பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. அதே நேரத்தில் பத்திரிகைகளின் தேவைக்காக எழுதப்படும் இருப்பைக் கேள்விக்குட்படுத்தாத தொடர் கதைகளை ஆரம்ப காலத்திலிருந்தே பெண்கள் எழுதி வந்திருக்கிறார்கள். வாராந்திரிகளின் - மாதாந்திரிகளின் ஆசிரியர்களின் ஆதரவோடு தொடர்கதைகளில் செயல்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கின்றன.
நவீனத்தமிழ் இலக்கியப்பரப்பில் கவிதைகளில் செயல்படும் பெண்கள் பலரிடம் ஏன் புனைகதை முயற்சிகளில் இறங்கிக் கூடாது என்று கேட்டபோது சிரிப்பையே பதிலாகத் தருகிறார்கள். சிவகாமி, திலகவதி போன்றவர்களின் வருகைக்குப் பின்னர் நாவல் வடிவத்தைக் கையாண்ட பெண்களின் பெயர்களைத் தேடினால் கூட்டுக் குடும்ப எல்லைக்குள் பெண்களின் இருப்பை, தனிமையை, கண்காணிக்கப்படும் விதங்களை, மீறினால் கிடைக்கும் சாபங்களையும் தண்டனைகளையும் இடத்தை விவாதிக்கும் நாவல்களை எழுதிய உமா மகேஸ்வரி, சல்மா ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. நாவல் வடிவம் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரும்பத் திரும்பத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே பெண்கள் எழுதிய நாவல்கள் வெளியாகும் காலத்தில் உடனடியாக வாசித்து விடும் ஆர்வம் உண்டாகிவிடுகிறது. வாசித்து முடித்தவுடன், பேசியே ஆகவேண்டிய நாவலாக இருப்பதில்லை என்பதால் சலிப்பும் உடன் விளைவாக வந்துசேர்ந்து விடுகிறது.
வாசிக்கும் ஆர்வத்தையும் வாசித்தபின்பு சலிப்பையும் ஒருசேரத் தந்த ஒரு புனைகதை பாண்டிச்சி. அதனை எழுதிய அல்லி பாத்திமாவுக்கு இது முதல் புனைகதை என்ற தகவலும் அவர் தேர்வு செய்த கதைக்கான வெளியும் வாசித்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்காட்டுப் பகுதியை எழுத்துக்கான களமாகவும், அங்கு வாழும் பழங்குடியினரின் வாழ்க்கைக்குள் நுழையும் நகரத்து மனிதர்களின் இடையீடு என்பதைக் கதைவிவாதப் பொருளாகவும் ஆக்கியுள்ளார். பத்திரிகையொன்றின் நிருபர் குழாம் ஒன்று பழங்குடியினரின் இருப்பையும் பண்பாட்டுக்கூறுகளையும் தொடர்கட்டுரைகளாக எழுதும் நோக்கத்தோடு அங்கு போனார்கள் என்பதில் தொடங்கிக் கதை நிகழ்வுகள் நகர்வதால் ஒருவித செய்தி அறிக்கைத் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது.
பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குத் தகவல் சேகரிக்கப் போகவேண்டும் என்ற தகவல் கிடைக்காத நிலையிலேயே - செல்வன் கண்ட கனவாக - கதையின் தொடக்கத்தில் முன்வைத்த கனவுக் காட்சியின் மாய நடப்பின் தூண்டுதல், நாவலைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது. ஆனால் அக்கனவின் விளைவுகள் முழுமையாக நாவலின் விவாதமாகவோ, முதன்மைக் கதாபாத்திரங்களான செல்வன் - பாண்டிச்சி காதலோடோ தொடர்பு படுத்தாமல் விலகிப் போவதை ஆசிரியர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். கவனித்து எழுதியிருந்தால் சிறப்பான புனைகதையாக மாறியிருக்கும். அதைத் தவற விட்டவர் இடங்களையும் மனிதர்களின் அக உணர்வுகளையும் எழுதுவதற்கான மொழியைக் கையாளுவதிலும் காட்ட வேண்டிய தேர்ச்சியைத் தவறவிடவில்லை. மொழியைப் பயன்படுத்துவதில் அல்லி பாத்திமாவுக்கு ஈடுபாடும் தேர்ச்சியும் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எழுதுவதில் அவருக்கு விருப்பம் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த புனைகதைகளில் புதிய வாசிப்பனுவத்தைத் தரக்கூடும்.
கருத்துகள்