நாடகவியல் பேராசான் மௌனகுரு


ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அவரது வாழ்க்கைக்குறிப்பு விவரங்களையும் அரங்கவியலில் அவரது செயல்பாடுகளையும் கொண்ட விவரப்பட்டியல் ஒன்றை அனுப்பித்தரமுடியுமா? என்று கேட்டு இணையவழிக்கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
பொதுவாக அப்படியொரு விவரப் பட்டியலைக் கேட்டால் பலரும் அனுப்பி வைப்பார்கள். அதுவும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் கேட்டால் துறைசார்ந்த வல்லுநரின் பட்டியல்கள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தேவைப்படும் என்று கருதி அனுப்பிவைப்பார்கள். அதே நேரத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களின் விவரங்கள் பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றிப் போய்விடும்.

அப்படி நினைத்தாரோ என்னவோ, நான் கேட்டவுடனேயே அனுப்பி வைக்காமல், ‘ எதற்காக இந்த விவரப்பட்டியல்’ என்று கேட்டுப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். நான் ”தமிழ்நாட்டில் இயங்கும் செம்மொழி நிறுவனம் அயலகத்தமிழ் அறிஞர்களுக்கு குறள்பீட விருது ஒன்றை அறிவித்துள்ளது. அதற்கான பரிந்துரையை என்னிடம் கேட்டுள்ளது. அதற்கு உங்கள் பெயரை நான் பரிந்துரை செய்யப்போகிறேன். பரிந்துரையோடு முழுவிவரங்களும் இணைக்கப்பட வேண்டும். அதனால் கேட்கிறேன்” என்று பதில் அனுப்பினேன்.
கடிதம் கிடைத்ததும், தொலைபேசி வழியாக , ’ராமசாமி, இதுபோன்ற விருதுகளில் எல்லாம் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் தானே? . அத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் இதுபோன்ற விருதுகள் எப்படித்தரப்படும் என்பதும் நமக்குத் தெரிந்தது தானே? ‘ என்று சொல்லிவிட்டு அந்த விவரப்பட்டியலை அனுப்பவே இல்லை. ஆனால் என்னைப் பொறுத்த அளவில் தமிழ் அறிவுலகத்தில் அறியப்படும் இலங்கைத் தமிழ்ப் பேராசான்களான நினைக்கும் க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான் வரிசையில் நான்காவதாக உங்களை நினைக்கிறேன் என்று சொன்னேன்.
அப்போது அவர் மூத்த பேராசிரியர் என்ற பொறுப்பு நிலையிலிருந்து கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ விபுலானந்தர் அழகியல் கற்கைநெறி நிறுவனத்திலிருந்து விலகியிருந்தார்/ விலக்கப்பட்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் போன்றவர்களை ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் ஓய்வுகொடுத்து அனுப்புவதில்லை என்று சொல்லிவிட்டு, போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறைப் பேராசிரியர் பெர்ஸ்கியை வாழ்நாள் பேராசிரியராக நியமனம் செய்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொன்னேன். டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணனின் மாணவரான பேரா.பெர்ஸ்கி இந்தியாவிலும் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய- போலந்து உறவுக்கும் இந்தியவியலுக்கும் அடையாளமாக இருப்பவர். இங்கு போலந்தின் தூதராகவும் பணியாற்றியவர். அவரைப் போலவே வாழ்நாள் முழுவதும் தமிழ் அரங்கியலில் -அழகியலில் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர் பேரா.சி.மௌனகுரு. இலங்கை தனது பண்பாட்டுத்தூதராக அவரை ஒரு நாட்டுக்கு அனுப்பிவைக்கப் பொருத்தமானவர் என்பதும் எனது கணிப்பு.
அரங்கியலில் கலையியல் சார்ந்த பார்வைகளையும் நடிப்புக்கோட்பாடுகள் பற்றிய கோட்பாட்டுப் பார்வைகளையும் செய்ம்முறைப் பயிற்சிகளையும் அறிந்த - கற்பிக்கக்கூடிய பேராசிரியர்கள் ஒரு கைவிரல் எண்ணிக்கை அளவுகூட இருந்ததில்லை. இப்போதிருக்கும் ஒரேயொருவர் மௌனகுரு மட்டுமே. பேராசிரியர் மௌனகுருவின் கட்டுரைகள் அரங்கியல் என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் அவரது மணிவிழா மலராக-அவரது எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களுமாக- ஒரு நூலும் வெளி வந்துள்ளது. மணிவிழா மலரில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் தமிழகக் கல்வியாளர்களுக்கு புலம்சார்ந்த கட்டுரை களின் நுண்மான் நுழைபுலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டக்கூடியன. அத்துடன் பேராசிரியர் மௌனகுருவின் கல்விப்பணிகளையும் அரங்கியல் பணிகளையும் விரிவாகக் கூறுகின்றன
தமிழ் அரங்கியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் அவற்றைப் பயிற்சி செய்து பார்க்கத் துடிக்கும் இளம் மாணவர்களுக்கும் பேரா.மௌன குருவின் அரங்கியல் என்னும் நூல் மிகமிக உதவிகரமாக விளங்கக் கூடியது. மூன்று பகுதிகளையுடைய அந்நூலில் முதல் இரண்டு பகுதிகள் தமிழக அரங்கியல் மாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகள்.சர்வதேச அளவில் அரங்கவியலில் காணப்படும் சொல்லாடல்களை மிகத்தெளிவாகவும் சுருக்க மாகவும் விளக்கும் கட்டுரைகள் முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. நாடகக் கலையின் பயன்கள், நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்கருக்கள், முழுமை அரங்கு, ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் ஆசிய நாடக அரங்கும், சிறுவர் களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் என்ற ஐந்து கட்டுரைகளும் அரங்கியல் அடிப்படைகளைத் தமிழில் சொல்லும் கட்டுரைகள். இத்தகைய கட்டுரைகள் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பகுதியில் தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பும் பின் நவீனத்துவப் பின்னணியில் தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையியலும் பேசப்படுகின்றன. இக்கட்டுரைகளில் காணப்படும் முறையியலும் தெளிவும் தமிழக அரங்கியலாளர்களிடம் காணப்படாத ஒன்று.
வரலாற்றைச் சமகாலத் தேவைகளின் பின்னணியில் புரிந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்களிடம் தான் தமிழகம் பாடம் கேட்க வேண்டியுள்ளது. இலக்கியத்தளத்தில் இத்தகைய பாடங்களைப் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் ஏற்கனவே நடத்தியுள்ளனர் என்பதைத் தமிழ்க் கல்வியுலகம் நன்கு அறியும். இத்தகைய பாடங்கள் நான் முன்பே சொன்னபடி மேற்கையும் கிழக்கையும் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.தமிழகக் கல்வியாளர்கள் பலருக்கு மேற்கின் விமரிசன முறையும் கைவரப்பெறவில்லை. மரபின் சமகாலத் தேவையையும் சொல்ல இயலவில்லை. மரபு என்பதற்காக போற்றுவது மட்டுமே சாத்தியமாகிறது.
மூன்றாவது பகுதி இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் மரபுக்கலைகளின் நிகழ்கால நிலைமைகள் குறித்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்.ஈழம், மட்டக்களப்பு, பாண்டிருப்பு என அதற்குள்ளும் இருக்கும் பிரதேச வேறுபாடு களை அடையாளப்படுத்தி அரங்கியல் நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளார் மௌனகுரு. மொத்தத்தில் இந்த நூல் தமிழ் அரங்கியல்/ நாடகக் கல்விக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இப்படியொரு குறிப்பை நான் முன்பே எழுதியிருக்கிறேன்.
தமிழர்கள் அனைவரும் நாடகக் கலையின் பார்வையாளர்களாக ஆக்கப்பட வேண்டும் .நாடகக் கலையின் மூலம் தமிழர்கள் இந்த உலகத்தினை- சமகால வாழ்வைப் புரிந்துகொள்ளவேண்டும் அதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நாடகக்கலையைக் கற்பிக்கும் விருப்பம் கொண்ட பேராசிரியர்கள். அதிலும் மேற்கையும் கிழக்கையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள் தேவை. தங்கள் கற்பித்தல் முறையில் இந்திய /கீழ்த்திசைப் பாரம்பரியத்தின் எல்லைகளை எங்கே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் மேற்கின் விமரிசன அறிவை எங்கெல்லாம் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கும் அவரிடம் தெளிவான பார்வைகள் உண்டு. அவரது சாதனைகளைத் தொகுத்து எழுதி உலகநாடகநாளைக் கொண்டாடும் அமைப்பிற்கு அனுப்பினால் ஒரு ஆண்டின் உரையை நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கக் கூடும். அது அரங்கவியலின் நோபல் போன்றது. அதற்குத் தகுதியான இலங்கையர்; தமிழர் அவர் மட்டுமே.
வார்த்தை சார்ந்த மொழியும் உடல் மொழியும் அரங்கியலின் பிறகூறுகளுடன் இணைந்து உருவாக்கும் மொழியே மேடை மொழி. அரங்கியல் செயல்பாடுகளின் அடிப்படையான இதில் தெளிவு இல்லாத நிலையில் எந்த இயக்குநரும் நல்ல படைப்புகளைத் தந்து விடமுடியாது.இந்தத் தெளிவுகள் கைவரப்பெறாத சிலபேர் தங்களின் நாடகங்கள் என்ன நோக்கத்தொடு மேடையேறுகின்றன என்பதைக் கோடி காட்டக் கூட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது மேடையேற்றங்கள் பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ளத் தேவையான தொடர்பு மொழி எவையென்பதையே உறுதிசெய்து கொள்ளாமல் தவிக்கின்றன. வார்த்தை சார்ந்த மொழியின்வழி பார்வையாளனுடன் உறவு கொள்வதா..? உடல்மொழியால் தொடர்பு கொள்வதா என்ற தெளிவுகள் இல்லாத நிலையில்.. தொடர்புநிலை தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே இருப்பதே இத்தகைய அரங்கியல் செயல்பாடுகளின் பாணியாக இருக்கிறது. இதுதான் இன்று தமிழில் நாடகம் செய்ய-நவீன நாடகங்கள் செய்ய விரும்பும் பலரது பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குழப்பங்கள் இல்லாத ஒரு நாடக இயக்குநர் சி.மௌனகுரு. அவரது மேடையேற்றங்கள் பற்றிப் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.சில நிகழ்வுகளை திரைவட்டில் பார்த்திருக்கிறேன். ஒன்றைக் கூட நேரடியாக - மேடைநிகழ்வாகப் பார்க்கவில்லை. ஆனால் அவரது நடிகர்கள், மாணவர்கள் பலரோடும் உரையாடி இருக்கிறேன். அவர்களின் வாய்வழியாக அவரது நெறியாள்கை முறையை அறிதிருக்கிறேன்.
இலங்கையின் இளையபத்மநாதனின் நட்பும் உரையாடல் நடந்த எண்பதுகளில் (1986-1990) எங்கள் பேச்சில் எப்போதும் உச்சரிக்கப்பட்ட பெயராகவும், புதுவை நாடகப்பள்ளியில் பணியாற்றியபோது இலங்கையிலிருந்து வரும் மாணவிகள் திரும்பத்திரும்பச் சொல்லும் பெயராகவும் மௌனகுரு இருந்தது. இருமுறை தமிழ்நாட்டிலும் இருமுறை இலங்கையிலுமாக எங்கள் சந்திப்பும் உரையாடல்களும் நீண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சந்தித்த நாட்களைவிடவும் இலங்கையில் சந்தித்துக்கொண்ட நாட்கள் நினைவில் நிற்கும் நாட்கள். தமிழகக் கல்விப்புலங்களில் உரையாற்றும்பொருட்டுச் சென்னை, புதுவை, மதுரை எனப் பயணம் மேற்கொண்டார். அப்போது நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்திட ஏற்பாடு செய்தேன். அப்போது துறைத் தலைவராகப் பேரா. தொ.பரமசிவன் இருந்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், திருப்பத்தூருக்கு வருகை தந்தார். அக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் நாடகக்காரருமான கி.பார்த்திபராஜாவின் முன்னெடுப்பில் நடக்கும் விருதளிப்பு நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவுக்காக வந்தார். முதல்முறை இலங்கை போனபோது அவர் பணியாற்றிய மட்டக்களப்பு அழகியல் கற்கைநெறி நிறுவனத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம், நான்குநாள் பயிற்சி வகுப்புகள் என ஒருவாரம் இருந்தேன். அந்த ஏழு நாட்களும் காலையில் அல்லது மாலையில் எனச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தோம்.
அண்மையில் இலங்கை சென்ற போது அழகியல் கற்கை நெறி நிறுவனத்திற்காகச் செல்ல வில்லை. என்றாலும் அந்நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு மோகனதாசனின் இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது பேராசிரியரும் அவரது துணைவியாரும் என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள் என்பது என்பது அன்பின் வெளிப்பாடு. அவர்கள் வந்த அதே நேரம் இலங்கையின் மூத்த எழுத்தாளரான எஸ்.எல். எம். ஹனிபா, முனைவர் யோகராஜா எனப் பலரும் வந்து உண்டு உரையாடிய நாட்களும் நினைக்கத்தக்கன. இரண்டு தடவையும் அவரிடம் ஒன்றை நினைவூட்டியிருக்கிறேன். ஒரு நாடகம் ஒன்றைப் பிரதியிலிருந்து மேடைக்கு நகர்த்தும் முறையை ஆவணமாகப் பதிவுசெய்து - இயக்குநரின் இயக்கமுறை - A Director at Work - என்பதான நூலொன்றைக் கொண்டுவரவேண்டும். இங்கு யாரையாவது வைத்து எழுதிவிடுங்கள் கேட்டுக்கொள்ளேன். அப்படியான நூல் தமிழ் அரங்கியலாளர்களுக்கு மட்டுமல்ல; உலக நாடகக்காரர்களுக்கே ஒரு கையேடாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பமும் இணையமும் தரும் வசதியைப் பயன்படுத்தும் முன்னோடியாக இப்போது திகழ்கிறார். நாடகங்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும், நினைவுப்பதிவுகளாகவும் அவர் எழுதும் முகநூல் பக்கங்கள் பெரும் ஆவணமாக விரிந்துகொண்டே இருக்கின்றன. நாள் தோறும் சில நூறு சொற்களை எழுதிவிடும் அவரது பதிவுகள் தகவல்களாக மட்டுமல்லாமல் விரிவான சிந்தனைத்தளங்களுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவை.
பேராசிரியரின் துணைவியார் சித்ரலேகா தமிழின் முன்னோடிப் பெண்ணியச் சிந்தனையாளர். அவர்கள் இருவரையும் நான் ஆய்வு மாணவராக இருந்தபோது மதுரைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தது நிழலாக இருக்கிறது. சொல்லாத சேதிகள் என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்காக அவர் வந்திருந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்