வானவில்லால் வளைத்துக் கட்டலாம்- தன்னார்வப் பட்டறைகள் குறித்து
சிறுவர்களின் உலகம் கதைகளால் நிரம்பி வழியும் உலகம் எனப் பல நாடகக்காரர்கள் கண்டு சொன்ன உண்மை திரும்பவும் ஒரு முறை உறுதியாக்கப்பட்டது.
தன்னிடம் இருக்கும் ஏழு வண்ணங்களில் எது ஒன்றையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பாமல் தனிமைப்பட்ட வானவில் மீன் [Rainbow Fish] கதையை அவர் சொல்லத் தொடங்கினார். ஒரு நாடகக்காரனின் சொல்முறையோடு அந்தக் கதையைச் சொன்ன போனது பட்டறையில் பங்கேற்ற நாற்பத்தாறு சிறுவர்களில் ஒருவர் கூடக் கவனத்தை வேறு பக்கம் திருப்ப வில்லை என்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பகிர்ந்து கொள்ளாமல் செருக் கோடு திரிந்த வானவில் மீன், தனிமையின் துயரால் வாடித் தவறை உணர்ந்த பின்பு ஒவ்வொரு மீனிடமும் தானே வலியச் சென்று தனது வண்ணங்களின் பகுதிகளைப் பகிர்ந்து கொண்ட போது அந்தக் குளமே வானவில்லின் வண்ணங்களால் நிரம்பியது எனச் சொல்லி முடித்தார்.
சுவீடிஷ் நாட்டுப் புறக் கதையான வானவில் மீனின் கதையை அந்தச் சிறுவர்களுக்கு சொன்னவர் நடிகர் சண்முகராஜன். சொன்ன இடம் சிதம்பரம் நந்தனார் நாடகப் பள்ளியில் நடந்த ஒரு நாடகப் பட்டறையில். விருமாண்டி படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமாகியது தொடங்கி தமிழ் சினிமாவால் முரட்டு மனிதனாகவே காட்டப் பட்டுக் கொண்டிருக்கும் சண்முக ராஜன் கதை சொன்ன விதம் அவருக்குள் இருக்கும் நாடகக்காரன் என்னும் வேட்கையையும் தேசிய நாடகப் பள்ளியில் அவர் பெற்ற பயிற்சிகளையும் தமிழ்ச் சினிமா இன்னும் நீர்த்துப் போகச் செய்து விட வில்லை என்று காட்டியது.
நானும் கூட பத்தாண்டுகளுக்கு முன்¢பு பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப் பள்ளியில் பணி யாற்றிய நினைவுகளுக்குள் திரும்பவும் ஒரு முறை சென்று திரும்பினேன். நாடகப் பள்ளியின் வேலைத் திட்டத்திற்கு வெளியே புதிய அலையெனக் கிளம்பிய தலித் எழுச்சிக்காக நாடகங்கள் தயாரிப்பதற்காக இப்படித்தான் இரண்டு நாள், மூன்று நாள் எனப் பட்டறைகளை நடத்துவோம். அந்தப் பட்டறைகளில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்கள். ஒருவிதமான இடதுசாரி அரசியல் சித்தாந்தம் தெரிந்து அதை நம்பிக் காரியம் செய்தவர்கள். ஆனால் 2007 செப்டம்பர் 28-30 ஆகிய மூன்று நாட்களில் நடந்த இந்தப் பட்டறை அப்படியான முன் முடிவுகளும் நோக்கங்களும் அற்ற சிறுவர்களுக்கான பட்டறை. பத்து முதல் பதினாறுக்கும் இடைப்பட்ட வயதில் நாற்பத்தாறு மாணவர்கள் திரட்டப் பட்டிருந்தனர். ஆறு முதல் பத்துக்குள் படிப்பவர்கள்.
காட்டுமன்னார் குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமது பொறுப்பில் ஏற்பாடு செய்த அந்தப் பட்டறை தேர்தல் பிரசாரத்தின் போதும் வெற்றி பெற்ற பின்னும் அவரிடம் நான் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. வழக்கமான சட்டமன்ற உறுப்பினராக வலம் வராமல் கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டறைகள், கருத்தரங்கங்கள், கலைவிழாக்கள் என ஏற்பாடு செய்வது மூலம் தொகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவங்களை நீங்கள் நினைத்தால் தர முடியும் என்று சொல்லி வைத்தேன். அந்த கோரிக்கையை அப்போது நான் காலச்சுவடில் எழுதிய கட்டுரையிலும் [காட்சிகள் : கனவுகள்-தேர்தல் 2006] கூடப் பதிவு செய்திருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினராக ரவிக்குமாரின் செயல்பாடுகள் பல திசைகளிலும் கிளைபரப்பிக் கொண்டிருந்த நிலையில் அந்தக் கோரிக்கை மறந்து போயிருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சிதம்பரம் நந்தனார் பள்ளியில் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நாடகப் பட்டறையை நடத்துவது எனத் திட்டமிட்டதின் மூலம் அதை மறந்து விட வில்லை எனக் காட்டிவிட்டார்.
சுவாமி சகஜானந்தா அவர்களால் 1916 - தொடங்கப்பட்ட நந்தனார் பள்ளி இப்போது ஆண்கள் மேனிலைப் பள்ளி- பெண்கள் மேனிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகளாகச் செயல்பட்டு வருகிறது. அயோத்திதாசரின் சமகாலத்தவரான சுவாமி சகஜானந்தா சைவசமயம் சார்ந்த தலித் விழிப்புணர்வை முன் வைத்த ஒருமுன்னோடிக் கருத்தியலாளர் . கல்வியின் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வு அடிப்படையான சமூக மாற்றத்தோடு கூடிய விளைவுகளை உண்டாக்கும் என நம்பியவர். அவரால் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நிதி உதவியும் கவனமும் தாராளமாகக் கிடைத்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் முக்கியமான தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். காந்தியடிகள் இரண்டு முறை வருகை தந்த வரலாறு அதற்குண்டு. தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மிகத் தொன்மையானது என்ற நீண்ட வரலாறு கொண்ட அந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்த நிலையில் ரவிக்குமார் தனது கவனத்தை அதன் பக்கம் திருப்பி இருக்கிறார். அப்பள்ளியின் கணிணி மையத்தை மைய அரசின் அறிவியல் ஆலோசகர் ய.சு.ராஜனின் உதவியோடு மேம்படுத்தியபின் சிறப்பு வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தக் கவனத்தின் தொடர்ச்சியாக நாடகப் பட்டறையையும் அங்கேயே நடத்துவது என முடிவு செய்துள்ளதாக என்னிடம் சொன்னார்.
பட்டறையின் பயிற்சியாளர்களாக நானும் கூத்துப் பட்டறையின் தம்பிச் சோழனும் இருப்பது எனத் தீர்மானித்து அவரது வருகையை உறுதி செய்தேன். நிகழ்காலத்தில் அரங்கக் கலை சார்ந்த ஈடுபாட்டில் நம்பிக்கை தரும் இளைஞர் தம்பிச் சோழன். கூத்துப் பட்டறை தரும் பயிற்சிகளைத் தீவிரத்துடன் கற்று வரும் அவர், பயிற்சி அளிப்பதிலும் அதே தீவிரத்துடன் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். இருவரும் இணைந்து மூன்று நாள் பயிற்சிப் பட்டறையைத் திட்டமிட்டோம்.
முதலில் உடல் சார்ந்த பயிற்சிகளில் தொடங்கிக் குரல் பயிற்சிகளுக்குள் அழைத்துச் செல்வது அரங்கியல் பட்டறைகளில் பொது நடைமுறை. இதுபோன்ற இரண்டு மூன்று நாள் பட்டறைகளில் நிகழ்த்திக் காட்டுதல் என எதனையும் திட்டமிடுவதில்லை. ஆனால் இந்தச் சிறுவர்களுக்கு மேடையேறுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையையும் அளித்துவிட வேண்டும் என்பது எங்கள் திட்டமிடலின் பகுதியாக இருந்தது. ஏனென்றால் பட்டறையில் பங்கேற்கப் போகிறவர்கள் நாடகத்திற்கு முற்றிலும் புதியவர்கள். நாடகத்திற்கு மட்டும் அல்ல இந்த மாதிரியான சிறப்பு வகுப்புகளே அவர்களுக்குப் புதியன. எனவே அரங்க விளையாட்டுகளில் மிக எளிமை யானவற்றிலிருந்து தொடங்கிக் கதைகளின் வழியாக நாடகக் கட்டுமானத்திற்குள் சிறுவர்களை அழைத்துச் செல்வது என்பது எங்கள் வேலைத்திட்டமாக அமைந்தது. இந்தக் காரணத்துக்காகவே அந்தப் பட்டறையில் ஒரு பிரபலத்தையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என நினைத்த போது சண்முகராஜனின் நினைவு வந்தது. சண்முகராஜன் ஒரு விதத்தில் என்னுடைய மாணவர். நான் கேட்டவுடன் ‘’ஒரு நாள் முழுவதும் இருந்து பயிற்சியும் வழங்குவேன்’’ எனச் சொல்லிச் சம்மதித்தார். அதன்படியே வந்து பயிற்சியும் வழங்கினார்.
சிறுவர் நாடகத்திற்கான பயிற்சிப் பட்டறையைத் திட்டமிட்ட நாங்கள் கைவசம் பல கதைகளோடு சென்றோம் என்றாலும், போனவுடன் எங்கள் வசம் இருந்த கதைகளைத் தூக்கித் தூரப் போட வேண்டியதாகி விட்டது. முதல் நாளிலேயே அச்சிறுவர்கள் ஒவ்வொருவரிடம் பல கதைகள் இருப்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது. அந்தக் கதைகள் பலவகையிலும் நாடக நிகழ்வுகளாகப் பிரிக்கத் தக்க கதைகளாகவும் இருந்தன. அதைவிடவும் ஆச்சரியம், முதல் நாள் ஒரு கதையைச் சொன்னவரே அடுத்த நாள் அதைவிடவும் மேலான இன்னொரு கதையைச் சொல்லத் தயாராக இருந்தார் என்பதுதான். அவர்கள் சொன்ன கதைகளில் மூன்றைத் தேர்ந்தெடுத்து , மேடை நிகழ்வாக்குவது என முதல் நாளே தீர்மானித்து அதற்கென நேரம் ஒதுக்கி ஒரு புறம் ஒத்திகை களுடன் நாடகப் பயிற்சிகளை இணைத்தே நடத்தினோம்.
உடல் பயிற்சிகளில் தொடங்கிக் கதைகளைக் கேட்டுத் திரும்பவும் உடல் பயிற்சிகளுக்கூடாக அவர்களைப் புறச் சூழலிருந்து விலக்கிக் கொண்டு செல்லும் வேலையைத் தம்பிச் சோழன் சிறப்பாகச் செய்யக் கூடியவர். உடல் பயிற்சி என்பது எல்லா மனிதர்களின் நலவாழ்வுக்கும் தேவை என்றாலும் அரங்கியல் சார்ந்த உடல் பயிற்சிகள் வெறும் உடல் நலம் பேணும் பயிற்சிகள் அல்ல. ஒரு மனித உயிரி , உடலின் பகுதிகளைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் விடுவித்துக் காட்டி விளையாடச் செய்யவுமான அந்த பயிற்சிகள் உடலைக் கொண்டாட உதவும் பயிற்சிகள். அரங்கியல் பேராசான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தொடங்கி மேயர்ஹொல்டு, பெற்டோல்டு ப்ரக்ட் , அகஸ்டோ போவெல் வரைப் பலரும் அரங்கியல் பயிற்சிகளின் திரட்டுகளை உருவாக்கித் தந்துள்ளனர். அந்தத் திரட்டுகள் [Packages] உடலின் ஒரு பகுதியில் தொடங்கி மொத்த உடலுக்குமாகப் பரவிப் பின்னர் அந்தப் பரவலைக் குரலால் நிரப்பிக் குதூகலிக்கும் தன்மை கொண்டவை. அக்குதூகலத்தினூடாக மனப் பயிற்சி எனும் அரூபத்திற்குள் நுழைந்து, நடிகர்களைத் தனியர்களாக ஆக்கிக் கிடத்திவிடும் ஆற்றல் வாய்ந்தவை. தொடர்ந்து இந்தப் பயிற்சிகளைப் பெறும் மனிதன் நடிகனாக மாறிக் கதாபாத்திரமாகத் தயாராக இருப்பான்.
இப்படியான பயிற்சிகள் நடிகனாக மாறுவதற்கு உதவும் என்பது மூன்றாம் கட்ட விளைவுதான். முதல் கட்டம் ஒவ்வொருத்தரையும் அவருக்குள்ளேயே தேடும் விதத்தைக் கற்பிக்கும் தன்மை கொண்டது. இரண்டாவது கட்டம் அவர் தனியர் அல்லர்; சூழலில் பிற உயிர்களோடு இணைந்து வாழும் நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் உண்டு ; அதற்கான தடைகளும், தடை மீறல்களும் பாதைகளில் எதிர்ப்படும்; அவற்றைத் தவிர்த்து விட முடியாது எனக் காட்டும் பயிற்சிகளும் உண்டு.
முதல் நாள் பயிற்சிகளின் போது திணறிய சிறுவர்கள் அடுத்த நாள் காலையில் வருவார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. பல பட்டறைகளில் அப்படி நடந்திருக்கிறது. ஆனால் எங்கள் சந்தேகம் பொய்த்துப் போனது. 46 பேரும் எங்களுக்கு முன்பே பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து பள்ளியின் ஆசிரியர் ஒருவரும் சேர்ந்து முதல் நாள் பயிற்சியில் கற்ற விளையாட்டில் ஒன்றை விளையாடிக் கொண்டிருந்தனர். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். பட்டறை நிறைவின் போது அழைக்கப் படாமலேயே வந்து சேர்ந்த பார்வை யாளர்களின் முன்னால் அந்தச் சிறுவர்கள் மூன்று கதைகளை நாடகங்களாக ஆக்கி மேடையேற்றினர்.
மேடை ஏற்றத்திற்குப் பின் அவர்களுக்கு இந்த மூன்று நாட்களும் கிடைத்த வாய்ப்பு எப்படிப் பட்ட வாய்ப்பு என்பதை விளக்கும் விதமான உரைகள் நிகழ்ந்தன. இப்படியான பட்டறைகளின் அறிமுகம் எதுவும் எனக்கெல்லாம் கிடைத்ததில்லை என ஆதங்கத்துடன் பேசிய ரவிக்குமார் இதன் தொடர்ச்சியாக அந்த மாணவர்களுக்குத் தரப்போகும் வாய்ப்புகளுக்கான உத்தரவாதங்களையும் அந்தப் பேச்சில் குறிப்பிட்டார். தனது சிறுகதைத் தொகுப்பை ஒவ்வொரு மாணவருக்குமான நினைவுப் பரிசாக வழங்க வந்த எழுத்தாளர் இமையம், கதை எழுதுவதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பட்டறை மூலம் தான் நான் எழுத்தாளன் ஆனேன் என்று குறிப்பிட்டார். அதே போல் சண்முகராஜனும் பட்டப் படிப்பின் போது அமெரிக்கன் கல்லூரியில் நடந்த பட்டறைதான் என்னைத் தேசிய நாடகப் பள்ளிக்குப் போகும்படி தூண்டியது என்றார். அவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சான்றிதழையும் வழங்கினார்.
அரங்கப் பயிற்சி என்பது அடிப்படையில் விளையாட்டுக்களிலிருந்து உருவானவை. விளையாட்டின் வளைகோடுகளும் நேர்கோடுகளும் சேர்ந்து உருவாக்கும் பருண்மைக்குள் மனித மனத்தின் லயங்கள் என்னும் அரூபத்தை உண்டாக்கும் வித்தைகள் கூடி வர வேண்டும். அதற்கான அரங்கப் பயிற்சிகள் இந்த மாணவர்களின் திட்டங்களில்லா மனதிற்குள் மூன்று நாளிலும் கவனமாக விதைக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்களே அதை வளர்த்துக் கொள்ளும் தேடலில் பயணம் செய்வார்கள் என்னும் நம்பிக்கை அங்கே இருந்த பெரியவர்களுக்கு இருந்தது. நம்பிக்கை நிறைவேற்றம் தொடர்ந்த செயல்பாடுகளின் வழி தான் சாத்தியமாகும். சாத்தியமாக்கும் பொறுப்பு பங்கேற்றவர்களுக்கும் உண்டு; பார்வையாளர்களுக்கும் உண்டு.
சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து:
நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்
நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்
பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.
இந்தி சினிமாவில் தேர்ந்த நடிகர்களாகக் கருதப்படும் நஸ்ருதீன் ஷா,அனுபம் கெர் போன்றவர்கள் தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர்கள். இந்திய சினிமாவைச் சர்வதேச அளவில் பேசச் செய்த சேகர் கபூரின் பாண்டிட்குயின் படத்தில்¢ நாயகியாக நடித்த சீமா பிஸ்வாஸ் தேசிய நாடகப்பள்ளியில் படித்தவர். விருமாண்டி படத்தில் இன்ஸ்பெக்டராக அறிமுகமானதின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் வில்லன் நடிகராக வலம் வரும் சண்முக ராஜனும் தேசிய நாடகப் பள்ளியில் மூன்று ஆண்டுக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்றவர் தான். நடிகர் சண்முகராஜனின் முன் முயற்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி மூன்று ஒரு மாதகால நாடகப் பட்டறைகளைத் தமிழகத்தில் நடத்தியுள்ளது.
2006 ஆண்டில் பாண்டிச்சேரி, மதுரை என நடந்த பட்டறைகளை அடுத்து இப்போது நாகர்கோவிலில் ஒரு பட்டறையை நடத்தி வருகின்றது. நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்தில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 முடிய ஒருமாத காலம் நடக்கும் இந்தப் பட்டறையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்குள் செயல்படும் கல்லூரிகளிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி பெற்று வருகின்றனர். நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் அவர்களுக்கு கற்றுத் தரும் வேலையைப் பல நிபுணர்கள் செய்து வருகின்றனர்.
மேற்கத்தியக் கற்பித்தல் முறையைப் பின்பற்றி நாடக அறிமுகம், நாடக வரலாறு, நாடகத்தை வாசித்தல் முறை எனத் தொடங்கி, நடிகனுக்கான சிறப்புக் கல்விக்குள் நுழைந்து விடும் வகையில் ஒருமாத காலப் பாடத்திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடக இலக்கியத்தைக் கே.எஸ். ராசேந்திரன், சே.ராமானுஜன், அ.ராமசாமி ஆகியோர் கற்பிக்க மேற்கத்திய அரங்கக் கலை வல்லுநர்களான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, மேயர்ஹோல்டு, குரோட்டோவ்ஸ்கி ஆகியோரின் நடிப்புக் கோட்பாடுகளைக் கற்பிக்கும் நோக்கத்தில் அனுராதா கபூர், அனுருத் போன்றோர் வருகின்றனர்.
இந்திய/ தமிழகப் பாரம்பரியக் கலையான தெருக்கூத்துக் கலையையும், ஸ்பெஷல் நாடகக் கலையையும் கற்பிக்கப் புரிசைக்கண்ணப்ப சம்பந்தனும், ஜெய்சங்கர், கே.ஏ,குணசேகரன், போன்றோரும் வந்துள்ளனர். சிலம்பக் கலையும் உடற்பயிற்சியின் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் பங்கேற்றவர் களைக் கொண்டு ஒரு நாடகம் மேடையேற்றப்படும் வாய்ப்பும் உண்டு. மேடை ஏற்றப்படும் நாடகத்தில் பங்கேற்பாளர்கள் நடிகர்களாகப் பங்கேற்பதோடு அரங்கக் கலையின் பின்னணி வேலைகளையும் செய்ய நேரிடும். அதற்கான பயிற்சியாளர்களாக இந்திய அளவில் புகழ்பெற்ற எஸ்.பி.சீனிவாசன், செ.ரவீந்திரன், வேலாயுதம், ஆகியோர் வந்துள்ளனர். நடிகர் சண்முகராஜனும், புதுவைப் பல்கலைக்கழக நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவர் அனிஸ§ம் இணைந்து ஒருங்கிணைக்கும் ஒரு மாத காலப் பட்டறை, பங்கேற்றுப் பயிற்சி பெறும் ஒருவருக்கு நாடகக் கலையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் போகாது.
இப்பயிற்சி ஒருவிதத்தில் அறிமுகப் பயிற்சி தான் என்றாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் தேர்ச்சி பெறவும் விரும்பும் ஒருவருக்கு ஆழத்தை நோக்கிய பாதையைச் சொல்லித் தரவும் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான முழுப் பணத்தையும் தேசிய நாடகப் பள்ளியே வழங்குகிறது. தேசிய நாடகப்பள்ளி நமது தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருவின் கனவு நிறுவனம் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
தேசிய நாடகப்பள்ளியின் அளவிற்கு இல்லை என்றாலும், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் நாடகப் பள்ளியும்¢, கேரளத்துத் திருச்சூர் நாடகப் பள்ளியும், கர்நாடகத்து ரங்காயனாவும், நாடகக் கலைஞர் களை உருவாக்கி உள்ளதைப் பலரும் ஒத்துக் கொள்வர். இந்தியத் தொலைக்காட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புக்களைச் செய்யும் பொறுப்பாளர்கள் நாடகப் பள்ளிகளில் பயின்றவர்கள் என்பதை மறுத்து விட முடியாது. அப்படியொரு நாடகப் பள்ளி தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் இங்கே திரைப்படக் கல்லூரி உள்ளது. அங்கேயும் திரைப்படம் சார்ந்த தொழில் நுட்பக் கருவி களை இயக்கும் பயிற்சிகள் மட்டுமே கற்றுத் தரப்படுகின்றன. நடிப்புக் கலையையோ, ஒப்பனைக் கலையையோ, ஆடைவடிவமைப்புக் கலையையோ இவை எல்லாவற்றையும் ஒன்றி¬ணைத்துக் கற்றுத் தேர்ந்து திரைப்படக் கலைஞனாகும் வாய்ப்புடைய பட்டப் படிப்புக் கல்வியோ இல்லை.
செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ் மொழியைப் பழம்பெருமை மிக்கது என்று காட்டுவதோடு நிகழ்காலத் தேவையைத் தீர்த்து வைக்கும் கலை இலக்கியக் கல்வியைத் தரும் மொழியாகவும் வளர்த் தெடுக்க வேண்டியது அவசியம். எல்லாக் கலை களையும் கற்பிக்கும் நிறுவனங்களை திட்டமிட்டுத் தொடங்குவதன் மூலமே இதனைச் சாத்தியமாக்க முடியும். பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்படும் மரபான பாடத் திட்டங் களுக்குப் பதிலாகக் கலைஞர்களை உருவாக்கும் பாடத் திட்டங்களையும் பயிற்சி முறை களையும் கண்டறிய வேண்டும். கலைஞர்களை உருவாக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி முறைகளைப் பற்றிப் பேசும் போது மேற்கத்தியப் பயிற்சி முறைகளையும், கீழ்த்திசைக் கற்பித்தல் முறையையும் கலந்து உருவாக்கும் பாடத்திட்டங்கள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை வல்லுநர் குழுக்கள் உணரவேண்டும்.
நமது பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மேற்கத்தியக் கற்பித்தல் முறையைப் பின்பற்றிச் சில சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றன. ஆனால் கலைஞர் களையும் படைப்பாளிகளையும் குறைவாகவே உற்பத்தி செய்துள்ளன. ஆனால் இரண்டையும் கலந்து உருவாக்கிய நாடகப் பள்ளிகள் அதிகம் சாதித்துள்ளன. பார்த்துப் பார்த்துப் பழகிக் கொள்ளுதல் என்பதுதான் இந்தியக் குருகுலக் கல்வி முறையின் அடிப்படை. இந்திய இசைக்கலையைக் கற்பிக்கும் முறையில் மட்டும் அல்ல; நடனம், நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளுக்கான பயிற்சிகள் இந்தியாவில் இப்படித்தான் இருந்துள்ளது. கை வைத்தியம், நாட்டு வைத்தியம் என அழைக்கப்படும் மருத்துவ முறைகளைத் தங்கள் குடும்பத்தின் பரம்பரைக்குக் கிடைத்த வரம் எனக் கருதும் மனநிலை தான் இந்தக் கலைப் பாரம்பரியத்திலும் நிலவியது என்பது குற்றச்சாட்டு போலத் தோன்றலாம். அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நமது பாரம்பரியக் கலைப் பயிற்சி முறைகளை அனைவருக்கும் உரியதாக ஆக்க விரும்பும் ஒருவருக்கு இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு என எடுத்துக் கொண்டால் போதும். சங்கரதாஸ் சுவாமிகளைத் தங்களது ஆசானாகக் கொண்டு¢ இயங்கிய ஸ்பெஷல் நாடகக் கலைக் குழுக்களும்¢, பாரம்பரியத் தெருக்கூத்துக் கலைமன்றங்களும் ஏராளமாகச் செயல்பட்ட தமிழகத்தில் அவர்களது பயிற்சி முறைகள் எப்படிப் பட்டவை என எழுதி வைத்த குறிப்புக்கள் எதுவும் இல்லை. அதனால் அத்தகைய நாடகங்களைப் பள்ளிகளில் பாடமாகக் கற்றுத் தேரும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
குருகுலக் கல்வியில் ஒருவன் ஆழமாகக் கற்றுத் தேர முடியும் என்பது ஒருவிதத்தில் உண்மை என்றாலும் இன்று இந்தியாவில் செயல்படும் நாடகப் பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தை ஐரோப்பியப் பயிற்சி முறைகளையும் இந்தியக் கற்பித்தல் முறையையும் இணைத்தே திட்டமிடுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது. அப்படித் திட்டமிடும் போது மொழி, மதம், இனம் என்ற எல்லைகளைத் தாண்டி இந்தியத் தனம் என்பதைக் கவனம் கொள்வது அதிகம் உதவும் என்றே சொல்லலாம்.கர்நாடக இசையைக் கற்பதற்கான அடிப்படைப் பாடநூல்கள் பல உள்ளன. ஆனால் தேர்ந்த இசைக் கலைஞர்கள் தங்களின் சீடர்களை அல்லது வாரிசுகளை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பது பற்றிய எழுத்து ஆதாரங்கள் அதிகம் இல்லை என்றே நினைக்கிறேன்.
தனது குருவாக வரித்துக் கொண்டவரை அணுகிக் கற்கத் தொடங்கும் ஒருவர், குரு பாட, அதைக் கேட்டு நகலெடுத்துப் பாடுவதில் தான் தனது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர். குருவின் குரல் அடையும் சஞ்சாரங்களையும் உச்சங் களையும் தானும் அடைய விரும்பும் சீடர்கள், அதற்கெனத் தொடர்ந்து தங்கள் குரலையும் மனதையும் பக்குவப்படுத்திக் கொள்ளும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் எப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட குறிப்புகளைக் குருக்கள் அவர்களுக்கு வழங்குவதில்லை.
கருத்துகள்