சொல்லும் செயலும் -


கோழிமுந்தியதா? முட்டை முந்தியதா? என்ற குதர்க்கம் தான் நமது வாழ்க்கை நிகழ்வுகள். பெரும் நிகழ்வாயினும் சிறுநிகழ்வாயினும் எது முந்தியது என்று கேட்டால் சொற்களாக இருக்கின்றன. சாதாரணவாக்கியமாகவோ, கேள்வியாகவோ, கெஞ்சுதலாகவோ, ஆணையாகவோ சொல்லப்பட்ட சொற்களே காரணங்களாக இருந்து காரியங்களை - நிகழ்வுகளை உருவாக்குகின்றன. நிகழ்வுகள் உருவானபின் நாம் வேறுவகையான சொற்களால் உரையாடல் தொடங்குகிறோம். அன்றாட நடப்புகள் என்பவை சொல்லப்படுவதால் நிகழ்கின்றன; நிகழ்வதால் சொல்லப்படுகின்றன.நம்பிக்கை இழப்புகள் தோன்றக்கூடாது

நமது நீதிமன்றங்கள் வழங்கும் நீதியைக் குறித்து நேரடியாக விவாதிக்க முடியாது. என்றாலும் அண்மைக்காலங்களில் அரசமைப்புச் சட்டம் சார்ந்த குடிமையியல் ( Civil) வழக்குகளிலும் தனிநபர் மற்றும் அமைப்புகளில் நடக்கும் குற்றவியல் (Crime) நடைமுறை சார்ந்த வழக்குகளிலும் வழங்கும் நீதிமன்ற முடிவுகளும் தண்டனைகளும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் சர்ச்சைகளை எழுப்புகின்றன. மறுபரிசீலனையைக் கோருவனவாக இருக்கின்றன.

உடுமலைப்பேட்டை சங்கர் (கௌசல்யா) கொல்லப்பட்ட நிகழ்வும் விசாரணை முறைகளும் ஏற்கெனவே பொதுவெளியில் கவனத்தைப் பெற்றவை. இதுபோன்ற அறியப்பட்ட - பல தளங்களில் விவாதிக்கப்பட்ட வழக்குகளில் எதிர்பார்ப்புக்கு மாறான முடிவுகளைச் சொல்லித் தண்டனைக் குறைப்பு அல்லது விடுவிப்புகள் செய்யும்போது ஏற்படும் நம்பிக்கை இழப்பு நீதிமன்றங்களையும் அதற்குத் துணையாக நிற்கவேண்டிய காவல் துறையையும் மட்டுமே பாதிக்கும் என்பதில்லை. மக்களாட்சிமுறை என்னும் அரசமைப்பின்மீதே நம்பிக்கை இழப்பைத் தோற்றுவிக்கும்.

நிகழ்கால அரசமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் நிகழ்வுகளும் முடிவுகளும் அமைப்பின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரவேண்டும். சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள், அந்த அவைகளுக்குப் பதில் சொல்லும்விதமாகச் செயல்படும் அமைச்சரவையின் மேலாண்மைத்திறன், இயற்றப்பட்ட சட்டங்களின்படி அமைப்புகளும் தனிமனிதர்களும் செயல்படுகின்றனரா எனக் கண்காணிக்கவேண்டிய காவல்துறையும், அதன் முன்வைப்பின் மேல் நீதிவழங்கும் நீதிமன்றங்கள், இவற்றையெல்லாம் கண்காணித்து மக்களின் குரலாக இருக்கவேண்டிய ஊடகத்துறை ஆகியன ஒவ்வொன்றும் அதனதன் பொறுப்பிலிருந்து விலகும்போது நம்பிக்கை இழப்புகள் தோன்றும். தோன்றும் நம்பிக்கை இழப்புகள் மக்களாட்சி என்ற நாட்டின் ஒட்டுமொத்தப் பார்வையையே குலைத்துவிடும்.நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக செயல்படமாட்டோம் என ஒவ்வொரு பிரிவுகளின் ஒவ்வொரு பகுதிகளும் நினைக்கவேண்டும். அந்த நினைப்பே மக்களாட்சி முறைக்கான அடித்தளம்.

நாக்கில் சனி
ஆங்கிலப்பயன்பாட்டுக்குப் பின் அதை நாக்கின் பிழை(டங்க் ஸ்லிப்- TONGUE SLIP ) என்று சொல்லித் தப்பிக்கலாம். இதற்கு வழக்காற்றுச் சொல்லாக இருப்பது “ வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயர்களைச் சொல்லாமல் சாதிகளைச் சொல்லி அழைப்பதும், குறிப்பான நிகழ்வுகளில் குறிப்பிட்ட சாதி மனிதர் காட்டிய இளகிய மனம், பெருந்தன்மை போன்ற நேர்மறைக்குணங்களைப் பொதுமைப்படுத்தி வழக்காறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வழக்காறுகளே சாதிப் பழமொழிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நேர்மறைத்தன்மை சார்ந்த வழக்காறுகள் போலவே எதிர்மறைக்கூறுகள் கொண்ட வழக்காறுகளும் தமிழ்மொழியில் இருக்கின்றன. அவை குறிப்பிட்ட சாதி மனிதர்களின் தந்திரங்களையும் கறார்த்தனத்தையும் காட்டுபவை. அக்குறிப்பிட்ட நிகழ்வில் குறிப்பிட்ட மனிதர் காட்டிய வெளிப்பாடு. அதுவும் பின்னர் பொதுமைப்பட்டுச் சாதி அடையாளங்கள் ஆகியிருக்கின்றன. நேர்மறைத்தன்மையோ எதிர்மறை நிலைப்பாடோ அவையெல்லாம் உருவாக்கியவர்களின் பார்வைக்கோணத்தைக் காட்டுபவை.அவை காலச்சூழலில் அர்த்தங்களைத் தந்தவை.

அனைவருக்கும் கல்வி; இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு என்ற அரசியல் சட்ட உரிமைகள் நடைமுறைக்கு வந்து அரைநூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின்பும் அரசுத்துறை நிறுவனங்களில் செயல்படுபவர்களும் மேலாண்மைப் பதவியில் இருப்பவர்களும் சாதிய வேறுபாடுகள் கொண்ட மனநிலையோடு செயல்பட்டபோது உருவாக்கப்பட்ட சிறப்புச் சட்டங்கள் இப்போது நடைமுறையில் இருக்கின்றன. பட்டியல் இனத்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சிறப்புச் சட்டங்களைப் போலவே பெண்களின் பாதுகாப்புக்கான சிறப்புச் சட்டங்களும் நடைமுறையில் இருக்கின்றன. இதையெல்லாம் உணர்ந்தபோதிலும் அதனை மனதில் ஏற்காமல் எதிர்நிலைப்பாடு எடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

பணியிடங்களுக்குப் பொருந்தும் சட்டங்கள் அரசியல் கட்சிகள் செயல்படும் பொதுவெளிக்கும் உரியவை என்பதை அரசியல்வாதிகளில் பலர் உள்வாங்கவில்லை என்பதையே அண்மைக் காலத்தில் வெளிப்பட்ட சாதிய வேறுபாடுகளை நம்பும் சொல்லாடல்கள் காட்டுகின்றன. வேகமாக மாறிக்கொண்டிருக்கும் பணியிடங்களும் பண்பாட்டுவெளிகளும் அனைவரையும் உள்வாங்கும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.
இந்தியச் சூழல் தனிநபர்களின் நண்பர்கள் குழாத்தை விரிவாக்கியிருப்பதைப் போலவே அரசியல் கட்சிகளின் கூட்டணி முறைமைகளையும் மாற்றியிருக்கிறது. கிராமிய நடைமுறைகளைப் பொதுவெளியில் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தவறு என்பதைக் கூடத்தெரியாதவர்கள் மைய நீரோட்ட அரசியலில் திராவிட இயக்க ஆளுமைகளாக வலம் வருகிறார்கள். நாங்கள் ஆண்ட சாதிகள் என்ற ஆணவத்தில் இப்படிச் செயல்படுபவர்களாக இருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் சாதிவேறுபாடுகள் காட்டக்கூடாது என்ற தன்னிலையோடு செயல்படுகிறவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்களும்கூடச் சொல் பயன்பாடுகளில் தடுமாறுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.

அரசியல் சட்டம் வழங்கிய உரிமையைத் தனியொரு கட்சிபோட்ட பிச்சை என உருவகிப்பதில் தொடங்கி, நாலாம்சாதிபோல நடத்தினார் என ஒருவர் சொல்கிறார். வண்ணான் வகைபோலப் பிரித்துப் போட முடியுமா? என்று கேட்கிறார் இன்னொருவர். அம்பட்டன் கடையைத் திறக்கவும் டெல்லியில் அனுமதி வாங்கவேண்டுமா என்று பொதுவிவாதமொன்றில் கேட்கிறார் ஒருவர். இப்படிக் கேட்பதில் அவர்களின் நியாயங்கள் ஒருபக்கத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் அந்தச் சொல்லாடல்கள் இப்படியான சொல்லாடல்களுக்குள் ஒருவருக்குச் சாதிய வேறுபாடுகள் தவறு என்ற புரிதலை உருவாக்கவில்லை என்பதையே காட்டுகின்றன. குனியமுடியாத நிலையில் தனது கால்செருப்பைக் கழற்றுவதற்குத் தேர்வுசெய்யும் சிறுவன் பட்டியலினச் சிறுவனாக இருப்பது குறித்துக் கூச்சம் இல்லாமல் இருப்பதை எப்படி விளங்கிக் கொள்வது? பொதுவெளிச் செயல்பாடுகளும் சொல்லாடல்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை; கைவிட வேண்டியவை எனத் தெரியாமல் இருப்பதற்குப் பின் இருப்பது சாதிப்பெருமிதமா? அறியாமையா? அவர்களைப் பொருத்தவரை அறியாமை. ஆனால் பாதிக்கப்படுபவரின் கோணத்தில் பார்த்தால் சாதிப்பெருமிதம்.

அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின்னான தலித் எழுச்சி,தலித்திய சிந்தனைகள்,தலித் கலை இலக்கியப்பார்வைகள் . தலித் விவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தலித் அரசியலின் தாக்கம் சமூகத்தளத்திலும் மையநீரோட்டத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறியாதவர்களாகவே தேர்தல் அரசியலில் இருக்கும் திராவிட இயக்கங்களின் ஆளுமைகள் இருக்கிறார்கள். அக்கட்சிகளுக்குள் செயல்படும் சிந்தனைக் குழுக்களும் இற்றைப்படுத்திக் கொண்ட குழுக்களாக இல்லை. அக்குழுக்கள் உடனடியாக இற்றைப்படுத்திக் கொள்வதோடு அரசியல் வகுப்புகளை நடத்திப் பொதுவெளிப்பேச்சுகளைச் சரிசெய்யவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்