நிகழ்வுகள் - நபர்கள்- நீதிகள்

மதுவும் மரணங்களும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நாற்பது நாள் இடைவெளிக்குப் பிறகு நீக்கப்பட்ட தடையின் வேகம், காட்டாற்று வெள்ளமாய்ப் பாய்ந்தது. குடியின் விளைவுகள் - தனிமனிதர்கள் மற்றும் சமூகநிலையில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியாமல் நடப்பதல்ல குடிப்பழக்கம். அறிந்தே நடக்கும் ஒன்றை நிறுத்துவதற்குச் சட்டங்கள் எவ்வளவுதூரம் உதவும் என்பது கேள்விக்குறி. அதேபோல் பாவங்கள் எனச் சுட்டும் சமயநீதிகளும் வெற்றிபெற்றதாகப் புள்ளிவிவரங்கள் இல்லை. நீதிநூல்களும் சமயநம்பிக்கைகளும் பன்னெடுங்காலமாகப் பட்டியலிடப்பட்ட குற்றங்களை மனிதர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். மீறலில் இருக்கும் கொண்டாட்ட மனநிலையோடு குற்றங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். இன்று திரும்பவும் மதுக்கூட விற்பனைகள் நிறுத்தப்படலாம். நீதிமன்றத்தின் இந்த இடையீடு மிகக் குறுகியகாலத் தடைதான். திரும்பவும் அணை திறக்கும்போது பெரும் சுழிப்புடன் ஓடும்

மதுப்பழக்கம் பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது. எனது உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப் பழக்கமும் குடியடிமைத்தனமும் இருந்துள்ளன. என்றாலும் சாவு வீட்டில் அழுது புரண்டவர்கள் அதை மறக்கக் குடிக்கே திரும்புவதைப் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். அந்தரங்க வெளி எது? பொதுவெளி எது? என்ற குழப்பம் பொதுப்புத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாதது. இவ்விரண்டும் உருவாகும் புள்ளிகளும் கோடுகளும் பற்றிய புரிதல் இருக்குமென நம்பும் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கூட அந்தக் குழப்பம் இருப்பது சிக்கலானது. இந்திய/ தமிழ்ச் சூழலில் மதுப்பழக்கம் எப்போதும் தனிமனித அந்தரங்கத்தின் பகுதியே. அந்தரங்கத்தை நட்போடு பகிர்ந்து கொள்வார்கள்; இணைந்துகொள்வார்கள்; பிரிவார்கள்; நிறுத்தவும் செய்வார்கள். ஆகவே பொதுவெளியில் விவாதிப்பதை விரும்ப மாட்டார்கள்.

தனிமனித அறம், சமூக அறம், பொது அறம் என அறங்களைப் பிரித்துப் பேசும் திருக்குறள் கூடக் கள்ளுண்ணாமையைத் தனிமனித அறத்தின் பகுதியாகவே வைத்திருக்கிறது.கள்ளுண்ணாமை அதிகாரம் நட்பியல் என்னும் பெரும்பிரிவுக்குள் இருக்கிறது. கள்ளுண்பதால் உடலின் ஒளி குறைந்துவிடும்; சான்றோர்கள் உன்னை நினைக்கமாட்டார்கள்; நாணம் கெட்டுவிடும்; உடலின் மென்னுணர்வு போய்விடும்; அது ஒருவிதத்தில் நஞ்சு போன்றது; தெரியாமல் அருந்திவிட்டுக் குடிப்பதே இல்லையெனப் பொய்பேசவைக்கும்; உடல் சோர்வு உண்டாகுமென நண்பனுக்குச் சொல்லும் அறிவுரையாகவே சொல்கிறது. ஆனால் திருவள்ளுவருக்கு முந்திய காலம், நட்பின் நெருக்கத்தைக் காட்டும் அடையாளமாகக் கள்ளுண்ணுதல் இருந்திருக்கிறது. புலவு மணம் வீசும் தன் தலையைத் தன் நறவுமணம் கொண்ட கையால் தடவிக்கொடுக்கும் அதியமான் கொஞ்மாக்க் கிடைத்தால் எனக்குக் கொடுப்பான்; நிறையக் கிடைத்தால் இருவரும் சேர்ந்து குடிப்போம்; நான் பாடுவேன்; அவன் கேட்டு மகிழ்வான் எனச் சொல்கிறாள் கவியும் பாடினியுமான ஔவை. அவளது புறப்பாடல் (235) வரிகள் இவை: இவ்வரிகளில் வெளிப்படும் உணர்வு குற்றவுணர்வல்ல; இப்போது அவன் இல்லை என்ற சோகம் இதில் இழையோடுகிறது என்றாலும் குடியால் செத்துவிட்டானே என்று அவள் மனம் அழவில்லை.

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே 

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே

சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே

பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே

என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே

அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே

நரந்த நாறுந் தன்கையாற்

புலவு நாறு மென்றலை தைவரு மன்னே

அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்

சென்றுவீழ்ந் தன்றவன்

அருநிறத் தியங்கிய வேலே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்

பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்

சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்

றீயாது வீயு முயிர்தவப் பலவே.

மது அருந்துதல் ஐரோப்பா போன்ற பனிப்பரவும் நாடுகளில் உணவின் பகுதியாக இருக்கிறது. இந்தியா போன்ற வெப்பப்பிரதேச நாடுகளில் அப்படி இருக்க வேண்டியதில்லை. என்றாலும் உடல் உழைப்பில் ஈடுபடும் மனிதர்களுக்கு அஃதொரு வலி மறப்பு மருந்தாக இருந்திருக்கிறது; இருக்கிறது. உடல் உழைப்புக்குழுக்களைப் போல மூளை உழைப்புக் குழுக்கள், தங்கள் மனச்சோர்வை நீக்கும் மருந்தாக நினைத்துக் கைக்கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் தங்கள் நிலப்பரப்பில் விளைந்த தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாறாகவே இருந்துள்ளன. அதனை இடம்பெயரச்செய்யும் விதமான அயல் பிரதேசக் குடிபானங்கள் வந்தபோது எதிர்ப்புணர்வும் கூடியிருக்கிறது. உள்ளூர்த் தேறலோடு யவனச் சரக்கு வந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. உடல் மற்றும் மனச்சோர்வின்போது அதைப் போக்கும் மருந்துகளில் ஒன்றாக குடியும் குடிசார் மனநிலையும் இருந்ததிலிருந்து மாறியபோது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பரப்புரைகள் தோன்றியுள்ளன.நிகழ்காலத்தில், தனிமனிதப் பழக்கம் சமூகத்தின் வேலைத்திட்டமாகவும், அரசின் பொருள்வருவாய்க் காரணியாகவும் ஆகியிருக்கிறது. அந்தக் காரணம் பற்றிக் குடியும், குடிப்பொருள் விற்பனை அமைப்பும் விமரிசிக்கப்படவேண்டியன. நமது நிகழ்கால வாழ்க்கை முறைகளும் அதனை அனுமதிக்கும் அரசுகளும் தனிமனித அந்தரங்கங்கள் பலவற்றைப் பொதுவெளிக்குரியதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

அனைத்துமக்களுக்குமான அரசுகள் குடிப்பொருளாதாரத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அத்தோடு அரசியலற்றவர்களாகத் திரள்மக்களை மாற்றிக் குற்றவாளிகளும் கெடுமதியாளர்களும் அரசதிகாரத்தைக் கைப்பற்ற மதுப்பழக்கமும், அதனால் கிடைக்கும் பொருளாதாரமும் காரணமாக இருக்கின்றன என்பது நிகழ்கால உண்மை. இதனாலேயே எதாவதொரு காரணம்பற்றி மதுவுக்கெதிரான கருத்துரைகளை வைத்து விடவேண்டுமெனப் பரப்புரையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பரப்புரைகள் எங்கும் எடுபடுவதில்லை; எதிலும் எடுபடுவதில்லை என்பதும் நடைமுறை உண்மை


டாஸ்மாக் திறப்பு- மூன்று முன்னெடுப்புகள்

மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன. திறப்பை முன்வைத்து மூன்று முன்வைப்புகளில் விவாதிக்க வேண்டும்.

1. ஒழுக்கம், மதிப்பீடுகளை முன்வைத்துப் பேசும் பண்பாட்டியல் பார்வை.

2. நெருக்கடியான காலகட்டத்தில் நல அரசாங்கம் எனக் காட்டிக்கொள்ளத் தேவையான நிதிவருவாயைப் பெருக்கும் பொருளியல் பார்வை.

3. கூட்டம் சேர்ந்தால் நோய்த்தொற்றுப் பெருகும் என்பதோடு மதுபானம் ஒவ்வொரு உடலிலும் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து கோவிட் -19 என்னும் கொரோனாவின் குடியிருப்பாகிவிடும் என்னும் மருத்துவப்பார்வை

பண்பாட்டியல் பார்வையில் மதுவிலக்கின் தேவைகளைப் பேசுவது காலச்சூழலைப் புரிந்துகொள்ளாத நிலை. தமிழர்கள்,இந்தியர்கள் உள்ளிட்ட மனித வாழ்வில் மதுபானங்கள் கேளிக்கையும் களிப்பும் உண்டாக்குவனவாக எப்போதும் இருந்துள்ளன. பலநேரங்களில் உணவாகவும் மருந்தாகவும் கூட இருந்துள்ளது. உலகநாடுகளில் பெரும்பாலானவை இதனை ஏற்றுத்தான் மதுவிலக்கை நடைமுறை ப்படுத்தாமல் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பல்நோக்கு அங்காடிகளில் மதுபானப்பகுதியையும் ஒரு பகுதியாக வைத்துள்ளன. அதையும் தாண்டி உணகங்கள், கொண்டாட்ட விடுதிகள், பிறந்தநாள், மணநாள், வெற்றி-, தோல்விகளைக் கொண்டாடும் நாட்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் தேவைக்காகத் தனிக்கடைகளையும் நடத்துகின்றன. எல்லா நிலையிலும் உலகமயத்திற்குள் நுழைந்துவிட்ட இந்திய/ தமிழ் வாழ்வில் மதுவிலக்கு எனப் பேசுவது பொருத்தமற்ற பேச்சு.

மதுவைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டுள்ள புனைவுகளையும் தனிமனித/ சமூக ஒழுக்கம்சார் மதிப்பீடுகளையும் களைய வேண்டும். இதனை விளக்கும் பரப்புரைகள் இப்போது தொடங்கப் படவேண்டியன அல்ல. ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலும்கூட ஒருபகுதியாகவே இதனை உணரச்செய்யலாம்.

*****

இந்தியாவின் மத்திய/ மாநில அரசுகளின் முக்கியமான வரிவருவாயில் ஒன்றாக இருப்பது மதுபானம். மதுபானங்கள் தயாரிப்பை ஒரு தொழிலாக நடத்த அனுமதிக்கும் அரசுகள் அதன் மூலம் உற்பத்திவரியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தயாரிப்புக்குப் பின்னர் விநியோகம் செய்யும்போதும் வரிவருவாய் உண்டு. வரிவருவாய் மட்டும் போதாது என்ற நிலையில்தான் மாநில அரசுகளே விற்பனையை நாட்டுடைமையாக்கி முழுப்பங்கையும் அரசின் பணப்பெட்டகங்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. அந்தப் பணத்தில் தான் இந்த அரசுகள் நிர்வாகச் செலவையும் நலத்திட்டங்களையும் நடத்துகின்றன. சுதந்திர இந்தியாவின் தொடர்ச்சியான நடைமுறை இது. என்றாலும் முதல் முன்வைப்பான பண்பாட்டு முகத்தைக் காட்டிக் கொள்ளவே அரசுகளும், ஆட்சியாளர்களும் விரும்புகின்றனர்.மதுவிலக்கே லட்சியம் என்பதன் பின்னணியில் இருப்பது ஒரு பாவனை. நடைமுறையை மறைத்துக்கொள்ளும் பாவனை.

எல்லாவகையான வரிவருவாயையும் ஒருமுகப்படுத்தித் தன்வசப் படுத்திக்கொண்டுவிட்ட மைய அரசு, தீர்மானத்துடன் மக்கள் நலனைக் கைவிட்ட நிலையில் மாநில அரசுக்கு வருவாய் தேவைப்படுகிறது. ஆகவே மதுபானக்கடைகள் திறக்கப்படுகின்றன என்பதுதான் அரசின் -ஆளுங்கட்சியின் சார்பாளர்கள் சொல்லாத உண்மைகள்.

*****

மூன்றாவது முன்னெடுப்பு மருத்துவம் சார்ந்தது;.அதேநேரத்தில் தற்காலிகமானது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கோவிட் -19 என்னும் உயிர்கொல்லி நோய் கூட்டத்தை விரும்பும் ஒன்றாக இருக்கிறது. சேரும் கூட்டத்தின் வழியே பரவும் அதனை விரட்டும் வழிகளில் ஒன்றாக இருப்பது தனித்திருத்தலும் விலகியிருத்தலும். பணி இடங்களிலும் வழிபாட்டிடங்களிலும் அன்றாடத் தேவைகளுக்கான சந்தைகளிலும் கூட்டம் சேரக்கூடாது என்று தடைவிதித்து நடைமுறைப்படுத்தும் அரசு, கூட்டம் கூடுவதை உணராத மனநிலையை நோக்கித் தனிமனிதர்களை நகர்த்தும் மதுபானக் கூடங்களைத் திறப்பதின் மூலம் தான் போடும் சட்டங்களுக்கும் உருவாக்கும் விதிகளுக்கும் எதிராகச் செயல்படும்படி மக்களைத் தூண்டுகின்றது என்றே சொல்ல வேண்டும். வாங்க வருபவர்களை ஒழுங்கபடுத்தும் நடைமுறைகளைச் செய்துவிடலாம் என்றாலும், குடிப்பவர்களின் சேர்ந்திருக்கும் ஆசையைத் தவிர்க்கமுடியுமா என்பது கேள்விக்குறி. மதுவருந்துவதையே சேர்ந்திருப்பதற்கான வாய்ப்பாக நினைக்கும் மன அமைப்புகொண்ட சமூகங்களே அதிகம். மதுவுக்குப் பின்னான நடைமுறைகள் கொண்டாட்டங்கள்; களியாட்டங்கள்; திருவிழாக்கள் போன்றவற்றோடு அடையாளப்பட்டுள்ளன. நண்பர்களோடு உரையாடுவதின் தேவையாகவாவது மதுபானத்தை நினைக்கிறார்கள் மனிதர்கள்.

உடல் உழைப்பின் களைப்பைப் போக்கும் நிவாரணியாகவும், சாக்கடை சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல் போன்று தாங்கள் செய்யும் தொழில் தரும் அருவெறுப்பை மறக்கச்செய்யும் மாற்றாகவும்கூட மது இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் அது. தனித்திருத்தலையும் விலகியிருத்தலையும் அனுமதிக்காது என்பதுதான் இன்னொரு உண்மை. இந்நடைமுறை உண்மைகளோடு, மதுவை உள்வாங்கும் உடல்,வழக்கமான நோய் எதிர்ப்புசக்தியை இழக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்ட உடல்நல அறிவியல் சொல்லும் உண்மைகள். இவ்வுண்மைகள்தான் இப்போது கவனம் கொள்ளவேண்டியவை..

**********

தமிழக அரசு மதுபானக்கடைகளைத் திறப்பதைத் தள்ளிப்போட வேண்டும். முதலிரண்டு முன்வைப்புகளைக் காட்டித் திறக்க நினைக்கக் கூடாது. மூன்றாவது முன்வைப்பு தற்காலிகமானதுதான். ஆனால் அதுதான் இந்த நேரத்துக்குரிய ஒன்று. கொரோனா என்னும் உயிர்கொல்லியிடமிருந்து மக்களைக் காப்பதற்காகக் கடந்த நாற்பது நாட்களைத் தாண்டிவிட்ட மாநில அரசு- அதன் பொறுப்பாளர்கள், தங்களது நல்லெண்ணத்தை- மக்கள் நல ஈடுபாட்டைக் காட்ட இதைத்தவிர வேறுவழியில்லை.

ஜெ.அன்பழகனின் மரணம்

எல்லா மரணங்களும் தனிநபர் மரணங்களாகக் கடந்துபோய்விடக்கூடியன 

அல்ல. திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை நகரத்தின் களப்பணியாளர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்த ஜெ.அன்பழகனைக் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்குப் பலிகொடுத்துள்ளது. அவரது மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திரண்ட மக்கள் கூட்டத்தைத் தொலைக்காட்சி வழியே பார்த்தபோது அவரது கட்சிப் பற்றும் கட்சியின் வழியே மக்களைத் தொடர்கொண்டு செய்யும் பொதுப்பணிகளில் அவர் காட்டிய பொதுநோக்கும் புரிகிறது. தனது மரணத்தின் மூலம் தமிழக மக்களுக்கு கோவிட்19 என்னும் நுண்கிருமியின் வழியே பரவும் தொற்றுநோயின் தீவிரத்தைப் புரியவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.


அவரது குடும்பத்திற்குச் சொல்லமுடியாத இழப்பு. 
அவரது கட்சிக்கு இழக்கக்கூடாத பேரிழப்பு. 
கொரோனா நோயோடு போராடும் பலருக்கும் 
கடக்கமுடியாத இன்னொரு நாள்.
இன்னும் இன்னுமாய்
இத்தகைய நாட்கள் வரப்போகின்றன
என்பதுதான் அச்சம்தரும் கவலை.

ஆணவ நகைப்புகள்

சமூகங்களின் வரலாற்றைப் பொருளாதார உறவுகளின் விரிவாகவும் விளக்கமாகவும் முன்வைத்த வரலாற்றுப் பொருள் முதல்வாதம், நிலமானிய சமூகத்திற்குப் பிறகு முதலாளிய சமூகம் உருவாகும் என்று விளக்கியது. இருவேறு வர்க்கங்களின் முரண்பாடாகச் சமூகத்தைப் பிரித்துப் பேசிய அது, முதலாளிய சமூகம், நீண்டகாலத்தைக் கொண்டிருந்த நிலமானிய சமூகம் போன்றதல்ல என்றும் விளக்கியது. முதலாளிய சமூகத்தின் ஆளப்படும் வர்க்கமான தொழிலாளி வர்க்கம் விரைவான மாற்றங்களை முன்னெடுக்கும் தன்மைகொண்டது. வேகமாக ஒன்றுபடும்; வேகமாக முதலாளிய சமூகத்தை மாற்றும் என்றெல்லாம் விளக்கியது. இயங்கியல் பொருள்முதல்வாதத்தை விளக்கும்போது அதன் இணையாகவே வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் முன்வைக்கப்பட்டது. கார்ல்மார்க்சும் பிரெடரிக் எங்கல்சும் திரட்டிய தகவல்களைக் கொண்டு இவற்றையெல்லாம் விளக்கும்போது ஆசிய நாடுகளின் பொருளியல் உறவுகள் நிலமானிய சமூகத்தின் அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் கருதினார்கள். அதற்காகவே இச்சமூக அமைப்பை ஆசியத்தன்மை கொண்ட சமூகம் எனக் குறிப்பிட்டார் மார்க்ஸ். அதிலும் பிரிட்டிஷாரின் வருகைக்கு முந்திய சமூகங்களை நிலைபெற்ற - மாறாத - மாற்றத்தை விரும்பாத சமூகங்கள் என விளக்கினார்.

ஒருவிதத்தில் தன்னிறைவு கொண்டதாகவும் தனக்குத்தானே உற்பத்திப் பொருள்களைப் பங்கிட்டுக் கொள்ளும் உறவுகளைக் கொண்டிருக்கும் இந்தியக் கிராமங்களைப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினர் பெரிய அளவு மாற்றிவிட முடியாது என்று சொன்னார். கடவுளை எல்லாவற்றுக்கும் காரணமாக்கி வாழ்வியலைக் கட்டமைத்துக்கொண்ட இந்தியக் கிராமசமுதாயத்தைத் தனது மூர்க்கமான நாத்திகத்தால் பெரிதாக அசைத்துப் பார்க்க முடியாமல் தவித்தவர் பெரியார் ஈ வே.ரா. தொடர்ச்சியான தனது பரப்புரைகளால் நிறைவேற்ற முடியாத முன்னெடுப்புகளைச் சட்டங்களினால் நிறைவேற்ற முடியும் எனக் கருதியதால் தான் தேர்தல் அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களின் உதவியையும் நாடினார். அவரது செயல்பாடுகளும் பரப்புரைகளும் எப்போதும் வெகுமக்களை நோக்கிப்பேசும்/ வினையாற்றும் தன்மையிலேயே இருந்தன. ஆனால் அந்த வினைகளையும் பரப்புரைகளையும் தங்களுக்கெதிரானதாக நினைத்தனர் பிராமணர்கள். ஒருபக்கம் தாங்களே அறிவியக்கவாதிகளாகக் காட்டிக்கொண்டு, சமயச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தாதவர்களாகவும் நகர்ந்தார்கள். இப்போதும் அதே நிலைபாட்டையே மேற்கொள்கிறார்கள்.

பெரியார் ஈ. வே.ராமசாமியை எதிராக நிறுத்துவதென்பது ஒருவிதத்தில் அறிவியக்கத்திற்கும் வேறுபாடுகளைப் பேசிக் களையச் செய்யும் சமூக மாற்றத்திற்கும் எதிராக இருப்பதாகும். இதை அவரது விமரிசகர்களும் எதிர்ப்பாளர்களும் புரிந்திருந்தபோதும் ஒத்துக் கொள்ளாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பெரியாரையே எல்லாத் தீமைகளுக்கும் தோற்றக் காரணமாகச் சொல்வதைக் கைவிடும்போது, அந்த இடத்தில் கலைஞர் மு.கருணாநிதியால் பதிலீடு செய்கிறார்கள்.

பெரியார் எதிர்ப்பும் கருணாநிதி எதிர்ப்பும் வேறுவேறாக இருக்கலாம் என்று நினைப்பவர்களைக் கவனமாக ஒன்றாக்கி, இரண்டுமே ஒன்று என ஆக்கி விடுகிறார்கள். சமயவாதம், சமயநம்பிக்கையின் மேல் செயல்படும் தர்க்கம் எல்லாம் எதிரிகளை மூர்க்கமாகத் தாக்கிவிட்டு நகைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. அச்சிரிப்பு ஒருவிதத்தில் ஆணவச் சிரிப்புகள்.

ரகசியத்தின் திரைகள்

அஸ்வினி கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

அவளைக்கொன்ற அழகேசனின் விருப்பம் தற்கொலை.

கொலைக்கும் தற்கொலைக்கும் காரணம் காதலெனச் சொல்லப்படுகிறது. 

இது காதலின் பெயரால் காதலைக் கொல்வதன்றி வேறில்லை
காதல் என்னும் சொல் ஒருவிதத்தில் நோயைக் குறிக்கும் சொல்லே. அது மனநோய் எனப் பலரும் கருதுவதுபோல, மனதில் தோன்றி மனதிலேயே வளர்ந்து மனதைச் சிதைத்து அழித்துக்கொல்லும் நோய் என்று சொல்ல முடியாது. எல்லாத் தேசங்களிலும் பண்பாட்டிலும் காதலின் தொடக்கம் உடல்களாகவே இருக்கின்றன. ஆணுடலும் பெண்ணுடலும் ஈர்க்கப்படுதலின் காரணங்கள் மனமாக இல்லை. உடல்களாகவே இருக்கின்றன.

” உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்; என்னிடத்தில் உன்னைக் கொடு; அப்படியே உன்னை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்”
எனச் சொல்லும் காதலின் மொழிகள் பருண்மையான உடலைக் குறிவைத்தே அர்த்தம் பெறுகின்றன. ஆனால் விளக்கவுரைகள் சொல்லும்போது அரூபமான மனச் சலனமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உடல் நோயாகத் தொடங்கி மனநோயாக மாறும் இந்த வேதிவினையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிய வைக்க முயற்சி செய்யவேண்டும். அந்த முயற்சியின்போது தனிநபர்களான ஆணும் பெண்ணும் இருந்து வெளியேறும் குடும்பத்தின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப அமைப்பு தனி அலகல்ல. அதொரு சமூக நிறுவனம் .அதன் வேர்கள் நீளும் சாதியும் மதமும் வாழிடம் என்னும் பரப்பும் இந்திய வாழ்க்கையில் முக்கியமானவை. இங்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பங்காற்றும் கருவிகளாக அவை இருக்கின்றன.

இவையெல்லாம் காதலை மையமிட்டு விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் விவாதிக்கும் வெளிகளைத் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. 
எங்கே விவாதிக்கலாம்?
எந்த வயதில் விவாதிக்கலாம்?.
எப்படி விவாதிக்கலாம்? 
கருத்துரைகளாக விவாதிக்கலாமா? 
செய்முறையோடு விவாதிக்கலாமா? 
இன்னும் நாம் முடிவுசெய்யவில்லை.


காதலைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்காத நிறுவனங்களாகவே நமது மரபான அமைப்புகள் இருக்கின்றன. நமது சமூகத்தை முன்னகர்த்திவிட விரும்பி உருவாக்கியுள்ள பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வி நிறுவனங்களும் தங்களின் வேலைத்திட்டங்களுக்குள் அதனைக் கொண்டுவரவில்லை. நமது குடும்பங்கள் காதலைச் சொல்வதில்லை.

அதன் உறுப்பினர்கள் அதனை விவாதிப்பதில்லை. அவை எதிர்க்கின்றன. மூர்க்கமாக எதிர்க்கின்றன.
நமது பள்ளிப்படிப்புகள் அந்தச் சொல்லையே அழித்துவிட நினைக்கின்றன. 
நமது கல்லூரிப் படிப்புகள் அந்தச் சொல்லின் அர்த்தங்களை மாற்றுவிட முடியுமென நம்புகின்றன

இதே வேளையில் ஒவ்வொரு தனிநபர்களையும் அதனதன் போக்கில் வழி நடத்தும் ஊடகங்களும் பண்பாட்டு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாக நம்பிக்கொண்டிருக்கும் சமய நிறுவனங்களின் வழிபாட்டுக் கூடங்களும், சடங்குகளும் காதல் என்னும் சொல்லோடு நெருங்கிய தொடர்புடைய இன்னொரு சொல்லை அறிமுகம் செய்கின்றன. அந்தச் சொல் காமம். காமமும் வெளிப்படையாகக் கற்றுத்தரப்படுவதற்குப் பதிலாக ரகசியமாக்கப்படும் மொழியில் அறிமுகமாகின்றது.
ரகசியமாக்கப்படும் ஒவ்வொன்றோடும் புனிதங்களின் சாயைகள் படர்வதைத் தடுக்கமுடியாது. நமது சமூகமும் அதன் நிறுவனங்களும் காதலையும் காமத்தையும் ரகசியமாக்கி வளர்க்கின்றன. அதனால் புனிதங்களின் திரைகளோடு நகர்கின்றன. அந்தத் திரைகள் காதலின் பெயரால் கொலைகளையும் தற்கொலைகளையும் ஊக்குவிக்கின்றன. ரகசியத்தின் திரைகளை விலக்காதவரைக் காதலின் பெயரால் எல்லாம் - தன்னழிப்புகளும் பிறவழிப்புகளும் - தொடரவே செய்யும்.


ஆண்டாளென்னும் கவி

இலக்கியப்பிரதிக்குள் வெளிப்படும் தகவல்களும் உணர்ச்சிகளும் எழுதியவளின்/னின் தன்னிலை வெளிப்பாடு எனத் தீர்மானமாகப் பேசும் விமரிசனமுறை பிரதியை மட்டுமே ஆதாரமாகக்கொள்ளாது. அப்பிரதியின் காலம் பற்றிய ஒதுக்கமுடியாத பிற ஆதாரங்களையும், எழுதியவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகமான தகவல்களையும் கொண்டுதான் முடிவுசெய்யும்.

ஆண்டாளைப் பொறுத்தவரையில் அவள் எழுதிய திருப்பாவை என்னும் 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி என்னும் 143 பாடல்களையும் கொண்ட பிரதி ஆதாரம் மட்டுமே உள்ளன. இப்பிரதிகளின் வெளிப்பாட்டுத்தன்மை, உணர்வெழுச்சிகள் எல்லாம் ஒரு பெண் தன்னிலையின் உடல் வெளிப்பாடுகளாகவும் மற்றும் மன வெளிப்பாடுகளாகவும் குறிப்பான வெளிக்குரியதாகவும் குறிப்பான காலத்தில் வாசிக்கத்தக்கனவாகவும் முன்வைக்கின்றன.

கடவுளின் மீதான காதல் என்னும் மையத்தில் நின்றுகொண்டு தன்னை -உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அளிக்க நினைக்கும் மனநிலை அது. அந்தவகையில் ரசிக்கத்தக்க கவிதை வெளிப்பாடு. இதனைத் தாண்டி அவளைப்பற்றிய தகவல்களும் வரலாறுகளும் கவிதைப்புனைவைவிடக் கூடுதல் புனைவுகள் நிரம்பியவை. புனைவான வரலாற்றைக்கொண்டு அவளைத் தெய்வப்பெண் எனவோ தேவதாசியெனவோ முடிவுசெய்வது இலக்கிய விமரிசனத்தின் எல்லைகளுக்குள் இல்லை. அவையெல்லாம் தனிமனித இச்சைசார்ந்த குறிப்புகள்.


கொங்குதேர் வாழ்க்கை: வகையறியாத் தொகை

எல்லாவகைச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையான அறிவு வேண்டும். அந்த அடிப்படை அறிவு வகைப்படுத்துதலில் தொடங்குகிறது. இயற்கைப் பொருள் இவை; செயற்கைப்பொருள் இவை என வகைப்படுத்தத் தெரியாமல் உலகத்தின் இருப்பை நீங்கள் தொகைப்படுத்திட முடியாது.

ஒருமொழியில் எழுதப்பெற்ற கவிதைகளைத் தொகையாக்கித் தரும் முயற்சி மொழிக்குச் செய்யும் ஒரு பணிதான். அந்தப் பணியில் இறங்குவதற்கு முன்னால் வகைப்படுத்துதல் என்னும் அடிப்படை அறிவோடு இறங்கவேண்டும். சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களுக்கு அகம் எது? புறம் எது? என்ற அடிப்படை அறிவு தெரிந்திருந்தது. அது ஒன்றே போதும் என்ற புரிதலுடன் தொகுத்தார்கள். நுட்பங்களுக்குள் நுழைந்தால் விளக்கம் தரவேண்டியதிருக்கும் என நினைத்தபோது கவிதைகளின் வரிகளை மட்டும் வைத்துக் குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, நெடுந்தொகை என்னும் அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் எனவும் பத்துப்பாட்டு எனவும் பிரித்தார்கள். அதற்குள் நுட்பம் காட்டவேண்டுமென நினைத்தபோது திணையின் அடையாளங்கள் கூறிப் பகுத்துச் சொன்னார்கள். 

நவீனக் கவிதையைத் தொகைப்படுத்த நினைப்பவர்கள் கவிதை நுட்பங்களான உரிப்பொருட்கள், கருப்பொருள் அடையாளங்கள், சொல்முறைமைகள், தன்னிலை உருவாக்கம், இருப்பின் மீதான விமரிசனம் என எதையும் பார்த்து வகைப்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதில்லை. அது முடியவில்லை என்றால் எந்திரத்தனமான வகைப்பாட்டு முறையையாவது பின்பற்ற வேண்டும்.அதையும் செய்யாமல் “ கவிதை என்றால் நான் மனதிற்குள் நினைப்பதின் அடிப்படையில்” தொகுக்கிறேன் என்ற போக்குதான் இருக்கிறது. மனதில் நினைப்பது இதுதான் என்றுகூடச் சொல்வதில்லை.வகைப்படுத்தித் தொகையாக்குவது எளிய அடிப்படை விமரிசனப்பார்வை. இதையே மறுக்கும் விமரினப்பார்வைதான் தமிழின் “ மேன்மை”யான பார்வை.
தமிழ் ஆய்வுக்குள் நுழைந்து விலகிய ராஜமார்த்தாண்டனுக்குத் தொகை நூல்களின் முறைமைகள் தெரியாததில்லை. அதைக்குறிப்பிட்டுக் கேட்ட போதுகூட அவர் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றுதான் சொன்னார். இப்படிச் சொல்வது அடிப்படையில் தான், தனது, என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு.ராஜமார்த்தாண்டன் என்னும் மனிதர் அகங்காரம் ஏதுமற்ற அமைதியான மனிதர். பழகிய எனக்கும் தெரியும் . இப்படி எளிமையாகவும் மென்மையாகவும் இருந்தது புறநிலை . ஆனால் அவரது அகநிலையில் கவிதை என்பது விளக்கமுடியாத அநுபூதி என்ற அகங்காரப்பார்வை இருந்தது. அவர் போட்ட விதையின் மரத்தில் போடப்படும் ஒட்டு வேறொன்றாக ஆகமுடியாமல் தவிக்கிறது..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்