நிகழ்த்துதலின் வண்ணங்கள் - மௌனகுருவும் சேரனும்

வேறுவேறு இயல்புகளைக் கொண்ட நிகழ்த்துகலைகளைக் கலந்து புத்தாக்கம் செய்வது அவரது பாணி. இசையிலும் அசைவிலும் ஒப்பனையிலும் வேறுபட்ட பாணிகளைக் கலவையாக்கிப் புதியன செய்தல் காலத்தின் தேவைகூட. அதிலும் குறிப்பாகப் இன,மொழி, சமய, பண்பாட்டுக்கூறுகளில் வேறுபாடுகள் நிலவும் ஒரு தேசத்தின் புத்தாக்கக் கலை ஒன்றிற்கு மற்றொன்று கொடுத்தும் கொண்டும் உருவாகித்தான் ஆகவேண்டும்.
நாட்டார்கலைகள் செவ்வியல் கலைகளாக மாறவேண்டுமா என்று கேட்டால் அது தனி விவாதம். என்னைக்கேட்டால் வேண்டாம் என்பேன். ஆனால் இரண்டின் இணைவும் காலத்தின் தேவை. பேராசிரியர் மௌனகுருவின் வேலைகள் அப்படித்தான் இருக்கின்றன.
மரபான நாட்டார் அரங்கியல் கலைகள் - அவை ஆட்டங்களாயினும் நிகழ்கலைகளாயினும் இரண்டு கூறுகளையும் மேடையில் காட்சிப்படுத்துவதை முதன்மையாகச் செய்கின்றன. பின்னரங்கிலோ வலப்புறத்திலோ இசைக்குழுக்கள் அமர்ந்திருக்க, ஆட்டக்காரர்கள் அதே மேடையில் இசைக்குழுவிற்கு முன்பு அல்லது இடதுபுறத்தில் நிகழ்த்துகிறார்கள். அதேபோல் நடிகளின் அசைவுகள் சமதளப்பரப்பில் கிடைநிலை அசைவுகளாகவே இருக்கின்றன. உடல்கள் வட்டக்கிறுக்கிகளாகச் சுற்றி நிற்கின்றன; அசைகின்றன; நேர்கோட்டுநிலையிலும் குறுக்குக் கோட்டு அசைவுகளாகவும் அசைகின்றன. ஓரிடத்தில் நின்று உடலின் ஒரு பாகத்தின் பாவனைகளை முழுமையாகக் காட்டும் குவிமையத்தை அவை தேர்வதில்லை. மொத்த உடலும் அசைகின்ற நிலையில் தான் அவை வெளிப்பாடுகளைச் செய்கின்றன. இப்போதுப்போக்கிற்கேற்பவே இசைக்கருவிகளும் தொடர்ச்சியாக இசைக்கின்றன. இசைப்பதில் வன்மை மென்மை உண்டு. அதிகமும் மௌனமாக்குதல் குறைவு.
இதற்கு மாறானதாகச் செவ்வியல் கலைகள் மௌனப்படுத்துதல், நிலைப்படுத்துதல், ஒற்றை உறுப்பின் தனித்திறனைக் குவிமையமாக்குதல் என்பனவற்றைக்கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப இசைக்கருவிகள் சேர்ந்திசைப்பதில் அதிகக் கவனம் செலுத்தாமல் தனித்தனிக்கருவிகளாக இசைத்து, நிகழ்த்தும் உடலோடு இணைந்துகொள்கின்றன. பரதத்தில் இக்கூறுகளைப் பார்க்கலாம். எவையெல்லாம் செவ்வியல் கலைகளாக மாறுகின்றனவோ அவை இத்தன்மைக்குள் நகர்கின்றன. கதகளியில், மோகினியாட்டத்தில் யட்சகானத்தில் இத்தகைய நகர்வுகள் நடந்துள்ளன. தெருக்கூத்திலும் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
கருத்துகள்