தேசியம் - தேர்தல்


சாதாரண நாட்களில் தனிநபர் கொலைகளைப் பிரிவினைவாதத்தோடு இணைத்து, அமைப்பின் குற்றங்களாக முன்வைப்பதை வலதுசாரி தேசியவாதம் ஒரு உத்தியாகச் செய்கிறது. அதில் முன்னோடியாக இருப்பது வலதுசாரிகளின் கனவு நாடான அமெரிக்காதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் -2016 இல் கோடை விடுமுறையின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன்.மே முதல் வாரத்தில் போய், ஜூலை 21 இல் நாடு திரும்பினேன். அந்த மூன்று மாத காலத்தில் வலதுசாரி தேசிய வாதத்தின் உளவியல் செயல்படும் விதத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜூலை 17 இல் லூசியானா மாநிலத்தில் பேட்டன் ரூஜ் என்னும் இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 போலீஸ்காரர்கள் சுடப்பட்டார்கள். 3 பேர் அங்கேயே மரணம். மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி எனச் செய்திகள் வந்தன. அத்தோடு சுட்டவன் பெயர் கேவின் யூஜின் லாங் என்ற முன்னாள் ராணுவவீரன் என்றும். அவனைக் காவல்துறை சுட்டுக்கொன்றது என்றும், அவனோடு இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்பதும் செய்தியின் தொடர்ச்சி. சுட்டுக் கொல்லப்பட்ட அவன், கறுப்பினப் பிரிவினைவாதக் கருத்துடையவன் என்றும், தன்னடையாளங்களோடு வாழவிரும்பும் குடிமக்கள் இயக்கத்தோடு (sovereign citizen movement)தொடர்பு இருந்தது என்பதையும் காவல்துறையினர் உறுதிசெய்தார்கள் என்பதும் செய்திதான். லாங்குக்கு மட்டுமே அமெரிக்க வெள்ளைக் காவலர்களைச் சுட்டுக் கொல்லும் வெறி இருந்தது என்பதை ஒத்துக்கொண்டதாகவும், அவன் மட்டுமே குற்றவாளி என்றும், தங்களுக்கு அதில் எந்தத் தொடர்புமில்லையென மற்ற இருவரும் தெரிவித்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவின.

நல்லவைகளும்சரி கெட்டவைகளும்சரி அமெரிக்கர்களால் தேசியக் கொடியோடு இணைக்கப்படுகின்றன. தங்கள் கொண்டாட்டத்தை ஏராளமான கொடிகளைப் பறக்கவிட்டுக் காட்டுகிறார்கள். வருத்தங்களைக் காட்ட தேசியக் கொடியை நீண்டகாலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறார்கள். ஜூன்,17 இல் நடந்த துப்பாக்கிப் படுகொலைக்கு அமெரிக்கா முழுவதும் மூன்றுநாட்கள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நானிருந்த இந்த மூன்று மாதத்தில் மூன்று துப்பாக்கிச்சூடுகள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கக் காரணமாக இருந்தன.

ஜூலை 7 இல் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் மிகா சேவியர் ஜான்சன், கூட்டமாக இருந்த காவல் அதிகாரிகளைப் பார்த்துச் சுட்டார். 5 பேர் அங்கேயே மரணம்; 9 பேர் காயம். பக்கத்திலிருந்த சாதாரணப் பொதுமக்கள் 2 பேருக்கும் காயம். ஜான்சன், அமெரிக்காவிற்காக ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்ட முன்னால் ராணுவ வீரர். ‘கறுப்பர்கள் மீது வஞ்சகம் காட்டும் வெள்ளைக் காவல் அதிகாரிகளைக் கொல்வேன்’ என்று சத்தமிட்டபடியே சுட்டதாக அறிவிக்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை அமைதியாக வாழவிடுங்கள் என்பதே அவரின் கோரிக்கை. அந்த நிகழ்வுக்குப் பின்னும் கொடிகள் சில நாட்கள் அரைக்கம்பத்தில் தொங்கின.

இந்தியாவில் தேசியத்தலைவர்களின் மரணம்பெறும் கவனத்தை அமெரிக்காவில் ஒவ்வொரு துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் பெற்றுவிடுகின்றன. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக் கொண்டு ஒருவன் சுட்டுத்தள்ளிய வன்முறையைத் தேசிய துக்கமாகக் கருதிக் கொடிகள் இரண்டுநாட்கள் நடுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதையும் நான் இருந்தபோது கவனித்தேன். 

ஜூன், 12 இல் ஓர்லண்டோ மாநிலத்தின் புளோரிடா நகரில் நடந்த அந்தத் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் பெருந்தாக்கத்தை உண்டாக்கியது. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக்கொண்டு ஒமர் மட்டீன் என்ற 29 வயது இளைஞன், சுட்டுத்தள்ளிவிட்டான். சுடப்பட்டவர்களில் பெரும்பாலோர் மூன்றாம் பாலினர். தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் கொண்டாட்டம் ஒன்றிற்காக – அவர்கள் சந்திப்புக்காக இருக்கும் சிறப்பு இரவு விடுதியில் கூடிக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது அவன் சுடத்தொடங்கிவிட்டான். 53 பேர் அங்கேயே மரணம்; 49 பேருக்குப் பெருங்காயம். சுட்டவன் அமெரிக்காவின் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவன். பழைமைவாதமும் வெறுப்பும் கொண்ட அவனை, மூன்றுமணிநேரத்திற்குப் பின் சுட்டுப்பிடித்தது காவல்துறை. 2001, செப்டம்பர்,11 இல் நடந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னான பெருந்துயர் நிகழ்வு என இப்படுகொலையை வருணித்தன ஊடகங்கள். 

பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கின்றன எனவும் செய்திகளை முன்வைப்பது ஒவ்வொரு நாட்டு அரசுகளும் செய்யும் ஒன்று. அதன் பின்னே இருக்கும் உளவியல் கவனிக்கவேண்டிய ஒன்று. தேசியவாத உணர்வைக் கட்டமைப்பது அதன் முதன்மை நோக்கம். அதனைப் பெருந்திரளின் மனத்திற்குள் செலுத்தவே தேசியக் கொடியென்னும் அடையாளம் அரைக்கம்பத்தில் பறப்பனவாக மாறுகின்றன. கெட்டவை நடந்துவிட்டது என்று நினைக்கிறபோது பொதுவெளியில் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் உரிமையை அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் கொடியேற்றங்களும் இறக்கங்களும் நடக்கின்றன. அரசு அலுவலகங்களில்கூட ஒவ்வொருநாளும் கொடியை ஏற்றி இறக்குவதில்லை. பறக்க விடுவதுமில்லை. குடியரசுதினமும், சுதந்திர தினமும் முக்கியமான கொடியேற்ற நாட்கள். அவரவர் இல்லங்களிலும் அன்று கொடியேற்றிக் கொள்வது அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் எல்லா இடங்களிலும் துக்கத்தைத் தெரிவிக்க அரைக் கம்பத்தில் கொடிகளை இறக்கிப் பறக்க விடுவதுமில்லை.
இந்த நடைமுறையை இப்போது வலதுசாரி அமைப்புகள் பின்பற்றுவதில்லை. தேசியக்கொடியைக் கையாளும் உரிமையை அரசிடமிருந்து - அரசு அமைப்புகளிடமிருந்து அவை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும் எடுப்பதாகத் தெரியவில்லை. மருத்துவர்களுக்கும் துப்புரவுப்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கையொலி எழுப்பலாம் எனப் பிரதமர் சொன்னதைக் கொண்டாட்டமாக்கிய வலதுசாரி அமைப்புகள், தேசியக்கொடியோடுதான் உலாவந்தார்கள். அதேபோல் சிறுபான்மையினர் மீது நடக்கும் வன்முறையான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டு அங்கே தேசியக்கொடியைப் பறக்க விடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனர். வன்முறையைக் காக்கும் பதாகையாகத் தேசியக்கொடி மாறுவது ஆபத்தின் உச்சம்.

மாற்றங்கள் தேவை

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில்(2019)மொத்த வாக்காளர்களில் 1.6 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 2 சதவீதம் குறைவு இந்த முறை. காரணம் என்ன? புதிய தலைமுறை இதழாளரின் கேள்வி:
எனது பதில்:
=============
பொதுத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கும் விதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்தியாவிற்குத் தேர்தல்களே வேண்டாம்; நிர்வாகம் செய்யத் தேவையான ஒரு அமைப்பு இருந்தால் போதும் என்றொரு முடிவை எடுத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவித்தால் கூட இந்தியர்கள் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நினைப்புதான் இந்த அச்சத்திற்குக் காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் அளித்துள்ள வாக்குசதவீதம் இந்த அச்சத்தை அதிகமாக்குகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற பெரு/ தொழில்நகரங்களில் வாக்களிப்பு விகிதம் எப்போதும் குறைவாகவே இருக்கின்றன. இதன் பின்னணியில் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருக்கிறது என்பது எனது அனுமானம். வேலை காரணமாக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் வாக்குகளை எங்கே பதிவுசெய்கிறார்கள் என்பது எப்போதும் கேள்விக்குறி. வாய்ப்புக் கிடைத்தால் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று வாக்களிப்பதையே விரும்புகின்றனர். இந்த முறை தொடர்ச்சியாகக் கிடைத்த விடுமுறையால் வாக்காளர்கள் குடும்பத்தோடு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல விரும்பியதைப் போக்குவரத்து நெருக்கடிகள் காட்டுகின்றன. டிஜிட்டல்மயமான கணக்கெடுப்பு, ஆதார் அட்டை வழங்கல் போன்றன வந்தபிறகும் ஒருவருக்கு ஒரு ஓட்டுதான் இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையம் இன்னும் உறுதிசெய்யவில்லை. 
பெருநகரங்களின் வாக்களிப்புக் குறைவுக்கு அப்படியொரு காரணத்தைச் சொன்னாலும் கன்யாகுமரி போன்ற கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பது இன்னொரு உண்மையை -குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. கற்றவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள்; அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் மேல்நடுத்தரவர்க்கமும் பொதுநல உணர்வற்றவர்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதை உறுதிசெய்யும் விதமாகவே ஒவ்வொரு பொதுத்தேர்தல் வாக்களிப்பு விகிதங்களும் இருக்கின்றன. இதில் வயதானவர்கள், இளையோர் என்ற வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.

வாக்களிப்புக் குறைவுக்கு அரசியல் கட்சிகளும் ஒருவிதத்தில் காரணம் என நினைக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அதன் வாக்கு வங்கி எது என்பதைத் தீர்மானித்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களை மட்டுமே தேர்தல் காலத்தில் நேரடியாக அணுகுகின்றனர். குறிப்பாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நம்பும் பெரிய கட்சிகள் ஒரு தெருவுக்கு ஒருவரை – 100 லிருந்து 200 பேருக்கு ஒருவரைப் பொறுப்பாக்கிவிடுகின்றன. அவர் அந்த நபர்களை மட்டுமே கண்காணிக்கின்றார். கவனிக்கின்றார். இதே நிலையை இன்னொரு பெரிய கட்சியும் எடுக்கின்றது. இந்நிலையில் பெரிய கட்சிகளின் கவனிப்பைப் பெறாத பொதுவாக்காளர்கள் தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அவர்களின் பூத் ஸ்லிப்பைக் கொண்டுவந்து தரும் ஆர்வலர்கள் கூட இல்லாததால் நாம் அளிக்கும் வாக்குக்கு மதிப்பு இல்லை என்று நம்புகின்றனர். அதனால் அவர்கள் வாக்குச் சாவடிப்பக்கம் போகாமல் தவிர்க்கின்றனர். இதுவரையிலான தேர்தல்களைவிட இந்த முறை இந்தப் போக்கை அதிகம் காணமுடிந்தது. வாக்களித்தே ஆகவேண்டும் எனப் பொறுப்போடு வந்தவர்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் தாங்களே தேடிக் களைத்ததையும் பார்க்க முடிந்தது.

மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் பங்கேற்பு என்பது அவர்களின் வாக்களிப்பின் வழியாகவே நடக்கிறது. தாங்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் தங்களின் பிரதிநிதி நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் பங்கேற்றுச் சட்டங்கள் இயற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்களாட்சியின் இயங்கியலும் நடைமுறைகளும் இருக்கின்றன. இதனை ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்ற ஐயம் ஒவ்வொரு தேர்தலின் போது தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றது.

இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றத்தைப் பள்ளிக்கல்வியில் தொடங்கவெண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்