அரசியல் சார்பும் வர்க்க நலனும்


தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சிக் குழுமமும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக் குழுமமும் இப்போதைய தேர்தலில் காட்டும் நடுநிலைப் போக்கு பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் தி.மு.க. ஆதரவு வாக்காளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களை அரசியல் அறிவுகொண்ட பார்வையாளர்களாக நினைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களால் ஏற்க முடியாமல் இருக்கிறது.
இவ்விரு குழுமங்களையும் தேர்தல் காலச் சார்புகொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியாது. அவை ஒற்றை அலைவரிசையை நடத்தும் வணிகக் குழுமங்கள் அல்ல. ஊடகத் தொழில் தாண்டி அச்சு ஊடகத் துறையிலும் கல்வி, மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் எனப் பல்வணிகக் குழுமங்கள். வெளியே தெரியாத வணிகத் தொடர்புகள் தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் இருக்கவும் கூடும். அவற்றின் காரணமாகவே நடுநிலை காட்டுகின்றன

வணிகக்குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக்கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அரசுகள் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங் களாகவும் மறைமுக வரிச்சலுகை களாகவும் இருந்தன.

தமிழிநாட்டில் காங்கிரஸ் காலத்தில் அந்த மனப்போக்கைப் பயன்படுத்திக் கொண்டவர்களாகத் தென்மாவட்டங்களில் டிவிஎஸ், ஆல்கமேசன் குழு,சிம்சன் மற்றும் ஸ்பென்சர் நிறுவனங்களை நடத்திய பிராமண முதலாளிகள் இருந்தனர். அவர்களுக்கு அங்கே நிலங்கள் இருந்தன; உற்பத்திசார்ந்த தொழில்களும் இருந்தன; சென்னையிலும் மதுரை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலும் இருந்தன. பின்னர் இந்தியா முழுவதும் பரவினர். கொங்குப் பகுதியில் நிலச்சுவாந்தார்களாக இருந்த தெலுங்கு முதலாளிகள் தங்கள் உற்பத்திக்காக எல்லை தாண்டாமல் அங்கேயே தங்கினர். , லேவாதேவி, வங்கித் தொழிலில் ஈடுபட்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தங்கள் தொழில் காரணமாக இந்திய முழுவதிலும் பரவினார்கள்.சில நேரங்களில் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் சென்றார்கள். ஸ்பிக், முருகப்பா செட்டியாரின் சைக்கிள் கம்பெனிகள் எல்லாம் தமிழக எல்லைகள் விரிக்க்ப்பட்ட வலைப்பின்னல்கள். மூப்பனார், மன்றாடியார் போன்றவர்கள் கடைசி வரை நிலக்கிழார்களாகவே நின்று போனார்கள்.

இவர்கள் அனைவருமே அடிப்படையில் நிலவுடைமையாளர்களாகவும் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட முதலாளிகளாகவும் இருந்தார்கள். அவர்களின் தொழில்களுக்கு அரசின் அனுமதி மட்டுமே வேண்டும். காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கும்போது பெற்றுக்கொண்ட நிதியைத் தாண்டி, அவர்களையே அரசமைப்பின் உறுப்பினர்களாக்கி ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்தது. இவர்கள் பெரும்பாலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தொடக்கக்கால முதலாளியமும் அரசும் கைகோர்த்து வளர்ந்த விதமும் இப்போதைய வளர்ச்சி அடைந்த முதலாளியத்தின் உறவுநிலையையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.

இப்போது நடக்கும் தகவல் தொழில்நுட்ப முதலாளியம் உற்பத்தி சார்ந்த முதலாளியம் அல்ல, அதில் ஈடுபட்டுள்ள மாறன் சகோதரர்கள், எஸ்.ஆர். எம்,.குழுமம் போன்றன ஒற்றைத் தொழில் செய்யும் குழுமங்களும் அல்ல. அவை ஒவ்வொரு ஆண்டும் அரசின் அனுமதி மற்றும் ஒப்பந்தங்களைப் பெறும் நிலையில் இருக்கும் ஊகவகை வணிகப் பின்னலைக் கொண்ட முதலாளியம். அதனால் எந்த அரசையும் அவர்களால் பகைத்துக் கொள்ள முடியாது. வெளிப்படையாகத் தெரிந்த தொலைக் காட்சிகளின் முதலாளிகள் என்பதாகப் பார்த்து அவர்கள் மீது பலரும் விமரிசனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் காட்டுவது வர்க்கச் சார்பு . தாங்கள் வளர்ந்துவிட்ட முதலாளிகள் மட்டுமே; எங்களுடைய நோக்கம் லாபமீட்டுவது தான் எனக் காட்டிக் கொள்கிறார்கள். கிடைக்கும் லாபத்தைத் தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதில் காட்டும் வேறுபாடுகள் மூலம் அவர்கள் அரசியல் சார்பைக் காட்டியிருக்கக் கூடும். அவையெல்லாம் ரகசியமாக நடப்பன. இதேபோல் தான் மும்பையில் இயங்கும் பெருமுதலாளிகளும் இயங்குகிறார்கள். நேரடியாகக் கட்சி ஆதரவை வெளிப்படுத்தாமல் அரசில் பங்கேற்கிறார்கள்.

ரகசியமாக நடக்கும் இந்தப் பரிவர்த்தனைக்குப் பின்னணியில் தேசிய இன முதலாளிகள் இந்திய முதலாளிகளாக மாறும் ஆசைகள் இருக்கின்றன. அங்கிருந்து பன்னாட்டு முதலாளிகளின் வரிசைக்குத் தாவும் விருப்பமும் இருக்கிறது. தமிழ்த்தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாக ஆகவேண்டாம் என்று தமிழ் அரசுகள் விரும்பாதல்லவா? இந்த மனநிலையைக் கொண்டனவாகவே - அதற்கான அரசுகளாகவே - திமுக தலைமையிலான அரசும் அ இ அதிமுக தலைமையிலான அரசும் அமைகின்றன.

இவ்விரண்டு கட்சிகளின் அரசுகளும் மேலே குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பு/ சாதி முதலாளிகளைத் தாண்டி இடைநிலைச் சாதிகளிலிருந்து/ பிற்பட்ட - மிகப்பிற்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகளை உருவாக்கியிருக்கின்றன. அவர்கள் முறைப் படியான முதலாளிய உறவுகளைப் பின்பற்றாமல் மணல் அள்ளுதல், பாறைகளை உடைத்துக் கள்ளக்கணக்கு எழுதி விற்றல், உள்ளூர்த் தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடித்துச் சுரண்டுதல் போன்றவற்றைக் கைக்கொண்டு வளர்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தேசிய முதலாளிகளாகவும் பன்னாட்டு முதலாளிகளாகவும் ஆகக் கூடிய நெளிவு சுளிவுகள் இன்னும் கைகூடவில்லை. என்றாலும் அதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் அது கைகூடும்.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகள் உருவாக வேண்டும். அதற்கு இன்னும் சில பொதுத்தேர்தல்கள் நடக்க வேண்டும். அவற்றில் இன்னும் கூடுதலாக அவர்கள் ஐக்கியம் காட்ட வேண்டும்.அப்போதுதான் முதலாளியப் புரட்சி இங்கே சாத்தியமாகும். முதலாளியப் புரட்சி முழுமையடையும்போது பொதுவுடைமைப் புரட்சி பற்றிச் சிந்திக்கச் சிலர் எழக்கூடும்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்