சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2


நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன?

நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச்

சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.
ஜனவரி, 12

சுப்ரபாரதிமணியனின் விருப்பங்கள்

அரசுத்துறைகளிலோ, பொதுத்துறைகளிலோ வேலை பார்த்துக்கொண்டே எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருப்பவர்களைக் குறிக்கும் சொல்லாகப் பகுதிநேர எழுத்தாளர் என்ற சொற்றொடர் வழக்கில் இருந்தது. இந்த வழக்குச் சொல்லுக்கு எடுத்துக்காட்டப் பல எழுத்தாளர்களும் உண்டு. பொதுத்துறையான தொலைத்தொடர்பில் பணியாற்றிய சுப்ரபாரதி மணியனை அந்தப் பட்டியலில் சேர்க்கமுடியுமா? என்று தெரியவில்லை.
தொடர்ச்சியாகச் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிக்கொண்டே இருந்தவர். கனவு என்ற சிற்றிதழில் புனைவெழுத்துகளைத் தாண்டி சினிமா, அரங்கியல் எனக்கட்டுரைகளை வெளியிட்டவர். 100 இதழ்களைத் தாண்டி இப்போதும் வந்துகொண்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் விருது என்னும் அங்கீகாரம் அவர்களின் தொடர் வினைகளுக்கு ஊக்கம் தரும் என்ற புரிதலோடு ‘திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது’ என்ற விருதுக்குவியலை உருவாக்கி ஆண்டு தோறும் பலருக்கும் விருதளிப்பு நிகழ்வை ஒருங்கிணைப்பவர் அவர். அவ்விருதை வாங்கிய எழுத்தாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறார்கள்.
*************
குறிப்பான ஒரு நகரப்பின்னணியில் மனிதர்களின் அலைவையும் பொருளியல் சார்ந்த இருப்பையும் உளச்சிக்கல்களையும் எழுதியவராக அடையாளம் காட்ட அவர் ஒருவரே இருக்கிறார். கால் நூற்றாண்டுக்கு முன்னால் பேரூர் என்ற நிலையிலிருந்த திருப்பூர் பரப்பளவிலும் தொழில் வளர்ச்சியும் விரிந்தபோது சுற்றுச்சூழலும் மனித உறவுகளும் எப்படிக் கேடுகளைச் சந்தித்தன என்பதைச் சொல்லும் புனைவுகளையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்துள்ளார். இவையல்லாம் அவரது விருப்பமாக இருப்பது பயணங்கள். இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் அவர் சென்றுவரும் பயணங்களையும் ஆவணப்படுத்தும் நூல்களையும் எழுதிக்கொண்டே இருப்பவர். எழுத்துகளின் தொடர்ச்சியான வாசகன் நான். என்னிடம் ஆய்வு செய்தவர்களுக்கு அவரது புனைவுகளை ஆய்வுசெய்ய வலியுறுத்தியிருக்கிறேன்.
******
வெளிசார் எழுத்து/புதுச்சேரிக்காரர்கள், பயணம்/ வியட்நாம் வீரபூமி, இலக்கியவரலாறு/தற்காலத் தமிழ் இலக்கியம் என்ற மூன்று நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பதற்காக அவற்றைப் பரிந்துரைக்கிறேன். திருப்பூர்,கனவுப்பதிப்பக வெளியீடுகளான இவை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும் வாய்ப்புண்டு.


ஜனவரி, 11
வாய்மொழி இலக்கிய ஆய்வில் மூன்றாவது கட்டம்



மேற்கத்தியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் என்பன பெரும்பாலும் கோட்பாட்டு ஆய்வுகளாகவே அமையும். முழுமையான கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கவில்லையென்றால், கோட்பாட்டி ஒரு கூறையாவது விளக்கிப்பொருத்திக் காட்டுவதையே அவர்கள் ஆய்வாகக்கருதுகிறார்கள். அதனாலேயே கலை, இலக்கியம், மொழி, சமூக அறிவியல் போன்ற புலங்களில் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன.
சமூக அறிவியலின் பகுதியாக அறியப்படும் வாய்மொழி வழக்காறுகள் தமிழ்நாட்டில் நாட்டார் வழக்காறுகளாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன. வாய்மொழி வழக்காறுகளுக்குள் இருக்கும் கதைகள், பாடல்கள், சொல்லணிகள், கதைப்பாடல்கள், சடங்குகள், நிகழ்த்துக்கலைகள் என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வதற்குத் தனித்தனிக் கோட்பாட்டுப் பார்வைகள் உள்ளன.
அமைப்பியலின் வருகைக்குப் பின்பு மொழி பற்றிய பார்வைகள் மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிப்புகளாக முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியில் இலக்கிய ஆய்வுகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவற்றில் செய்ம்முறை ( Practical Research) ஆய்வுகள் வந்தன. அவற்றின் மாதிரிகள் பின்னர் எழுதப்பெற்ற இலக்கியப்பனுவல்களை ஆய்வு செய்யும் கோட்பாடாகவும் மாறின. புகழ்பெற்ற காப்பியங்களையும் நாடகங்களையும் அந்தப் பார்வையில் விளக்கினார்கள். அடிக்கருத்துருவாக்கம், அவற்றின் வெளிப்பாட்டு வாய்பாடுகள் பற்றி விரிவாகப் பேசியவர்களில் முக்கியமானவர்கள் பலருண்டு. கதை தழுவிய வாய்மொழி இலக்கியங்களான கதைப்பாடல்களை ஆய்வு செய்வதற்குப் பெரிதும் உதவும் அடிக்கருத்துகள் -வாய்பாடுகள் பற்றி விரிவாக விளக்கியவர்கள் மில்மன் பர்ரியும் ஆல்பெர்ட் பேட்ஸ் லார்ட்ஸும். அவற்றை உள்வாங்கிய தனிச்சிறப்பான ஆய்வைச் செய்த தமிழ்நாட்டுப்புற ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பேரா. ஆ.திருநாகலிங்கம். அவரது கட்டபொம்மு கதைப்பாடல்: வாய்பாடும் அடிக்கருத்தும் என்ற நூல் கோட்பாட்டுப் பார்வையை உள்வாங்கிப் பொருத்திக்காட்டும் செய்ம்முறை ஆய்வுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.
புதுச்சேரி மையப்பல்கலைக்கழகத்தில் புலமுதன்மையராக இருந்து ஓய்வுபெற்றுள்ள பேரா. ஆ.திருநாகலிங்கத்தை எனது மாணவப்பருவத்திலிருந்து நன்கறிவேன். அவரும் நானும் ஒருசாலை மாணாக்கர்கள். முதுகலையில் வகுப்புத்தோழர்கள். அப்போதெல்லாம் அவரது விருப்பபாடமாக இருந்தது இலக்கணம். குறிப்பாகச் சொல்லிலக்கணம். தொடக்கநிலையில் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியராகவே தன்னை நினைத்தார். ஆனால் அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கு வாய்மொழிக்கதைகளை மையமிட்ட ஆய்வைத்தொடங்கியபின்பு முழுமையாகத் தன்னை நாட்டார் வழக்காற்றுப்புலத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தனி ஆசிரியராக 5 நூல்களையும், பதிப்பு & இணைப்பதிப்பாசிரியராக 5 நூல்களையும் தந்துள்ள அவரின் நாட்டார் வழக்காற்றியல் பங்களிப்பில் இந்நூல் முன்மாதிரியான நூலாக இருக்கிறது. இவ்வகை ஆய்வுகள் தொகுப்பாய்வு, பகுப்பாய்வு என்ற இரண்டு கட்டங்களைத் தாண்டிய செய்ம்முறை ஆய்வு ஆகும். இந்நூலை கல்விப்புலத்தவரும் அறிவுலகத்தை அறிய விரும்பும் பொது வாசகரும் வாங்கிப்படிக்கலாம். கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்துப் புலமை பெறச்செய்யலாம்.
*******************************

ஜனவரி, 10

கோட்பாட்டு அறிமுக நூல்


அமைப்பியல் என்ற சொல்லையும் அதன் இயங்கு முறையையும் முதன்முதலில் ஒரு கருத்தரங்கில் பேரா.கார்லோஸ் (தமிழவன்) அவருக்கே உரிய சிக்கலான மொழியில் விளக்கினார். அந்த உரையைக் கேட்டபோது நான் மாணவன். அந்த உரையைக் கேட்பதற்கு முன்பே அவர் எழுதிய ’ஸ்ட்ரக்சுரலிஸம்’ என்ற நூலை வாங்கி வாசிக்க முயன்று தோற்றிருந்தேன். தொடர்ந்து பல உரைகளைக் கேட்டும் வாசித்தும் அமைப்பியல் வாதத்தின் இயங்குநிலையை உள்வாங்கிய பின்னர் மொழியியலின் அடிப்படைகளைக் கற்கவேண்டிய தேவையை உணர முடிந்தது.
 
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்ற தமிழ் இலக்கணச் சூத்திரத்தின் விரிவாக்கம் இலக்கணமாக மட்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. எழுத்து - சொல் - யாப்பு -அணி - பொருள் என உருவாகும் இலக்கியவியலின் அடிப்படைகளும் ஆழங்களும் இலக்கணத்தைத் தாண்டி அறிவுத்தோற்றவியலாகவும், மெய்யியலாகவும் வாசிக்கவேண்டியவை என்பதையும் அமைப்பியலின் இயங்குநிலைகள் புரிய வைத்தன. இலக்கியப்பனுவலாக மட்டும் இல்லாமல், தனியொரு சொல்லாகவே நிற்கும் ஒன்றின் அர்த்தம் அல்லது பொருள் என்பது நிலையானதல்ல; தற்காலிகமானதே என்பதும், ஒரு சொல்லின் வழியாக உணரப்படும் பொருள் ஒவ்வொருவருக்கும் வேறானது என்பதும் மொழியின் விளையாட்டுதான். இடுகுறி, காரணம், ஆகுபெயர், அன்மொழித்தொகை, பொருள்கோள், நோக்கு, புலப்பாடு, மொழிதல் எனப் பலவிதமான கலைச்சொற்களோடு கூடிய விளையாட்டு அது.

இந்த உலகம், அதிலிருக்கும் அசையும் பொருட்கள்- அசையாப்பொருட்கள், உயிருள்ளவை, உயிரற்றவை என எல்லாவற்றையும் மொழியால் குறிக்கிறோம். குறிக்கப்படும் சொற்களுக்குப் பின்னால் உருவாகும் அர்த்தம் சொல்லுக்குள் இல்லை; அதற்கு வெளியே சொல்லை உச்சரிக்கும் மனத்திற்குள் உள்ளது; மனத்திற்குள் உருவாகும் அர்த்தம் புறச்சூழலால் நிரப்பப்படுகிறது.
 
இப்படியான பல சிந்தனைகளை - மொழி, தத்துவம், உளவியல், மானுடவியல் என ஒன்றோடொன்று தொடர்புடைய சிந்தனைகளை இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு நூல் விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம். இந்த நூல் எனக்குக் க்ரியா பதிப்பகத்திலிருந்து நூல் வெளியான மாதங்களுக்குப் பின்னால் தபாலில் வந்து சேர்ந்தது. யார் அனுப்பச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அனுப்பச் சொன்னவர்கள் அதை வாசித்தீர்களா? என்றுகூட இதுவரை கேட்கவில்லை. ஒருவேளை க்ரியா ராமகிருஷ்ணனே கூட அனுப்பியிருக்கலாம். அவர் அனுப்பிவைக்கும் நூல்களுக்கு அவரைப் பார்க்கும்போது பணம் தருவேன். சிலவற்றிற்கு வாங்க மாட்டார்; சிலவற்றிற்கு வாங்கிக்கொள்வார். அதற்கெல்லாம் காரணமும் சொல்லமாட்டார்.
நூல் கிடைத்தவுடன் வாசிக்கத் தொடங்கவில்லை. கைவசம் இருக்கும் பையில் வைத்துக்கொண்டு இரண்டு மாதம் திரிந்தேன். மருத்துவம் சார்ந்த ஓய்வு நாட்கள் கிடைத்தபோது வாசித்துமுடித்தேன். நிதானமாக வாசிக்க வேண்டிய இந்த நூலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் வாசித்துவிடுங்கள். மற்றவர்களோடு இதனை முன்வைத்து உரையாடுங்கள்
*******************************

செ.வே. காசிநாதன்,விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம், க்ரியா, முதல் பதிப்பு, ஜூலை, 2021

-----------------------------------------------------------

ஜனவரி, 10



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....