனுக்கு திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரித்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள்; நின்று கொண்டிருந்தார்கள்; நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர் வீழ்ச்சியில்( ஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் நீர் விழுந்து முகத்திலும் உடலிலும் வழிந்து கொண்டிருந்தது.
#####

விரிந்த கூந்தலுடன் நான்கு பெண்கள் தங்கள் ஆடவர்களுடன் அவனைக் கடந்து சென்றனர். சாலையோரத்த்தில் குஷ்டரோகி ஒருவன், காசு விழுந்த தகர டப்பாவை ஆட்டி ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். #####
அவன், தன் நண்பரிடம் விரிந்த கூந்தல் ஒரு குறியீடு போல தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். ‘ எல்லாம் நீங்கள் பாவித்துக் கொள்வதுதான்’ என்று நண்பர் கூறினார். ‘ விரிந்த கூந்தல் கோபத்தையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது’ என்றான் அவன். இருவரும் நடந்து ஒரு அடர்த்தியான மரநிழலின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்தனர். #######

நண்பர், அவனிடம் அவளைத் தற்போது அடிக்கடி சந்திப்பதுண்டா என்று கேட்டார். சந்தர்ப்பம் அடிக்கடி கிடைப்பதில்லை என்றும் அபூர்வமாக சந்தர்ப்பம் கிடைப்பதாகவும், அவன் பதில் கூறினான். அவளின் மணவாழ்க்கையைப் பற்றி நண்பர் விசாரித்த போது அவன், “ அவளின் பிடிவாதம் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல.
நண்பர் ‘விரித்த கூந்தல் உங்களைத் துரத்துவதாக நினைப்பது ஏன்?’ என்று கேட்டார். அவன் ஒன்றும் கூறவில்லை. நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப் படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை அதிர வைத்து அழைத்துச் செல்வதாகவே தோன்றியது.

###########
அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது. நண்பர் அந்தப் பெண்ணை கவனித்திருந்தாரா என்பதும், அவனுக்குத் தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் அப்போதுதான் அவர் கவனத்துக்கே வருவதாக இருக்குமோ என்று தோன்றியதால் அவன் மௌனமாகவே நடந்து வந்தான்.
பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்து தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள் கூட ஒரு தடவை ‘ நீங்கள் என்னிடம் சிக்கி விட்டீர்கள்’ என்று தன்னிச்சையாகக் கூறியிருந்தாள். ஆனால் தற்போதுள்ள மனோ ரீதியான உறவு இதையெல்லாம் பொருட்படுத்த இயலாத வகையில் மிகவும் சீரியசாக வளர்ந்து விட்டது. பால்ய காலத்தில் தன் மனம் தன்னிச்சையாக நாடிய ஒரு பெண்ணுக்க்கும், தனக்கும் ஸ்தூலமான உறவு ஏதும் நிகழவில்லை என்பதை இப்போது நினைத்துக் கொண்டான்.
எதிரே வந்த ஒரு குடும்பத்தினர் அவர்களைக் கடந்து சென்ற போது ‘ டி.வி. மகாபாரதம்’ என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. ‘ இது டி.வி.யில் மகாபாரதம் திரையிடும் நேரமா? ‘ என்று நண்பரிடம் கேட்டான். நண்பர் வாட்சைப் பார்த்து விட்டு ‘ஆமாம் ’ என்றார்.
விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் விளங்கி விட்டது போலவும் தோன்றியது. திரௌபதியின் விரித்த கூந்தல் நினைவுக்கு வந்ததே, அவன் தெளிவுக்குக் காரணம். ஓர் ஆஸ்திரேலியருக்கோ, ஓர் அமெரிக்கருக்கோ விரித்த கூந்தல், இவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்திய மரபின் பின்னணியில் தன்னையறியாது தன் மனதில் விரித்த கூந்தல் தொந்தரவு ஏற்படுத்துகிறது போலும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

தற்போது தன் மனம் லேசாகி விட்டது போல் அவனுக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான்.
ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் விரிந்த கூந்தலை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர் குளிக்கச் செல்ல, அவன் ஒரு மர நிழலில் உட்கார்ந்திருந்தான். நண்பர் குளித்து முடித்து ஆடையணிந்த சற்று நேரத்தில் பசி எடுக்கவே இருவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.
வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரித்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர். மலைப்பாதை முடிந்து சாலையை அடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தேருக்கு எதிர்ப்புறம் உள்ள திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தேர்ப்பக்கம் பார்வையைச் செலுத்தினான். தேரின் அருகில் ஏற்கெனவே இருந்த இடத்தில் அந்தப் பெண்ணைக் காணோம். நன்றாகப் பார்த்த போது பெரிய சக்கரங்களுக்கு இடையே தேரின் அடியில் அந்தப் பெண் காய்ந்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, ஒரு காலை மடித்து, மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருந்ததைக் கண்டான். சாலையில் தென்பட்ட பெண்களின் விரித்த கூந்தல் அவனுக்கு இப்போது பயத்தை ஏற்படுத்தியது.

இப்படி முடியும் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் விரித்த கூந்தல் கதை எனது குற்றாலப் பயணங்களோடு ஒட்டிக் கொண்டது கூட விநோதமான ஒன்று தான். 1990 இல் எழுதப் பட்ட அந்தக் கதையை வாசிப்பதற்கு முன்பே இரண்டு மூன்று முறை நான் குற்றாலத்திற்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் அருவிகளையும், அருவிகளில் குளிக்கும் மனிதர்களையும், குளித்து விட்டுத்திரும்பும் பெண்களையும் விருப்பத்தோடு பார்க்கவே செய்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் படித்த பின்பு பலவும் மறைந்து போகின்றன. அருவியும் விரிந்த கூந்தலும் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து கொண்டே இருக்கின்றன. நான் அதற்கான காரணங்களைத் தேடுவதில்லை; மனத்தின் படிமங்கள் எனத் தள்ளி வைத்து விடுகிறேன்.

அப்படித்தள்ளி வைக்க முடியவில்லை என்றால் தான் சிக்கல்.அந்தச் சிக்கல் சாதாரணச் சிக்கலாக இல்லாமல் மனச்சிக்கலாக மாறித் தொல்லையாய் விரிந்து விடும். குற்றாலத்தின் அருவிகளும் விரிந்த கூந்தலும் உண்டாக்கும் படிமம் தினசரி வாழ்வின் பகுதியாக மாறி விட்டால் வாழ்க்கை நரகமாக ஆவதையும், பைத்தியமாக ஆவதையும் ஒருவரால் தவிர்த்து விட முடியாது. குற்றால அருவிகள் பைத்தியக்காரர்களுக்கான வைத்திய வெளிகளும் கூடத்தான்.

காதல் என்ற சொல்லோடு இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே இணைத்து அர்த்தம் சொல்லும் அகராதிகள் இங்கே உருவானது எப்படி என்று தெரியவில்லை. அந்த வயதைத் தாண்டிய ஆண் – பெண் உறவைக் காமமாக்கிப் பார்க்கும் அர்த்தங்களையும் அந்த அகராதிகளே உண்டாக்கி வைத்துள்ளன. அகராதிகள் அச்சடிக்கப் பட்ட நூல்களாக நூலகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கும் என்று நினைக்க வேண்டியதில்லை. உருவம் அற்ற அலையும் புகையாகவும் அகராதிகள் சுற்றிக் கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை
.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I read ur bimbangal adaiyaalangal book...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்