எட்டுக்கால் பூச்சியும் இரண்டு கால் மனிதனும்.

அன்று புதன் கிழமை. அதனால் முந்திய நாளும் வேளை நாள் தான். ஒருவேளை இன்று திங்கட்கிழமையாக இருந்தால் எங்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு இரண்டு நாள் ஒய்வு இருந்திருக்கும். இந்த இரண்டு நாளில் எட்டுக்கால் பூச்சிக்கு இது சாத்தியம் தானா? என்ற கேள்விக்குள் என் மனம் இறங்கியிருக்காது. அதனால் எனது கவனம் அதன் மேல் படாமல் கூடப் போயிருக்கும்.

அந்த எட்டுக்கால் பூச்சிக்குக் கிடைத்திருக்கக் கூடிய நேரம் பன்னிரண்டு மணிநேரம் . அந்தப் பன்னிரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக முடித்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. ஓட்டுநருக்குப் பின்னால் இரண்டு இருக்கைகள் தள்ளி அந்த வலைப்பின்னல் பின்னப்பட்டிருந்தது. இரண்டு இருக்கைகளின் கைப் பிடிக்கம்பிகளையும் இணைத்துப் போடப்பட்ட பந்தல் போல அமைத்துக் கொண்டு லாவகமாக அசைந்தபடி பயணம் செய்தது.

வண்டியில் ஏறுபவர்கள் உடனடியாக உட்காரும் இருக்கைகள் அவை. ஆனால் அன்று வண்டிக்குள் ஏறிய ஒவ்வொருவரும் உடனடியாகப் பின்வாங்கிக் கொண்டு வேறு இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். ஒருவருக்கும் அதைக் கலைக்கும் மனம் இல்லை. சரியான இடைவெளியில் வட்டப் பாதை போடப் பட்ட ஓட்டப்பந்தய மைதானத்தை நினைவு படுத்தும் அந்த வலைக்குள் நிம்மதியாக பூச்சி மிதந்து கொண்டிருந்தது.

குறுக்கிலும் நெடுக்கிலும் கூட அளவுகள் மாறாமல் பின்னப்பட்ட வலைப்பின்னல் உருவாக்கிய சதுரங்களிலும் சரியான ஒழுங்கு வெளிப்பட்டது. அவ்வப்போது உள்ளே வந்த சூரியனும் சேர்ந்து எட்டுக் கால் பூச்சியின் வீட்டை ஒளியில் மின்னும் தகத் தகாயக் காட்சியாக மாற்றிக் காட்டியது. வழக்கமாக வண்டியை வேகமாக ஓட்டும் ஓட்டுநர், அன்று மெதுவாகவே ஓட்டினார். அதிகக் குலுக்கல் இல்லாமல் சென்ற போது கடல் அலைமேல் அசையும் படகுபோல அந்த வலைப்பின்னல் அசைய, வான வில்லின் நிறங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அதன் எதிர்ப்புறத்தில் இருந்த நானும் லயிப்புடன் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தேன்.

அரசாங்க அலுவலகங்களுக்கு அதிகாரிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிகம் பயணம் செய்வதில்லை. அதிகாரிகளின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தூரம் தான் அவற்றின் தினசரிப் பயண தூரம். முதல் நாள் மாலையில் நிறுத்தும் வண்டியை ஓட்டுநர், அடுத்த நாள் காலை எடுத்து விடுவார். தினசரி வண்டியை எடுக்கும் போது இருக்கைகளைச் சுத்தம் செய்வது அவரது வேலை. ஆனால் அன்று இருக்கைகளைச் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அந்தப் பூச்சியின் கூட்டைக் கலைக்க மனம் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியைத் தவிர்த்திருக்கலாம். .குலைக்கப் படாத முழுமையில் எல்லா மனிதர்களும் லயித்துத்தான் போய் விடுகிறார்கள்.

ஒரு குலுக்கலுக்குப் பின் வண்டி நின்றது. அது வழக்கமான நிறுத்தம் அல்ல. அவசரமாக ஓடி வந்து ஏறிய அந்த நபர் இங்கு ஏறுபவர் அல்ல. நான் ஏறும் நிறுத்தத்திலேயே ஏறியிருக்க வேண்டியவர். இங்கு வந்து ஏறுகிறார். ஏறிய வேகத்தில் தான் வழக்கமாக அமரும் இருக்கையைப் பார்த்தார். அது காலியாக இல்லை. எந்தச் சிந்தனையும் இல்லாமல், அந்த வலைப்பின்னலை இடது கையால் தட்டிவிட்டு அந்த இருக்கையில் அமர்ந்து விட்டார். எட்டுக்கால் பூச்சியின் அதிசய மாளிகை அவரது கால்சராயின் தொடைப் பகுதியில் தூசியாய் ஒட்டிக் கொண்டுவிட்டது. எரிச்சலுடன் அதைத் தட்டிவிட்டுக் கொண்டே திரும்பினார்.

பலரும் தவிர்த்த அந்தக் கூட்டைக் கலைக்க நேர்ந்தது பற்றி எந்த உணர்வும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவேளை அவருடைய மனத்தில் வண்டியைச் சுத்தம் செய்யாமல் ஓட்டிக் கொண்டிருக்கும் டிரைவரின் வேலை மீது அதிருப்தியும் கோபம்கூட இருந்திருக்கலாம். ஆனால் வெளிப்படுத்தவில்லை. இடம் மாறி ஏறியதற்கான காரணத்தை அவரே சொல்லத் தொடங்கினார். இன்று காலைத் தினசரிகளில் வெளிவந்த செய்தியோடு தொடர்புடையதாக இருந்தது அந்தக் காரணம். அந்தச் செய்தி ஒரு மரணச் செய்தி. இவருக்கு அந்த நபர் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார் என்பது அவரது சோகத்திலிருந்து வெளிப்பட்டது.

மரணம் அடைந்த அந்த நபர் திட்டமிட்டு வேலை செய்வதில் தேர்ந்தவர் என்று பெயர் வாங்கியவரும் கூட. சில ஆண்டுகளாக நகரத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். பலதரப்பட்ட மனிதர்களுக்கும் அவர் சார்ந்த தளங்களில் உதவி செய்ததன் மூலம் அந்தப்பெயரைச் சம்பாதித்திருந்தார். அவரது மரணச்செய்தியை வாசித்த என் மனம் கூடச் சிறிதுநேரம் அவரது நினைவுக்குள் சென்று திரும்பியது. நானும் ஓரிரு முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.

புன்சிரிப்புடன் அவருக்கு வணக்கம் சொன்னால் அவர் பதிலுக்கு வணக்கம் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளமாட்டார். நமது கைகளை இருகைகளாலும் இறுகப்பற்றி ஆதரவாகப் பேசுவார். அப்படியான பேச்சு நமக்குத் தேவையில்லை என்றாலும், அந்த இறுக்கம் அவர் மீது ஒருவிதக் கரிசனத்தை உண்டு பண்ணும் மாயத்தைச் செய்துவிடும். பிரபலமாகும் ஆளுமைகளிடம் இப்படியான தனித்தன்மைகள் இருப்பதால் தான் அவர்கள் ஆளுமைகளாக ஆகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அதை ஒரு கலையாகக் கற்றுத் தேர்ந்து பயன்படுத்தும் நபர்கள் சாதாரண மனிதர்களாக கூட்டத்தில் கரைகிறார்கள்.

எட்டுக்கால் பூச்சியின் கூட்டைக் கலைத்தது பற்றி எந்தவொரு உள்ளுணர்வும் இல்லாமல் தனது நெருங்கிய நண்பரின் மரணம் தந்த அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லிக் கொண்டே வந்தார். நேற்று மாலை பணியிடத்திலிருந்து வந்த அவர் குளியலறைக்குள் சென்று முகம் அலம்பி விட்டு வந்த கால் மணி நேரத்தில் மரணத்தைத் தழுவிவிட்டாராம். இன்னும் ஒரு மாதத்தில் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம். அதன் பின்னர் ஜப்பானில் அல்லது மலேசியாவில் சில ஆண்டுகளைக் கழிப்பது என்ற திட்டம் கூட இருந்ததாம். ஏனென்றால் ஜப்பானில் மகளும் மருமகனும் பணியாற்று கின்றனர். மலேசியாவில் மகனும் மகளும் டாக்டர்களாக இருக்கின்றனராம். ஆனால் எல்லாக் கதையும் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் முடிந்து விட்டது என்று நண்பரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப் படுத்தினார். மரணம் என்பது இவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்குமா? என்று ஆச்சரியம் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. மரணம் இவ்வளவு எளிமையாக இருக்கிறதே எனக் குதூகலமாக இருந்தது. ஒரு நாளின் இரவு வேளையில் கட்டிய அழகிய வீட்டில் இரண்டு மணி நேரத்தூக்கத்திற்குப் பின் ஒரு மனிதனின் கால்சராயில் ஒட்டிய தூசியாக மாறிய எட்டுக் கால் பூச்சியின் வாழ்க்கையையும் அதன் மாளிகையையும் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் முடிந்து போகும் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். பஸ் பயணங்களில் அல்லாடும் முதியவர்களையும், முதியோர் இல்லங்களில் தனித்துவிடப்படும் வயதானவர்களையும் பார்க்கும் போது மரணம் அச்சமூட்டுவதாக இல்லை. வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது.

மனிதன் தொடர்ந்து இந்த உலகத்துப் படைப்பு எல்லாம் தனக்கானதாகவே கருதிக் கொண்டு அவற்றை அழிப்பதும், தனது சொகுசு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்களாக மாற்றுவதும் என நடத்தும் போராட்டம் இன்று உச்ச கட்டத்தை அடைந்த் கொண்டிருக்கிறது. நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுபடுத்தித் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில் தவிக்கும் மனிதர்கள், வானத்தையும் கோள்களையும் கூட விட்டுவைக்கவில்லை. ஆனால் மனிதர்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. எதற்காக இதுவெல்லாம் ? என்பதுதான் அந்தக் கேள்வி.

நேற்று இரவு முழுவதும் அயராது பாடுபட்டு எட்டுக் கால் பூச்சி கட்டிய அற்புத மாளிகை இரண்டு மணி நேரத் தூக்கத்தோடு அதற்கு மரணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்று தெரிந்திருந்தால், அந்தப் பூச்சி தனது குடியிருப்பை இந்த இடத்தில் கட்டியிருக்குமா..? அல்லது ஒரு கொலையைச் செய்த குற்றவாளியாக அந்த மனிதனுக்கு ஒரு பரிமாணத்தை உண்டாக்கலாம் என்று நினைத்துச் செயல்பட்டிருக்குமா..? தெரியவில்லை. வாழ்தலின் அர்த்தத்தை தேடும் மனிதன் சாவின் அர்த்தத்தையும் அறிய வேண்டியிருக்கிறது போலும். தேடினால் மரணமும் குதூகலம்தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்