ராகுல் காந்தி: நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி

பாரத ஒற்றுமைப் பயணத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய ராகுல்காந்தியை ஒரு அரங்கியலாளனாகவும் அரசியல் விமர்சகனாகவும் கவனிக்கத் தோன்றியது. அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக அவரது பேச்சுகள் அரசியல் சொல்லாடல்களாகவே இருந்தன. அந்தச் சொல்லாடல்கள் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் சித்தாந்தம், செயல்பாடுகள், மறைமுக நோக்கங்கள், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவற்றை விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது; அப்படித்தான் அவரது பேச்சுகள் அமையவேண்டும். அதனைத்தாண்டி அவரது பேச்சு மொழியும் உடல் மொழியும் அவ்விரண்டுன் இணைந்து உருவாக்கும் வெளிப்பாட்டுப் பாங்கும் முந்திய தலைமுறைக்காங்கிரசின் தலைவர்களுக்கும் பாடம் சொல்வதுபோல இருந்தன.


  
ஒற்றுமைப் பயணம்- நெருக்கடியின் தேவை
ஒற்றை மையத்திற்கு மாற்றாகப் பல மையங்களை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நிகழ்நிலைப் பேராயக் கட்சி. அதனை உணர்ந்துகொண்ட தலைவராக இளம் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுகிறார். இந்தப் புரிதலோடு எப்போதும் தனது அரசியலை முன்னெடுக்கும் மாநிலக் கட்சியாகத் திராவிட முன்னேற்றக்கழகம் இருந்து வருகிறது.

பிரிந்து போவதற்கான சூழல் உண்டானால் அதனை மறுக்காத ஒன்றியத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவர் சி.என். அண்ணாதுரை விரிவாகப் பேசியுள்ளார்; எழுதியுள்ளார்: நாடாளுமன்றத்திலேயே விளக்கியுள்ளார். பின் வந்த கலைஞர் மு.கருணாநிதியும் திசைவிலகியதில்லை. மாநில அடையாளத்தைத் தக்கவைக்கும் மொழியுரிமைகள், பண்பாட்டு நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், அவற்றின் வழியாகக் கிடைக்கும் வருவாயைச் சமூகநலத்திட்டங்கள் வழியாகப் பரவலாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கலைஞரின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. இந்தப் பாதையில் இப்போதைய அரசும் திசைவிலகவில்லை. இந்த வரலாற்றை, அரசியல் நடவடிக்கைகளை, முன்மாதிரியைப் புரிந்து கொண்டவராகவே ராகுல்காந்தியின் அரசியல் பேச்சுகள் வெளிப்படுகின்றன. அதன் காரணமாகவே மாநில உரிமைகளைப் புரிந்துகொண்ட மக்கள் திரளைக் கொண்ட தென்மாநிலங்களை நாடி அவரது அரசியல் நடவடிக்கைகள் வருகின்றன.
நாட்டுக்கான ஒற்றை ஆட்சி மொழியை முன் மொழிந்த பண்டித நேரு, வலிமையான ஒன்றிய அரசு தேவையென நினைத்த இந்திராகாந்தி, உலக முதலாளியத்திற்காக திறப்பைச் செய்த ராஜீவ்காந்தி, மதப்பெரும்பான்மைவாதத்தோடு உள்ளார்ந்த நட்பும் சமரசமும் கொண்டிருந்த நரசிம்மராவ், எதிரிகளின் திட்டமிட்ட பரப்புரைகளை எதிர்கொள்ளமுடியாமல் நண்பர்களைக் கைவிட்ட மன்மோகன்சிங் போன்றவர்களின் அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் இன்றும் விமரிசனத்திற்குரியன. மாநில உரிமைகளுக்கும், பெருந்திரள் மக்களுக்கும் நன்மை பயப்பன அல்லதான். ஆனால் இவற்றை ராகுல்காந்தி அப்படியே ஏற்றுத்தொடர்வார் என்று நினைக்க வேண்டியதில்லை. இப்போதுள்ள நெருக்கடிகள் அவரை அப்படித் தொடர அனுமதிக்காது.
ஒற்றை அதிகாரம் என்பதற்குப் பதிலாகப் பன்மை அதிகாரம் என்பதே மாற்றுப்பாதை. இதனைப் புரிந்து வைத்துள்ளவராக வெளிப்படுகிறார் ராகுல் காந்தி. ஒன்றிய அரசாங்கத்தை உருவாக்க நடக்கப்போகும் 2024 தேர்தலில் இணைப்புக் கண்ணியாக இருக்கத் தோதான கட்சியாக இந்தியப்பேராயக் கட்சியை மாற்றும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அவரது கரங்களை வலுப்படுத்துவதே மாநிலக் கட்சிகளின் அரசியலாகவும் இருக்கப்போகிறது. இந்நிலையில் அவரது தலைமையில் இயங்கப்போகும் பேராயக்கட்சியோடு உறவும் கூட்டணியும் வைக்க நினைக்கும் கட்சிகள் தங்களின் ஐயங்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்து அவற்றின் மீது விவாதங்களை எழுப்பிப் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். குறைந்த அளவுப் பொதுப்புரிதலை உருவாக்கிய அரசியலுக்கு முன்னுதாரணங்கள் முன்பே இருந்துள்ளன. இந்த ஆலோசனைகள் எதனையும் முன்வைக்காமல் -ராகுல் காந்தியிடம் வெளிப்படும் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ளாமல் அவரது முயற்சிகளை விவாதப்படுத்த நினைக்கும் பலர், அவரது தாயும் தந்தையும் பாட்டியும் எடுத்த முடிவுகளை அவர் மீது சாத்திப் பின்னிழுக்கப் பார்க்கிறார்கள். அது நாட்டின் நிகழ்கால நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளாத விமரிசனங்கள்.

மாற்று அரசியல்

நேருவின் கலப்புப் பொருளியல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டுப் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் தனியார் மயத்தை இந்தியாவிற்குள் தீவிரமாகக் கொண்டுவந்த நரசிம்மராவ், மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக் காங்கிரஸ்காரர்களிடமிருந்தும் வேறுபட்டவராக இருக்கிறார். வலிமையான மைய அரசு என்ற நேருவின்/ இந்திராவின் நிலைபாட்டைக் கூட முழுமையாக அவர் ஏற்றுக்கொண்டவராக இல்லை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவின் ஆட்சிகள் அனைத்தையும் மறுபரிசிலனை செய்யும் சொல்லாடல்களை அவரது பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டிற்குள் வரும்போது தமிழ்நாட்டில் என்ன பேசவேண்டும் என்பதைக் கச்சிதமாகத் திட்டமிட்டுப் பேசுகிறார் அவர். பல்லின, பல்மொழி, பல்பண்பாட்டு நிலப்பரப்பொன்றைக் கட்டுக்கோப்பாகவும் சுதந்திர மனநிலையுடனும் வழிநடத்தும் ஒருவரின் உரையாக இருக்கிறது. ஒற்றை இந்தியா என்றுசொல்லிப் பல இந்தியாக்களை உருவாக்கும் ஆபத்தை உணர்ந்த பேச்சு.தேசியப் பண்பாட்டை உருவாக்கும் நோக்கம் எனச் சொல்லி ஒருமதம், ஒருமொழி, ஒரேமாதிரியான கல்வி என நகரும் ஆபத்திற்கெதிரான உரை அது. அனைவரையும் உள்வாங்கும் அரசியல் சொல்லாடலின் வெளிப்பாடு.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்கும் ராகுல் காந்தி வந்துபோனார். அப்போது அவரது பேச்சுமொழியை விடவும் உடல்மொழியின் வெளிப்பாடுகள் கவனிக்கத் தக்கனவாக இருந்தன.  அவரைச் சுற்றிக் கடுமையான காவல் இருக்கிறது என்றாலும், அப்படியொன்று இருப்பதை உணர்த்தாத நிலையை அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. சாதாரணமனிதர்களோடு நெருங்கி நின்று படம் எடுத்துக் கொள்வதும், அவர்களின் உணவை அருகிருந்து உண்பதும் செயற்கையாகத் தோன்றவில்லை. அதேபோல் அரசியல்வாதிகளின் ஆடை என்பதுபோல ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்கிய அரசியல்வாதிகளிடமிருந்து விடுபட்டவராக இருக்கிறார். நவீனத் தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்குப் பணிசெய்யப்போகும் ஓர் இளைஞரைப்போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கூட்டத்திலும் விதம்விதமான ஆடைகளோடு வருகிறார்.  சிந்தனை, செயல், அன்றாட வெளிப்பாடு என ஒவ்வொன்றிலும் அவர் காட்டும் மாற்றுப் போக்குகள் மாற்றரசியல் ஒன்றை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் ஒருவரின் நடவடிக்கைகளாக இருக்கின்றன. இந்தத் தன்மையைக் கடந்த நாடாளுமன்றத்தேர்தலிலேயே காட்டினார். அதனைத் தமிழகம் ஏற்று அவர் தலைமையிலான கூட்டணியை முழுமையாக ஆதரித்தார்கள். அந்தத் தேர்தல் பரப்புரை ஒன்றைக் குறித்து பின்வருமாறு எழுதியிருந்தேன்

நவீன அரங்கியல் பயன்பாடு

அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் புலப்படாத அரங்கியல்காரனாக (Invisible Theater) அறிவார்கள். புலப்படா அரங்கிற்கும் முன்னால் அவன் இயங்கிய அரங்கத்திற்குப் பெயர் முன் முற்றமேடை (Forum Theatre)

இதுவரை நமக்கு அறிமுகமான படச்சட்டகச் செவ்வக மேடையில் (Proscenium Stage) சிறப்பான ஒளியமைப்புகள் மூலம் பேச்சாளர்களின் மீது கவனக் குவிப்பைச் செய்ய முடியும். என்றாலும் அதில் பார்வையாளர்கள் நெருக்கமாக உணரும் சாத்தியங்கள் குறைவு. செவ்வக மேடையில் பேசும் நபர் அசையும் நபராக இருக்கவிரும்பினால் கூடத் தட்டையாக ஒரு நேர்கோட்டில் தான் நகர முடியும். இடவலமாகவும் வல இடமாகவும் பார்வையாளர்களுக்கு உடலைப் பாதியளவு காட்டியபடி நகரும்போது மேலிருந்தோ பக்க வாட்டிலிருந்தோ வரும் ஒளியின் குவிதல்வழி பார்வையாளர்களின் கவனத்தை அவர் மீது நிரப்பி விடலாம். அந்த முயற்சிகளைக் கூட இந்திய அரசியல்வாதிகள் தங்கள் மேடைப்பேச்சுகளில் அதிகம் முயற்சி செய்ததில்லை.

தமிழக அரசியல் மேடையில் எம்.ஜி.ராமச்சந்திரன் சில முயற்சிகள் செய்திருக்கிறார். நிலையான ஒலிபெருக்கியை விட்டு விலகி மேடையின் முன்னால் வந்து குறிப்பான பார்வையாளரை நோக்கிக் கேள்விகளை எழு ப்பிப் பதிலைப் பெற்று உரையாடும் ஒருசில காட்சிகளை அவரது மேடைப்பேச்சில் நானே பார்த்திருக்கிறேன்.இந்திய அளவில் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி இதே போல முயன்றிருக்கிறார்.அந்த முயற்சியில் சில ஆபத்துகள் உண்டு.

எதிர்க்கதாபாத்திரத்தோடு பேசும்போது கண்ணைப் பார்த்துப் பேசவேண்டும் (Eye contact) ) என்பது நடிப்புக்கலையில் முக்கியமான பாடம்/ பயிற்சி. கண்களைத் தொடர்தல் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நாடகப் பயிலரங்குகளில் எப்போதும் முயல்வதுண்டு. 
கண்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் நெருங்கி வரவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.இந்த முன் முற்றமேடை அதற்கான நல்லதொரு வடிவம். இந்த முறையை எல்லா இடங்களிலும் செயல்படுத்தி விட முடியாது.

கண்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் நெருங்கி வரவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.இந்த முன் முற்றமேடை அதற்கான நல்லதொரு வடிவம். இந்த முறையை எல்லா இடங்களிலும் செயல்படுத்தி விட முடியாது.
கண்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் நெருங்கி வரவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.இந்த முன் முற்றமேடை அதற்கான நல்லதொரு வடிவம். இந்த முறையை எல்லா இடங்களிலும் செயல்படுத்தி விட முடியாது.
ஒழுங்குபடுத்தப்பட்ட -ஸ்டெல்லா மேரிஸ் போன்ற கல்லூரிகளில் அரசியல் புரிதல் கொண்ட மாணவப் பார்வையாளர்களோடு நடத்தும் உரையாடலில் வெற்றிகரமாக முயற்சி செய்யலாம். அதைச் செய்ததால் இன்று நடந்த தேர்வில் ராகுல் காந்தி 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் மிகத்தரமான (Out standing ) அரசியல்வாதியாக ஆகிவிட்டார். அவருக்குத் தேர்வு வைத்த மாணவிகளின் வினாக்களும் தேர்ச்சியான நிபுணர்களின் வினாத்தாளைப் போல இருந்தன.

நடந்தது கொண்டாட்டமான கலைநிகழ்ச்சியா? 
அரிஸ்டாடியலிய இன்பியல் நாடகமா? 

இந்திய குடிமைத்தேர்வில் ஆட்சிப்பணிக்குத் தேர்வில் நேர்காணல் செய்யப்படும் ஒருவருக்கு நடக்கும் நேர்காணல் தேர்வா? எனப் பலவிதமான அனுமானங்களை உருவாக்கித் தந்த நிகழ்வாக இருந்தது.

இந்திய அரசியல் நவீனத்தன்மைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. அதற்கான தகுதியோடு ஒரு நவீனத்தலைவர் உருவாகியிருக்கிறார் . அந்த முக்கால் மணி நேர நிகழ்ச்சியை ஒன்றிரண்டு தடவை பார்த்தேன்; கேட்டேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

பண்பாட்டுக் கல்வி