முழுமையும் முழுமையின்மையும் - சுரேஷ்குமாரின் இரண்டு கதைகள்
பாதிக்கதையைத் தாண்டும்போது இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று நினைக்கும் வாய்ப்பைத் தராத எழுத்தாளர்களே தொடர்ந்து வாசிப்பதற்கான கதைகளைத் தருபவர்களாக இருக்கிறார்கள். இம்மாத உயிர்மையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதியுள்ள பெரியம்மை அப்படியொரு கதை.
கதைக்குள் பாத்திரமாக இருக்கும் கதைசொல்லிகளைக் கொண்டு கதையை நகர்த்தும் சுரேஷ்குமார், அப்பாத்திரத்தின் இருப்பையும் நகர்வுகளையும் சொல்லிப் போகும்போது, கதைக்குள் வரும் பிற பாத்திரங்களின் புறநிலை நடவடிக்கைகளை தொடர்பில்லாமல் கூட விவரிப்பார். அவ்விவரிப்பில் விலகிப்போகும் தன்மை இருப்பதுபோலத் தோன்றினாலும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் கதைசொல்லியிடம் வந்துவிடுவார். அந்த விவரிப்புக்குப் பின்னால், பாத்திரங்களின் எண்ணவோட்டங்களை உணர்த்திக் கொண்டே இருப்பதை அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். கதைசொல்லலில் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் தனி அடையாளமாக இதனைச் சொல்லலாம்.
கதையின் பாத்திரங்கள் புழங்கும் வெளியையும் உடல் மொழியையும் செயல்பாடுகளையும் விவரித்துக்கொண்டே போகும்போது, அக்கதாபாத்திரங்கள் இருக்கும் இடத்தையும், அவ்விடத்தில் இருக்கும் மற்றவர்களையும் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாகவும் வெளிப்படுவார்கள். உயிர்மையில் அச்சாகியுள்ள ‘பெரியம்மை’ கதையில் வரும் இந்தப் பகுதியை வாசித்துப் பாருங்கள்:
“செண்பகவல்லி மதினி வீட்டைக்கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது, மதினி வீட்டுக்காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூக் கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேலைக்காக வேறு ஊருக்குச் செல்லும்போது மல்லிகைப்பூக் கொடி சிறியதாக இருந்தது. இப்போது பெரிதாகப் படர்ந்திருக்கிறது. சாயந்திர நேரம். மதினி காபி தயார் செய்து கொண்டிருக்கலாம். சங்கரன் அண்ணாச்சி ஹாலில் உள்ள ஊஞ்சலில்தான் மதியம் படுத்திருப்பார். சரியாக நாலு மணிக்கு அவருக்கு விழிப்பு வந்துவிடும் என்று மதினி சொல்லியிருக்கிறாள். நாலேகால் மணிக்கு அவருக்கு பில்டர் காபி வேண்டும். இப்போது அவர்கள் வீட்டிற்குள் நுழையலாம். முறுக்கு, அதிரசம் கொண்டு வந்து மதினி வைத்துவிடுவாள். சங்கரன் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியதை நினைத்தால் அலுப்பாக இருக்கிறது. இன்னொரு நாள் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்தத் தன்மை கதை முழுக்கப்பரவியுள்ளது.புறச்சூழலை விவரிப்பதும், மனதிற்குள் தோன்றும் எண்ணவோட்டங்களும் உடன் பயணிப்பது புரியவரும். இந்தக் கதை முழுக்க அவரது சொல்முறை இதே தன்மையில் தான் உள்ளது. இந்தத் தன்மை அவரது பல கதைகளில் இருக்கும் சொல்முறையும் கூட. இந்தச் சொல்முறைக்குக் கதாசிரியர், எந்தவொரு நிகழ்வையும் மனிதர்களையும் உணர்வு பூர்வமாக முன்வைக்கும் எண்ணமில்லாது, விலகிநின்று விவரிக்கும் தன்மைகொண்டவர் என்ற பிம்பத்தை உருவாக்கித் தரும். அதனால் கதையில் பாத்திரங்கள் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் கதாசிரியர் பொறுப்பல்ல; அந்தந்த பாத்திரங்களே பொறுப்பு என வாசகர்கள் கருதிக்கொள்வார்கள். இவ்வகையான சொல்முறைக்கு சுரேஷ்குமாருக்கு முன்னோடிகள் சிலர் உண்டு. சுந்தரராமசாமி முதன்மையான முன்னோடி.
உயிர்மையில் அச்சாகியிருக்கும் கதையின் விவாதம் பாகப்பிரிவினை தொடர்பானது. ஐந்து ஏக்கர் நிலைத்தை அண்ணன் – தம்பி இருவரும் எப்படிப் பிரித்துக்கொள்வது என்பதில் ஒரு முரண் இருப்பதாகத் தொடங்கி, முடிவில் எந்தவிதமான முரணும் இல்லாமல் சமமாகப் பிரித்துக் கொண்டார்கள்; ஆனால் பிரித்துக்கொண்ட நிலத்திற்குரிய கிரையத்தொகையைத் தம்பிக்குக் கொடுத்து விட்டார் அண்ணன் என்பதாக முடிகிறது. அப்படி முடிந்ததற்கு யார் காரணம் என்பது கதையில் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் கதைக்குள் இருக்கும் பாத்திரங்களைப் பற்றிய விவரிப்பு, அவர்களின் உரையாடலின் தொனி, அதன் வழியாக வெளிப்படும் பாத்திரங்களின் குணாதியசம் மற்றும் ஆளுமை வெளிப்பாடு போன்றவற்றைச் சொல்வதின் வழியாக, கதையின் தலைப்பாக இருக்கும் ‘பெரியம்மை’ தான் பின்னணியாக இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறார் சுரேஷ்குமார்.“பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும்”
எனத் தொடங்கும் கதையில் கதைசொல்லி பாத்திரமாக வரும் ராசாக்கண்ணு, தனது பெரியப்பாவிடம்“ நீங்க ஒரு பாட்டுப்பாடணும் கேக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்று பேச்சை ஆரம்பிக்கும்போது சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதியுள்ள கதையின் பாதி நிகழ்வுகள் முடிந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவை எதுவும் கதையின் மையவிவாதத்தோடு தொடர்பு இல்லாதவை. தனது வீட்டிலிருந்து கிளம்பும் ராசாக்கண்ணு பெரியப்பா வீட்டிற்குப் போகும்போது நினைத்துக்கொள்ளும், செண்பகவல்லி மதினி, சந்திக்கும் சோமுபிள்ளை, தாண்டிச்செல்லும் மாகாளி பலசரக்குக் கடை, மூக்குப்பொடி கணக்கு வாத்தியார், நண்பன் சோணமுத்து நினைப்பு, பருத்திப்பால் கடை வைத்திருக்கும் ரங்கண்ணன், பருத்திப்பால் என்ற குறியீடு வழியாக வரும் சினிமாரசனை என எதுவும் பாகப்பிரிவினையோடு தொடர்புடையன அல்ல. ஆனால் இவையெல்லாம் சேர்ந்துதான் மையவிவாதத்தை முன்னெடுக்கப் போகும் பாத்திரங்களின் குணநலன்களை – அவர்களின் எண்ண வோட்டங்களை வாசிப்பவர்களுக்குக் கடத்துகின்றன என்பதை மறுக்கமுடியாது.
நிலம், அதன் மதிப்பு, அதனை விட்டுக்கொடுத்தால் ஏற்படும் பண இழப்பு போன்றவற்றைப் பற்றிய சிந்தனையில்லாமல் உறவுகளையும் மதிப்பீடுகளையும் முதன்மையாக நினைக்கும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில் வரும் மனிதர்கள் நிகழ்காலத்தின் சாயலில் இல்லாதவர்கள் என்ற பார்வையை முன்வைக்கலாம். ஆனால் கதாசிரியரின் நினைவுக்குள் -கடந்த காலத்திற்குள் இப்படியான மனிதர்களால் ஆன உலகம் ஒன்று இருந்திருக்கிறது; இப்போது அதெல்லாம் இல்லாமல் தொலைந்து போய்விட்டது என்ற ஏக்கத்தின் தொனியாகக் கதையை வாசிக்க முடியும். கதையை வாசிப்பவர்களுக்கும் கூட அப்படியொரு கடந்த காலமும் பிரியங்களோடு கூடிய உறவு முறைகளும் இருந்தது நினைவுக்கு வரலாம். இந்தக் கதையை வாசிக்கும்போது எனது கடந்தகாலமும், எனது சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்கும் விட்டுக்கொடுத்த பின் ஏற்பட்ட சுமுகமான பாசமும் நினைவில் வந்து போனது.அப்படியொரு நினைவைத் தருவதின் மூலமே ஒரு கதை நல்லதொரு வாசிப்பைத் தரும் கதையாக –முழுமையான கதையாக ஆகமுடியும். இது ஆகியிருக்கிறது.
குடும்ப உறவுக்குள் இருக்கும் நெகிழ்ச்சியையும் விட்டுக்கொடுத்தலையும் விவாதப் பொருளாக்கிய பெரியம்மை கதையை எழுதிய சுரேஷ்குமார் இந்திரஜித்தின் வெந்தயநிறச்சேலை என்னும் கதையைச் சில நாட்களுக்கு முன்பு வாசித்தேன். அகழ் இணைய இதழில் வந்துள்ள அந்தக் கதையிலும் நேரடியாகச் சொல்லப்படாமல் விடப்பட்ட பகுதி ஒன்று உண்டு. அதன் வழியாகவே ஒன்றை உணர்த்த நினைத்துள்ளார். இக்கதை சுரேஷ்குமார் அதிகம் எழுதிப்பார்த்த பெண்ணுடல் ஏற்படுத்தும் காட்சித்திளைப்பையும் மோகத்தின் வேகத்தையும் சொல்லக் கூடிய கதை. ஆனால் அது முழுமையாகாமல் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
தனக்குப் பிடித்த நடிகையின் உடலுக்குப் பொருத்தமான வெந்தயநிறச் சேலையைத் தனக்குப் பிடித்தமான பெண்களுக்கு அணிவித்துப் பார்க்க நினைக்கும் ஆண் மனதின் எண்ணவோட்டங்களால் பின்னப்பட்ட கதை. மனைவியின் நடவடிக்கைகளில் ஒவ்வாமையும் வெந்தய நிறச்சேலை அணிந்த உறவுக்காரப் பெண்ணின் மீது கொள்ளும் மோகமும் என அவரது முத்திரையை இதிலும் எழுதியுள்ளார். இவ்விரு நிலைகளையும் விரிவாக எழுதும் வாய்ப்புகள் கதைக்குள் இருந்தபோதிலும் நிகழ்ச்சிகளை விரிவாக்காமல் வேகமாக நகர்த்திப் போவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
பேருந்து பயணத்தின் விரிவில் கதை உருவாக்கப் போகும் வெந்தயநிறச்சேலை சார்ந்த படிமத்தோடு தொடர்பு எதுவும் இல்லை. மனைவி அனுராதாவின் சிடுசிடுப்பான மனநிலையை மட்டுமே காட்டுகின்றன அந்தக் காட்சிகள். அத்தை மகள் சரளாவைச் சந்திக்கும் காட்சிகளில் மனவோட்டங்களை எழுத வாய்ப்பிருந்தும் எழுதாமல் தவிர்த்தது ஏனென்று தெரியவில்லை. மனைவி கழிப்பறைக்குச் சென்று திரும்புவதற்குள் சட்டென்று தழுவிக்கொண்டு பிரிவதின் பின்னணியில் வெந்தய நிறச்சேலை இருந்தது என்ற குறிப்பை முன்பே கொடுத்திருக்கலாம். மோகம் தூண்டும் அந்த வண்ணத்தைக் கதைக்குள் நகர்த்திக் கொண்டே வந்திருக்கலாம். அதைச் சுரேஷ்குமார் செய்யவில்லை. பெரியம்மை உருவாக்கும் முழுமையை வெந்தய நிறச்சேலை உருவாக்கவில்லை.
கருத்துகள்