எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; ஆனால்….
மனிதத் தேடலின் முதன்மையான நோக்கம் இந்த உலகத்தை விளங்கிக் கொள்வதாக இருக்கின்றது. மனிதர்களே உலகம் என நினைப்பவர்கள் மனிதர்களின் இருப்பையும் செயல்களையும் காரணங்களையும் பின்னணிகளையும் விளங்கிக் கொள்வதே போதுமானது என நினைக்கிறார்கள். உலகம் மனிதர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல என நினைப்பவர்கள் ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை இந்த உலகத்தில் இருப்பதின்- இயங்குவதின் காரணிகளை விளங்கிக் கொள்வதே அறிவு என நம்பித் தேடுகிறார்கள். தனக்கு அறிமுகமான இந்த உலகம் மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் தாண்டி நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பரப்புகளும் விளங்கிக்கொள்ள வேண்டியனவாக இருக்கின்றன என்ற விரிதலின் விளைவாக அறிவுத்தோற்றம் எல்லையை விரிக்கிறது. அப்போது உலக அறிவு, பிரபஞ்சம் பற்றிய அறிவாக விரிகின்றது.
உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவற்றை இயக்கும் புலப்படா சக்தியையும் விளங்கிக் கொள்ளும் வினை தொடரும்போதே விளக்கும் வினையும் தொடங்குகிறது. உலகம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் ஐம்புலன்கள் வழியாகக் கண்டனவற்றையும் கேட்டனவற்றையும் உண்டனவற்றையும் உயிர்த்தனவற்றையும் உற்றனவற்றையும் விளக்கத் தொடங்குவது மனித வினைகளாக மாறுகின்றன. விளக்குவதற்குத் தேவையான கருவியைக் கண்டுபிடித்ததே மனிதக்கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு. அந்தக் கருவியே மொழி. மொழியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய கூட்டங்களே அறிவார்ந்த கூட்டங்களாகவும், வளர்ச்சியடையும் சமூகங்களாகவும் மாறியிருக்கின்றன. வளமான மொழியின் அடையாளம் சொற்கள். ஒரு மொழியில் எவ்வளவு பெயர்ச்சொற்கள் உள்ளன; உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டே மொழியின் பழைமையும் அம்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்களின் செம்மையும் செவ்வியல் பண்புகளும் அறியப்படுகின்றன.
மொழியைக் கருவியாகப் பயன்படுத்தாத மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதின் மூலம் கடந்து செல்கிறார்கள். வாழ்ந்து காட்டுபவர்களின் இயல்புகளைச் சொற்களில் கட்டமைத்துக் காட்டுவது எழுத்துகளாக ஆகின்றன. கட்டமைப்பதின் வழியாக உருவாகும் வடிவம், வெளிப்பாட்டு நோக்கம், நோக்கத்தைக் கடத்த உருவாக்கப்படும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்வுகள் எல்லாம் சேர்ந்து எழுத்துகளின் வகைகளாக அறியப்படுகின்றன. உணர்ச்சிகளை அல்லது மெய்ப்பாடுகளைக் கடத்துவதை முதன்மையாகக் கருதும் வடிவம் கவிதையென அறியப்படுகின்றது. முரண்பட்ட மனித உறவுகளையும், மனத்தின் குமுறல்களையும் வெளிப்படுத்துவன நாடகங்களாக அறியப்படுகின்றன. நிகழ்வுகளுக்குள் நுழைந்து வெளியேறும் மனித இருப்பைச் சொல்வன கதைகளென வடிவம் கொள்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடத்துவன சொற்களும் சொற்களின் தொகுதிகளும்.
மொழியைப் பற்றிய பேச்சும் மொழியை விளக்கும் பேச்சுமே உலக அறிவின் திறப்புகளாக இருந்திருக்கின்றன. அரசியலையும் அழகியலையும் விளக்கிய அரிஸ்டாடிலின் பேச்சு மொழியைப் பற்றிய பேச்சுகளாகவே ஆரம்பித்துள்ளது. தமிழின் முதன்மைப் பனுவலான தொல்காப்பியத்தின் பேச்சும் மொழியைப் பற்றிய பேச்சுகளே. மொழியென்னும் ஆயுதத்தின் வெளிப்பாட்டுக் கூறுகள் சொற்கள். சொற்களை இணைத்துப் பயன்படுத்தும்போதே மொழி கருவியாகின்றது. தொல்காப்பியம் தொடங்கிப் பல்வேறு இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் சொல் என்னும் சொல்லைப் பலப்பலச் சொற்களால் கடந்திருக்கிறது தமிழ். சொல்லதிகாரம் என்ற அதிகாரத்தை ‘கிளவி’ ஆக்கம் எனத் தொடங்குகிறது தொல்காப்பியம்.
தமிழின் சொற்களை இரண்டு விதமாகப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் சொற்களின் பிறப்பிடம் சார்ந்து ஒரு வகைப்பாட்டைச் சொல்கிறது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலத்திற்குள் இருந்த சொற்களை இயற்சொல் என்று முதலில் வைத்துவிட்டு, இந்நிலப்பரப்பிற்கு வடக்கே இருந்து வந்த சொற்களை வடசொற்கிளவி எனவும், மற்ற திசைகளிலிருந்து வந்தனவற்றை திசைச்சொற்கள் எனவும், இந்நிலத்திற்குள்ளேயே ஒன்றோடொன்று கலந்து உருவாகும் சொற்களைத் திரிசொற்கள் எனவும் புரிய வைத்துள்ளது .
இப்படியொரு வகைப்பாட்டைச் செய்துவிட்டு, சொல் எப்படி அர்த்தங்களைச் சொந்தமாக்கிக் கொள்கின்றன என்பதை விளக்கும் நோக்கில் நான்கு வகையாகப் பிரித்தும் பேசுகிறது. ஒரு மொழியில் அடிப்படையாக இருக்கும் சொற்கள் இரண்டு. அவை பெயரும் வினையும். பெயர்களோடு சேர்ந்துவரும் சொற்களை பெயரடைகளாகவும், வினைகளோடு சேர்ந்து வருவனவற்றை வினையடைகளாகவும் நம் கால மொழி வல்லுநர்கள் சொல்கின்றனர். ஆனால் பண்டைய இலக்கணம் அவற்றை உரிச்சொல் எனவும் இடைச்சொல் எனவும் வகைப்படுத்தி விளக்கியிருக்கின்றது.
சொல்லை நன்னூல் ‘பதம்’ என்கிறது. சொல் என்னும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும் அதே வேளையில் கட்டளையிடும் தொனியைத்தனதாக்கி வினைச் சொல்லாகவும் இருக்கிறது. சொல்லெனும் வினையின் மாற்றுவடிவங்களாகப் பேசு, உரை, கிள, விளம்பு,மொழி எனப் பல சொற்களைக் கொண்ட மொழி தமிழ்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தெனவே என்று விளக்கம் சொன்ன இலக்கணத்தைக் கற்ற நவீன மனிதர்கள், ஒரு சொல் உருவாக்கும் பொருள் நிலையானதில்லை; சூழல் சார்ந்தது என விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு சொல்லுக்கு அகராதி அர்த்தம் ஒன்று இருக்கலாம். அதே நேரம் பயன்பாட்டு அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்று புரிந்து கொண்டது மொழி அறிவியலின் வளர்ச்சி. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே தனது மொழியில் இருக்கும் சொற்களையும் சொல் தொகுதிகளையும் கொண்டு இலக்கியப் பனுவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களுக்குக் கைவரப்பட்ட இலக்கியப்பனுவல் வடிவத்தின் வழியே சொற்களை நிரப்பி வைக்கிறார்கள். நிரப்பப்படும் சொற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டும் விலகிக்கொண்டும் நின்று அர்த்தங்களை உருவாக்குகின்றன; உணர்ச்சிகளைப் பெருக்குகின்றன; நிகழ்வுகளைக் கட்டமைக்கின்றன; நிகழ்வுகளுக்குள் மனிதர்களையும் உயிரினங்களையும் உருவாக்கித் தனது உலகத்தை – இருக்கும் உலகத்திற்கு இணையான இன்னொரு உலகத்தை – படைப்புலகத்தை உருவாக்கும் வினையைச் செய்கின்றன. சொற்கள் உருவாக்கும் படைப்புலகம் கவியின் படைப்புலகமாக -கதாசிரியரின் – நாடகாசிரியரின் படைப்புலகமாக ஆகி வாசிப்பவர்களைத் தனக்குள் ஈர்த்துக் கொள்கின்றன.
மொழியில் கிடைக்கும் சொற்கள் பலவற்றையும் பயன்படுத்திக் கவிதை செய்யும் கவிகளிலிருந்து விலகித் தனது கவியுலகத்தைச் சொல்லெனும் சொல்லால் ஆன உலகமாகக் கட்டமைத்துள்ளார் கவி.திராவிடமணி. இத்தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும் சொல்லையும், சொல்லால் உண்டான உலகத்தையும், சொல்லப்படுவதையும், சொல்லப்பட்ட வினையால் ஆன சிக்கல்களையும் தெளிவுகளையும் விரிக்கின்றன. சொற்களின் சாத்தியங்கள் எத்தனை இருக்கும் என்று திட்டமிட்டுக் கொண்டு தேடுகின்றது கவிமனம்.
கவிமனத்தைத் தனது மனமாக்கிக் கொள்ளும் கவிதைப் பாத்திரங்களை வாசிக்கும் வாசகர்களும் சொல்லின் வசமாகி அர்த்தங்களை உருவாக்கும் வினையை மேற்கொள்ள முடியும். அதனைச் செய்யத்தூண்டும் நேரடி உரையாடலை அதிகமாகக் கொண்டிருக்கின்றன திராவிடமணியின் இந்தத் தொகுப்புக் கவிதைகள். சொல்லால் கட்டியெழுப்பிய பிம்பங்களை ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக – ஒவ்வொரு விதமான மெய்ப்பாடுகளோடு உலவ விடுகின்றன. அந்தப் பிம்பங்களை வரிசையாகவும் வாசிக்கலாம்; தனித்தனியாகவும் வாசிக்கலாம். சொல்லென்னும் மந்திரமொழி ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சுழன்றுகொண்டே இருக்கின்றது; மாயங்களை நிகழ்த்துகின்றது
வாசித்துப் பாருங்கள். வாழ்த்துகள் கவிக்கு.
கருத்துகள்