கொரோனாவுக்குப்பின் கல்வி: இணையவழிக் கற்பித்தல்

15 ஆண்டுகளாகக் கணினியோடு நட்புண்டு. போலந்து, வார்சா பல்கலைக்கழகத்தில் கணினி வழியாகப் பாடங்களை அனுப்புதலும் தேர்வுநடத்துதலும் தேவையாக இருந்தது. மாணாக்கர்களின் நுழைவு அனுமதி எண்ணே அவர்களின் கணினிப் பயனர் எண் தான். அங்கு பணியாற்றப் போய்வந்தபிறகு இந்தியாவிலும் பல இடங்களில் எனது சொற்பொழிவுகளையும் வகுப்புகளையும் கணினியைப் பயன்படுத்தி - பவர்பாயிண்ட் அட்டைகளாக நகர்த்தி- நடத்தியவன் தான். என்றாலும் இப்போது நடக்கும் இணையவழிக் கற்பித்தலை என்மனம் ஏற்கமறுக்கிறது.
எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித்துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன். சிவகாசி ஜெயலெட்சுமியின் பரபரப்புச் செய்திகள், நேர்காணல்கள், படங்கள் வழியாக பெண்ணியக் கவிதைகளைப் பாடம் சொன்ன ஞாபகங்கள் - நினைவுகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதில் அவர்களுக்கும் பலன் உண்டு; எனக்கும் பலன் உண்டு.
உரையாடல்களை மையமிட்டு - வகுப்பு உரையாடல்களுக்குப் பின் எனது கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அப்படி எழுதப்பெற்ற நம்காலத்து நாயகர்கள் (உயிர்மை) கட்டுரையைக் குறிப்பிட்டு நண்பர் சிறுகதையாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் விரிவாக விவாதம் செய்தார். திரைப்படங்கள், அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் குறித்த எனது வெகுமக்கள் பார்வையைத் தீர்மானித்ததில் எனது வகுப்புகளில் -உரைகளில்- பங்கேற்ற மாணாக்கர்கள் பங்கெடுத்துள்ளனர். அண்மையில் மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் 600 மாணவர்கள் அடங்கிய கூட்டத்தினரிடையே உலகத்தமிழ் இலக்கியங்கள் என்ற சொற்பொழிவைக் கேள்வி -பதில்கள் வழியாகவும் இடையீட்டுக் குறுக்கீடுகள் வழியாகவும் நிகழ்த்தியபோதும் சுரேஷ்குமார் இருந்து கவனித்துச் சொன்னார்.
இளங்கலைத் தமிழில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணாக்கர்கள் என்னுடைய வகுப்பில் பேசத் தயங்குவதின் வழியாகத் தொடக்கத்தில் பின் தங்கியதுண்டு. அங்கே பேசிக்கொண்டே இருந்த மாணவிகள் என் வகுப்பில் வெற்றிகரமாக முன்னேறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தெரிந்த பதில்களைக் கூடச் சொல்லத்தயங்கும் மாணவியைப் பேசவைப்பதற்கு இணையவழியில் வாய்ப்புகள் இல்லை.ஒரு வகுப்பைச் சுவாரசியமாக்கும் மாணாக்கருக்கு மேசை மேல் இருக்கும் சாக்லெட், புத்தகம், பேனா எனப் பரிசளித்துவிட்டு வரும் வழக்கத்தை இங்கே கடைப்பிடிக்கமுடியாது. ஒரு கேள்வியைக் கேட்டு விரிவான பதில் சொல்லத் தொடங்கும் மாணவரை ஆசிரியர் இடத்திற்கு நகர்த்திவிட்டு நான் மாணவர் இடத்திற்கு மாறிக் கொள்வேன். இணையவழியில் ஏது இடம்?. ஒரே வண்ணத்தில் ஆடை உடுத்தி வரும் ஆசிரியரிடம் -Same Same -சொல்லி இனிப்புக் கேட்டுவாங்கும் மாணாக்கர்களுக்கு எங்கே போவது? ஒரு வகுப்பு நன்றாக இருந்தது என்பதற்காகச் சிற்றுண்டிச் சாலை அழைத்துப் போய் காபி வாங்கித் தரும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழியில் வாய்ப்பில்லை.
கருத்துகள்