தேர்தல் 2019 - IV

 18-04-19/ இது வித்தியாசமான வாக்களிப்பு

இந்தியா/ தமிழகம் மக்களாட்சித் திருவிழாவில் பங்கேற்கப் பழகிவிட்டது என்று சொல்கிறது இந்தப் பக்குவம். வாழ்க மக்களாட்சி முறை.

இப்போது நான் குடியிருக்கும் கட்டபொம்மன் நகர் சமுதாய நலக் கூடத்தில் 2002 முதல் வாக்களித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தேர்தல் பரப்புரையே நடக்கவில்லை. பூத் ஸ்லிப் தருவதற்குக் கூடப் பெரிய கட்சிகளான அ இ அதிமுகவும் திமுகவும் வரவில்லை. தங்கள் கட்சியின் சின்னம் அறிமுகமாகவில்லை என்பதால் அமமுகவினர் மட்டுமே துண்டுப்பிரசுரத்தைத் தந்தார்கள்.

பெரும்பாலும் காலைச் சாப்பாட்டுக்கு முன்பே வாக்களித்துவிடுவோம். அந்த நேரத்தில் அதிகம் கூட்டம் இருக்காது என்பதும் ஒரு காரணம். இன்றும் 7.45 -க்கே போய்விட்டோம். கட்சிக்காரர்கள் கூட்டம் ஒன்றும் அங்கே இல்லை. அங்கங்கே நின்று சிரித்துச் சைகை காட்டும் வேலை எதுவும் இல்லை. சமுதாய நலக் கூடத்தில் 7 வாக்குப் பெட்டிகள். ஏழுக்கும் வரிசைகள் நின்றன. நானும் மனைவியும் வரிசையில் நின்றபோது கட்டட வாசலுக்கு முன்னால் 15 பேர் நின்றார்கள்.நாங்கள் வாசலை நெருங்கியபோது எங்களுக்குப் பின்னால் 25 பேர் இருந்தார்கள். உள்ளே நுழைந்தால் தேவையில்லாமல் அடையாள அட்டைகள் கேட்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் எனது வரிசை எண்ணைச் சொல்லியவுடன் எழுதிச் சீட்டுத்தந்தார்கள். விரலில் மையிட்டார்கள். உள்ளே போய் பொத்தானை அமுக்கிவிட்டுச் சிவப்பு விளக்கு அணைந்ததும் வெளியே வர ஒரு நிமிடம் கூட ஆகவில்லை.

அணிஅணியாகப் பிரச்சாரம், வரிசைவரிசையாகப் பரிசுபொருட்கள், பூத் ஸ்லிப் தரும்போது பணம் எனத் தந்த தேர்தலில்கூட இவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை. உறுப்பினர்கள் யார் எனத் தீர்மானிப்பது நமது கடமை; வாக்களிப்பது நமது உரிமை எனப் புரிந்துகொண்டவர்களாக நின்றார்கள். கட்சிக்காரர்கள் சொல்லி வாக்களிக்கப் போவதில்லை என்று முடிவுசெய்து விட்டதுபோலத் தெரிந்தது. 

 

======================================
 16-04-19
சோதனைகளுக்கு எதிர்வினை ஆதரவுத் திரள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்பது
மூடதேசத்து முட்டாள் ராஜாக்கள் அறியாத உண்மை.
=======================================
16-04-19

எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுத்தாளர்களாக ஆகலாம். அதேபோல் நாடகம், ஓவியம், நடனம் எனப் பல கலைகளில் செயல்பட்ட கலைஞர்களின் வாரிசுகளும் கலைஞர்களாக வெளிப்படலாம். அத்தகைய வெளிப்பாடுகளும் செயல்பாடுகளும் சொந்தங்களுக்கும் சொத்துக்களுக்குமான வாரிசுகளாக இருக்கலாமேயொழிய அவர்களின் எழுத்துகளுக்கும் எழுத்துகளிலும் கலைகளிலும் வெளிப்பட்ட சிந்தனைப்போக்கின் வாரிசுகளாக இருப்பதற்கில்லை.

தேர்தல் அரசியல் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கிவிடுகிறது.

===============================================
 16-04-19
=========
"நெஞ்சே எழு" கலைஞர் தொ.கா.யில்
தி.மு.க. வினருக்காக தி.மு.க.வினரே
நடத்தும் அரசியல் கலந்துரையாடல்.
பார்வையாளர்களும் அவர்கள் தானே.

 16-04-19/கையாளுதலின் வீழ்ச்சி
 
கையாளும் அரசியல்

மக்களாட்சிக்காலத்தில் மன்னராட்சி முறை செயல்படுகிறது எனச் சொல்பவர்கள் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அதனை மறைமுகமாகச் சொல்ல நினைப்பவர்கள் வாரிசு அரசியல் நடக்கிறது எனச் சுட்டுகிறார்கள். இந்தியாவின் மாநிலக்கட்சிகளில்
வாரிசு அரசியலும், குடும்ப அரசியலும் நிலை பெற்றுள்ளன என்பதைப் பேசும் ஊடகங்களும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் தனிநபர்களும் "கையாளும் அரசியல்" பற்றிப் பேசுவதில்லை.

2019 நாடாளுமன்றத்தேர்தலின் போது ராகுல்காந்தி தமிழக அரசியலை 'நாக்பூர்'தீர்மானிக்கக்கூடாது எனச் சொன்னார். ஒன்றிய ஆட்சியை நடத்தும் பாரதிய ஜனதா கட்சியைக் கையாளும் நாக்பூர் குடும்பம் - ராஷ்டீரிய ஸ்வயம் சேவக் குழுமம் - தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ இ அதிமுகவின் இயக்கத்தையும் அதன் தலைமையையும் கையாள நினைக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

பெரும் திரளான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை அல்லது அரசியல் அமைப்பை அதிகாரம் கொண்ட ஒரு குடும்பம் அல்லது வாரிசு தனது நலனுக்காக - குடும்பத்து வாரிசுகளின் நலனுக்காகக் கையாள்கிறார்கள் என்பது மக்களாட்சி முறைக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை மறுக்கமுடியாது. அதே போல் ஒரு குழுவின் ஆலோசனைகளால் - அதிகாரத்தால்- கட்டுப்படுத்தப்படும் அரசியலும் மக்களாட்சி முறைக்கு ஆபத்தானதுதான்; அச்சுறுத்தல் தரக்கூடியதுதான்.

தமிழ்நாட்டின் ஆட்சியை நாக்பூர் தீர்மானிக்கக் கூடாது; தமிழ்நாட்டின் அதிகாரம் தமிழர் ஒருவரின் கையில் இருக்கவேண்டும் எனத் தனது தேர்தல் பரப்புரையில் சொல்லிவிட்டு ராகுல் சென்ற பின்புதான் பாரதிய அரசின் அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தார்கள். நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமெனச் சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் போட்டு அனுப்பிய அரசை நடத்தும் கட்சியின் மேடை அது. எட்டுவழிச் சாலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கேடுவிளைவிக்கும் என வழக்குத் தொடுத்துள்ள கட்சியின் தலைவர்கள் அந்த மேடையில் இருக்கிறார்கள். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு பொருளை அல்லது அமைப்பைக் கையாளுவதைத் திறன் என்ற சொல்லாலும் குறிக்கலாம்; கலை என்ற சொல்லாலும் குறிப்பிடலாம்.

கையாளப்படுவதின் வழியாகக் கருத்துகளும் உணர்வுகளும் உருவாக்கப்படும்போது கலையாக அறியப்படும். கலையாகக் கருதப்படுவதற்குக் காரணமான கையாளுதலுக்கு வெற்றி அல்லது தோல்வி முதன்மையாக எதிர்பார்க்கப் படுவதில்லை. ஆனால் அரசியலிலோ, பொருளியல் துறையிலோ கையாளுதலின் வெளிப்பாட்டைத் திறன் என்றே சொல்வார்கள்.

முதலீட்டையும் கச்சாப்பொருட்களையும் தொழிலாளர்களையும் சரியாகக் கையாளுவதில் வெளிப்படுவது மேலாண்மைத் திறன். மேலாண்மைத் திறனற்ற நிர்வாகியால் ஏற்படுவது நட்டம். நட்டம் ஏற்படப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து மேலாண்மை செய்யும் அதிகாரி அல்லது நிர்வாகக் குழு விலகிக் கொண்டால் வீழ்ச்சியைத் தடுக்க முடியும். பொருளியல் சார்ந்த இந்தப் பருன்மையான நிலையை அப்படியே அரசியலில் செயல்படுத்த முடியாது. காரணம் அரசியல் அதுவும் நிகழ்கால மக்களாட்சி அரசியல் பெரும் முதலீடு கூடிய பொருளியலாகவும் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைக் குவிக்கும் கலையாகவும் இருக்கிறது.

நிகழ்கால மத்திய அரசைக் கையாளும் வேலையைச் செய்து கொண்டிருப்பது ராஷ்ட்ரீய ச்வ்யம் சேவக் என்னும் அமைப்பு. தனது கையாளுதலின் வழியாகவே கடந்த தேர்தலின் வெற்றிக்காக திரு நரேந்திரமோடி என்னும் பிம்பத்தை உருவாக்கிப் பலனையும் அனுபவத்தது. அந்தப் பிம்பம் தொடர்ச்சியான வெற்றியைத் தராது என்ற நிலையை பஞ்சாப், சட்டீஸ்கர்,ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேர்தல் தோல்விகள் உறுதிசெய்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களும்கூட அதையே காட்டுகின்றன. இந்த நிலையில் தனது கையாளும் உத்தியை மாற்ற நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான திட்டமிடல் கூட்டம் தமிழகத்தில் நடக்கப்போவதாகச் செய்திகள் கூறுகின்றன. அச்செய்தி பெரும்பாலும் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அதன் கருத்துருவாக்கிகளில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாறு. அதன் தோற்றம் தொடங்கித் தமிழ்நாட்டுக் கருத்துருவாக்கிகளின் செல்வாக்கைத் தனதாக்கி வளர்ந்தது ஆர்,எஸ்,எஸ்,

தமிழ்நாட்டுக் கருத்துருவாக்கிகள் இந்தியப் பண்பாடு, இந்திய வரலாறு, இந்தியாவின் ஞானம் என்று பேசும்போது எப்போதும் தமிழ்நாட்டின் தனித்துவம் குறித்துக் கண்டுகொள்ள விரும்பாமல் பட்டையைக் கட்டிக் கொண்டு திசைமாறியே யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழ் மொழியும் அதில் உருவாக்கப்பட்டுத் திரண்ட கருத்துகளும் அவற்றை வெளிப்படுத்திய கவிதையியலும் வாழ்க்கை முறையும் இந்தியப் பரப்பில் வேறுபாடுகள் கொண்டவை என்பதை ஏற்க மறுப்பவர்கள். இந்துமதத்தின் உட்பிரிவுகளாகச் சித்திரிக்கப்படும் சைவம் வைணவம் என்னும் சமய வாழ்க்கை முறைகளும்கூட இந்தியச் சைவத்திலிருந்தும் வைணவத்திலிருந்தும் வேறுபாடுகள் கொண்டவை ஏற்க மாட்டார்கள். வைதீக இந்துமதமே இந்தியா முழுக்கப் பண்பாட்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒற்றைச் சக்தி எனப் பேசும் அவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு எதிரான மிகச் சிறுபான்மையினர் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு அது புரிந்தே இருக்கிறது.

மைய அரசில் திரு. நரேந்திர மோடியைக் கையாண்ட ஆர் எஸ் எஸ், அவரின் வழியாகத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியையும் அதன் அரசையும் கையாளுகிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கலாம், வாக்களிக்க இருக்கும் மக்கள் தினந்தோறும் தெருக்களில் தேநீர்க்கடைகளில் பேருந்துப் பயணங்களில் பேசிச் சிரிக்கிறார்கள். கையாளப்படுபவர்களின் இயலாமையைவிடவும் கையாளும் சிறுகூட்டத்தின் திறனைக் கேலியும் பகடியும் செய்யும் எழுத்துகளும் படங்களும் சமூக ஊடகங்களின் தீனியாக இருக்கின்றன.

தமிழக அரசைக் கையாளும் கூட்டத்தின் வெளிப்பாட்டு ஆளுமைகள் தொலைக்காட்சி அலை வரிசைகளில் விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். கடந்தகாலத் தமிழக ஆட்சிகளின் ஊழல்களையும் அதிகார மீறல்களையும் நிர்வாகச்சீர்கேடுகளையும் விரிவாகப் பேசும் திறன்கொண்டவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழக அரசைக் கையாளும் நிலையை ஒத்துக்கொள்ளாமல் விலகலையும் காட்டுகிறார்கள். அந்த விலகலும் சொற்களும் போலியானவை என்பதை ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் உணர்ந்திருந்த போதிலும் அம்பலமாக்கும் கேள்விகளை நேரடியாகக் கேட்பதில்லை. ஆனால் சிலர் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதிலிருந்து பின்வாங்குவதே இல்லை.

இந்தியப்பண்பாடு, இந்திய ஞானம், இந்தியத் தன்னிலை என அவர்கள் நம்பும் கருத்தியலில் உண்மையிலேயே இவர்களுக்கு ஈடுபாடும் ஏற்புடைமையும் இருந்தால், தமிழக அரசை மத்திய அரசின் வழியாக ஆர் எஸ் எஸ் கையாள்வதை ஒத்துக்கொள்ளவே செய்வார்கள். இந்தக் கையாளுகை தோல்வியைத் தரும் என்பதை உணரவும் செய்வார்கள். ஏனென்றால் தமிழக வாக்காளர்கள் மறைமுகமாக அதிகாரம் செய்யும் நபர்களை எந்த நிலையிலும் ஏற்க மாட்டார்கள் என்பது வரலாற்றுண்மை. நிகழ்கால நிரூபணமும் கூட. சத்திரியராகக் காட்டிக்கொள்ளும் நபர்களின் திறனைக்கூட மதிப்பார்கள், ஏமாற்றுக்காரர்களாக அறியப்படும் புத்திசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதில்லை.
வரப்போகும் பொதுத்தேர்தலில் கையாளும்
அரசியலின் வீழ்ச்சியைக் கண்கூடாகப் பார்க்கப்போகிறோம்

 15-04-19/ வேடிக்கையான விளையாட்டுகள்

எனது முகநூல் நட்புப்பட்டியலில் அறிவித்துக் கொண்ட சுயம்சேவக்குகள் பத்துப்பேர் இருப்பார்கள். அறிவித்துக்கொள்ளாத சுயம்சேவக்குகள் 25 பேராவது இருப்பார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கலாம். கடந்த ஒருவாரமாக அறிவித்துக் கொண்ட சேவக்குகள் நிதானமாகவும் நம்பிக்கையோடும் களமாடுகிறார்கள். யாருக்கு ஆதரவு? யாருக்கு எதிர்ப்பு ? என்பதைச் சொல்வதில் தயக்கமும் மயக்கமும் அவர்களுக்கு இல்லை.ஆனால் அறிவித்துக் கொள்ளாத சுயம்சேவக்குகளின் பாடுதான் பெரும்பாடாக இருக்கின்றது.

ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு பொறுப்புத் துறப்பு போட்டு நெளிகிறார்கள். மொழியின் சிடுக்குகளுக்குள் நுழைந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். அத்தாகவும் விசிஷ்டாத்தாகவும் அலையும் மனத்தின் விளையாட்டு ரசிக்கத்தக்கனவாக இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வரும்வரை இந்த விளையாட்டுகள் தொடரும் என்பதை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. கொதிப்பு உயர்ந்துகொண்டே போனால் என்ன ஆகும் என்பதை நினைக்கும் போது இதை விளையாட்டாக நினைக்க முடியவில்லை.

 15-04-19/ அரசியல் சார்பும் வர்க்க நலனும் 

தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சிக் குழுமமும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக் குழுமமும் இப்போதைய தேர்தலில் காட்டும் நடுநிலைப் போக்கு பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் தி.மு.க. ஆதரவு வாக்காளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களை அரசியல் அறிவுகொண்ட பார்வையாளர்களாக நினைத்துக்கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களால் ஏற்க முடியாமல் இருக்கிறது.

இவ்விரு குழுமங்களையும் தேர்தல் காலச் சார்புகொண்டு மட்டும் புரிந்துகொள்ள முடியாது. அவை ஒற்றை அலைவரிசையை நடத்தும் வணிகக் குழுமங்கள் அல்ல. ஊடகத் தொழில் தாண்டி அச்சு ஊடகத் துறையிலும் கல்வி, மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் எனப் பல்வணிகக் குழுமங்கள். வெளியே தெரியாத வணிகத்தொடர்புகள் தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் இருக்கவும் கூடும். அவற்றின் காரணமாகவே நடுநிலை காட்டுகின்றன

வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அரசுகள் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங் களாகவும் மறைமுக வரிச்சலுகை களாகவும் இருந்தன. 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலத்தில் அந்த மனப்போக்கைப் பயன்படுத்திக் கொண்டவர்களாகத் தென்மாவட்டங்களில் டிவிஎஸ், ஆல்கமேசன் குழு,சிம்சன் மற்றும் ஸ்பென்சர் நிறுவனங்களை நடத்திய பிராமண முதலாளிகள் இருந்தனர். அவர்களுக்கு அங்கே நிலங்கள் இருந்தன; உற்பத்திசார்ந்த தொழில்களும் இருந்தன; சென்னையிலும் மதுரை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலும் இருந்தன. பின்னர் இந்தியா முழுவதும் பரவினர். கொங்குப் பகுதியில் நிலச்சுவாந்தார்களாக இருந்த தெலுங்கு முதலாளிகள் தங்கள் உற்பத்திக்காக எல்லை தாண்டாமல் அங்கேயே தங்கினர். , லேவாதேவி, வங்கித் தொழிலில் ஈடுபட்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தங்கள் தொழில் காரணமாக இந்திய முழுவதிலும் பரவினார்கள்.சில நேரங்களில் தென்கிழக்காசியப் பகுதிகளுக்கும் சென்றார்கள். ஸ்பிக், முருகப்பா செட்டியாரின் சைக்கிள் கம்பெனிகள் எல்லாம் தமிழக எல்லைகள் விரிக்க்ப்பட்ட வலைப்பின்னல்கள். மூப்பனார், மன்றாடியார் போன்றவர்கள் கடைசி வரை நிலக்கிழார்களாகவே நின்று போனார்கள்.

இவர்கள் அனைவருமே அடிப்படையில் நிலவுடைமையாளர்களாகவும் உற்பத்திசார்ந்த தொழில்களில் ஈடுபட்ட முதலாளிகளாகவும் இருந்தார்கள். அவர்களின் தொழில்களுக்கு அரசின் அனுமதி மட்டுமே வேண்டும். காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கும்போது பெற்றுக் கொண்ட நிதியைத் தாண்டி, அவர்களையே அரசமைப்பின் உறுப்பினர்களாக்கி ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்தது. இவர்கள் பெரும்பாலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தொடக்கக்கால முதலாளியமும் அரசும் கைகோர்த்து வளர்ந்த விதமும் இப்போதைய வளர்ச்சி அடைந்த முதலாளியத்தின் உறவுநிலையையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.

இப்போது நடக்கும் தகவல் தொழில்நுட்ப முதலாளியம் உற்பத்திசார்ந்த முதலாளியம் அல்ல, அதில் ஈடுபட்டுள்ள மாறன் சகோதரர்கள், எஸ்.ஆர். எம்,.குழுமம் போன்றன ஒற்றைத் தொழில் செய்யும் குழுமங்களும் அல்ல. அவை ஒவ்வொரு ஆண்டும் அரசின் அனுமதி மற்றும் ஒப்பந்தங்களைப் பெறும் நிலையில் இருக்கும் ஊகவகை வணிகப் பின்னலைக் கொண்ட முதலாளியம். அதனால் எந்த அரசையும் அவர்களால் பகைத்துக்கொள்ள முடியாது. வெளிப்படையாகத் தெரிந்த தொலைக் காட்சிகளின் முதலாளிகள் என்பதாகப் பார்த்து அவர்கள் மீது பலரும் விமரிசனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் காட்டுவது வர்க்கச் சார்பு . தாங்கள் வளர்ந்துவிட்ட முதலாளிகள் மட்டுமே; எங்களுடைய நோக்கம் லாபமீட்டுவது தான் எனக் காட்டிக் கொள்கிறார்கள். கிடைக்கும் லாபத்தைத் தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதில் காட்டும் வேறுபாடுகள் மூலம் அவர்கள் அரசியல் சார்பைக் காட்டியிருக்கக் கூடும். அவையெல்லாம் ரகசியமாக நடப்பன. இதேபோல் தான் மும்பையில் இயங்கும் பெருமுதலாளிகளும் இயங்குகிறார்கள். நேரடியாகக் கட்சி ஆதரவை வெளிப்படுத்தாமல் அரசில் பங்கேற்கிறார்கள்.

ரகசியமாக நடக்கும் இந்தப் பரிவர்த்தனைக்குப் பின்னணியில் தேசிய இன முதலாளிகள் இந்திய முதலாளிகளாக மாறும் ஆசைகள் இருக்கின்றன. அங்கிருந்து பன்னாட்டு முதலாளிகளின் வரிசைக்குத் தாவும் விருப்பமும் இருக்கிறது. தமிழ்த்தேசிய முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாக ஆகவேண்டாம் என்று தமிழ் அரசுகள் விரும்பாதல்லவா? இந்த மனநிலையைக் கொண்டனவாகவே - அதற்கான அரசுகளாகவே - திமுக தலைமையிலான அரசும் அ இ அதிமுக தலைமையிலான அரசும் அமைகின்றன.

இவ்விரண்டு கட்சிகளின் அரசுகளும் மேலே குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பு/ சாதி முதலாளிகளைத் தாண்டி இடைநிலைச் சாதிகளிலிருந்து/ பிற்பட்ட - மிகப்பிற்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகளை உருவாக்கியிருக்கின்றன. அவர்கள் முறைப் படியான முதலாளிய உறவுகளைப் பின்பற்றாமல் மணல் அள்ளுதல், பாறைகளை உடைத்துக் கள்ளக்கணக்கு எழுதி விற்றல், உள்ளூர்த் தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடித்துச் சுரண்டுதல் போன்றவற்றைக் கைக்கொண்டு வளர்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தேசிய முதலாளிகளாகவும் பன்னாட்டு முதலாளிகளாகவும் ஆகக் கூடிய நெளிவு சுளிவுகள் இன்னும் கைகூடவில்லை. என்றாலும் அதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் அது கைகூடும்.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து முதலாளிகள் உருவாக வேண்டும். அதற்கு இன்னும் சில பொதுத்தேர்தல்கள் நடக்கவேண்டும். அவற்றில் இன்னும் கூடுதலாக அவர்கள் ஐக்கியம் காட்ட வேண்டும்.அப்போதுதான் முதலாளியப் புரட்சி இங்கே சாத்தியமாகும். முதலாளியப் புரட்சி முழுமையடையும்போது பொதுவுடைமைப் புரட்சி பற்றிச் சிந்திக்கச் சிலர் எழக்கூடும்.


 14-04-19/இரண்டு நாட்கள் இருக்கின்றன

இன்னும். 
அறிமுகச் சின்னங்கள் கொண்ட 
அஇஅதிமுகவும் திமுகவும் 
மூச்சுக்காட்டவே இல்லை.
ஊடகங்களில் அரசியல் பழகாதவர்களுக்கு 
யார் யார் வேட்பாளர்கள் 
என்பதே சொல்லப்படவில்லை.
யார் யார் வேட்பாளர்கள் 
என்பதே சொல்லப்படவில்லை.
யார் யார் வேட்பாளர்கள் 
என்பதே சொல்லப்படவில்லை.
புதிய சின்னம் காட்ட
டார்ச் லைட் ஏந்தி 
ஒரு சைக்கிள் வீரன் 
வருகை தரவில்லை.
முதன்மைத்தெருவழியில் 
பரிசுப் பெட்டிக்குப் 
பின்பாட்டு மட்டும் கேட்கிறது.
பரிசுப் பெட்டிக்குப் 
பின்பாட்டு மட்டும் கேட்கிறது.
பரிசுப் பெட்டிக்குப் 
பின்பாட்டு மட்டும் கேட்கிறது.
மக்கள் ஆட்சி மகத்துவம் 
பேணும் 
சாத்தானின் வருகைக்காகக்
காத்திருக்கின்றன.
குறுக்குத்தெரு வாசிகளின்
விழிமேல் வழி.
பேணும் 
சாத்தானின் வருகைக்காகக்
காத்திருக்கின்றன.
குறுக்குத்தெரு வாசிகளின்
விழிமேல் வழி.
பேணும் 
சாத்தானின் வருகைக்காகக்
காத்திருக்கின்றன.
குறுக்குத்தெரு வாசிகளின்
விழிமேல் வழி.

 12-04-19/உள்வாங்கும் அரசியல் சொல்லாடல்

தேனித் தொகுதியில் திரு ராகுல்காந்தி பேசிய பேச்சைக் கேட்க முடிந்தது. தமிழ்நாட்டில் என்ன பேசவேண்டும் என்பதைக் கச்சிதமாகத் திட்டமிட்டுப் பேசுகிறார் அவர். பல்லின, பல்மொழி, பல்பண்பாட்டு நிலப்பரப்பொன்றைக் கட்டுக்கோப்பாகவும் சுதந்திர மனநிலையுடனும் வழிநடத்தும் ஒருவரின் உரையாக இருக்கிறது. ஒற்றை இந்தியா என்றுசொல்லிப் பல இந்தியாக்களை உருவாக்கும் ஆபத்தை உணர்ந்த பேச்சு.தேசியப் பண்பாட்டை உருவாக்கும் நோக்கம் எனச் சொல்லி ஒருமதம், ஒருமொழி, ஒரேமாதிரியான கல்வி என நகரும் ஆபத்திற்கெதிரான உரை அது. அனைவரையும் உள்வாங்கும் அரசியல் சொல்லாடலின் வெளிப்பாடு
திரு ராகுலின் தலைமையில் ஓர் அரசாங்கம் அமையும்போது இந்தப் பேச்சிலிருந்து திசை விலகாமல் தமிழ்நாட்டிற்கான உரிமை களையும் அதிகாரப்பங்கீடுகளையும் அவரே வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இப்படியான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். அப்படி விலக நேர்ந்தால் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 39 உறுப்பினர்களும் அவரைக் கேள்வி கேட்க வேண்டும்.ஆதரவளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அங்கே கட்சி வேறுபாடுகள் காட்டக் கூடாது. அதுதான் இந்தியா என்னும் ஒன்றியத்தைத் தக்கவைக்க உதவும்.

12-04-19/ இது தனிநபர் வீழ்ச்சி மட்டுமல்ல


மூத்த பத்திரிகையாளர்; நல்ல சிறுகதைகள் எழுதியவர் என்ற அடையாளத்தோடு நடுநிலையாகச் சிந்திப்பவர் என்ற அடையாளத்தைப் பேணிவந்த மாலன், நேற்று எழுதிய ஒரு பதிவில் தனது பா.ஜ.க. ஆதரவை அப்பட்டமாகக் காட்டிவிட்டார் என அவர்மீது மரியாதைகொண்ட பலரும் புலம்பியிருந்தார்கள். நான் அவரது பதிவை நேரடியாக வாசிக்கவில்லை.
அவரால் பட்டியல் நீக்கம் செய்யப்பட்டவன் நான். எங்கள் பல்கலைக் கழகத்தில் நான் நடத்திய கருத்தரங்கம் ஒன்றைக் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்குச் சொன்ன பதிலை முன்னிட்டு என்னை நட்பு நீக்கம் செய்தார். அவர் நடத்தும் நிகழ்வுகளும் எழுதும் இலக்கியங்களும் அர்த்தம் கொண்டவை; தீவிரமானவை; மற்றவர்கள் செய்வன அர்த்தமற்றவை என்பதே அவரது வாதமாக இருந்தது. இது நடந்தது நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால். என்றாலும் அதற்குப் பின்னால் அவரும் நானும் சில இலக்கிய/ பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறோம்; புன்னகை செய்திருக்கிறோம். நலம் விசாரிக்கவே செய்திருக்கிறோம்.


மோடி அரசின் ஆதரவு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பைக் கொண்டு திரும்பவும் அவரே ஆட்சிக்கு வருவார். அதனால் அதிகாரத்துக்கு வருபவரை - வெல்லப்போகின்றவரை ஆதரிப்பதே புத்திசாலித்தனம். தோற்றவரை ஆதரிப்பதின் மூலம் எதிர்ப்பரசியல் தான் செய்யமுடியும். அதனால் தமிழகத்திற்கு நன்மை இல்லை; தீமையே விளையும் என்று மாலன் தனது ஆதரவைக் காட்டுவதும், தன்னையொத்தவர்களின் வாக்குத்திரட்சியை மடைமாற்றம் செய்வதும் ஆச்சரியமானதல்ல. அவர் எப்போதும் சார்புநிலை கொண்டவர்தான். அவர் மட்டுமல்ல இங்கே யாரும் சார்புநிலை இல்லாமல் இருக்க இயலாது என்பதும் உண்மை. ஆனால் ஒருவரின் பொதுவெளிச் சார்பு அதிகாரத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டதாக இருக்கும்போது அச்சார்பு ஆபத்தானது என்பது உறுதியாகும்.

மாலன் எழுதிய புனைவுகளில் இருக்கும் தன்னிலை பெரும்பாலும் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானமும் உருவாக்கிய தன்னிலை. அதே நேரத்தில் அவரது பெயர் பொறித்து வந்த கணையாழி, தினமணி, சன் நெட்வொர்க், புதிய தலைமுறை என பணியிடங்களில் வெளிப்பட்ட தன்னிலை வேறானது. அந்நிறுவன விதிகளையும் அரசியல் நோக்கங்களையும் மறைமுகச் சார்புகளையும் அறிந்து நிறைவேற்றும் பணியிடப் பொறுப்பை உணர்ந்தது. சாகித்திய அகாடெமி போன்ற அரசு சார்ந்த இலக்கிய, பண்பாட்டு நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் போன்றவற்றிற்கு நேர்மையான வழிகளையே பின்பற்றினார் என்று நம்பவேண்டியதில்லை. அவர் எழுதியதின் காரணமாகவே உறுப்பினர் ஆனார் என்றால் மைலாப்பூரில் இருக்கும் அவரது நண்பர்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அவருக்குக் கிடைக்கும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களும் கூட அப்படியான கேள்விக்குட் பட்டவையே. எல்லா நேரங்களிலும் எல்லா அமைப்புகளிலும் அதிகார மையத்தை - அதன் தலைமையை அனுசரித்துப் போகும் வாய்ப்பையே கைக்கொண்டவர் அவர். இந்த மனநிலை நடுத்தரவர்க்க - குமாஸ்தா மனநிலை. மாலன் அப்படித்தான் இருக்கிறார்; வெளிப்படுகிறார்.

அவரது வாழ்க்கைச் சூழல் அப்படித்தான் கட்டமைக்கிறது. ஒரு மாதச் சம்பளக்காரர் வீட்டில் ஒருவராகவும் வேலைபார்க்கும் இடத்தில் இன்னொருவராகவும் இருக்கவேண்டிய- நடிக்கவேண்டிய பாவனைகள் உண்டு. அதனைச் செய்யும்படி வலியுறுத்துவது அமைப்பின் விதிகள். வீட்டில் ஆணாதிக்க வாதியாகவும் மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போகும் ஒருவர் அதே மனநிலையை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் காட்ட முடியாது. அப்படிக் காட்டினால் தண்டனை கிடைக்கும். இந்தியாவில் ஒவ்வொருவரும் அந்தரங்க வெளியில் ஒருவராகவும் பொதுவெளியில் இன்னொருவராகவும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இம்மனநிலைக்கு இங்கே படித்துச் சூதும் வாதும் செய்யும் ஒவ்வொருவரும் விலக்கானவர்கள் அல்ல. அதனால் எந்த அமைப்பிலும் இணைந்து வேலைசெய்ய மாட்டேன் என்று தீவிர எழுத்தாளர்கள் தான் தோன்றியாக அலைகின்றார்கள். அமைப்புகளின் விதிகளுக்கு உடன்படாத கலகக்காரர்களாக - அனார்க்கிஸ்டுகளாக இருக்கிறார்கள். சித்தர் மரபும் தனிப்பாடல்கள் பாடிய காளமேகம் போன்ற ஒன்றிரண்டு புலவர்களும் கலகமனத்தை எழுதிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நவீனத்துவம் நுழைந்தபின்பு பாரதியிடமும் பிரமிளிடமும் ஜி.நாகராஜனிடமும், விக்கிரமாதித்தியனிடமும் ஓர் அலைவு மனத்தைக் காண்கிறோம். அமைப்பில் செயல்படுவதில் ஆர்வமற்றவர்களாய் - செயல்பட நேர்ந்தாலும் அதன் நடைமுறைகளுக்கு ஒத்துப் போகும் விருப்பம் இல்லாதவர்களாய் வெளியேறியிருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளாக இப்போது எந்த எழுத்தாளரையும் சுட்டிக்காட்ட முடியாது. சித்தர்களின் மரபில் சொல்லத்தக்க நவீன எழுத்தாளன் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையல்ல. ஏனென்றால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் பலமான அமைப்புகளாகக் குடும்பமும் சாதியும் இருக்கின்றன.

இங்கே ஒருவரின் அந்தரங்க வெளியைத் தீர்மானிப்பதில் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானங்களும் முக்கியப் பங்காற்று கின்றன.இவ்விரண்டும் நம்பிக்கைகளின் மேல் இயங்கும் அமைப்புகள். அதனை மீறினால் தண்டனைகள் கிடைக்கும் என்றில்லை. ஆனால் பொதுவெளி நடவடிக்கைகளை அவர் பணியாற்றும் அமைப்பின் சட்டவிதிகள் தீர்மானிக்கின்றன. அதிலிருந்து மீறினால் தண்டனை கிடைக்கும் வாய்ப்புண்டு.

இங்கே ஒருவரின் அந்தரங்க வெளியைத் தீர்மானிப்பதில் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானங்களும் முக்கியப் பங்காற்று கின்றன.இவ்விரண்டும் நம்பிக்கைகளின் மேல் இயங்கும் அமைப்புகள். அதனை மீறினால் தண்டனைகள் கிடைக்கும் என்றில்லை. ஆனால் பொதுவெளி நடவடிக்கைகளை அவர் பணியாற்றும் அமைப்பின் சட்டவிதிகள் தீர்மானிக்கின்றன. அதிலிருந்து மீறினால் தண்டனை கிடைக்கும் வாய்ப்புண்டு.

இங்கே ஒருவரின் அந்தரங்க வெளியைத் தீர்மானிப்பதில் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானங்களும் முக்கியப் பங்காற்று கின்றன.இவ்விரண்டும் நம்பிக்கைகளின் மேல் இயங்கும் அமைப்புகள். அதனை மீறினால் தண்டனைகள் கிடைக்கும் என்றில்லை. ஆனால் பொதுவெளி நடவடிக்கைகளை அவர் பணியாற்றும் அமைப்பின் சட்டவிதிகள் தீர்மானிக்கின்றன. அதிலிருந்து மீறினால் தண்டனை கிடைக்கும் வாய்ப்புண்டு.

இந்தத் தேர்தல் ஒவ்வொருவரையும் சாதிக்குள் சிந்திப்பவராகக் காட்டிவிட்டது. ரகசியங்களை வெளிப்படையாக்கிவிட்டது.எழுத்தாளர்கள் - நவீனத்துவத்தை உள்வாங்கிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் சாதியாகவே வெளிப் படுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பிராமணர்களை- எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் அறிவுஜீவிகளாகவும் வேடம் கட்டிய பிராமணர்கள் ஒவ்வொருவரையும் அதைத் தாண்டிச் சிந்திக்கவிடாமல் குறுக்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் - மோடியின் அரசாங்கம் - பிராமணியத்தைக் காக்கும் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனால் அதனைக் காக்கும் வேலையும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்திய அரசியல் சட்டவிதிகள் எல்லாவற்றையும் மீறியதின் விளைவாகத் தொடரும் மாநில அரசையும் அவர்கள் ஏற்கிறார்கள். ஊழல் தான் முதன்மைப் பிரச்சினை; கட்சி அரசியலின் தலையீடுகள் தான் அரசு அமைப்புகளின் வீழ்ச்சிக்குக்காரணம் எனச் சொல்லிவந்த பிராமணர்களும் பிராமணிய அறிவு வர்க்கமும் இப்போதைய அரசைக் கேள்வி கேட்காமல் நழுவிக்கொண்டே போகிறது.
பழைய கணையாழி எழுத்தாளர்களாகவும் நவீன நாடகத்தோடு தொடர்பு கொண்டிருந்த அறிவு வர்க்கமாகவும் இருந்த பலரும் முகநூலில் பாரதிய ஜனதாவையும் அதன் தமிழ்நாட்டு முகமான அ இ அதிமுகவையும் வெளிப்படையாக ஆதரிக்கும் நபர்களாக வலம் வருகிறார்கள். வாக்களிப்பது ரகசியமான வினை என்னும் அடிப்படையைக் கூடக் கைவிட்டுவிட்டு நான் இவரை ஆதரிக்கிறேன் என்று எழுதுகிறார்கள்.

இந்த வீழ்ச்சி தனிநபர் வீழ்ச்சி அல்ல. ஓர் அறிவியக்கத்தின் வீழ்ச்சி.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?