தரமான பொழுதுபோக்குப்படங்கள்
96 : கடந்த காலத்துக் காதலின் அலைவுகள்
பார்க்கும் சினிமா ஒவ்வொன்றையும் அதற்குள் பேசப்படும் கருத்தியல் சார்ந்த விவாதப் புள்ளிகளைக் கண்டறிந்து - அதன் எதிர்மறை X உடன்பாட்டுநிலைகளை முன்வைத்துப் பேசபவனாக மாறிப்போனேன். அதனால் கருத்தியல்களைத் தாங்கும் காட்சிகள், வசனங்கள், பின்னணியின் இசைக்கோலங்கள், வண்ணங்கள், நகர்வுகள், காட்சிப்படுத்தப்படும் தூரம், நெருக்கம் எனத் திரைமொழியின் கூறுகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் வழியாக உருவாக்கப்படும் முன்வைப்புகள் என்னென்ன நோக்கங்கள் கொண்டன; பார்வையாளத்திரளை எந்தப் பக்கம் திருப்பும் வல்லமைகொண்டன எனப் பேசிப்பேசி எனது சினிமா குறித்த பதிவுகளுக்கொரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அச்சொல்லாடல்களுக்கு வலுச்சேர்ப்பதற்காகச் சில படங்களின் நிகழ்வெளியை முதன்மாக முன்வைத்து விவாதிப்பதுண்டு. சில படங்களின் காலப் பிண்ணனித் தகவல்களைத் திரட்டி விவாதித்ததுண்டு. சில படங்களின் இயக்குநர்களின் -நடிகர்களின் - தயாரிப்பு நிறுவனங்களின் புறத்தகவல்களின் வழியாகவும் விவாதித்ததுண்டு. இப்படி விவாதிப்பது சினிமாவைப் பார்ப்பதற்கான - திரள்மக்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கான ஒரு கோணம் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.
இந்தப் படம்-96-கொண்டிருக்கும் ஓர்மைகள் இதையெல்லாம் தேடவிடாமல் தடை போட்டுவிட்டன. சினிமாவின் அடிப்படைகளான சொல்முறைகள், பாத்திர உருவாக்கம், அவ்வுருவாக்கத்திற்கேற்ப அவை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளின் அளவு, அதற்குத்தேவையான மன, உடல், குரல்கள் இணையும் நடிப்புப்பாணி, நடிப்போடு இணையும் நிலக்காட்சிகள், ஒளிப்பதிவுத்துண்டுகள் என எங்கும் பிசிறு தட்டாமல் ஓர்மைகளோடு நகர்ந்து முடிந்தது படம்.
நேற்றைய இரண்டாம் ஆட்ட நேரத்தில் 96 பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வெறும் சினிமா பார்வையாளனாக இருந்த காலத்திற்குப் போக வேண்டியதாகி விட்டது. திருநெல்வேலி பாம்பே அரங்கில் இணை இணைகளாகத் திரண்டு அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் போனவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த காலத்திற்குள் பயணம் செய்திருப்பார்கள். இப்போது நாற்பதுகளில் இருப்பவர்கள் 90 களுக்குப் போய்வந்திருப்பார்கள். ராமச்சந்திரனைப்போல ஜானகியை மட்டும் காதலித்துக் கசிந்துருகிக்கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் அலைதல் விரும்பமானதல்ல. என்னைப்போல 60 ஐ, நெருங்குபவர்கள் 70 களுக்கும் 80 -களுக்கும் 90 களுக்கும் போய்த் திரும்பவும் தூண்டும் பின்னோக்கிய பயணங்களைச் சொல்லும் படம் 96.
என்னருகில் என் மனைவி இருக்கும்போதே, பள்ளிக்காலத்து கலையும் கல்லூரிக்காலத்து நந்தினியும் கல்யாணத்திற்குப் பின்னர் காதலைச் சொன்ன உஷையும் இசையும் வந்து சிரித்துவிட்டுப் போனார்கள். யாருக்குத்தான் கடந்த காலத்துக் காதல் -தோல்வியடைந்த காதல் இல்லாமல் இருக்கும்.
நல்ல பொழுதுபோக்குப் படம்
நிகழ்காலப் படம் என்பதன் அடையாளங்கள் என்ன? இதனை விளக்க எதிர்மறையிலிருந்து உள்நோக்கி நகரலாம். எது நிகழ்காலப்படமல்ல என்று காட்டினால் ஓரளவு புரியலாம். பாபநாசம் நிகழ்காலப்படமல்ல. அது ஒரு பழைமை பேசும் பழையபடம்
பெண் உடல் மேல் பாரம்பரியம் அணிவித்திருக்கும் மூடப்பட்ட உடல் புனிதமானது; காட்டப்பட்ட உடல் குற்றமிழைத்தது; பாவம் செய்தது எனப் பேசுவதில் தொடங்கி, அதற்காகத் தன்னை அழித்துக் (தற்கொலை) கொள்ளுதல், அல்லது அதற்குக் காரணமானவனை அழித்தல் (கொலை செய்தல்) என்பதைப் பரிந்துரைக்கிறது. டிஜிட்டல் உலகத்தின் வழியாகத் திறந்து கிடக்கும் ஆண் -பெண் உடல்களை மேயும் நிகழ்காலத்தில் இப்படியொரு பரிந்துரை பொருத்தமானதாக இல்லை. இன்னும் இன்னும் பெண்களை ஏதாவதொன்றின்வழிப் பயமுறுத்துவதன் நோக்கம் எவ்வளவுதூரம் ஏற்கத்தக்கது?.
தொடர்ந்து நிகழ்கால மனிதனை நவீன மனிதனாக்குவதில் அக்கறை காட்டும் கமல்ஹாசனின் படமாக இல்லை பாபநாசம். இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் படம். அவரது திரைக்கதையில் திறமை காட்டும் நடிகராகக் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அவ்வளவே. கமல்ஹாசன் மட்டுமல்லாமல் எடுத்துக் கொண்ட திரைக்கதைக்குப் பொருத்தமாக நடிக்கத் தேவையான நடிக, நடிகையர்கள் தமிழிலும் மலையாளத்திலும் இருக்கிறார்கள் என்பதையும் படம் உறுதிப்படுத்துகிறது.
அதேபோல் மலையாளப் படம் தமிழில் மாற்றப் படுகிறது என்பதால், மலையாளம் அறிந்த ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். மர்மத்தின் தொடக்கமான கொலை நிகழ்வதுவரை ஜெயமோகனும் சுகாவும் சிரிக்க வைக்கப் பார்த்திருக்கிறார்கள். முயற்சி முழுமையாக வெற்றிபெறவிலை. மற்றவர்கள் சமாளிக்கும் அளவுக்குக்கூடக் கௌதமியால் முடியவில்லை. வட்டாரவழக்குக்குப் பயந்து உடல்சார்ந்த பாவனைகளையும் மனநிலையையும் கூடத் தவற விடுகிறார். ஆனால், கொலைக்குப் பின் பாத்திரங்களின் உடல்மொழியும் மனநிலையையும் பார்வையாளர்களின் கவனிப்புக்குரியனவாக ஆகிவிட்டதால் வட்டார வழக்கைக் கவனத்தில் கொள்ளவில்லை.
வட்டாரவழக்குப் பேச்சை ஒரு படத்தின் கதையே வேண்டிநிற்கவேண்டும். சுப்பிரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களைப் பொதுத்தமிழில் எடுக்கக்கூடாது. அப்படியொரு தேவையை இந்தத் திரைப்படம் வேண்டவில்லை. காட்சிகளால் வேகம் பிடிக்கும் திகைப்புக் காட்சிகள் கொண்ட ஒரு படத்திற்குத் திருநெல்வேலித் தமிழும், தாமிரபரணிக் கரையிலிருக்கும் பாபநாசம் என்ற ஊரின் அடையாளமும் கூட அவசியமில்லை. பாவம் - அதற்கான தண்டனை அல்லது பரிகாரமாகப் புனிதநீரில் குளித்துக்குளித்துக் கறையைப் போக்கிக் கொள்ள இந்தியாவெங்கும் ஏராளமான சிவத்தலங்கள் இருக்கின்றன. அங்கும் ஆறுகளும் ஓடுகின்றன. அவைகளும் புண்ணியத் தலங்களாகவும் புண்ணிய நதிகளாகவும் கருதப்படவே செய்கின்றன.
தொய்வில்லாமல் கதைசொல்லுதல் வழியாகத் திகிலூட்டுதல், மர்மங்களை விடுவித்தல் என்ற கூறுகளை விரும்புபவர்கள் பாபநாசத்தை ஒருமுறை பார்க்கலாம். அலுப்பூட்டாமல் மூன்றுமணிநேரம் ஓடும் ஒருசினிமாவைப் பார்க்கவிரும்புபவர்கள் பார்க்கலாம்.அதற்குப்பெயர் பொழுதுபோக்குப் படம்.
கருத்துகள்