முடிவிலிகளில் அலைபவர்களின் கவி அடையாளம்

தனியன்களின் தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கிறார்கள். வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லமு டியும்.ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதன்மீது அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதால், மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வார்கள்.

மேற்கில் இத்தகைய தனியன்கள் அதிகமும் செயல்பட்ட கலைவடிவம் ஓவியம். குறியீட்டியல், குரூரவியல், அபத்தவியல், மிகைநடப்பியல் ஓவியங்களை வரைந்தவர்களின் கலைத் தொகுதிகளைக் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள் நிகழ்காலத்தின் மீதான - அன்றாடத்தைக் கடப்பதின் மீதான அச்சமும் பதற்றமும் குலைத்துப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அத்தகைய ஓவியங்களை விவாதிக்கும் விமரிசகர்கள் அவ்வோவியங்களின் வழியாக பெருநகர வாழ்விற்குள் சிக்கித்தவிக்கும் தனியன்களின் முடிச்சுகளாக விளக்குகிறார்கள். இத்தனியன்களுக்கு மேற்கின் வாழ்க்கையில் - அவர்களின் சூழலில் மூர்க்கமாக மீறுவதற்குப் பலவும் இருக்கும். நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த சமயம், புது நம்பிக்கையாக மாறிய சட்டவிதிகள், களிப்பூட்டுவனவாகச் சொல்லப்பட்ட கொண்டாட்டங்கள், கோஷங்கள் என ஒவ்வொன்றையும் மீறிப் பார்க்க நினைக்கும்போது கலையின் பரிமாணங்கள் விரிந்துகொண்டே போகும். ஒன்றை வரையத்தொடங்கும்போதே, என்ன இப்படி இருக்க வைத்த கட்டுப்பாட்டை நான் மீறுகிறேன்; சிதைக்கிறேன்; குலைத்துப் போடுகிறேன் எனப் பிரகடனப்படுத்தும் ஓவியங்களை வரைந்துகொண்டே இருப்பார்கள். அப்படி வரையப்படும் ஓவியத்தொகுதி அவர்களின் முடிவிலியற்ற வாழ்வின் பரப்பாக மாறிவிடும்.
தமிழ்க்கலைப்பரப்பில் அப்படியான ஓவியர்களை அடையாளப்படுத்த முடியவில்லை. அதற்குப் பதிலாகக் கவிகள் அந்த இடத்தைக் கைப்பற்றித் தங்களை முடிவிலிகளின் தனியன்களாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஓவியத்தின் இடத்தைத் தமிழில் கவிகள் தனதாக்கிக் கொண்டு சில கணங்களை, சில காட்சிகளை, சில பரிதவிப்புகளை எழுதிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நெருக்கடிகள் எவை எனத்தீர்மானிக்கக் கூடிய குறிப்புகளைப் பரந்த வெளிக் குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ வைக்காமல் அவற்றையும் அவர்களது சொந்த வாழ்க்கையின் சுருங்கிய வெளியிலிருந்தே உருவாக்குகிறார்கள். மிகக்குறுகிய வெளிக்குள் தங்களைத் தாங்களே சிதைத்தும் குலைத்தும் வார்த்தைகளுக்குள் அலையவிடுகிறார்கள். அப்படிக் காட்டுவதில் ஏற்படுத்தும் சலிப்பால் அதிகம் எழுதாத கவிகளாகவும் தேங்கிப் போகிறார்கள். கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் கால் நூறு எண்ணிக்கையில் அப்படியான கவிகளை - கவிதைகளின் தொகுதிகளைப் பட்டியல் போடலாம்.
தமிழின் நவீன கவிகளில் மிகக்குறுகிய வட்டதிற்குள் வாசிக்கப்படும் கவிதைகளை எழுதுபவர்களின் கவிதைகளுக்குள் இருப்பவர்களை வெளியே தேடவேண்டியதில்லை. பெரும்பாலும் கவிகளின் தன்னிலைகளே சொல்லியாகவும் கேட்போராகவும் இருக்கின்றன. கவிதைச் செயல்பாட்டில் அல்லது தொடர்பாடலில் தங்களை முன்வைப்பதற்குப் பதிலாகத் தங்களின் மீதான ஒவ்வாமைகளுக்குள் நுழைந்து முடிவுகளைச் சொல்ல முடியாமல் முடிவிலிகளுக்குள் மாட்டிக்கொண்டதாய் பதற்றப்படும் அவர்களின் தன்னிலையைச் சின்னச் சின்னக் கூட்டமாகக் கூடக் காட்ட முடியாது.
வகைமாதிரிகளாகச் சொல்லமுடியாமல் ஒவ்வொரு தனியன்களாகவே இக்கவிகள் மிதந்து காணாமல் போகிறார்கள். தமிழ்ச் சமூகம் தங்களைக் கவனிப்பதில்லை என்ற கோபமும் ஒதுங்கிப் போகும் நிலைபாடுகளும் இருக்கும். குடிப்பதையும் தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருப்பதையும் தொடர்ந்து அவ்வகைக் கவிதைகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. பலரது வாழ்க்கையும் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. எழுதுவதற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்ந்து முடிந்தவர்களாக அவர்களைக் கொண்டாடும் கவிதை ரசனை, அப்படியானவர்களை உன்னதக கவி மரபினராக வளர்த்தெடுக்கிறது.
மறைந்து திரியும் தனியன்களான இப்பிம்பங்கள் அமைப்புகளுக்குள் இயங்கும் பாத்திரங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாவகைக் கட்டுப்பாடுகளையும் - அவை கட்டுப்பாடுகள் என்று அறிந்துகொண்டும் அதற்குள் உழலும் கணவன்மார்களையும் மனைவிமார்களையும் நகைத்துக் கேலி செய்வதற்கு முன்பு, காதலில் விழும் ஆண்களின், பெண்களின் அபத்தங்களையும் சிரித்துக் கடந்துபோகும். மாதச்சம்பள வாழ்க்கைக்குள் சுகம்காணும் மனிதர்களைச் சமூகவிரோதிகள் போலக் காட்டும் இவ்வகைக் கவிதைகள், அவ்வகை அமைப்புகள் மீது விமரிசனங்களை வைக்காமல், அவற்றுக்குள் இயங்கும் மனிதர்களையே நகைப்புக்குரியவர்களாகக் காட்டும் தன்மை கொண்டவை.
தங்களைச் சுற்றியிருக்கும் பேரமைப்புகளின் இயக்கத்தின் தர்க்கத்தையும் வன்முறை இயல்புகளையும் பேசத்தெரியாத இக்கவிகள், அதற்குள் நுழையாமல், வெளியேறித் தவ வாழ்க்கை அல்லது துறவு வாழ்க்கையில் இருப்பதாகப் பாவனை செய்து கொள்கிறார்கள். எழுத்து இதழின் வழியாக உருவாக்கப்பட்ட நவீனத்துவத் தனியன்களின் நீட்சியைக் கொண்டாடும் மனநிலையை 1990-களில் தோன்றிய இடைநிலை இதழ்களும், அவற்றின் பதிப்பக அமைப்பும் கைகழுவின என்றுகூடச் சொல்லலாம். அதன் காரணமாகவே இடைநிலை இதழ்கள், சிற்றிதழ் மரபுக்குள் இல்லை என்ற விமரிசனங்களும் எழுந்தன. அதற்குப் பின் தோன்றிய சிற்றிதழ்களில் அதிகமும் கவிதைகளே முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகவும் தனித்த அடையாளமாகவும் இருந்தன என்பதைக் கவனித்தவர்களுக்கு இது விளங்கலாம். உதிரித்தனம் கொண்ட இவ்வகைக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பதிப்பகமாகப் புது எழுத்துப் பதிப்பகம் கடந்த பத்தாண்டுகளில் செயல்பட்டுள்ளது. அதே நேரத்தில் புது எழுத்து பதிப்பகத்தின் நோக்கமே அதுதான் என்றும் சொல்ல முடியாது. தமிழின் நவீனக் கவிதைகளைப் பதிப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்திற்குள் இவ்வகைக் கவிதைகள் பாதிக்குமேல் பதிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் கவிதைத்தொகுதிகளைத் தனித்தனியாகப் பேசுவதைவிடவும் ஒரு போக்காகக் காட்டி விவாதிக்க வேண்டும். அவ்விவாதம் தமிழின் நவீனத்துவக் கவிதைகளின் இயங்குநிலையை அறிமுகப்படுத்தும் விவாதமாக அமையக்கூடும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்