நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்
ஈழவிடுதலை, தனி நாடு போன்றவற்றிற்கான போராட்டம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர்வுகளையும் பின்னணியாக க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கருப்பு சுமதியின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம். 2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.
நியோகா என்ற சம்ஸ்க்ருதப் பெயர்ச்சொல்லைத் தலைப்பாகக் கொண்ட அந்தப்படத்தின்
மூலக்கதை உறையும் பணிப்பெண் என்ற புனைகதை. அதிலிருந்து
உருவாக்கப்பெற்ற நியோகா, திருமணமாகி மூன்றே நாளில் கணவனை இழந்த ஒருத்தி (மலர்விழி)
யின் காத்திருப்பைப் பற்றிய படமாக எடுக்கப்பெற்றிருக்கிறது. ஊடகவியலாளனான ரஞ்சனை, மலர்விழி
இழந்துவிட்டாள் என்று சொல்வதுகூடச் சரியாக இருக்காது; கட த்தப்பட்டான் என்பதே சரியானது.
கடத்தப்பட்டவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கை அவளுடைய சொந்த நம்பிக்கையாக இருந்தது;
காத்திருக்கிறாள். அப்பா, அம்மா, தம்பி, ஆகியோரைக் கொண்ட தனது குடும்பத்தாரால் பலவழியிலும் திணிக்கப்பட்ட ஒன்றாக மாறிக் காத்திருக்க
வைக்கப்படுகிறாள். திணிப்பை ஏற்றுக்கொண்டு காத்திருக்கிறாள். யாழ்ப்பாணத்தில் தொடங்கிய
காத்திருப்பு கனடாவின் டொரண்டோ நகரிலும் நீள்கிறது. யாழ்ப்பாணத்தின் காத்திருப்புகள்
எல்லாம் படத்தில் நேரடிக்காட்சிகள் அல்ல. நினைவுக்குறிப்புகள் தான்.
ஊடகவியலாளன் ரஞ்சனின் அச்சமில்லாத வாழ்க்கையை எழுதி நூலாக வெளியிடும் ஓர் போராளி இயக்க ஆதரவாளர்கள், அந்த நூலின் வெளியீட்டுவிழாவிற்கு ரஞ்சனின் மனைவி மலர் வரவேண்டும்; வந்து குத்துவிளக்கேற்றித்தொடங்கி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், கலந்துகொண்ட மலரின் கடந்த கால வாழ்க்கைக்குள் நுழையும் பின்னோக்கான நகர்வாகப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.படத்தின் தொடக்கம், அவளது காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற முரண் நிலையை விவாதிக்கும் விதமான ஒரு நெருக்கடியிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு மருமகளாக வந்த துளசிக்குத் தனது கணவனிடமிருந்து கிடைக்கவேண்டிய அன்னியோன்யமான பற்றுதலும் அரவணைப்பும் கிடைக்காமல் போவதற்கு அந்த வீட்டில் இருக்கும் மலரின் தனித்திருத்தல் காரணம் என்ற அறிதலிலிருந்து தொடங்குகிறது படத்தின் விவாதம்.
சாப்பாடு, சீமந்தம், கோயில் கூடுகை எனச் சைவப் பண்பாட்டை- குட்டி யாழ்ப்பாணத்தை டொரோண்டோ நகரில் உருவாக்கிக் கொண்டு மரபான யாழ்ப்பாண வாழ்க்கையை வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கும் பழைய தலைமுறை மனிதர்களின் ஆதிக்கம் நிரம்பிய குடும்பத்திற்குள் புதிதாக நுழையும் துளசி, மலருக்குப் புதிய வாழ்க்கையை – இன்னொரு திருமணம், படிப்பு, வேலை என ஏன் உருவாக்கக் கூடாது என யோசனைகளை முன்வைக்கிறாள். அவளது கணவனே- மலரின் தம்பியே அதற்கு எதிராக இருக்கிறான். மலரக்கா அவளது கணவனின் ரஞ்சனின் நினைவில் இருக்கிறாள்; இன்னொரு ஆணின் நுழைவு அவள் வாழ்க்கையில் இல்லை; அப்படியொரு பேச்செடுத்தால் அவள் செத்துப் போவாள் என்பது அவனது வாதம். வயதான காலத்திலும் பொழுதுபோவதற்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டிக் கோயில், மகளிர் சங்கம், கூடுகைகள் என வெளியே கிளம்பிவிடும் பெற்றோர்கள் மலரின் வாழ்க்கை வெளியாக,அவளுக்கிருக்கும் மலர்த்தோட்ட உருவாக்க ஆர்வத்தை வளர்த்தெடுத்து வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போடுகிறார்கள். அவளது வாழ்க்கையின் பெரும்பகுதி தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றும் கருவியில் இருக்கிறது. ரஞ்சனைத் தேடுகிறோம் என்ற பெயரிலும், சோதிடம் வழியாக நம்பிக்கையூட்டும் வழியிலும் மலரின் தகிப்பைத் தள்ளிப்போட வைக்கும் குடும்பத்தினரின் நடவடிக்கைகள் என ஒவ்வொன்றும் மலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக அவளின் அகவாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் வீட்டிற்குள் முடக்கிக் கொல்கிறது என விரிவாகவே காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.
அனைவருக்குமான நல்ல சாப்பாட்டைத் தயாரித்துக் கொடுக்கும் சமையல்காரியாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் மலர்விழியை வைத்திருக்கும் அவர்கள், தனிமையில் படும் வேதனையை – அவள் உடலின் காமம் சார்ந்த தீராப் பசியை அறியாதவர்கள் என்பதும் படத்தில் குறியீடுகளாகவும் நடப்புகளாகவும் விரிவாகவே காட்டப்பட்டுள்ளன. உடல் மற்றும் மன விருப்பங்களின் அலைவுகள் காத்திருந்தபோதும் காத்திருக்க வைக்கப்பட்டபோதும் அவளது உடலின் ஆதாரப்பசியை அடக்கிக்கொள்ளத் தனிமையில் எண்ணெய்க்குளியல் போன்றவற்றில் செலுத்திக்கொள்கிறாள். வீட்டுத்தோட்டத்தில் விதம்விதமான வண்ணங்களில் மலரும் மலர்களை வைத்து வளர்க்கும் தோட்டப்பராமரிப்பில் ஈடுபடுகிறாள். தோட்டப்பராமரிப்பு அவளது ஈடுபாடு சார்ந்த விருப்பம். குடும்பத்தினரைக் கவனித்துக்கொண்டு சமைப்பது அவள் மீது திணிக்கப்பட்ட வேலை.
தொடர்ச்சியாக மலருக்கு இன்னொரு வாழ்க்கையை உருவாக்கும் சொல்லாடல்களைச்
செய்யும் துளசியின் தங்கையின் வரவு இன்னொரு திறப்பாக இருக்கிறது. கணவனுக்குப் பதிலாக,
அவளுக்கொரு குழந்தை கிடைக்கும் நிலையில் இன்னொரு வாழ்க்கைக்குள் அவள் நுழைந்து கொள்ளும்
வாய்ப்பிருக்கிறது என்பதுபோன்ற குறிப்புகளைத் தருகிறாள். அவளைத் தொடர்ந்து அந்த வீட்டில்
இன்னொரு ஆடவன் - குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
அறிமுகமானவன் வந்து ஒருவாரம் தங்கிப் போகிறான். அதற்குப் பிறகு ஒரு நாள் வீட்டில் இருப்பவர்கள்
அனைவரும் விரதம் கடைப்பிடிக்கும் ஒருநாளில் மலர் அந்த விரதத்தை மீறுகிறாள். ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்; அதனால் பசியாக இருக்கக்
கூடாது என்று சொல்லி அவள் மட்டும் உண்கிறாள். அதற்குப் பின்னர் அவளது வாழ்க்கையில் ஒரு குழந்தை இருக்கிறது என்பதாகவும் அதனைப் பராமரிப்பதில்
– வளர்ப்பதில் பின் வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொண்டாள் என்பதாகப் படம் முடிகிறது.
படத்தில் அந்தக் குழந்தையின் வருகையைப் பற்றிய தெளிவான குறிப்பு
எதுவும் இயக்குநரால் சொல்லப்படவில்லை. அவள் கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னதின் வழி பிறந்த
குழந்தையா? தத்து எடுக்கப்பட்ட குழந்தையா? என்ற குறிப்பைத் தந்துவிடக் கூடாது என படத்தின்
இயக்குநர் ஏன் நினைத்தார் என்று தெரியவில்லை. அந்த வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்துவிட்டுப்
போன அவன் மட்டுமே மலரோடு இதமாகப் பேசுகிறான். அவன் தயாரித்துக் கொடுத்த காபியை விரும்பிக்
குடிக்கிறாள். அந்தக் காலகட்டத்தில் அவளது முகமும் நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
ஆனால் அவனாலேயே அந்தக் குழந்தை உருவானது என்ற குறிப்பைப் பட த்தின் காட்சிகள் குறிப்பாகக்கூடச்
சொல்லவில்லை. ஆனால் பட த்தின் தலைப்பு -நியோகா அப்படியொரு வாய்ப்பிருப்பதாக
உணர்த்துகிறது.
புலம்பெயர் வாழ்விலும் யாழ்ப்பாண வாழ்க்கையையே வாழ்கிறார்கள்
என்ற விமரிசனத்தை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ள இயக்குநர், இப்போது வாழும் கனடிய வாழ்க்கைச் சூழலுக்கு முகம்
காட்டாது பழைய வாழ்க்கையை வாழும் யாழ்ப்பாண மனிதர்கள் இளம்பெண் ஒருத்தியின் வாழ்க்கையை-
அந்த மரபான வாழ்க்கை முறையின் பேரால் எப்படிச் சிதைக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்.
அதிலிருந்து விடுபட நினைக்கும் புதிய தலைமுறைப்பெண்களின் முயற்சிகள் என்ன என்பதில்
ஒரு குழப்பத்தையே காட்டுகிறது. பேசப்படும் படிப்பு, வேலை, மறுமணம் என எல்லாம் பேச்சளவிலேயே
நின்று போகிறது. மாற்றாக ஒரு குழந்தையின் வழியாகப் புதிய வாழ்க்கை என்று பேசுகிறது.
அதற்கும் மத தர்மத்தில் அனுமதி இருக்கிறது என்ற விவாதத்தை முன்னெடுக்கும் தலைப்பைத்
தேர்வு செய்துள்ளார். பெண் உரிமை, புதிய பெண்கள், தனித்துப் பயணிக்கும் பெண்களின் உலகம்
என மாற்றுச் சிந்தனைகளைத் தனது புனைகதைகளில் விரிவாகப் பேசியிருக்கும் சுமதியின்
இந்தப் படம் திரும்பவும் பழைய தர்மங்களில் ஒன்றுக்குள் நின்று பெண்ணின் தனித்திருத்தலைப்
பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
கருத்துகள்