அதிகாரங்களின் முரணியக்கம்
பழைய பஞ்சாங்கங்கள்
பயன்பாட்டில் இருக்கும் கலைச்சொற்களுக்கு எதிர்நிலைப்பாட்டைக் குறிக்கும் கலைச் சொல்லாக்கம் எளிமையானது. இருக்கும் கலைச்சொல்லின் முன்னால் - எதிர்/ Anti - என்பதைச் சேர்த்துப் பயன்படுத்திவிடலாம். ஆனால் அப்படியே பயன்படுத்தாமல் சிலவகையான வேறுபாடுகளோடு பயன்படுத்தும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கலும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. சிலவேளைகளில் - நவ(Neo)- என்ற முன்னொட்டும் சில வேளைகளில், - புது( New)- என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது
மரபை மறுதலிக்கும் நவீனத்துவத்திற்கு எதிரான கருத்தியலைத் திரும்பவும் மரபு எனச்சொல்லாமல் பின் நவீனத்துவம் என்று பயன்படுத்துகிறோம். காரணம் பின் நவீனத்துவம், நவீனத்துவத்தை எந்த அளவிற்கு மறுதலிக்கிறதோ, அதைவிடவும் கூடுதலாக மரபையும் மறுதலிக்கிறது.அதே நேரத்தில் மார்க்சியத்தையும் ப்ராய்டியத்தையும் முற்றாக மறுதலிக்காமல் மேலும் வளப்படுத்தியவர்களைப் பின் - மார்க்சியர்கள், பின்- ப்ராய்டியர்கள் என்றோ சொல்லாமல் - புது- என்ற முன்னொட்டுச் சேர்த்து புதுமார்க்சியர்கள், புதுப் பிராய்டியர்கள் என்று சொல்கிறார்கள்.
இந்தியாவைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாமல் வந்து நிற்கும் ப்ராமணியம் ப்ராமணியர்கள்/ என்ற சொல்லோடு எந்த முன்னொட்டைச் சேர்ப்பது என்பதுதான் இப்போதைய சிக்கல். ப்ராமணிய மேலாண்மையைக் கேள்விக்குட்படுத்தாமல், அதனோடு சமரசம் செய்துகொண்டு அரசியல், சமூகத்தளங்களில் தங்களை வளர்த்துக்கொள்ளும் தனிநபர்களைக் குறிக்கும் சொல்லாக ‘நவபிராமணர்கள்’ என்றொரு சொல் பயன்பாட்டில் உள்ளது. இவர்கள் பிறப்பால் ப்ராமணர்களாக இருப்பதில்லை. கருத்தியலால் ப்ராமணியத்தோடு உடன்படுபவர்கள்.
இவர்கள் அல்லாமல் இப்போது பலர் - ப்ராமணர்களாகத் தங்களை மறு உயிர்ப்புச் செய்துகொண்டு பொதுவெளிக்கு வருகிறார்கள். தாங்கள் பிறப்பாலும் அறிவாலும் மேலானவர்கள் எனச் சொல்லக் கூச்சப்படாமல் சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதில் ஆண் - பெண் பேதமெல்லாம் இல்லை. பெருகிவிட்ட ஊடகப்பொதுவெளியில் ஆவேசமாகத் தங்களை முன்வைக்கிறார்கள். அப்படி முன்வைப்பவர்களில் பலர் கலை, இலக்கியத்தளங்களிலும் செயல்பட்டவர்களாக இருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. நகைச்சுவை நடிகர்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னணியில் நின்று சவால் விடுகிறார்கள் இடையில் பல காலம் தங்களின் ப்ராமண அடையாளத்தைக் காட்டிக்கொள்வதற்கு அச்சப்பட்டு மறைந்து திரிந்தவர்கள் அவர்கள். வேதங்கள் சொல்லி வாயால் வாழ்வதைக் கைவிட்டுவிட்டு, திரைகடலோடித் திரவியம் தேடிக் களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் திளைத்து மகிழும்போது ப்ராமண சனாதனத்தைக் கைவிட்டுவிடத் தயாரானவர்கள் . இவர்களை எந்தக் கலைச்சொல்லால் குறிப்பிடலாம்.
புதுப்பிராமணர்கள் என்றா? பழைய
பஞ்சாங்கம் என்றா?
நகைமுரண்களின் காலம்
சித்திரைத் திருநாள் ஆட்டச் சிறப்புக்காக நடை திறக்கப்படுகிறது இன்று.144 தடை. 2000 காவலர்கள் பணி அமர்த்தல் என்கிறது செய்தி.
ஐயப்பன் கோவிலுக்குச் செய்தி சேகரிக்க இளம்பெண்களை ஊடக நிறுவனங்கள் அனுப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கின்றன இந்து அமைப்புகள். அதே அமைப்புகள் பாதுகாப்புக்காக நிற்கும் 100 பெண்காவலர்கள் - இளம்பெண் காவலர்கள் கோயில் வளாகத்தில் நிற்பதைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கிறது. காவல் துறையில் இருப்பவர்கள் 10 வயதுக்குக் கீழும் 50 வயதுக்கு மேலும் இருப்பவர்களா?
காலம் காலமாகப் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அது மரபு; ஐதீகம், பண்பாடு. எனவே நீதிமன்றம் இதிலெல்லாம் தலையிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்புகிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள்; வாது செய்கிறார்கள்.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்வதுபோல, சாமிக்கு முன் ஆண் -பெண் பேதமில்லை என்று பெண்களுக்கான உரிமையைத் தரும் வாய்ப்புடைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க பெருந்திரளான பெண்களைத் திரட்டிக் காட்டுகிறார்கள்.முன்னணியில் நிற்கும் பெண்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். தங்களின் மேலான அறிவை -நாகரிகத்தை- சாதிக்கும் திறனைக் காட்டிய இந்திய உயர் ( உயர்சாதி மனோபாவம் கொண்ட) நடுத்தரவர்க்கப் பெண்கள். அவர்களின் பின்னால் திரட்டப்படும் வெகுமக்கள் கூட்டம்; அவர்களுக்கு சூதும் தெரியாது; வாதும் புரியாது. படித்தவர்களுக்கு எல்லாம் தெரியும்.
சூதும்வாதும் செய்தால் போவாள்; போவாள்.. ஐயோவென்று போவாள்.
*****************
கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கும் கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு.ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும் அந்தக் கூட்டம் இந்த முகநூலிலும் இருக்கிறது. படிப்பறிவும் பகுத்தறிவும் கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் கூட்டம் அது. முற்போக்கு முகமும் அதற்கு உண்டு.
நாளை வரப்போகும் தீபாவளியை ஒட்டி வெடிவெடிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளும்படி ஒழுங்கு செய்து ஓர் அறிவிப்புச் செய்கிறது நீதிமன்றம். காலையில் 6 முதல் 7 வரை; முன்னிரவு 7 முதல் 8 வரை வெடிக்கலாம் என்று சொல்வதில் என்ன பெருந்தவறு என்று தெரியவில்லை. மக்கள் நலனில் - சுற்றுச்சூழல், உடல் நலன், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றில் அக்கறைகொண்ட மக்கள் நல அரசை விரும்பும் ஒருவர் இந்த ஒழுங்குமுறையை ஏன் மீறவேண்டும் என நினைக்கவேண்டும். நாம் இப்போது ஆட்சிசெய்யும் அரசின் ஆணையாக நினைத்துக் கொண்டு அதை எதிர்ப்பதாகப் பாவனை செய்யலாம். ஆம் அது பாவனைதான். நடப்பைப் புரிந்துகொண்ட பார்வை அல்ல.
வெடிக்கும்போது எழும் ஒலியளவும் புகையளவும் கூடி ஏற்படுத்தும் மாசு வெடிப்பவர்களுக்குத்தான் கேடு. வெடித்துவிட்டு ஓட முடியாத சந்துகளிலும் பொந்துகளிலும் வெடித்துக் காயமாகும் சிறுவர்கள் பற்றிய செய்திகள் அடுத்தநாட்களில் வரத்தான் செய்யும். என்றாலும் என் வீட்டு வாசலில் வெடிப்பேன்; அது என் உரிமை என்கிறார்கள் பண்பாடு காக்க நினைப்பவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடு போட்டிபோட்டு தன் ஜம்பம் காட்டும் உளவியலுக்குப் பின்னால் பண்பாட்டுக் கவசம் இருக்கத்தானே செய்யும்.
காலம்காலமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டுப் புத்தாடை பூட்டி வெடிபோடும் வழக்கத்தை விட முடியுமா? என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதும் பண்பாட்டுப் பிரியம் தான். பண்டிகைக்காலம் என்பது தடையற்ற மனத்தின் காலம். என் பிரியத்தின்படி நான் வேட்டுப் போடுவேன்; ஒலி எழுப்புவேன்; புகை உண்டாக்குவேன். அதிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற வாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுக்கவசம் தான் இருக்கிறது.
கடுங்குளிர்காலத்தில் வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியிலும் ஐரோப்பியர்கள் வெடிவெடிக்கிறார்கள். நள்ளிரவில் - தூரமாக இருக்கும் மைதானங்களில் கூட்டமாகக் கூடி வெடிக்கிறார்கள். சட்டம் அதைத்தான் அனுமதித்திருக்கிறது. சட்டங்களை மதிக்கமாட்டோம் என்றால், சடங்குகளை மதிக்கிறீர்கள் என்றுதானே பொருள். சடங்குகளோடு தொடர்புகொண்டது பண்பாடு; காலம் காலமாகப் பின்பற்றப்படுவது பண்பாடு. பண்பாட்டைப் பொன்னே போல் போற்றும் ஆர்வத்தின் பின்னே இருக்கும் முரண் வெடித்துச் சிரித்துக்கொள்ள வேண்டிய நகைமுரண்..
அதிகார விளையாட்டு
அமைப்புகள், கருத்தியல்கள், நிறுவனங்கள் என்பன தனியாக இல்லை. ஏற்றுக்கொண்ட மனிதர்களின் இயக்கமே அவற்றின் இயக்கம். அவை தனக்கு முற்றிலும் எதிரானது என்று ஒன்றை அடையாளம் கண்ட பின் அதனோடு விவாதிப்பதில்லை. விவாதித்து வென்றெடுக்க வாய்ப்பில்லை என்பதால் எதிர்த்து வெற்றி கொள்வதெப்படி? என்று மட்டுமே அதற்குள் இருப்பவர்கள் சிந்திக்கின்றனர். அச்சிந்தனை அதனதன் எல்லைக்குள் மட்டுமே நடக்கும்; எவ்வாறு நடக்கின்றன? என்பதை வெளியே காட்டிக் கொள்ளக்கூட விரும்புவதில்லை .
அதேநேரம் தன்னையொத்தது; தன்னிலிருந்து உருவானது எனக்கண்டறியும் ஒன்றோடு முரண்டுபிடிக்கும்;மோதிப்பார்க்கும். அதிகாரத்தின் பிடிமானமும், விலகலும் விளையாடும் விளையாட்டுகள் இவை.
குடும்ப அமைப்புகள்- களவுக்குடும்பம், கற்புக்குடும்பம், கூட்டுக்குடும்பம், தனிக் குடும்பம், இல்லறம், துறவு,- மோதிக் கொண்டேதான் நகர்கின்றன.
ஒற்றைச்சமயமாக உருவம் பெற்று விட்டதாக நம்பும் வைதீகம் தன்னை அதிகாரமிக்கதாக நிறுவப்பார்க்கிறது; வேறு என்கின்றன சைவமும் வீரசைவமும். குத்துநிலைப்பிளவுகள் அல்லது கிளைகள். ஆபிரகாமிய சமயங்களின் முரண்பாடுகள் ஓரளவு கிடைநிலைப்பட்டவை.
புதியனவற்றின் மீது பழையன குற்றச்சாட்டுடன் வன்மம் காட்டும். புனைவியல் நடப்பியல்மீது காட்டுவது மென்வன்மை. நடப்பியல் குறியீட்டியல் மீது காட்டியது வன்வன்மை.
மார்க்சியம் பின்- நவீனத்துவம் மீது காட்டுவது இடைவன்மை.
மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு. தொண்டையில் சிக்கியுள்ள வஞ்சிர மீனின் நடுமுள்.
கருத்துகள்