வாக்களித்தோம்; காத்திருப்போம்.


எனது வாக்கைச் செலுத்துவதற்கு ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடந்து சென்று வாக்களிப்பது என முடிவு செய்ததால் காலையில் நடக்கவில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தபோக 15 நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குக் கிளம்பி 09.15 க்கு வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வெளியேறிய போது மணி 10.12. நாம் அளித்த வாக்கு யாருக்குப் போகிறது என்பதைக் காட்டும் ஏற்பாடும் இருக்கிறது.
எனது வாக்குச் சாவடி இருக்கும் முகம்மதுஷாபுரம் பகுதி அடித்தட்டு வேலைகளையும் / சிறுதொழில்களையும் செய்பவர்கள் நிரம்பிய பகுதி. நான் வரிசையின் கடைசியில் நின்றபோது எனக்கு முன்னால் 48 பேர் நின்றார்கள். பெண்கள் வரிசையில் மனைவிக்கு முன்னால் 20 பேர் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வரிசை கிடையாது. தனித்தனி வரிசை. அவர் முடித்துவந்து காத்திருந்தார்.
திருமங்கலம் போன்ற சிறுநகரங்களில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவதில்லை. வரிசையில் நிற்கும்போது கட்சிiகள், வேட்பாளர்கள் எனப் பேசிக்கொள்வதைவிட, இந்த முறை பணவரவு இல்லை என்றே பேசிக் கொண்டார்கள். எந்தக் கட்சியும் ஓட்டுக்கு இவ்வளவு எனக் கொடுத்ததில்லை என்று புரிந்தது. பொதுவாக நாடாளுமன்றத்தேர்தல்களில் அப்படிப் பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை என்றும் ஒருவர் சமாதானம் சொன்னார். சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவர் இந்திய அளவில் புகழ்பெற்ற ‘திருமங்கலம் பார்முலா’ வை உருவாக்கிய ஊரிலேயே பணப்பட்டுவாடா இல்லாமல் போய்விட்டதே எனச் சொல்லிச் சிரித்தார்.
வெளியே வந்தபோது வெயில் ஏறிய நிலையில் எதிர்ப்புறக் கட்டிட நிழலில் 10 நிமிடம் அமர்ந்திருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது சாலையில் வாக்களிக்கும் ஆர்வத்துடன் செல்லும் கூட்டம் அதிகமாகியிருந்தது. அந்தப் பள்ளியிலேயே 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால் பள்ளியில் நுழைபவர்களும் வெளியேறுபவர்களுமாக இருந்தார்கள். நடந்து போகும் சாலையில் சின்னங்களைக் காட்டியபடி நிற்பதற்கும் வாக்கு எண்ணையும் வாக்குச்சாவடி எண்ணையும் சொல்வதற்காகவும் கட்சிக்காரர்கள் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவுமென வேலை செய்கிறார்கள். காங்கிரஸின் சின்னமான கையைக் காட்டிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் கறுப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க.வினர் தான் இருந்தனர். அதேபோல் விஜயபிரபாகரனின் முரசு சின்னத்திற்காக அ இ அதிமுகவும் வேலை செய்கிறது.வாக்களிக்கும் ஆர்வமும் அதிகமாகவே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விருதுநகர் தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைச் சுட்டும் குறியோடு மொத்தம் 28 சின்னங்கள். அதில் 10 பேர் கட்சியினர் என்பதை அங்கிருந்த சுவரொட்டி காட்டியது. அதில் காங்கிரஸ், தேமுதிக, பா.ஜ.க., நா.த.க. தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் என்பதையும் எல்லாத் தொகுதிகளிலும் போட்டிபோடுகிறார்கள் என்பதையும் அது சொன்னது. மீதி 17 பேர் சுயேட்சைகள்.
இந்தியத் தேர்தல் முறையில் மாற்றங்கள் பற்றிச் சிந்திக்கவேண்டிய நேரத்தில் செலவுகளைக் குறைப்பது பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும். வேட்பாளர்கள் செய்யும் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் செய்யும் செலவுகளும் குறைக்கப்படவேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது மூலமாக அச்சு வேலைகளும் காகிதச் செலவும் குறைக்கமுடியும். வாக்களித்துவிட்டு முடிவுக்காக மாதக்கணக்கில் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்