மணவிழா என்னும் நாடகம்

[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல]
==========================================================================

மணமகள் பெயர்- மணமகன் பெயர் திருமண நிகழ்வு நிரல்

மணவிழா நிகழும் இடத்தின் பெயர் கூடியுள்ள அனைவருக்கும் வணக்கம். பெண் வீட்டு முகவரி வசிக்கும் பெற்றோரான  --------------------------------  தம்பதியினரும், மணமகன் முகவரி வசிக்கும் மணமகளின் பெற்றோர் -------------------------- தம்பதியினரும் இணைந்து செய்த அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும்  அன்போடு வரவேற்கிறோம்.  இப்போது மணவிழா
இப்போது இனிதே தொடங்குகின்றன.
இன்று திருவள்ளுவராண்டு ------ , ---------- திங்கள் --- ஆம் நாள்,
[கிறிஸ்து பிறப்பாண்டு  ------- , ----- மாதம் --- ஆம் நாள்]
----------- கிழமை--------- மணி தொடங்கி
இந்நிகழ்ச்சிகளை நடத்துவது என  -------  மாதங்களுக்கு முன்பு 
முடிவு செய்யப்பட்டது.


---------------------  இல்லத்தில் வைத்து உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்ட சிறிய நிகழ்வொன்றில் --------------- திங்கள் -- ஆம் நாள், [ ---- ----  ---  ஆம் தேதி ] 
-------- கிழமை அன்று எடுக்கப் பட்ட முடிவின்படி
மண விழா நிகழ்வுகள் இப்பொழுது தொடங்குகின்றன.
தொடக்கத்தை அறிவிக்கும் விதமாக நாதசுர இசை ஒலிக்கட்டும்.
நாதசுர இசை  உச்சத்தை அடையும் போது வந்துள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மணமக்கள் தங்களை  அறிமுகம் செய்துகொள்ளும் விதமாக மணமகன் -----  தனது அறையை  விட்டு வலது புறமாகவும் மணமகள் தனது அறையிலிருந்து இடது புறமாகவும் வருகின்றனர். மணமகனுடன் அவரது தம்பியரும் தாய்மாமனும் உடன் வருகின்றனர்.
மணமகளுடன்  சகோதர சகோதரியினர்  உடன் வந்து அவரவர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து கொண்டே வருகின்றனர்.

நாதசுரம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மேடையில் ஏறி இடதுபுறம் வெளிப் பட்ட மணமகள்
வலது ஓர மேடையில் நிற்கிறார்.
வலதுபுறம் வெளிப்பட்ட மணமகன் இடது ஓர மேடையில் நிற்கிறார்.

மேடை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது .
இடது புறம் மணமகன் வீட்டார் அமர்ந்துள்ளனர்.
வலதுபுறம் மணமகள் வீட்டார் அமர்ந்துள்ளனர்.
நடுமேடையில் முன் தள்ளி மங்கல நாண்அணிவிக்கும்போது
இடம் பெறும் வளமைப் பொருட்களான மஞ்சள், அரிசி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மங்கல நாண் கட்டப்பட்ட மஞ்சள் கயிறும் அங்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது

வலது புறம் அமர்ந்திருந்த மணமகன் வீட்டாரில் அவரது தாய்மாமன் அவர்கள் மலர் மாலையை எடுத்து மணமகன் கழுத்தில் அணிவிக்கிறார்.
அவரது துணைவியார் மலர்க்கொத்து ஒன்றை மணமகனிடம் கொடுக்கிறார்.
மேடையின் இடது பக்கத்தில் இது நடைபெறுகிறது.
மணமகனின் தாய்மாமன்கள் அத்தைமார்கள், சகோதரிகள், சகோதரர்கள்,
அவர்களது துணைவியர் என அனைவரும் அருகில்  நின்று அவரை மணமேடையின் வலது புறத்தில் அழைத்து வந்து அமரச் செய்கின்றனர்.

அது முடியும் போது மணமகள் தாய்மாமன் ஒரு மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்கிறார். மலர்க்கொத்து ஒன்று மணமகளிடம் தரப்படுகிறது. மணமகளின் மாமன்மார்கள், அத்தைமார்கள், தம்பி, அண்ணன், அண்ணிகள் என அனைவரும் அருகில் நின்று , பின்னர் மேடையின் இடது புறத்தில் அமரச் செய்கின்றனர். 

[மேடையின் முன்னாள் அமர்ந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் பெயர்களில் முக்கியமானவர்கள் பெயர்களைச்  சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

மணவிழா  உறுதிப் பத்திரங்கள் வாசிப்பு தொடங்குகிறது

------------ நகரில் வசிக்கும் மணமகனின் தாத்தாவும் பாட்டியுமான
-------------------------------   தம்பதியினருமாகிய நாங்கள், எங்கள் புதல்வன் ------------------  ஆகியோரின் ----  குமாரன் ------------- க்கு
------------ மாவட்டம் ----------------- கிராமம் ------------------ அவர்களின் மகன்வழிப் பேத்தியும், ------------------ அவர்களின் மகள் வழிப்பேத்தியும் -------------- நகரில் வசிக்கும் ----------------------- ஆகியோரின் குமாரத்தியுமான ----------------மணமகளாக ஏற்று,  --- திங்கள்-  ஆம்நாள், [ ----  --------------- ---- தேதி ] ---------- கிழமை அன்று எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று இங்கே கூடியுள்ள உறவினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் முன்னிலையில் மங்கல நாண் அணிவித்து மணம் முடித்து இல்லற வாழ்க்கையைத் தொடங்க மனப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்து வாழ்த்துகிறோம்.
------------------    -------------------- ஒப்பங்கள்
மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்ததைப் போலவே
-------------  --------------------  தம்பதியினராகிய நாங்களும்
எங்கள் புதல்வி ---------- வை, ------------ அவர்களின் இல்வாழ்க்கைத்
துணைவியாக்கும் இம்மணநாள் நிகழ்ச்சிகளுக்கு சம்மதம்
தெரிவித்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
------------------          -------------------  ஒப்பங்கள்
வருகைபுரிந்தவர்களில் முக்கியமானவர்கள்.

மணமக்களுக்கான உரைவீச்சு வாசிக்கப்படுகிறது

நிலத்தால் ஆனது இந்த உலகம்; நீரால் ஆனது இந்த உலகம்;
காற்றால் ஆனது இந்த உலகம்; வானத்தால் ஆனது இந்த உலகம்;
ஒளியால் ஆனது இந்த உலகம் .
நிலம் நீர் காற்று வானம் ஒளி என
ஐந்து இயற்கைப் பொருள்களையும் வணங்குகிறோம்.
[மணமக்கள் இந்த வரியை மட்டும் திருப்பிச் சொல்ல வேண்டும்]

நிலம், குறிஞ்சியாக இருக்கிறது; முல்லையாக இருக்கிறது;
மருதமாக இருக்கிறது; நெய்தலாக இருக்கிறது;
பாலையாக இருக்கிறது.
மலையும் மலைசார்ந்த இடங்களும்¢ குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை.
வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம்.
கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கண்டது.
[மணமக்கள் இனி வரும் வரிகளைத் திருப்பிச் சொல்ல வேண்டும்]

ஐவகை நிலங்களையும் வணங்குகிறோம்.
நிலம் தரும் உணர்வுகளையும் வணங்குகிறோம்.
மலைகளின் தலைவனாம் சேயோனை வணங்குகிறோம்.
காடுகளின் தலைவனாம் மாயோனை வணங்குகிறோம்
வயல்களின் தலைவனாம் வேந்தனை வணங்குகிறோம்
பெருமணல் நிலத்தின் வருணனை வணங்குகிறோம்.
பாலையின் தலைவியாம் கொற்றவையை வணங்குகிறோம்.
            [மலர்கள் தூவப்படுகிறது. ]
நீர் மழையாக நனைக்கிறது; ஊற்றாக இருக்கிறது;
அருவியாக வீழ்கிறது; நதியாக நடக்கிறது;
கடலாக விரிகிறது
நீரையும் நீரின் நிலைகளையும் வணங்குகிறோம்.
[மணமக்கள் இந்த வரியை மட்டும் திருப்பிச் சொல்ல வேண்டும்.
 சொல்லி முடிக்க அவர்கள் மீது மலர் தூவப்படுகிறது]
அதுவே தென்றல்; அதுவே மாருதம்; அதுவே சூறாவளி ; அதுவே புயல் ;
அதுவே வாடை; அதுவே காற்று.
புல்லாங்குழலின் மென்மையும் காற்றே; நாதசுரத்தின் அதிரலும் காற்றே;
பறையின் முழக்கமும் காற்றே; தவிலின் தாளமும் காற்றே.
வீணை நரம்புகளின் அலைவும் காற்றே.
காற்றையும் காற்றின் ஒலிகளையும் வணங்குகிறோம்.
[மணமக்கள் இந்த வரியை மட்டும் திருப்பிச் சொல்ல வேண்டும்.
சொல்லி முடிக்க அவர்கள் மீது மலர் தூவப்படுகிறது]
வானம் நீலநிறமாக இருக்கிறது; வானமே பச்சை இலைகளின் வண்ணம்;
வானம் அதிகாலைச் சூரியனின் சிவப்பு; வானமே சூரிய காந்தியின் மஞ்சள் ;
வானமே ஊதா; ஆரஞ்சு வண்ணமும் வானமே.
வானத்தையும் வண்ணங்களையும் வணங்குகிறோம்.
[மணமக்கள் இந்த வரியை மட்டும் திருப்பிச் சொல்ல வேண்டும்.
சொல்லி முடிக்க அவர்கள் மீது மலர் தூவப்படுகிறது]

பகலாய் இருக்கிறது; மின்னலாய்த் தோன்றி மறைகிறது;
விளக்காய் ஒளிர்கிறது;  நிலவாய் குளிர்கிறது;
இருளாகவும் இருக்கிறது சூரியன்.
 சூரியனையும் சூரியனின் ஒளித்துகள்களையும்  வணங்குகிறோம்.
[மணமக்கள் இந்த வரியை மட்டும் திருப்பிச் சொல்ல வேண்டும். சொல்லி முடிக்க அவர்கள் மீது மலர் தூவப்படுகிறது]
சூரியனின் ஒளியால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்
வானத்தின் தோற்றத்தால் நிரம்பி வழிகின்றன வண்ணங்கள்
காற்றின் பயணத்தால் ததும்பி வழிகிறது இந்த உலகம்
நீரின் அலைகளால் நிரம்பி நிலைபெற்றுள்ளது உலகம்
நிலம் உயிரினங்களால் நிரம்பி நிற்கிறது.
உயிரினங்களில் ஒரு பகுதி மனிதன்.
இயற்கைப் பொருட்களில் ஒருதுகளே மனிதர்கள்
இயற்கையின் படைப்புக்களில் மகத்தானவர்கள்  மனிதர்கள்
மனிதன் தனது அறிவால் தனது வாழ்க்கையைத் திட்டமிடுபவன்.
இயற்கையின் படைப்புக்களில் மகத்தானவர்கள் மனிதர்கள்.
இந்த உலகத்திற்கு மனிதர்கள் தங்கள் சாயலில் மனிதர்களைத் தருகிறார்கள்
மனிதர்கள் மனிதர்களைத் தருவதைத் திட்டமிடும் நாளே மணநாள்.

வானமாகவும் நிலமாகவும் தெரிகிறது இந்தப் பிரபஞ்சம்.
வானத்திற்கு ஆதாரம் நிலம் ; நிலத்திற்கு ஆதாரம் நீர்;
நீருக்கு ஆதாரம் வளி; வளிக்கு ஆதாரம் ஒலி;
ஒலிக்கு ஆதாரம் ஒளி.
ஆதாரங்களின் சேர்க்கையே மனிதன்.
ஒளியையும் ஒலியையும் வளியையும் வண்ணங்களையும்
நீரையும் நிலத்தையும் தாவரங்களையும் விலங்கினங்களையும்
காப்பவன் மனிதன் ; வளைப்பவன் மனிதன்;
பயன்படுத்துபவன் மனிதன்; பயப்படுபவன் மனிதன்.
இயற்கையின் படைப்புக்களில் மகத்தானவர்கள்  மனிதர்கள்.
மனிதர்களின் மகத்தான கொடை மனிதர்களே.

ஆணெனவும் பெண்ணெனவும் இருநிலைப்பட்டவர்கள் மனிதர்கள்.
பெண்ணும் ஆணும் இணைந்து மனிதர்களை உருவாக்குகிறார்கள்.
ஆண் ஆணை உருவாக்குவதில்லை; ஆண் பெண்ணையும் உருவாக்குவதில்லை
பெண் பெண்ணை உருவாக்குவதில்லை; பெண் ஆணையும் உருவாக்குவதில்லை
ஆணும் பெண்ணும் சேர்ந்தே மனிதர்களை உருவாக்குகிறார்கள்.
மனிதர்கள் மகத்தானவர்கள்.மனிதர்களின் மகத்தான கொடை மனிதர்களே.
மனிதர்கள் மனிதர்களைத் தருவதைத் திட்டமிடும் நாளே மணநாள்.

--------- திங்கள் ---------- ம் நாள் எங்கள் மணநாள்.
தனியர்களாய் இருந்த நாங்கள் இணைகளாக மாறும் நாள்
நண்பர்களும் சுற்றத்தாரும் உற்றாரும் உறவினரும்
ஒன்றிணைந்து வாழ்த்த புதுவாழ்வு தொடங்கும் நாள்.
[இதை மணமகன் ------------- சொல்ல வேண்டும்]
நாங்கள் தொடங்கும் புதுவாழ்வின் இனிய நாள் இது.
நான்,  ---------  -------------- தம்பதியினரின் மகள் ---------
அவர்களை எனது குடும்ப வாழ்வின் துணையாக ஏற்கிறேன்என்பதின்
அடையாளமாக இந்த மங்கல நாணை அணிவித்து
முதல் முடிச்சைப் போடுகிறேன்.
இரண்டாம் முடிச்சைப்போடுகிறேன்.
மூன்றாம் முடிச்சும் போடப்படுகிறது. 
[மங்கல நாண் மணமக்களின் தாத்தாக்கள் எடுத்துத் தர மணமகன் பெற்று மங்கல நாண் அணிவித்தல் நடக்கிறது நாகசுரம் ஒலிக்கிறது. இதை மணமகள் ---------சொல்ல வேண்டும்]

நான் , ---------- அவர்களின் மகன் ---------------- அவர்களை எனது குடும்ப வாழ்வின் துணையாக ஏற்கிறேன். எனது இசைவின் அடையாளமாக இந்த மோதிரத்தை அவரது வலக்கரத்தின் மோதிர விரலில் அணிவிக்கிறேன்.
[இருவரும் மாலைகளை மாற்றிக் கொள்கின்றனர் .கையிலிருக்கும் பூங்கொத்துக்களையும் மாற்றுகின்றனர்.விரல்களைப் பற்றிக் கொண்டு வலம் வருகின்றனர்.நாதசுரம் வேகமாக ஒலிக்க வேண்டும் .இனிவரும் வார்த்தைகளை இருவரும் சொல்ல வேண்டும்]

இன்று முதல் நாங்கள் இருவரும் கரம் பற்றி வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.
வாழ்வு தரும் இன்பங்களையும் துன்பங்களையும் இருவருமாய் எதிர்கொள்வோம்.
இல்லறவாழ்க்கை இனியது; காற்றில் மிதக்கும் மயிலிறகைப் போல.
குடும்ப வாழ்க்கை குதூகலமானது. மெல்லவருடிச் செல்லும் தென்றலைப்போல.
யாழினும் குழலினும் இனிய மழலைச் சொற்களைப் பேசும் மக்கட் பேற்றை அதுவே வழங்குகிறது.
புதுவாழ்வைத் தொடங்குகிறோம்.
புதுமனிதர்களை இவ்வுலகத்திற்கு வழங்குவோம்.
புதிய மனிதர்களால் இவ்வுலகம் நிரம்பி வழிவதாக.
[மணமக்கள் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் கூறலாம்.
அல்லது சொல்லச் சொல்லத் திரும்பச் சொல்லலாம்.]
உங்கள் அன்பையும் வாழ்த்தையும் ஏற்கிறோம் .
உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது.
நண்பர்களின் வாழ்த்தை ஏற்கிறோம்.
உறவினர்களின் அன்பை ஏற்கிறோம்.
சுற்றத்தாரின் வருகையை ஏற்கிறோம்.
உற்றாரின் வாழ்த்தை ஏற்கிறோம்.
உங்கள் அன்பையும் வாழ்த்தையும் ஏற்கிறோம்.
உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது.
உங்கள் அன்பையும் வாழ்த்தையும் ஏற்கிறோம் .
உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது.

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்