வாழ்க வாழ்க: திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளும் சிற்றுரு நகர்வுகளும்

நம்கால அரசியல் நடவடிக்கைகளின் உச்சமாகத் திகழுவது தேர்தல் பரப்புரைகள். கட்சித்தலைமை கலந்துகொள்ளும்  பரப்புரை ஒன்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை வாசிப்பவர்களின் முன் விரிக்கும் எழுத்துப்புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கியிருக்கிறது இமையத்தின் இந்தப் புனைகதை.  சின்னக் கண்டியாங்குப்பத்துப் பெண்கள் விருத்தாசலம் நகரின் புறநகர் பகுதியான மணலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று பேசி அழைத்துச் செல்லப்படும்போது உருவாகும் கூட்டு மனநிலையில் தொடங்கி,  கூட்ட மைதானத்தில் கிடைக்கும் துயரம், கொண்டாட்டம், அவமானம், குற்றவுணர்வு, அச்சம் எனப்பல்வேறு உணர்வுகளின் அடுக்குகளும், சந்திக்கும் அவலங்களும் ஆவலாதிகளும் அவதானங்களும் விவரிப்புகளாகவும் உரையாடல்களாகவும் காட்சிப்படுத்தல்களாகவும் எழுதப் பெற்றுள்ளன.

சமகால அரசியல் அமைப்பை – அவற்றின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் கட்சிகளின் கொள்கை மற்றும் செயல்திறன் என்பனக் காணாமல் ஆக்கப்பட்டுக் குவிக்கப்பட்ட பணம் ஆற்றும் வினைகளும், பணத்தைக் கையாளும் கட்சிப் பொறுப்பாளர்களும், பங்குபெறும்  தொண்டர்களும், கூலியைப் பெற்றுக் கொண்டு பார்வையாளர்களாகவும், வாக்களிப்பவர்களாகவும் இருக்கும் பொதுமக்களும்  என ஒவ்வொன்றையும் - ஒவ்வொருவரின் ஈடுபாடும் பங்களிப்பும் என்னவகையான மனநிலையுடன் இருக்கின்றன என்பதை மிகையில்லாத எழுத்துமுறையில் எழுதிக் காட்டிய புனைவொன்றை வாழ்க. வாழ்க. என்ற தலைப்பில் தந்துள்ளார் இமையம்.  

புனைவின் இயங்குதளம்

தமிழக உழைப்பாளர் முன்னேற்றக் கழகம் எனப்பெயரிடப்பெற்றுள்ள ஆளுங்கட்சியின் – அதன் தலைவியின் ஏமாற்று, ஊழல், சொத்துச்சேர்ப்பு, ஆடம்பரம், திமிர்த்தனம் என எல்லாவற்றையும் அறிந்திருக்கும் மக்கள் திரள், அவரது உடலின் நிறத்தின் மீதும், உடல் மொழி வெளிப்படுத்தும் உறுதிப்பாட்டின் மீதும், உரத்த குரல்மூலம் மக்கள் பக்கம் நிற்கும் தலைவியாகவும், எதிர்க்கட்சியினரின் பதவி ஆசையையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளைத்தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாக்கும் அர்ப்பணிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் முன்னிறுத்தப்படுவதை அப்படியே ஏற்கிறார்கள் அல்லது  ஏற்பு மனநிலைக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் கூற்றாக எழுதிக்காட்டாமல் மக்களின் உரையாடல்கள் வழியாகவே முன்வைப்பதின் மூலம் தன்னைக் கதைக்குள்ளிலிருந்து விலக்கிக் கொள்கிறார்.

பாத்திரங்களைப் பேசவிட்டுத் தான் ஒதுங்கிக் கொள்வதைத் தாண்டி  ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் எதிர்க்கட்சியின் -உலகத்தமிழர் முன்னேற்றக்கழகம்-   கிளைக்கழகம் முதல் தலைமைப் பொறுப்புவரை நிலவும் வாரிசு வழி அதிகாரத்தையும், அதிகாரம் கிடைத்தால் அதுவும் இதுபோலவே செயல்படும் என்ற பார்வையையும் முன்வைக்கிறார். அவ்விரு கட்சிகளைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் செயல்படும் உதிரி அமைப்புகளான வட்டாரக்கட்சிகள், சாதி அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் என ஒவ்வொன்றின் அமைப்புத்தன்மையையும், பணத்தை முதன்மையாக வைத்து அதிகாரத்தை நோக்கி நகர்வதற்குக் கையாளும் தனிநபர் சாகசங்களையும் விமரிசன நடப்பின் வழியாக எழுதிக்காட்டும் இமையம், அறியப்பட்ட தனது கட்சிச்சார்பைக் கவனமாகத் தவிர்த்துள்ளார்.

கிளைக்கழகச்செயலாளர், ஒன்றியப்பிரதிநிதி, மாவட்டப்பிரதிநிதி என மூன்று பதவிகளையும் ஒருசேர வைத்திருக்கும் சின்னக்கண்டியாங்குப்பத்து வெங்கடேசப் பெருமாள் என்ற கட்சிக்காரனின் கடந்த கால வறுமை வாழ்க்கையையும்,  நிகழ்கால ஆடம்பர வாழ்க்கையையும் விவாதிக்கும் பகுதியில் ஆளுங்கட்சியின் – அதன் கண்காணிப்பில் இருக்கும் அரசமைப்புகளின் செயல்பாடுகளையும், அவற்றிற்கு ஒதுக்கப்படும் மக்களின் வரிப்பணம் திசைமாறிச் செல்வதையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அறிந்தே உள்ளனர் என்பதைச் சொல்கிறார். தலைமைகளுக்குக் கட்டுப்படுதல் என்ற பேரில் நடக்கும் தன்னையும் தன் குடும்பத்தையும் பொருளாதார நிலையில் உயர்த்திக்கொள்ளும் நபர்களின் அடிமைத்தனத்தையும் இயல்பாகப் பேசும் உரையாடல்களை எழுதும்  இமையம், அதற்கிணையாகவே எதிர்க்கட்சியின் செயல்பாடுகளையும் வெங்கடேசப்பெருமாளைக் கொண்டே – அவனது சொற்களாலேயே விமரிசிக்கும்படியாகவும் எழுதுவதன் மூலம் தன்னுடைய இடத்தை மறைத்து ஒதுங்கிக் கொள்கிறார்.   

தேர்தல் அரசியலில் பெருங்கட்சிகளின் அதிகாரப்போட்டியில் -குறிப்பாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளால் தமிழக அரசியலின் சீரழிவுக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பேரியல் அரசியலைப் பேசுவதுபோலப் புனைகதையின் பல பகுதிகளை எழுதிச் செல்வதை மட்டுமே செய்யவில்லை இமையம். அவற்றிற்கிணையாகவே அப்பாவி மனிதர்களின் அன்றாட வேதனைகளை விவரிக்கும் நுண்ணரசியல் காட்சிகளையும் அடுத்தடுத்தப் பகுதிகளாக அடுக்குகிறார். எந்தக் கேள்விகளுமற்று, ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று சொல்லிக் வெங்கடேசப்பெருமாள் கூப்பிட்டவுடன் கிளம்பும் கண்ணகி, தனது பேரனின் ஆஸ்பத்திரிச் செலவுக்குப் பணம் வேண்டுமென்பதற்காகக் கிளம்பிய ஆண்டாள் என்ற இரண்டு பாத்திரங்களின் உரையாடல், மனவோட்டம், காட்சிப்படுத்துதல் வழியாக தமிழகத்துப் பொதுத்திரள் ஒவ்வொன்றின் தன்னிலைக்குள்ளும் தேர்தல் அரசியல் உருவாக்கியிருக்கும் சீரழிவுச் சிக்கலையும் எழுதிக்காட்டுகிறார்.

பெயரிடப்பெற்றுள்ள இவ்விருவரும் தங்களுக்குள்ளும், கூட்டத்திற்கு வந்திருக்கும் மற்ற பெண்களோடும் நடத்துகிற உரையாடல்கள், வெங்கடேசப்பெருமாளின் அரசியல் வளர்ச்சியை – அவனது மனைவியின் பகட்டு வாழ்க்கையை, எல்லாவற்றையும் மழுப்பிக்கொண்டு தன்னுடைய காரியத்தில் குறியாக இருந்து பணம் பண்ணுவதையும் பேசி, கோபமும் எரிச்சலும் அடைந்தாலும்,  தன்னுடைய குடும்பத்து ஆண்களில் ஒருவரும் அப்படியொரு அரசியல்வாதியாக ஆகவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதையும் முன்வைக்கிறார்.சொர்ணம் என்பவள், தன்னுடைய மூன்று பிள்ளைகளின் ஒருவன் ‘உழைக்கும் வர்க்கம்’ என்று சாதிக்கட்சியிலும் ஒருத்தன்  ‘சாமி இல்லை’ என்கிற கட்சியிலும், இன்னொருத்தன்  ‘தேர்தலைப் புறக்கணிப்போம்’ கட்சியிலும் சேர்ந்து வீணாய்ப்போனார்கள் என்று வருந்துகிறாள். அவளது மனநிலை என்பது ஒருத்தியின் மனநிலை அல்ல. பெரும்பாலான பெண்களின் மனநிலை அதுதான்.

ஆளுங்கட்சியின் ஆதரவாளராகவோ, உறுப்பினராகவோ இல்லாத மக்கள் திரள், கிடைக்கும் ஒருநாள் கூலிக்காகவே மைதானத்தில் திரட்டப்பட்டு கட்சிக்கரை வேட்டி அல்லது சேலையைக் கட்டிக்கொள்கிறவர்களாகவும், கொடி, பதாகை, தொப்பி என அணிவித்துக்கொண்டு கட்சிக்காரர்களாக மாறுகிறார்கள் என்பதில் தொடங்கி, ஒவ்வொரு வட்டாரத்திலும் பெரும்பான்மை – ஆதிக்கசாதிகள் ஒவ்வொரு கட்சியிலும் தங்கள் சாதிக்காரர்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளும் உள் அரசியலையும் எழுதிக்காட்டும் இமையம், பணமும் பதவி ஆசையும்   தேர்தல் அரசியலை இயக்கும் ஆகப்பெரும் சக்திகள் என்னும் பேரரசியலின் மையத்தைப் பேசுவதற்காக உருவாக்கப்பெற்ற வெங்கடேசப்பெருமாள் என்ற பாத்திரத்தைப்  பற்றிய பார்வையாக- அவனைப்பற்றிய குற்றச்சாட்டு மற்றும் அங்கதத்தொனி வெளிப்படும் விதமான மக்களின் பேச்சின் வழியாகத் தேர்தல் அரசியலில் பணம் விளையாடுவதை முன்வைக்கிறார்.

 “மண்ணில கொட்டுறாப்ல எதுக்கு இம்மாப் பணத்தையும் செலவாக்குறாங்க”

“திலிப்பு கோடிகோடியா எடுக்கத்தான்” என்று சொன்ன கண்ணகி நக்கலாகச் சிரித்தாள். மேடையையும், தனக்கு முன்னாலுள்ள கூட்ட த்தையும் பார்த்துக்கொண்டே, “கோடிகோடியாக் கொட்டுறாங்க. கோடிகோடியா அள்ளுறாங்க. அதப் பத்தி நம்பளுக்கென்ன, நாம்ப கூலிக்குத்தான வந்து குந்தியிருக்கம்?” என்று கேட்டாள்.

“இந்தக் கட்சியிலதான் இப்படி செலவாக்குறாங்களா? மித்த கட்சியிலயும் இப்படித்தானா?” என்று ஆண்டாள் கேட்டாள்.

“ எல்லாக் கட்சியிலயும் எலக்‌ஷனுக்கு எலக்‌ஷன் இப்படித்தான் பணத்தக் கொட்டுறாங்க” என்றாள் கண்ணகி. (28)

விருத்தாசலம் போன்ற ஒரு நகரத்தில் நடக்கும் பிரமாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு ஐம்பது முதல் அறுபது கோடிவரை செலவழிக்கும் நிலையைக் குறித்துப் பேசும் அதே பெண்களின் உரையாடல்களே, தொடரும் சாதி ஆதிக்கம், பெண் உடல்களைப் பற்றிய கேவலமான   பார்வை, உரிமையை நிலைநிறுத்த நினைக்கும் புதிய எழுச்சி போன்றவற்றையும் பேச்சாக்குகின்றன.  தலைவியின் வருகைக்கான  காத்திருப்பு என்னும் பெருநிகழ்வுக்குள் நடக்கும் குறுநிகழ்வுகள் வழியாகவும், அந்நிகழ்வுகளுக்குள் பங்கேற்கும் உதிரியான பாத்திரங்கள் வழியாகவும் இமையம் எல்லாவகையான நுண் அரசியலையும் பேசுகிறார்.மக்கள் வாழும் ஊரில் சேரி, ஊர் எனப் பிறந்து கிடக்கும் நிலையைப் பிரச்சார மைதானத்திலும் நிலைநாட்ட முயலும் சாதி ஆதிக்கப் போக்கின் காட்சிகளும், அதனை எதிர்த்து ‘இது அதற்கு இடமளிக்காத புதிய இடம்’ என எதிர்ப்புக்குரல் எழுப்பப்படுவதும் கதைக்குள் பதிவாகியுள்ளது.

உரையாடல்களின் எளிமை

எழுத்தாளர் இமையத்தின் எழுத்துகளின் மிகப்பெரிய பலம் அவரது கதாபாத்திரங்களின் உரையாடல் மொழிதான். பேச்சுமொழியின் அதிகப்படியான சாத்தியங்களை வெளிப்படுத்தும் சொலவடைகள், கிராமிய மரபுத்தொடர்கள், இடக்கரடக்கல்கள், எழுத்துமொழியில் எழுதத்தயங்கும் கிளவிகள் எனப்பரப்பிக்காட்டுவதன்மூலம் புனைவின் போக்கையும், நிகழ்வுகளையும் நடப்பியலின் அருகில் நிறுத்திவிடுவார். இந்தப் புனைகதையிலும் அதற்குக் குறைவே இல்லை.  

 “எந்திரி.”

 “இந்த எத்தவுட்டு என்னெ எந்திரிக்க சொல்றதுக்கு நீ யாரு?

 “நீ என்ன சாதி; நாங்க என்ன சாதி? எங்ககூட வந்து நீ ஒக்காரலாமா? அறிவு வேணாமா?”

 “இது கட்சிக்கூட்டம். யாரு வேணுமின்னாலும் எங்க வேணுமின்னாலும் ஒக்காரலாம். மொதல்ல ஓட்டமா ஓடியாந்து நான் தான் இந்த சேரப் புடிச்சி ஒக்காந்தன் தெரியுமா?”

  “புடிச்சா என்ன? இப்ப எந்திரிச்சுப் போ”

 “முடியாது. ஒன்னால ஆனதப்பாரு” என்று நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண் தெனாவட்டாகப் பதில் சொன்னால். (பக்.34-35)

 “ நீ ஊரு இல்ல. பறத்தெரு”

 “நானும் பவழங்குடிதான்”

“ நீ பவழங்குடியா இருந்தாலும் நீ ஊருல்ல; பறத்தெரு”

 “ அப்ப பவழங்குடிங்கிறது என்ன?”

“எங்க ஊரு”

“ அப்ப நானு”

“ பவழங்குடியா இருந்தாலும் நீ பறத்தெரு. ஊரு வேறெ. பறத்தெரு வேறெ” என்று அழுத்தம் திருத்தமாகக் குள்ளமாக இருந்த பெண் சொன்னாள்.(37)

சாதி இருப்பை உறுதிசெய்யும் ஊரிலிருந்து வேறுபட்டது மக்களாட்சி முறையின் தேர்தல் களம் என்ற நகர்வைக் காட்டும் இந்த இடம் போலவே, பெண்களின் உடலைப் பற்றிய ஆண்களின் பார்வையையும், பெண்களுக்குத் தேவையான அடிப்படைகள் எதையும் புரிந்துகொள்ளாத ஆண்களின் மனோநிலையை முன்வைக்கும் போக்கையும் கூட உரையாடல்கள் வழியாகவே முன்வைக்கிறார். 

“உனக்கு ஊர்ப்பட்ட வாய்தாண்டி” என்று சொன்னதோடு நிற்காமல் செல்லமாக க் கண்ணகியின் தோளில் தட்டினாள் ஆண்டாள்.

“அங்க ஆம்பளங்க இருக்கிற பக்கத்தப்பாரன். எல்லாப்பயலுவுளும் செல்போன்ல படம் எடுக்கிறத. புள்ளங்க ஆடுதறயா படம் எடுக்கிறானுவங்கிற? ஆடுற புள்ளங்களோட முல எப்படி இருக்குது, மூஞ்சி எப்பிடி இருக்குதுன்னு பாக்கத்தானே படம் எடுக்கிறானுவ” (41)

“வவுத்துக்காகத்தான் அந்தப் புள்ளங்க ஆடுதுவோ. நாம்பளும் வவுத்துப்பாட்டுக்காகத் தான் வேகாத வெயில்ல வந்து இம்மாம் பெரியக் கூட்டத்துக்கு நடுவில குந்தியிருக்கம்” என்று சொன்ன கண்ணகி, ஆண்கள் இருந்த பகுதியில் யாரையோ தேடுவது போலப் பார்த்தாள்.

“யாருக்கு என்ன தலையெழுத்தோ அதச் செஞ்சித்தான ஆவணும்? அனுபவிச்சித்தான ஆவணும்? என்று அடங்கின குரலில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது போல் ஆண்டாள் சொன்னாள். (43)

கூட்டத்திற்கு அழைத்துச் செல்லும்போது தலைவியின் வருகையாகச் சொல்லும் நேரம் கடந்துவிடும் நிலையில் ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு. குடிதண்ணீர், சாப்பாடு என்ற சிக்கல்களையெல்லாம் விட முதன்மையானது கழிவறைப்பிரச்சினைகள். சாப்பாடும் தண்ணீரும் கூட ஏற்பாட்டாளர்களால் தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் கழிவறைப் பிரச்சினைக்கு வழியே இருக்காது. அதைப் பெண்கள் சமாளிக்கும் காட்சிகளை  இப்படி எழுதுகிறார்.

“என்னாச்சி” என்று கண்ணகி கேட்டாள்.

“நீர் சுளுக்கு உசுரு போவது?

“ எனக்கு ஒரு மணி நேரமா அதே தொல்லைதான். நெருப்புக் கட்டிய உள்ளார வச்சிட்ட மாதிரி காந்துது.” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியை விட்டு எழுந்து சொர்ணம் உட்கார்ந்திருந்த மாதிரி கண்ணகியும் தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

சொர்ணம், கண்ணகி மாதிரி வரிசைக்குப் பத்துப்பெண்களாவது புடவையைப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.(89-90).

கூட்டத்தில் வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டுப் போகப்போகும் தலைவியின் அடையாளங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நடவடிக்கைகளோடு பொருந்திப்போவனவாகவே எழுதப்பெற்றுள்ளன.

நிகழ்காலத் தமிழகத்தின் மையநீரோட்ட அரசியல் நடவடிக்கையாக இருப்பது வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளே. அதன் வெளிப்பாடாக இருப்பன பரப்புரைக்காட்சிகள். வீடுவீடாகச் சென்று முகங்காட்டிப் பேசுதல்,  சுவரெழுத்துகள், வாகன ஊர்வலங்கள். தெருமுனைக்கூட்டங்கள் எனப் பலநிலைப் பரப்புரைகளைப் பின்னுக்குத்தள்ளிப் பேருருக்காட்சிகளாக மாற்றிய ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. தினசரி தனது சென்னை வீட்டிலிருந்து ஹெலிகாப்டர் வழியாகப் பறந்துவந்து கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் காட்சி தரும் பிம்பமாக இருந்து மறைந்தவர் அவர். அவரது இயல்புக்கேற்ப வடிவமைக்கப்பெற்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளே இப்பேருருக் காட்சிகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தன என்றால் மிகையில்லை.

அன்றையக் கூட்டத்திற்கு தலைவி வருவதாகச் சொன்ன நேரம் காலை பத்திலிருந்து பத்தரை. ஆனால் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து காத்திருக்கிறார்கள். பேசிக்கொண்டும் ரசித்துக்கொண்டும் எரிச்சலோடும் வேடிக்கையோடும் வேதனைகளோடும் காத்திருக்கிறார்கள். சாமுவேல் பெக்கட்டின் கோதாவுக்குக் காத்திருத்தல் நாடகத்தில் வர இருக்கும் கோதாவுக்கு – கடவுளுக்குக் காத்திருப்பதைப் போலக் காத்திருக்கிறார்கள். இடையில் பெண்ணின் நகையொன்று காணாமல் போகிறது; இன்னொரு பெண்ணின் மணிபர்ஸ் திருட்டுப்போகிறது; இன்னொரு பெண்ணின் 100 ரூபாய் செருப்பு அறுந்து போகிறது; ஆண்களுக்குச் சாராயம் கிடைக்கிறது. பிரியாணி என்ற பெயரில் குஸ்கா கிடைக்கிறது; தலைக்கு இரண்டு பாக்கெட் குடிநீர் தரப்படுகிறது வெயில் தாங்காமல் அங்கங்கே மயங்கிவிழுகிறார்கள்; அவையெல்லாம் வெறும் தகவல்கள் தான். அதிலிருந்து திசைதிருப்ப இளம்பெண்கள் ஆட்டமும் பாட்டும் உண்டு. இடையிடையே தலைவி பேசிய பேச்சுகளும் ஒளிபரப்பாகக் காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றுக்கும் பிடிமானத்திற்குமான காரணங்களும் சொல்லப்படுகின்றன.

 “பணம் தந்தாலும், பதவி தந்தாலும் நாட்டுல உள்ள ஆம்பளப் பய எல்லாரையும் கையக்கட்டி கால்ல விழ வச்சிட்டாங்கல்ல. அது ஒண்ணு தான் அந்தப் பொம்பளகிட்ட எனக்குப் புடிக்கும். அந்த ஒண்ணுக்காகத்தான் நான் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுறன்” என்று கர்வத்துடன் கண்ணகி சொல்கிறாள். இன்னொரு பெண் அவரது உடல் நிறம், பேசும் தொனி ஆகியவற்றைக் குறித்து, ‘அதிசயப்பொறப்பு’ என்று பாராட்டுகிறாள்.

தாமதமாக வந்தாலும் அவரது வருகை கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கிறது. அவர் வரும் வரை இருந்த அலுப்பெல்லாம் அவரைப் பார்த்தவுடன் எழுப்பும் வாழ்க வாழ்க கோஷத்தில் கரைந்து போகும் மாயத்தை எழுத நினைக்கும் இமையம், கூட்ட நெரிசலில் சிலர் மூச்சுத்திணறியும் மிதிபட்டும் மரணம் அடைந்தது கூட ஒரு தகவலாகப் பரிமாறப்பட்டுச் செய்தியாகவே கடந்துபோகப்பட்டது என்பதையும் முன்வைக்கிறார். 

“தங்கத்தலைவியே வாழ்க. தர்மத்தலைவியே வாழ்க. வாழ்க.”

ஆண்டாளும் தன் பங்குக்கு உடம்பிலுள்ள சக்தியையெல்லாம் திரட்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகவும் சத்தமாகவும் கத்தினாள். “ வாழ்க.  வாழ்க.” (91)

என எழுதிவிட்டு, இதையெல்லாம் தனது கவனத்துக்குரியன அல்ல என்பதுபோல் அந்தத்தலைவி,

என் உயிரினும் உயிரான, உடலினும் உடலான, கண்ணினும் கண்ணான,  “என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப்பெருங்குடி மக்களே, நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் த.உ.மு.கழக வேட்பாளர்களுக்காக உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்…” என்று கையில் வைத்திருந்த காகிதத்தைப் பார்த்துப் பார்த்துச் சத்தமாகத் தன் போக்கில் படித்துக் கொண்டிருந்தார்.

 என முடிக்கிறார். அப்படி முடிப்பதற்கு முன்னும் இடையேயும் ஆசிரியரின் சார்பும் நோக்கமும் வெளிப்படும் விதமாக எதையும் எழுதிக்காட்ட முனையவில்லை என்பதும் எல்லாமும் பாத்திரங்களின் உரையாடல்களாகவே நகர்த்தப்பட்டுள்ளன என்பதும் இமையத்தின் எழுத்துமுறையின் தனிச்சிறப்பு.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை

எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை

எடுத்துக்காட்டும் குறுநாவல்

என்னும் பின்னட்டைக் குறிப்போடு (93 பக்கங்கள்/ 25 பகுதி) அச்சாக்கப்பட்டிருக்கும் இந்நூல் உள்கட்டமைப்புக்கூறுகளின்படி ஒரு சிறுகதைதான். ஒருநாளின் காலையில் தொடங்கி பிற்பகலில் முடியும் மூன்று நிகழ்வுகளைக் கொண்ட ஒரு சிறுகதை. நகரம் ஒன்றிற்குத் தேர்தல் பிரசாரத்திற்கு ஆளுங்கட்சியின் தலைவி வரும் ஒற்றை நிகழ்வுதான் மொத்தக்கதை. அவ்வொற்றை நிகழ்வை ஒரு கிளைக்கழகத்தில் செயல்படும் கட்சிக்காரர் ஒருவர், ஆட்களைத் திரட்டுவதை முன் நிகழ்வாக 7 பகுதிகளிலும்(1-7),  திரட்டப்பட்ட ஆட்களைத் தேர்தல் பிரச்சார மேடைக்கு முன்னால் காத்திருக்க வைப்பதைத் தொடர் நிகழ்வாக 15 பகுதிகளிலும் (8-23) , காத்திருந்த மக்களுக்கு / வாக்காளர்களுக்கு முன்னால் தலைவி வந்து உரையாற்றி முடிப்பதை 2 பகுதிகளில் சிறுநிகழ்வாகவும் எழுதப்பெற்றுள்ள இக்கதை உச்சநிலையிலேயே நின்றுவிடும் ஓரங்க நாடகத்தின் வடிவத்தைத் தனதாக்கிக் கொண்டு முடிவின் உணர்வுநிலையை அல்லது விவாதத்தை வாசகர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது.  அப்படி ஒதுங்கிக் கொண்டதின் வழியாகத் தனது புனைகதையை ஆளுங்கட்சியை விமரிசிக்கும் புனைகதை என்ற நிலையிலிருந்து நகர்த்தித் தேர்தல் அரசியலின் -திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளுக்குள் நகரும் சிற்றுருகாட்சிகளையும், அதற்குள் செயல்படும்   நுட்பமான கண்ணிகளையும் படம் பிடிக்கும் புனைவாக முன்வைத்துள்ளார் இமையம்.அதன்வழியாகத் தனது நடைமுறை அரசியல் சார்புக்கும் எழுத்து அரசியலுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிசெய்கிறார்.

பின் குறிப்பு:

===========

வாழ்க வாழ்க – இமையத்தின் 12 வது நூல். வெளியீடு க்ரியா.( புதிய எண்.2/ பழைய எண்.25, 17 வது கிழக்குத்தெரு, காமராசர் நகர், திருவான்மியூர், சென்னை 600041, 125 ரூபாய் விலை). அச்சாகும் தாள், அட்டைப்படம், அட்டைக்கான தாள், அச்செழுத்துகளின் வடிவம், வரிகளுக்கிடையேயான இடைவெளி, தொடர், சொல், எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது எனப் பதிப்பக வேலைகளில் கவனத்துடன் இருந்து தனித்துவமும் தரமும் பேணும் க்ரியா இந்த நூலை 14 x 12.5 செ.மீட்டர் அளவுகொண்ட வேறுபட்ட வடிவத்தில் வெளியிட்டுள்ளது. பழகிப்போன வடிவம் இல்லை என்பதால், வாசிப்பதற்கும், வாசித்தபின் புத்தக அடுக்குக்குள் அடக்கிவைப்பதற்கும் சிரமப்பட வேண்டியதிருக்கலாம். இப்பதிப்பகம் இப்படியான வித்தியாசங்களைக் காட்டுவது புதிதல்ல. முன்பு சில கவிதை நூல்களையும் கட்டுரை/ உரைநடை நூல்களையும் இதேபோல் பொதுவடிவத்திற்கு மாறாக வெளியிட்டிருக்கிறது. 

எந்தவிதமான இலக்கிய வடிவத்தோடும் அறிமுகம் இல்லாத இளைஞராக இருந்த   இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகளை 1994- இல் வெளியிட்ட பதிப்பகம் க்ரியா.   பலவகையான விமரிசனங்களையும் பல பதிப்புகளையும் தாண்டி, வெள்ளிவிழாக்கொண்டாடியுள்ள(25 ஆண்டுகள்) கோவேறு கழுதைகள் இப்போது சிறப்புப் பதிப்பாகக் கெட்டி அட்டையில் நூலக விலையுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. கோவேறு கழுதைகளுக்கும் வாழ்க வாழ்கவிற்கும் இடையில் ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என நான்கு நாவல்களையும் பெத்தவன் என்ற குறுநாவலையும், மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவுச்சோறு,நன்மாறன் கோட்டை கதை என 5 சிறுகதைத் தொகுதிகளையும் அதே க்ரியா பதிப்பகமே வெளியிட்டுள்ளது. நானறிய நவீனத்தமிழ் எழுத்தாளர்கள் எவரும் ஒரே பதிப்பகத்தின் வழியாகத் தனது எல்லா நூல்களையும் வெளியிடவில்லை. எனவே     இணைபிரியாமல் வாழுங்கள் என வாழ்த்த நினைக்கும் இணையர்களை இமையமும் க்ரியாவும்போல இணைந்து வாழுங்கள் என்று வாழ்த்தலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்