யாவரும்.காம். நல்ல கதைத்தேர்வுகள்




பதிவேற்றம் பெற்றுள்ள (2023, ஜனவரி) மூன்று சிறுகதைகள் இவை:

        பிரமிளா பிரதீபன் – 1929
        
        ரம்யா – ட்ராமா குயின்,

        வைரவன் -லெ.ரா-பிரயாணம்

இம்மூன்று கதைகளையும் ஒரே வாசிப்பில் வாசிக்க முடியவில்லை. எல்லா விதத்திலும் வேறுபாடுகளோடு இருக்கின்றன. 
வாசிப்பின் இருநிலைகள்:

கால இடைவெளியில் வரும் இதழ் அல்லது ஒரு வடிவம் சார்ந்த தொகை நூலொன்றில் இடம்பெறும் கவிதைகள், கதைகள், நாடகங்கள் போன்றவற்றை ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன் என்று ஒருவர் சொல்வதைப் பாராட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்படியான வாசிப்புக்குரிய இதழ் அல்லது தொகைநூல் சரியான ஒன்றாக இருக்கமுடியாது. அதற்காகத் தொடர் வாசிப்பே தவறு; செய்யக்கூடாது என்று சொல்வதாக நினைக்கவேண்டியதில்லை. வாசிப்பே முழுநேர வேலையாக இருப்பவர்கள் அப்படி வாசிக்க நினைத்தால் வாசிக்கலாம். ஆனால் அந்த வாசிப்பு தேர்வுக்கோ, உடனடியாகக் கருத்தொன்றைச் சொல்வதற்காகவோ வாசிக்கும் வாசிப்பாக அமைந்துவிடும் ஆபத்துகள் கொண்டது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆகவேதான் அத்தகைய வாசிப்பைத் தடுக்கும் வேலையை இதழாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே வாசிப்பாக இல்லாமல் நிதானமான இடைவெளியோடு கூடிய வாசிப்பு, வாசித்த பனுவல்கள் மீது நினைவுகளை எழுப்பும். வாசிக்கும்போது உருவான காட்சிகள், படிமங்கள், குணச்சித்திரிப்புகள், முரண்கள், மொழியழகுகள் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும். அதன் மூலம் ஒருவரது வாசிப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்புகள் உருவாகும். வாசித்த அந்தப்பனுவல் முன்வைக்கும் நிகழ்வுகள் புதியன என்றால், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் ஏன் கவனிக்கவில்லை என்று நினைக்கத் தோன்றும். கவனித்த நிகழ்வாக இருந்தால், எழுத்தாளரின் கோணத்தில் இருக்கும் புதுமை அல்லது வேறுபாடு குறித்து நினைக்கத்தூண்டும். எழுத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இடம் பெறும் கதாமாந்தர்களை நேர்வாழ்வில் சந்தித்ததை நினைவு படுத்தும். நினைவுக்கு வரும் அந்நிகழ்வில் என்ன வினையாற்றினோம் எனத் திரும்பிப்பார்க்கச் செய்யும். கவனித்தும் நாம் எதுவும் செய்யாமல் நகர்ந்துள்ளோமே அது சரியா? என்ற எண்ணங்களை உருவாக்கும். அதன் பேரில் வாசித்தவரிடம் பெருமித உணர்வு சார்ந்த மகிழ்ச்சியையும், குற்றவுணர்வு சார்ந்த மீள்பார்வையும் கூட உருவாகலாம். இப்படியான வாசிப்பு வினைகளைக் கோருவது இலக்கியப் பனுவல்களின் நோக்கமாக இருக்கின்றன. இவையெல்லாம் செய்யாமல் “வாசித்தேன்; சிலமணிநேரங்கள் கழிந்தன” என்ற எண்ணத்தை உருவாக்குவது பொழுதுபோக்கு எழுத்தின்/ கலையின் இயல்பாக இருக்கிறது.

வேறுபாடுகள்
ஓர் இதழின் பனுவல்கள் வாசிப்பவரிடம் உண்டாக்கும் வினைகள் சார்ந்தே அவ்விதழின் அடையாளம் உருவாகிறது. யாவரும். காம். இணைய இதழில் இடம் பெற்றுள்ள உள்ளடக்கங்களில் குறைவான வகைப்பாடுகள் உள்ளன என்றாலும், பதிவேற்றம் பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவிதமாக இருக்கின்றன.

ரம்யாவின் ட்ராமா குயின் ஒருவிதத்தில் வரலாற்றுப்புனைவு. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலாமணி என்ற வரலாற்றுப் பாத்திரத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள புனைவு. அதில் அவளது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நோக்கம் இல்லை. அதற்கு மாறாகப் பொதுவாழ்க்கைக்குள் வரும் பெண்கள் மீது நமது சமூகம் கொண்டிருக்கும் – குறிப்பாக ஆண்கள் பெண்களின் செயல்பாடுகள் மீது உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பிதங்களையும் ஆதிக்க மனநிலையையும் விவாதப்படுத்தியதின் மூலம் வரலாற்றுப் புனைவாக ஆகியுள்ளது. நடனம், நாடகம், கலை போன்றவற்றில் ஈடுபடும் பெண்கள் குறித்த ஆண்களின் மனோபாவத்தை/ சமூக உளவியலில் பெரிய அளவு மாற்றங்கள் நடந்துவிடவில்லை என்பதை இந்தக் கதை வாசிப்பவர்களிடம் முன்வைக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் பாலாமணி என்ற நாடக நடிகையின் எழுச்சியின்போது உருவான மனநிலையிலிருந்து தமிழ்ச் சமூகம் என்ன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் கேள்வியாக ரம்யா எழுப்பவில்லை. ஆனால் கதையின் போக்கிலேயே அந்த விசாரணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. பாலாமணியின் உடல், அவ்வுடலுக்கு அவள் உருவாக்கிக் கொடுத்த நிகழ்த்துக் கலைகள் சார்ந்த தனித்திறன் அடையாளங்கள், அவ்வுடலின் மீதான அலங்காரங்கள், அவற்றில் அவள் வெளிப்படுத்திய அழகியல் நுட்பங்கள் என விரிவாகத்தந்துள்ளார் கதாசிரியர் ரம்யா. அவளது உடலையும் அது சார்ந்து கிடைக்கும் உணர்வுகளையும் ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டே இழிவாகப் பேசும் இரட்டைத்தன்மைக்குள் மனிதர்கள் இயங்குவதையும் கதை நுட்பமாகக் கையாண்டுள்ளது; வெளிப்படுத்தியுள்ளது. அதை அவளது உதவியை நாடிச்செல்லும் இன்னொரு நாடகக் குழுவின் நடிகனின் மனவோட்டத்தின் சொல்முறையில் எழுதியதின் மூலம் தேர்ந்த கதைசொல்லியாக வெளிப்பட்டுள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளின் பரம்பரையில் வந்த நாடகக்குழுவைச் சேர்ந்த அண்ணாச்சி- செல்வம் என்ற இரு நடிகர்களின் மனத்திற்குள் உருவாகும் மாற்றங்களும் குற்றவுணர்வும் இன்றைய ஆண்கள் ஒவ்வொருவரிடமும் உருவாக வேண்டிய மாற்றங்கள் என்பதைக் கதைச் சரியாக முன்வைத்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முந்திய நாடக வரலாற்றுக்குள்ளிருந்து பிரபலமான பாலாமணியை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள வரலாற்றுப்புனைவு அதற்கான மொழியைக் கையாள்வதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். பெரும்பாலான இடங்களில் வரலாற்றுப் புனைவுக்கான செயற்கை மொழியைக் கையாண்டுள்ளது என்றாலும் கும்பகோணத்தை நோக்கிய பயணம், பாலாமணியின் இல்லத்தைக் கண்டு மலைத்து நிற்கும்போது உருவாகும் மனவோட்டங்கள் போன்ற இடங்களில் அந்தச் செயற்கை மொழியில் போதாமை உள்ளது. செயற்கை மொழியைப் பின்பற்றாமல் நிகழ்கால நடப்புமொழியைக் கைக்கொண்டதாக மாறியிருக்கிறது. இன்னும் கவனமாகச் செய்திருந்தால் அந்தச் செயற்கையான – வரலாற்றுப் புனைவுக்கான மொழி கைகூடியிருக்கும்.
***
வைரவன்.லெ.ரா. பிரயாணம் கதையைப் படித்தபோது அந்திமக்காலத்துப் பயணங்கள் குறித்த பல கதைகள் நினைவுக்கு வந்தன. மரபான இந்திய மனங்களுக்குள் உறையும் சொந்த ஊர்ப்பற்றை - வேர்ப்பற்றை பலரும் கதையாக்கியுள்ளனர். நகரவாசிகளான பின்னரும் சொந்தக் கிராமத்தின் மீதான பற்றையும் அங்குள்ள மனிதர்களின் மீதான உறவுக்காரர்களின் மீதான வாஞ்சையும் எழுதாத தமிழ் எழுத்தாளர்கள் குறைவு. அப்படியான கதைகளில் ஒன்று எனப் புறம் தள்ளிவிட முடியாதபடி எழுதப்பெற்றுள்ளது என்பதே வைரவனின் கதைச் சிறப்பு.

அந்திமக்காலத்தைச் சொந்த ஊரில் கழிக்கவும், அந்த ஊர் மண்ணுக்கோ, நெருப்புக்கோ தனது உடலைத் தரவும் விரும்பும் இந்தியத் தன்னிலைகள் ஒருவிதத்தில் நிலவுடைமைச் சமூக வாழ்க்கையின் விருப்பங்கள்; மனவோட்டங்கள். சிறுவணிகத்திற்குள் இயங்கும் மனிதர்களுக்கும்கூட அந்த விருப்பம் தொடரக்கூடிய ஒன்றுதான். ஆனால் நிகழ்காலப் பெருவணிக – பெருந்தொடர்புத் தொழில் முறை வாழ்க்கைக்குள் ‘சொந்த’ வெளிகளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைமுறை அந்த வேர்ப்பற்றைக் கைவிட்டுவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தில் நடந்த இடப்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் வேர்ப்பற்றென்னும் என்னும் அடையாளத்தைக் காணாமல் ஆக்கிவிட்டது.

ஊர், நகரம், மாநிலம், நாடு என்ற எல்லாம் கடந்த வாழ்க்கைக்குள் நகர்ந்து விட்ட தலைமுறைக்கும் சொந்த ஊரில் அடக்கமாகவேண்டும் என நினைக்கும் முந்திய தலைமுறைக்கும் இடையேயான உறவை முரண்பாடாகவோ, பிடிவாதமாக மறுக்கும் நிலையிலோ வைத்துப் பேசாமல் அதனதன் போக்கில் நகரும் மனிதர்களைக் கதையில் உலவவிட்டிருக்கிறார் வைரவன் . சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்ற ஆசையோடு இருந்த தனது மனைவி எஸ்தரின் விருப்பத்தை அவளது மரணத்திற்குப் பின்னாவது நிறைவேற்றிவிடுவதில் உறுதி காட்டிய தாமஸின் பிரயாணம் தான் கதை. சென்னையில் மின்சாரச் சுடுகாடு போன்ற மாற்று ஏற்பாட்டை முன் மொழிந்த மகனின் நிலைபாட்டை ஆவேசமாக மறுக்கவில்லை தாமஸ். வெளிநாட்டில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில் குறைவான விடுப்பில் வந்து அம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளும் சாலமனின் அவசரத்தைப் புரிந்துகொண்டாலும் தனது கோரிக்கையைத் தயங்காமல் முன்வைப்பது மனைவி மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு. தந்தையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகன் சாலமனின் பக்குவம். உறவுகளுக்குள் பெரிய முரண்பாடுகள் இல்லையென்றாலும் கதையின் பின்னணி, தமிழ் வாழ்வில் ஏற்பட்டுள்ள பொருளியல் உறவுகளில் - சம்பாதிப்பதில் - இடம்பெயர்ந்து நாட்டெல்லைகளைத் தாண்டியதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தந்துள்ளது என்பதே சிறப்பான எழுத்தின் அடையாளம். அத்தோடு கன்யாகுமரி மாவட்டத்துப் பேச்சுமொழியின் ஓசை லயத்தின் வழியாக வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்திக்கொள்ளும் கதையாக வைரவன். லெ.ரா.வின் பிரயாணம் அமைந்துள்ளது.
*****
பெண்களின் உளவியலைச் சமூக நிகழ்வுகளின் பின்னணியில் விவாதிக்கும் கதைகளை தொடர்ச்சியாக எழுதுபவர் பிரமிளா பிரதீபன். இலங்கைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பகத்தின் தொடர்பு எண்ணான 1929 என்பதைத் தலைப்பாக்கியுள்ள இந்தக் கதையில் உளவியல் சிக்கலை நேரடியாகச் சந்திக்கும் பாத்திரங்களைக் கதைக்குள் உருவாக்கியிருக்கிறார். மனநல ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர் கயானின் மருத்துவ மையத்தில் நடக்கும் சந்திப்பே கதை நிகழ்வுகள். தனது கணவர், மகன் போன்றவர்களிடம் இல்லாத ஒழுங்கைச் சகிக்க முடியாத ஒருவர் உளவியல் மருத்துவரோடு உரையாடும் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. மருத்துவருக்கும் ஆலோசனை கேட்க வந்த தாரணிக்குமான உரையாடலில் வெளிப்படும் தந்திர வெளிப்பாட்டுத்தன்மையை ரசிக்கும்படியாக எழுதியுள்ளார்.

அந்தக் குடும்பத்தில் யாருக்கு மனச்சிக்கல்கள் என்பதைக் கண்டறியும் மருத்துவர் எடுக்கும் முடிவே கதையின் முடிவு. பெற்றோரிடமிருந்து சிறுவனைப் பிரித்துப் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் முடிவோடு கதை நிற்கிறது. இக்கதையில் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. ஆங்கில எழுத்துகள் வழியாகச் சொல்லப்படும் உளவியல் சிக்கல்கள்/ நோய்க்கூறுகள் –OCD, OCPD போன்றன வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எழுதப்பெற்றிருக்கிறது. இப்படி எழுதுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அதேபோல் கணவன் -மனைவி இடையேயுள்ள பிசகான உறவை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். சுத்தம், ஒழுங்கு அது இல்லை என நினைக்கும் மனவோட்டத்திற்கும் பாலியல் இச்சைகளுக்கும் உறவிருப்பதாக உளவியல் நூல்கள் விளக்கியுள்ளன. இவற்றிற்குள் எல்லாம் பிரமிளாவின் கதை நுழையவில்லை.கதையின் முடிவு சரியாக அமைக்கப்படாத தன்மையில் இருக்கிறது.
*******
 பதிவேற்றம் பெற்றுள்ள கதைகள் மூன்றையும் வாசித்து முடித்தபின் எனக்கு நெருக்கமாக உணர்ந்த கதை ரம்யாவின் ட்ராமாகுயின். அதற்குக் காரணமாக எனது நாடகத்துறை சார்ந்த ஈடுபாடு இருக்கலாம். அடுத்து சொந்த அனுபவங்கள் சார்ந்து வைரவனின் பிரயாணம் கூடுதல் நெருக்கத்தை உருவாக்கியது. புத்திசாலித்தனமான விவாதங்கள் வழியாகப் பிரமிளா பிரதீபனின் 1929 வாசிக்க வேண்டிய கதையாகத் தோன்றியது. 

ஓர் இதழில் இடம்பெறுவதற்காகத் தேர்வு செய்யப்படும் மூன்று கதைகளும் வேறுபாடுகள் கொண்ட கதைகளாக இருக்கும் விதம் இதழாசிரியரின் பொறுப்புணர்வோடு தொடர்புடையது. இந்த வேறுபாடுகள் தேவையான ஒன்று என நினைக்கிறேன். இதழாசிரியர்களிடம் இருக்க வேண்டிய இந்த மனப்பாங்கு தொகைநூல்கள் செய்பவர்களுக்கும் கூடத்தேவை என்று சொல்லலாம். ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டதாக இருக்கிறது என்பதே அதன் மீது பெரும் ஈர்ப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கும். அப்படி இருப்பதை மனமகிச்சியோடு ஏற்கிறேன்

*******************
கதைகளை வாசிக்க
https://www.yaavarum.com/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நவீனத்துவமும் பாரதியும்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.