“காலத்தையும் செயல்களையும் உருவாக்க முடியாது. கருத்தை மட்டுந்தான் உருவாக்க முடியும்”


1968 – இல் கீழ்வெண்மணியில் 42 பேர் குடிசைகளோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். தங்கள் உழைப்புக்கான கூலியில் அரைப்படி நெல் அதிகமாகக் கேட்டது காரணம் எனச் சொல்லப்பட்டது. அந்தக் காரணத்திற்குப் பின்னால் அவர்கள் அனைவரும் சாதி அடுக்கில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எனச் சநாதனத்தைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கை இருந்த து என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அவர்கள் மீது எத்தகைய வன்முறையையும் தாக்குதலையும் செய்வதற்குச் சாதி அடுக்கில் மேலே உள்ளவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று சநாதனம் போதித்துள்ளது. அதன் விளைவே அந்த வன்முறை. நம்பிக்கைகள் மீது கடுமையான நெருக்கடிகளை உருவாக்கவேண்டியது அரசுகளின் கடமை.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்துள்ள உரிமைகளையும் சலுகைகளையும் முறையாக வழங்கும் வேலையைச் செய்வதோடு, அதனைச் செய்வதற்குத் தடையாக இருக்கும் அமைப்புகள், நபர்கள், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சட்ட விதிகளின்படி பாதிப்புக்குள்ளாவோர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்ற உறுதியையும், பாதிப்புக்குள்ளாக்குவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற நிலைபாட்டையும் காட்டும்போதுதான் சாதிய வன்முறைகள் நிகழ்வது தடுக்கப்படும்.

விடுதலை அடைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவின் அரசுகளால் சாதி அடுக்கில் கீழே உள்ளதான நம்பிக்கையை இல்லாமல் ஆக்க முடியவில்லை. அந்நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்களைக் கொல்வதையும் குடியிருக்கும் குடிசைகளோடு கொளுத்துவதைத் தடுக்க முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக் கீழ்வெண்மணி நிகழ்வை மையப்படுத்திக் கவி. இன்குலாப் தனது ‘மனுசங்கடா’ கவிதையை எழுதினார். அதில்,

“ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க”

என்று கேட்டார். அந்தக் கவிதைக்கு இப்போது வயது ஐம்பது தாண்டிவிட்டது. இப்போதும் அந்த மாதிரிக் கொடுமைகள் இந்தியாவெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மாணவர் மீது, உடன் பயிலும் மாணவர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதல் சாதி அடுக்கின் இருப்புக்குள் இருக்கும் மேலாதிக்க மனநிலையை வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறது. இந்நிலை தொடர்வதை நாகரிக சமூகமும், நாகரிக சமூகத்தை உருவாக்க நினைக்கும் அரசுகளும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது. மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் ஆணவத்தைத் தனக்குள் கொண்ட சாதி மனிதர்களின் கூடாரங்களாக நமது கிராமங்கள் மட்டுமல்ல, கல்விக்கூடங்களும் அசைந்துகொண்டிருக்கின்றன என்பதின் துலக்கமான வெளிப்பாடு இது எனப் பலரும் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். இதைவிடக் குரூரமான சாதிய வன்முறை ஒன்றை 2008 இல் சென்னை சட்டக்கல்லூரி சந்தித்தது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய நான் அவ்வப்போது இத்தகைய வன்முறை நிகழ்வுகளைத் திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வெட்டிக்கொண்ட பதற்றத்தால் உள்ளூர் விடுமுறைகளை அறிவித்திருக்கிறது கல்வித்துறை. அதே நேரம் சாதி ஆணவப் போக்கும் அதன் தொடர்ச்சியில் நடக்கும் வன்கொலைகளும் மோதல்களும் நெல்லைப் பகுதியின் பிரச்சினை என்பதாக நான் நினைத்ததில்லை. தமிழ்நாட்டின் பிரச்சினை என்று சுருக்கிக் கொள்வதைக் கூட ஏற்க முடியாது. இது இந்தியாவின் பிரச்சினை. இந்தியாவில் நிலவும் சனாதனத்தின் மீதான நம்பிக்கை உருவாக்கும் பிரச்சினை.

அடங்க மறுத்தல் என்னும் சொல்லாடல்

இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.

சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் இதுதான் நிலைமை. மக்களை மையப்படுத்தும் ஜனநாயகம் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக ஆக்கவில்லை. அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்கவில்லை. ஜனநாயக அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. சகிப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கும் இந்தியர்களிடம் அடக்கம் பற்றிப் பேசுவதில் நுண் அரசியல் செயல்படுகிறது என்பதை ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பெரும்பான்மை இந்தியர்கள் சகிப்புக்குப் பதிலாக அடங்கிப் போகிறார்கள்; வாழ்தலுக்குத் தேவையான பொருளாதாரத் தேவை ஒரு மனிதனிடம் அடக்கத்தை உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக இயலாமையை உருவாக்கும். இயலாமை அமைதியின்மையை உருவாக்கும். அமைதியின்மை கலகத்தை அல்லது புரட்சியை உருவாக்கும். ஆனால் இந்தியர்களிடம் இருப்பது இயலாமை அல்ல; அடக்கம். இந்த அடக்கம் தானாக உருவாவதில்லை. நேர்மறையான குணமாக சித்திரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அடக்கத்தை உருவாக்குவதில் எல்லா மதங்களும் விருப்பம் உடையன என்றாலும் இந்து சமயத்தின் விருப்பம் அலாதியானது. சமய நடவடிக்கைகளைத் தனிமனித வெளிகளில் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்காமல் பொது வெளிக்குள் நிகழ்த்திப் பார்க்கும் வடிவங்களைக் கொண்டது. நம்பிக்கைகள், சடங்குகள், பலியிடல், நிவர்த்திக்கடன், விழாக்கள், களியாட்டங்கள், என எல்லாவற்றையும் தனிமனிதனின் அந்தரங்கமாக வைக்காமல் குடும்பம், தெரு, கிராமம், பங்காளிகள், சுற்றம் சூழ எனக் கூட்டத்தினருடன் நிகழ்த்துவதையே வலிறுத்துவது அதன் குணம்.சமய நம்பிக்கை தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் எனச் சொல்லிக்கொண்டே பொதுநிகழ்வை வலியுறுத்துவதும், பங்கேற்கச் செய்வதும் அதன் வடிவமாக இருக்கிறது.

பக்தி இலக்கியங்களிலும் அறநூல்களிலும் தனிமனிதர்களின் அடக்கங்கள் விதந்து ஓதப்பட்டுள்ளன. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது போன்ற புகழ் பெற்ற வாசகங்கள் தனிமனிதர்களின் அடக்கம் நோக்கிச் சொல்லப்பட்ட வாசகங்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இத்தகைய வாசகங்களும் அடக்கம் குறித்து மதநூல்கள் தரும் விளக்கவுரைகளும் தனிமனிதனை நோக்கி மட்டும் கூறியன அல்ல. குழுக்களின் அடக்கத்திற்காகவும் சொல்லப்பட்டவைதான். குழுக்களாக அடங்கிப் போகும் நிலையில் அடிமைகள் அல்லது தாசர்கள் பட்டம் கிடைக்கின்றன. தாசர்கள் பாராட்டப்படுகிறார்கள் பலவிதமாக. பாராட்டப்படும் குணமாக அடக்கம் எல்லா நிலையிலும் இருக்கிறது. அடங்கிப் போவதற்கும் சகிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது. அனைத்து நிலையிலும் சமத்துவம் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்தபின்னும் அடிமைத்தனமும் அடக்கமும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

நெல்லை நினைவுகள்

தனிமனிதர்களாகச் சாதிய மனநிலைக்கெதிராகப் பேசவும் செயல்படவும் சொந்த வெளிகள் என அறியப்படும் வீடு, தெரு,கிராமம் போன்றன அனுமதிப்பதில்லை. அங்கிருந்து வெளியேறி இன்னொரு வெளியிலேயே சொந்த சாதிகளுக்கெதிராகப் பேசவும் செயல்படவும் முடியும் என்ற நிலையே இந்தியத்தன்னிலை உருவாக்கமாக இருக்கிறது. அடிமைப்பட்ட மனநிலை கொண்ட ஒருவரின் மீறலையும், ஆதிக்க மனநிலை உருவாக்கும் குற்றவுணர்விலிருந்து விடுதலை பெற விரும்பும் ஒருவரின் மன்னிப்புக் கோரலையும் ‘சொந்த’ என்ற பந்தங்கள் அனுமதிப்பதில்லை. எனது சொந்த அனுபவத்திலிருந்தே இதனைச் சொல்கிறேன்.

1990 களில் புதுச்சேரியில் தலித் இலக்கியப் பரவலோடும் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்து திருநெல்வேலிக்குப் பல்கலைக்கழகத்திற்குப் போகிறேன் என்று சொன்னபோது நண்பர்கள் பலரும் இங்குபோல் அங்கு செயல்பட முடியுமா? என்ற ஐயத்தை எழுப்பினார்கள். முடியும் என்று நம்பினேன்; ஆனால் நண்பர்கள் சொன்னதே நடந்தது. போனபின் (1997) அப்படிச் செயல்படும் சூழல் இல்லை என்பதை முதல் ஆண்டிலேயே புரிந்துகொண்டேன். அங்கொரு நாடகக்குழுவை உருவாக்கும் எண்ணமே தோன்றியதில்லை. கல்வி வளாகத்தைத் தாண்டி நடக்கும் எல்லாவற்றிற்கும் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன்.

துறையில் முதுகலைப் படிப்பு ஆரம்பித்து இக்கால இலக்கியம் என்ற பாடப் பிரிவில் ‘தலித் இலக்கியம்’ ஒரு அலகாகச் சேர்க்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கவிதை, சிறுகதை, நாவல்களைப் படிப்பித்தபோது சாதியின் இயக்கம், தீண்டாமையின் வெளிப்பாடு, மனிதர்களாக இணைந்து நிற்றல் போன்றவற்றைச் சொன்னபோது வகுப்பில் விவாதங்களே எழாது. மற்ற அலகுகளில் கேள்வி கேட்கும் - விவாதிக்கும் மாணாக்கர்கள் கூட இந்தப் பாடங்களின்போது மௌனத்தையே கடைப்பிடிப்பார்கள்.

வகுப்பில் பேசாத மாணவிகளில் சிலர் தங்கள் வீட்டில் எனது வகுப்பு குறித்துப் பேசியிருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்பது எனக்கு வந்த எச்சரிக்கைகள் வழியாக அறிய முடிந்தது. ” வகுப்பில் சாதி வேறுபாடு இல்லை என்றெல்லாம் பேசக்கூடாது” என்று எச்சரித்த குரல்கள் நேரடியாக இல்லாமல், வேறுவேறு நபர்கள் வழியாக வந்தது. என்னில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகளும் ஆசிரிய நண்பர்களும் யோசனையாகச் சொன்னார்கள். எனது விவாதங்களைத் திசைமாற்ற வேண்டிய நெருக்கடியை உணர்ந்தேன்.

பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்டம், மாணாக்கர்கள் கலை விழாக்கள் போன்றவற்றின் பொறுப்பாளனாக இருந்தேன். உறுதியான நிலைபாடுகள் கொண்ட அதிகாரத்தலைமைகளால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தியவர் பேரா.வசந்திதேவி. அவர் துணைவேந்தராக இருந்தபோது சாதிய வேறுபாட்டுணர்வு பல்கலைக் கழக வளாகத்திற்குள் அதிகம் வெளிப்பட்டதில்லை. ஆனால் அவருக்குப் பின் வந்தவர்களின் உறுதியின்மையால் சாதிய மனநிலை மெல்லமெல்ல தலைதூக்கிக் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் தங்கி நடத்தும் நாடகப் பயிலரங்கு போன்றவற்றில் உருவாகும் பிரச்சினைகள் ஆண் - பெண் பிரச்சினையாக முதலில் வெளிப்படும். ஆனால் அதற்குப் பின்னால் சாதியப் பிளவு மனம் இருக்கும்.

பல்கலைக்கழக வளாகத்தில் மனோ கலைவிழாக்களில் விநோதமான நெருக்கடிகள் எல்லாம் உருவானதுண்டு. துறையின் சார்பில் ஒரு குழுவாக/ அணியாகப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்புள்ளிகள் பெறுவதின் மூலம் ஒட்டு மொத்தமாகச் சிறந்த அணி என்று அறிவித்துப் பரிசு வழங்குவோம். அந்தக் குழுப்போட்டிகளில் - குறிப்பாக நடனம், நாடகம் போன்ற குழுப்போட்டிகளில் குறிப்பிட்ட இரண்டு சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணையாகப் பங்கேற்பதை விரும்புவதில்லை. குழு நடனத்தில் ஒரு ஆண் + ஒரு பெண் என ஆடும் வாய்ப்புகளில் தங்கள் சாதிப் பெண்ணோடு எதிர்நிலையில் இருக்கும் சாதி ஆண் இணையாக ஆடுவதைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். வேறு துறையில் இருக்கும் மாணவர்கள் வந்து கலைத்து விட்டுப் போய்விடுவார்கள். இது முதுநிலை வகுப்பில் இருந்தவர்களின் நிலை. என்றாலும் எனது நிலைபாட்டை எழுத்துகளின் வழியாக முன்னெடுப்பதை நிறுத்தியதில்லை. அதன் தொடர்ச்சியில் இப்போதைய அரசின் முன்னெடுப்புகள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காகச் சில செயல்பாட்டிற்குச் சிலவற்றைப் பரிந்துரைக்க நினைக்கிறேன்.

பரப்புரைகள் தேவை

இட ஒதுக்கீட்டால் பட்டியலின சாதியினர் மட்டுமே பலன் அடைவதாகக் கருத்து உருவாக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கை மீது செயல்ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோட்டமாகக் கருத்துருவாக்கம் தேவை. வீதிநாடகங்கள், நாட்டுப்புறக்கலை வடிவங்கள் வழியாகப் பரப்புரைகள் முழுவீச்சில் நடத்தப்பட வேண்டும். 1990 -களில் புதுவையில் செயல்பட்ட கூட்டுக்குரல் நாடகக்குழு இவ்வகை நாடகங்களைத் தயாரித்து நிகழ்த்தியது. அப்போது தலித் பண்பாட்டுப் பேரவை, தலித் கலைவிழாக்குழு போன்றவை பின்னணியில் பொறுப்பேற்றன. இப்போது அந்தப் பொறுப்பை அரசுத்துறைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொண்டு முதலில் செய்யவேண்டியது விழிப்புணர்வை மையப்படுத்திய பரப்புரைகள். 

பரப்புரைகள் பலவிதமாக நடத்தப்பெற வேண்டும். கல்வி நிறுவன வளாகங்களுக்குள்ளும் வெளியிலும் அவை நிகழவேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் பணியேற்பின் தொடக்கத்திலும், பணியிடைக்காலப் பயிற்சிகளிலும் சமூகப் பகுப்பாய்வை மையத்திய உரையாடல்கள் நட த்த வேண்டும். பொதுமக்கள் திரள்களோடு தொடர்புகொள்ள வேண்டிய அரசுத் துறைகளான வருவாய்த்துறை, காவல்துறை,கல்வித்துறை போன்றவற்றில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய உரையாடல்கள் தேவைப்படுகின்றன. இவ்வகை உரையாடல்களுக்குப் பின்னர் பொதுமேடைகளில் விவாதிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இப்போது பெயரளவுக்கு அமைத்துள்ள பட்டியல் சாதி/ பழங்குடியினருக்கான குழுக்களைத் தொடர்ச்சியாக இயங்கும் குழுக்களாக மாற்ற வேண்டும். அத்தோடு அக்குழுவுடன் இணைந்து சமூகப்பகுப்பாய்வு மன்றங்களை உருவாக்கி விவாதங்களையும் கலைநிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் அறிக்கைகளைப் பெற்று தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசுத்துறை ஒன்றின் மூலம் கலை, இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தி களச்செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த முடியும் என்பதற்குக் கேரளத்தில் உருவான கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத் (KSSP) இயக்கம் முன்னோடியாக இருந்தது.மக்களுக்கு அறிவியல் என்ற பரப்புரைக்குரலோடு இயக்கமாக மாறிய அவர்கள் கேரளாவில் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அவ்வியக்கத்தைப் பின்பற்றியே தமிழகத்தின் அறிவொளி இயக்கம் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களிடம் கல்வி சார்ந்த விழிப்புணர்வை முன்னெடுத்தது. அத்திட்டப்படி முதியவர்கள் கையெழுத்துப் போடும் நிலைக்கு நகர்ந்தார்கள் என்பது சாதனை அல்ல. அவர்களிடம் கல்வியின் வழியாக எதனையெல்லாம் செய்யலாம் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டதே முக்கிய சாதனை. அந்த மாதிரியை இப்போது கையிலெடுத்து சமூகச் சமநிலை என்ற மனப்பாங்கைப் பரப்புரை செய்யவேண்டும்.

மாநில அளவில் ஒருங்கிணைப்பாளர் ஒருவரைக் கொண்ட அமைப்பின் கீழ் மாவட்ட அளவில் பொதுமக்களிடம் செல்லும் கலைக்குழுக்களும் விவாதக் குழுக்களும் செயல்பட வேண்டும். இதில் ஈடுபாடுள்ள தன்னார்வ நிறுவனங்களை ஈடுபடுத்தலாம். அதேபோல் கல்வி மாவட்டங்கள் அளவில் பள்ளிக்கல்வியினரின் ஈடுபாட்டோடு வளாகக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவை நேரடியாகச் சாதியப் பகுப்பாய்வை முன்னெடுப்பதற்குப் பதிலாக கலையியல் வாய்ப்புகள் என்பதை மையப்படுத்திய பயிலரங்குகள், பட்டறைகள், விவாத அரங்குகளை நட த்தலாம். ஒவ்வொன்றிலும் வட்டார அளவில் தொடங்கி மாவட்ட அளவில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் கொண்ட கலைவிழாக்களைத் திட்டமிட வேண்டும். ஒவ்வொருவரையும் ‘சொந்த’ என்ற வெளியைத் தாண்டிச் சிந்திப்பதற்கும் நகர்த்துவதற்கு இவ்வகை விழாக்கள் வாய்ப்பளிக்கும். கடந்த காலங்களில் நடந்த மாவட்ட அளவுக்கலைவிழாக்கள், பல்கலைக்கழக அளவுக்கலைவிழாக்கள், மாநில அளவுக்கலை விழாக்கள் போன்றன இப்போது நடப்பதில்லை. இதற்கெல்லாம் போதிய நிதியுதவி அளிக்கப்படவில்லை என்பதே காரணம்.

பரப்புரைகளின் வடிவங்கள் நமது காலத்தில் மாற்றம் பெற்றுள்ளன. சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கும் சாதிய மேலாண்மைக் கருத்துகளைக் கண்டறிந்து விவாதப்படுத்தும் கண்காணிப்புக் குழுக்களை அரசு உருவாக்கவேண்டும். தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் நடத்தும் தகவல் தொழில்நுட்ப அணிகளைப் போலச் சமூகப் பகுப்பாய்வு அணிகளை அரசின் துறைகள் உருவாக்க வேண்டும். அவற்றின் ஒருங்கிணைப்பு வழியே எதிர்வினைகள் ஆற்றவேண்டிய தேவை இருக்கிறது. சாதிக்குள் இருப்பதும் சாதியாகத் திரள்வதும் ஒட்டுமொத்த நகர்வுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது என்ற புரிதலை நோக்கி நகரவேண்டும்.

தனிமனிதர்கள் காலத்தையும் செயல்களையும் உருவாக்கும் வல்லமையைத் தவறவிட்டுள்ளனர். ஆனால் கருத்துகளை உருவாக்கும் வல்லமை அவர்களிடமே இருக்கிறது. அந்த வல்லமை கொண்ட மனிதர்களை அடையாளங்கண்டு அமைப்புகள் செயல்களை உருவாக்கமுடியும். அச்செயல்பாடுகள் காலத்தை உருவாக்கும்; காலத்தை மாற்றும்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?