அரசியலை நிகழ்த்துதல்
மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் திரும்பவும் வேட்பாளர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் கவனிக்கத்தக்கனவாக இருந்தன. தனக்கு வாக்களித்து அனுப்பிய மதுரை நாடாளுமன்றத் தொகுதிவாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களுக்காகப் பேசியவராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அறிவுவாதக் கருத்துகளை முன்வைப்பவராகவும் விளங்கினார். கருத்தியல் எதிர்ப்பு நிலையில் ஆளும் பா.ஜ.க.வின் எதிர்நிலைப்பாடுகளைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற அடையாளத்தோடு, தமிழ்நாட்டின் திராவிட இயக்கப் பொதுமனத்தோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இயங்கும் அரசியல்வாதியாகவும் எழுத்தாளராகவும் இயங்கிவருபவர். அவரை ஆதரித்த பரப்புரை என ஒரு காரணத்தை முன்வைத்து, அவர் சார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் ‘கூடுகை’ என்னும் நிகழ்வை மதுரையில் நேற்று -ஏப்ரல் 7 - ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வின் தொடக்கமாக அரசியல் பாடல்கள் இசைக்கும் குழுவினரின் பாட்டுக்கச்சேரி நடந்தது. தொடர்ந்து நிகழ்வு நடந்த இடத்தில் இருந்த - தமிழ்நாட்டின் திரையிசைப்பாடகர்களில் முன்னோடியான டி.எம்.சௌந்தரராஜன் சிலைக்கு மாலையணிவிப்பும் ஓவியக்கண்காட்சித் திறப்பும், ஓவிய வரைவு நிகழ்வும் நடந்தன. ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் பொறுப்பை எனக்கு வழங்கினார்கள். முதன்மையான அரசியல் அங்கத ஓவியங்கள் நிரம்பிய திரைச்சீலையைத் திறந்து வைத்த நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.
தமுஎகச.வின் அழைப்பை ஏற்றுத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் வந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசினார்கள். அறிக்கையை வெளியிடும்போது கைபிணைத்து உயர்த்திக்காட்ட மேடையில் இருந்தவர்களோடு மேடைக்கு முன்னாலும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் ஆளுமைகளுமாக 300 பேர் குழுமியிருந்தனர். கவிதை வாசிப்பு, உரைகள், ஓவியம் வரைதல், கண்காட்சி என முழுமையான நிகழ்த்துதலாக கூடுகையை மாற்றித் திட்டமிட்டிருந்தது சங்கம். இவ்வகையான நிகழ்த்துதலைச் சங்கம் கலை இரவுகள் என்ற பெயரில் கடந்து 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டளவில் அவ்வப்போது தொடர்ந்து செய்து வருகிறது.
**********
வெவ்வேறு வகையான அடிப்படைவாத அச்சுறுத்தல் தலையெடுக்கும் போதெல்லாம் பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நின்று ஆதரவு காட்டிவருவது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். தனது உறுப்பினர்களின் என்ற எல்லையைத் தாண்டித் தனிநபர்களுக்காகவும் குழுக்களுக்காகவும், அமைப்புகளுக்காகவும் தன் ஆதரவுத் தளத்தை வழங்கிவரும் அச்சங்கம் நேற்று ஏற்பாடு செய்த ‘கூடுகை’ நிகழ்வை, ஒரு பரந்துபட்ட பண்பாட்டு நடவடிக்கையாக மாற்றியிருக்கிறது. சங்க உறுப்பினர்களின் கூடுகையாக ஏற்பாடு செய்யாமல், ஒத்த கருத்துள்ள எழுத்தாளர்கள், கலைஞர்களை ஓரிடத்தில் கூட்டி, பாசிசப் போக்கோடு இயங்கும் மதவாத அரசியலை அடையாளம் காட்டுவதோடு கூட்டியக்கங்களின் தேவையையும் உணர்த்தியுள்ளது.
நேற்று மதுரையில் நடந்த ‘கூடுகை’ யை ஒத்த நிகழ்வுகளைத் தமிழ்நாட்டின் வெவ்வேறு பெருநகரங்களில் நடத்திட வேண்டும். தேர்தல் காலத்தையொட்டி ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வின் வேறு வடிவங்களைத் தேர்தலுக்குப் பின்னரும் முன்னெடுக்கும் வாய்ப்புகளைப் பற்றியும் யோசிக்கலாம். அதற்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
கருத்துகள்