கவிதை வாசிப்புக்கணங்கள்


எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள்.நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும்.
இந்த நகர்வு ஒருவிதத்தில் தனிமனிதத் தன்னிலைகளை அதனளவிலேயே வெளிப்படுத்தும் முறைமையிலிருந்து தனிமனிதத் தன்னிலைகளைப் பொதுத்தள ஆளுமையாக ஆக்கும் நகர்வு. இப்படி நகராமல் கடைசிவரைத் தனிமனிதத்தன்னிலையின் உணர்ச்சிகரமான வெளிப்பாடாகவே ஒரு கவி இருக்கமுடியும். அதற்குப் பாரதிதாசன் உதாரணம். ஈழப்போரின் பின்னணியில் முக்கியக் கவிகளாக அறியப்படும் சேரனை முன்னதற்கும் வ.ஐ.ச.ஜெயபாலனை பின்னதற்கும் அடையாளமாகச் சொல்லலாம்.
இப்படியாக ஒவ்வொரு கவிதைப்போக்கிலும் சிலரின் நகர்வை முன்வைத்து அடையாளப் படுத்தலாம். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கவிகளில் மௌனன் யாத்ரிகாவின் நகர்வைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 

நான் வாசித்த முதல் தொகுப்பான அவரது ‘ நொதுமலர்க்கன்னி’யில் உணர்வுகளை வெளிப்பாட்டுத் தன்மையில் இல்லாமல் அடியோட்டமாக நகர்த்தும் கவிதைகளைத் தொகுத்து அளித்திருந்தார். ஒவ்வொரு கவிதைக்கும் அவர் தரும் தலைப்புகளே ஒருவித நிதானத்தொனியை முன்வைக்கின்றன. கானுயிர்கள், சூழல் கவனம், அதனை ஏற்று வாழ்தலின் தேவை போன்றவற்றைப் பரப்பி வைத்திருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களுக்குத் தீவிரமனநிலையை வேண்டுவன.ஒற்றை வாசிப்பில் பிடிபட்டு விடாமல் மேலும் சில வாசிப்புகளைக் கோருவனவாக இருந்தன. அக்கவிதைகளில் இருக்கும் செவ்வியல் மரபுக் கலைச்சொற்களும் மரபுத்தொடர்களும் தரும் புதைநிலை அர்த்தங்களோடு வாசிக்கத் தூண்டுகின்றன. தமிழ்ச் செவ்வியல் கவிதைகளின் முப்பொருளின் ஒருங்கிணைப்பைக் கவனமாகச் செய்கிறார்.முதல்பொருளின் வழியாகக் கவனப்படும் உரிப்பொருளையும், அவ்விரண்டையும் செறிவாக்கும் கருப்பொருளையும் கோர்த்துக் கட்டும் வரிகளாக இருக்கின்றன அவரது கவிதைகள்.

ஆரம்பக் கட்ட கவிதையின் வெளிப்பாட்டிலிருந்த குறைவான உணர்வு வெளிப்பாட்டையும் தவிர்த்துக் காட்சிப்படுத்தும் கவிதைகளாக அண்மையில் வந்த தொகுதியில் - புத்தர் வைத்திருந்த தானியம் தொகுதியில் வாசிக்கக் கொடுத்தார். இந்த ஆண்டு வந்த தொகுப்புகளில் விரைவாக விற்றுத்தீர்ந்த தொகுதி என்றொரு குறிப்பை அண்மையில் வாசிக்க முடிந்தது. உணர்வுகளை எழுதுவதை விடவும் அறிவையும் சிந்திப்பு முறைகளையும் எழுதும் அழகியலைக் கொண்டிருக்கும் மௌனன் யாத்ரிகாவின் கவிதைத் தன்மையை இந்த மாதத் தடத்தில் வந்திருக்கும் கவிதையிலும் வாசிக்கலாம். அந்தக் கவிதையின் தலைப்பு: பொதுவியல் திணையை இனிப்பாடப்போவதில்லை.

இந்தக் கவிதையை வாசிக்கச் செவ்வியல் மரபுதரும் கலைச்சொற்களோடு தமிழ்நாட்டின் வாய்மொழிப்பண்பாட்டின் நம்பிக்கைகளும் அழகியலும் காலப்புரிதலும் கூட வேண்டும். நம்பிக்கை இழப்பின் விளிம்பில் நின்று திரும்பிப் பார்க்கும் மனிதனின் மன அலைச்சலைச் சொல்லும் இந்தக் கவிதையை வாசிப்பது தனியொரு அனுபவம். அடர்த்தியான சொற்களோடு பரவி நிற்கும் நீளமான கவிதையை வாசித்துப் பாருங்கள். நிகழ்காலத்தமிழகத்தில் எழுதப்பட வேண்டிய அரசியல் கவிதையின் உதாரணமாக இருக்கிறது அந்தக் கவிதை:
==============================================1.
மணல் லாரிகளின் விளக்கு வெளிச்சம்
உறங்கும் சிற்றூர்களின் குடிசைகளை
கடந்து போகும் பின்னிரவில்
கன்னி எலும்பொன்றை முத்தமிட்டுவிட்டு
சுடுகாட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் கோடாங்கி

2.
இலாகாவைத் தின்றுக் கொழுத்த உடல்
அசப்பில் பன்றியை நினைவுறுத்த
கோடாங்கியை எதிரில் கண்டு விட்டு மகிழுந்தில் போகிறான்
ஒன்றியப் பொறுப்பில் இருப்பவன்
தூய பருத்தியுடையில் சாத்தானைக் கண்டதும்
அகவனுக்கு உடம்பு சிலிர்க்கிறது

3.
ஊரில் நற்குறி தொலைந்ததென்றான் கோடாங்கி
அவன் சுவடிக்கட்டை பேய்கள் வாசித்தன
மந்திரத்தால் வாய் கட்டப்பட்ட நாய்கள்
தணிந்த குரலில் அழுவதும்
பாழடைந்த காட்டில் கூகையின் கால்கள்
காகத்தின் மூச்சை நிறுத்துவதும்
துர் நிமித்தம்

4.
தடாரி கடகடகடவென ஒலியெழுப்ப
பின் தொடரும் தீய ஆவிகளை
மடைமாற்றி ஏவுகிறான் கோடாங்கி
ஆற்றில் இறங்கும் லாரி ஒன்றில்
ரத்தம் கக்கி கருகுகிறது திருஷ்டி எலுமிச்சை

5.
ஆகாச முனியை சுண்டெலியாக்கிய
புலுகன் இருக்கும் தெருவில்
ஆந்தை நெடுநேரம் அலறுகிறது
காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு
உருமாவை அவிழ்த்து அவன்
மூத்திரம் பெய்கையில்
அசகாற்று அடிக்கிறது
கோடங்கி அந்தத் தெருவின் முனையில் திரும்புகிறான்

6.
சுற்றுச் சுவர் மீதேறும் நிழலைக் கண்டு
காதை விடைத்து உறுமியது நாய்
அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட
பெரிய வீட்டின் மஞ்சத்தில் ரத்தக் கவுல்
முழு போத்தலை உள்ளுக்குள் இறக்கிய
வட்டச் செயலாளரின் தொப்பையில்
ஆவியொன்று பற்களைப் பதித்துக் கொண்டிருந்தது
கோடாங்கி அந்த வீட்டு வாசலில் நின்று
எதுவும் சொல்லாமல் சென்றான்

7.
அக்கக்கா குருவிகள் வடக்கிலிருந்து தெற்கேகின
ஊரின் கடைசிக் குடிலுக்கு
குறி சொல்லிக் கொண்டிருந்தான் கோடாங்கி
யாருமற்ற அக்குடிலின் பரணிலிருந்து
கீழே குதித்த பூனை மியாவ் என்றபோது
முன்பனி விலகத் தொடங்கியது

8.
ஊரை விட்டு வெளியேறியதும்
எல்லையில் சூரேறி நின்ற கோடாங்கி
உடுக்கையின் நாவை அறுத்தான்
பொதுவியல் திணையை
இனி என் உடுக்கைப் பாடாதென்று
உடைத்துத் தூக்கியெறிந்தான்
எவ்வழியும் நல்லவர் இல்லா ஊரின் இருளை

அவன் திரும்பிப் பார்க்கவில்லை

கவிதையாகும் கனவு


’நானும் ராகவனும்’ என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட இந்த வரிகளை வாசிக்கத் தொடங்கும்போது ஒரு கதைவாசிப்புத் தொடக்கம்போன்ற நிலை . கதைக்கான கூறாக அவள், அவன் என்ற இரண்டு பாத்திரங்கள், அவள் வந்தது; வந்தவளைக் கண்டு பதற்றம், எனத்தொடங்கும் அந்தத் தொடக்கம், வந்தவளுக்கு ஒற்றைக்கண் என்று சொன்னவுடன், கதைக்குரிய தர்க்கம் காணாமல் போய் ஒருவித கனவுநிலைக்குள் அல்லது மாயநடப்புக்குள் நகர்ந்துவிடுகிறது. அங்கேயே அவள் அவளுக்குள் நுழையும் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையொன்றும் நிகழ்கிறது. அவ்வித்தைக்கான தேவை நிறைவேறாத காமம்.

பதின்பருவத்து உடல் உண்டாக்கும் கிளர்ச்சியை மட்டுப்படுத்த வைக்கும் நமது சூழலில் மீறல்களும் திசைவிலகல்களும் நடக்கும் வாய்ப்புகளே அதிகம். அதன் தொடர்ச்சியாக மரணங்களும் தற்கொலைகளும். ஆவியாய் அலையும் எண்ணங்களுமாய் தனிமனித அல்லாட்டங்கள் நீள்கின்றன. இந்தக் கவிதைக்குள் அப்படியொரு அல்லாட்டத்தை - கனவை வாசிக்கமுடிகிறது. கனவில் நடந்த ஈடேற்றம் என்ன விளைவைத் தரும் என்ற பயம் மூன்று கண்களோடு ஒரு குழந்தை என்ற அடுத்த கனவுக்குள் நுழைகிறது.

கனவைச் சொல்லிப் பார்க்க நினைத்துக் கைவிட்டவர்கள் கவிதையாக எழுதிப்பார்க்கலாம். ஊர்சுலா ராகவ்வின் நானும் ராகவனும் அப்படி எழுதிப்பார்த்த கவிதையாக இருக்கிறது.

ஒற்றைக் கண்ணுடன்

எனதறைக்குள் திடுமென நுழைந்து
காணவந்திருப்பதாக
கூறும் அவளை
பதறி அமரச் சொல்கிறேன்
அவளது முகத்தில் லேசான அரும்புகள் முளைவிட
கைவிட்ட துக்கம் தாளாமல்
இருபத்தியேழு மாத்திரைகள் விழுங்கி
மரணமடைந்த ராகவானாய் மாறத்தொடங்கினாள் அவள்
இறுகிய குரலில்
உனது பெயர் ராகவனா எனக் கேட்கிறேன்
ஆம் என்பதும் போலிருந்தது
ஒற்றைக்கண்ணின் நெடுநேர முறைப்பு
பின் மௌனம் களைத்தவள்
ராகவனாய் பேசத்தொடங்கினாள்
தான் பதின்வயதின் இறுதியாண்டுகளிலே
மரணமடைந்து விட்டதால்
காமத்தை அறியமுடியவில்லையென்றும்
அறிந்துகொள்வதற்காகவே
தான் இங்கு வந்திருப்பதாக கூறும்
அவளான ராகவன்
நேற்றுதான் பருவமடைந்திருந்தாள்
ஒற்றைக்கண் ஏற்படுத்திய அச்சத்தினால்
கிளர்ச்சி ஏற்படுத்தும் ஸ்பரிசங்களும்
உச்சகட்ட முயக்கங்களும்
ஒற்றைக்கண்ணில்
கண்ணீராய்ப் பெருகிவழிய
கதவிடுக்கில் சிகரெட் புகையாய் வெளியேறுகிறாள்
மூன்று கண்களுடன் குழந்தை பிறந்திருப்பதாக
செய்தி பரவியிருந்தது வெளியெங்கும்
(ஊர்சுலா ராகவ், நானும் ராகவனும்/பொறுப்பற்ற குடும்பம்,25)

இதுபோன்ற கதைத்தன்மை கொண்ட கவிதைகள் நிறைய இருக்கிற தொகுப்பாக புதுஎழுத்துப் பதிப்பக வெளியீடான “பொறுப்பற்ற குடும்பம்(2019) இருக்கிறது. சிறிய தொகுப்புதான். வாசித்து நினைக்கலாம்.

அரசியல் பேசும் கவிதைகள்,

எந்தவொரு வாசிப்பிலும் அதன் அரசியலைப் பேசிக்கொண்டுதான் இருக்கும். அந்த அரசியலை வாசகர்கள், தங்களின் நிகழ்கால இருப்போடும் நெருக்கடியோடும் வாசிக்கின்றபோது, அதன் விரிவான அர்த்தத்தளங்களுக்குள் விரைவாகப் பயணம் செய்து, அக்கவிதை எழுப்ப நினைத்த உணர்வெழுச்சியைக் கண்டடைகிறார்கள். கண்டடைந்த உணர்வெழுச்சி, செயல்படத்தூண்டும் என்பது நம்பிக்கை. எவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பதை உடனடியாகச் சொல்லமுடியாது. எப்போது செயல்பட வேண்டுமோ, அதுவரை காத்திருந்துகூடச் செயல்படலாம். அப்படியானதொரு உணர்வெழுச்சியும் செயல்தளக்கோரிக்கையும் தனக்குள் வைத்திருக்கும் கவிதையாக இருக்கிறது இளங்கோ கிருஷ்ணன் இந்தக் கவிதை.

ஒரு தேசத்தை உருவாக்குவது குறித்தும்

======================================
ஒரு தேசத்தை உருவாக்குவது
ஒரு கவிதையை உருவாக்குவதைவிடவும் எளிது
ஒரு வில்லும் ஒரு பெண்ணும் சில குரங்குகளும்
ஒரு ரதமும் ஒரு மசூதியும்
கொஞ்சம் காக்கி டவுசர்களும் போதும்

ஒரு தேசத்தை உருவாக்குவது
ஓர் இசைக்குறிப்பை உருவாக்குவதைவிடவும் எளிது
ஓர் ஆஸ்துமா பீடித்த மொழியும்
செல்லரித்த ஓலைச்சுவடிகளும்
வேசைபோல் அலங்கரித்த பேச்சும் போதும்

ஒரு தேசத்தை உருவாக்குவது
ஓர் ஓவியத்தை உருவாக்குவதைவிடவும் எளிது
ஒரு புத்தகமும் ஒரு குல்லாவும் ஒரு கைவாளும் போதும்

ஒரு தேசத்தை உருவாக்குவது
ஒரு நாவலை உருவாக்குவதை விடவும் எளிது
ஒரு சந்தையும் கொஞ்சம் தர்க்கமும் போதும்

தேசங்கள்
சந்தைகளால் உருவாக்கப்படுகின்றன

தேசங்கள்
வாள்களால் உருவாக்கப்படுகின்றன

தேசங்கள்
பொய்களால் உருவாக்கப்படுகின்றன

தேசங்கள்
வரலாறுகளால் உருவாக்கப்படுகின்றன

தேசங்கள்
தேசங்களால் உருவாக்கப்படுகின்றன.
=========
இளங்கோ கிருஷ்ணன்/ பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்/ 14 -15/ 
புது எழுத்துப்பதிப்பகம்


காதலிலிருந்து காமத்திற்கு

காதல் கவிதைகளைப் பற்றிப் பேசுவதை - எழுதுவதைத் தவிர்த்த காலம் ஒன்று இருந்தது. அந்த நேரத்தில் இந்தத் தொகுப்பை வாசித்துவிட்டு வைத்துவிட்டேன். அப்படி வைத்தபோது இது தவறு என்று மனம் சொன்னதுண்டு. காதலைப் பேசுவதில் என்ன தயக்கம்? என்று கேட்டுச் சண்டித்தனம் பண்ணிய மனம், நீ காதலை விரும்பவில்லை; காமத்தை விரும்புகிறாய் என்று குற்றம் சாட்டிச் சிரித்தது.

காதலைக் காதலாக எழுதுவதை வாசிப்பது எப்போதும் அலுப்பூட்டும். அப்படியான கவிதைகளில் ஒருவிதமான போலித்தனமும் புனைவுகூட்டலும் இருப்பதாகவே படும். அதைத் தாண்டிக் காதல் காமத்தைக் கோருகிறது; கலவியையும் புணர்ச்சியையும் வேண்டிப் பயணிக்கிறது என்பதாக உணரும்போது திரும்பத்திரும்ப வாசிக்க நேர்ந்துவிடும். ஒருவிதத்தில் கற்பனைக் கலவிதான் அத்தகைய கவிதைகள். இத்தகைய கவிதைகளுக்குத் தமிழில் நீண்ட தொடர்ச்சிகள் உண்டு. குறிப்பாகப் பெண்கவிகள் - அள்ளூர் நன்முல்லை தொடங்கி ஆண்டாள் வரையிலான பெண்கள்- இதையே எழுதினார்கள். 
இப்போது எழுதும் பலரும் அதை எழுதும் பக்குவமில்லாமல் - அனுபவம் போதாமல் தவிக்கிறார்கள். ஆண்களில் பலர் உக்கிரமாக எழுதிக் காமத்தீயைச் சொல்லும் வெயிலின் தகிப்பாக வெளிப்பட்டு நிற்கிறார்கள்.
இதிலிருந்து மாறுபட்டவராக வெளிப்பட்டவர் ர. ராஜலிங்கம். காதலும் காமமும் பற்றிப் பேசவும் நினைக்கவும் தோன்றும்போதெல்லாம் அவரின் முதல் தொகுப்பான- சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி- யிலிருந்து ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்துவிட்ட்டு வைத்துவிடுவேன். இப்போது இதைச் சொல்லத் தோன்றியது. இதுபோன்ற முதல் தொகுப்புகளை வெளியிட்ட புதுஎழுத்து பதிப்பகம் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டது என்ற வருத்தமும் இந்தக் குறிப்பின் பின்னணியில் இருக்கிறது. அத்தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை வாசித்துப் பாருங்கள்.

அத்தேவதையின் இறுகிய இதழ்
=============================
மெல்லிய ராகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது இரவு.
அவள் மார்பின் மென்மையை ஞாபகப்படுத்தியது காற்று.
சிதறும் எண்ணங்களை மெல்லிய வலை பூட்டிக்கொண்டது.
தேடலின் முதல் குழந்தை பின்னிரவில்
தன்னந்தனியாய் அலறத்தொடங்கிய அத்தருணம்
களைந்து கிடந்த மணல்களின் மீது
மெல்ல கால் பதித்து, விழுந்துகொண்டிருந்த
எரி நட்சத்திரத்தை உண்ணத் தொடங்கினேன்.
சடசடவென்று பற்றி எரியத் துவங்கியவன்
அடிமுடியெங்கும் பிரகாசிக்க
அக்கரையின் தேவதை ரசிக்கிறாள்
சுடர் குறையா பூக்களை கைகளில் ஏந்தி
அலையின் மீது நடந்து அக்கரை செல்கையில்
யாரும் காணாத புன்னகையை வீசிச் சென்றது
அத்தேவதையின் இறுகிய இதழ். (ப.51)

புதிர் என்னும் பதில்
=================
நாவலில் இருந்து கிழிக்கப்பட்ட
சில பக்கங்களை தின்கிறேன்
கதைகளால் வேயப்பட்ட அது
என் வயிற்றுப்பகுதியை அடைகையில்
அதன் மடிப்புகள் விரியத்தொடங்கின
கதைகளுக்குள் வாழ்ந்திருந்த அவள்
மரித்துப் போயிருந்தாள்
இறந்த உடலில் இருந்துதான்
அந்த துர்நாற்றம் வீசக்கூடும்
அவளில் உடலையொத்த மற்றொருத்தி
வேறொரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள்
கதைக்குள் சுருண்டு கிடக்கும் கேள்விகளின்
ரகசியத்தை உள்வாங்கிக் கொண்டது சிறுகுடல்
ஜீரணமாகாத கேள்விகளுடன்
சிலபல விடைகளும்
வெளியேறிக் கொண்டிருந்தது
பெருங்குடல் வழியாக. (ப.72)

உமாமோகனின் எரவாணத்துக்கனவுகள்

மொத்தத் தொகுப்புக்கும் பொருந்தும் விதமாகத் தலைப்பிட வேண்டுமென இப்போதெல்லாம் எந்தக் கவியும் நினைப்பதில்லை. தொகுப்பிலுள்ள கவிதைகளில் வித்தியாசமான படிமம் அல்லது உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட கவிதைத் தலைப்பைத் தொகுதியின் தலைப்பாக வைத்து விடுகிறார்கள். அந்த அளவில் மட்டுமே தொகுதியின் தலைப்புக்கான முக்கியத்துவம் இருக்கின்றது. தொடர்ச்சியாக ஒருவித மனநிலையில் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கும் பெருங்கவிகளின் தொகுதிகள் இந்தப் போக்கிலிருந்து விலகி நிற்கின்றன. அந்தக் கவிதைகளை எழுதிய மனநிலையின் பொதுக்குறியீடாக ஒரு சொல்லையோ -சொற்றொடரையோ தொகுப்பின் தலைப்பாக வைப்பதைப் பார்க்கலாம். தொடர்ச்சியாகக் கவிதைமனத்தைத் தக்கவைக்கும் உமாமோகனின் இந்தத் தொகுப்பு அதிலிருந்து விலகியிருக்கிறது.

உமா மோகனின் கனவு செருகிய எரவாணம் என்று தொகுப்பாக நிற்கும் தலைப்பில் ஒரு கவிதை இருக்கிறது.அந்தக் கவிதை நேரடியாக எரவானம் என்னும் இருப்பையும் இருப்பாக்க முடியாத கனவையும் பிணைத்துக் காட்டி ஒருவிதத் தொனியை உருவாக்கியிருக்கிறது.

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்குக் கூட கசப்பேறிய பின்னும்
****
கனவுகளைச் செருகிவைத்த எரவாணம்
யானை விரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்

திரளும் கண்ணீரைத்
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர் வார்த்த முல்லையின் நிறம்

அப்படித்தான் இருக்கும்.

பழமுதிரிலோ உழவர் சந்தையிலோ
பேரம் பேசியோ பேசாமலோ
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம்
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின்
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப் பிய்த்த சுரைப்பிச்சின்
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை

அந்தப் புறங்கையில் பாருங்கள்
அதே பனித்துளி

இந்தக் கவிதை உருவாக்கும் தொனியையும் காட்சிப்படிமங்களையும் கொண்ட சிறுகவிதைகள் சிலவற்றையும் இந்தத் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. கனவு காணவிரும்பும் நினைவுகளைக் கவிதையாக்கித் தனது எரவானத்தில் சொருகி வைத்திருக்கிறார். கொண்டையில் நிரப்பிக் கொள்ளும் மல்லிகைச் சரத்தைத் தூக்கிப் போட மனம் இல்லாமல் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் காலையிலோ மாலையிலோ இன்னொருவரைக் கொண்டு தூக்கிக் கூடையில் போடும் ஒரு பெண்ணின் மனநிலைபோல எரவானமும் நினைவுகளும் பல கவிதைகளில் அந்தச் சொற்களாக இல்லாமல் அதே படிமங்களை உருவாக்குகின்றன. அப்படியான கவிதையாக இந்தச் சிறிய கவிதைகளையும் வாசிக்கலாம்.

1. நுனிக்காலில் நின்றாடும் பாப்புக்குட்டி
================================
புதிய பொம்மைக் காட்டும்
அப்பாவின் உயரத்தை அண்ணாந்து
வியக்கும் குதூகலமும் பொலிய
நுனிக்காலில் நின்றாடுவாள்
பாப்புக்குட்டி
நானோ ஒருநாள் போல
பால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன்
கதிர்பார்த்து
---------------------------------
2. திடீரென வந்த மழை
திடீரென வந்துவிட்டதாகவே நம்புவோம்
இல்லையெனில்
பொட்டலத்துக்குள்ளிருந்து
வெளியே குதித்துவிடும்
மனசைக் கட்டிவைக்க
கையாலாகா துக்கம் வேறு சேர்ந்துகொள்ளும்
-தலைப்பில்லாதவொரு கவிதை

3.ரோஸ் கவுன்
================
ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன்
குழம்பு சுடவைத்து
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும்
கனவில் நினைவு வரும்
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும்
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத் துணி
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே
நினைவு வந்தது.

எரவானம்- கனவு -நினைவுகளின் விவரிப்பு என்னும் மனநிலையை எழுதிக்காட்டும் நீள் கவிதைகள் பலவும் இத்தொகுப்பில் உள்ளன. விடைபெறுவதும் புதுப்பிறப்பும்,நதியில் தேயும் கூழாங்கல்,நேற்று என்றொரு நாள், நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி முதலான கவிதைகள் எரவானப் படிமத்தைப் புதுப்பிக்கின்றன. இந்தத் தொனியல்லாமல் சமூக நடப்புகளையும் சில நிகழ்காலக் கேள்விகளையும் எழுப்பும் கவிதைகளையும் தொகுப்பில் வாசிக்க விரும்புபவர்களையும் ஏமாற்றவில்லை உமா மோகன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?