தேர்தல் -2019 -III

தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள்

மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை.

ஒருவனது சுயத்தை அழிக்க இறைவன் மீது கொண்ட பக்தி உதவும் எனப் பக்தர்கள் நம்புவது போல நான், எனது என்ற தன்னலம் சார்ந்த இருப்பை அழிக்க தேர்ந்த அரசியல் கட்சியின் – மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சியின் – கொள்கை உதவும் என்பது மக்களாட்சி அரசியலின் சித்தாந்தம். அந்த அடிப்படையில் தான் தேர்தல் அரசியலுக்கு வருபவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எனக் குறிக்கப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அத்தகைய தரத்தில் இல்லை என்பது அண்மைக்கால வெளிப்பாடு.

கொள்கை சார்ந்த கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு அதிகாரத்தைப் பங்கு போடும் கூட்டணி அரசியலுக்குள் இந்திய அரசியல் நுழைந்த பின்னர் இந்தப்போக்கு இன்னும் அதிகமாகி விட்டது. என்றாலும் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஒரு மாநிலம் அனுப்பும் உறுப்பினர்கள் அதன் அடையாளங்களை முன்வைக்கும் நபர்களாக இருக்க வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பு. கடந்த ஐந்தாண்டுகளில் இருந்த திரு நரேந்திர மோதி அவர்களின் அரசுக் காலத்தில் தமிழகத்திலிருந்து போனவர்கள், என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்? எப்படிச் செயல்பட்டார்கள், எதிர்பார்ப்பை நிறைவேற்றினார்களா என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும்.

இப்போதுள்ள நடைமுறைத்தேர்தல் அரசியலில் நாடாளு மன்றத்திற்குச் செல்பவர்கள் அவர்களை முன்மொழிந்த கட்சிகளின் உறுப்பினர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், அவரது வெற்றிக்குப் பின்னர் அவருக்கு வாக்களிக்காத மக்களுக்கும் அவர்தான் உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்பு தொகுதி வாக்காளர்களின் நம்பிக்கையானவர் என்பதையும் தாண்டி தமிழகம் என்னும் மாநிலத்தின் பிரதிநிதி என்பதாகவும், அம்மாநிலம் இந்திய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கிறது என்பதை இந்தத் தேசத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லும் நபராக இருக்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்றம் என்பது இந்த நாட்டிற்குத் தேவையான சட்டங்கள் என முனைவர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கித் தந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பாதுகாக்கும் அவை. அதன் உறுப்பினர்களுக்குக் கால மாற்றத்திற்கேற்ப புதிய சட்டங்களை உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. பழைய சட்டங்களில் மாற்றம் தேவைப்படும் நிலையில் விவாதித்து முடிவுசெய்யும் பொறுப்பும் அவர்களுக்குண்டு. இந்தப் பொறுப்பை விவாதிக்கும் அறிவும் புரிதலும் வெளிப்படுத்தும் மொழி ஆளுமையும் முதன்மைத் தேவை. அப்படியான ஆளுமைகள் வேட்பாளர்களாக இந்தத் தேர்தலில் முன்மொழியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தாண்டி தேசத்தின் பரப்பிற்குள்ளும் உலக நாடுகளுக்குள்ளும் பயணம் செய்து தமிழகத்தின் அறிவுவளத்தையும் பண்பாட்டுப் பெருமைகளையும் உழைக்கும் நேர்மையையும் போராடும் குணத்தையும் சொல்ல வேண்டும்.

பொதுத்தளத்தில் நடப்பனவற்றைத் தொடர்ந்து கவனிப்பவன் என்ற வகையில் இவர்களின் கடந்த காலத்தைக் கவனித்திருக்கிறேன். இந்தப் பத்துப் பேரும் - ஆட்சியமைப்பு அவைகளிலும் பண்பாட்டுத் தளத்திலும் போராட்டக் களத்திலும் நம்பிக்கையூட்டிய ஆளுமைகள். அவர்கள் நாடாளு மன்றத்தில் தமிழின் அடையாளமாக இருப்பார்கள். தமிழ் என்னும் சொல் மொழியாக, மக்கள் திரளாக, இனமாக, அறிவாக, சிந்தனையாக, பண்பாடாக, இலக்கியமாக, கலையாக முன்வைக்கப்பட வேண்டும். இவர்கள் முன்வைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.வாக்களித்து அனுப்ப வேண்டியது அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்காளர்களின் கையில் இருக்கிறது.இவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இவை:

முனைவர் தொல்.திருமாவளவன் -சிதம்பரம்

முனைவர் துரை.ரவிக்குமார் -விழுப்புரம்

கவி.கனிமொழி - தூத்துக்குடி

முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் - தென்சென்னை

எழுத்தாளர் சு.வெங்கடேசன் -மதுரை


=========================================
முனைவர் தொல் திருமாவளவன்

மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன் ஆளுமை அல்ல; அரசியல்வாதி. ஒற்றைப் பிரச்சினையை முன்னெடுக்கு ம்நுண்ணரசியல் தளச்செயல்பாட்டாளரல்ல; தமிழகத்தின் பேரரசியலின் முக்கியமான முகம். தமிழனனென்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்ற வாக்கின் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளம்பிராயக் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சூழலைக்கவனித்துப்பெரும்பரப்புக்குள் பயணம் செய்து கொண்டிருக்கும் தலைவர். ஒடுக்கப்படுதலின் தந்திரங்களை உணர்ந்த நிலையில் திமிறிஎழுதலின்வழிமுறைகளைத்தேடியபயணத்தின் வழியாக முன்பு நடைபெற்ற தேர்தல்களில் முக்கியச்சொல்லாடல்களை உருவாக்கியவர். மூன்றாவது அணியெனத்தங்களையேகீழிறக்கிக் கொள்ளும் நிலைக்கு மாற்றாகமாற்றணியெனும்கருத்தியலை உருவாக்கியவர். அதற்காக கூட்டணி அரசாங்கம் என்னும் கருவை உருவாக்கியிருப்பவர். இந்தக் கருவை உருவாக்கிய நிகழ்வுகள் ஐந்தாண்டுக்கு முன்பே சூல்கொண்டது. தமிழகச் சட்டமன்றத்திற்காகமுன் வைத்தக்கருத்தியலை இப்போது தேசிய அளவிற்கும்நகர்த்துகிறார்.

கூட்டணி ஆட்சி என்னும் கருத்தியலை முன்வைத்ததோடுஓய்ந்துவிடவில்லை என்பதுதான் தொல்.திருமாவளவனின் சாதனை. அந்தக் கருத்தியல் கடந்த தேர்தலிலேயே பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறது. இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் விரிந்து பரவும் அதைச் செய்யப் போகிறவராக இருக்கப்போகிறவரும் அவர்தான். அண்மையில் பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் குரலாக - அடையாளமாகமாறப் போகிறார் என்பதின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

அவர் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அவருக்குப் புதிய தொகுதி அல்ல. ஏற்கெனவே அவரைத் தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி.பாரம்பரியமாக அரசியல் உணர்வு பெற்ற தொகுதி என்பதை நானறிவேன். 1990 களில் தலித் இயக்கங்கள் எழுச்சி பெற்றுத் தலித் பண்பாட்டுப் பேரவை, தலித் கலை இலக்கியவிழாக்கள், தலித் இலக்கியமுகாம்களெனநடத்திய காலகட்டத்தில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளுக்குட்பட்ட சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். நாடகங்கள்போட்டிருக்கிறேன். அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறேன். நண்பர் ரவிக்குமார் காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் கோயில்மணி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற போது அந்தத் தொகுதியின் பெரும்பாலான கிராமங்களுக்குச் சென்று மக்களோடு பேசியிருக்கிறேன்.

திருமாவின் பேச்சுத்திறமையை - சொற்பொழிவின் ஒழுங்கைப் பல மேடைகளில் முன் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். சட்டமன்ற நாடாளுமன்ற உரைகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். அண்மைக் காலங்களில் அவரளவிற்குப் பொறுப்போடு ஊடக நேர்காணல்களைத் தந்தவர்கள் இந்திய அளவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரது முனைவர் பட்ட நேர்காணல் தேர்வின்போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக விவாதங்களை முன்னெடுத்த பாங்கு கொண்டாட்டத்திற்குரிய ஒன்று.

முனைவர் தொல்.திருமாவளவனை அத்தொகுதியின்செல்லப்பிள்ளையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இளையபெருமாளின் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள் என்பதை அப்போதே நான் உணர்ந்தேன். அவர்களோடு நான் பேசியபோது அவரது பெயரில் இருக்கும் -ன் - விகுதியை ஒருவர்கூட உச்சரித்துக் கேட்கவில்லை. வளவர் என்றே சொன்னார்கள். கோயில் மணிச் சின்னத்தையே தங்கள் சின்னமாகஆக்கிக் கொண்ட கிராமத்து மக்கள் அன்றாடம் தங்கள் புழக்கத்தில் இருக்கும் பானைச் சின்னத்தை ஏற்றுக் கொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை. பானை தமிழ் நாட்டின் புழங்குபொருள். ஒவ்வொருவரின்வீட்டிலும்பானைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் பானைகளைத்தூக்கியிருப்பார்கள். அவர் இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும். சிதம்பரம் தொகுதியின் உறுப்பினராக மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசக்கூடிய ஒருவராக.

08-04-19 நாடாளுமன்றம் செல்லவேண்டியவர் - ரவிக்குமார்


2019 நாடாளுமன்றத்தேர்தலில் விழுப்புரம் நாடாளு மன்றத் தொகுதிக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அத்தொகுதியின் வேட்பாளராக துரை.ரவிக்குமார் அவர்கள் அறிவிக்கப்பட்டு வாக்குச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார் பொதுமனப்போக்கை - வெகுமக்கள் உளவியல் செயல்படும் விதத்தை- உணர்ந்து கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவேண்டும். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டியது விழுப்புரம் தொகுதி வாக்காளர்களின் பணி.

இப்படி நான் சொல்வதற்கு முதன்மையான காரணம் எனது நீண்ட கால நண்பர் என்பதுதான். ஆனால் எங்கள் நட்பு ஒரே தெருவில் விளையாண்டு, ஒரே பள்ளியில் படித்து, சொந்தக்காரங்களின் நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஒன்றாய்ப் போய்த் திரும்பிக் குடித்துக் களித்து வளர்ந்த நட்பல்ல. இலக்கியத்தில்- இலக்கியத்தைப் பற்றிய பார்வையில் தொடங்கி சமுதாயத்தை- அரசியலை-நிகழ்காலத்தின் இருப்பைப் புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் உருவான ஒத்த மனநிலையால் உண்டான நட்பு.

இந்தியாவில் ஜனநாயக அரசியலின் வெளிப்படையான வடிவங்கள் ஊராட்சி மன்றங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் என்னும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைப்புகள். இவற்றுக்கு உறுப்பினர்களாக வர வேண்டியவர்களின் பாதையைக் களத்திலிருந்து தொடங்கவேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது வாக்குச் சீட்டு அரசியல். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமாக, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசோடு கொள்ள வேண்டிய உறவுகளிலும் முரண்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உதவுவதின் மூலம் ஒரு தனிநபர் அரசியல் மனிதராக மாறுகிறார். மிகச்சிறிய அரசமைப்பான குடிமைப்பொருள் வழங்கும் கடையில் ஏற்படும் பிரச்சினைகளில் தொடங்கி, கூட்டுறவு அமைப்புகள், காவல் நிலையங்கள், வருவாய் அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் வரை மக்களின் கோரிக்கைகளும் தேவைகளும் இருக்கின்றன. இவையல்லாமல் அரசின் துணை அமைப்புகளான பள்ளிகள் தொடங்கிப் பல்கலைக் கழகங்கள் வரையிலான கல்வி நிலையங்கள், வங்கிகள், போக்குவரத்துக் கழகங்கள், நீதிமன்றங்கள் , சுகாதார நிலையங்கள் எனப் பல்வேறு அமைப்புகளோடு மக்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. இவ்வமைப்புகளின் பணியாளர்களும் அதிகாரிகளும் அவரவர்கள் செய்யவேண்டிய பணிகளை முறையாகச் செய்யாமல் தவறுகின்றனர்; பாரபட்சம் காட்டு கின்றனர்; கண்டு கொள்ளாமல் தவிர்க்கின்றனர். இந்த நிலையில் தான் அரசியல் மனிதரின் தேவை உருவாகிறது. அதில் ஈடுபட்டுத் தன்னை அரசியல்வாதி ஆக்கிக்கொள்கிறார்கள் இந்த அனுபவத்தை வெளிப்படையாகச் செய்பவர் நேரடியாக அரசியல்வாதி ஆகிறார்.

களப்பணியாளராக மட்டுமே இருக்கும் ஒருவருக்கும் இத்தகைய வாய்ப்புகள் அதிகம். அதனால் அவர்கள் அரசியலுக்காகப் பிறந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்; கொண்டாடப் படுகிறார்கள். மக்களின் சார்பாளராகி நடைமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறார்கள். இந்தப் பாதையை எழுத்தாளர்களும் பின்பற்றலாம். ஆனால் அரசுத்துறையிலோ- அரசு சார்ந்த அமைப்புகளிலோ- சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இந்தப் பாதை தடுக்கப்படுகிறது. இந்தியாவில் பின்பற்றப்படும் பணிவிதிகள் அவர்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கின்றன. அதையும் தாண்டி ரவிக்குமார்

எழுத்தாளராகவும் செயலாளியாகவும் எப்படிச் செயல்பட்டார் என்பதை அவரது செயல்பாடுகள் வழியாக நேரடியாகப் பார்த்தவன் நான் . பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் விழுப்புரம், கடலூர் மாவட்டக் கிராமங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், தீண்டாமைக் கொடுமைகள் சார்ந்த புகார்களோடு ஒரு மக்கள் பிரதிநிதியின் வீட்டு வாசலில் நிற்பதுபோலக் களப்பணி யாளர்கள் நிற்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தக்க ஆலோசனைகளையும் செயல்முறைகளையும் சொல்லி அனுப்புவார். அன்றே அவற்றைச் செய்தியாக்கி பத்திரிகைகள் வழியாக வெளிக் கொண்டுவருவார். உண்மை அறியும் குழுக்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்வார். அறைக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பல கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசச் செய்வார் அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அவர் செயல்படும் விதங்களைக் கூடவே சென்று பார்த்திருக்கிறேன். அப்போது அவர் ஒரு வங்கி ஊழியர்; நிறப்பிரிகையின் ஆசிரியர் மட்டுமே.

2006 இல் தேர்தலில் நிற்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சொன்னபோது தயக்கத்தில் இருந்த ரவிக்குமாரைத் தைரியமாக இறங்கி விடுங்கள் என்று சொன்னவர்களுள் நானும் ஒருவன். தேர்தலின்போது அவர் மக்களைச் சந்திக்கும் விதத்தையும், மக்கள் அவரை எதிர்கொண்ட முறைகளையும் உடனிருந்து பார்த்திருக்கிறேன். 2006 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முன்பு ரவிக்குமார் ஓர் அரசுடைமை வங்கியின் ஊழியர்.அதே நேரத்தில் அவரை ஓர் எழுத்தாளராகவும் பண்பாட்டுச் செயலாளியாகவும் தமிழகம் அறியும். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் புதுவைமையை மையமிட்டு உருவான கருத்தியல் தளங்களைக் கட்டமைத்து நிறப்பிரிகை. அதன் ஆசிரியர் குழுவில் அ.மார்க்ஸ், பொ. வேலுசாமி ஆகியோர் இருந்த போதிலும் ரவிக்குமாரின் பெயரே நிறப்பிரிகை என்னும் இதழோடு இணைத்து அறியப்பட்டது. அவரது முகவரியில் இருந்தே நிறப்பிரிகை வெளிவந்தது. அவ்விதழ் சார்ந்த கருத்தியல் தளங்களுக்கும் போராட்டக் களங்களுக்கும் அவர் தான் பொறுப்பு.

தொண்ணூறுகளில் தமிழ்ச் சிந்தனைத் தளத்தைச் சுழற்றியடித்த தலித் எழுச்சிப் போக்கின் தாக்கம் அரசியல், பண்பாடு, இலக்கியம், ஊடகச் செயல்பாடு, களப் போராட்டம் ஆகியன அந்தக் கால கட்டத்தையும் தாண்டி நகர்ந்ததின் பின்னணியில் ரவிக்குமாரே இருந்தார். அவர்தான் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற கருத்தியல்களைத் தமிழின் அறிவுப் பரப்பிற்குள் தொடர்ச்சியாக முன்வைத்தார். நுண் அரசியல் தளங்களுக்கும் அப்பால் பேரரசியல் தளங்களுக்கும் நகர்த்தும் நோக்கத்தோடு வெகுமக்கள் ஊடகங்களில் பணியாற்றுபவர்களோடு உறவுகளை ஏற்படுத்தினார். தமிழகத்தின் தலித் எழுச்சி, அரசியல் தளத்தில் ஏற்ற இறக்கங்களைப் பெற்று வந்தாலும் அதன் சிந்தனைத் தாக்கம் காத்திரமாகவே இருந்துவருகிறது.

கலை இலக்கியம், பண்பாடு, ஊடகம், விளையாட்டு, கேளிக்கைகள் என எல்லாவற்றிலும் தலித் சிந்தனையாளர்களின் கருத்து என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி யோசிக்க வேண்டிய நெருக்கடியை அது ஏற்படுத்திவிட்டது. அத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தியது தலித் இயக்கங்களின் களச் செயல்பாடுகளே என்றாலும் அதன் பின்னின்று இயக்குபவர்கள் அவ்வியக்கத்தின் சிந்தனையாளர்களே. தலித் இயக்கங்களுக்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கிச் செயல்பாட்டுத் தளத்துக்கு உருட்டிவிடும் பணியைக் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்து செய்து வருபவர் ரவிக்குமார். இதற்காக அவர் கொள்ளும் உறவுகளும் பழகும் மனிதர்களும் பல நேரங்களில் சந்தர்ப்பவாதமாகத் தோற்றம் அளிக்கும். ஆனால் அந்தத் தொடர்புகளையும் உறவுகளையும் பயன்படுத்தி அவர் யாருக்காக அரசியல் செய்ய வந்தாரோ அவர்களுக்குப் பயன் உண்டாக்கவே அதைச் செய்தார் என்பதை உணர்த்திவிடுவார்.

ஓர் எழுத்தாளராக அவர் எழுதிக்குவித்த கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும் மொழிபெயர்ப்புகளுமாக 50 நூல்களுக்கும் மேலாக இருக்கின்றன. தத்துவம், அரசியல், கலைக்கோட்பாடு என அவர் மொழி பெயர்த்தவைத் தமிழ்ச் சிந்தனை மரபில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கியவை. அதற்காகப் பல அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் அண்ணா விருது, எங்கள் பல்கலைக்கழகத்தின் திறனாய்வாளர் விருது, விடியல் அமைப்பின் விருது போன்றன முக்கியமானவை

ஐந்தாண்டுக் காலம் காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது எழுப்பிய கோரிக்கைகளும் கவனப் படுத்திய பிரச்சினைகளும் அதுவரையில் சட்டமன்ற உறுப்பினர்களால் நினைத்துப் பார்க்கப்படாதவை. அவரது முன்னெடுப்பால் உருவாக்கப்பட்ட நல வாரியங்கள் பற்பல. வீட்டுப்பணியாளர்களுக்கு, ஓமியோபதி மருத்துவர்களுக்கு, புதிரை வண்ணார்களுக்கு, நரிக்குறவர்களுக்கு, நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு...எனப்பலவற்றின் காரணி அவர்தான். ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப் பெற்ற உதவித்தொகையை அதிகப் படியாக்கியது அவரது பத்திரிகை எழுத்தும் சட்டமன்றப் பேச்சுமே ஆகும்.இவைபோலப் பலவற்றை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் வழிமுறையை அவர் அறிவார். குறிப்பாக மனித உரிமைகள் சார்ந்தும், பன்னாட்டு உறவுகள் சார்ந்தும், இந்தியச் சமூகத்தின் அடுக்குகளுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் இந்திய நாடாளு மன்றத்தில் பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் முன்னணிப் படையாகவும் தகவல் களஞ்சியமாகவும் அவர் விளங்குவார்.

ரவிக்குமாருக்கு படிப்பதும் எழுதுவதும் உண்பதை விடவும் தூங்குவதைவிடவும் அதிகமான விருப்பங்கள். தொடர்ச்சியான பயணங்கள், சந்திப்புகள், உரையாடல்கள் என்பனவற்றில் சலிப்பே இல்லாதவர். நிறப்பிரிகையை நின்றுபோன பின்பு அவர் பொறுப்பில் வந்த இதழ்கள் சில உண்டு. தொகுத்துப் பதிப்பித்த நூல்கள் பல உண்டு. தலித், போதி போன்றன இதழ்கள். . அரசியல்வாதியாக ஆனபின்பும் மணற்கேணி என்னும் ஆய்விதழைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தனது ஆய்வுப் பட்டத்திற்கான பணியை முடித்து முனைவர் பட்டம் பெற்றதும் கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையில் தான்.

விழுப்புரம் தொகுதியின் நிலவியல், பொருளியல் தரவுகளை வைத்துக் கொண்டே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அந்தத் தொகுதியின் முதன்மையான தேவைகளெவை என்பது இப்போதே தெரியும். தொழில் வளர்ச்சியற்ற - வேளாண்மையை நம்பியிருக்கும் மனிதர்களைக் கொண்ட விழுப்புரத்தின் மனித வளத்தைப் பயன்படுத்தும் பெருந் தொழில்களின் தேவையை எடுத்துச் சொல்லும் திறன் அவருக்குண்டு.

பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பெற்ற அனுபவத்தோடு, வழக்குரைஞராகவும் மனித உரிமைச் செயல்பாட்டாளராகவும் அவர் பெற்ற அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பார் என்பதை உறுதி செய்யக் கூடியன. அந்த அறிவார்ந்த ஒருவரைத் தங்களின் பிரதிநிதியாக அனுப்பும் வாய்ப்பை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் பெற இருக்கிறார்கள். அந்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

12-04-19/நாடாளுமன்றம் செல்ல வேண்டியவர் கனிமொழி

இந்திய நாடாளுமன்றம் அவருக்குப் புதியதல்ல. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படாதவர்களால் நிரப்பப்படும் நாடாளு மன்றத்தின் ராஜ்யசபையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக - 2007 முதல் -உறுப்பினராக இருக்கிறார். இப்போது மக்களின் பிரதிநிதியென்னும் அடையாளத்தோடு நாடாளு மன்றம் செல்லும் விருப்பத்தோடு தென் தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக வலம் வருகிறார். புதிதாக அமையப் போகும் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக இவரும் செல்லவேண்டியவர்.

தனது கருவறை வாசனை என்னும் கவிதைத் தொகுப்பு வழியாகப் புதுவகைப் பெண்களின் தன்னிலையைக் கட்டி உருவாக்கிப் பெண்ணியத்தின் சில அடையாளங்களை உருவாக்கிய முன்னோடிப் பெண்ணியக் கவி. மரபான பெண்மை, நடைமுறைக்குள் அடங்கிக் குடும்ப எல்லைக்குள் நிற்க விரும்பும் பெண்கள், தந்தைமை அல்லது கணவன் என்னும் ஆணின் பாதுகாப்பில் மட்டுமே இருக்கும் பெண்கள் அல்ல அவரின் கவிதைப்பாத்திரங்கள். சமகாலம் உருவாக்கித் தந்த அறிவுத்தளத்திலும் கருத்தியல் தளத்திலும் இயங்கும் பெண்களின் தன் விருப்பங்களையும் தாண்டும் எண்ணங்களையும் கொண்ட பெண்களை அந்தக் கவிதைகளில் அடையாளப்படுத்தினார்.

கருவறை வாசனையைத் தொடர்ந்து அகத் திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி போன்ற எழுத்துப் பிரதிகளிலும் தனது எழுத்து அடையாளங்களை உருவாக்கிக் கொண்டே வந்தவரை ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் திராவிட இயக்கக் கலை இலக்கியப் பார்வையிலிருந்து விலகிய நவீனத்துவப் பார்வை கொண்டவராகக் குறிப்பிட்டு வாழ்த்தினர்; ஏற்றனர்; பாராட்டினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வரும் அவரது தந்தையுமான கலைஞர் மு.கருணாநிதியும் தனது இலக்கிய வாரிசாகக் கனிமொழியை நினைத்தார் என்பதும் உண்மை. கவியாக வலம் வந்த காலங்களில் ஒன்றிரண்டு தடவை அவரோடு உரையாடியிருக்கிறேன். பல்கலைக் கழகத்திற்குக் கூட ஒருமுறை அழைத்ததுண்டு. தவிர்க்க முடியாத காரணம் ஒன்றினால் வரமுடியாமல் போய்விட்டது.

இலக்கிய வெளியிலிருந்து அரசியல் வெளிக்கு நகரும் நோக்கத்தில் கருத்தியல் விவாதங்களுக்காக ஓர் அமைப்பை -கருத்து- உருவாக்கிய குழுவில் அவர் முக்கியமானவராக இருந்தார். கார்த்தி சிதம்பரம், காலச்சுவடு கண்ணன் போன்றவர்களும் கூட அதன் மைய அச்சில் அடையாளம் பெற்றிருந்தனர். அதன் செயல்பாடுகள் நீண்ட காலம் தொடர வில்லை. கருத்து என்னும் குறுங்குழு விவாதங்களிலிருந்து சென்னை சங்கமம் போன்ற பெருநிகழ்வைத் திட்டமிட்டு நடத்தியபோது கனிமொழியின் அரசியல் வெகுமக்கள் தளத்திற்கு நகர்ந்தது. அவரது வருகை மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சில அடையாளங்கள் உருவாகின. . உலகம் முழுவதும் அலையாக உருவாகி வந்த விளிம்புநிலைப்பார்வையைக் கட்சிக்குள் கொண்டுபோனவர் அவர்தான்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாரியம் உருவாக்குவது; இட ஒதுக்கீடு செய்வது, கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை போன்றன அவர்களுக்கான அங்கீகாரமாக அமைந்தது. தலித்தியச் சொல்லாடல்களின் நியாயங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் விவாதிக்கவும் அவரே காரணம். அவையெல்லாம் வெளியே தெரியாமல் நடந்தவை. அதுபோலவே பல்கலைக்கழக ஆய்வுப்பொருண்மைகளில் ஒன்றாக இருந்த நாட்டார்கலைகள், நாட்டார் இலக்கியம், நாட்டார் வெளிப்பாட்டு முறைகள். நாட்டார் பண்பாடு போன்றவற்றைப் பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்து சென்னையின் ஆண்டுப் பெருநிகழ்வாக ஆக்கியது அவரது பொறுப்பில் செயல்பட்ட சங்கமமே என்பதும் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றின் அண்மைக் கட்டம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகச் செயல்பாடுகளோடு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதிமூலமும் சொந்தப் பணம் மூலமும் இணைந்து கொண்டார். நானும் சில சங்கமம் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன்.

கனிமொழியின் கலை இலக்கியப் பார்வை தி.மு.க. என்னும் வெகுமக்கள் கட்சியை (Populist Political Party ) நுண்ணரசியல் தளத்தையும் கவனத்தில் கொள்ளும் அமைப்பாக மாற்றியது. அத்தோடு பொருளியல் தளத்தில் மாறிவரும் உலகமயத்தை விளங்கிக் கொள்ளும் நிலையிலும் அதனை உள்வாங்கிச் சமூகநலப் பொருளாதாரத் திட்டங்களைச் செய்யமுடியும் என்பதையும் அவரது நாடாளுமன்ற உரைகளில் வெளிப்படுத்தினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈழப் பார்வையில் - தமிழர்களின் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்திய ஈழப்பார்வையிலும் அவரது பங்களிப்பு இருந்தது. அப்போது அதிகார மையமாக இருந்த இந்தியக் காங்கிரஸின் போக்கை - தமிழர் விரோதப்போக்கை மாற்ற முடியாத நிலையில் கண்டனங்களையும் விலகலையும் முன்வைக்கக் காரணமாகவும் இருந்தார். இதையெல்லாம் செய்திடக் காரணம் அவர் கலைஞர் மு.கருணாநிதியின் மகளாக இருந்தார் என்பது கூடுதல் காரணம்

இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்மொழியின் தனித்தன்மை, தமிழ் இலக்கியப் பார்வையின் மாற்றுப்பார்வை, தமிழ்நாட்டுப் பரப்பிற்குள் செயல்படும் பன்மைத்துவம் போன்றவற்றைப் புரிந்துகொண்டு குரல் எழுப்பும் ஆளுமையாக ஒருவர் தேவைப்படுவது இந்தக் கால கட்டத்தின் கட்டாயம். இந்தத்தேவையை நிறைவேற்றுவதில் ஏற்கெனவே விருப்பங்கள் கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொண்டு அரசியலில் வலம்வரும் கனிமொழி திரும்பவும் நாடாளுமன்றம் செல்வதின் மூலம் வலுவாக வெளிப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது தூத்துக்குடி நாடாளுமன்றத்தின் கையில் இருக்கிறது.


26-03-19/நாடாளுமன்றம் செல்லவேண்டியவர்-2/ தமிழச்சிதங்கபாண்டியன்


நான் வார்சாவில் இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் போலந்து நாட்டுக்கான இந்தியத் தூதரகத்தின் முகவரிப்பட்டியலில் இருந்தேன். பெரும் வணிகக் குழுமங்களின் மேலாளர்களும் மக்கள் தொடர்பு அதிகாரிகளும் இந்திய விழாக்கள் அனைத்திற்கும் அழைக்கப்படுவார்கள். நான் மட்டுமல்ல அங்கு வருகைதரு பேராசிரியர்களாகச் சென்றிருந்த இந்தியர்களும் இந்தியாவிலிருந்து சென்று அங்கு தொழில் செய்யும் முதலாளிகளும் கூட அந்தப் பட்டியலில் உண்டு. இந்தியாவிலிருந்து வருகைதரும் பல்வேறு துறைசார்குழுக்களின் கலந்துரையாடல்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படுவார்கள். பெரும்பாலும் மொழி, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நான் போவேன். மற்றவற்றைத்தவிர்த்துவிடுவேன்.

வருகைதரும் இந்தியக்குழுக்களோடு நாடாளுமன்ற அவைகளின் உறுப்பினர்களும் வருவார்கள். நான் வார்சாவில்இறங்கியஒருமாதத்திற்குள் பார்த்த நிகழ்ச்சி இந்திய ஓவியர்களும்சிற்பிகள்கலந்துகொண்டநேரடித் தயாரிப்பு நிகழ்ச்சி. ஒருவாரம் நடந்தது. கலைஞர்கள் வேலை செய்வார்கள். பார்வையாளர்கள் பணம் கட்டி தூர இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பிட்ட நேரம் அவர்களோடு உரையாடலாம். அந்த நேரம் ஏதாவதொரு நாடாளுமன்ற உறுப்பினர் விருந்தினராக இருப்பார்கள். அவர்களும் உரையாற்றுவார்கள்.

ஒருமுறை இயக்குநர் கோவிந்த்நிகலாணியின் மொத்தப்படங்களும் திரையிடப்பட்ட விழா ஒன்று நடந்தது. அவரும் வந்திருந்தார்; அவரோடு நாடாளுமன்றக் குழுவொன்றும்வந்திருந்தது. வந்தவர்களில் சிலர் பல்கலைக்கழகத் துறைக்கும் வருகை தந்தார்கள், நூலகங்களைப் பார்த்தார்கள். இன்னொரு தடவை பிர்ஜுமகராஜுவின்குழுவைச் சேர்ந்தவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போதும் நாடாளுமன்றக் குழுவினரின் வருகை இருந்தது. இக்குழுக்களில் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இல்லை. ஒருவேளை வந்துவிட்டுச்சொந்தவேலை எதையாவது பார்த்திருக்கலாம்; ஊர் சுற்றியிருக்கலாம். அல்லது வசதியான விடுதி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டிலிருந்து இதற்கு முன் போனவர்களுக்குக் கலை இலக்கியம் சார்ந்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

கவி . தமிழச்சிநாடாளுமன்றஉறுப்பினரானால் இத்தகைய குழுக்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற வேண்டும். கேட்டுவாங்கிப்பங்கேற்பார்என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அவரது விருப்பங்கள்அப்படியானவை.
தமிழச்சியை முதன்முதலில் நான் பார்த்தது நாடக மேடையில் ஒரு நடிகையாக. கால் நூற்றாண்டுக்கு முன்னால். அ.மங்கையின் இயக்கத்தில் கவி. இன்குலாப் எழுதிய குறிஞ்சிப்பாட்டா? ஔவையா? என்பது இப்போது நினைவில் இல்லை. கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக இருந்ததால் திரும்பத் திரும்பப் பேசிக்கொள்ளும் நண்பர்களாக இருந்திருக்கிறோம். பின்னொரு நாளில் என் வீட்டருகில்திருநெல்வேலியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாட்டில் அம்மாநாட்டின் தொடக்கவுரை நிகழ்த்துபவராக அந்தக் கட்சியின் தலைவர் மு.கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டவர். அதுவே அவரது முதல் அரசியல் மேடை. அதற்காக உயர்சம்பளம் பெற்ற வேலையை விட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியா கமாறினார். அப்போதேநாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. வெவ்வேறு சூழல் காரணமாக நடக்காமல் போய்விட்டது என்று பின்னொரு நாளில் சொன்னார். அந்த வாய்ப்பு நழுவிப்போன நிலையில் கலை, இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது கவிதைத்தொகுப்பில் அடுத்தடுத்து வந்தன.

அவரது கவிதைகளில் வெளிப்பட்ட பெண் குரல் மற்றப் பெண் கவிகளின் குரலிலிருந்து வேறுபட்ட குரல். அது குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். அவரைப் பல்கலைக்கழகநிகழ்வுகளில் - கவிதை சார்ந்த நிகழ்வுகளில் உரையாற்றச் சில தடவை அழைத்திருக்கிறேன். உரையை நிகழ்த்துக் கலையாகச் செய்பவர். பார்வையாளர்களைச் சிறிதும் கவனம் சிதறவிடாமல் செய்யும் உரைகள்அவருடையவை. நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றப்போகும் ஆங்கில உரையின் நிகழ்வுகள் புதிய அத்தியாயமாக இருக்கும். தமிழ்நாட்டின் அறிவு வெளிப்பாடாக - தமிழ் மொழியின்செவ்வியல் தன்மை, நிகழ்காலப் பயன்பாடு, அதற்கு அரசு செய்யவேண்டியநிதிசார்ந்த, அமைப்புசார்ந்த உதவிகள் போன்றவற்றை முன்வைக்கும்என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

எழுத்துக்கலையான கவிதையில் அவரது பாணி தமிழின்மரபானசெவ்வியல் பாணி மட்டுமல்ல. கிராமத்துமனிதர்களை அவர்களின் மொழியில் சொன்ன பின் -நவீனத்துவவெளிப்பாடும் கூட. அவரது உடைகள், அணிகள், உடல்மொழி போன்ற வெளிப்பாடுகளிலும்கூடஇந்தத் தன்மையைக் காணலாம். இதையெல்லாம் புரிந்துகொள்ளாதபொதுப்புத்திசார்ந்த புரிதல் கொண்டவர்கள் அவரை வாரிசு அரசியலின் வழி வருகிறவர்களில் ஒருவராகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

கவி.தமிழச்சிதங்கபாண்டியனின்முதன்மையானவிருப்பங்களும்அடையாளங்களும் ஒன்றுக்கு மேற்பட்டவை. ஆங்கிலத்திலும்தமிழிலும் அற்புதமாக உரையாற்றும் பேச்சாளர், நடனக்காரி, நாடக நடிகை என்பதாகஅறியப்பெற்ற அவர் நாடகக்கலையைப் பற்றிய தீவிர ஆய்வையும் செய்தவர். ஆங்கிலத் துறையில் ஆசிரியராக இருந்த சுமதி என்ற தமிழச்சி தனது ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட பொருண்மை பின்-காலனிய ஆங்கில இலக்கியம். எர்னெஸ்ட்தளையசிங்கம் மக்கென்ராயர் என்ற ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரை. அவரை ஆஸ்திரேலியநாடகாசிரியர்என்பதைவிடப் பின் காலனிய ஆங்கில இலக்கிய ஆசிரியர் என்பதே பொருந்தும். அவரது வெளிப்பாட்டு மொழியாக ஆங்கில மொழியைக் கொண்டிருந்தாலும் எழுதப்படும் வெளியாகக்காலனியாக்கப்பட்ட நாடுகளின் நகரங்களும் கிராமங்களுமாகவே இருக்கின்றன.

இலங்கையின் கொழும்பு நகரமும் யாழ்ப்பாணத்துக் கிராமப்பகுதியையும் எழுதிய அவர், ஆங்கிலத்தின்வழியாகக் காலனி ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கலை – தன்னிலையைவெளிப்படுத்தியுள்ளார். தனிமனிதத் தன்னிலையைஎழுதத் தொடங்கி அவர்களைத் தேசிய அடையாளம், தேசியஇன அடையாளம், உலகத்தின்நிகழ்காலப்போக்கிற்குள் – நவீனத்துவ நெருக்கடிக்குள்உழல்பவர்களாகஎழுதிக்காட்டியுள்ளார். அவரைக் குறித்த ஆய்வு நாடகவியல்கல்விக்கு ஒரு மாதிரி ஆய்வாகஅமையத்தக்கது. இந்த ஆய்வின்வழியாகத் தமிழ் அரசியல் - காலனிய கால, பின் காலனித்துவ கால அரசியலை அறிந்துள்ளவராக மாறியிருக்கிறார் தமிழச்சி. அந்நூலின் வெளியீட்டின்போது இதனைச் சொல்லி உரையாற்றியவன் என்பதால் அவரது நவீனகால அரசியல் அறிவு எனக்குத் தெரியும்.

அவரது நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் எழுத்துக்கலைக்கானநிகழ்வாக மட்டும் இருந்ததில்லை. நடனம், நாடகம் போன்ற நிகழ்த்துக்கலைகள் வெளிப்பாடாக இருந்துள்ளன. ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு வாய்ப்பளித்த மேடைகளாகவும்இருந்துள்ளன. இப்போதும் சொந்தக் கிராமத்திற்குப் போய் வனப்பேச்சிகளோடு உரையாடும் விருப்பம் கொண்டவர். தமிழின் எல்லாவகைக்கலைஞர்களோடும்அறிவாளிகளோடும்தொடர்பில் இருப்பவர். அவரிடம் எந்தவொருமனிதரும் தன் குறையை - கேள்வியைச் சொல்ல முடியும். அவரைத்தமிழ்நாட்டின் சார்பாக நாடாளுமன்றத்திற்குஅனுப்புவதின் மூலம் தமிழ் வாக்காளர்களின்அறிவார்ந்தமுடிவெடுக்கும் திறன் வெளிப்படும். அந்த வாய்ப்பு சென்னையின் தென்பகுதிமக்களுக்குக்கிடைத்திருகிறது. தென் சென்னை வாக்காளர்களின் புத்திசாலித்தனமான வாக்குகள் தமிழர்களின் அடையாளமாகஇருக்கப்போகிறது.


15-03-19/சு. வெங்கடேசன்: நல்லதொரு வேட்பாளர்


வாசிப்பிலிருந்துஎழுத்துக்கு நகர்ந்து, செயலாளியாக மாறும் வாய்ப்பை ஒருவர் சேர்ந்து இயங்கும் அமைப்பே உருவாக்கித் தரும். எழுத்தும் செயல்பாடும் இணைந்து நிற்பது வரவேற்கத்தக்க ஒன்று. தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அத்தகையவாய்ப்புகள் அதிகமாக இருந்தன. காங்கிரஸ் பேரியக்கத்தில் அரசியல்வாதிகளாக அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த பலர் எழுதுபவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
நவீனத் தமிழ் அரசியலில் எழுத்திலிருந்து அரசியல்வாதியாகி நாடாளுமன்றத்திற்குச் சென்ற கவி. கனிமொழியும் சட்ட மன்றத்திற்குச் சென்ற விமரிசகர் ரவிக்குமாரும் செயல்பட்ட விதங்கள்பாராட்டும்படியாகவே இருந்தன. அந்த வரிசையில் சு. வெங்கடேசனுக்குஅப்படியானதொரு வாய்ப்பு நெருங்கி வந்திருக்கிறது. அவரது கட்சி- இந்தியக் கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) மதுரையின் நாடாளுமன்றத்தொகுதியின் வேட்பாளராக அவரை அறிவித்திருக்கிறது.

மதுரை மாநகரமும்மாவட்டமும்சு.வெங்கடேசனின் சொந்த வாழ்க்கை யிலிருந்தும் எழுத்து வாழ்க்கையிலிருந்தும் அரசியல் வாழ்க்கையிலிருந்தும் பிரிக்க முடியாதவை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மாணவர் சங்கம் என்னும் அமைப்பில் செயல்பட்ட காலந்தொட்டு கவனித்திருக்கிறேன். அறிவொளித்திட்டத்தின் முக்கிய ஆளுமையான பேரா.ச. மாடசாமி மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலத்துறையின் இயக்குநராக இருந்தபோது அவரைச் சந்திக்க வருவார். அப்பொழுதிருந்தே அவரது எழுத்துக்களைவாசித்திருக்கிறேன். பண்பாட்டுஅரசியலுக்குத் தேவையான வரலாற்றையும் ஆவணங்களையும் தொகுப்பதில் ஈடுபாடு காட்டியவர். அந்த ஆவணங்களின்அடிப்படையிலேயே மதுரை மாவட்டத்தின் பின்னிடைக்கால வரலாற்றைப்புனைவாக்கிக் காவல் கோட்டம் நாவலை எழுதினார். அதற்குச் சாகித்திய அகாடெமி விருதையும் பெற்றார். த.மு.எ.க. சங்கத்தின் தலைவராகத்தேர்வுசெய்யப்பட்டார்.

மதுரைக்காரரான அவருக்குக் கல்விப்பட்டத்தை வழங்கிய கல்லூரி அங்குதான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் இளம் வேட்பாளராக அறிந்து கொண்ட திருப்பரங்குன்றம் தொகுதியும் மதுரை நாடாளு மன்றத்திற்குள் தான் இருக்கிறது.சாதிப் பிரிவினையின் அடையாளமாக மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமம் இப்போதும் பேசப்படுகிறது. அதனை இந்திய அளவில் அறியச் செய்ததின் பின்னணியில் இருந்தவர் அவர் தான். கீழடியில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் தொய்வும் திசை திருப்பலும்நடந்துவிடுமோ என்ற ஐயம் எழும்பியபோது, அதற்கெதிராகக்கீழடி என்ற பெயரையும் தொல்லியல் ஆய்வு தொடர வேண்டியதின் அவசியத்தையும்மையமாக வைத்து வெகுமக்கள் போராட்டமாக மாற்றியது அவரது தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமே . அண்மையில் அவருக்கு உலகத் தமிழர்களிடையே பெரும் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கும் வீரயுக நாயகன் வேள்பாரியும் கூட மதுரை மாவட்ட எல்லையில் இருக்கும் பறம்பு மலையைப் பின்னணியாகக் கொண்டதே.

மதுரை நாடாளுமன்றத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன், அதன் உறுப்பினராகத் தில்லிக்குச் செல்லும்போது மதுரையின்அடையாளமாக மட்டுமல்லாமல் தமிழின் அறிவடையாளமாகச் செயல்பட வாய்ப்புகளுண்டு. அதை உறுதிசெய்ய வேண்டியவர்கள் மதுரை வாக்காளர்கள். பயன்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?