இப்படியாக முடிந்தது 2022



எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன். அதில் ஏற்பனவற்றையும் எதிர்ப்பனவற்றையும் சுட்டிக்காட்டுகிறேன். சுட்டிக்காட்டும்போது திட்டமிட்ட முன்வைப்புகளாக இருக்கக் கூடியன எவை? பொதுப்போக்கோடு இணைந்து உருவாகி இருக்கக் கூடியனவாக எவை இருக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டுகிறேன். இந்த வாசிப்பையும் திறனாய்வுப் பார்வையையும் பொது நிலையில் நுண்ணரசியல் வாசிப்பாகவும்,பேரரசியல் சுட்டல்களாகவும் புரிந்துகொள்ளலாம். இப்பொதுப்போக்கில் எழுதப்படும் கட்டுரைகளைத் தாண்டி, இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், சினிமா, நாவல்-சிறுகதையென அழைக்கப்படும் புனைகதைகளையும் தனித்துவமாக வாசித்துக்காட்டி வருகிறேன். தேவைப்படும் நேரங்களில் பின்னோக்கிய பார்வையில் வரலாற்றையும் நிலவெளிகளையும் முன்வைத்துப் பேசுகிறேன். இவையெல்லாம் சேர்ந்து சமகாலச் சமூகத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையில் எனது வாசிப்பையும் எழுத்தையும் சமூகவியல் வாசிப்பாகவே நினைக்கிறேன். இந்த அடிப்படையில் இந்த ஆண்டு வாசித்து எழுதியனவற்றை இங்கே தொகுத்து வைக்கிறேன். 2022 இல் கடந்த ஆண்டுகளைப் போலப் புதியனவாக எழுதியன குறைவுதான். வாசிப்பும் காட்சி வாய்ப்புகளும் குறைந்துகொண்டே வந்துள்ளன. இதற்கு எனது வயதும் காரணமாக இருக்கலாம். தொகுத்துள்ளனவற்றை இந்த வலைப்பக்கத்தில் வாசிக்க விரும்பினால் உள்ளே போய் வாசிக்கலாம்
முதலாவதாகப் பேரரசியலும் நுண்ணரசியலும் என்பதாக எழுதப்பெற்ற ஆறு கட்டுரைகள் இங்கே:

·         மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்

·         ராகுல் காந்தி: நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி

·         முதல் மரியாதை :மகிழ்ச்சியின் தருணங்கள்

·         விக்கிபீடியாவும் நானும் பிறகு தமிழ் விக்கியும்

·         ஆன்மீக அரசியல்: ரஜினியின் இடத்தில் ராஜா

·         இணக்க அரசியல் -இரண்டு குறிப்புகள்

 சினிமாக்கள் குறித்து -2022
2022 இல் திரையரங்கிற்குச் சென்று பார்த்த சினிமாக்கள் இரண்டுதான். மதுரையில் விக்ரம்-1. கோவையில் பொன்னியின் செல்வன் -1. இரண்டையும் பற்றி முகநூலில் கூட எழுதவில்லை. இணையவழி திரைப்படத்தளங்களில் பார்த்த படங்கள் 20. எல்லாப்படங்களையும் குறித்து எப்போதும் எழுதியதில்லை. கடைசி விவசாயி குறித்து அம்ருதாவிலும், சீதாராமையும் விருமனையும் எதிரெதிராக வைத்து உயிர்மையிலும் எழுதிய இரண்டு கட்டுரைகளே அச்சில் வந்தன. தமயந்தியின் காயல், செல்வராகவனின் சாணிக்காயிதம், தமிழின் டாணாக்காரன் குறித்த கட்டுரைகள் வலைப்பூவில் எழுதப்பெற்றவை.

நாடகங்கள் பற்றி /2022
நாடகங்களின் மேடையேற்றங்களும் குறைந்துள்ளன. என்றாலும் சென்னையில் புதியபுதிய நாடகங்கள் மேடையேறிக்கொண்டேதான் இருக்கின்றன. கோவிட் தொற்றுக்குப் பின் சென்னைக்குப் போகும் வாய்ப்பும் தங்குவதும் குறைந்துவிட்டது. கடைசியாகச் சென்னைக்கு நாடகம் பார்க்கவே போனேன். தனது கதைகளை ப்ரசன்னா ராமஸ்வாமி மேடையேற்றும் நிகழ்வுக்கு வரவேண்டுமென அழைத்த நிலையில் போய்ப்பார்த்தேன். அதன் மீதான குறிப்புகளை நீலம் இதழில் எழுதினேன். கடந்த ஆறுமாதமாகக் கோவையில் இருக்கும் நிலையில் கல்லூரி, பள்ளி மாணவர்களின் மேடையேற்றங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனைத் தாண்டி கோவை பூசாகோ கலைக்கல்லூரியில் பணியாற்றும் ராமராஜின் ஒருங்கிணைப்பில் அரங்கேறிய ஓராள் நாடகத்தைப் பார்த்த அனுபவம் நல்ல அனுபவமாக இருந்தது.  

நாவல் எழுத்து -2022
வாசித்த நாவல்கள் எல்லாம் எழுதத்தூண்டுவன அல்ல. இந்த ஆண்டுவாசித்த எட்டு நாவல்களில் ஐந்து நாவல்கள் பற்றி மட்டுமே கட்டுரையாக எழுத முடிந்தது. இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அவலத்தைச் சொன்ன கோ.புண்ணியவானின் “கையறு”வையும் குறித்தும், ஈழப்போருக்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் வாழ்ந்த அனுபவத்தோடு இலங்கையிலிருந்து புலம்பெயரும் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் துயரங்களையும் வலியையும் விவாதித்த ஆ.சி. கந்தராஜாவின் ”ஒரு அகதியின் பெர்ளின் வாசல்” நாவல் குறித்தும் அம்ருதாவில் எழுதினேன்.
கார்பரேட் வணிகத்தன்மையுடன் இயங்கத் தொடங்கியுள்ள இந்திய மருத்துவ உலகத்தை ஊடறுத்துப் பார்க்கும் விதமாக ஒரு பள்ளி மாணவனின் நோய்மையை முன்வைத்து விசாரணைகளை மேற்கொண்ட இமையத்தின் “ இப்போது உயிரோடிருக்கிறேன்” நாவல் குறித்த கட்டுரையைத் தலித் இதழில் விரிவாக எழுதினேன். எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் நடந்த தர்மபுரி நக்சலைட் படுகொலைகளின் பின்னணியில் எழுதப்பெற்ற நாராயணி கண்ணகியின் “வாதி” நாவலையும் செங்கல்பட்டு மாவட்டத்து விவசாயப்பண்ணையில் சாதியம் செயல்பட்ட விதத்தை வெளியாளின் பார்வையில் எழுதிய நோயல் நடேசனின் " பண்ணையில் ஒரு மிருகம்” இரண்டையும் இணைத்து - நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும் - என்றொரு கட்டுரையையும் எழுதினேன். 

சிறுகதை வாசிப்பு- 2022
நாளொன்றுக்கு ஐந்து கதைகளாவது வாசித்துக்கொண்டிருந்த பழக்கம் இப்போது ஒரு சிறுகதையாவது வாசித்துவிடும் பழக்கமாக மாறியிருக்கிறது. அத்தோடு சிறுகதைகளைத் தொகுதியாக வாசிப்பதும் குறைந்துவிட்டது. வாசித்தாலும் அதனைக் குறித்து எழுதுவதற்குப் பெரும்பாடுபடவேண்டியுள்ளது.போட்டிகளில் நடுவராக இருந்த காலகட்டத்து நெருக்கடிகளும் இப்போது இல்லை. முன்னுரைக்காகவோ மதிப்புரைக்காகவோ தரப்படும் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள கதைகளில் பலவும் முன்பே வாசித்தவை என்பதால், வாசிக்காத கதைகளை வாசித்துவிட்டு எழுதிவிடலாம்.
அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வரும் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்துவிடுவதால் தொகுப்பாக வாசிக்கும்போது தொடர்வாசிப்பு விருப்பமில்லாமல் போய்விடுகின்றது. .
************************* 


மாதமொன்றில் இரண்டு நாட்கள்
கோவிட் 19 -க்குப் பின்னான இந்த ஆண்டில் பயணங்கள் குறைந்துவிட்டன. பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை என்று சொல்லமுடியாது. ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணிவாய்ப்பாகக் கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் வழக்கமான ஆசிரியர் பணியாக இல்லாமல், ஆலோசக நிலையில் ஒரு பணிவாய்ப்பைப் பெற்று கோவைக்கு நகர்ந்துள்ளேன். 2011 அக்டோபரில் போலந்தின் வார்சாவுக்குப் போனது முதல் எனது நாட்குறிப்புகளைக் கணினியில் எழுதிவருகிறேன். இந்த ஆண்டில் எழுதிய நாட்குறிப்புகளில் - மாதம் ஒன்றில் இரண்டு நாட்கள் என்பதாக இங்கே ...  
2022/ஜனவரி,1

போடும் திட்டங்களையெல்லாம் ஒமிக்ரான் குழப்பிவிட்ட து. புனேவுக்குத் திரும்பிவிடலாம் என்றதிட்டத்தைக் கைவிட்டுவிட்டு சிநேகாவும் பிர்ஜித்தும் சென்னைக்குக் காரில் கிளம்பினார்கள்.அமெரிக்க விசா நேர்காணல் நாளை இருப்பதால் இந்த பயணம் தவிர்க்க முடியாது. பிற்பகல் மணிகண்டன் வந்தார். வீட்டில் செய்ய வேண்டிய நேற்று இருந்த நெஞ்செரிச்சல் காரணமாகவும், காலைப்பனியின் காரணமாகவும் மிதிவண்டி ஓட்டம் காலையில் இல்லை. மாலையில் உரப்பனூர்க் கண்மாய்வரை ஓட்டம் (9,55). புத்தக வேலைகள் தொடர்கின்றன

ஜனவரி ,19


தொண்டைக்கமறல் இருந்த து. மீன் கடைக்குப் போய் அயிரை, இறால், வாளை மீன் வாங்கி வந்தேன், 4 மணிக்கு இந்தியன் வங்கிக்குப் போய் மேலாளரிடம் வீட்டுக்கடன் வாங்குவது தொடர்பாகப் பேசிவிட்டு அப்பல்லோவில் மருந்துகள் வாங்கி வந்தோம்.

பிப்ரவரி, 6

 லதா என்னும் இசைப்பறவை

இன்று நம் கையில் இருக்கும் அலைபேசி ஒன்றில்

பல்வெளிப்பாடு கருவி. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எண்பதுகளில் - நடுத்தரவர்க்க இல்லங்களின் அடையாளமாக இருந்த கருவிக்குப் பெயர் ஒன்றில் இரண்டு (TWO in ONE) ஒவ்வொரு வீட்டின் அலமாரிகளிலும் அந்தக் கருவியும் ஒலிநாடாக்களின் தொகுப்பும் அடுக்கப்பட்டிருக்கும். நான் அதில் மூன்று வசதிகளைத் தினசரி பெற்றுக்கொள்வேன். வானொலியில் செய்தி கேட்பதில் தொடங்கும் காலைநேரம் , பாடல் கேட்பதோடு நீளும். எழுத வேண்டிய குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்துக்கொள்வதும் உண்டு.

முக்கால் அடி உயரமும் ஒன்னேகால் அடி நீளமும் கொண்ட நேசனல் பேனசானிக் வாங்கியபோது இலவசமாகத் தந்த ஒலிநாடா எம் எஸ். சுப்புலட்சுமியின் குரலில் ஒலித்த மீரா பஜன். அதனைக் கேட்ட நண்பர் ஒருவர் லதா மங்கேஸ்கர் பாடிய மீரா பஜன் வாங்கிப் போட்டுக்கேளுங்கள் என்றார். தாளங்களின் அதிர்வுகள் வெளிப்படாமல் - அலையடிக்காத - குளத்து நீரின் அசைவைப் போல வட்டவட்டமாய் நகரும் இசைலயத்தின் கோர்ப்புகளுக்காகவே லதா மங்கேஸ்கர் பாடிய மீரா பஜன் வாங்கினேன். சுப்புலட்சுமியின் பஜன்கள் தவழும் நீர்ப்பரப்பென்றால் லதாவின் பஜன்கள் வாய்க்காலில் நழுவும் நீரோட்டம். இரண்டையும் தாண்டிக் கால்வாய் நீரின் சலசலப்போடு அனுராதா பொட்வாலின் மீரா பஜன்கள் செவியில் மோதிக்கொண்டிருந்த காலங்களும் உண்டு.

இளையராஜாவின் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டிலும் உச்சரிக்கப்பட்ட இசை அடையாளம் லதா மங்கேஸ்கர். சொற்களின் அளவும் அர்த்தமும் தெரியாதபோதிலும் அவரது குரலின் ஏற்ற இறக்கத்திலும் அலையடிப்பின் தவிப்பிலும் இந்தியக் காதல் இணைகள் சிறகின்றிப் பறந்துகொண்டிருந்தார்கள். இசைப் பறவையின் உருவம் வான் பரப்பில் மறைந்து போகலாம். ஆனல் குரலின் அலையடிப்பு நிற்கப்போவதில்லை.


பிப்ரவரி 18

நன்றி நட்புகளே

பிப்ரவரி 17 - இந்தத்தேதி எனது பிறந்த நாள்

என்பதைச் சான்றிதழ்கள் உறுதிசெய்துவிட்டன. முகநூலில் இருப்பதால் அந்த நாள் நினைத்துக்கொள்ளும் நாளாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் ஆகிவிட்டது. நள்ளிரவில் தொடங்கி அலைபேசியின் வெவ்வேறு பாதைகள் வழியாக - புலனம், தகவல்பாதை, காலக்கோடு எனத் தொடர்ச்சியாக வந்த வாழ்த்துகள். அந்த நாளை மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கிவிட்டது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

2022, பிப்ரவரி 22 கடந்துவிட்ட நிலையில் 63 வயது முடிந்து. இன்றிலிருந்து இன்னொரு வயதிற்குள் நுழைகிறேன். எல்லா நாளையும்போல நேற்றும் ஒருநாள் தான். இன்றும் இன்னொரு நாள் தான். எல்லா நாட்களையும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் கழிக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுநாள். நேற்று எழுதிய கட்டுரைக்கான ஆதாரம் இமையத்தின் ‘ இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்னும் நாவல். ஒவ்வொரு நாளும் இருக்கிறோம் என்பதைப் பதிவுசெய்து கொண்டே இருப்பதுதானே வாழ்க்கை.

வாழ்த்துகளுக்கு நன்றி நட்புகளே!

மேலக்கோட்டை – கரிசல்பட்டி- சுற்றுச்சாலைப் பயணம். 16.45.

பணியாரம் வாங்கப்போனேன்; இல்லை. பிரட், முட்டை, கோழிக்கறி வாங்கிக் கொண்டு, வாக்குச்சாவடிகளைப் பார்த்தபடி வந்தோம். புனேயிலிருந்து பொருட்கள் வருவதால் வீட்டைத் தயார்படுத்தும் வேலை. 11 க்குப் பிறகு வந்த து. 3 மணி நேரத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள். பொருட்கள் இடமாற்றம் நடக்கிறது.ஜனநாயகக் கடமை ஆற்றவில்லை

ஊர்மாறி வந்ததில் முறையாக மாற்றம் நடக்கவில்லை. முகவரி சரியாக இருக்கிறது. ஆனால் வார்டுகள் சரியாக இல்லை. திருமங்கலத்தில் நான் இருக்கும் 4 வது வார்டிற்குப் பதிலாக 16 - வது வார்டில் எனக்கு வாக்கு இருப்பதாகக் காட்டுகிறது இணையதளம். மனைவிக்கு நகர்ப்புறத்தைவிட்டு விலகியிருக்கும் மேலக்கோட்டையில் வாக்கு.வாக்களிப்பது கடமைதான்; ஆனால் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமல் வாக்களிக்க விருப்பமில்லை.

மார்ச்,1

சென்னை அண்ணாசாலை குபேர் இன் அறையில் காலை, மதியம் சாப்பாடு. காலையில் கண்ணன் நேருக்கு நேர் சந்திப்பு. பேசிக்கொண்டோம். வருணா வந்தாள். 4 மணிக்குப் போய் கவிதை வாசிப்பைக் கேட்டுவிட்டு ஒரு சுற்றுச் சுற்றினேன். நூல் வெளியீடு.

தமிழ் சினிமா : முன்வைப்புகள் - கவன ஈர்ப்புகள்-வெளிப்பாடுகள்

கண்காட்சி நேற்று(1/3/22) நடந்த நிகழ்வில் எழுத்தாளர் இமையம் வெளியிட எழுத்தாளரும் ஆட்சிப் பணி அதிகாரியுமான திரு. ராஜேந்திரன், இ.ஆ.ப. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் வெண்ணிலாவும் இன்னொரு பிரதியைப் பெற்றுக்கொண்டார். உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் முன்னிலை வகித்த நிகழ்வை பதிப்பாளர் செல்வி ஒருங்கிணைப்பு செய்தார்.
எட்டுமணிக்கு வருணாவோடு ஆட்டோவில் வந்து அனுப்பிவிட்டு அறைக்குப் போய்விட்டேன்.

மார்ச்,20

இராஜபாளையத்தில் சுதந்திரச் சிந்தனை

2015 நவம்பர் மாதம் தொடங்கித் தமிழ் இலக்கியப் பரப்பில் இயங்கும் பல்வேறு ஆளுமைகளை அழைத்து உரையும் உரையாடலையும் நடத்தி வரும் அமைப்பு சுதந்திரச் சிந்தனை அமைப்பு. மாதம் ஒருவரை அழைப்பது என்பதான திட்டத்தில் அழைக்கப்படும் நபர்களின் உரையின் மையப்புள்ளிகளைத் தொகுத்து நூலாக வெளியிடுகிறது. இன்று நான்காவது தொகுதி வெளியீடு. அந்நிகழ்வுக்கென எழுத்தாளர் இமையமும் பத்திரிகையாளர் சமஸும் வருகின்றனர். நான் இமையம் எழுத்துகள் குறித்து பேசுகிறேன்.

பிர்ஜித்துடன் காரில் பயணம். வீட்டில் 7.20 க்குக் கிளம்பி ராஜபாளையம் போனபோது மணி 8.40. இமையம் வரவில்லை. சமஸ் இருந்தார். அமைப்பின் தொடக்க நிலையில் இருந்த லோகநாத ராஜாவும் நரேந்திரக்குமாருக்கும் இடையே முரண். புதிதாக வருபவர்களை வைத்து தன்னை ஒதுக்க நினைப்பதாக நரேந்தரக்குமார் வெளியேறியிருந்தார். இருந்தாலும் சமஸ் அழைத்த நிலையில் வந்துவிட்டார். 10.40 -க்கு ஆரம்பித்து ஒருமணிக்கு முடிந்த து. காலையில் ஆனந்தா இன்னில் பூரி, தோசை. மதியம் சந்திராயணில் பிரியாணி. உரைக்கு 2000 சன்மானம். வீடு வந்தபோது மணி 7.40. ஏப்ரல், 1

எழுத்தாளர் தமயந்தியின் இரண்டாவது சினிமா காயல்’ முழுவதும் முடிந்து திரையிடத் தயாராக இருப்பதாகச் சொன்னார். விரைவில் பார்வையாளர்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் என்றும் சொன்னார். ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தவர் கொள்ளும் அன்பும் பிரியங்களும் குறித்து எழுதுவதில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தும் தமயந்தி, அவற்றைத்தடுக்கும் சிடுக்குகளையும் விவாதப்படுத்திய படங்களில் கவனம் செலுத்துபவர். வீட்டில் வைத்துப் படம் பார்த்துவிட்டு தமிழ் இணையக்கல்விக்கழகம் சென்று விவாதம் முடித்து அம்பத்தூர் திரும்பிய போது மணி 7

ஏப்ரல் 4 
காலை 4 மணிக்கு எழுந்து கிளம்பி, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏறி செண்ட்ரல் போய் ஜோலார்பேட்டை ரயிலேறிப்போனேன். இறங்கியபோது மணி 10. நாராயணி கண்ணகியின் மகன் நா.கோகிலன் வந்தார். பேசிக் கொண்டிருந்தோம். ஜெயபாஸ்கரன் என்ற சூழலியக் கவிஞரும் வந்தார். அறைக்குப் போய் ஓய்வெடுத்தோம். பாமரனும் வந்துவிட்டார். மதியம் பாலாஜி வீட்டுச் சைவச் சாப்பாடு. நல்ல விருந்து. மாலையில் கூட்டம். பாமரன், மனுஷ்யபுத்திரன், அருள்மொழி. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு ஹாய் மட்டும் சொன்னேன் . ஆர்யாஸின் தோசை. என்னுடைய உரை நாளைதான்.

ஏப்ரல் 30
 காலையில் தாமதமாக எழுந்து 10.20 -க்குக் கிளம்பி உலகத்தமிழ்ச்சங்கத்திற்குப் போன போது 11 மணிக்குப் போய்ச்சேர்ந்தேன். நீலம் அமைப்பின் இரண்டாம் நாள் உரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன. கோரிப்பாளையம் பிரியா வந்து பார்த்துச்சென்றது. இதழியலாளர்கள் உரையாடல் நன்று. வரலாறு, நிகழ்வுகள் புனைவாக்கம் பழைய மொழியிலேயே இருந்தது. ராஜ் கௌதமன் விருதளிப்பு 6 மணிக்குத் தொடங்கி 8 மணிக்கு முடிந்தது. மதுரையின் பார்வையாளர்கள் இன்று அதிகம். வீடு வந்து சேர்ந்தபோது 9.45

மே.5

இரவு முழுவதும் சென்னை பன்னாட்டு விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையமெனத் திரிந்து தூக்கம் இல்லை. 4.30 -க்கு வாசல் 12 என அறிவிக்கப்பட்ட து. தூங்காமல் அலைந்துகொண்டே இருந்து விமானம் ஏறியவுடன் -6.40 க்கு தூங்கிவிட்டேன். மதுரையில் 8.20 க்குத் தரையிறங்கி வீடு வந்து மாலை 5 மணி வரை தூக்கம். விஜயா சிக்கல் இல்லாமல் பயணம். 2.40 க்குப் பேசினேன். ராகுலனுடன் காரில் போய்க்கொண்டிருந்தாள்.
மே.23
அகசியாவில் இன்னொரு நாளுக்குமென நீட்டித்துக்கொண்டு தங்கல். 9.30 க்குக்கிளம்பி கல்லூரிக்குப் போய்விட்டேன். போன சில நிமிடங்களில் மதுமிதா வந்தார். பணியில் இணையும் விதமாகச் சில படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு உயர் பொறுப்பு அதிகாரிகளைச்சந்தித்தேன். என்னைப்போலவே இன்று பணியில் இணைந்த ரமேஷ், வளாக க் கட்டமைப்பு உருவாக்கப் பொறியாளரும் சேர்ந்துகொண்டார். வெங்கடாசலம், குழும நிர்வாகச் செயலர், நிர்வாக அதிகாரி, மேலாண்மையியல் துறைத் தலைவர், பொறியியல் கல்லூரி முதல்வர், மாணவர் நல அதிகாரியெனப் பார்த்துவிட்டு மதிய உணவு. பின்னர் தமிழ்த்துறை, ஆய்வு நூலகம் பார்த்து முடிக்க மணி 4.30. ஒரு நடைபாதையில் முதல்வரைப் பார்த்தேன். முறையாக இன்னும் சந்திக்கவில்லை. இன்னும் சிலரை நாளை சந்திக்கலாம் என்றார் மதுமிதா.
தங்குவதற்கான இடமாக கைவின் விடுதியில் அறை காட்டப்பட்டது. சுடலைமணி உடன் வந்தார். நல்ல பெரிய அறைதான். ஆனால் கட்டில் போன்ற தளவாடச் சாமான்களில் ஒழுங்கு இல்லை. அங்கிருந்து வந்து அறையில் குளித்து முடித்தபோது மதுமிதா திரும்பவும் அலைபேசியில் அழைத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இருக்கும் விருந்தினர் விடுதியைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். தனிநபர் தங்குவதற்கான அறையை எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டேன். நாளைக் காலை அங்கு போய்விட வேண்டும்.
கல்லூரிக்குள் நுழைந்து முதல்வரைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஆயல் விழாவுக்குப் போனேன். ஒருநாள் விழாவாக ஆயல் விருது வழங்கும் விழா கொண்டாட்டமாகக் காலையில் நடந்தது. வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறுவதற்கு எஸ்.வி.ஆர் வரவில்லை என்பது பலருக்கும் ஏமாற்றமாக இருந்ததைப் பேச்சுகளிலிருந்து அறியமுடிந்தது. கோணங்கி,கலாப்ரியா அதிகம் வருத்தப்பட்டனர். அவரது வாழ்வும் எழுத்தும் இடதுசாரிகளுக்குத் தந்த உற்சாகத்தையும் வழிகாட்டுதல்களையும் ஆதவன் தீட்சண்யாவின் விரிவான உரை முன்வைத்தது. தேவிபாரதி விருதுபெறுவதைப் பார்க்கவும் அவரைப் பற்றிப் பேசவும் அவரது நண்பர்கள் படையணியாக வந்திருந்தனர். மோகனரங்கனும் அரவிந்தனும் விரிவாக அவரது எழுத்துகள் குறித்துப் பேசினார்கள். யவனிகாவின் கவிதைகள் குறித்த சங்கர்ராமசுப்பிரமணியனின் உரை இதுவரை அவரைக்குறித்த அவதானிப்புகளில் உச்சம்.

ஜூன் 4

பிற்பகலில் நடக்கவேண்டிய புனைவுகளுக்கான உரையாளர்களும் கவிதைக்கான உரையாளர்களும் உரிய நேரத்தில் வந்து சேராத நிலையில் இரண்டையும் ஒன்றாக்கி நடந்தபோது சுப்பிரபாரதி மணியன், சு.வேணுகோபால், அரவிந்தன் ஆகிய மூவரும் புனைதைகள் குறித்துப் பேச, க.வை. பழனிச்சாமியும் நானும் கவிதைகள் குறித்த சிற்றுரைகளை வழங்கி முடிக்கும்போது கலாப்ரியாவும், மனுஷ்யபுத்திரனும் பவா செல்லத்துரையும் வந்து சேர்ந்தனர். முடிய இருந்த நிகழ்வுகள் அடுத்ததொரு நிகழ்வாகத் தொடர்ந்தது. ஒவ்வொருவரையும் விரிவாக அறிமுகம்செய்த வசந்தமாலாவின் குறிப்புகள் வந்திருந்த மாணவர்களுக்குப் பயன்படும் குறிப்புகளாக இருந்தன. விருதுத்தொகையோடு நிகழ்வுக்காகவும் செலவுசெய்து ஆயல் விழாவைச் சிறப்பாக நடத்திய கவி. சின்னச்சாமி பாராட்டுக்குரியவர்.
அலுப்பாக இருந்த து. பேச நினைத்ததைப் பேசவில்லை. 8 மணிக்கு வந்து தூங்கிவிட்டேன்.

ஜூன் 28 
வழக்கம்போல அக்கசியா வரை நடை. காலை 9 மணிக்கு அமர்ந்து நிதித்தேவையை துறை, ஆய்வுமையம், நூற்றாண்டுவிழா எனப் பிரித்துக் காட்டிக் கொண்டுபோனேன். வெங்கடாசலம் 10 மணிக்கு வரவில்லை. பிற்பகல் 3.30 முதல் 4.00 மணி வரை அமர்ந்து பேசி முடித்தோம். நளாயினியின் நளினங்கள் குறித்துப் பேசினோம் 

ஜூலை 1

இரவு தூக்கத்தில் குழப்பம். 3 மணிக்கு எழுந்ததால் திரும்பவும் ஐந்து மணிக்குப் படுத்துவிட்டேன். காலை நடை இல்லை. முகவரிகள் சேகரிப்பு. விளம்பர மாற்றம். பல்கலைக்கழகக்குழு வருகைக்குத் தயாராதல் என நகர்கிறது. மாலை சுவாகத் அடுக்க கம் சென்று டி.6 பார்த்தேன். பிடித்த து. பிரிவுச்சாலை மட்டும் சரியில்லை. இரண்டு மாத த்தில் போட்டுவிடுவார்கள் என்றால் அடுக்க கச் செயல் தலைவர் திரு அருண். சுவாகதாவின் படுக்கையும் சாய்மான நாற்காலியுமான பொருளை 7000 -க்கு எடுத்துக்கொள்ளச் சம்மதம் சொன்னேன். காஞ்சனாவோடு பேசவேண்டும்.

ஜூலை 31

இன்று காலை நடை இல்லை. இரவு 2 முதல் 4 வரை முழிப்பு வந்துவிட்டதால் காலை 6.30 -க்கு எழுந்து சென்னனனூர் அழகேசன் சந்திப்பு குறித்து ஒரு பதிவு எழுதிவிட்டுக் காலை உணவுக்குப் பின் தூக்கம். மதியம் பள்ளிப்பாளையம் கோழிக்கறியுடம் சப்பாத்தி. திரும்பவும் தூக்கம். மாலையில் நடை. இரவு பிள்ளைகளோடு பேசிவிட்டு வாசிப்பு.

அவரைத் திரும்பவும் தொடர்புகொள்வேன்

அஃதொரு தற்செயல் நிகழ்வுதான். கோவை புத்தகக் கண்காட்சியில் ஜீரோடிகிரி- எழுத்துப் பதிப்பக அரங்கில் உட்கார்ந்திருந்தேன். உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரியிடம் தமிழ்ப்பட்டப்படிப்புக்குள் பதிப்பகம் சார்ந்து என்னென்ன பாடங்களைச் சேர்க்கலாம்; பயிற்சிகள் தரலாம் என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியில் குழந்தைகள், சிறுவர்கள் வாசிப்பதற்கான தமிழ் நூல்கள் உருவாக்குவது தொடர்பாகவும் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு அவர்களது வருகையில் நின்றது. குடும்பமாக வந்திருந்தனர். மூத்தவர் ஆண்; இளையவர் பெண். ஆங்கிலத்தில் வந்திருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை மகனுக்கு எடுத்துக் கொடுத்துப் பணம் கொடுக்கத் தயாராக நின்றார்கள்.

பணம் வாங்கும்போதே ஏன் முதல் பாகம் மட்டும் என்று பேச்சைத் தொடங்கினார் காயத்ரி. இதை வாசித்து முடித்தால் அடுத்த பாகத்தை வாங்கித் தருவோம் என்றார் அப்பா. உடனே படித்து முடித்துவிட்டு அப்பாவிடம் அடுத்த பாகத்தை வாங்கித்தரச் சொல்ல வேண்டும் என்று உற்சாகம் ஊட்டினார். உடனே வாசித்துவிடுவேன் என்றார் அந்தப் பையன். "வாசித்துவிட்டு ரெவ்யூ அனுப்பினால் அடுத்தடுத்த பாகங்களுக்கு 50% சதவீதம் விலைக்குறைப்பில் தருவேன்" என்பது காயத்ரியின் பதிலாக இருந்தது. தொடர்ந்து அந்தப் பையனின் அப்பா பேசினார். நேரடியாக முகம் பார்த்துப் பேசாததை அப்போது தான் கவனித்தேன். “ சிறுவர்களுக்கென - பள்ளி மாணவர்களின் வாசிப்புக்கென எழுதப்பெற்ற நூல்கள் என்னெல்லாம் இருக்கிறது என்று கேட்டார். நானும் காயத்ரியும் சிரித்துக்கொண்டோம். நாங்கள் பேசி முடித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் ஒருவர் அது குறித்துக் கேட்கும்போது உண்டான சிரிப்பு.

பொன்னியின் செல்வன் ஆங்கிலத்தில் இருக்கிறது என்று பையன் சொன்னவுடன் வாங்கித் தரும் அவர் தான் நிற்பது ஜீரோ டிகிரி பதிப்பகம் என்பதை அறிந்தி்ருக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் பற்றிக் கேட்டது அவரது பிள்ளைகளுக்கல்ல; தன்னிடம் வகுப்பில் பாடம் படிக்கும் பிள்ளைகளுக்காக என்பதைச் சொன்னார். இப்போதுதான் நானும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தோமெனக் காயத்ரி சொன்னார். என்னை அவருக்கு அறிமுகம் செய்தார் காயத்ரி. காயத்ரியை நான் அறிமுகம் செய்தேன். எனது பெயரும் நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன் என்றார். அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாம் இப்போதுதான் கவனித்துப் பேசினார்கள். அண்மையில் நடந்த நீயா? நானா?வில் காயத்ரி கலந்துகொண்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னார்கள். மொத்தக் குடும்பத்தையும் அழைத்து அமர வைத்துப் பேசினோம். அவரது பெயர் அழகேசன்; சென்னனூர் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மாணவர்களை வாசிக்கத்தூண்டும் விதமாக அவர் வாசிக்கக் கேட்டுப் பலநூல்களை அறிமுகம் செய்வதாகவும் சொன்னார். அவர் வாசிப்பதற்காக வங்க தேச எழுத்தாளர் ஒருவரின் நூலொன்றை இலவசமாகக் கொடுத்து உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார்.
நான் அவரது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு படம் எடுத்துக்கொண்டேன். விரைவில் தொடர்புகொள்வேன்; பள்ளிக்கு வருவேன் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். விரைவில் தொடர்பு கொள்ளவேண்டும்.
வாசிப்பின் ஒளி அவரிடம் மிதந்துகொண்டிருந்தது. வெளிச்சம் வெளியில் இல்லை.

ஆகஸ்டு 7

காலையில் நடை. 12.15 க்குக் கிளம்பி ரயில் நிறுத்தம். அங்கே நானும் கோழிக்கறியும் சாப்பிட்டுவிட்டு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரக்காத்திருப்பு. சென்னை நோக்கிப் பயணம். இரவு 10.40 க்கு எம்ஜிஆர் ரயில் நிலையம். இறங்கி மெட்ரோ செல்லும் வழியில் விஜயா ஏறவேண்டிய விமானம் தோஹாவில் தாமதமாகிறது என்று தகவல். முன் திட்டமிடாமல் விமான நிலையத்திற்கு வந்துவிட்டேன். காலை 7.30 க்குத் தான் விமானம் வரும் என்பதால் எங்காவது அறைபோட்டுவிட நினைத்து இணையவழி எண் எடுத்து தொடர்பு கொண்ட போது பம்மலிலுள்ள ராயல்கிரீன் கிடைத்த து. ஓலா வாகனத்தில் போய் இறங்க 300/ அறை வாடகை 1000/- படுத்து நான்குமணி நேர உறக்கம்.
ஆகஸ்டு 26

விசுவாசபுரம் சர்ச் வரை நடை. கல்லூரியில் மாநாட்டுத்திட்டத்தை முடிவுசெய்து அனுப்பினேன்.வங்கிக்குப் போய் 50000 எடுத்துக்கொண்டு வந்தேன். ஆண்டுத்திட்ட த்தை முடிவுசெய்யாமலேயே நகர்கிறார்கள் துறை ஆசிரியர்கள். மாலையில் தூறல். 5 மணிக்கு வந்துவிட்டேன். பின்னர் ஓய்வு

செப்டம்பர்,8

ஓணம் விடுமுறை, காலையில் இருவரும் நடைபோய்விட்டு வந்தோம். காலையில் சமையல் முடித்து விட்டு ப்ரோஷன் மால் போய் ஆடைகள் வாங்கிக் கொண்டு வந்தோம். 25 000 ரூபாய் வரை செலவு. முருகவேள் மகள் திருமணம் போக நினைத்துப் போகவில்லை. ஓய்வு

செப்டம்பர் 24

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் நாடகப்போட்டிகள். ரெட் டாக்ஸி கிடைக்கவில்லை. நானே வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டேன். கல்லூரிக்குப் போனபின் கொஞ்சம் குழப்பம். பல கல்வி நிறுனங்கள் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகம் அது.

இந்திய விடுதலை - 75 என்பதை மையப்படுத்திய நாடகங்கள் நடத்தலாம் என்ற பொதுப்பொருண்மையில் குயிலி, வ.உ.சி, வாஞ்சிநாதன், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, அரவிந்தர், ஜல்காரிபாய், திருப்பூர்க்குமரன் போன்ற ஆளுமைகளை முன்னிறுத்தும் நாடகங்களையும் ஜாலியன் வாலாபாக் நிகழ்வைக் காட்சிப்படுத்தும் நாடகத்தையும் கோவை, ஈரோடு மாவட்டத்திலிருந்த கல்லூரி மாணாக்கர்கள் நடத்தினார்கள். ஒப்பனை, உடை, ஒளியமைப்பு என எதிலும் குறையில்லாத ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்ட நாடகங்களை வசனங்களை ஒலிப்பதிவு செய்து நடிக்காமல் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களே பேசி நடித்திருந்தால் ஒவ்வொன்றிலும் பங்கேற்றவர்களின் திறமைகள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். பத்து நாடகங்களில் பரிசுக்குரிய நான்கு நாடகங்களைத் தேர்வு செய்ய நாடகத்துறையோடு தொடர்புடையவர்களை அழைத்திருந்ததும், கருத்துக்களைக் கூறச்சொன்னதும் இன்னும் சிறப்பான ஏற்பாடு. கணிசமான தொகையைப் (7500 தொடங்கி 15000வரை) பெற்றுக்கொண்ட மாணாக்கர்களின் பங்கேற்பும் ஏற்பாட்டாளர்களின் ஈடுபாடும் மகிழ்ச்சியூட்டக்கூடியனவாக இருந்தன.

அக்டோபர்,15

நடை இல்லை. 9 மணிக்குக் கிளம்பி அடையார் ஆனந்தபவனில் இனிப்பு, காரவகைகள் வாங்கிக்கொண்டு திசைமாறி போத்தீஸில் நுழைந்தோம். மருந்துப் பொருட்கள் வாங்க நினைத்து ஆர். எஸ். புரம் சாலையில் சில கடைகள் ஏறி இறங்கினோம். கணபதியில் இருக்கும் கருடவேகாவுக்கு அழைத்தேன். ஆனால் நான் நின்ற இடமோ ஆர்.எஸ். புரம். இங்குமங்கும் அலைந்து கடைசியில் கண்டுபிடித்துப் போனபோது மணி 12.30. வரிசை அட்டை 4. ஆனால் நேரமாகும் என்றதால் பக்கத்திலிருந்த செட்டிநாடு உணவகத்தில் கோழிக்கறியோடு சாப்பிட்டு முடித்து வந்தவுடன் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்பட்ட து. 15 கிலோ எடைக்கு 11 500 . கூகிள் வரைபட உதவியோடு வீடு வந்து சேர்ந்தபோது மணி நான்கு. ஓய்வுக்குப் பின் எழுந்து 10 மணிக்குப் படுத்தாயிற்று

அக்டோபர் 30

காலையில் நடக்கவில்லை. ஏழரைக்கெல்லாம் கிளம்பி பேரூர் போனோம். கூகிள் வரைபடம் காட்டிய வழிதான். சின்னச்சின்னத் திசைமாற்றம் இருந்த து. 40 நிமிடம் என்பது ஒருமணி நேரம் ஆனது. அங்கே சரவண பவன் என்ற விடுதியில் காலை உணவு. கோயிலுக்குள் ஒரு மணி நேரம். 10.00 க்குக் கிளம்பி உக்கடம் ஏரிக்கு வந்தோம்.ஏரியைக் காரிலேயே சுற்றிவிட்டுப் பதினைந்து நிமிடம் அளவில் படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.12 மணிக்கு வீடு திரும்பிவிட்டோம். பின்னர் ஓய்வு. கிரிக்கெட்

நவம்பர், 27 சேரன் விரைவு வண்டி சரியாகவே சென்னைக்கு வந்து சேர்ந்த து. செண்டரலில் இறங்கிப் பல்கலைக்கழக விடுதிக்குப் போனபோது 7.30. சங்கீதாவில் மினி டிபன் முடித்துவிட்டு அன்பாதவன் குறித்த கட்டுரையை முடித்து அனுப்பினேன். மதியம் சாப்பிடவில்லை. விளக்கு விருது விழாவிற்குப் போனேன். இருப்புக்கொள்ளவில்லை. அலுப்பூட்டும் பேச்சுகள். நடந்து வந்து பட்டினப்பாக்கத்தில் ஒரு சாலையோரக்கடையில் இரண்டு தோசை இரட்டை முட்டை ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினேன்

நவம்பர் 28

காலை தாமதமாக எழுந்தேன். பேசுவதற்கு தயாரிப்பு. 12 மணிவாக்கில் மணிகண்டன் வந்தார். 10, 280 கொடுத்தார். அதிகமான தொகை. 2.30 க்குக் கூட்டம் ஆரம்பம். 3.55 க்கு முடிப்பு. பின்னர் அறைக்குப் போய்விட்டு வெளியே வரும்போது மாணவர்கள் – ஒரு பெண் உள்பட வந்தார்கள். அவர்களோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கடையில் தேநீர் குடித்துவிட்டுத் திரும்பினேன். அங்கே முதுகலை மாணவர்களும் இருந்தார்கள். நல்ல உரையாடல். எங்கும் போகவில்லை. 7 மணிக்குக் கிளம்பி ரயிலடி போனேன். ஆனந்தபவனில் தோசையும் 2 வடைகளும். 9.05 க்கு 8 மணிக்குத்திறந்தார்கள். ஏறிப்படுத்துவிட்டேன். சரியாக 5 மணிக்குக் கோவை வந்துவிட்ட து.நீலகிரி எக்ஸ்பிரஸ்
டிசம்பர்.3

தொண்டை கரப்பு இருந்த து. காலை 11 மணிக்குக் கட்டடம் தொடர்பான கூட்டம் நிசாந்துடன். அதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் நாட்யநாடகம் தொடர்பான கூட்டம். சங்கர் வாணவராயருடன் நடனப்பெண்ணும் இருந்தார். ஒரு சிறுபுத்தகம் தயாரிப்புப் பணி ஒதுக்கப்பட்ட து. 1.30 க்கு முடிந்தது. திரும்பவும் கோவை விழா தொடர்பான கூட்டம் நிசாந்துடன். முடிந்தபோது மணி 4.00. காலையிலிருந்து குளிரூட்டிய அறைகளில் இருந்த தால் நேற்றைய தொண்டை கரகரப்பு கூடிக் காய்ச்சல் போல மாறியது. வீட்டிற்கு வந்து நடந்துபோய் காரை எடுத்துக்கொண்டு வந்தோம். காப்பீடு போக 13 610 கட்டினோம்

டிசம்பர் 30

காலை 7 .20 மணிக்குக் கிளம்பி 10.20 க்குக் காந்திகிராமம் அடைந்தேன். ஆய்வாளர் கிறிஸ்டோபரின் ஆய்வுச்சுருக்கம் – மலையக இலக்கியத்தில் மாத்தளை சோமுவின் புனைகதைகள் – மீதான கருத்துகளும் மாற்றங்களும் சொல்லித் திருத்தம் தந்தேன். 12.20 க்கு வேலை முடிந்தது. கிளம்பி 3.20 க்குக் கோவை வந்துவிட்டோம். மாலையில் ரிலையன்ஸ் போய் இரண்டு மாத த்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு 8.20 க்கு வந்துவிட்டோம். இரவு ஜெயஜெய ஜெயஹோ பார்த்து முடித்தபோது மணி 12.20.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்