சூழலில் வாழ்தலும் எழுதுதலும்


அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.
அப்படி அறிமுகமானவரே நிபுணமதி என்ற பெயரில் முகநூலில் எழுதி வருபவர். தன்னை உள்ளடக்கிய அனுபவங்களைச் சிறுசிறு குறிப்புகளாக அவர் எழுதி வந்தார். அந்த அனுபவங்கள் பெரும்பாலும் உண்மைகளை அதிகம் முன்வைத்த குறிப்புகளாக இருந்தன. தனது பள்ளி, கல்லூரி, குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் சந்திப்பு, உறவினர்களின் நிகழ்ச்சிகள், பொது வெளிகளில் நடந்தவை எனத் தன்னைச் சுற்றி நிகழ்ந்தனவற்றை விவரிக்கும் தன்மை கொண்ட அக்குறிப்புகள் பெரும்பாலானவை கடந்த கால நினைவுகளாக இருந்தன. அதே நேரம் கடந்த காலத்தில் அப்படியே உறைந்து நின்று அதை ஏற்றுக்கொண்டு நகர்ந்துவிடும் போக்கில் இல்லாமல், கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்த்து நடந்து வந்த மாற்றங்கள், நடக்கபோகும் நிலைகள், அதற்குள் இருக்கக்கூடிய இயங்கியல் எனத் தன் பார்வையை முன்வைப்பவராக வெளிப்பட்டார்.

இந்தப் பார்வையைத் தனித்தனியாக வாசித்தபோது உணர்ந்திருந்தாலும் ஒரு முறை அவற்றில் சிலவற்றைத் தொகுத்து வைத்து வாசிக்கும்போது அந்தக் குறிப்புகளில் ஒரு கட்டமைப்பு இருந்ததை உணரமுடிந்தது. அதன் பிறகே அவரது பதிவுகளில் பின்னூட்டம் இட்டேன். இப்படிப் பலருக்கும் முகநூலில் பின்னூட்டம் இடுவதுண்டு. கவிதைகள் என நம்பி எழுதும் இளம் கவிகளுக்கும், அரங்கியல், ஊடகத்துறை எனப் புதிதாக நுழைந்து எழுதிப்பார்க்கும் இளையோர்களுக்கும்கூடப் பின்னூட்டங்கள் இடுவதுண்டு. தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இயங்கும் சமூக ஊடகங்களில் எவற்றை எழுதுவது/எவற்றைத் தவிர்ப்பது என்ற தன் கட்டுப்பாடுகளைத் தாங்களே உருவாக்கிக் கொண்டு எழுதும் பலரின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்த பிறகு நான் இடும் பின்னூட்டங்களின் மீது எதிர்வினையாற்றியும், கூடுதல் விளக்கங்கள் அளித்தும் நட்பானவர்கள் உண்டு.

பின்னூட்டம் –எதிர்வினை- விளக்கம் –மறுவிளக்கம் என நீளும் நிலையில் சிலர் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். பேசும்போது அவர்களின் எழுத்துமுறையின் நிறைகுறைகளை விரிவாக விளக்கிச் சொல்வேன். தொடர்ந்து எத்தகைய பரப்புகளுக்குள் அவர்கள் தொடர்ந்து எழுதலாம்;எவற்றைத் தவிர்க்கலாம் என்பதையும் சொல்வேன். இது ஒருவிதத்தில் என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்பில் சொல்லிய எழுத்தாக்கப் பயிற்சியின் ஒரு கூறுதான்.

நிபுணமதிக்கும் அப்படிச் சொன்னபிறகு அவரது எழுத்து முறை விரிவும் ஆழமும் கொண்டதாக மாறியது. குறிப்புரைகள், கட்டுரை என்னும் வடிவத்தையும் தன்வரலாற்றில் வெளிப்படும் நம்பகத்தன்மையைக் கொண்டனவாகவும் மாறின. அந்த நிலையில் தான் இவற்றைத் தொகுத்து நூலாக்கம் செய்யலாம் என்று பரிந்துரை செய்தேன். நூலாக்கம் செய்யும்போது எப்படி ஒழுங்குபடுத்தலாம்; எழுதிய குறிப்புகளைத் திருத்தமும் செய்யலாம் என்று வழிகாட்டினேன். அதனை ஏற்று முறைப்படுத்தி இப்போது நூலாக்கம் செய்துள்ளார்.

*******************************

கவிதை, கதை, நாடகம் என இலக்கிய வடிவங்களுக்குப் பட்டறைகள் நடத்தும் இலக்கிய அமைப்புகளும் கல்வி நிலையங்களும் கட்டுரைக்கு அத்தகைய பட்டறைகளை நடத்துவதில்லை. ஏனென்றால் கட்டுரையை இலக்கியத்தின் வகையாக நினைப்பதில்லை என்பது முதல் காரணம். அப்படி நினைத்தாலும் பட்டறை நடத்திக் கற்றுத்தரும் அளவுக்குக் கட்டுரை வடிவத்தில் நுட்பங்கள் எதுவும் இல்லை என்று நினைப்பது இரண்டாவது காரணம்.

கட்டுரையின் வடிவம் எளிமையானது என்பது உண்மைதான். இதில் எழுதுபவர் தனது சொற்களைச் சொல்வதற்குப் புனைவான பாத்திரங்கள் எதையும் உருவாக்க வேண்டியதில்லை. அதனால் புனைவாக காலத்தையோ, இடத்தையோ உருவாக்கவேண்டியதில்லை. எழுதுபவரே சொல்பவராக இருக்கிறார். அவரது சொற்களை வாசிப்பவர் கேட்கிறார். அந்த வகையில் கட்டுரை நேரடித்தொடர்புமுறை எழுத்துதான். அதே நேரம் செய்தியாக இருப்பதில்லை கட்டுரைகள். கட்டுரைகளை எழுதுபவர்களும் அதற்குள் சில நுட்பங்களை உருவாக்குவதின் வழியாக அதற்கு இலக்கியத் தகுதியை உருவாக்க நினைக்கிறார்கள். தேதியையும் இடத்தையும் குறிப்பிட்டுக் கொண்டு தொடங்கும் செய்திகள் நடந்ததை மட்டும் விளக்கிவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. அதிலிருந்து விலகிக் கட்டுரை புனைவாக ஒரு காலத்தையும் வெளியையும் உருவாக்கித் தரும்போது சாதாரணக்கட்டுரையிலிருந்து கட்டுரை இலக்கியமாக மாறுகின்றன. நிபுணமதியின் இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் அந்த மாற்றத்தை நாம் வாசிக்கலாம்.
இந்தக் கட்டுரைகளின் தொடக்கம் ஒவ்வொன்றையும் கவனியுங்கள். அதில் அவர் ஒரு வெளியையோ, காலத்தையோ, இன்னொரு பாத்திரத்தையோ உருவாக்கிக் கொண்டு தன் அனுபவத்தை விவரிப்பது தெரியவரும்.

சென்னையின் ஒரு பிரபல துணிக் கடைக்கு போயிருந்தேன். வரிசையில் நின்று பில் போடும் பெண்ணின் அருகில் சென்று விட்டேன். அந்தப் பெண் என்னை நிமிர்ந்து பார்த்தார். நான் வாங்கிய வற்றை தள்ளி வைத்து விட்டு அடுத்தவருக்கு பில் போட்டார்.(12)

எங்கள் ஊர் மலைக் கோவில் பூஜை மிக விசேஷமானது. வெளியூரில் இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். (திரு நாதர் குன்றம்) (18)
முதல் கட்டுரையில் துணிக்கடை என்னும் வெளியில் நடக்கப்போகும் நிகழ்வு என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறது. இரண்டாவதில் நிகழ்வு நடக்கப்போகும் இடம் மலைக்கோவில் என்பது உணர்த்தப்படுகிறது.

நாற்பது ஆண்டுகள் முன்பு எங்கள் வீட்டின் அருகில் ஒரு குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் இருந்த நான்கு வயது சிறுமி என்னுடன் விளையாட ஓடி வருவாள்.(100)

என் சிறு வயது எங்கள் வீட்டுத் தோட்டத்தின் பூக்களாலும் காய், கீரை வகைகளாலும் நிரம்பியது. செடிகள் பூக்கத் தொடங்கும்போதே அம்மா ஒரு பட்டியல் போட்டாற் போல் சொல்லிக் கொண்டு இருப்பார். (70)

இவ்விரு கட்டுரைகளிலும் அவர் காலத்தை முன்வைத்து வாசிப்பவரை அழைத்துச் செல்கிறார்

என்னுடன் பள்ளியில் படித்த ஒரு தோழி அலைபேசியில் பேசினார். நலம் விசாரித்து முடித்த உடன், 'எங்க வேலை செய்யற? நீயெல்லாம் கண்டிப்பா பெரிய பதவில தான் இருப்ப...'' (106)

ஒரு இருபது வயதுப் பெண். எப்போதும் உம் மென்ற முகம்! யார் எது செய்தாலும் அதில் இருக்கும் குறை அவள் கண்ணில் பட்டு விடும். உடனே அதை சொல்லியும் விடுவாள்.(103)

இவ்விரண்டிலும் பாத்திரத்தை அறிமுகப்படுத்தி வாசிப்பவரை உள்ளே இழுத்துக்கொள்கிறார். இப்படியான தொடக்கங்கள் வழியே வாசிப்பவரை உள்ளிழுத்துக் கொள்ளும்போது ஓர் இலக்கியப் பனுவலை வாசிக்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது.

நூற்றுக்கும் அதிகமான (106) தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள இக்குறுங்கட்டுரைகளில் நிபுணமதியின் கவனிப்புக்குள் வந்துள்ள மனிதர்களும் வெளிகளும் நிகழ்வுகளும் அன்றாடத்தின் இயக்கம் சார்ந்தவை. இந்தியக் குடும்பவெளிக்குள் இருக்கும் ஒரு பெண்ணின் அன்றாடத்திற்குள் என்னென்னவெல்லாம் வந்துபோகின்றன; அவற்றில் எவற்றையெல்லாம் கவனித்துச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கவனிக்கும் ஒவ்வொருவரும் எழுதுவதற்கும் சொல்வதற்கும் படைப்புக்கனிமங்களைத் தேடி எங்கும் செல்லவேண்டியதில்லை என்பது புலப்படும்.

அவரது கட்டுரைகள் அவர் இருக்கிறார் என்பதை உணரும் அதே நேரம், அவர் ஒரு பெண்ணாக வெளிப்பட்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் உணரலாம். கடந்த ஒரு நூற்றாண்டுக்காலமாகப் பேசப்படும் பெண்ணியம் என்னும் கருத்துரு முதன்மையாகக் கோருவது பெண்கள் முதலில் தாங்கள் பெண்ணாக இருக்கிறோம் என்பதை உணரவேண்டும் என்பதைத்தான். பெண்ணாக இருப்பது என்பது- மொத்த மனிதக்கூட்டத்தில் பெண்கள் இரண்டாம் பாலினத்தவராக – இருப்பது என்பதுதான். அன்றாட நடப்புகள் ஒவ்வொன்றிலும் தான் இரண்டாம் நிலையில் வைத்து உணர்த்தப்படுகிறேன் என்ற உணர்வுதான், தனது இருப்பை –நிலையை மாற்றுவதற்கு – ஆணுக்கு நிகரானவள் பெண் என்பதைக் கோருவதற்கு முதல் படி. அது நிகழ்ந்தபின்பே சமத்துவத்திற்கான கோரலையும் விடுதலைக்கான முன்வைப்பையும் கையிலெடுக்கமுடியும். ஆக இந்தியா போன்ற மரபின் பிடியிலிருக்கும் சமூக அமைப்பில் பெண்களை, “நீங்கள் பெண்களாக இருக்கிறீர்கள்” என்பதை உணர்த்தும் எழுத்தே முதன்மைத்தேவையாக இருக்கிறது. அதனை இந்தக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் செய்திருக்கின்றன.


இக்கட்டுரைகளை முகநூலில் வாசித்ததோடு, இப்போது ஒருமுறை வாசித்தேன். அந்த அடிப்படையில் சில கட்டுரைகளைக் குறிப்பிட்டுப் பேசலாம். ஆனால் அது வாசிப்பவர்களின் வாசிப்பைச் சுருக்கிவிடும் என்பதால் அதைச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வரிசையாகவும் வாசிக்கலாம்; பின்னிருந்தும் வாசிக்கலாம்; எந்தப் பக்கத்தையும் திறந்து அதை மட்டும்கூட வாசிக்கலாம். கட்டுரை இலக்கியத்தின் தனிச்சிறப்பே அதுதான். அதைச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். 

எதை எழுதுவது என்ற கேள்விக்கு இந்த உலகத்தின் அனைத்து அசைவுகளும் அதில் பங்கேற்கும் மனிதர்களும் அவர்களைச் சுற்றியிருக்கும் இயற்கைப்பொருட்களும் செயற்கைப்பொருட்களும் எழுதுவதற்குரியனவே எனச் சொல்லும்படியாக இருக்கின்றன நிபுணமதியின் கவனிப்புகளால். சிறிய ஊக்கம் கிடைத்தால் எந்த வயதிலும் ஒருவர் எழுத்தாளராக – கலைஞராக ஆகமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்துள்ளார் நிபுணமதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....