கொரோனாவோடு வாழ்ந்தது - ஜூன்

 பாவம் காவலர்கள்

=====================

கொரோனாவிற்கு முன்னால் வீட்டிலிருந்தே நடந்து போவேன். இப்போது சாலைகளில் - கடைப்பகுதிகளில் வாக்கூடுகள் இல்லாமல் அலையும் மனிதர்கள் இருப்பதால் வாகனத்தில் சென்று ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அந்தச் சாலைகளில் மாலை நடை. ஊரைவிட்டு விலகி இருக்கும் அந்தப் பகுதியை வீட்டுவசதி வாரியத்தின் வழியாக மனைகள் போட்டு விற்பதற்காகப் போடப்பட்ட சாலைகள் உண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட தார்ச்சாலைகள் பெயர்ந்து சரளைகளாக இருக்கும் அந்தப் பகுதியில் இப்போது முன்புபோல் நடப்பவர்கள் கூட்டம் இல்லை என்றாலும் ஜூன் முதல் தேதியிலிருந்து மாலை நடைக்காக முகக்கவசத்தோடு ஆட்கள் வரத்தொடங்கியுள்ளனர். அந்தத் தார்ச்சாலையின் முடிவில் தொடங்கும் மண்சாலை ஒரு கண்மாய்க்கரை வழியாகப் போய் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னொரு தார்ச்சாலையில் இணையும்.

அந்தத் தார்ச்சாலையில் மேற்கு நோக்கிப் போனால் மதுரை - நெல்லை பெருஞ்சாலைக்குப் போகலாம். அதேபோல் நெல்லை - தூத்துக்குடிப் பெருஞ்சாலையில் போய்ச் சேரலாம். முதன்மைச் சாலைகளில் இருக்கும் கட்டுப்பாடுகள், சோதனைகள் காரணமாக நெல்லைக்குள் வர நினைக்கும் வெளியூர் ஆட்கள் இதுபோன்ற குறுக்கு வழிகளையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சென்னைக்குப் போய் வேலை இழந்தும் வியாபாரம் படுத்தும் திசைமாறிவிட்ட வாழ்க்கையையும் இழந்துவிடுவோமோ என்று பயத்தில் எல்லாப் பாதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிருக்கும் வாழ்க்கைக்கும் வழிசொல்லத் தெரியாத அரசு, கண்காணிப்பு அதிகாரங்களை ஆங்காங்கே நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. கண்மாய்க்கரைச் சாலையைக் கண்காணிக்கிறது காவல் துறை. கண்காணிப்பின் கண்ணிகளாக இருக்கும் காவலர்கள் பாவம்தான்.

 

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்

----------------------------------------------------------------------------------

எது நல்லது? பரப்பளவில் பெரிய தேசமாக இருப்பதா? சிறிய தேசங்களாக மாறிக்கொள்வதா? என்ற கேள்வி எழும்போது பாடம் படித்துக்கொள்ள எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன,

பெருந்தேசத்தின் குடிமக்களாக இருப்பதின் நன்மைகள் பற்றிக் கனடியர்கள் அறிவார்கள். அமெரிக்கர்களுக்கும் பெரிய அளவு வருத்தங்கள் இருந்ததில்லை. சோவியத் யூனியனாக உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே வருத்தங்களோடுதான் ஒவ்வொரு தேசிய இனமும் இருந்தன. சீனர்களுக்கும் இன்னும்கூடச் சொல்லும் நினைப்பு இல்லை. இந்தியர்களும் அதே நிலையில் தான் தொடர்கிறார்கள்.

இதற்கு மாறாகச் சின்னச்சின்ன நாடுகளாக இருப்பதின் மகிழ்ச்சியை ஐரோப்பாவின் பால்டிக் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இத்தாலி, ஸ்பெயின், துருக்கி போன்றன வருத்தப்பட்டியலில் இருப்பவை. வளைகுடா நாடுகள் பரப்பளவு சிறியதாக இருப்பதின் நன்மைகளை அனுபவிக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்காவின் தேசங்கள் இரண்டுங்கெட்டான்களாக அல்லாடுகின்றன. தென்கிழக்காசிய நாடுகள் கூட சிறியதின் பலனில் சிரிக்கின்றன. ஆனால் இந்திய சிறியது கேட்கின் பெரியது நாடும்; பெரியது பார்க்கின் சிறியன தேறும் எனத் திரிசங்கு நிலையில் திண்டாடுகிறது. உண்டாக்கப்படும் போர்ச்சூழல்களின்போதே பல்லிளிக்கின்றன.

இந்தியத் துணைக்கண்டத்துப் பெரும் மாநிலங்கள் தனித்தனி நாடுகளானால் அடையும் துயரங்களுக்காக வளமான மாநிலங்கள் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றன. பெருந்தேச ஆதரவுத்தலைமைகளை ஆதரிக்கின்றன.

கோடை காலத்து வியர்வையும் கொரனாநேரத்துச் சளியும் 

 நெற்றி வியர்வையில் தொடங்கிக் கழுத்திலும் நெஞ்சிலும் முதுகிலும் வழியும் வியர்வையால் பிடித்துக்கொள்ளும் சளியும் தடுமனும் குறைந்தது ஒருவாரமாவது இருந்துவிட்டுத்தான் போகும். அந்த ஒரு வார காலத்து இருமலும் தொண்டைவலியும் தாங்கமுடியாமல் படுத்தி எடுத்துவிடும். ஒவ்வொரு வருடமும் கோடையின் வரவோடு பிடித்துக் கொள்ளும் சளி, இந்த வருடக் கோடையின் தொடக்கத்தில் பேரச்சம் தரும் ஒன்றாக முன் நிற்கிறது. எப்போதும் வரும் சளி ஒருவாரத்தில் போய்விடும். ஆனால் இந்த வருடத்துச் சளிகொரனாவில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்ற அச்சத்தையும் சேர்த்து விட்டது. சளியும் இருமலும் தான் கொரனாவின் முதல் அடையாளம் என்று தொலைக்காட்சி எச்சரிக்கைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன

 பிறப்புக் காலத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு இருக்கு என்று அம்மா சொல்லுவார். அடைமழைக்காலத்தில் எனக்கு எந்த விதமான காய்ச்சலோ தடுமனோ வராது என்று சொல்லிச் சொல்லி அதை நம்பிக்கை ஆக்கியிருந்தார். அவர் நம்பிக்கைப்படி எனக்கு மழைக் காலத்தில் காய்ச்சலோ தலைவலியோ வருவதில்லை. ஆனால் அதற்கெல்லாம் பழி தீர்ப்பதுபோல கோடையின் தொடக்கத்தில் வச்சு வாங்கி விடும். அதிலும் முதல் வியர்வையைக் கண்டு பயந்து கொண்டே தான் இருப்பேன்

அம்மாவின் அருகிருப்பு குறைவாகக் கிடைத்தவன் நான். ஒன்பதாம் வகுப்பு தொடங்கி விடுதி வாழ்க்கை. அம்மா இருக்கும் வரை என் உடம்பில் வியர்வையைப் பார்த்தால் பயப்படுவார். பக்கத்தில் வந்து முந்திச்சேலையால் வியர்வையைத் துடைத்துக் கை விசிறியைக் கொண்டு வீசி விடுவார். வியர்வை இல்லை என்று ஆனபின்புதான் சொம்பு நிறையத் தண்ணியைக் கொடுத்துக் குடிக்கச் சொல்லுவார். சளி பிடித்து விட்டால் விதம்விதமான ஆவி பிடிப்பது தொடங்கும். மஞ்சணத்தி எலை ஆவிக்குப் பிறகு தும்பைச் செடிக்குள் சீனிக்கல்லைப் போட்டபின் கிளம்பும் ஆவி என விதம்விதமான ஆவி பிடித்ததை முடித்துவைத்தது ஆர்.எஸ். பதி மண்டையடித் தைலம். தொடர்ந்து விக்ஸ் டப்பாக்கள் வாங்கிவைத்து மூக்கு, தொண்டை, நெஞ்சு என்று தேய்த்துத்தேய்த்துச் சளியை விரட்டுவேன். அம்மாவின் அருகிருப்பு எனக்கு அதிகம் இருந்ததில்லை. எட்டாம் வகுப்பு வரைதான் ஊரில் இருந்தவன். அதற்குப் பிறகு விடுதி வாழ்க்கை. திருமணத்திற்குப் பின்னால் ஓராண்டு வேலையில்லாமல் ஊரில் இருந்ததுண்டு. அந்த வயதிலும் கூட வியர்வையைத் துடைக்கும் வேலையைச் செய்யாமல் பின்வாங்கியதில்லை அம்மா

 பிள்ளைத்தாச்சிக்கு தர்ற சாப்பாடு விசேஷமான சாப்பாட்டில கோழிக் குழம்பும் நல்லெண்ணெய்யும் காயங்கருப்பட்டியும் முக்கியமானவை. ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு வெடக்கோழிக் கழுத்து.திருகப்படும். மஞ்சள் தடவி உரிச்ச கோழிக்கறிக்காக அரைக்கப்படும் மசாலாவில் இருக்கும் ஒவ்வொன்றும்தான் இப்போது மாத்திரைகளின் பகுதிகளாக மாறியிருக்கின்றன. வறுத்த அரிசி, வறலி மஞ்சள், காய்ஞ்ச மிளகாய் வத்தல், பூண்டு, இஞ்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, பெருங்காயம் என ஒவ்வொன்றும் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கக் கூடியவை. அதைவிடவும் கூடுதலான கவனத்துடன் தயாரிக்கப்படும் காயங்கருப்பட்டி நல்ல எதிர்ப்புசக்தி கொண்ட பண்டம். மசாலாவில் சேர்க்கப்படும் பண்டங்களோடு வட்டுக் கருப்பட்டியெச் சேர்த்து பாகுமாதிரி காய்ச்சிய பின் கட்டியாக்கி வைத்திருக்கும் காயங்கருப்பட்டி பேறுகாலத்தில் வெளியேறும் ரத்தப்போக்குக்கு ஈடுசெய்யும் ஒன்று. வெட்டுக்காயங்களால் ரத்தம் சிந்தியவர்களுக்கும் கூடக் காயங்கருப்பட்டியைத் தருவார்கள். பள்ளி, கல்லூரிக்கால விடுமுறையில் ஊருக்குப் போகும் ஒவ்வொரு தடவையும் எங்கள் வளசலில் யாராவது ஒரு பிள்ளைத்தாச்சி இருப்பார். அவருக்குத் தயாரிக்கப்பட்ட காயங்கருப்பட்டி கிடைக்கும் 

கார்த்திகை காஞ்சு பெறக்கணும்; ஐப்பசி பேஞ்சு பெறக்கணும்னு பழமொழி சொல்லுவாக.. அந்த வருஷம் நல்ல அடப்பு. பெரிய காத்தியலுக்கு சொக்கப்பனை கட்டி, பந்தம் சுத்தின பிறகும் நிக்கல மழ நிக்கல.. நாலு நாளா நிக்காமப் பேஞ்சுக்கிட்டு இருந்ததால வெளிய எங்கையுமே போகல. பெரிய திண்ணெயே கதியாக் கிடந்தோம். பெரிய திண்ணெயிலெ பொம்பளங்கெ படுக்க, ஆம்பளங்கெல்லாம். திண்ணைக்கு முன்னால இருந்த நடை பாதயிலதான் கெடப்பாங்க.. 

ஊரின் வடமேற்கு மூளையில் இருக்கும் வாசிமலையான் கோவிலில் இறங்கும் மழை அப்படியே பின்வாங்கி ஆண்டிபட்டிக்கும் தெப்பம் பட்டிக்கும் மழையைக் கொண்டுபோய்விடும். ஆனால் உசிலம்பட்டிக்கு மேற்கே இருக்கும் வீரங்கரட்டுக்குப் பின்னால ஆரம்பிச்சுப் பேயுற மழ உப்பங்காத்தில நகர்ந்து எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்துவிடும். அரைமணி நேரம் நின்று பேஞ்சா, கெழக்கோடை ஒடச்சு அரண்மனைத் தோட்டத்துக் கரையெ ஒடச்சு ஊரெச் சுத்தியிருக்க குளம் குட்டெயெல்லாம் ரொப்பிடும்.. ஊரு கொஞ்சம் ஒசரத்தில இருந்ததால சுத்தித் தண்ணி.. ராத்திரியானா தவளெச்சத்தம் கெதங்கெதன்னு கெக்கலிக்கும். அப்படியொரு சத்தத்திலெ தான் நீ பொறந்தடா என்று நான் பிறந்த கார்த்திகை மாத அடைப்புக்காலத்தை அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்

கார்த்திகையில் பிறந்த எனக்கு மழையால் ஆபத்தில்லை என்ற அம்மாவின் நம்பிக்கைக்குப் பின்னால் நான் பிறந்தபோது சாப்பிட்ட உணவுதான் காரணமாக இருந்தது.பேறுகால சாப்பாடு கொடுப்பதில் எவ்வளவு வறுமையில் இருக்கும் குடும்பமும் பின்வாங்குவதில்லை. ஒவ்வொரு பேறுகாலத்திற்கும் உறவினர்களும் அக்கம்பத்து வீட்டாரும் கொண்டு வந்து கொடுக்கும் பண்டங்களே நல்ல உணவாக இருக்கும்

வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமும் நெருக்கடியும் பழையகாலத்து நினைவுகளைக் கொண்டுவந்து சேர்க்கத்தான் செய்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்