மிதந்த கனவு - முதல் விமானப்பயணம்

முதல் விமானப்பயணத்திற்கான வாய்ப்பொன்றைப் பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டிலேயே உருவாக்கிந்தது. எனது பெரும் ஆய்வுத்திட்டத்தின் நேரடி அளிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வுக்குழுவின் முன்னால் இருக்க வேண்டும். அதற்கு விமானத்தில் போகலாம். குறிப்பிட்ட வகையினச் செலவு முறையில் செலவழித்துவிட்டு, ரசீதுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தால் அச்செலவுத்தொகையைப் பல்கலைக்கழகம் திட்ட நிதியிலிருந்து வழங்கும். விமானத்தில் செல்லும் வகையில் செலவழிக்க அந்த நேரத்தில் பணம் இல்லாத தால் ஆகாயவழிப்பயணத்தைத் தவிர்த்து தரைவழிப்பயணத்தையே விரும்பினேன். அத்தோடு ரயிலில் போய்வரும் பயண அனுபவங்கள் சில நாட்களைக் கொண்டது என்பதும் ஒரு காரணம். 
இதுவும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தித்தந்த பயணம் தான். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குள் நுழைந்த போது அயல் தேசப் பயணம் செல்வது இது முதல் முறை என்பதைவிட முதல் விமானப்பயணம் என்பது கூச்சமாக இருந்தது. . 52 வயதுவரை விமானம் ஏறாத பேராசிரியராக இருந்து விட்டோமே என்ற நினைப்பு கவலையாக இல்லை என்றாலும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. .2011, மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் 
பல்கலைக்கழகங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தேட வேண்டும் என மத்திய அரசின் கல்வி அமைச்சர் கபில்சிபல் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே எமது பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் அயல் தேசங்களிலும் அயல் மாநிலங்களிலும் படிப்பு மையங்கள் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அம்முயற்சியின் ஒரு பகுதியாகவே எனக்குச் சவுதி அரேபியா சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் புல முதன்மையர் என்னும் உயரிய பதவி காரணமாக எனக்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை ஏற்று அயல்நாட்டில் ஆரம்பிக்க உள்ள மையங்களைப் பார்வையிடும் உறுப்பினராகச் செல்ல சம்மதம் தெரிவித்தேன். பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் ஒன்றைத் தொடங்கி நடத்த விரும்பும் ஒரு நிறுவனத்திற்கு அதற்கான இடம் மற்றும் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைத்திரட்டும் திறன், மாணவர்களை ஈர்க்கும் தேர்ச்சி, அங்குள்ள அரசோடு அந்நிறுவனத்திற்குள்ள உறவு போன்றவற்றை நேரடியாகப் பார்த்து விட்டு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டு வந்து பல்கலைக் கழகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதுதான் எனது வேலை. நான் அளிக்கும் அறிக்கையின் பேரில் அந்நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதும், செய்து கொள்ளாமல் கைவிடுவதும் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கும் முடிவை பொருத்தது. 

வளைகுடா நாடுகளில் பரப்பில் பெரியதும் இசுலாமியச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுமான நாடு சவுதி அரேபியா. அதன் முக்கிய நகரமான தம்மாமிலும், தலைநகர் ரியாத்திலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் படிப்பு மையத்தைத் தொடங்கி நடத்த அனுமதி கேட்டிருந்தவர்கள் எனது பயண ஏற்பாட்டை- விசா, டிக்கெட் எடுத்தல், விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லல், தங்குமிட ஏற்பாடு என அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் எனக்குக் கூறியிருந்தது. அதனால் எனக்குப் பெரிய சிக்கல்கள் எதுவும் வராது என்று தெரியும். ஆனால் விமானம் ஏறிக் கடல் கடந்து செல்லும் அனுபவம் புதுமையானது தானே. அதுவும் அந்த அனுபவம் முதல் அனுபவமாக இருந்தால் கொஞ்சம் மிரட்சியும் கொஞ்சம் கிளர்ச்சியும் இருக்கத்தானே செய்யும். 

ஜெட் ஏர்லைன்ஸில் ஒரு பயணிக்கு அனுமதிக்கும் 30 கிலோ எடை அளவு கூட என்னிடம் இல்லை. பயண ஆடையாக ஆறு பைகள் வைத்த பேண்ட்டும் டீ சர்ட்டும் அணிவதும் வழக்கமாகிவிட்டது. பயண வாகனத்தில் தூங்க நேரும் போது பணம் இருக்கும் பை, அலைபேசி, சாவி, கடிகாரம் என ஒவ்வொன்றையும் ஒரு பையில் போட்டு மூடிவிடலாம். கீழே விழாது என்ற நம்பிக்கையில் நிம்மதியாகத் தூங்கலாம். ரயிலில் படுத்துக் கொண்டு செல்வது போல விமானத்தில் வசதிகள் இருக்காது என்பது தெரியும். சாய்ந்து உட்கார்ந்து தூங்க வேண்டும். நான்கு நாட்கள் சவுதியில் இருக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு நாளும் அணிய உள்ளாடைகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் இரண்டு கால்சட்டைகள் மூன்று சட்டைகள், ஒரு வேட்டி என ஆடைகள் பெட்டியில் இருந்தன. பெட்டிக்குள் இருந்ததில் எடையுள்ள ஒரே பொருள் மடிக்கணினி மட்டும் தான். அதன் துணைக் கருவிகளோடு சேர்த்து மூன்றரைக் கிலோவாவது இருக்கும். 

என்னை வழியனுப்ப ஒருவரும் வரவில்லை. சக்கரங்கள் பொருத்திய பெட்டியை இழுத்துக் கொண்டு விசாவைச் சரி பார்க்கும் வரிசையில் நின்றேன். மூன்று நிமிடத்தில் சரி பார்த்து விட்டு உள்ளே அனுப்பி விட்டார்கள். அடுத்து விமானத்தில் உட்காரும் இடத்தைக் குறிப்பிட்டு டிக்கெட் பெற வேண்டும். நான் செல்லும் போயிங்-737, ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குப் போர்டிங் டிக்கெட் தர மூன்று வரிசைகள் இருந்தன. வெளிநாட்டுப் பயணிகளுக்கான வரிசையில் நிற்பவர்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனர். இந்தியக் குடிமக்களுக்கு இரண்டு வரிசைகள். நான் நின்ற வரிசைக்கு புன்சிரிப்பைத் தவற விடாத பெண்ணொருத்தி பொறுப்பாக இருந்தாள். எனது பாஸ்போர்ட்டைப் பார்த்து விட்டு என்ன வேலையாகப் போகிறீர்கள் என்று கேட்டாள். அவள் ஆங்கிலத்தில் கேட்டது மலையாளத்தில் கேட்பது போல இருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர் நான். எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில் சவுதியில் ஆரம்பிக்கப்பட உள்ள கல்வி மையத்தை பார்வையிடச் செல்கிறேன் என நான் ஆங்கிலத்தில் சொன்னது தமிழில் சொல்வது போலத் தோன்றியிருக்க வேண்டும். 

உங்களுக்கு முதல் வரிசையில் இருக்கை தந்துள்ளேன் எனச் சொல்லி விட்டுச் சிரித்தாள். நன்றி சொல்லி விட்டு வரிசையிலிருந்து விலகிப் போய் பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து விட நினைத்தேன். ஆனால் அங்கிருந்த கடைகளை பார்க்க வேண்டும் எனத் தோன்றியதால் ஒவ்வொரு கடையாகச் சென்று பார்த்து விட்டுத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது நான் செல்ல வேண்டிய விமானம் தயாராக இருப்பதாகவும் நான்காவது வாசல் வழியாகப் போனால் போய் அமர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தார்கள். அறிவிப்பைக் கேட்டுத் திரும்பிய போது எனக்கு முதல்வரிசையில் இருக்கை தந்திருப்பதாகச் சொன்ன பெண் என் முன்னே வந்து கொண்டிருந்தாள். பயணிகள் அனைவருக்கும் இருக்கை ஒதுக்கும் பணி முடிந்து விட்டதால் ஓய்வுக்காக உள்ளே வந்திருக்க வேண்டும். இப்போது அவளைப் பார்த்து நான் சிரித்தேன். அறிவிப்பில் சொல்லப்பட்ட நான்காவது வாசல் இருக்கும் திசையைக் காட்டி விட்டுத் திரும்பவும் சிரித்து விட்டுப் போனாள். இந்தப் பெண் நான் செல்லும் விமானத்திலும் வரக்கூடும் என நினைத்துக் கொண்டேன். வந்தால் திரும்பத் திரும்பச் சிரிக்க வேண்டியதிருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன். 

விமானத்திற்குச் செல்லும் பாதை இரண்டு மூன்று திருப்பங்களுடன் வளைந்து வளைந்து சென்றது. குகைப் பயணம் போல சென்ற பாதையின் முடிவில் காத்திருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் விமானத்தின் வாசலில் இறக்கி விட்டது. இரவு நேரம் என்பதால் எங்கும் விளக்கு வெளிச்சம் தான். பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் நின்றிருந்தன. போயிங்-737, ஜெட் ஏர்வேஸ் விமானமே இன்னொன்றும் நின்று கொண்டிருந்தது. விமானத்திற்குள் நுழையும் போது நல்ல உயரத்துடன் கறுப்பு ஆடை அணிந்த பெண்ணொருத்தியும் ஆணொருவரும் வரவேற்று அனுப்பினார்கள். எகானமிப் பிரிவில் எனக்கான இருக்கை முதல் வரிசையில் இருந்தது. என்னருகில் கைக்குழந்தை சகிதமாகக் கணவன் –மனைவி வந்து அமர்ந்தனர். அவர்கள் ஏற்கெனவே பல தடவை விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் அறிந்து கொண்டேன். காதை அடைக்கும் வேலையை எல்லாம் செய்யவில்லை. இடுப்பு பெல்டைக் கூட எச்சரிக்கையுடனும் போட்டுக் கொள்ளவில்லை. இறுக்கமின்றி போட்டுக் கொண்டு முன்னாள் இருக்கும் சின்னத் தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கத் தொடங்கி விட்டார்கள். 

இரவு 8.20 –க்குக் கிளம்ப வேண்டிய விமானம், பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்து விட்டதால் பத்து நிமிடம் முன்னதாகவே நகர ஆரம்பித்து விட்டது. ஒருவேளை தரையிலிருந்து ஆகாயத்தில் ஏறும் நேரம் தான் 8.20 எனக் குறிக்கப்பட்டிருந்ததோ என்னவோ, பத்து நிமிட நேரம் விமான நிலையத்தில் சுற்றி விட்டு ஒரு குலுங்குக் குலுங்கி காற்றில் நுழைந்து விட்டது. விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது; எந்தத்திசையில் போகும் என்பதைக் காட்டும் விவரங்களைத் தொலைக்காட்சியில் வரவழைத்துப் பார்த்துக் கொண்டே சென்ற நான் திரும்பிப் பார்த்தேன். பலரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தூக்கமே வரவில்லை. 

பள்ளிப் பருவ வயதில் வயசாகிப் படுக்கையில் கிடந்த ஒரு தாத்தாவுக்குச் சக்கரவர்த்தித் திருமகனைப் படித்துக் காட்டிய போது விமானத்தில் பறப்பதை நான் கற்பனை செய்திருக்கிறேன். மாரீசனை மானாக ஓட வைத்து ஜானகியின் ஆசையைத் தூண்டிய ராவணன், லட்சுமணனை அப்புறப்படுத்தி விட்டு அப்படியே தரையோடு பெயர்த்து ஆகாயமார்க்கமாகப் போனான் என்று படித்த போது ஆகாய மார்க்கமாகப் பயணம் செய்வது பற்றிய கற்பனை மட்டுமல்ல, ஜடாயுவோடு போட்ட சண்டையையும் கூட எனக்கு உண்மையாக்கிக் காட்டியவை தமிழ்ச் சினிமாக்கள் தான். புராணப் படங்களில் இடம் பெறும் ஆகாய மார்க்கப் பயணங்கள் போன்றதே ஜெட் ஏர்வேஸ் பயணம் என்று சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும். கற்பனையும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றாகக் கலந்து விடுவதில்லை தானே? 

விமானத்திலிருந்த ஒலிபெருக்கி மெதுவாக அறிவிப்புக்களைத் தொடங்கியது. வெளியே வெப்பத்தின் அளவு சொல்லப்பட்டது. நேரம் இரவு 10.50 எனச் சொன்ன குரல், அது அரேபிய நேரம் எனச் சொல்லி விட்டு உங்கள் கடிகாரங்களை அதற்கேற்பத் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டது. அனைவரும் திரும்பவும் இடுப்புப் பெல்டுகளை அணியத்தொடங்கினார்கள். குலுங்கலுடன் நின்ற விமானத்திலிருந்து வெளியே வந்து தம்மாம் விமான நிலையத்தைப் பார்க்க நினைத்த எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. விமானத்தின் வாசல் நேரடியாக நடைபாதையுடன் இணைக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தின் தரையில் நிற்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. விமானத்திலிருந்து இறங்கிவிட்டாலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வர ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. புதிதாக அரேபியாவிற்குள் நுழையும் நபர்களைத் தனியாக வரிசைப்படுத்தி விசா விவரங்களைச் சரி பார்ப்பதுடன் கடுமையான சோதனைகளைச் செய்கிறார்கள். கை ரேகைகள், முகம், கண்கள் எனத் தனித்தனியாகவும் முழு உடம்பாகவும் படம் எடுத்துப் பதிவு செய்து விட்டுத்தான் அனுப்புகிறார்கள். நீண்ட வரிசை மெதுவாக நகர நகர மனம் பலவற்றை நினைத்துக் கொண்டது 

நான் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே சவுதியில் பயன்படுமாறு ஒரு சிம்கார்டு வாங்கி எனது அலைபேசியில் போட்டுக் கொண்டு வராமல் விட்ட தவறு காரணமாக எனது பயம் கூடிக் கொண்டே இருந்தது. என்னைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய இஸ்மாயில் கொட்டில் வரவில்லையென்றால் என்ன செய்வது..? நினைப்பதே பெரும் அச்சமூட்டும் திகைப்பு. இஸ்மாயில் கொட்டில் கேரளத்திலிருந்து போன மலையாளி தான் என்றாலும் அவரைப் பார்ப்பது வரை பதற்றம் தான். ஒரு வழியாக எல்லாச் சோதனைகளும் முடிந்து வெளியே வந்தேன். ஆங்கிலத்திலும் அரபியிலும் பெயர்கள் எழுதிய அட்டைகளுடன் நின்றவர்களை வரிசையாகக் கடந்து சென்றேன். எந்த அட்டையிலும் எனது பெயர் இல்லை. நினைத்தது போலவே இஸ்மாயில் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு திகைத்து நின்றேன். எனது பெயர் எழுதி வரவேற்கும் அட்டையைத் தாங்கும் மனிதர் முன்பே வந்துபோயிருப்பாரோ? என்ற நினைப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. என்னுடைய புகைப்படம் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவரது புகைப்படம் என்னிடம் இல்லை. அவரைத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாது. நான் வைத்திருக்கும் தொலைபேசியில் அந்த வசதியை உருவாக்கிக் கொள்ளாமல் வந்து விட்டேன். 

விமான நிலையக் கழிப்பறைக்குப் போய்விட்டு வந்து நம்மூர் எஸ்டிடி பூத் போல எதாவது இருந்தால், அதன் மூலம் இஸ்மாயிலைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் என்னிடம் அரேபியப் பணம் இல்லை. ‘அதெல்லாம் எதுவும் வேண்டாம்; நீங்கள் வந்து இறங்கி விடுங்கள்; இறங்கியது முதல் திரும்பவும் விமானம் ஏறும் வரை உங்களைக் கவனித்துக் கொள்வது எங்கள் பொறுப்பு’ என அவர்கள் தந்திருந்த உத்தரவாதத்தின் பேரில் போய் இறங்கியது எவ்வளவு தவறு என அப்போது உணர்ந்தேன். 

கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசித்தபோது மடிக்கணினி கையில் இருப்பது நினைவுக்கு வந்தது. பொதுவாக விமான நிலையங்களில் இண்டர்நெட் வசதி இருக்கும் என்பதால், சவுதியில் கல்வி மையம் தொடங்கும் சொயப் அலிக்கு இணையம் வழியாகத் தகவல் தெரிவிக்கலாம் என்று தோன்றியது. எனது மடிக்கணிணியில் அஞ்சல் பெட்டியைத் திறக்கும் போதெல்லாம் சொயப் அலி தொடர்பிலேயே இருப்பார் என்பதால் அந்த முயற்சிக்காகப் பெட்டியைத் திறந்து மடிக்கணிணியை மடியில் வைத்தேன். அதற்குள் அந்தக் குரல் மலையாள வாடையோடு கூடிய ஆங்கிலத்தில் என்னைத் திருப்பியது. உள்ளே ஜெட் ஏர்வேஸில் இறங்கியவர்கள் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டது. இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வந்த பிறகு இரண்டு பேர் இருந்தார்கள்; அவர்களும் வந்திருப்பார்கள் என்றேன். எனது பேச்சை வைத்து நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளீர்களா? என்று நேரடியாக மலையாளத்தில் கேட்டார். நானும் மலையாளத்தில் ஒம் என்றேன். அவர் தேடி வந்த ஆள் ராமசாமி நான் தான் என்றான போது அவருக்கு என்ன உணர்வு இருந்ததோ தெரியாது. எனக்கு எல்லாக் கவலைகளும் ஓடிப் போய்விட்டது. 

அரபு நாட்டில் முதல் இரவு 

பொதுவாக விமான நிலையங்கள் நகர எல்லையிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலேயே அமைக்கப்படுகின்றன. நான் முதன் முதலில் பார்த்த விமான நிலையம் மதுரை விமான நிலையம் தான். மதுரை நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அவனியாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இருந்தது. 

என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த இஸ்மாயில் கொட்டில் காரை கிளப்புப் போது ஒரு விமானம் விசுக்கென்று கிளம்பி மேலே போன போது விமானம் தெரியவில்லை. விளக்குகள் அணைந்து பற்றுவதன் மூலம் அதன் கணபரிமாணங்களை உணர முடிந்தது. பத்து நிமிட இடைவெளிக்குப் பின் இன்னொரு விமானம் கிளம்பியது. சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இரவு நேரங்களில் கிளம்பும் விமானங்களில் எண்ணிக்கை அதிகம் எனக் காரை ஓட்டிக் கொண்டே இஸ்மாயில் சொன்னார். இடையிடையே தொலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். ஓட்டுநர் இருக்கை காரின் இடதுபுறம் இருப்பதை அப்போது தான் கவனித்தேன். எல்லாக் கார்களிலும் இடது புறம் தான் இருக்குமாம். வலதுகை ஓட்டுதல் அங்கு கிடையாது. இடது கைத் திருப்பம் தான் அங்கு. அகலமான சாலைகளில் கார் மெதுவாகச் செல்ல முடியாது என்றார். 

ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே மலையாளத்திற்கு மாறினார். அந்தப் பேச்சு முடியுமுன்பே இன்னொரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அதை எடுத்து அரபியில் பேசினார். அதிலிருந்து கொஞ்சம் விலகி இந்திக்கு மாறினார். என்னிடம் மலையாளம் கலந்த தமிழில் பேசினார். அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை. அரபு நாடுகளில் வேலை தேடிப் போய் இருபது வருடங்களுக்கும் மேல் இருக்கும் என்றார். முதலில் சென்றது துபாய்க்கு. அங்கிருந்து குவைத், சவுதி அரேபியா என மாறிமாறிப் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். கார் ஓட்டுவதில் அவர் ரொம்பவும் கெட்டிக்காரர் என்பது தெரிந்தது. ஜவுளி வியாபாரம், குழந்தைகளுக்கான பொம்மைகள் விற்பது எனத் தொடங்கி இப்போது டிராவல் ஏஜென்சியின் தம்மாம் கிளையின் மேனேஜராக இருக்கிறார். நான் பார்வையிடச் சென்றுள்ள கல்வி நிறுவனத்தை நடத்துபவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அரபு நாடுகள் பலவற்றில் வியாபார ரீதியான தொடர்புகளையும் சொந்த வீடுகளையும் வைத்திருக்கும் பெரும் பணக்காரர் என்றார். எனக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் பணியை அவரிடம் ஒப்படைத்து இருப்பதாகச் சொன்னார். 

தம்மாம் நகரின் நட்சத்திர விடுதிகளில் ஒன்றான பார்க் இன் விடுதியில் தங்க வைக்கப்பட்டேன். உள்ளே நுழைந்த போது நல்ல குளிராக இருந்தது. எனக்காக அறையை உறுதி செய்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறினார். காலையில் விடுதியில் உணவு உண்டு விட்டுப் பகலிலும் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு மூன்று நாளின் திட்டங்களைக் கேட்டார். முதல் நாள் தம்மாமில் அவர்கள் தொடங்க உள்ள மையத்தையும் அதற்கான வசதிகளையும் பார்வையிட வேண்டும். முடிந்தால் அன்றிரவு அந்த நகரின் வீதிகளைக் காரில் சென்று பார்க்கலாம் . இரண்டாவது நாளில் இன்னொரு மையமான ரியாத் செல்ல வேண்டும். அங்கும் இதே போல் பார்த்துவிட்டு மையங்களின் ஒருங்கிணைப்பாளருடன் பேச வேண்டும். அவர்களது ஏற்பாடுகளையும் மாணாக்கர்களின் சேர்க்கை வாய்ப்புகளையும் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றிரவு அங்கேயே தங்கலாம்; அல்லது திரும்பலாம். மூன்றாவது நாள் ஊர் சுற்றிப் பார்க்கலாம். விலை குறைவாகவும், இந்த நாட்டில் கிடைக்கக் கூடிய சிறப்பான பொருட்கள் இருந்தால் வாங்கலாம் என எனது திட்டங்களைச் சொன்னேன். சரி இரவு நல்லிரவாக ஆகட்டும் எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார். 

வழக்கமாகக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவது எனது பழக்கம். தூங்க ஆரம்பித்தால் ஆறு மணி நேரத்துக்குமேல் என்னுடம்பு தூங்காது. ஏற்கெனவே விமானத்தில் மூன்று மணி நேரம் தூங்கிய உடம்பு கொஞ்சம் குழம்பி விட்டது என்றே நினைக்கிறேன். அறையில் படுத்தேன். உடனே தூக்கம் வரவில்லை. அங்கே இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன அலைவரிசைகள் வருகின்றன எனத் தேடினேன். பெரும்பாலான அலைவரிசைகளில் அரபியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அரேபியாவில் தேசிய ஆடையான முழு வெள்ளைக் குர்தாவும் தலைப்பாகையுமாக ஆண்கள் மட்டுமே அலுங்காமல் குலுங்காமல் நின்று பேசினார்கள். தொடர்ந்து அரை மணிநேரம் தேடியும் ஆட்டம் பாட்டு என எந்த ஒரு அலைவரிசையிலும் பார்க்க முடியவில்லை. சர்வதேசச் செய்தி அலைவரிசைகளில் பி.பி.சி. மட்டும் இருந்தது. அதிலும் கீழே அரபி எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தன. கணிணியைத் திறந்து இணையத்தைத் தொடர்பு கொள்ள விரும்பினேன். ஆனால் அதற்கான வசதி எந்த இடத்தில் இருக்கிறது என்று அந்த நேரத்தில் கேட்க முடியாது. கணிணியின் சேமிப்பில் இருக்கும் ஸ்பைடர் சாலிடர் என்ற சீட்டு விளையாட்டை விளையாடிய போது கண்கள் களைப்படைந்தன. நிறுத்தி விட்டுத் தூங்கி விட்டேன். காலையில் கண் விழித்த போது காலை எட்டு மணி எனத் திருப்பி வைக்கப்பட்ட கடிகாரம் காட்டியது. 

காலையில் பருகுவதற்கான தேநீர், காபி போன்றவற்றை அறையிலேயே தயார் செய்து கொள்ளும் விதமாகப் பால், சர்க்கரை, பொடி, வெந்நீர் வைக்கும் மின்சார அடுப்பு வசதி என அனைத்தும் அறையின் ஒரு மூளையில் இருந்தது. தேநீர் தயாரித்துக் கொண்டு திரைச்சீலையை விளக்கிய போது ஜன்னல் வழியாக வெளிச்சம் பரவியது. கறுப்புக் கண்ணாடி வழியே சூரியக்கதிர்கள் நுழையவில்லை என்றாலும் நிழலற்ற வெளிச்சம் கசகசப்பை உணரச் செய்தது. இரவில் அதிகப்படுத்தியிருந்த அறையின் வெப்ப அளவைக் குறைக்கத் தோன்றவில்லை. தம்மாம் நகரத்தின் நீண்டதொரு தெரு வளைவின்றி ஓடியது. தொடர்ச்சியாகச் செல்லும் வாகனங்களையே பெருநகரங்களில் பார்த்துப் பழகிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதாவது ஒரு கார் வேகமாகச் சென்றது. இருசக்கர வாகனங்களே கண்ணில் தட்டுப் படவில்லை. பேருந்துகளின் ஓசையும் அசைவும் இல்லை. கல்வி நிறுவனங்களின் சீராடைகள் அணிந்து வரும் பிள்ளைகளைத் தேடினேன். அவசரம் அவசரமாக ஆட்டோவிலும் சைக்கிள் ரிக்சாவிலும் திணிக்கப்பட்டு நசுங்கிச் செல்லும் பள்ளிப் பிள்ளைகளைக் காலையில் எட்டுமணிக்குத் தமிழ்நாட்டின் எல்லாச் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் பார்த்துப் பழகிய எனது கண்கள் தேடிப் பார்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒருவேளை பள்ளிகள் அதிகாலையிலேயே தொடங்கியிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். 

வளைகுடா நாடுகளுக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பு எல்லோருக்கும் தெரிந்தது. துபாய், பஹைரன், மஸ்கட், ஈரான், ஈராக், சவுதி அரேபியா என எல்லா நாடுகளிலும் அவற்றின் முக்கிய நகரங்களில் கேரளத்தின் மலையாள வாசனை வீசிக்கொண்டே இருக்குமாம். நான் போன சவுதி அரேபியாவிலும் அதே வாசனைதான். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்கோடியில் இருப்பதால் வளைகுடா நாடுகளுக்கு இந்தப் பல்கலைக்கழகம் கொஞ்சம் அருகில் இருப்பது போலத் தோன்றுகிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டின் மற்ற பல்கலைக்கழகங்களை விடவும் அதிகமான கேரள மாணாக்கர்களைக் கவரும் பல்கலைக்கழகமாகவும் எமது பல்கலைக்கழகம் தான் இருக்கிறது. அதிகமான படித்தவர்கள் இருக்கும் கேரளத்தில் உயர்கல்வியைத் தரும் நிறுவனங்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், தொழில் நுட்பம் போன்றவற்றில் உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களின் போதாமையையும் கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டக் கல்லூரிகளில் ஆண்களும் பெண்களுமாக மலையாளக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். அரசியலை ஆணையில் வைப்போம் எனச் செயல்படும் இடதுசாரிச் சித்தாந்தம் தலைவிரித்தாடும் கேரளத்தில் அரசியலைத் தவிர்க்கப் பார்க்கும் தொழில் கல்வி வாய்ப்பை உருவாக்காமல் தவிர்க்கிறார்கள் என நினைக்கிறேன். அரசு தரும் கல்வியைப் படிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படும் கேரள மாணாக்கர்கள் தொழில் கல்விக்காக அண்டை மாநிலங்களுக்கு வருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் தனியார் தொடங்கியுள்ள பொறியியல் கல்லூரிகளும் பாண்டிச்சேரியின் மருத்துவக்கல்லூரிகளும் கேரள மாணாக்கர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பவை என்றால் மிகையல்ல. கேரளத்தைப் போலவே கேரளத்தோடு தொடர்புடைய அரபு நாடுகளும் கல்வி வாய்ப்புகளைக் குறைவாகவே கொண்டுள்ளன. அதிலும் கல்லூரிக் கல்வியைக் கொடுப்பதில் இவ்வளவு காலமும் தீவிர அக்கறைகளைக் காட்டியவை அல்ல. 

ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளின் இசுலாமிய அரசுகள் தொடர்ந்து உள்நாட்டு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் உயர்கல்வி வாய்ப்புகள் இல்லாமையும் ஒரு காரணம் தான். பெட்ரோலியம் சார்ந்த பொருளாதார பலத்தை மட்டும் நம்பியிருக்கும் அரபி நாடுகள் வளம் கொழிப்பதாகப் பலரும் நம்புகின்றோம். ஆனால் அந்நாடுகளின் அனைத்து மக்களும் வளம் கொழிக்க வாழ்கிறார்களா? என்றால் இல்லை. அரசாங்கத்தோடு நேரடித்தொடர்பும், அதிகாரத்தொடர்பும் கொண்ட குடும்பங்களும் அதன் உறுப்பினர்களும் மட்டுமே வளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதற்கடுத்து மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு குழுமங்களில் பணியாற்றும் பன்னாட்டு மக்களும் நகரங்களில் வளமாக வாழ்கிறார்கள். ஆனால் அந்நாடுகளின் பூர்வகுடிகள் எப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி கூட வெளியே தெரியாமல் அடக்கப்படுவதுதான் உண்மை . 
பார்க் இன்னில் காலை உணவாகப் பல நாட்டு உணவுப் பொருட்கள் இருந்தன. கோதுமை ரொட்டி, முட்டை, முந்திரி, காரட், தேநீர் என எடுத்துக் கொண்டு தோட்டம் போல நீளும் அதன் வெளியில் அமர்ந்து தனியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் இஸ்மாயில் அழைத்து காலை உணவு முடிந்ததா? எனக் கேட்டார். பிற்பகல் நாலு மணிக்கு வந்து அழைத்துச் செல்வதாகவும் மதிய உணவை அறைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளதாகவும் சொன்னார். நாலு மணியிலிருந்து இரவு 11 மணி வரை வெளியில் தான் இருப்போம் என்பதையும் சொன்னார். பொதுவாகத் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ ஆரம்பிக்கப்படும் கல்வி மையங்களைப் பார்வையிட ஆகும் நேரம் ஒரு மணி நேரம் தான். வகுப்பறை வசதி, சோதனைச்சாலை வசதி, கழிப்பறை மற்றும் ஓய்வறைகள், அலுவலகம், ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் தகுதிக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அதற்கான ஆதாரங்களையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். அந்த மையம் இருக்குமிடம் ஆரம்பிக்கப்போகும் அமைப்பிற்கு அல்லது அறக்கட்டளைக்குச் சொந்தமா என்பதைப் பத்திரங்களின் வழியாகப் பார்த்து முடிவு செய்வோம். இதையெல்லாம் முன்பே தயாராக வைத்திருப்பார்கள். போனவுடன் அவர்கள் தரும் தேநீரைப் பருகி விட்டு, அவர்கள் தரும் காகிதங்களின் உண்மைத்தன்மையைச் சோதனை செய்து பார்ப்பது முக்கியமான ஒன்று. அவற்றை வாங்கி வந்து அறிக்கை தருவது நடைமுறையில் இருக்கும் வேலை தான். ஆனால் வெளிநாட்டில் அதுவும் அனைத்துச் சான்றுகளும் ஆங்கிலத்தில் இல்லாமல் அரபி மொழியில் எழுதப்பட்டிருக்கும் நிலையில் எனது வேலை கொஞ்சம் கடினமானது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்