பெண் எழுத்து - பெருவெளி


 புதியமாதவி, மும்பை.

      பெண்களுக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

கைப்பிடித்த கணவனின் பிரதாபங்களை எழுதுவதைத் தவிர.

 காலை முதல் இரவு வரை அவள் வாழும் சமையலறையின் சமையல் குறிப்புகளை பெண்கள் எழுதலாம். குழந்தை வளர்ப்பு எழுதுவது தாய்மையின் வரப்பிரசாதம். நவீன நாகரீகப் பெண்மணியா.., அப்படியானால், அவள்

அழகுக்குறிப்புகளை எழுதலாம். ஓய்வான நேரம் வாய்த்தால் உங்கள் பூ பின்னல் கலைகளைப்  பதிவிடலாம். உங்கள் கலை உள்ளத்தை வெளிப்படுத்த கோலம் வரையலாம். இப்படியாக பெண்கள் எழுதலாம். இப்படியாகத்தான்  பெண்கள் எழுத வேண்டும் என்பதே இன்றும் கூடபெண்கள் சிறப்பிதழ்கள்மற்றும்மங்கையர் மாத இதழ்கள்களின் அடிப்படை அம்சங்கள். இதைத்தாண்டி ஆண்டுக்கு ஒருமுறை வந்துப்போகும் மகளிர் தினத்தில் (மார்ச் 08) பெண்களின் உரிமைகள் என்று முழங்கி தொண்டை வறண்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் பத்திரமாக ஒதுங்கிவிடும் பெண்ணுலகம்.

      பெண்கள் சுயசரிதைகள் எழுதினால் கூட அதில் எழுதுவதற்கு எதுவுமில்லை. அதை ஒரு ரிவென்யு ஸ்டாம்பின் பின்பக்கத்தில் எழுதிவிடலாம் என்றுதானே ஆணுல அறிவு ஜீவிகள் சொல்லி இருக்கிறார்கள். அம்ருதா ப்ரீதமின் சுயசரிதைக்கு ரிவென்யு ஸ்டாம்ப் என்று குஷ்வந்த் சிங்நக்கலாகசொன்னதையே தலைப்பாக்கியதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியுமா என்ன?

      ஆனால், இம்மாதிரியான குறுகலான பாதைகளில் பயணித்தாலும் பெண்களின் பார்வைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடவில்லை.

சன்னல் கம்பிகளின் ஊடாகத் தெரியும் வானத்தின் சிறியத் துண்டுகளும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்தவள் பெண். அந்தச் சின்னச் சின்ன துண்டுகளை ஒன்றாக்கி விரித்து பார்க்கும்போது நாம் காணும் பெண்ணுலகம் அண்டவெளியை சிறியதாக்கிவிடுகிறது. ‘எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்பெண்ணிய வாசிப்பு கட்டுரைகள் .. இந்த அசாதாரணமான பெண்வெளியை அவர்களின் எழுத்துகளின் வழியாக அடையாளம் காட்டி இருக்கிறது. பேராசிரியர்.. ராமசாமி அவர்கள் , பெண்களின் சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பெண்ணியப் பெருவெளியை ஒரு கோட்டோவியாமாக வரைந்திருக்கிறார். இதில் பிரபலங்கள் புதியவர்கள் என்ற அளவுகோல்களை அவர் முற்றிலும் விலக்கி வைத்திருப்பது இக்கட்டுரை தொகுப்பின் தனித்துவம்.

      பெண்கள் எழுதுவதால் அவை பெண்ணிய சிறுகதைகளா, தலித்துகள் எழுதுவதால் அவை தலித்தியமா என்ற விவாதங்களுக்கு பேராசிரியர் தன்  தன் முன்னுரையில் ஒரு வகுப்பெடுத்துவிட்டுதான்  நகர்ந்திருக்கிறார்.

பொதுச்சொல் உணர்த்த நினைப்பது எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை. ஆனால் சிறப்பு சொற்கள் உணர்த்துவது அறிதலின்தொடக்கம். வேற்றுமையைக் கண்டறிவது மூலமே சிறப்புச் சொற்கள் உருவாகின்றன “ (பக் 20) என்று வகுப்பு எடுக்கிறார் பேராசிரியர்.

ஓளவையை ஓர் அறிவாளியாக காட்டும் எழுத்துகள் ஒளவை ஒரு பெண் என்பதையும் காட்டுகின்றன என்று சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் தன் பெண்வாசிப்பு தளத்தை நகர்த்தி இருக்கிறார். பேராசிரியரின் இந்த வகுப்பு நேரம்  இக்கட்டுரைகளின் ஊடாக பயணிக்கும் புதிய வாசகர்களுக்கு தேவையானதாக இருக்கிறது. சில தெளிவுகளுடன் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட முடிகிறது.

      இக்கட்டுரைகள் 26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதை வடிவத்தை எடுத்துக் கொண்டு கதைகளை கோட்பாட்டு ரீதியாகவும் கதையின் உள்ளடக்கத்தில் பயணிக்கும் பெண் கதாப்பாத்திரங்களின் வழியாகவும் என்று இரண்டு வகையிலும் எழுதப்பட்டிருப்பது இதுவரை எழுதப்பட்ட பெண் எழுத்துகளின் பக்கங்களிலிர்ந்து இக்கட்டுரைகளை தனித்துவப்படுத்தும் இன்னொரு முக்கியமான அம்சமாகும். சமகால அரசியலுடன்  கோட்பாடு ரீதியான புரிதலையும்  ஒவ்வொரு  எழுத்தாளர்களின்  ஒரு தனி சிறுகதையை மட்டுமே எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த சிறுகதைகளை எடுத்துக்கொள்ளாமல், பேராசிரியர் ஒவ்வொரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை மட்டும் எடுத்துக்கொண்டு அதைக் கோட்பாட்டு ரீதியாக அணுகி இருப்பதால் கட்டுரை தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் , அவர் எடுத்துக்கொண்ட   26 பெண் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த  படைப்புகளுடன் கட்டுரையாளருக்கு இருக்கும் வாசிப்பு அனுபவத்தையும்  இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

      டாக்டர் திரிபுரசுந்தரி என்ற எழுத்தாளர் லட்சுமியின்ஏனிந்த வேகம்சிறுகதையை எடுத்துக் கொண்ட கட்டுரையில்லட்சுமியின் வாழ்க்கையை அவர் புனைகதைகளுக்குள் தேடினால் வாசிப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. ஆனால் முடிவு எடுத்தல், தனித்து வாழ்தல், சார்பற்ற வாழ்க்கைக்கு பெண்கள் தயாராதல் போன்றவற்றை முன்மொழியும் கதைகளின் வழியாகத் தன்னைக் கதைகளுக்குள் கொண்டுவந்தவர் அவர்

(பக் 41) . இப்படியாக பல கட்டுரைகளில் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் குறித்த ஒரு கோட்டோவியத்தை வாசகரின் முன் வைத்துச் செல்கிறார் பேராசிரியர். இதில் அவருக்கு இருக்கும் தெளிவு அவரின் ஆழ்ந்த வாசிப்பு பின்புலத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும்  ஒளிவட்டங்களிலிருந்து விலகி அவரவர் எழுத்துகளின் தனித்துவத்தைக் கண்டடையும் முயற்சியாக வெளிப்பட்டிருக்கிறது. இனி எதிர்காலத்தில், இலக்கிய உலகமும் பெண்ணியத் தளமும் , இக்கட்டுரைகளின் இந்த கோட்டோவியங்களை  அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புலக அடையாளமாக அடிக்கோடிட்டு காட்ட முடியும்.

      சிறுகதை வடிவம் என்பது ஓர் உணர்வு நிலை, அதன் வெளிப்பாடு என்ற கட்டுமான நெருக்கடி கொண்டதுதான். எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளர் இந்த நெருக்கடிகளைத் தாண்டி, கதை மாந்தரின் இரண்டு மூன்று நிலைகளையும் உணர்வுகளையும் ஒரே கதைக்குள் கொண்டுவர முடியும்.  எழுத்தாளர்  திலகவதியின் ‘போன்சாய் பெண்கள்” சிறுகதை இந்த நெருக்கடியை அனாயசமாக கடந்து வந்திருக்கிறது என்பதை பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் எழுத்துகள் சிறுகதை வடிவத்தில் எம்மாதிரியான சோதனை முயற்சிகளையும் செய்திருக்கின்றன என்பதை முன்வைக்கிறது ‘ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் ‘ (பக் 74) என்ற கட்டுரை.

      பெண்ணிய வெளியில் இக்கட்டுரைகள் முன்வைக்கும் கலை வடிவமும் அரசியல் வடிவமும் முக்கியமானவை. ஒவ்வொரு கட்டுரையின் முன்பாதி விளக்கங்கள் கோட்பாட்டு ரீதியாகவும் சமகால அரசியல் ரீதியாகவும் பெண்ணியத்தை அணுகி இருக்கின்றன.

நிகழ்காலத்தில் பெண்ணியம் எனும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்ட து. இப்படியொரு கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறை தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. உடலியல், உளவியல், சமூகவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள் “ (பக் 31) என்று பெண்ணியம் என்ற அரசியல் கலைச்சொல்லின் இயக்க வரலாற்றை எழுதிச் செல்கிறார்.

            காதலையும் காமத்தையும் பசலையாகவும் புலம்பலாகவும் கட்டமைத்த ஆண் எழுத்துகளிலிருந்து பெண் எழுத்துகள் முற்றிலும் வேறானவை. பெண்ணுடல் என்பது காமத்தின் கொள்கலன் மட்டுமல்ல. அது அவளுக்கான உடலரசியலாக இருந்ததையும் தாண்டி அவள் வாழும் நிலத்தின் சமகால அரசியலில் என்னமாதிரியான வினை புரிகிறது என்பதை ஈழவாணியின் வெண்ணிறத்துணிசிறுகதையை எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது சிறப்பு.

      ஈழவாணியின் இக்குறிப்பிட்ட சிறுகதை பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டிருக்கும்  பண்பாட்டு அரசியலை எடுத்துக்கொண்டு அதை அப்பெண்ணுடல் எம்மாதிரியான சமகால அரசியல் ஆயுதமாக கையாண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான தளம் இக்கதை. இக்கதையைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் பெண்ணுடல் பெண்கதைகள் என்பதை தமிழ்ப்பெண்ணுடல் தமிழ்ப்பெண்களின் பண்பாடு கலாச்சாரம் இத்தியாதிகளை எளிதில் கடந்து பயணிக்கும் எழுத்தாக்கி, சமகால அரசியலில் பெண்வெளியின் மிக முக்கியமான புள்ளிகளை அடையாளம் காட்டுகிறது இக்கட்டுரை.

      இக்கட்டுரையின் அரசியல் களம் : இலங்கை., கதையை எழுதியவர் ஈழவாணி. கதையில் எழுதப்பட்ட பெண் சிங்களப்பெண். அவளும் அவள் முன்வைக்கும் அரசியலும் மொழி இன எல்லைகளைக் கடந்த பெண்ணுடலின் அரசியல்.

      நிர்மலி அவள் ஆர்மிக்காரனின் மனுஷி. ஆர்மிக்காரனின் மனுஷி என்பதால் இளசுகள் முதல் முதியவர்கள் வரை தள்ளி நின்றாலும் திமிரிக்கொண்டு திரியும் அந்த அரபுக்குதிரையை ரசிக்க அந்தக் கண்கள் தவறியதில்லை. சிங்களவர் கலாச்சாரப்படி திருமணம் முடிந்தப்பின் முதலிரவில் விரிக்கப்படும் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இருக்க வேண்டும். அது அப்பெண்ணின் கன்னிமைத்தன்மையை உறுதிப்படுத்தும். இல்லை என்றால் அவள் திருமணத்திற்கு முன் உடலின் காமத்தை அனுபவித்தவளாகி, கற்பிழந்தவளாக  கருதப்பட்டு, விலக்கி வைக்கப்படுவாள். இக்கதையில்  நிர்மலியின் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இல்லை. ஆனாலும் அவள் கணவன் கொடித்துவக்கு அவளை விலக்கி வைக்கவில்லை. கொடித்துவக்கு என்ற ஆணுடலின் அரசியல் என்னவாக இருக்கிறது. அதை நிர்மலி என்ற காமம் கொப்பளிக்கும் பெண், தன் பெண்ணுடலை அரசியலாக்கி எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதே அப்பெண்ணுடலில் கதை.   இக்கதையின்  அதிர்வலைகள் பெண்ணுடல் எழுதிய போர் அதிகாரம்.

 அவன் அடங்காத காமத்தோடு அவளைத் தீண்டி உச்சமடையும் தருணங்களில் எல்லாம் கற்பழித்து சீரழிக்கப்பட்ட இசைப்பிரியாவை பற்றி கேட்கத் தொடங்கினாள். இன்னும் சில கூட்டு புணர்ச்சியால் சீரழிக்கப்பட்டம் வன் காமப்புணர்வால் சாகடிக்கப்பட்ட பெண்களிற்கும் காரணமாக இருந்தவர்களில் நீயும் ஒருத்தன் தான் எனவும், எப்படி.. எந்த முறையில் இப்படியா.. இப்போது நீ என்னைப் புணர்வது போன்றா.. என்ற கேள்விகளை ஒவ்வொரு தொடுகையின் போது சத்தமிட்டு ஆவேசமாக கேட்கத் தொடங்கினாள்…..”    (பக் 231)

  தேச மொழி இன அரசியலை பெண்ணுடல் வழியாக எழுதி அதிகாரம் எப்போதும் பெண்ணுடலுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற நுண்ணரசியலையும் பெண்கள் எழுதுகிறார்கள் என்பதற்கு ஈழவாணியின் இக்கதை ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. “ ஒரு பெண்ணாக எனக்கு தேசமில்லை, ஒரு பெண்ணாக நான் தேசத்தை விரும்பவும் இல்லை. ஒரு பெண்ணாக என் தேசமே என் உலகம்என்ற வர்ஜீனியா வுல்ஃப் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

தேசம் இனம் மொழி போர் வெற்றி இப்படியாக அதிகார மையத்தை நோக்கி நகரும் அனைத்தும் பெண்ணுடல் எதிர்கொள்ளும் சவாலாகவே இருக்கின்றன.

      இந்தியாவிலிருந்து கு ப சேதுஅம்மாள், பாவை, லட்சுமி, ஆர், சூடாமணி, எம். ஏ. சுசிலா, ஜோதிர்லதா கிரிஜா, திலகவதி, ச.விசயலட்சுமி, பாமா,  காவேரி, புதியமாதவி, அம்பை, உமாமகேஸ்வரி, கவிதா சொர்ணவல்லி, சந்திரா, தீபு ஹரி, இலங்கையிலிருந்து தமிழ்க்கவி, லறீனா, கறுப்பி சுமதி, தமிழ் நதி, மஜீதா, ஈழவாணி, பிரமிளா பிரதீபன், சிங்கப்பூரிலிருந்து சுஜா செல்லப்பன், ஹேமா, அழகு நிலா ஆகியோரின் கதைகளை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைத் தொகுப்பு. சிறுகதை இலக்கிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதையும் தெளிவாக முன்வைக்கிறது.

       பெண்களின் உடலரசியல், உளவியல். குலம், குடும்பம் , தாலி ,பிள்ளைப்பேறு,  பெண்களின் இரட்டை மன நிலை, ஒன்றாகவே பிறந்து வளர்ந்தாலும் பெண்களின் விருப்பங்களும் வாழ்க்கை முடிவுகளும் வேறுபடுவதன் காரணங்கள், கணவன் நண்பன் என்ற சொல்லாடல்களின் ஊடாக சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டும் பெண்கள்,  குடும்ப நிறுவனத்தின் கற்பிதங்களும் அதன் மீறல்களும் என்று பெண்ணின் அகமும் அவள் வாழும் சூழலின் அரசியலும் எழுதும் பெண்களின் எழுதப்படும் பெண்களை எவ்வாறெல்லாம் கதைகளாக்கி அக்கதைகளின் ஊடாக ஒரு பெருவெளியில் பயணித்திருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன

      . பெண்ணிய சிந்தனைவெளியில் ஓர் அரை நூற்றாண்டு பெண்வெளியை தொகுத்திருக்கும் இக்கட்டுரைகள் தனித்துவமானவையாகவும் கோட்பாட்டு ரீதியாக கதைகளை அணுகும் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆவணமாக  கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. .  விசாலமான  வாசிப்புத் தளமும் கவனமாக தெரிவு செய்திருக்கும் கதைகளும் அதன் போக்குகளும் பெண்ணிய தளத்தில் கவனிப்புக்குரியவை.

       26 பெண் எழுத்தாளர்களைப் பற்றிய சிறுகுறிப்பு பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டிருந்தால் ஆய்வு மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மேலும் எடுத்துக்கொண்ட கதைகள் எழுதப்பட்டு வெளிவந்த ஆண்டுகள் சில கதைகளில் மட்டுமே தெரியவருகிறது. அக்குறிப்பு இணைக்கப்பட்டிருந்தால் கதைகளில் எழுதப்பட்ட பெண்களையும் முழுமையாக அக்காலப் பின்னணியுடன் எதிர்கால வாசகர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவை இம்மாதிரி கட்டுரை தொகுப்புகளின் ஆய்வு ரீதியான பார்வைக்கு வழிவகுக்கும்..

 -----------------------

கட்டுரை நூல் : பெண்ணிய வாசிப்புகள் :

 எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்.

எழுத்தாளர். . ராமசாமி

வெளியீடு : ஜீரோ டிகிரி.

பக் : 246 விலை ரூ 300.

------------------------------

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்