பழைய பாதைகள்; புதிய பயணங்கள்

இந்தத் தேர்தல் தரப்போவது புதிய அனுபவம்”

-ஐந்தாண்டுக்கொரு முறை வரும் தேர்தலைக் கணிக்க முயல்பவர்கள் ஒவ்வொரு தடவையும் சொல்லும் வாசகம் இது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சலிப்புத்தொடர் என்றாலும், இந்தச் சலிப்புத் தொடரைச் சுவாரசியமாக்குபவை ஊடகங்கள்தான். ஒவ்வொரு நாளையும் புத்தம்புதிய ஒன்றுமூலம் தொடங்க வேண்டும் என்று நினைப்பது ஊடகப்பணிக் கோட்பாட்டு. ஊடகங்களால் நிகழ்த்தப்படும் இந்தத் தேர்தலையும் அவை புத்தம்புதியது எனச் சொல்லி முன்வைக்கின்றன.
ஊடகங்களுக்குத் தேவை புதியன. முகங்கள், விவாதங்கள், நிகழ்வுகள், செயல்பாடுகள், கருத்துகள், சொல்லாடல்கள், முன்மொழிதல்கள் என ஒவ்வொன்றிலும் புதியன வேண்டும். ஆனால் நடப்பதென்னவோ பழையனவாகவே இருக்கின்றன என்றாலும் புதிய வண்ணங்களும் தென்படுகின்றன.தமிழகத்தேர்தலில் ஐந்து முகங்கள் ஐந்து பாதைகள் ஐந்து சின்னங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் முக்கியமாக இருக்கும்.
திமுக தலைமையிலான எதிரணிச் சின்னங்கள். அ இ அதிமுக தலைமையிலான ஆளும் கட்சிகளின் அணிக்கான சின்னங்கள். இவ்விரண்டணிகள் அல்லாமல் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனச் சிறிய கட்சிகளின் தனிச் சின்னங்கள்.
திமுகவும் அஇஅதிமுகவும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தேர்தலிலும் புதியதான இருப்பதில்லை. நீண்ட அனுபவங்களைக் கொண்ட அந்தக் கட்சிகளுக்குத் தங்களின் வாக்கு வங்கிகள் எவை என்பது தெரியும். அதனைச் சரியாகக் கணக்கிட்டு நிலை நிறுத்திக்கொள்ளவும், வெற்றிக்குத் தேவையான கூடுதல் வாக்குகளைப் பெறும்பொருட்டுப் பொதுத்தளப் பார்வையை வெளிப்படுத்துவதுமே அவ்விரண்டு கட்சிகளின் வெற்றி ரகசியம். பிராமணரல்லாத இடைநிலைச் சாதிகளிலிருந்து உருவான நடுத்தரவர்க்கம் திமுகவின் ஆதார வாக்குவங்கி. அரசுப் பணியாளர்களாகவும் பொதுத்துறைகளின் ஊழியர்களாகவும் தனியார்துறையில் பணியாளர்களாகவும் இருக்கும் இவர்களின் நலன்களுக்கான குறிப்புகள் தூக்கலாகவே இருக்கும். இக்குறிப்புகளோடு பொதுத்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அனைத்துத் தரப்பு மனிதர்களின் கவனத்தையும் ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கை அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படும். இந்தத் தேர்தல் அறிக்கை அதிலிருந்து மாறுப்பட்டுள்ளது.
இந்தத்தேர்தலில் விரைவாக ஓடி எல்லைக் கோட்டைத் தொட்டுவிடும் துடிப்பில் இருப்பதை உறுதிசெய்து கொண்ட கட்சியாக தி.மு.க. இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் என்பதை உணர்ந்து தேசியக் கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லாமல் காட்டிக்கொண்டது முதல் ஆச்சரியம். அத்துடன் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸின் தலைவர் திரு.ராகுல் காந்தையைச் சென்னைக்கு அழைத்து இவர்தான் இந்திய நாட்டிற்குப் பிரதமராக நான் முன்மொழியும் தலைவர் எனச் சொன்னதும், காங்கிரஸ் கட்சிக்குப் பத்துத் தொகுதிகளை ஒதுக்கியதும் இரண்டாவது ஆச்சரியம். இவ்விரண்டையும் ஆச்சரியம் என்று சொல்வதைவிடத் தெளிவாக முடிவெடுக்கிறார் தி.மு.க.வின் தலைவர் எனக் காட்டியது. அதேபோல தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தமிழக நலன்கள் எவை என்பதில் கவனமான முன்வைப்புகளைச் செய்தது. போராடி, வாதாடிப் பெறப்பட்ட மாநில உரிமைகள் இழப்புக்குள்ளாகிவிட்டன; அவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்பதைக் கவனமாக எழுதிக்காட்டியது. இவ்வறிக்கையை ஏற்று வழிமொழிந்து தனது அறிக்கையாக வெளியிட்டது அதன் கூட்டணித் தலைமையான காங்கிரஸ்.
ஆளும் அஇஅதிமுகவின் வாக்குவங்கி கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களும் என்பது பல தேர்தலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறுகுறு விவசாயிகள் எனப் பட்டியலிடப்படும் குடும்பங்களுக்காகவும், உதிரித் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகப் பங்கேற்கும் விதமாகவும் அமையும் பல நலத் திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் எப்போதும் முன்வைக்கும் ஆளுங்கட்சி. தொடர்ச்சியாகத் தங்கள் உடல் உழைப்பைச் செலுத்தத் தயாராக இருக்கும் மனிதர்களுக்குத் தேவை அரசின் ஊக்கம் மட்டுமே. அத்தகைய ஊக்கத்தை அளிக்கும் மானியங்களையும் இலவசங்களையும் முன்வைக்கும் அறிக்கையை நம்பி அதன் வாக்குவங்கி தொடர்ந்து வாக்களிக்கக்கூடும். இந்தத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிடுவதில் அக்கட்சி,
‘தேர்தல் அறிக்கை என ஒன்றை வெளியிட்டுத்தான் ஆகவேண்டுமா?’ என்று சலிப்போடு தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது; கடைசியில் போனால் போகிறது என்று வெளியிட்டுவிட்டது. அதே போல் தான் அதன் தேசியக் கூட்டணித் தலைமையான பா.ஜ.க. க. வும் தேர்தல் அறிக்கையைக் கடைசியாகவே வெளியிட்டது. அ. இ. அதிமுகவின் கூட்டணிச்சேர்க்கைகளும் தொகுதி ஒதுக்கீடுகளும் கடைசிவரை இழுபறியிலிருந்தன. காரணம் அதன் கூட்டணிக்கட்சிகளின் எதிர்த்திசைப் பயணங்கள். அந்தக் கட்சியின் வெற்றி இலக்கு நாடாளுமன்றத்தொகுதிகளா? இடைத்தேர்தல்கள் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல்களா? என்பதில் ஒரு குழப்பம். இத்தகைய போக்குகள் அதன் வலிமைவாய்ந்த தலைவர் ஜெ.ஜெயலலிதா இருந்ததுவரை நிகழாதவை.
திமுக., காங்கிரஸ் என்ற பெரிய கட்சிகளின் நகர்வுகளையும் அடிவைப்புகளையும் சரியாகப் புரிந்துகொண்ட அதன் கூட்டணிக்கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், மதிமுக போன்றன தரப்பட்ட இடங்களைப் பெற்றுக்கொண்டு முணுமுணுப்புகள் இல்லாமல் தேர்தல் வேலையைச் செய்தன. வைகோ காட்டிய பொறுமை ஆச்சரியப்பட வைத்தது. இந்த நடவடிக்கைகளின் பதில் நடவடிக்கைகளாகவும் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்திலும் எதிரணியை நிறுத்தியது அந்த அணியின் முதல் வெற்றி. நீட் பற்றியும் எட்டு வழிச் சாலை பற்றியும் பா.ஜ.க.விடமிருந்து சரியான பதிலைப் பெற்றுவிட முடியாத தவிப்பு அ இ அதிமுக வின் முதன்மை தவிப்பு. அந்தத் தவிப்பின் வெளிப்பாடுகள் பலவிதமாக இருக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக வருமான வரித் தேடல்கள், ஒன்றிரண்டு தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்புக்கு முயற்சி, துப்பாக்கி சூடு, மிரட்டல் என நீள்கின்றன.
இவ்விரு அணிகளுக்கும் இடையே நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். இம்மூன்று கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கும் சக்திகள் என்பது ஊடகங்களின் கணிப்பு. திரு. சீமானுக்கென்றொரு வாக்குவங்கி உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அவரது முழக்கங்களும் ஆதரவும் மாறுவதுபோல வாக்குவங்கியின் எண்ணிக்கையும் மாறுகின்றது. அம்மாற்றம் வெற்றிபெறும் மாற்றம் அல்ல.
திரு. தினகரனின் அமமுக, தன்னை அஇ அதிமுகவின் இன்னொரு பிரிவாகவே கருதுகிறது.தேர்தலுக்குப் பின் தொண்டர்களும் இரண்டாம் கட்டப் பொறுப்பாளர்களும் அவர் பக்கம் வரவேண்டுமென்றால் தான் வலிமையான அரசியல் ஆளுமை எனக் காட்டவேண்டுமென வேலை செய்கிறார். அவரது ஆதரவு தளம் வலிமையான இடங்களில் அறியப்பெற்ற நபர்களை நிறுத்தி வலிமை காட்டியுள்ளார். அவரது எதிரிகள் ஓ.பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தான்.
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்ய அரசியல் திரைக்கதை - வசனம் எழுதிக்கொள்ளாமல்’ ஒற்றைவரிக் கதையோடு’ படப்பிடிப்புக்குப் போன சினிமா தயாரிப்புக் கம்பெனி போன்றது. நல்ல படம் தரவேண்டும் என்பது அதன் இலக்கல்ல. இப்போதைக்குப் பலவற்றையும் பதிவுசெய்து கொண்டு போய் எடிட்டரும் தந்து ஒரு படத்தை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் நகரும் சினிமா அரசியல். இந்தக்காட்சிகள் ஒரு தனிப்படமாக வெளிவரலாம். இல்லையென்றால் நல்ல காட்சிகளை வேறுபடங்களுக்கு விற்றுக் காசுபார்க்கவும் வாய்ப்புண்டு.
பொதுத்தள வாக்குகளை இவர்கள் பிரிப்பார்களா? என்றால் பிரிக்கவே செய்வார்கள். இறுகிய பேரமைப்புகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் இந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடும். இவர்கள் பிரிக்காமல் இருந்தால் அந்த வாக்குகள் யாருக்குப் போகக் கூடியன என்று கேட்டால் இப்போதைய ஆளுங்கட்சிகளுக்குப் போகக் கூடியன என்பதுதான் உண்மை. எப்போதும் எதிர்ப்பு மனநிலையென்பது அதிகாரத்திற்கெதிராகவே செயல்படும்.
இந்தத் தேர்தல் இன்னொரு அரசைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இல்லாமால் ஏற்கெனவே இருந்த உரிமைகள், அமைப்புகள், தன்னடையாளம் கொண்ட தனிமனிதர்கள் என்பதைத் தக்கவைப்பதற்கான தேர்தலாகப் பலரும் நினைக்கிறார்கள். அதனால் இப்போதிருக்கும் அரசுகள் மாற்றப்பட வேண்டுமென நினைப்பதும் கருத்தாகப் பரவியிருக்கிறது. காற்றைவிடக் கருத்து வேகமாகப் பரவும் என்பது ஊடகங்களின் காலத்தில் உண்மையாகலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்