சென்னைப் புத்தகக்கண்காட்சி பரிந்துரைகள் -3


சிறுகதைகள்
அறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வாசித்த ஆண்டுகளாகக் கடந்த மூன்றாண்டுகளைச் சொல்லலாம். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்காலம் இணையத்தில் வாசிப்பை அதிகப்படுத்தியிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம்.

2022 -இல் கடையாக வாசித்த கதைத் தொகுதி ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. அதேபோல் தொகுதியின் எல்லாக்கதைகளையும் வாசித்து முன்னுரை எழுதிய தொகுப்புகள்: பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையும் ஒரு காடு, அம்பிகா வர்ஷினியின் சிதைமுகம், எல்லாஅக்கதைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இமையத்தின் தாலிமேல சத்தியம் தொகுப்பின் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். சுஜித் லெனின் தொகுப்பு வந்திருக்கிறது. அவரது பெரும்பாலான கதைகள் வாசிக்கப்பட்ட கதைகள். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகைநூலையும் வாங்கி வைத்துள்ளேன். அதில் உள்ள கதைகள் பாதிக்கு மேல் முன்பே வாசித்தவை.
இவர்கள் அல்லாமல் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள் ---& பிறகதைகள் என்ற வகைமைத் தொகுப்புகளாக 2022 இல் வந்த தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டுக்கும் அந்த வகைமைத் தொகுப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளது யாவரும். அத்தொகுப்புகளில் இருக்கும் ஒன்றிரண்டு கதைகளாவது நான் வாசித்த கதைகளாகவே இருக்கும். இவ்வகைத் தொகுப்புகளின் ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்குள் எழுத வந்தவர்கள். அவர்கள் புதுவகைச் சொல்முறையிலும் புதிய வெளிகளிலும் உலகமயச் சூழலைச் சந்திக்கும் தமிழ் மனிதர்களை எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சமகாலச் சிறுகதைகளைத் தேடுபவர்கள் நேராகச் செல்லவேண்டிய பதிப்பகம் யாவரும். காலச்சுவடுவில் குமாரநந்தனின் தொகுப்பும் எம். குலசேகரனின் தொகுப்பும் வந்துள்ளதாக அறிகிறேன். அவர்களின் கதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கிறேன்.
இவர்களோடு அறியப்பட்ட எழுத்தாளர்களான பாவண்ணன், யுவன் சந்திரசேகர்,வண்ணதாசன், தேவிபாரதி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, உமா மகேஸ்வரி, அம்பை, போகன் சங்கர், வண்ணநிலவன், தமயந்தி,சுரேஷ் பிரதீப், சரவணன் சந்திரன், சுனில் கிருஷ்ணன், முதலானவர்களின் கதைகள் அச்சிதழ்கள், இணைய இதழ்களில் வரும்போது வாசித்துவிடுகிறேன். அவர்களின் தொகுதிகளை வாங்கி வாசிக்கவில்லை. அதனால் தொகுதிகளைப் பரிந்துரைக்க இயலவில்லை. இந்த வகைப்பாட்டிற்குள் புலம்பெயர் எழுத்தாளர்களின் பெயர்களையும் சேர்க்கவேண்டும். இருவகை இதழ்களிலும் கண்ணில் தட்டுப்பட்டால் வாசிக்கும் சிறுகதைக்காரர்களாக ஷோபாசக்தி, கலாமோகன், இளங்கோ, தெய்வீகன், நோயல் நடேசன், தமிழ்நதி, அகரமுதல்வன், கருணாகரமூர்த்தி, ஆ.சி.கந்தையா, அனோஜன், மாஜிதா, கறுப்பு சுமதி முதலானோர் இருக்கிறார்கள். மலேசிய எழுத்தாளர்களான வல்லினம் நவீன், பாலமுருகன், சிங்கப்பூரிலிருந்து சிறுகதைகள் எழுதும் சித்துராஜ் பொன்ராஜ், ஜெயந்திசங்கர், ஹேமா, சுஜா செல்லப்பன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கடந்த ஆண்டோ, இந்த ஆண்டோ தொகுதிகள் வந்திருக்கலாம். நான் பார்க்கவில்லை. வந்திருந்தால் வாங்கிப் படிக்கலாம். ஏமாற்றம் தராத கதைசொல்லிகள்

கவிதைகள்



2022 -இல் கடையாக வாசித்த கவிதைத் தொகுதி தேன்மொழிதாஸின் முருகியம். அதுபற்றி விரிவாகப் பேசவேண்டும். இந்த ஆண்டு வாசித்த தொகுதிகளில் பிடித்த கவிதைகள் கொண்ட தொகுதிகள். இவற்றை வாசிக்கவேண்டிய கவிதைத் தொகுதிகளாகப் பரிந்துரைக்கின்றேன். இந்த ஆண்டு வாசித்த கவிதைத் தொகுதிகள். இவை பற்றி எனது வலைப்பூவில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்
இளங்கோ கிருஷ்ணன் - வியனுலகு வதியும் பெருமலர்
எம்.டி.முத்துக்குமாரசாமி - ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
கருணாகரன் - நினைவின் இறுதி நாட்கள்
இன்பா -லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
தில்லை- விடாய்
அ.ரோஸ்லின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம்
மின்ஹா-நாங்கூழ்
பெரு விஷ்ணுகுமார் -ழ என்ற பாதையில் நடப்பவன்
ரூபன் சிவராஜா-எழுதிக் கடக்கின்ற தூரம்.
சுகன்யா ஞானசூரி- நாடிலி.
தேவசீமா- வைன் குறியீடல்ல
அன்புத்தோழி ஜெயஸ்ரீ- தழும்பின்_மீதான_வருடல்கவிதைகளை வாசிக்க இரண்டு நூல்கள்

நவீனத்துவத்திற்குப் பின்னான தமிழ் எழுத்துகளை வாசிப்பதற்கு மேற்கத்திய வாசிப்புப் பார்வைகளே உதவும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது. ஆனால் நவீனத்துவ இலக்கியங்களோடு வளர்ந்த கல்விப்புலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் தொடர்ந்து அவற்றை வாசிக்கத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கியக் கொள்கைகள் உதவும் என வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதே நேரம் எல்லாம் தொல்காப்பியத்தின் இலக்கணங்களே போதும் என்ற பார்வையை முன்வைப்பதும் இல்லை. மேற்கத்தியப் பார்வையையும் தொல்காப்பியப் பார்வையையும் இணைத்துக் கொள்ளும் நிலையில் கூடுதல் புரிதல்கள் கிடைக்கும் என்பது அதன் பின்னுள்ள நிலைபாடு.
இந்த நோக்கத்தில் கவிதைகளை வாசித்துக் காட்டிக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிப்பேராசிரியர் சி.க. என அழைக்கப்பட்ட சி.கனகசபாபதி.மரபுக்கவிதையை மறுதலித்துப் புதுக்கவிதையாகத் தங்கள் வசன கவிதையை முன்வைத்த கட்டுரைகளை அதிகம் வெளியிட்ட எழுத்து இதழிலேயே எழுதினார். அதேபோல் அமைப்பியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்த தமிழவனும் நவீனத் தமிழ்க்கவிதைகளை வாசிப்பதில் தொல்காப்பியத்தின் செய்யுளியல் பயன்படும் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்;வாசித்துக் காட்டியிருக்கிறார். இந்தப் பாதையில் கவிதையியலைக் குறித்து தொடர்ந்து எழுதும் பேராசிரியர் க.பூரணச்சந்திரன். அவர் கவிதையியல் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள நூல் பொருள்கோள். முன்னர் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டதின் இப்போதைய வடிவத்தை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நானும் எழுதியிருக்கிறேன் என்றாலும் நூலாக ஆக்கவில்லை. விரைவில் ஆக்கவேண்டும். வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

மரபுக்கவிதைகளின் தேக்க நிலையை உணர்ந்து வசனகவிதையைப் புதுக்கவிதையாக முன்மொழிந்து வளர்த்த இதழ்களில் செல்லப்ப்பாவின் எழுத்து முன்னோடி இதழ். அதில் சி.க.போன்றவர்கள் தொல்காப்பியக் கவிதையியலை முன்வைத்த போதிலும் அது முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. மேற்கத்தியப்பார்வையோடு சம்ஸ்க்ருதத்தின் கவிதையியலை உள்வாங்கிய பார்வையே முதன்மை பெற்றது. அந்தப் பார்வையில் நவீனக் கவிதைகளை வாசித்துக் காட்டியவர்களின் பட்டியல் நீளமானது. தங்களைச் சிற்றிதழ் மரபினராகக் கருதிக்கொள்ளும் அவர்களில் பெரும்பாலோர் புதுக்கவிதைகள் எழுதும் கவிதைக்காரர்களும்கூட. கவிகளாகவும் கவிதை வாசிப்பாளர்/ விமரிசகர்களாக நினைத்துக் கொள்பவர்கள். அந்தப் பட்டியலில் கவிதையின் அந்தரங்கம் என்ற நூலின் மூலம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் க.வை. பழனிசாமி. எழுத்துப் பாரம்பரியத்தைப் பல நிலைகளில் தொடரும் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. வாங்கிப் படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று.
*****************************************
தன்னுணர்வான சிந்தனை வெளிப்பாடு.
இந்தப் புத்தகத்தை அதன் ஆசிரியர் என்னிடம் ஒரு இலக்கிய நிகழ்வில் தந்தார். அவர் தந்தபோது வாங்குவதற்கு யோசித்தேன். அவரது பெயரோ, எழுத்தோ எனக்கு முன்னறிமுகம் இல்லாத ஒன்று என்பது ஒரு காரணம். முகநூலில் வாசித்த நூல்கள் பற்றி அவ்வப்போது ஒருசில வரிகள் எழுதுகிறேன் என்பதை வைத்து முகநூலில் நண்பர்களாக இருப்பவர்களும் பின் தொடர்பவர்களும் தரும் நூல்களை வாங்கிவிட்டு அது குறித்து எழுதவில்லை என்றால் தொடர்ந்து விசாரிப்பார்கள்; வருத்தப்படுவார்கள். கோபப்பட்டவர்களும் உண்டு. என்னிடம் தரப்படும் நூல்களை வாசிக்கத் தொடங்கிய பின் தொடர்ந்து வாசிக்கலாம் என்பதை நூல்களே தீர்மானிக்கின்றன. எழுதலாம் என்பதை அதன் வெளிப்பாடுகளே முடிவு செய்கின்றன.

முன்னறிமுகம் இல்லாத அவர் எனது தயக்கத்தைப் பார்த்து வலியுறுத்தியே தந்தார். எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை; ஆனால் வாசித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டுத் தந்தார். மறுக்காமல் வாங்கிக் கொண்டேன். எல்லாமே இலவசம் என்ற தலைப்போடு ‘ இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி என்ற துணைத் தலைப்பும்’ கிராமியப் பொருளாதாரம் குறித்த நூல் என்ற நினைப்புதான் வாசிக்கத்தூண்டியது. நான் நினைத்ததுபோலவே கிராமியத்தன்னிறைவுப் பொருளாதாரம் குறைத்தே அந்நூல் விளக்கிக் கொண்டே போனது. ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் விளக்கும் முறை வெளியிலிருந்து பார்த்து, ஆய்வு நோக்கில் விசாரித்து எழுதியனவாக இல்லாமல் ஒவ்வொன்றையும் உள்ளாளாக இருந்து உணர்ந்து புரிந்துகொண்டு எழுதியனவாக இருந்தன.

இந்திய விவசாயத்தின் அனைத்து மூலப்பொருட்கள் குறித்தும் நிலம், நீர், விதை, விளைச்சல், பங்கீடு, விற்பனை என விரிவாகப் பேசும் நூல் அதன் வழியாக இந்தியக் கிராமங்களில் என்னென்ன மாற்றங்களை முன்னெடுக்க முடியும் என்பதைக் காந்தி சொன்ன குறிப்புகளை விவாதித்துள்ளது. காந்தியச் சிந்தனை, காந்திய வழிமுறை, அவர் முன்வைத்த வாழ்வியல் ஆகியன குறித்து மறுபார்வைகளை இலக்கியவாதிகள் முன்மொழியும் இந்த நேரத்தில் தனது அனுபவம் சார்ந்து கிராமியப்பொருளாதார மறுசீரமைப்பைப் பேசும் இந்நூல் பாரதி சின்னச்சாமியின் இந்நூலும் வாசிக்கவேண்டிய ஒரு நூல்; அதன் வழிமுறைகள் செயல்பாட்டுக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. கோயம்புத்தூர், எழில்மதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.



https://ramasamywritings.blogspot.com/2020/02/blog-post_21.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்