முழுமையைத் தவறவிடுகின்றன

 சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால், முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி, ரகசியம், திடீர் திருப்பம், எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.


இணையவழி வெளியீடுகளுக்காகத் (
OTT) தயாரிக்கப்படும் இப்படங்களில் வணிக சினிமாவின் எல்லாக்கூறுகள் இருக்கவேண்டும் என நினைக்காத தன்மை இருக்கிறது. படப்பிடிப்புக் காலத்தைக் குறைத்தும், பிரபல நடிக நடிகைகள் இல்லாமல் வெளிப்புறக்காட்சிகளை அதிகம் நம்பி எடுக்கப்படுகின்றன. பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. ஒரு வணிக சினிமாவில் இருக்க வேண்டிய- வெகுமக்கள் எதிர்பார்க்கும் கூறுகளான நடனக்கோர்வைகள் கொண்ட ஆட்டங்கள், காதல்ரசமும் காமத்தின் அடுக்குகளும் கொண்ட காட்சிகள் இடம்பெறுவது குறைவாக இருக்கின்றன. அதே நேரம் வன்முறை கொப்பளிக்கும் சண்டைக் காட்சிகளும் குடும்ப உறவுகள் சார்ந்த உணர்ச்சிகரமான உரையாடல் காட்சிகளும் போதிய அளவு இடம்பெறவே செய்கின்றன.

டிரைவர் ஜமுனா படமும் இந்தப் பொதுத்தன்மைக்கு விலக்காக இல்லை. மையப் பாத்திரமான ஜமுனாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏறத்தாழ 90 சதவீதம் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து முகத்தில் மட்டுமே பாவனைகளைக் காட்டுவது மட்டுமே கிடைத்த வாய்ப்பு. அதனைச் சரியாகவே செய்துள்ளார். தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யச் சட்டப்படியான போராட்டத்திற்குப் பதிலாகப் பழிக்குப்பழி வாங்கும் கதையாக உருவாக்கியுள்ளனர். ஏன் கொலை செய்கின்றோம் என்பதைப் பற்றிய கேள்விகளே இல்லாமல் ‘பணத்திற்காகக் கொலை செய்யும்’ குற்றவாளிகள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்; அப்படி வளர்ப்பதில் தேர்தல் அரசியலும் பணக்காரத்தனமும் அதிகாரத்தை விரும்பும் ஆசையும் இருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறது என்றாலும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய காவல் துறையைக் குறித்த பார்வை எதிர்மறையானதாக வெளிப்பட்டுள்ளது.

குற்றநடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களின் தான்தோன்றித் தனத்தையும் தெனாவட்டையும் விலாவரியாகக்காட்டுவதன் மூலம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஈர்த்துவிட முடியும் என நினைத்துள்ளார் இயக்குநர். எதிராளிகள், காவல்துறை, பொதுமக்கள் என எதனையும் பொருட்படுத்தாது தங்களின் உடல் வலிமை மீதும் தங்களின் திட்டமிடல் மீதும் கொள்ளும் தீவிர நம்பிக்கையோடு அவர்கள் இயங்குகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் அடையும் அச்சவுணர்வு எதிர்வாக மாறுகிறது. அச்சம் x அச்சமின்மை என்பதான எதிர்வுகளின் வழியாக உருவாக்கப்படும் காட்சிகள் ஒவ்வொரு பட த்தின் தொடக்கத்திற்கும் ஒருவிதப் பரபரப்பை உண்டாக்கிவிடுகின்றன. ஒரு கட்ட த்தில் ஏன் இந்தக் குற்றங்கள் நடக்கின்றன; அதனை நிகழ்த்துபவர்களின் நோக்கமென்ன? அதன் பின்னால் இருப்பவர்கள் யார்? அவர்களுக்கு முடிவில் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதான தொடர்முடிச்சுகள் வழியாக இவ்வகைப் படங்களின் மாதிரிகள் – டெம்பிளேட்டுகள்- உருவாக்கப்படுகின்றன. டிரைவர் ஜமுனாவில் அவளும் அவளது தம்பியும் போட்ட திட்டங்களின் வெளிப்பாடுகளே இவையெல்லாம் என்பதாக முடிப்பதே படமாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னால் பார்த்த ரத்த சாட்சிக்குப் பின்னால் அண்மைக்கால வரலாற்றுப்பின்னணி அல்லது ஆவணத்தன்மைகொண்ட கதைப்பின்னல் இருந்தது. ஜெயமோகன் எழுதிய கதையொன்றின் (கைதிகள்) உணர்வெழுச்சியையும் மைய விவாதத்தையும் எடுத்துக்கொண்டு தர்மபுரி, வட ஆர்க்காடு மாவட்டங்களில் எழுபதுகளின் பின்பாதியில் உருவான மாற்று அரசியலை விவாதப்படுத்தியது. குற்றவுணர்வுள்ள காவல் துறைப் பணியாளராக நடித்த – இளங்கோ குமரவேலின் பாத்திர இருப்பே அந்தப் படத்தின் விவாத மையம். காட்டில் தங்கவைக்கப்பட்ட அந்தக் காலத்தைக் கைதியாக இருக்கும் -காலமாக அவருக்குள் ஓடும் எண்ண அலைகள் உருவாக்கிக் காட்டுகின்றன.

தேர்தல் அரசியலைப் புறந்தள்ளிய- அழித்தொழிப்பை முன்மொழிந்த மார்க்சிய -லெனினியக் கட்சியின் செயல்பாடுகளின் மீதான விமரிசனத்தை முன்வைத்த அந்தப் படம், அரசு, அதன் செயல்தளம், அதன் வலிமை ஆகியவற்றின் முன்னால் ஆயுதப் போராட்டம் செல்லுபடியாகாது; வெல்லாது என்ற கருத்தை ஆழமாக முன்வைத்தது. ஆயுதப்போராட்டத்திற்குச் சொல்லப்பட்ட அந்த நிலைப்பாடு அனைத்துப் போராட்டங்களுக்கும் உரியது என நகர்த்திக்கொள்ள வாய்ப்புண்டு. அந்த வகையில் ரத்தசாட்சி அதிகாரத்தை ஆதரிக்கும் சினிமா. ஆதிக்கத்தை எதிர்க்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அடங்கிப் போகும்படி வலியுறுத்தும் சினிமா. அந்த அரசியல் சொல்லாடல்களை உள்வாங்கிய பார்வையாளர்களிடம் அந்தப் படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரியவில்லை. ஆனால் வெகுமக்கள் சினிமாவை விரும்பும் ரசிகர்களிடம் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே அதற்குக் கிடைக்காமல் போன வரவேற்பு காட்டியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....